அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சிறந்த கொள்கையே அரசியல் கட்சிக்கு அடிப்படை!
மக்களாட்சி பற்றி அண்ணா விரிவுரை

சென்னை ஒய்.எம்.ஐ.ஏ. மயிலாப்பூர்க் கிளையின் சார்பில் 28.3.60 இல் ஓர் பொதுக்கூட்டம் திரு.வெங்கட்ராம (அய்யர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தலைவர் முன்னுரைக்குப் பின் அண்ணா அவர்கள் சனநாயகம் என்னும் பொருள் பற்றிப் பேசியதாவது:
இந்தச் சங்கத்தில் இன்று மாலை உங்களையெல்லாம் காண்பதற்கும், அளவளாவி அகமிழ்ச்சியைப் பெறுவதற்கும், அதே நேரத்தில், மக்களாட்சி பற்றி நீங்கள் சிந்திப்பதற்கும் ஒரு வாய்ப்பு எனக்குத் தரப்பட்டதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சில்லறை வேடிக்கை
அவைத்தலைவர் அவர்கள் தெரிவித்தபடி இந்த மன்றத்தில் உள்ளவர்களில் பலர் எனக்கு உற்ற நண்பர்கள் பல ஆண்டுகளாக இதிலே எனக்கு நேசத் தொடர்பு உண்டு. என்னைச் சென்ற ஆண்டும் அன்போடு அழைத்திருந்தார்கள். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டிலே எனக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி. சென்ற ஆண்டு என்னை ஆங்கிலத்தில் பேசுமாறு அழைத்தார்கள். ஆனால் இந்த ஆண்டில் தமிழிலேயே பேச இசைவு கொடுத்தார்கள். சென்ற ஆண்டு என்னை ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்குக் காரணம் நான் எப்படி ஆங்கிலம் பேசுகிறேன் என்பதைப் பார்க்க ஆனால் இந்தத் தடவை தமிழிலே பேசுமாறு என்னை அழைத்த காரணத்தினால் நான் என்ன சொல்லுகிறேன் என்பதைக் கவனிக்கிறார்கள் என்பதில் தான் பெருமையை தவிர, எப்படிச் சொல்லுகிறேன், எந்த மொழியில் பேசுகிறேன் என்பதல்ல பிரச்சினை. இது மொழியில் ஏற்பட்ட ஒரு சில்லறை வேடிக்கை!

செயலாளர் என்னை வந்து கேட்ட நேரத்தில் நான் மக்களாட்சி என்பது பற்றிப் பேசுகிறேன் என்று அவரிடத்தில் சொன்னேன். ஏனென்றால் மக்களாட்சி என்பது பற்றிப் பேசினால் சுவை அதிகமாக இருக்கும்-சூடு குறைவாக இருக்கும். மற்ற பொருள்கள் பற்றிப் பேசினால் சூடு அதிகமாகவும், சுவை குறைவாகவும் இருக்கும். அதனால் தான் மக்களாட்சி என்பதைப் பற்றிப் பேசுவதாக நம்முடைய செயலாளரிடத்தில் எடுத்துக் கூறினேன். அதைத்தான் இப்பொழுது தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பாதுகாக்க வேண்டிய பேருணர்ச்சி
மக்களாட்சி என்பது பற்றி இப்பொழுது பேச வேண்டுமா என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது. இப்பொழுது உங்கள் தோட்டத்தில் ரோசாமலர் பூத்திருக்கிறது. சில தோட்டங்களில் காற்றினாலோ அல்லது அந்நியர்களாலோ மலர்கள் பறிக்கப் பட்டு இருக்கின்றன. ஆகையினால் ரோசாவினைப் பற்றிப் பேசுவது மட்டும் போதாது-அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற பேருணர்ச்சி வீட்டுக்குடையவர்களுக்கு நிச்சயமாக இருக்க வேண்டுமல்லவா?

அதைப்போல அநீதியான ஆட்சிமுறைக்குச் சர்வாதிகாரப் பாதைகள் மறைமுகமாகவும், வேகமற்ற தன்மையிலும் எல்லாப் பக்கங்களிலும் பரவி வருகிறது. மக்களாட்சி வெற்றி பெற்று விட்டது என்று சொல்லும் இந்நாளில்!

