‘கறுப்புக்கொடி காட்டுவதற்கு
அனுமதித்தோம்‘ என்பதற்காக அமைச்சர் பக்தவச்சலம், இலட்சுமிபுரம்
யுவர் சங்கத்தில் பேசுகையில் கூறியதாகப் பத்திரிகையிலே படித்தேன்.
இந்தக் கூற்று உண்மையாக இருக்குமானால், நான் இந்த மாமன்றத்தின்
மூலம் கேட்கிறேன் – ‘எப்பொழுது அனுமதி கொடுத்தீர்கள்? யாரிடத்தில்
அனுமதியளித்ததாகத் தெரிவித்தீர்கள்?‘
கூட்டம் நடத்த அனுமதி எங்கே?
மூன்றாந் தேதிக் கூட்டத்தைச்
சர்க்கார் காரணமின்றித் தடை செய்தார்கள், கூட்டம் நடத்த
முறைப்படி அனுமதி கேட்டபின் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
கறுப்புக்கொடி காட்டுவதற்கு
அனுமதி கேட்கத் தேவையில்லை யென்றாலும், வழக்கத்திற்கு மாறாக,
நாகர்கோவில் தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதி, முதலமைச்சருக்கும்,
போலீஸ் அமைச்சருக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டர் – ஜெனரலுக்கும்,
போலீஸ் கமிஷனருக்கும் முறைப்படி அனுப்பினோம், கறுப்புக்கொடி
காட்டும் இடமான மீனம்பாக்கம், செங்கற்பட்டு மாவட்டத்தைச்
சேர்ந்தது என்பதனால், அந்த மாவட்டப் போலீஸ் அதிகாரிக்கம்
அனுப்பினோம்,, இதற்குப் பதில் எங்கே?
கறுப்புக்கொடி காட்டி எப்பொழுது
அனமதி தந்தார்கள்? அனுமதியை எழுதி அனுப்பினார்களா? டெலிபோன்
மூலம் கூப்பிட்டுச் சொன்னார்களா? அல்ல எங்களை நேரில் வரவழைத்துப்
பேசினார்கள்?
பொறுப்பான பதில் எங்கே?
இது சம்பந்தமாக என்னிடம் மூன்று
பேர் வந்து பேசினார்கள். அவர்களெல்லாம், சர்க்காரின் முத்திரை
மோதிரத்தைப் போட்டுக் கொண்டு அதிகாரப்பூர்வமாகப் பேசியவர்களல்ல,
அவர்கள் மூன்று பேரும் ஒரே விதமாகத்தான் பேசினார்கள், கறுப்புக்கொடியை
நீங்கள் ஒருவர் மட்டும் காட்டிவிடுங்கள், மற்ற எல்லோரும்
எதற்குக் காட்ட வேண்டும் என்று கேட்டார்கள் இப்படி அவரவர்
சொந்த அபிப்பிராயத்தைக் கூறுவது போலவும், என்பால் அக்கறை
கொண்டவர்கள் போலவும்தான் அவர்கள் என்னிடம் பேசினார்களே தவி,
அதிகார முத்திரை பெற்றவர்களாய்ப் பேசவில்லை. அவர்களுடைய
ஆலோசனைகளும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன.
அமைச்சர் பொறுப்பாக நடக்காதது
ஏன்?
நான் எழுதியனுப்பின அறிவிப்புக்கு,
அமைச்சர் பொறுப்பான பதில் ஏன் சொல்லவில்லை?
மீனம்பாக்கத்தில் மட்டும்
கறுப்புக்கொடி காட்டு என்று கூறி, விளக்கமாக என்னிடம் அமைச்சர்
வாதாடியிருப்பாரேயானால், பொதுச் செயலாளரின் அனுமதியுடன்
ஒத்துக் கொண்டிருப்பேன். பிடிவாதம் பிடிப்பவனல்ல நான். ஏனென்றால்,
இதுதான் நேரு பண்டிதருக்குக் கடைசி கறுப்புக்கொடி காட்டும்
நிகழ்ச்சியல்ல, என்னிடம் பேச வந்தவர்களுக்கு வெறும் ‘தபால்
உத்தியோகம்‘ தான் தரப்பட்டிருந்ததே தவிர – அங்குச் சொன்னதை
இங்கு வந்த சொல்லத்தான் உரிமை இருந்ததே தவிர, அவர்களாக ஏதேனும்
யோசனை கூறவோ, நான் சொல்லியதை ஏற்கவோ உரிமை இல்லை.
