அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


“சாதி எண்ணம் எங்கிருந்தாலும் அதைக் கெல்லி எடுக்க வேண்டும்”

28.2.59 அன்று சென்னை-கிண்டி பொறியியல் கல்லூரித் தமிழ் மன்ற ஆண்டு விழாவில் அண்ணா அவர்கள் ‘வாழ்வும் வளமும்’ என்ற பொருள் பற்றி ஆற்றிய உரை.

பாராளுமன்றத்திலே பழங்குடி வகுப்பைச் சேர்ந்த திரு. செகசீவன்ராம் அவர்கள் ரயில்வே இலாகாவை நிர்வகிக்கும் பெரும் பொறுப்பை ஏற்று அமைச்சராகப் பணியாற்றி வருபவர். ரயில்வே சம்பந்தமான வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித்து அவர் அளித்துக் கொண்டிருக்கும் செய்தியைப் பத்திரிகையிலே படிக்கும் அதே நேரத்தில் மற்றொரு செய்தியும் அதே பத்திரிகையில் இருந்தது.

சனாதனிகளின் காலம்
ஆமதாபாத் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் ஒரு கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற பழங்குடி மக்களைச் சனாதனிகள் 400 பேர் கூடி தடுத்து இருக்கின்றனர். அந்தக் குளம் சாதி இந்துக்கள் என்பவர்கள் மட்டுமே குளிக்கக்கூடியது. ஆதித்திராவிடர்கள் அதில் குளிக்கக்கூடாது’ என்பது தெய்வ நம்பிக்கையுள்ள சனாதனிகளின் வாதம். அரசியல் சட்டத்தில், ‘சாதிப்பாகுபாடு காட்டக் கூடாது’ என்றிருக்கிறது. ‘நம்மை யார் தடுக்க முடியும்; பார்க்கலாம்’ என்று கருதிப் பழங்குடி வாலிபர்கள் சிலர் அக்குளத்தில் குளிக்கத் துணிந்து சென்றனர். அவர்களைத் தான் 400 சனாதனிகள் கூடி கையிலே ஆயுதம் தாங்கித் தடுத்திருக்கின்றனர். பூஜாமணி மாலை அவர்கள் கையிலிருந்திருக்கும் என்று நீங்கள் கருதலாம். உண்மையில் அவர்கள் கையிலே அவை இல்லை. வாள், வேல், கத்தி, கல், அரிவாள், கோடரி முதலிய ஆயுதங்களை ஏந்தி வந்து தாக்கித் தடுத்திருக்கின்றனர். புண்ணியத் தீர்த்தத்திலே அவர்களை இறங்கவிடாமல் தடியால் தாக்கி, கல்லால் அடித்துத் தடுத்திருக்கிறார்கள். இச்செய்தியறிந்த போலீஸ் அதிகாரியும் அங்கு வந்திருக்கிறார். அந்த சனாதனிகளின் போக்கை அறிந்த போலீஸ் அதிகாரிகூட, பயந்து போய் பழங்குடி வாலிபர்களிடம், ‘இந்த நேரத்தில் இதை விட்டு விடுங்கள்; பிறகு ஒருநாள் பார்த்துக் கொள்ளலாம்; இப்பொழுது நிச்சயம் சரியில்லை’ என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, சனாதனிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

