அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘சட்டத்தால் விடுதலை உணர்வை அடக்கிவிட முடியாது‘

மயூரம், மே 20 “திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்க் கொள்கையானது திராவிடநாடு இலட்சியம், அந்த இலட்சியத்தைப் பெறுவதற்குப் போராடத் தயாராக வேண்டும். இந்த விடுதலைப் போராட்டம் ஏற்பட்டால், திராவிடக் குடிமகன் ஒவ்வொருவனும் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.“

திராவிட நாட்டைப் பெற வேண்டுமெனற் திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையில் எந்தவித மாற்றமுமில்லை. கழகத்தின் குரல் டெல்லியிலே ஒலிக்கத் தொடங்கிவிட்டது. விடுதலை முழக்கம் டெல்லி வட்டாரத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தென்னக மக்களின் எழுச்சிக் குரலினை வடவர் புரிந்து கொண்டனர். நம்மை மடக்குவதற்க வலை வீசிப் பார்க்கின்றனர். நான் அவர்கள் வலையிலே சிக்கி விடுவேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியிலே இருப்பவர்கள் விரிக்கும் அந்த வலையிலே, என்னை மடக்கப் பார்க்கும் அவர்களின் வலையிலே எந்தவித ஆசையும் இல்லாத நான் ஒரு போதும் சிக்கிக் கொள்ள மாட்டேன்“ அவர்களால் சிக்க வைக்கவும் முடியாது, முடியாதவற்றையெல்லாம் செய்ய நினைக்கிறார்கள் டெல்லியிலே உள்ளவர்கள்.

அறப்போர் நடத்தி வெற்றி பெறுவோம்!

நாம் நமது திராவிட நாட்டைப் பெறப்போவது உறுதி. திராவிட நாட்டை அடையப் போராட்டம் நடத்தக் கூடிய நிலைமைகளும் ஏற்படலாம். நாம் நடத்தும் போராட்டம் அது அகிம்சைப் போராட்டம். அந்த இரத்தம் சிந்தாப் போர் மூலம் திராவிட நாட்டைப் பெறுவோம். திராவிட முன்னேற்றக் கழகம் அந்த அறப்போரை நடத்தி வெற்றி பெறுவது உறுதி.

தி.மு.கழகத்தின் விடுதலை உணர்ச்சியை அடக்கி, ஒடுக்கிவிட மத்திய அரசு எண்ணுகிறது. தென்னக மக்களின் உரிமைக் குரலை அரசினர் அடக்கிவிட நினைக்கிறார்கள். அந்த உரிமைக்குரல் ஓங்கத்தான் போகிறது. நாம் விடுதலை அடையத்தான் போகிறோம்.

திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற பலாத்காரத்தை நம்பவில்லை, அறப்போராட்டத்தையே நம்பியுள்ளது. அந்த அறப்போராட்டத்தில் இறங்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும். திராவிடம் விடுதலை பெற வீறு கொண்டேயாக வேண்டும் அந்தப் போராட்டத்திலே உயிரைப் பலிகொடுக்க நான் தயார், தம்பி கருணாநிதி தயார், திராவிட நாட்டைப் பெற ஒவ்வொருவரும் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைக் கோரிக்கையிலே வெற்றி பெறுவது உறுதி, திராவிடம் விடுதலை அடைவது உறுதி.

முத்துப்பேட்டையில் அண்ணா!

முத்துப்பேட்டையில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசியதாவது –

“திராவிட முன்னேற்றக் கழகத்தை அடக்கப் புதுச் சட்டம் கொண்டு வரப்போகிறதாம் காங்கிரசு அரசு. பிரிவினை கோருபவர்களையெல்லாம் தண்டிக்க இந்தச் சட்டத்தின் துணை கொண்டு ஆட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கொடிய அடக்குமுறையை ஏவி விட்டால் கழகம் கலங்காது, சிரித்த முகத்துடன் புன்னகை பூத்துச் சிறை செல்லத் தயாராக இருக்கிறோம்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் கழகம் பெற்ற பெரும் வெற்றியினைக் கண்டு அஞ்சுகின்றனர் காங்கிரசார். அலட்சியம் காட்டி வந்தவர்கள் இப்பொழுது அஞ்சத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த அச்சத்தில் எப்படியாவது கழகத்தை ஒழித்துக் கட்ட வண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசாரை விடத் தேர்தலிலே தோல்விகண்டுள்ள பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் வயிற்றெரிச்சல் கொண்டு கழக்ததைத் தாக்குவதையே தங்கள் தலையாய பணியெனக் கொண்டு, மேடை போட்டுத் திரிகின்றனர்.

கழகத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று காங்கிரசுக் காரர்களுடன் பொதுவடைமைக் கட்சிக்காரர்கள் கூட்டுச் சேர்ந்தால் அது அவர்களின் பலவீனத்தைத்தான் காட்டுமே தவிர வேறில்லை.

(நம்நாடு - 23-5-1962)