இந்த நிலையில் ‘கறுப்புக்
கொடி காட்ட அனுமதி தந்தோம்‘ என்று அமைச்சர் பக்தவச்சலம்
கூறுவது வடிகட்டின பொய் – அண்டப் புளுகு – இப்படிப்பட்டவர்கள்,
அமைச்சரவையில் எத்தனை பேரிருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.
கறுப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சி
சம்பந்தமான விளக்கக் கூட்டத்தை ஏன் தடை செய்ய வேண்டும்?
மந்திரிகள் பேசலாமே கறுப்புக்கொடியை
எதிர்த்து!
‘அண்ணாதுரை கூட்டம் போட்டுச்
சொன்னால், அத்தனைப் பேரும் கட்டுப்பாடாக அதைக் கேட்டு நடப்பார்கள்,
கறுப்புக் கொடி காட்டுவார்கள், எனவே, கூட்டம் போட அனுமதித்தால்
கறுப்புக்கொடி நிகழச்சி வெற்றிகரமாக நடந்துவிடும்‘ என்று
சர்க்கார் பயந்தால், அடுத்த நாள் 4 ஆம் தேதி ஒரு கூட்டம்
போட்டு, ‘கறுப்புக் கொடி காட்டாதீர்கள்‘ என்று மக்களுக்கு
ஏன் சொல்லக்கூடாது?
என் வார்த்தைகளுக்குத்தான்
மக்கள் கட்டுப்படுகிறார்கள் என்று சொன்னால் உனக்குத்தானே
வெட்கம்?
மூன்றாம் தேதி நான் பேச அனுமதி
அளித்துவிட்டு, 4ஆம் தேதி நீ கூட்டம் போட்டுப் பேசினால்
நீ ஆண்மகன். அதற்கு உன்னால் முடியவில்லையென்றால், நீ நாட்டை
என்னிடம் ஒப்படைத்துவிட்டாய் என்று பொருள்! இந்த மந்திரிசபை
நாடி, நரம்பு முறிந்துபோன மந்திரிசபை அன்று அர்த்தம்!
மூன்றாம் தேதி நிகழ்ச்சி பற்றி
வழக்கு இருப்பதால் இது பற்றி மேலும் விளக்க நான் விரும்பவில்லை.
இவ்வாறு, அண்ணா அவர்கள் 14.1.59
இல் திருவல்லிக்கேணிக் கடற்கரைக் கூட்டத்தில் பேசுகையில்
குறிப்பிட்டார்கள்.
அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசுகையில்,
3ஆம் தேதி கூட்டத்துக்கு அனுமதி தந்திருந்தால், அமளி எதுவும்
நடந்திருக்காது என்றும், காலித்தனத்தில் ஈடுபட்ட கயவர்களைக்
கையும் மெய்யுமாகப் பிடித்துப் போலீசில் ஒப்படைக்குமாறு
கழகத் தோழர்களைக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமென்றும் கூறினார்.
நீதி விசாரணை வேண்டும்!
மேலும் அவர் பேசுகையில், சிறையிலே
நடந்த கொடுமைகளையும், போலீஸ் பெரிய அதிகாரி நடந்துகொண்ட
விதத்தையும் எடுத்துக் கூறிவிட்டு, ‘சிறையிலே நாங்கள் அனுபவித்த
சங்கடங்கள், வெளியிலே இரத்தம் சிந்தியவர்களைவிடக் கொடுமையானவையல்ல,
வெளியே போலீசாரின் அடக்குமுறைக்கு இலக்கான அத்தனைப் பேரும்
எங்களைவிடப் பலமடங்கு இன்னல்களைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனர்‘
என்றார்.
பஸ் கொளுத்தியது, கல் வீசியது
போன்ற கயமைத் தனத்திலிருப்பவர்களைக் கண்டித்ததுடன், போலீசாரின்
அடக்குமுறைத் தாண்டவத்தையும் அண்ணா அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள்.