மூடநம்பிக்கைதான் காரணம்
ஆகதாபாத் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் ஒரு கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற பழங்குடி மக்களைச் சனாதனிகள் 400 பேர் கூடி தடுத்து இருக்கின்றனர். அந்தக் குளம் சாதி இந்துக்கள் என்பவர்கள் மட்டுமே குளிக்கக்கூடியது. ஆதித்திராவிடர்கள் அதில் குளிக்கக்கூடாது’ என்பது தெய்வ நம்பிக்கையுள்ள சனாதனிகளின் வாதம். அரசியல் சட்டத்தில், ‘சாதிப்பாகுபாடு காட்டக்கூடாது’ என்றிருக்கிறது. ‘நம்மையார் தடுக்க முடியும்; பார்க்கலாம்’ என்று கருதிப் பழங்குடி வாலிபர்கள் சிலர் அக்குளத்தில் குளிக்கத்துணிந்து சென்றனர். அவர்களைத் தான் 400 சனாதனிகள் கூடி கையிலே ஆயுதம் தாங்கித் தடுத்திருக்கின்றனர். பூஜாமணி மாலை அவர்கள் கையிலிருந்திருக்கும் என்று நீங்கள் கருதலாம். உண்மையில் அவர்கள் கையிலே அவை இல்லை. வாள், வேல், கத்தி, கல், அரிவாள், கோடரி முதலிய ஆயுதங்களை ஏந்தி வந்து தாக்கித் தடுத்திருக்கின்றனர். புண்ணியத் தீர்த்தத்திலே அவர்களை இறங்கிவிடாமல் தடியால் தாக்கி, கல்லால் அடித்துத் தடுத்திருக்கிறார்கள். இச்செய்தியறிந்த போலீஸ் அதிகாரியும் அங்கு வந்திருக்கிறார். அந்த சனாதனிகளின் போக்கை அறிந்த போலீஸ் அதிகாரிகூட, பயந்து போய், பழங்குடி வாலிபர்களிடம், ‘இந்த நேரத்தில் இதை விட்டு விடுங்கள்; பிறகு ஒருநாள் பார்த்துக் கொள்ளலாம்; இப்பொழுது நிலைமை சரியில்லை’ என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, சனாதனிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

மூடநம்பிக்கைதான் காரணம்
அப்படி அடித்துத் தாக்கிய சனாதன இந்துக்களுக்குக் கருணை இல்லையா என்றால், இந்து மதத்தில் கருணைக்கு இடம் உண்டு. அத்தகைய சனாதனிகள் குழந்தைகளிடம் கொஞ்சுவதைப் பார்க்காலம்; வாலிபர்களிடம் வாஞ்சையோடு பழகுவதைப் பார்க்கலாம்; மாட்டைப் பலமாக அடித்தால் அதைக் காண அவர்களுடைய மனம் தாங்காது; புண்ணுள்ள பசுமாட்டிடம் பரிவு காட்டுவதைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட ஈரமுள்ள அவர்களுடைய மனம்தான் இப்படிச் செய்கிறது. இதற்குக் காரணம் என்ன? புண்ணியத்தீர்த்தத்தில் ஆதிதிராவிடர்கள் இறங்கினால் புண்ணியத்தீர்த்தம் பாழாகி, இந்தப் பூலோகம் மட்டும‘ன்றித் தேவலோகத்தையும் அது கெடுத்துவிடும் என்கிற அவர்களுடைய மூடநம்பிக்கைதான் அவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது.
அந்தப் புண்ணியத் தீர்த்தத்தில் குளித்தால் போகிற வழிக்கு நல்லது கிடைக்கும் என்பது குளிக்கச் சென்ற ஆதிதிராவிட வாலிபர்களின் நம்பிக்கை. இந்த இருசாராருடைய நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகள்தான். முந்தியது அண்ணன்; பிந்தியது தம்பி.
அதே பத்திரிகையில் இன்னொரு செய்தியையும் படித்தேன். இந்தியத் துணைக்கண்டத்தின் உதவிக் குடியரசுத்தலைவராக உள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள், ‘இந்து மதத்தில் சாதிகளுக்கு இடமில்லை’ என்று கூறியிருக்கிறார். அதே நாளில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு வழக்கு நடந்திருக்கிறது. குப்பை கூட்டும் தொழிலாளி ஒருவன், தன் மகனை வெட்டிக் காளி கோயிலில் காணிக்கை செலுத்தி, தான் கொண்ட விரதத்தை நிறைவேற்றி, ‘அன்னையே காளி, அருள்பாளிக்க வேண்டும்’ என்று வேண்டியிருக்கிறான். சட்டப்படி இது குற்றம் என்று கருதி, அவன் மீது போலீசார் வழக்குத் தொடுத்திருக்கின்றனர்.