மக்களாட்சிக்கு 17 ஆம் நூற்றாண்டில் வித்திடப்பட்டு 18,19 ஆம் நூற்றாண்டுகளில் அது செடியாக வளர்ந்து, 20ஆம் நூற்றாண்டில் அதனுடைய கனியை நாம் அனுபவிக்கிறோம் என்பதைப் பொருளாதார நிபுணர்களும், அரசியல் பற்றி ஆய்ந்தவர்களும் ஏட்டிலே எழுதி வைத்திருக்கிறார்கள்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உலகத்தில் சனநாயகம் இப்படி வளர்க்கப்பட்டது என்று போதிக்கிறார்கள். சுப்பிரமணிய பாரதியாரும் “எல்லோரும் நாட்டு மன்னர்கள்” என்றும் நீங்கள் ஒவ்வொருவரும் மன்னர்தான் என்பதையும் முன்கூட்டியே அறிவித்தார்.

இந்த அளவுக்கு மக்களாட்சி முறை வெற்றிபெற்ற உலகத்தில் பலர் நம்பிக்கை வைத்திருக்கிற நேரத்தில், உலகத்திலுள்ள, பல நாடுகளில் நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும், சர்வாதிகாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருவதை நாம் காணுகிறோம். இந்தியாவுக்குப் பக்கத்திலேயுள்ள பாகிஸ்தான் நாட்டில் இன்றைய தினம் மக்களாட்சி முறையில்லை. மக்கள் ஆதரவு பெற்றவர் என்று கருதப்படும் ஒரு இராணுவத் தளபதி அயூப்கான் என்பவர் ஆட்சி செய்கிறார். அவரைச் சர்வாதிகாரியாகத்தான் நாம் கணக்கிட வேண்டும்.

அன்பான சர்வாதிகாரி!
அதற்குப் பக்கத்திலுள்ள எகிப்து நாட்டுக்கு இன்று பார்லிமெண்டு முறைப்படி இல்லாமல் “மக்களுடைய அன்பைப் பெற்றிருக்கிறோம்” என்கிற காரணத்தைக் காட்டி, நாசரும் சர்வாதிகாரியாகத்தான் இருக்கிறார். அவரையும் நாம் சர்வாதிகாரி என்றே கண்கெடுக்கிறோம்.

அடுத்து இந்தோனேசியா நாட்டிலுள்ள சுகர்ணோ, சிறந்த தலைவர், பல ஆண்டுகளாக அந்த நாட்டைத் திறம்பட நடத்திச் சென்றவர். உலகத்தில் இருக்கிற பல அறிவாளிகளில் ஒருவர் என்று மற்றவர்களால் போற்றப்பட்டவர் அவர் தம்முடைய ஆற்றலையும் அறிவையும் பயன்படுத்தி நாடு சீர்பெற அரசியல் கட்சிகள் இருப்பது பொருத்தமாக இல்லை. ஆகையினால் இதைத் திருத்தி அமைக்கிறேன் என்று சொல்லி அங்குள்ள அரசியல் கட்சிகளையெல்லாம் கலைத்துவிட்டுச் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.

அடுத்து இந்தோ-சீனாவில் ஹோசீமின் என்பவர் ஒரு மாபெரும் வீரர். அவரும் இன்றைய தினம் சர்வாதிகாரி போலத் தான் ஆட்சி செய்து கொண்டு வருகிறார்.

மக்களாட்சி நாட்டில் சர்வாதிகாரி
மக்களாட்சி முறைக்கு வித்திட்ட நாடு, சகோதரத்துவம் சமத்துவம் அங்கு நிலவுகிறது என்றெல்லாம் இன்றைய தினம் நம்முடைய கல்லூரி மாணவர்கள் எந்த நாட்டைப் பற்றிப் பெருமைப்படுகிறார்களோ-அந்தப் பிரான்ஸ் நாட்டில் இன்றைய தினம் பார்லிமெண்டு முறைக்கு மாறாக இராணுவத் தலைவர் டிகாலே என்பவர் தான் மக்கள் ஆதரவு பெற்றவன் என்று சொல்லிச் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்!