இறுதியாக, போலீசாரின் அடக்குமுறை
பற்றிய ஒரு நீதி விசாரணை வேண்டும் என்று வற்புறுத்தும் முகத்தான்
அண்ணா அவர்கள், நீதி விசாரணை – என்று கூற, கூடியிருந்த 5
இலட்சம் மக்களும் ஒரே குரலில் “வேண்டும்“ என்று முழங்கினர்.
கறுப்புக்கொடி காட்ட அனுமதி
கேட்டேன், யாரிடத்தில், எப்போது அனுமதி தருவதாகத் தெரிவித்தீர்கள்?
நீங்கள் என்னை நன்றாக அறிவீர்கள்,
நான் சார்ந்திருக்கும். கழகத்தையும் அறிவீர்கள் 17 இலட்சம்
மக்களின் வாக்குகளைப் பெற்றுச் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோம்
என்பதும் உங்களுக்குத் தெரியும், அடுத்தபடியாக அமைச்சரவையிலே
அமரும் வாய்ப்பும் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை நாடு
அறியும், விரும்பினால், தி.மு.க. சென்னை கம்யூனிஸ்டுக்காரர்களிடம்
கனிவோடு பேசி, சோஷலிஸ்டுக் கட்சியிடம் சமரசம் பேசி, காங்கிரஸ்
சீர்திருத்தக் கட்சியினரின் கரத்தைக் குலுக்கினால், தி.மு.கழகத்தினால்
அமைச்சரவை அமைக்க முடியும். நாங்கள் அவற்றையெல்லாம் துச்சமெனக்
கருதுவதால்தான், அமைச்சரிடம் அனுமதி கேட்டு எழுதினேன்.
அமைச்சர் என்னை வரவழைத்துப்
பேசினாரா, அல்லது எழுத்து மூலமாவது அனுமதி தந்தாரா? சிலபேர்
என்னிடம் வந்து பேசினார்கள். ‘அறையில் நடப்பதையெல்லாம் அம்பலத்துக்குக்
கொண்டுவந்து விடுகிறான் அண்ணாதுரை‘ என்று அமைச்சர் ஆத்திரப்படலாம்.
காரணமற்று நான் எதையும் அம்பலமாக்குவதில்லை. ஆனால், எல்லாவற்றையும்
அம்பலமாக்கக்கூடிய அளவுக்கு அமைச்சரின் போக்கு இருப்பதால்தான்,
நான் இன்று சில விஷயங்களைப் பகிரங்கமாகச் சொல்லுவது என்ற
முடிவில் வந்திருக்கிறேன்.
தனிப்பட்ட விரோதம் எதுவும்
இல்லை!
‘சண்டே அப்சர்வர் ஆசிரியர்
பி. பாலசுப்பிரமணியம் என்னுடன் தொலைபேசியில் பேசினார், அமைச்சரால்
அனுப்பி வைக்கப்பட்ட – அதிகாரப்பூர்வமான தூதுவராக அவர் என்னிடம்
பேசவில்லை, ‘அண்ணன்‘ என்ற முறையில் என்னிடம் பேசினார், அற்புதமான
யோசனை ஒன்றை அவர் கூறினார் – நீ ஒருவன் மட்டும் கறுப்புக்
கொடி காட்டிவிட்டேன், போதும், எல்லோரும் எதற்காகக் காட்ட
வேண்டும்?‘ என்னிடம் அவர் கேட்டார்.
நாகர்கோயிலில் கூடிய பொதுக்குழுவின்
தீர்மானம் ‘கழக எம்.எல்.ஏ-க்கள் 15 பேரும் எம்.பி.-க்கள்
இருவரும் முன்னின்று கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்பதாகும்,
இந்த நிலையில் நான் மட்டும்தனித்து எப்படிக் காட்ட முடியும்?
நேரு பண்டிதர், ஆச்சாரியாரையும் மற்ற பேரறிஞர்களையும் பார்த்து
‘படுகிழங்கள்‘ என்றாரே தவிர, என்னையோ, எங்கள் கழகத்தவரையோ
அல்ல, எங்க் கழகத்திலே யாரும் படுகிழமாக இல்லை, எங்களைப்
பார்த்துப் ‘படுகிழங்கள்‘ என்று அவரால் சொல்ல முடியாது.
