சேலம், டி.19 தங்களுக்கு அதிகாரம்
இல்லையென்று காமராசர் சர்க்கார் வீணாக எந்தக் காரியத்தையும்
தட்டிக்கழிக்கிறது. சிறையிலுள்ள 3,000 திராவிடர் கழகத்தினரையும்
விடுதலை செய்யக் காமராசர் சர்க்காருக்கே அதிகாரம் உள்ளது.
ஜாதிப் பெயர்ப் பலகைகள் போடும் ஓட்டல்களுக்கு ‘லைசென்ஸ்’
வழங்கக் கூடாது என உள்ளாட்சி மன்றங்களுக்கு உத்தரவிட சென்னை
அரசாங்கத்திற்கே, அதிகாரம் உள்ளது; சென்னைக்குத் ‘தமிழ்நாடு’
என்று பெயர் வைக்கவும் காமராசர் சர்க்காருக்கே அதிகாரம்
உள்ளது.
1965 க்குப் பின் ஆங்கிலத்தை எடுத்துவிடக்கூடாது; ஆங்கிலம்
தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சித்
தலைவர்களையும் கலந்து பேசிய பிறகு, மத்திய அரசாங்கத்திற்குக்
காமராசர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தங்களுக்குத் தேவையானவைகளைக் காமராசர் ஆட்சி செய்கிறது;
ஆனால், தங்களுக்கு விருப்பமில்லாதவைகளைத் தங்களுக்கு அதிகாரமில்லை
என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறது.
எப்படி விடுதலை செய்ய முடியும்?
மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டியோ, மந்திரிகளின்
வீட்டில் மறியல் செய்தோ, மற்றும் கிளர்ச்சிகள் செய்தோ
10 அல்லது 15 தினங்களில் பெரியாரையும் சிறையிலுள்ள திராவிடர்
கழகத்தினரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் விடுதலை செய்ய
முடியும்; ஆனால், ‘காமராசர் மந்திரிசபைக்கு எதிராக எந்தக்
காரியத்தையும் செய்யக்கூடாது’ என்று பெரியார், சிறைக்குச்
செல்வதற்குமுன் சொல்லிச் சென்றுள்ளார். ஆகவே காமராசர் அரசாங்கத்திற்கு
எதிராகக் கிளர்ச்சி செய்யாமல் எப்படிப் பெரியாரை விடுதலை
செய்ய முடியும்? என்று, சேலம், அரிசிப் பாளையத்தில் நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அண்ணா அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
சேலம் அரிசிப்பாளையத்தில் 5 ஆவது வட்டத் தி.மு.கழக ஆண்டு
விழா 15.12.1957 ஆம் தேதியன்று சேலம் நகரத் தி.மு.க செயலாளர்
தோழர் ஈ.ஆர்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின்
பிற்பகுதி தோழர் ஏ.சித்தையன் தலைமையில் நடைபெற்றது. (தோழர்
ஏ.சித்தையன் கூட்டத்திற்கு வரத் தாமதம் ஏற்பட்டதால் தோழர்
ஈ.ஆர். கிருஷ்ணன் முதலில் தலைமை வகித்தார்)
தோழர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி எம்.எல்.ஏ. அவர்கள் தி.மு.கழகக்
கொள்கைகளை விளக்கிப் பேசினார்.
ஒரு கூட்டம் போதும்!
அடுத்த அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
இன்றைய தினத்தில் இங்கு (அரிசிப்பாளையத்தில்) ஒரு கூட்டமும்,
சேலம் கோட்டையில் மற்றொரு கூட்டமும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
ஒருநாளில் ஒரே ஊரில் இரண்டு கூட்டங்களில் பேச வேண்டியதில்லை.
இங்குக் குறுகிய இடத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதால்
மக்கள் திரள் அதிகமாக வந்து, நெருக்கடியாக உட்கார்ந்து கொண்டு,
ஆர்வம் குறையாமல் தி.மு.கழகக் கொள்கைகளைக் கேட்க இருக்கிறார்கள்.