அதையொட்டி, போர்ச்சுக்கல்லில் சலாசர் என்பவர் சர்வாதிகார ஆட்சி செய்கிறார்.

இவர்களுக்கெல்லாம் மேலாக ரஷ்ய நாட்டில் மக்களாட்சி முறை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு ஆனால் தைரியமாக அவர்கள் நாட்டில் குருஷ்சேவ் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்.

அமெரிக்க நாடுகளில் சில பகுதிகளில் சர்வாதிகாரிகள் நாளுக்கு நாள் மாறுகிறார்கள்.

சனநாயகம் பிழைக்குமா?
எந்த இடத்திலேயும் சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். இவைகளை ஒரு கணம் பார்க்கிற நேரத்தில் மக்களாட்சி வெற்றி பெற்றுவிட்டது என்றும் 17 ஆம் நூற்றாண்டில் வித்திடப்பட்டு, 18,19ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்து, 20ஆம் நூற்றாண்டில் அதனுடைய சுவையான கனியை நாம் பறித்து உண்டு கொண்டு இருக்கிறோம் என்றும் சொல்லப்படும். அதே நேரத்தில், அரசியலில் இவைகளையெல்லாம் பார்க்கிற நேரத்தில், சனநாயகம் பிழைக்குமா என்ற ஐயப்பாடு பல பேருக்கு நிச்சயம் இருக்கத்தான் செய்யும்!

ஆகையினால்தான், மக்களாட்சி என்பதைப் பற்றி இப்பொழுது பேசுவது பொருத்தம் என்று நான் கருதினேன்.

மக்களாட்சி என்பதைச் சனநாயகம் என்று நாம் அழைத்துக் கொண்டு வந்தோம். அதையே இன்றைய தினம் மாற்றி அழகாக மக்களாட்சி என்று அழைக்கிறோம். தமிழில் மக்கள் ஆட்சி என்பது இரண்டு சொற்களாகும். ஆட்சி என்பது மக்களுக்குத் தான் தேவைப்படுகிறதே தவிர மிருகங்களுக்குத் தேவைப்படுவதில்லை. மிருகங்களுக்கு அறிவாற்றல் உண்டு என்று நிபுணர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மிருகங்களுக்கு அறிவுத் தெளிவு இருக்கிறது
நான் மிருகங்களை உயர்த்திச் சொல்லுவதால் மனிதர்களைத் தாழ்த்திப் பேசுகிறேன் என்று எண்ணமாட்டீர்களென நம்புகிறேன். பின், ஏன் அவ்வாறு சொல்லுகிறேன் என்றால் இயற்கையான அறிவுத் தெளிவு மிருகங்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. நமக்குப் பார்வை குறைவு. ஆனால் மிருகங்களுக்குப் பார்வை கூர்மையுடையது. காட்டிலே இருக்கும் புலி, எந்த இடத்திலே மான் இருக்கிறது என்று மோப்பத்தின் மூலமாகவே கண்டுபிடித்து விடும். எனவே புலனறிவுக் கண், காது கேட்பது நம்மைவிட அதற்குத் தெளிவாக இருக்கிறது.

சில வேளைகளில் மனிதன் கண்பார்வையை, காது கேட்பதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டான். சிலரிடத்தில் பணம் அதிகமாகச் சேர்ந்தால் அவர்கள் யாரைப் பார்த்தாலும், பார்க்காத மாதிரி போவார்கள்! சிலருக்கு வறுமை அதிகரிக்கும் போதுதான் கண்பார்வை நன்றாகத் தெரியும். பலரைப் பார்க்கும் போது, “ஏதாவது கேட்க வேண்டும்” என்று அப்போதுதான் தோன்றும்.

இந்த மாறுபட்ட நிலைமை மிருகங்களுக்குக் கிடையாது. அவைகள் பணம் சேர்த்து வைத்துக்கொள்வதுமில்லை, வறுமையால் வாடுவதுமில்லை! ஆகையினால் எந்தவகையில் நீங்கள் பார்த்தாலும் சில மிருகங்கள் ஆற்றல் அதிகம் பெற்றிருக்கின்றன என்றாலும் அவைகளுக்கு ஆட்சி தேவைப்படவில்லை.

