அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சென்று செயலாற்றுங்கள்!

சட்டமன்றம் செல்லும் ஐம்பதின்மருக்கு அண்ணா அன்புரை

தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 உறுப்பினர்களும், இன்று காலை சட்டமன்றம் புறப்படுமுன், ‘அறிவகத்தில் அவர்களுக்குப் பாராட்டு அளிக்கப்பட்டபோது, அண்ணா அவர்கள் ஆற்றிய அன்புரை :

“சென்று செயலாற்றுங்கள்! உமது அறிவாற்றல் ஆட்சியின் தரத்தை உயர்த்தப் பயன்படவிருக்கிறது.

மக்களின் வாழ்விலே நெளிந்து கொண்டிருக்கும் நலிவுகளை, நேரிடையாகக் கண்டிருக்கிறீர்கள். பூந்தோட்டம் சூழ்ந்த மாளிகை வாழ்வோர்களல்ல என்பதனால், பாடுபடும் மக்கள்,பசியுடனும், அறியாமையுடனும் போராடித் துயருற்றுக் கிடப்பதனைக் காண்கிறீர்கள், கலங்குகிறீர்கள்.

ஏழையின் வாழ்விலே இருள் நீங்கி ஒளி கிடைத்து ஏற்றம் காண வேண்டும் என்று எண்ணி எண்ணி ஏக்கமுற்றிருக்கிறீர்கள்.

உறுதி கொண்டவர்கள் நீங்கள்

உழவர்கள் உழைத்து அலுத்துப் போவதையும் –மேட்டுக் குடியினர் கொட்டமடிப்பதையும் கண்டு திகைத்து, இந்தக் கொடுமைநிறை பேதநிலையை எப்படியும் மாற்றித் தீர வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பாட்டாளிகள் – குடிசைகளில் குமுறிக்கிடக்கவும், பணத் தோட்டத்தில் பகட்டாகச் சீமான்கள் உலவவும் கண்டு, உள்ளத்திலே விளைச்சல் எடுத்த நிலையினைப் பெற்றிருக்கிறீர்கள்.

எங்கும் பாதைகள், பாசன வசதிகள், பள்ளிகள், படிப்பகங்கள், மருத்துவமனைகள், மனமகிழ்மன்றங்கள், தொழிலகங்கள், தோழமைக் கூடங்கள் அமைய வேண்டும் என்று விரும்பி வந்திருக்கிறீர்கள்.

பாடுபட்டுப் பெறுவது கொண்டு வாழ்க்கையை நடத்த முடியாதபடி விலைவாசியேற்றம், பெரும்பாலான மக்களை முடக்கிவிட்டிருப்பது கண்டு பெருமூச்செறிந்திருக்கிறீர்கள்.

வாழ்க்கையே பெரும் சுமையாகி வதைபடும் ஏழை எளியோர் மீது மறைமுக வரிகள் விழுந்து, மேலும் வாட்டுவதைக் கண்டு கொதிப்படைந்திருக்கிறீர்கள்.

ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் நீங்கள்!

இயற்கைச் செல்வத்தை எடுத்துப் பயன்படுத்தும் முறையும் திட்டமும் இங்குச் சரியான விதத்திலும், போதுமான அளவிலும் இல்லாதது கண்டு வருத்தப்பட்டிருக்கிறீர்கள்.

வணிகக் கோட்டங்களும், தொழில் நிலையங்களும், இலாபம் குவித்தளிக்கும் பொருளாதார ஏற்பாடுகள் அனைத்தும், வடவரின்கரம் சிக்கிக்கிடப்பது காண்கிறீர்கள், கலக்கமடைகிறீர்கள்.

செல்வ வளர்ச்சி சீராக அமையாததாலும், கிடைக்கும் செல்வம் சீராகப் பரவாததாலும் வறுமைமிகுந்து, வாழ வழியற்று – ஏழை மக்கள் இலட்சம் இலட்சமாகக் கண்காணாச் சீமைகள் சென்று கடுமையாக உழைத்துக் கொடுமையாக நடத்தப்படுவது கண்டு கண்ணீர் வடித்திருக்கிறீர்கள்.

