அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சாவுக்கு அஞ்சும் பரம்பரை அல்ல நாம்!

“காங்கிரசுக்காரர்கள் தங்களுக்குள்ள மெஜாரிட்டி பலம் ஒன்றை மட்டுமே நம்பி மதியழகனைக் கொல்ல முயற்சி செய்யும் அளவுக்கு ஒரு கயவன் ஈடுபட்டிருக்கிறான்.

“பர்மா நாட்டின் தலைமையமைச்சர் அவுங்சான், இரங்கூன் நகரில் மாளிகைக்குள்ளே தமது துணையமைச்சர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தநேரத்தில், அரசியலில் காட்டுமிராண்டித்தனத்தைத் தலைகாட்டச் செய்ய நினைத்த சிலர் புகுந்து அமைச்சர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்திய சம்பவத்தை இன்னும் நாமெல்லாம் மறந்துவிடவில்லை. அதை நமது அமைச்சரவையில் உள்ளவர்கள் உணருவார்கள் என நம்புகிறேன்.

“நம்முடைய காங்கிரசுக்காரர்கள் காட்டாட்சி முறையில் நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள் என்று இன்னமும் நான் நம்பவில்லை. பலாத் காரத்திற்குப் பலாத்காரத்தையே பதிலாகத் தரவேண்டும் என்பதையும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. தி.மு.கழகத் தோழர்கள் அத்தனைப் பேரும் தியாக உருவங்களாக விளங்க வேண்டும். அப்படி விளங்குவார்கள் என்பதையும் நாட்டு மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்“.

கத்தியின் மீது நம்பிக்கை

“கத்தியின் மீது காங்கிரஸ் கட்சிக்கு ஏன் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓட்டுப் பெட்டியின் மீது காங்கிரசுக் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்துவருகிறது. தேர்தலில் அதற்குள்ளே நம்பிக்கை தேய்ந்திருக்கிறது. தாங்கள் தோற்றவிடக்கூடுமோ என அஞ்சுவதால் தான் கத்தியைக் காட்டி மிரட்டலாமா, கல்லைவீசிக் கூட்டத்தைக் கலைக்கலாமா என்று அவர்களுக்குத் தோன்றுகிறது.

“தோழர் மதியழகன் அவர்களைக் கொல்ல வந்த கயவனைப் பிடித்து விசாரிக்க வேண்டிய போலீஸ் அதிகாரி மகாதேவன் அறிக்கை விடுத்திருக்கிறார். ‘அவன் அரசியல் கட்சியைச் சேர்ந்தவனல்ல‘ என்று. அவன் அரசியல் கட்சியைச் சார்ந்தவனா இல்லையா என்பதல்ல பிரச்சினை. சென்னை நகரில் இப்படி ஒரு சம்பவம் பட்டப்பகலில் நடந்திருக்கிறது. அதிலும் நமது இயக்கத்தில் நடுநாயகமாக உள்ள ஒருவருக்கு இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்றால், அரரிசயல் அறம், உணர்ந்தவர்கள் சட்ட நுணுக்கம் புரிந்தவர்கள் இந்த ஆட்சியை மதிக்க மாட்டார்கள். காறித்துப்புவார்கள்.

உண்மையான தம்பி

“சந்தனமும் பன்னீரும் மார்பிலே பூசிவரும் எனது தம்பிமார்களை நான் மதிக்கமாட்டேன். மாற்றாரால் தாக்குண்டு மார்பிலே இரத்தம் சொட்டச் சொட்ட எவரேனும் வந்தால் அப்போதுதான் அவரை என்னுடைய உண்மையான தம்பி என்று ஏற்பேன்“.

நாம் சாவுக்கு அஞ்சிய சமுதாயத்தைச் சார்ந்தவர்களல்லர். வீரர் பரம்பரை என்பதை அறியாதவர்கள் அறிய வேண்டும் என்று அண்ணா அவர்கள், நேற்று மாலை லாயிட்ஸ் ரோடு எம்.ஜி.ஆர். அரங்கில் நடந்த ஆயிரம் விளக்குத் தொகுதித் தேர்தல் நிதிச் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அண்ணா அவர்கள் தொடர்ந்து மதியழகனைக் கொல்ல ஓர் கயவன் செய்த முயற்சி குறித்ததும், அது பற்றிப் போலீஸ் அதிகாரி நடந்து கொண்ட முறையைக் கண்டு வருந்தியும் கழகத் தோழர்களுக்குப் பல அறிவுரைகள் கூறியும் ஆளுங்கட்சிக்கு அறைகூவல் விட்டுப் பேசினார்.

இக்கூட்டத்திற்குத் தோழர் சி.சிட்டிபாப எம்.சி., தலைமை வகித்தார்.

ரூ.950 தேர்தல் நிதி

தொகுதி வேட்பாளர் கே.ஏ. மதியழகன் பி.ஏ., அமைப்புச் செயலாளர் என். நடராசன், வடசென்னைப் பாராளுமன்ற வேட்பாளர் கி.மனோகரன், எம்.ஏ., ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் ‘நன்கொடைகள் மூலம் கிடைத்த தொகையில் செலவு போக மீதமுள்ள ரூ.950 ஆயிரம் விளக்குத் தொகுதித் தேர்தல் நிதிக்கு அளிக்கப்பட்டது.

அண்ணா அவர்களின் தொகுதித் தேர்தல் நிதிக்கு ஆயிரம் விளக்குப் பகுதி சார்பில் ரூ.25 அளிக்கப்பட்டது.

(நம்நாடு - 5-2-63)