அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கழகத் தோழர்களுக்கும்!

தொகுதியில் நெருங்கிய தொடர்பினைத் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.

அவருக்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் இந்தத் தொடர்பினை ஒரு குழு கவனித்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் குறைகளை மன்றத்தில் கூறுக!

தொகுதிக்கு தேவையானவைகளைக் குறித்துச் சட்டமன்றத்திலே எடுத்துரைக்க வேண்டும்.

எடுத்துரைத்தது பற்றித் தொகுதியில் அவ்வப்பொழுது உறுப்பினர் குழுவும் விளக்கியபடி இருக்கவேண்டும்.

முறைப்படி எடுத்துக் கூறியும், காங்கிரசு அரசு தொகுதியில் குறைபாடுகளை நீக்கிடத் தவறினால், அதனைத் தொகுதி மக்களிடம் எடுத்துக்காட்ட வேண்டும்.

அதற்குப் பிறகும் காங்கிரசு அரசு வேண்டுமென்றே தொகுதியைப் புறக்கணித்து, கேடு செய்திட முனைகிறது என்றால், தொகுதியின் உறுப்பினரும், குழுவும் தொகுதியின் குறைபாடுகளை நீக்க நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இந்த நேரடி நடவடிக்கை என்பது – அமைதி கெடாத விதமாகவும் சட்டத்துக்குக் கேடு ஏற்படாத முறையிலும் அமைதல் வேண்டும்.

எந்தத் தியாகமும் செய்யத் தயாராகுக!

அந்தக் காரியத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இல்லம் அல்லது அலுவலகம் எனும் இடங்களும், ‘மறியல்‘ செய்வதற்கான இடங்களாகி விடவேண்டும்.

தொகுதியின் நன்மைக்காக வாதாட மட்டுமல்ல – கிளர்ச்சியில் ஈடுபட அதற்காகத் தடியடி பட, சிறை புக, கஷ்டநஷ்டம் ஏற்க, உறுப்பினர்கள் துணிகிறார்கள் என்ற நிலைமை இனி ஏற்பட்டாக வேண்டும்.

மக்களாட்சி மாண்பை மதித்துப் போற்றுக!

இந்த முறையின் மூலமாகத்தான் – தரக்குறைவான வழிகளால் அரசியல் ஆதிக்கத்தை இழந்துவிடாமல் இருக்கும் போக்கை முறியடித்து மக்களாட்சி முறையின் மாண்பிணைப் பாதுகாத்திட இயலும்.

நமக்காக, நமது உறுப்பினர் சட்டசபையிலே வாதாடுகறிார் என்று மட்டும் இல்லங்களில் பேச்சு எழுவது போதாது, நமக்காக நமது உறுப்பினர், ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, சிறையில் தள்ளப்பட்டு வாடிக்கொண்டிருக்கிறார் – என்று உள்ளம் நெகிழ இல்லந்தோறும் பேசிடும் நிலை எழவேண்டும்.

கழகத்தவர்கள் இனி இதற்குத் தம்மைத் தயராக்கிக் கொள்ள வேண்டும்.

(நம்நாடு - 27-3-62)