அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சுதந்திர விழாவும் சுகாதார நிலையும்

“சுதந்திர விழாக்கள் கொண்டாடும் சிங்காரச் சென்னையிலே உழைப்பாளிகள். பாட்டாளிகள், தொழிலாளர்கள் வசிக்கும் இப்பகுதிகள், குடிசைகளாகவும், சுகாதார வசதியற்று அநாகரிகமாகவும் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஐந்தாண்டுக்குள் இந்த இழிநிலைமை போக்கப்பட வேண்டும். மக்கள் வாழ்ந்திடும் இடம், வீடுகள், பாதுகாப்புகள் கெட்டி ஓடு போட்ட கட்டடங்களாக்கிக் கொடுக்க வேண்டுவது அவசியம். இதை ஆட்சியிலுள்ளவர்கள் செய்ய முன்வர வேண்டும். எல்லாக் கட்சித் தோழர்களும் இம்முயற்சியில் ஒத்துழைக்க வேண்டும். நாங்களும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கின்றோம்.”

“சாதி-பேதங்களும், ஏழை-பணக்காரர், ஆண்டான் அடிமை என்ற நிலைமைகள் மாறி, எல்லோரும் சக்திக்கேற்றபடி உழைத்து, தேவைக்கேற்ற வசதிகளைப் பெறும்படி செய்தால்தான், சுதந்திர விழாக்கள் கொண்டாடுவதிலும் பொருள் உண்டு. இதைத் தேசியத் தோழர்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்று பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள், சென்னை, சூளை, மில் தொழிலாளர் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், பாராட்டுரை வழங்குகையில் குறிப்பிட்டார்.

வரவேற்பு
பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்கள், சென்னை, சூளை, கல்யாண மேஸ்திரி தோட்டம் எண் 28, நடுத்தெருவிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற தோழர் மு.கிருட்டிணன்-தோழியர் துளசிபாய் திருமணத்திற்கு 16.8.54 காலை 9.30 மணிக்குக் காரில் வந்து சேர்ந்தார்.

தி.மு.கழகத் தோழர்களும், தொழிலாளத் தோழர்களும் அண்ணாவை ஊர்வலமாக அழைத்துச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் மலர்மாலைகள் சூட்டி வாழ்த்தொலி முழங்கினர். ஆண்களும் பெண்களுமாகப் பல்லாயிரக் கணக்கானவர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் திருமணப் பந்தலுக்குச் சென்று முடிவடைந்தது.

திருமணம்
காலை 10 மணிக்குத் திருமண நிகழ்ச்சி ஆரம்ப மாயிற்று. தோழர் அ.பொன்னம்பலனார் தலைமை வகித்து முன்னுரை கூறினார்.

மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தைக் கூறி, மலர்மாலைகள் சூட்டிக்கொண்டனர்; மணமகன் தாலியும் கட்டினார்.

தோழர்கள் என்.வி.நடராசன், சென்னை நகரசபை உறுப்பினர் எ.கே.சாமி ஆகியவர்கள் மணமக்களைப் பாராட்டி வாழ்த்துரை கூறினார்கள்.

பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்கள் பேசியதாவது:-
இத்திருமணத்திற்குப் பல மாதங்களாக வரும்படி கேட்டுக் கொண்டிருந்த தோழர்கள் இன்று என் முன்னிலையில் இத்திருமணம் நிகழ்வதைக் காண மகிழ்ச்சியுறுகின்றனர். இத்திருமணங்களின் மூலம் பெண்களுக்குச்சொத்துரிமை, சமத்துவம் ஏற்படுகிறது.

திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஒற்றுமையாக வாழமுடியாத நிலைமை ஏற்பட்டாலும், நோய்வாய்ப் பட்டாலும், திருமணத்திலிருந்து விலகிக் கொள்ளும் (ரத்து) உரிமையும், அரசியலார் சட்டமாக்கி இருக்கிறார்கள்.”

பின்னர் அவர், திருமணத்தில் அர்த்தமற்ற சடங்குகளும், ஆடம்பரங்களும், தேவையில்லை என்பதையும் நம் நாட்டில் சமூகத்திலேற்பட்டிருக்கும் மூடநம்பிக்கைகள் ஒழிந்தாக வேண்டுமென்றும் விரிவுரையாற்றி, இறுதியில் மணமக்களைப் பாராட்டி வாழ்த்துரை கூறினார். தலைவர் முடிவுரையுடன் நன்றி கூற, திருமணம் இனிது முடிவுற்றது.

மணமக்கள் சார்பில் “நம்நாடு” வளர்ச்சிக்கு ரூ.10/- அன்பளிக்கப்பட்டது. பெற்றுக்கொண்டோம் பொறுப்பாளர்.

பெயர் சூட்டல்
இத்திருமண முடிவில் தி.மு.கழகத் தோழர் ஒருவருடைய ஆண் குழந்தைக்குப் பொதுச்செயலாளர் “பாண்டியன்” என்ற பெயர் சூட்டினார். இதன் நினைவாக ‘நம்நாடு’ வளர்ச்சிக்கு ரூ.1 அன்பளிக்கப்பட்டது. பெற்றுக்கொண்டோம்- நன்றியுரியது- பொறுப்பாளர்.

ஏழுமலை-எழில்மதி திருமணம்
சென்னை, மங்ககபுரி கிருஷ்ணதால் ரோடு, 8 ஆவது தெரு, 16 ஆவது எண் இல்லத்தில் 15.8.54 மாலை 5 மணிக்கு தோழர் அ.பொன்னம்பலனார் தலைமையில், தோழர் நா.ஏழுமலை-தோழியர் ச.சூ.எழில்மதி வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெற்றது.

தலைவர் முன்னுரை கூறியதும், மணமகள் தோழர் நா.ஏழுமலை வாழ்க்கை ஒப்பந்தத்தைப் படித்துக் கையொப்பமிட்டு, மலர் மாலை சூட்டினார்.

மணமகள் தோழியர் ச.சூ.எழில்மதி அவர்களும் கையொப்பமிட்டு மலர் மாலை சூட்டினார்.

சென்னை நகரசபை உறுப்பினர்களான தோழர்கள் எ.கே.சாமி, கே.இராமலிங்கம் ஆகியவர்கள் மணமக்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர். ஆடி மாதத்தில் நல்ல ராகு காலத்தில் நடைபெறும் இத்திருமணம் சமூகத்திலுள்ள மூட நம்பிக்கையைப் போக்கும் புரட்சிகரமானது என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

மணமகன் தோழர் நா.ஏழுமலை எல்லோருக்கும் நன்றி கூறினார்.

மணமக்களுக்குப் பல தோழர்கள் மலர் மாலைகள் சூட்டி, வாழ்த்து மடல்கள் படித்துக் கொடுத்தனர்.

தலைவர் முடிவுரை கூறி, மணமக்களை ஒற்றுமையுடனும், அன்பும் அறிவும் ஒருங்கே அமைந்த இல்வாழ்க்கையை இனிது நடத்தி சிறப்பெய்த வேண்டுமென்றும் வாழ்த்து கூறினார்.
மணமக்கள் சார்பில் நம்நாடு வளர்ச்சிக்கு ரூ.5/-அன்புளிப்பு அளிக்கப்பட்டது. பெற்றுக் கொண்டோம்-நன்றியுரியது-பொறுப்பாளர்.

(நம்நாடு - 18.8.54)