இதில் யார் கொடியவர்கள்?
முன் சொன்ன பழங்குடி வாலிபர்களுக்கும் இந்தக் குப்பை கூட்டும் தொழிலாளிக்கும் என்ன வித்தியாசம்? இவர்களில் யார் கொடியவர்கள்? முன்னவரைவிடப் பின்னவர், மிகுந்த பழமையிலே நம்பிக்கை வைத்திருப்பவர். அவ்வளவுதான். நம்பிக்கையின் தரத்திலேதான் வித்தியாசம் இருக்கலாமே தவிர, அவர்கள் மீது குற்றமில்லை. ஒரே இனத்திலுள்ள இவர்கள், பக்தியிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, எதைச் செய்தாகிலும் பக்தியை நிலைநாட்ட வேண்டும் என்று கருதி, அவரவர் விரும்பியதைச் செய்கின்றனர்.
இன்னொரு நிகழ்ச்சியும் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. மேற்கு வங்க கவர்னரான திருமதி பத்மஜா அம்மையார் தமது பரிவாரங்களுடன் அலகாபாத் வந்து சேர்“ந்தார் என்ற செய்தியையும் பத்திரிகையிலே பார்த்தேன். அவர் ஏன் அங்கு வந்தார் என்று பார்த்தால், அவருடைய சகோதரி அண்மையில் இறந்துவிட்டதாகவும், இறந்தவரின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக அங்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. நான் இதுவரை சொன்ன நிகழ்ச்சிகளிளெல்லாம் சம்பந்தப்பட்ட 4 பேர்களையும் வரிசைப் படுத்திப் பாருங்கள். இதை நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், குப்பை கூட்டும் தொழிலாளி முதல் கவர்னர் வேலை பார்ப்பவர் வரை யார் மனத்திலே இந்த மூட நம்பிக்கை புகுந்தாலும் அதைக் கெல்லி எடுப்பது கடினம். இந்த மூடநம்பிக்கை எவ்வளவு வலிவானது என்பதைக் காட்டத்தான் இதைச் சொல்கிறேன்.

அஞ்சா நெஞ்சம் வேண்டும்
அவரவர் கொண்டுள்ள நம்பிக்கைகள் தரத்தில் வேண்டுமானால் வேறுபடலாமே தவிர எண்ணம் ஒன்றுதான். இந்த எண்ணம் வெளியானால் விளைவுகள் பலவிதமாக மாறுகின்றது.

சாதி எண்ணம் எங்குப் புகுந்திருந்தாலும் அதைக் கெல்லி எடுக்கும் துணிவு வேண்டும். இந்த அஞ்சா நெஞ்சம் இருந்தாலொழிய நாம் கூடி வாழ சாதியை ஒழிக்க இயலாது. அடுத்தபடியாக அறியாமை நீங்க வேண்டும். இந்தப்பணி, சாதி ஒழிப்பைவிடக் கடுமையானது. அறியாமை ஒழிக்கப்பட வேண்டும் என“கிறபோது, எது அறிவு எது அறியாமை என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இங்கே இந்த விளக்கு எரிகிறது. இது விளக்கு என்பதை அறிந்து கொள்வது ஓர் அறிவு. இந்த விளக்கு எப்படி எரிகிறது எதனால் எரிகிறது என்பதை அறிவது ஒருவித அறிவு. விளக்குக்கு மூலமான மின்சாரத்தைப் பற்றி அறிவது ஓர் அறிவு, இந்த விளக்கு எரிய எத்தனை ‘கேண்டில் பவர்’ மின்சாரம் வேண்டும்; கேண்டில் பவர் இதில் அதிகம் அதில் குறைவு என்பதையெல்லாம் அறிந்து கொள்வது ஓர் அறிவு.

அறிவு-கருவூலம் ஆகும்
இதைப்போல, ஒவ்வொன்றைப் பற்றியும் அறிய வரும்; இசை பழகப் பழக குழைவது போல, அறிவும் பழகப் பழக ஒளிபெறும். திறமை வளர வளரப் புதுக் கருத்துகள் ஊறறெடுக்கக்கூடிய ஒரு கருவூலம் ஆகும்.