இந்நாட்டுக்குத் தனிச் சிறப்பளிப்பதான பண்பாடும், அதன் அடிப்படையாக அமைந்துள்ள மொழியும் அழிந்திடும் விதமான வேற்று மொழியும், மொழியாளர் பண்பாடும் படையெடுத்து ஆதிக்க ஆர்ப்பரிப்புச் செய்தவர் கண்டு ஆயாசப்பட்டிருக்கிறீர்கள்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் கிளர்ச்சிகளை நடத்தி, கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

நோக்கம் புரியாதார், உண்மை உணராதார் உம்மைப் பழித்துரைக்கக் கேட்கிறீர்கள் – பதறாமல், இவர்கள் நம் பக்கம் வந்துசேரும் நாள் விரைவில் – என்ற நம்பிக்கையுடன் நாளுந் தொண்டாற்றி வருகிறீர்கள்.

அடக்குமுறை கண்டு அஞ்சாதோர்!

பொதுவாழ்க்கையிலே – பக்குவம் அறிந்தோர், பதவிக் காற்று அடிக்கும் பக்கம் திரும்பி நிற்போர் பலன் பெறவும் பதவி பெறவும் காண்கிறீர்கள். ‘இவரெல்லாம் இலட்சிய மற்றார் என்று கூறி, அவர்தம் போக்கை எள்ளி நகையாடிவிட்டு, எதிர்நீச்சுக் காரியத்தில் இணையற்ற துணிவுடன் ஈடுபட்டிருக்கிறீர்கள்.

கூட இருந்து குழிபறிக்க முயலுவோர்களைக்கூடக் காண்கிறீர்கள் – ஒரு கணம் திகைத்தீர்கள் – பிறகோ, ‘நெல்லுடன் பதரும், பயிருடன் களையும் உள்ளது போன்றது‘ என்று தெளிவடைகிறீர்கள் – களையும், பதரும் போய்ச் சேர வேண்டிய இடம் சென்றிடக் காண்கிறீர்கள் – செயலை மேலும் செம்மையாக்கிக் கொள்ள முடியும் என்ற ஆர்வம் பெறுகிறீர்கள்.

தொண்டாற்றுபவரை, அடக்குமுறை அழித்திடக் கொக்கரித்துக் கிளம்பிடக் காண்கிறீர்கள் – அதன், கோரப்பற்களுக்கிடையில் கிக்கிடினும், சிதைவு ஏற்படினும் சிந்தை கலங்காது பணியாற்றி, ‘சிறையும் தடியடியும் மட்டுமல்ல – தூக்குக் கயிறும் காத்திருக்கிறது – அறிவோம்‘ என்று அறிவித்துவிட்டு அரும்பணியாற்றியபடி இருக்கிறீர்கள்.

பேதநிலை உணர்ந்தவர்கள் நீங்கள்!

‘நாடும் மொழியும் நமக்கென ஒன்றுண்டு, இந்த நானிலம் போற்றிடும் தன்மை அதற்குண்டு‘ என்பதறிந்து, ‘நாடு விடுபடப்பாடு படுவதே நல்லறிவாளர் கடன்‘ என்று உணர்ந்து, திராவிடம் காணத் தீவிரமாக உழைத்து வருகிறீர்கள்.

நாட்டு நிலையும், மொழி நிலையும் நன்கு அறிந்து உள்ளீர்கள்.

உலக நிலையும், ஓடப்பர் உயரப்பர் பேதநிலையும் உணர்ந்து உண்மை கண்டுள்ளீர்கள்.

வரலாற்றுச் சுவடிகளையும், நிலநூற்களையும், விஞ்ஞான உண்மைகளையும், பொருளாதாரப் பாடங்களையும் தெளிவாக அறிந்திருக்கிறீர்கள்.

ஆதிக்கங்கள் அமைவதும் அழிவதும் எங்ஙனம் – என்பது பற்றி ஆராய்திருக்கிறீர்கள்.

விடுதலை இயக்கங்களைப் பற்றிய வரலாற்றினை விளக்கமாகக் கற்றுணர்ந்துள்ளீர்கள்.

வல்லமை பெற்றவர்கள் நீங்கள்

வீரக்கதைகளையும் தியாகச் செம்மல்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அறிந்து, நெகிழ்ச்சி பெற்றிருக்கிறீர்கள்.

சட்டமும், சமுதாயமும் எங்ஙனம் தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும் என்பது பற்றியும், உழைப்பும் பயனும் எவ்விதத் தொடர்புடன் இருக்கவேண்டும் என்பது பற்றியும், அறிவுக்கு என்ன தொடர்பு இருக்க வேண்டும் என்பது பற்றியும், அஞ்சாது சிந்தித்து நல்ல கருத்துக்களைப் பெற்றிருக்கிறீர்கள்.