மந்திரிமார்களுக்கு இம்மாதிரி குறுகிய இடத்தில் கூட்டம்
போட்டால்தான் சுமாரான மக்கள் கூட்டமாவது வரும் (சிரிப்பு)
நம் கழகம் வளர்ந்துவிட்ட காரணத்தால் இம்மாதிரி இரண்டு மூன்று
இடங்களில் ஒரே நாளில் கூட்டம் போடுகிறார்கள்; ஒரே நாளில்
ஒரே ஊரில், ஒரு கூட்டத்தில் பேசினால் போதும் என்று நினைக்கிறேன்.
தி.க.தோழர்களைப் பாராட்டுகிறேன்!
சட்டப் புத்தக எரிப்புப் போராட்டத்தில் சுமார் 3,000 திராவிடர்
கழகத் தோழர்கள் சிறை சென்றுள்ளார்கள். சிறை சென்றுள்ள திராவிடர்
கழகத் தோழர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
யார் எந்தக் கழகத்தில் இருந்தாலும் அந்தக் கழகத்தின் போராட்டக்
காலங்களில் சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும். சிறை செல்லவும்
தயங்காத இதயம் படைத்தவர்கள்தான் ஒவ்வொரு கழகத்திலும் இருக்க
வேண்டும். போராட்டக் காலங்களில் சிறை செல்ல அஞ்சுகின்றவர்கள்
அவர்கள் இருவரும் கழகத்திற்கே இழுக்கைத் தேடிக்கொடுப்பவர்
களாவார்கள்.
திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் சுமார்
3,000 பேர்வரை சிறை சென்றதை நான் பாராட்டுவதால், அவர்கள்
போராட்டத்தை நான் ஆதரித்தாக அர்த்தமில்லை; அவர்கள் (தி.க)
போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை.
தி.க.வினர் வீடுகளில் என் படம் இருக்காது!
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.கழகம் பிரிந்து 8 ஆண்டுகள்
ஆகின்றன; தி.மு.கழகத்தினர் வீட்டில் என்னுடைய படமும், பெரியார்
படமும் இருக்கும்; ஆனால், திராவிடர் கழகத்தினர் வீட்டில்
பெரியார் படம் மட்டும் இருக்கும்; என் படம் இருக்காது.
திராவிடர் கழகத்தினர் ‘விடுதலை’ தின இதழைமட்டும் படிப்பார்கள்,
‘நம் நாடு’ தின இதழைப் படிக்க மாட்டார்கள்! ஆனால், தி.மு.கழகத்தினரோ,
‘விடுதலை’யையும், ‘நம்நாடு’ தின இதழையும் படிப்பார்கள்!
இவற்றை எதற்குச் சொல்கிறேன் என்றால், மற்றவர்களின் கருத்தைத்
தெரிந்துகொள்வதும், மற்றவர்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுக்கும்
வழக்கமும் தி.மு.கழகத்தினரிடம் உண்டு என்பதை இவை குறிக்கின்றன.
திராவிடர் கழகத்தினர் சுமார் 3,000 பேர் சிறை சென்றதைப்
பாராட்டுவதால், தி.மு.கழகத்தில் போராட்டக் காலங்களில் சிறை
செல்வோர் எண்ணிக்கை குறைவு என்று எண்ணாதீர்கள். தி.மு.கழகம்
நடத்திய மும்முனைப் போராட்டத்தில் சுமார் 5,000 பேர் சிறை
சென்றிருக்கிறார்கள். ஆகவே, போராட்டக் காலங்களில் சிறை
செல்லத் தி.மு.கழகத்தில் உள்ளவர்கள் தயங்கியதில்லை.
சிறையில்-பக்கத்துப் பக்கத்து அறைகளில்...!