எனவே நேருவிடம் தனிப்பட்ட
விரோதம் எதுவும் எங்களுக்குக் கிடையாது, எனவே நாங்கள், கண்ணியமான
முறையில் அணி வகுத்து, முன்னின்று கறுப்புக்கொடி காட்டுவது
என்று முடிவு செய்தோம். போலீசார் அடித்தால் முதல் அடி எங்கள்
மீது விழவேண்டுமென்றுதான் விரும்பினோம்.
‘அப்படிக் கறுப்புக்கொடி காட்டுவதாக
இருந்தால் 7ஆம் தேதி காட்டு‘ என்றார் அவர், அவருடைய அந்த
யோசனையைக் கேட்டுப் பரிதாபப் பட்டேன்.
திரும்பிப் போ என்றால் பொருந்துமா?
ஹோ பேக் என்று ஆங்கிலத்தில்
சொல்லுவதற்கு, ‘திரும்பிப் போ‘ என்று பொருள், எனவே, நேரு
6ஆம் தேதி இங்கு வந்து எல்லா அலுவலகளையும் கவனித்துவிட்டு
அவரே திரும்பிப் போகும்போது, ‘நேரு திரும்பிப் போ‘ என்று
நாம் கூறினால், அதற்க என்ன பொருள் இருக்க முடியும்?‘ ஆங்கில
மொழி வேண்டாம்‘ என்பவர்களைத் தவிர, ஆங்கிலம் படித்தவர்கள்,
7ஆம் தேதி கொடி காட்டுவதை விரும்ப மாட்டார்கள். ஆகையால்
6ஆம் தேதிதான் கொடிகாட்ட வேண்டுமென்ற நான் சொன்னேன்.
கறுப்புக்கொடி காட்டுவதால்
நேருவின் சந்தோஷம் குலைந்துவிடுமே என்று நினைத்தால், அதன்பிறகு
அவர் இங்குத் தங்கியிருக்கம் 48 மணி நேரமும் அவரைப் புகழுங்கள்,
இசையூட்டுங்கள், நாட்டியக் கச்சேரிகளைக் காட்டுங்கள் சந்தோஷமுமம்
நிம்மதியும் உண்டாக்கித் திருப்பியனுப்புங்களேன்!
அடுத்து, திரு.வி.வி. இராமசாமி
அவர்கள் எங்கள்பால் அக்கறை கொண்டவர் என்ற முறையில் என்னிடம்
வந்து பேசினார், அவரும், பி.பாலசுப்பிரமணியம் சொன்ன ஆலோசனையைத்தான்
சொன்னார்.
அதன்பிறகு உயர்தர போலீஸ் அதிகாரியொருவர்
வந்தார், அவரும் அதையேதான் சொன்னார்.
இரவல் சரக்கு எதற்காக?
என்னிடம் பேசுவதற்கு அதிகாரம்பெற்றவர்கள்
அனுப்பாமல் ஏன் இரவல் சரக்கை நாடுகிறாய்?
சட்டசபையில் உன் எதிரில் நான்
வீற்றிருக்கும் வாய்ப்பை, பொதுமக்களின் துணைகொண்டு பெற்றிருக்கிறேன்.
உன் மானம் காற்றில் பறக்கக் கூடிய நேரத்திலேல்லாம், காப்பாற்றும்
என்னை வரவழைத்துப் பேசினால் உன் கண் பஞ்சடைந்தா போய்விடும்?
உன் பதவிக்கு என்ன பங்கம் வந்து விடும்? நான் பிப்ரவரியில்
சட்டசபைக்கு வரத்தான் போகிறேன். பொறுப்புள்ள அமைச்சர் என்னை
அழைத்துப் பேசவில்லை. அவர்களைத் திருத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.
எனவே, கறுப்புக்கொடி காட்டுவது தவிர வேறு வழியில்லை.
எத்தனையோ அடக்குமுறைகளை நாம்
பார்த்திருக்கிறோம், இந்த அடக்குமுறைகளையெல்லாம் கண்டு உள்ளம்
வெதும்பி விடமாட்டோம், ஆனால், ‘பஸ்ஸைக் கொளுத்தினார்கள்
– கல் வீசினார்கள்‘ என்று ஆட்சியாளர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதைக் கண்டுதான் வேதனைப்படுகிறேன். நம்மிலே பத்துபேர் செத்தார்கள்
என்பதைக் கேட்டால் என் இதயம் வெடித்துவிடாது, சாகத்தான்
அழைக்கிறேன், உங்களை 10 பேர் அடக்குமுறைக்கு ஆளாகித் தாக்கப்பட்டு
இறந்தால் அதனால் தமிழ்நாட்டுக்கு நஷ்டமொன்றுமில்லை.