சந்நியாசிக்கு வேறு திட்டங்கள்
மிருகங்கள் உணவு கிடைத்தபொழுது உண்ணும். ஆனால் மனிதன் தேவைப்படுகிறபொழுது சாப்பிட வேண்டும் என்று மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வேற்றுமையை அறிஞர் பெர்னாட்ஷா குறிப்பிட்டார். மனிதனுக்கு 11 மணிக்குப் பசிக்கிறது என்றால் அவன் அப்பொழுது சாப்பிட்டே ஆக வேண்டும். இல்லையேல் உடலை, களைப்பு வெகுவாகப் பாதித்துவிடும். ஆகையினால்தான் மனிதன் தன்னுடைய வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த வேண்டியிருக்கிறது. ஆனால் மிருகங்களுக்கு அப்படியில்லை. இந்தத் திட்டங்களே தேவையில்லை, என்று சொல்லுகிறவர்கள்தான் சந்நியாசிகள். தேவையில்லை என்று சொல்லுகிற சந்நியாசிகளுக்கு வேறு திட்டங்கள் தானாக வந்து சேருகின்றன. அவைகளை நான் அதிகம் சொல்லத் தேவையில்லை.

திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிற காரணத்தினால் ஒருவருக்கு ஒருவர் அடிமையாக இல்லாமல் ஒருவரையொருவர் நம்பிப் பிழைக்காமல் அனைவரும் வாழ வழியென்ன என்பதை மனிதன் சிந்திக்க ஆரம்பித்த நேரத்தில் தான், மக்களை ஒழுங்குபடுத்தி நடத்திச் செல்லுகிற ஒரு ஆள் தேவை என்று எண்ணினான். தனி ஆளாக இருந்தாலும் அல்லது 20 பேர் கூட்டாக இருந்தாலும் திட்டமிட்டு வாழ்க்கையைச் செப்பனிட எண்ணினான். அதன் விளைவாகத்தான் முதலிலே மன்னராட்சி நடத்தப்பட்டு வந்தது. அதற்குப் பின் மன்னமும் சரியில்லாமல் போகவேதான் கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டை விட கொடும்புலி வாழும் காடு நன்றே என்று பாடினார்கள்.

ஆண்டவன் இருக்கிறான் என்று விட்டுவிட்டால்...
ஆனால் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? என்ற எண்ணம் அந்தநாளில் ஏற்படவில்லை. அந்த உணர்வு ஏற்படாத காரணத்தால்தான் பாண்டியன் நீதியுணராமல் கோவலனைக் கொல்லக் குற்றத்திற்கு உள்ளாக்கினான். ஆனால் பிறகு கண்ணகி வந்து தன்னிடம் இருந்த மற்றொரு சிலம்பை உடைத்துக் காண்பித்து நீதியை எடுத்துச் சொன்ன பிறகு பாண்டியன் “யானே கள்வன்” என்று சொல்லி “யான் இனி இருக்கத் தேவையில்லை” என்று இறந்து விட்டான்,எ என்றுதான் சிலப்பதிகாரத்திலே இருக்கின்றனவே தவிர ஊர் மக்களெல்லாம் திரண்டு வந்து, உள்ளே புகுந்து நீதியைச் செப்பினார்கள் என்ற காட்சியைப் பார்க்க முடியவில்லை.

எதற்கு இதை நான் சொல்லுகிறேன் என்றால், நீதி மன்னனிடத்தில் இருந்த காலத்தில் மன்னன் தவறாக நடந்தால் திருத்துவதற்கு ஆண்டவன் இருக்கிறான் என்று கருதினார்களே தவிர தங்களால் திருத்தமுடியுமென்று அவர்கள் கருதவில்லை. மன்னனை எதிர்த்துப் பேசுவது கூடாது என்றுதான் அவர்கள் கருதினார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்குத்தான்.
சிலபேர் நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து அந்த நல்லவர்களே நீடித்து ஆட்சி நடத்துவதற்கு வழியில்லாமல் இருந்தது.