ஏறக்குறைய 80 வயதான பெரியார் அவர்கள் சிறைக்குச் செல்லும்போதெல்லாம்
நானும் கூடவே சிறைக்குச் சென்றிருக்கிறேன். தி.மு.கழகம்
திராவிடர் கழகத்தைவிட்டுப் பிரிந்த பிறகுகூட, ‘பொன்மொழி’
என்ற புத்தகம் எழுதியதற்காக பெரியார் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச்
சிறையில் அடைக்கப்பட்டார். ‘ஆரிய மாயை’ எழுதியதற்காக நானும்
சிறையில் அடைக்கப் பட்டேன்-சுமார் 10 தினங்கள் சிறையில்
பக்கத்துப் பக்கத்து அறைகளில் நானும், பெரியாரும் வைக்கப்பட்டிருந்தும்
கூட, நானும் பெரியாரும் பேசிக்கொள்ள வில்லை. எனக்கு வெளியிலிருந்து
ஏதாவது உணவு கொண்டுவந்து கொடுக்கப்படுகிறதா என்று பெரியார்
சிறை வார்டரிடம் கேட்டார், ‘அவருக்கு ஒன்றும் வெளியிலிருந்து
பிஸ்கட்டோ, உணவோ வருவதில்லை’ என்று வார்டர் சொன்னபிறகு,
தனக்கு வந்த பிஸ்கட்டுகளில் 6 பிஸ்கட்டுகளை எனக்குக் கொடுக்கும்படி
வார்டரிடம் கொடுத்தனுப்பினார். அந்தப் பிஸ்கட்டுகளை நான்
சாப்பிடாமல் அவை உதிர்ந்து போகின்ற வரையில் பத்திரப்படுத்தி
வைத்திருந்தேன். என்னைத் திராவிடர் கழகத்தினர் திட்டும“போதெல்லாம்,
அந்தப் பிஸ்கட்டுகளை எடுத்துப் பார்த்துக் கொள்வேன். நீங்கள்
(தி.க) திட்டுகிறீர்கள். ஆனால், பெரியார் என்னிடம் அன்பு
வைத்திருக்கிறார்; சூழ்நிலை, அவர் என்னிடம் பேச விடாதபடி
செய்கிறது என்று எண்ணிக்கொள்வேன்.
இந்தத் தடவைதான் நான் பெரியாருடன் சேர்ந்து சிறைக்குச் செல்ல
முடியவில்லை; காரணம் பெரியாரின் போராட்டத் திட்டங்களில்
பங்குகொள்ல முடியவில்லை.
கொள்கைக்காகத்தான் பாடுபடுவேன்!
திராவிடர் கழகத்தில் நான் இருந்தபோதே சில கொள்கைகளை எதிர்த்து
என கருத்துக்களை வெளியிட்டிருக்கிறேன். ‘ஆகஸ்டு 15இல், துக்கத்தினம்
கொண்டாடுகள்’ என்று பெரியார் அறிக்கை விட்டபொழுது, ஆகஸ்டு
15 பிடிக்காவிட்டால் சுதந்திரத் தினத்தைக் கொண்டாடாவிட்டாலும்
பரவாயில்லை; துக்கத் தினம் கொண்டாடாமல் ஒதுங்கியாவது இருங்கள்’
என்று நான், ‘திராவிட நாடு’ பத்திரிகையில் அறிக்கைவிட்டேன்;
‘பெரியாரின் கருத்துக்கு மாறாக எப்படி அறிக்கை விடலாம்’
என்று பலர் என்னிடம் கேட்டார்கள்; கருத்து வேற்றுமையை வெளியிடுவதில்
தவறில்லை; என் மீது தவறு என்று நினைத்தால் ஒழுங்கு நடவடிக்கை
எடுத்து, திராவிடர் கழகத்திலிருந்து என்னை வெளியேற்றுங்கள்;
நான் தனியாக வெளியே சென்றாலும், திராவிடர் கழகத்தின் கொள்கைக்காகத்தான்
பாடுபடுவேன்’ என்று சொன்னேன்; ஆனால், என்னைத் தி.க.விலிருந்து
அப்பொழுது வெளியேற்றவில்லை.