தமிழ்நாட்டுப் போர் வீரன்
கங்கைக் கரையிலே இரத்தம் சிந்தியிருக்கிறான், கடாரத்திலே
சிந்தியிருக்கிறான் – கலிங்கத்துப் பரணியைப் படித்திருக்கிறோம்.
இராசேந்திர சோழன் வரலாறு நம்மிடமிருக்கிறது. வாளும், வேலும்
கொண்டு வெற்றிக்கொடி நாட்டிய தமிழ் இனம் நாம் என்பதை மறுந்துவிடவில்லை.
நான் அழைத்தது, திருப்பித்
தாக்க அல்ல!
ஆனால், இரத்தம் சிந்தத்தான்
நான் உங்களை அழைக்கிறேன் – திருப்பித் தாக்க அல்ல!
திருப்பித் தாக்கக்கூடிய காரியங்களில்
ஈடுபட்டவர்களைக் கண்டித்து, அப்படிப்பட்ட கயவர்களை நாம்
கழகத் தோழர்கள் கையும், மெய்யுமாகப் பிடித்துக் கொடுத்திருக்க
வேண்டும். இதைத்தான் நான் 3ஆம் தேதி பேச அனுமதிக்கப்பட்டிருந்தால்
கூறியிருப்பேன்.
கழகத் தோழர்கள் தங்களைத்
தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு போலீசாக
மாறியிருக்கும்படி கூறியிருப்பேன்.
சென்ற 3ஆம் தேதியன்று நான்
சென்ற காரை வழிமறித்து என்னையும், என்னுடன் இருந்தவர்களையும்
போலீசார் கைது செய்தார்கள். எங்களைப் பின்தொடர்ந்து வந்த
காரிலிருந்த கருணாநிதியையும் மற்றவர்களையும் கைது செய்தார்கள்.
அந்தக் காரை ஓட்டி வந்த தோழர் கருணாநிதியின் டிரைவர் இரங்கள்
என்பவரையும் கைது செய்திருக்கிறார்கள்.
இந்தச் சர்க்கார் எவ்வளவு
கேலிக்குரியாக நடந்து கொண்டிருக்கிறது பாருங்கள்! ‘கம்பன்
வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்‘ என்பார்களே அதைபோல,
கருணாநிதி வீட்டு கார் டிரைவரும் சர்க்காருக்கு எதிரியாக
– அச்சமூட்டக் கூடியவராக காணப்படுகிறார்.
அஞ்சி அஞ்சிச் சாவதைவிட
இவ்வளவு அச்சம் ஏன்? இப்படி
அஞ்சி அஞ்சிச் சாவதைவிட ஒரு முழக்கயிறு கிடைக்கவில்லையா?
எங்களையெல்லாம் அன்று இரவு
அடையாறு போலீஸ் நிலையத்தில் அடைத்துப் பூட்டி வைத்திருந்தார்கள்.
10 – 8 அளவுள்ள இரண்டு கொட்டடியில்தான் நாங்கள் 11 பேரும்
அடைத்து வைக்கப்பட்டிருந்தோம்.
நீட்டி படுத்தால் 2 பேர் கூடத்
தாரளமாகப் படுக்க முடியாத அறையில் ஆறு பேரை அடைத்தார்கள்.
எங்களை அந்தக் கொட்டடியில் அடைக்குமுன் எங்களுடைய மேலாடை
களையெல்லாம் பிடுங்கிக் கொண்டார்கள். கரடுமுரடான கட்டாந்தரையில்
விரித்துப் படுக்கவோ, போர்த்துக் கொள்ளவோ துணியில்லாமல்
தோழர்கள் இரவு முழுவதும் சுவரில் சாய்ந்துகொண்டு தூங்கினார்கள்,
நான் தூங்கவேயில்லை.
அரை நிர்வாண ஆடையுடன்...
பதினேழு இலட்சம் வாக்காளர்களுக்குப்
பொறுப்பாளியான எம்.பி.-க்களும், எம்.எல்.ஏ.-க்களுமான நாங்கள்
அந்தக் கொட்டடியில்தான் அரை நிர்வாண ஆடையுடன் அன்று இரவைக்
கழித்தோம்.