அமைச்சர்களிடமிருந்து கட்சிகள்...
பிறகு மன்னனுக்கு அறிவு புகட்ட அமைச்சர்களை ஏற்படுத்தினார்கள். அதிலும் சில அமைச்சர்கள் கெட்டவர்களாகவும் சில அமைச்சர்கள் நல்லவர்களாகவும் இருந்தார்கள். இதை நீங்கள் பழைய நாடகங்களில் பார்த்திருக்கலாம். சில அமைச்சர்கள் “வரிபோட வேண்டும்” என்பார்கள். சில அமைச்சர்கள் “வரி போடக்கூடாது” என்பார்கள். இதையொட்டித்தான் வழிவழியாக அரசியல் கட்சிகள் வளர்ந்திருக்கின்றன. இங்கிலாந்து நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு, அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட அன்று தொட்டு இன்று வரை இவ்வழியில் வளர்ந்திருப்பதுதான், அரசியல் கட்சிகளாகும். மன்னன் மக்களை ஆளுகிறான் என்பதிலிருந்து தொடங்கி நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுப் பின்னர்க் கட்சியாக வளர்ந்தது என்று நான் நாம் அறிந்திருக்கிறோம். இப்படித்தான் முதலில் கட்சிகள் வளர்ந்திருக்க வேண்டும்.

கட்சிகள் உண்டாக்குவதில் சிலபேர் ரூபாய் செலவழித்துத் தங்களைப் பற்றிச் சொந்தத்தில் விளம்பரம் செய்து கொள்ளுவார்கள். உங்களில் பலபேருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்னாலே பித்தாபுரம் மகாராசா என்று அழைக்கப்படுகிற ஆந்திர நாட்டைச் சேர்ந்தவர். சொந்தக் கட்சி ஆரம்பித்தால் நம்முடைய செல்வாக்கு வளரும் என்று கருதி ஏராளமாகப் பணம் செலவழித்து ஆங்கிலத் தினசரி ஒன்றும் தெலுங்குத் தினசரி ஒன்றும் ஏற்படுத்தினார். ரூ.250 ஊதியத்தில் நிறைய பிரச்சாரகாக்களை ஏற்படுத்தி எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் அவர்கள் எதைப்பேசுவது என்று தெரியாமல் மகாராசாவின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். மக்களும் கேட்டு, “வாழ்க பித்தாபுரம் மகாராசா” என்று கூறிப் போய்விட்டார்கள். இவர்களும் மக்கள் மனதில் இடம் பிடிக்கத் தவறிவிட்டார்கள்.

கட்சி என்றால் கொள்கை வேண்டும்
இதை நான் சொல்வதாலே புதிது புதிதாகக் கட்சிகளைப் பெரும் பணத்தைச் செலவழித்து ஏற்படுத்துவதை நான் குறை சொல்லுகிறேன் என்று கருத வேண்டாம்.
ஒரு அரசியல் கட்சிக்கு முதல் அடிப்படைத் தேவை கொள்கை. கொள்கை இல்லாமல் இருக்கும் கட்சியை நடத்திச் செல்கிறவர்கள் மட்டுமல்ல-அதைக் கூர்ந்து பார்க்கிற மக்களும் ஆதரிக்கமாட்டார்கள்.

இப்படிக் கொள்கை இல்லாத கட்சி இருக்குமா என்றால் அது கிராமங்களில் இருக்கின்றன. அது சில திருவிழாக்களில் சண்டை போடுவதற்காகவே இருக்கும் கட்சிகள். அதுவல்ல நான் சொல்லுகிற அரசியல் கட்சி!

அரசியல் கட்சி என்றால் மக்களுக்குத் தேவைப்படுகிற சிற்சில கொள்கைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆனால் அக்கருத்து இதுவரை யாரும் சொல்லாததாக இருக்கவேண்டும்.
அதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். அப்படிப்பட்ட அரசியல்கட்சிகள் தான் அரசியல் கட்சிகளாக வளர்ந்தன.

(நம்நாடு - 30.3.60)