வாதத் திறமையுடன் இலக்கியச் சுவை கலந்து கேட்டால் பிணிக்கும் தகைமைத்தாகப் பேருரையாற்றும் வல்லமை பெற்றிருக்கிறீர்கள்.

மேய்ச்சல் இடம் தேடாமலும், மேல்கீழ் எனும் நினைப்புக் கொள்ளாமலும், இலட்சியம் மறவாமலும், பாதை தவறாமலும் புனிதப் பயணம் நடத்தி வருகிறீர்கள்.

கோபம் கண்டு மனங்கலங்காதீர்!

இத்தகைய நீவிர், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி ஜனநாயகத்தைத் தம்வழி திரும்பிக்கொள்ள முடியும் என்ற துணிவு பெற்றவர்களைச் சந்திக்கிறீர்கள்.

அவர்களிடம் ‘எடுத்தேன் – கவிழ்த்தேன்‘ என்ற போக்கும் எவரையும் ‘ஏனோ தானோக்களாகக் கருதும் இயல்பும்‘ குடி கொண்டிருக்கின்றன.

உதட்டளவில் சமதர்மம்பேசிக்கொண்டு, உள்ளத்தை முதலாளிகட்கு ஒப்படைத்து விட்ட ஒரு கட்சியின் சார்பிலே நிற்பவர்களைக் காண்கிறீர்கள்.

தமது கோபப் பார்வையால் – எவரையும் சுட்டெரித்துவிட முடியும் என்று எண்ணி ஆர்ப்பரிக்கும் போக்கு இருக்கும்.

எண்ணிக்கைப் பலம் இருக்கும்போது, ஆதாரம் ஏன்? வாதம் ஏன்? காரணம் காட்டுவானேன்? கனிவு காட்டுவானேன்? என்று அவர்கள் கருதுவார்கள்.

அவர்களின் கோபம் கண்டு மனக்கலக்கம் அடையாதீர்கள்.. இயலாமையின் அடையாளம் அந்தக் கோபம்.

அவர்களின் புன்னகை கண்டு மயங்காதீர்கள்! அது உதட்டு அசைவேயன்றி உள்ளத்தின் அசைவு அல்ல!

எங்கும் கண்ணியம் இருக்கட்டும்!

கொண்ட கொள்கையைத் தெளிவாக எடுத்துக் கூறுங்கள், ஒளி மிகுதியாக உமது பேச்சினில் அமைவதாக.

தகவல்களைத் தேடிப் பெறுங்கள் –சலித்து எடுங்கள் நல்லனவற்றை, நல்லமுறையில் எடுத்துக் கூறுங்கள்.

ஏசினால் – பாராட்டுங்கள்!எரிச்சலூட்டினால் – சிரித்து மகிழுங்கள்! நல்லன செய்தால் – ஒத்துழைப்புத் தாருங்கள்! நாட்டு நலனுக்கான காரியம் பற்றிப் பேசும்போது, அச்சம் – தயை தாட்சணயத்துக்கு இடம் தரத் தேவையில்லை.

சொந்த இலாபம் தந்து பார்ப்போம் – என்று எவரேனும் உம்மை அணுகினால், தொழு நோயாளிகளிடமிருந்து தின்பண்டம் பெற எப்படிக் கூசுவீர்களோ, அதுபோன்ற மனப்போக்கு எழவேண்டும்.

பேச்சிலும் செயலிலும் கண்ணியம் இருக்கட்டும்.

துணிவு – தெளிவு – கனிவு என்பவை உமக்குத் துணை நிற்க வேண்டும்.

தொண்டின் பயன்தருக!

சென்று செயலாற்றுங்கள் – நாடு உம்மிடம் நிரம்ப எதிர்பார்க்கிறது.

தள்ளாத வயதினளான தாய், தன்மகன், உழைத்துப்பெற்ற பணத்துடன் வீடு வருவான், அடுப்புப் பற்ற வைகக்லாம், அரும்பசி போக்கிக்கொள்ள சமைக்கலாம் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதுபோல, திராவிடம் உமது தொண்டின் பயனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ‘சென்று செயலாற்றுங்கள்‘ என நானும், உம்மை வாழ்த்திச் சட்டமன்றம் அனுப்பி வைக்கிறேன்.

சென்று செயலாற்றுங்கள்.

(நம்நாடு - 29-3-1962)