அடுத்த நாள் சைதாப்பேட்டை
சப்-ஜெயிலுக்குக் கொண்டு வரப்பட்டோம். அது சப்-ஜெயிலாகையால்
அங்கே வகுப்புகள் கிடையாது. மண் சட்டியொன்று அங்கே வைக்கப்பட்டிருக்கும்.
அந்த மூத்திரச் சட்டியைத் தலைமாட்டிலே வைத்துக்கொண்டுதான்
படுத்திருந்தோம். அந்தச் சட்டிக்குப் பக்கத்திலே குடிதண்ணீர்
கலையமும் இருக்கும். தகரக் குவளையில் தண்ணீர் குடித்தோம்.
இரத்தம் தோய்ந்த சட்டையுடன்
தோழர்கள்!
எங்களை இந்த முறையில் நடத்தினார்கள்
– கொடுமைப் படுத்தினார்கள் என்பதைப் பற்றி நாங்கள் சிறிதும்
கவலைப்படவில்லை. இதைவிட்டு விடுங்கள். வெளியிலே பல தோழர்கள்
இரத்தம் சொட்டச் சொட்ட, உடலும், உடையும் இரத்தத்தால் தோய்ந்து,
அருகினில் நெருங்கினால் இரத்த வாடை அடிக்கக் கூடிய நிலையிலே
இருப்பதை நான் கண்ட பிறகு, அந்தக் கொடுமையைவிட நாம் அதிகக்
கொடுமையை அனுபவித்துவிடவில்லை என்பதை உணர்ந்தேன்.
அடுத்து ஒரு கிளர்ச்சி நடக்குமானால்,
நீங்கள் அதிலே எங்களை முன்னே நிறுத்துங்கள், ‘அடையாறு‘ மட்டுமல்ல
– மேலாடை இல்லாமல் எங்களை நிறுத்தி வைத்துத் தாக்கட்டும்
இரத்தம் சொட்டட்டும், அதை நாடு காணட்டும், உலகம் பார்க்கட்டும்,
அந்த அளவுக்கு மனத்தை இறுக்கிக் கொண்டிருக்கிறது சர்க்கார்.
போலீசார் நடத்திய அந்தரங்கங்கள்!
நானும் சில அந்தரங்க விஷயங்களை
உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 3ஆம் தேதி இரவு 12 மணிக்கு,
நாங்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு ஒரு உயரத்ர போலீஸ் அதிகாரி
வந்து, என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கண் கலங்கிய
நிலையில், கம்பியைப் பிடித்துக்கொண்டு, ‘இந்தக் கஷ்டங்களெல்லாம்
இடைக்காலக் கஷ்டங்கள்தான், நீடிக்காது – பொறுத்துக் கொள்ளுங்கள்‘
என்றார் அன்று 3ஆம் தேதி – கலவரம் நடந்ததாகக் கேள்விப்பட்டு
நான் மெத்த வருத்தப்பட்டேன்.
ஏதோ காலிகள் கலவரம் செய்திருக்கிறார்கள்.
அன்றைய கூட்டத்திற்கு அனுமதி கிடைத்திருந்தால், 6ஆம் தேதி
கூட கறுப்புக் கொடி காட்டுவதை, ஏதாவது ஒரு இடத்தில் – வைத்துக்
கொள்ளலாம் அல்லது நான் கழகத் தோழர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்
கொண்டு – பொதுச் செயலாளரின் அனுமதியுடன் – கறுப்புக் கொடி
காட்டுவதே வேண்டாம் என்றுகூடச் சொல்லியிருப்பேன், எனவே,
நீங்கள் போய், நாவலரை என்னைச் சந்திக்கும்படி செய்யுங்கள்,
எப்படியாவது அவரை அழைத்து வந்து விடுங்கள், அவரிடம் நான்
இது பற்றிப் பேச வேண்டும்‘ என்றேன்.
நாவலரைக் கைது செய்து அழைத்து
வந்தார்கள்!