ஒன்றைப் பற்றி ஒருவரைக் கேட்டால், ‘இதென்ன எனக்குத் தெரியாதா?’ என்று அவர் திருப்பிக் கேட்பதற்கு, எது அறிவு என்பது தெளிவாகாததுதான் காரணம்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் வேப்பமரத்தைப் பற்றி நான் கொண்டிருந்த கருத்துக்கும், இப்பொழுது வேப்பமரத்தைப் பார்க்கின்ற பொழுது கொள்ளும் கருத்துக்கும் வித்தியாசமிருக்கிறது. ‘வேப்பிலை, பிசாசு ஓட்ட உதவும்’ என்பதைத்தான் நான் சிறுவனாக இருந்தபோது தெரிந்து வைத்திருக்கிறேன். பூசாரிகள் வேப்பிலை கொண்டு பிசாசு ஓட்டுவதைப் பூசை நடத்துவதை நான் பார்த்திருப்பதால் எனக்கு அந்தக் கருத்து இருந்தது. அப்பொழுது வேப்பமரத்தைப் பார்க்கும் போதெல்லாம், ‘அடடா, இவ்வளவு வேப்பிலையில் எத்தனைப் பிசாசுகளை ஓட்டலாம்!’ என்று எண்ணுவேன். இப்பொழுதெல்லாம், வேப்பமரத்தைக் கண்டால் ‘இந்த வேப்பிலையிலிருந்து தைலம் இறக்கி வாசனை சோப்புகள் தயாரிக்க அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. சிறுவனாக இருந்தபோது கண்ட அதே வேப்பமரத்தைப் பற்றிப் பல ஆண்டுகளுக்குப் பின்பு வேறொரு கருத்து ஏற்பட்டிருக்கிறது. பொருள் மாறுபட வில்லை; அறிவு மாறுபடுகிறது.

தடை விதிப்பது அறியாமை
சேலம் மாவட்டத்தில் இராசிபுரத்துக்கருகிலுள்ள ‘பொய்மான் கரடு’ என்ற குன்றை நான் மூன்று முறை பார்வையிட்டேன். மூன்று முறையும் அந்தக் குன்றை எனக்குக் காட்டியவர் ஒரே ஆள்தான். ஆனால் அவர் மூன்று முறையும் அந்தப் பொய்மான் கரடைப் பற்றி வெவ்வேறு கருத்துகளைச் சொல்லி விளக்கினார். காலத்துக்கேற்ப அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப அவர் பேச்சும் இருந்தது. எதையும் அறிந்து கொள்ளத் தடை விதிப்பது அறியாமை ஆகும். இத்தகைய தடைகள் தகர்த்தெறியப்படவேண்டும்.

ஒரு வகையில் எல்லாம் தெரிந்தவர்கள் போல நடப்பவர்கள் மற்றொரு வகையில் ஒன்றும் தெரியாமலிருக்கலாம்.

இப்பொழுது சைப்ரஸ் நாடு விடுதலையடைந்தது. இந்தச் செய்தியை எல்லோரும் பத்திரிகையிலே படித்துத் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தச் சைப்ரஸ் நாடு எங்கேயிருக்கிறது? என்று ஒரு கேள்வியைப் போட்டால் பலருக்குத் தெரியாது; ஆனால், அவர்கள் எல்லாம் தெரிந்ததாகப் பாவனை செய்வார்கள்.

எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருந்தாலும் நமக்கு அனுபவம் குறைவு; இன்னும் பல தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடக்க உணர்ச்சி ஏற்படவேண்டும்.

படிப்பும் பயிற்சியும் பயனற்றுப் போகும்
கிராமத்துக்கும் நகரத்துக்குமிடையேயுள்ள அறியாமை ஒழிந்து அறிவு வளர வேண்டும். புதிய உலகக் கல்வி பயிலும் நீங்கள் பழைமை நெளியும் இடங்களுக்கு உத்தியோகம் பார்க்கப் போய்விட்டால், அங்கே நீங்கள் படித்த படிப்பு, பெற்ற பயிற்சியெல்லாம் பயன்படாது போய் விடவும் கூடும். நீங்கள் பொறியியல் துறையிலே நல்ல பயிற்சி பெற்றதினால், பொறியியல் அலுவல்களுக்கு இடையூறாக இருக்கும் பழைய நம்பிக்கைகள் சில குறுக்கிடலாம். உதாரணமாக, சாலையிலே உள்ள ஒரு வேப்பமரத்தை வெட்டவேண்டுமென்று நீங்கள் கருதினால், அதற்கு ஊரிலே உள்ளவர்களின் எதிர்ப்புப் பலமாகக் கிளம்பும். ‘இந்த வேப்பமரத்தை வெட்டினால் காளியாயிக்குக் கோபம் வரும். இதனால் ஊருக்குப் பெரிய ஆபத்து வரலாம். ஆகையினாலே இதை வெட்டாதிருக்கும்படி வேண்டுகிறோம்’ என்று கோரி 1000-2000 கையெழுத்து வாங்கி மேலதிகாரிகளுக்கு மந்திரிகளுக்கு அனுப்புவார்கள். ‘மரத்தை வெட்ட வேண்டாம்’ என்று மேலேயிருந்து உத்தரவு வரும். அப்பொழுது உங்கள் படிப்பும் பயிற்சியும் பயனற்றுப் போகும்.