ஆகையால், திராவிடர் கழகத்தின் சட்டப் புத்தக எரிப்புப் போராட்டத்தை,
என் கொள்கைக்குப் பிடிக்காததால் ஆதரிக்கவில்லை. சென்னைச்
சட்டசபையில் சட்டப்புத்தக எரிப்புப் போராட்டத்தை ஒடுக்கப்
புதிய சட்டம் வந்தபொழுது, நான் அதை எதிர்த்தேன். அப்பொழுது,
எங்கள் (தி.மு.கழகம்) உண்மை சொரூபத்தைத் தெரிந்துகொள்ள
முடிந்ததாக நிதியமைச்சர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
அவ்வளவு சுலபத்தில் எங்களை அளவுகோலால் அளந்துவிட முடியாது.
காரணம், தவறான அளவுகோலை வைத்த அளந்து பார்க்க எண்ணுகிறார்கள்.
வேறு சந்தர்ப்பம் கிடைக்காது!
சாதிகள் கூடாது என்று காமராசரும், பண்டித நேருவும், பெரியாரும்
மற்றும் பலரும் கூறுகின்றனர். சாதிகளை ஒழிக்க எல்லாக் கட்சிகளும்
ஒன்றாகச் சேர்ந“து பணியாற்ற இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது.
‘சாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கச் சட்டப் புத்தகத்தை எரிக்க
வேண்டும்’ என்ற பெரியார் சொன்னார்; ஆனால், சட்டப்புத்தகத்தை
எரித்து சுமார் 3,000 பேர் சிறை புகுந்தும் சாதிகள் அப்படியே
இருக்கின்றன.
பெரியாருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது;
இனி நமக்குத்தான் பொறுப்பு அதிகமுண்டு.
சாதிகள் ஒழிய கலப்பு மணம் தேவை!
10 பிராமணர்களைக் கொல்வதாலோ, அக்கிஹாரத்திற்கு நெருப்பு
வைப்பதாலோ சாதிகள் ஒழியாது என்று சிறைக்குச் செல்வதற்குமுன்
சென்னைக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
பலாத்காரத்தில் இறங்குவதில் பலனில்லை என்பது பெரியாருக்குத்
தெரிந்துவிட்டது.
கலப்புத் திருமணம் செய்து கொண்டால் சாதிகள் ஒழியும். ஆதித்திராவிடப்
பெண்ணை ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ மணந“துகொண்டால்,
அவர்கள் தங்கள் தெருக்களிலேயே தங்கள் குடித்தனம் நடத்த வேண்டும்;
அதற்கு மற்றவர்கள் ஆதரவு தர வேண்டும். கீழ்ச் சாதிப்பெண்ணை
மணந்துகொண்டார் என்பதற்காக ஒருவரை, அவர் குடியிருக்கும்
தெருவிலிருந்து மற்றவர்கள் துரத்திவிடக்கூடாது.
சாதி ஒழிக்கும் திட்டம்!
பெரியார் சிறையிலிருந்து வருவதற்குள் எல்லா அரசியல் கட்சிகளிலுமுள்ள
முற்போக்குவாதகிளும் ஒன்றாக உட்கார்ந்து பேசிச் சாதிகளை
ஒழிக்கத் திட்டம் வகுத்தாக வேண்டும். இம்மாதிரி செய்தால்தான்
பெரியார் சிறைக்குச் சென்றதற்குப் பலனிருக்கும்.
‘பார்ப்பனர்களைக் கொல்லுமாறு நான் சொல்லவில்லை’ என்று
பெரியார் மறுத்துக் கூறியிருந்ததால், நாகரிகமுள்ள சர்க்காராக
இருந்தால் பெரியாரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதில் சட்டத்துக்கு
மதிப்பு கொடுத்து நடப்பதில் பெரியாரைப்போல் தமிழ்நாட்டில்
வேறு யாரும் இருக்க முடியாது.
பெரியாரை நேரு திட்டியதால், தமிழ்நாட்டு மக்களின் மதிப்பை
நேரு இழந்துவிட்டார்.
நேருவுக்குப் பின் காமராசரோ அல்லது காங்கிரசோ வாழ முடியாது.
நேரு இருக்கும் வரைதான் காங்கிரசின் அதிகாரமும், காமராசர்
பதவியிலிருப்பதும் முடியும்.
(நம்நாடு - 19.12.1957)
|