இதைக் கேட்டதும் அந்த அதிகாரியே,
நல்ல யோசனைதான், நான் அவரை அழைத்துவர முயற்சி செய்கிறேன்,
அந்த முயற்சியில் வெற்றி கிடைத்தால் வருகிறேன். இல்லையென்றால்
வரமாட்டேன், என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் என்ன செய்ய
முடியும்? பாவம்! அதாவது, அவர் சொய்யதில், முதல் கட்டம்
மட்டும் நிறைவேறியது. நாவலரை நான் சந்திப்பதற்குள் அவரைக்
கைதியாக்கி நான் இருந்த இடத்துக்கு அழைத்து வந்து விட்டார்கள்.
அடக்குமுறையை வீசினார்கள்
இப்படி, ஒவ்வொரு கட்டத்திலும்
நேசக் கரத்தை நீட்டினோம், ஆனால், ஆட்சியாளரோ, எங்கள் கழுத்து
மேல் கைபோட்டு அடக்கு முறையைத்தான் வீசினார்கள்.
அமைச்சர் பேசிய காரணத்தால்
தி.மு.கழகம் பலாத்காரத்தில் இறங்கிவிடாது. தி.மு.கழகம் ஆரம்பிக்கப்பட்டு
இந்த ஒன்பதாண்டுக் காலத்தில் பலாத்காரத்தில் ஒரு துளியும்
நம்பிக்கை வைக்கவில்லை.
வேட்டு முறை அல்ல! ஓட்டு முறை
தேவை!
ஓட்டு முறையில் ஒன்றும் ஆகாது,
வேட்டு – முறையால்தான் சாதிக்க முடியும் என்று கருதப்பட்ட
‘விடுதலை‘ பத்திரிகை எழுதியிருக்கிறது. நான் இப்பொழுதும்
சொல்கிறேன். ஓட்டுமுறைதான் தேவை! வேட்டுமுறையில் காரியத்தைச்
சாதிக்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்.
அடக்கு முறையால் எங்களைப்
பிடித்துக் கூட்டிலே தள்ளிவிடுவதால், எங்கள் கொள்கையைப்
பறித்துவிடலாம் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ஏமாறுவார்கள்.
போலீஸ் அதிகாரி அருள், அவர்கள்,
எங்களைக் கவுரவக் குறைவாக நடத்தினார்.
அதிகாரிகள் காட்டும் மரியாதையா
இது!
அதிகாரிகள், யார் யாருக்கு
எப்பொழுது மரியாதை காட்டுவார்கள் என்பதும் நன்றாகத் தெரியும்.
அதே அதிகாரிகள் அவர்களை முன்பு எப்படி நடத்தினார்கள் என்பதும்
எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
முன்பு நாம் இரயில் நிறுத்தப்
போராட்டம் நடத்திய காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்தவர்
பார்த்தசாரதி அய்யங்கார், அவர் எங்களை உட்கார வைத்து மரியாதையாக
நடத்தினார். இப்பொழுது கமிஷனராக உள்ள அருள், எங்களை நிற்க
வைத்துத்தான் பேசினார்.
இன்னும் சொல்லப்போனால் அருள்,
எங்களிடம் வாயால் கூடப் பேசவில்லை. கை விரலால் இப்படி ஒருமுறை
ஆட்டிக்காட்டி சைகை மூலமே உத்தரவிட்டார். அய்யங்கார் எங்களை
அமர வைத்து மரியாதையாகப் பேசினார். பச்சைத் தமிழர் ஆட்சியிலுள்ள
பச்சைத் தமிழரான அருள் எங்களை நிற்கவைத்து விரலால் பேசினார்!
நீதி விசாரணை வேண்டும்!
அதனால்தான் நான் சொல்கிறேன்.
போலீஸ் அடக்குமுறை பற்றிப் பொது விசாரணை வேண்டும் என்பதை
நாம் வற்புறுத்தியாக வேண்டும். அதற்கு நீங்களெல்லாம் ஒப்பமளிக்கும்
வகையில் நான் ‘நீதி விசாரணை‘ என்பேன். நிங்கள் ‘வேண்டும்‘
என்று சொல்ல வேண்டும் அண்ணா அவர்கள் ‘நீதிமன்றத்தில் விசாரணை
என்றதும் – கூடியிருந்த அத்தனை மக்களுக்கும் வேண்டும் என்று
ஒரு குரலில் முழங்கினார்.