இந்தக் கோயிலில் கைவைத்தால்...?
‘இப்படியும் நடக்குமா?’ என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லுகிறேன். சென்னையிலிருந்து திருச்சிக்குப் போகும் சாலையில் விழுப்புரத்துக்கருகிலுள்ள ஓர் இடத்தில் ஒரு பஜனைக் கோயில் இருக்கிறது. சாலை நடுவே இருக்கும் இந்தக் கோயிலின் இரு பக்கத்திலும் சுமார் ஆறடி அகலம்தான் பாதை இருக்கிறது. அந்தப் பாதை வழியேதான் எல்லா வண்டிகளும் போய் வரவேண்டும். போக்குவரத்துக்கு வசதி வேண்டுமானால் சாலை அகலப்படுத்தப்படவேண்டும் என்பது சாதாரணமாகப் பொறியியல் நுழைமுக வகுப்பிலேயே சொல்லிக்கொடுக்கப்படும் என்று கருதுகிறேன். இன்னும் சொல்லப் போனால், ‘இதுகூட சொல்லிக் கொடுத்துத்தான் தெரியவேண்டுமா?’ என்றுகூட நீங்கள் என்னைக் கேட்கலாம். ஆனால், விழுப்புரத்திலே உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்தக் கோயிலில் கைவைத்தால்?’ என்று பயமுறுத்துகிறார்கள். இப்படிப்பட்ட நிலைமைகளெல்லாம் உங்களைச் சந்திக்க இருக்கின்றன.

அதிகாரிகள் பொதுவாக மக்களிடம் அதிகம் நெருங்கிப் பழகுவதில்லை. பழகக்கூடாது என்பதுகூட அல்ல; பழகுவதற்கு அவர்களுக்குக் கூச்சம். பழகினால் இப்படிப்பட்ட சிக்கல் ஏற்படும்போது என்ன செய்ய முடியும்? கோயிலை அகற்றவேண்டுமென்று உத்தரவு போட்டால் பிறகு தங்களுக்குப் பாதுகாப்புத் தேட வேண்டும். எனவே இப்படிப்பட்ட காரியங்களில் தலையிடாமலே அதிகாரிகள் விட்டு விடுகின்றனர். இத்தகைய மனப்பான்மை எதிர்காலத்தில் இருக்காது என்று நம்புகிறேன்.

தமிழில் அறிவு பெற வேண்டும்
நீங்கள் தமிழில் நல்ல அறிவு பெறவேண்டும். தமிழ் அறிவு இருந்தால் எதையும் ஆராயும் தன்மை வளரும்; ஆராய்ந்த உண்மையைப் பிறருக்கும் சொல்லலாம்; இதன் மூலம் மக்கள் அறியாமையைப் போக்க முடியும்.

கிராம மக்கள் அறிவுக்கும், நகர மக்கள் அறிவுக்குமுள்ள முரண்பாட்டைப் போக்க வேண்டும். இதற்கு ஓர் இணைப்புக் கல்வித் திட்டம் ஏற்படுத்த வேண்டும். கிராமமக்கள் பொழுது போக்குக்காகக் கூடுமிடங்களிலெல்லாம் நீங்கள் அவர்களோடு கலந்து பழகி, உலகப் புதுமைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். இன்றைக்கு ‘முதியோர் கல்வி’ என்று சொல்கிறார்களே, அதைச் சொல்லவில்லை. நான், பழைமையில் ஆழ்ந்திருக்கும் இளைஞர், முதியோர் எல்லோரும் புதிய உலக அறிவு பெறச்செய்யவேண்டும்.

சாதி-அறியாமை இந்த இரண்டும் நீங்கினாலன்றி, பயங்கரக் கேடுபாடுகளை உண்டாக்கி வரும் வறுமை ஒழியாது. வறுமையைப் போக்க நாட்டை வளப்படுத்த காடுகழனிகளை வெட்டித் திருத்தி, நீர்பாய்ச்சிப் பயிரிடும் முறைகளைக் கல்லூரி மாணவர்களும் அறிந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் வறட்சி நீங்கி வளம் கொழிக்க உங்கள் அறிவு பயன்படவேண்டும்.

(நம்நாடு - 9.3.59)