அடுத்தபடியாக 6-ஆம் தேதி நடைபெற்ற
வன்செயலைக் கண்டிக்கும் வகையில் நான், ‘பஸ் கொளுத்தியது,
கல் எறிந்தது போன்ற வன்செயலை‘ என்பேன், நீங்கள் ‘கண்டிக்கிறோம்‘
என்று முழங்க வேண்டும் !அப்படியே அனைவரும் முழங்கினார்)
நாம் கடமையிலிருந்து சிறிதும்
நழுவிவிடக் கூடாது. அண்ணாதுரைக்கு இந்த நாட்டில் ஒரு சக்தியை
வளர்த்து விடத்தான் தெரிந்ததே தவிர, அதைக் கட்டிக்காக்க
முடியவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். கட்டிக்காக்க
என்னால் முடியும் என்பதை நமக்குள் உள்ள கட்டுப்பாட்டை உணர்த்தும்
வகையில், நான், ‘எழுந்திருங்கள்‘ என்று சொல்வேன். நீங்களெல்லாம்
உடனே எழுந்திருக்க வேண்டும். ‘உட்காருங்கள்‘ என்பேன் – உட்கார
வேண்டும் !அனைவரும் அப்படியே செய்தார்கள்)
தி.மு.க. தனது கட்டுப்பாட்டை
இழக்காது!
தடியால், கண்ணீர்ப் புகைக்
குண்டுகளால், துப்பாக்கியால் சாதிக்க முடியாததை என் சுட்டுவிரல்
சாதித்தது என்பதை இந்தப் பேரரசு அறிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு இவ்வளவு வலிவு திரண்டிருப்பது
வன் செயல்களுக்காக அல்ல, வீண் பெருமைக்கு அல்ல, பெரும் பொறுப்பு
நமக்கிருக்கிறது.
நெருப்பு சமையறையில் – அடுப்பில்
இருந்தால் நஷ்டமில்லை, அது கூரை மீது பற்றினால், வீட்டுக்கும்
ஊருக்கும் நஷ்டம்.
எவ்வளவு பழி சுமத்தினாலும்
தி.மு.கழகம் கட்டுப்பாட்டை இழக்காது.
காக்கி உடையிலிருக்கும் போலீசுக்கும்
போர்க்களத்திலுள்ள போர் வீரருக்கும் வித்தியாசம் கட்டுப்பாடுதான்.
உங்களிடம் காக்கி உடை இல்லாமலிருக்கலாம்.
தமிழன் ஒரு பெரிய போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருக்கிறான்.
அறப்போரில் வன்செயலுக்கு இடமே இல்லை. அடித்தால் திருப்பித்
தாக்குவது என்பது நாகரிமல்ல. நம்முடைய அரசியலுக்கு முரணானது
என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தனியுரிமை வேண்டும்!
காஷ்மீரிலே நான்கரை ஆண்டு
சிறையிலடைக்கப்ட்டிருந்தார் ஷேக் அப்துல்லா, அவர், நேருவுக்கு
உற்ற நண்பர், உறவினரோ என்று வட உலகோர் கருதக் கூடிய நிலையிலிருந்தவர்!
உலகப் புகழ் பெற்றவர். அப்படிப்பட்டவர் நான்கரை ஆண்டு பூட்டி
வைக்கப்பட்டிருந்து வெளி வந்ததும் என்ன பேசினார்? ‘தங்கள்
தாயகம் தனியுரிமை பெற வேண்டும், அதன் உரிமையைத்தாங்களே –
நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்‘ என்பதாகக் கூறினார். நேருவின்
புருவம் நெறித்தலுக்கோ புன்முறுவலுக்கோ அவர் ஆட்பட்டுவிடவில்லை.
காஷ்மீர் தனி நாடு ஆக வேண்டுமென்று, நான்கரை ஆண்டு பூட்டி
வைத்திருந்த பிறகு ஷேக் அப்துல்லா கூறினார் என்றால், 4 நாள்
எங்களை வைத்துப் பூட்டிவிட்டால் எங்கள் கொள்கையை விட்டுவிடுவோம்
– எங்களை அடக்கிவிடலாம் என்று கருதுவது எவ்வளவு பெரிய தவறு
என்பதை ஆட்சியாளர் உணர வேண்டும்.
(நம்நாடு - 16, 17, 18.1.1958)