அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சுயமரியாதை வளர்த்த தளபதி

கடந்த 8.11.61 அன்று, குடந்தையில் அண்ணா அவர்கள் தோழர்கள் கே.கே.நீலமேகம் அவர்களுக்குக் கேடயம் வழங்கி அவர்தம் பணிகளையும், சிறப்பியல்புகளையும் விளக்கிப் பாராட்டிப் பேசியதன் சுருக்கம் வருமாறு:

“நாமெல்லாம் நீண்ட நாட்களாக இந்த நிகழ்ச்சியினை எதிர்பார்த்து, இன்றைய தினம் இதிலே மகிழ்வோடு கலந்து கொள்கிறோம்.

நண்பர் கே.கே.நீலமேகம் அவர்கள் நம்முடைய நெஞ்சத்திலே நீண்ட பல நாட்களுக்கு முன்பே இடம்பெற்றவர். அரசியலில் அக்கறை கொண்ட பொதுத்தொண்டில் ஆர்வம் மிக்க நாணயம் மிக்க அத்தனை பேர் நெஞ்சத்திலேயும் அவர் இடம்பெற்றிருக்கிறார். நமது மாநாட்டிற்கு இவர் வரமுடியாத காரணத்தால், அங்கே அளிக்க இருந்த கேடயத்தை அளிக்க இங்கே இப்போது விழா நடைபெறுகிறது.

உச்சிமோந்து மெச்சும் கழகம்
இங்கே பல வட்டச் செயலாளர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களிலே சிலர் அவரது மகன் வயதிலே இருப்பவர்கள். பலர் அவரது பேரன்போல இருப்பவர்கள். அவர்களெல்லாம், அவரது சீரிய தொண்டினைப் பாராட்டினர். சுயமரியாதை இயக்கத்திற்கு ஆற்றியுள்ள பணிகளைப் புகழ்ந்து பேசினர். தி.மு.கழகம் தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டவர்களை உச்சிமோந்து மெச்சுகின்ற கழகம் என்பதனையும் சுட்டிக்காட்டினர். நான் இந்த விழாவில் கலந்து கொள்வதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். அதுபோல் நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர் கே.கே. நீலமேகம் அவர்களும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.

ஆனால் இதிலே அவர் விரும்பாதது ஒன்று இருக்கிறது. அவர், நீங்கள் அளித்த மலர் மாலையை வேண்டாம் என்று எண்ணமாட்டார். கைத்தறி ஆடையை வேண்டாம் என நினைக்கமாட்டார். கேடயம் வேண்டாம் என்று எண்ணவுமில்லை. ஆனால், கொடுத்த கைத்தடியைப் பார்த்து, ‘அய்யோ, நமக்கு வயதாகிவிட்டதே’ என“று அவருக்கு எண்ணத் தோன்றும். நாம் பணியாற்ற முடியவில்லையே. நம் உடல் நலிவுபெற்றுவிட்டதே என்று எண்ணுவார்.

பாராட்டு... ஓர் மாமருந்து!
அவர் உடல் நலிவுக்கு நல்ல மருத்துவர்கள் தருகின்ற மருந்தைவிட, நண்பர்கள் அளிக்கின்ற பாராட்டு மாமருந்தாக அமையவேண்டும். விரைவில் அவருக்கு உடல் நலிவு நீங்கி, அவர் நமது கழகத்திற்கு ஆற்றவேண்டிய பங்கினை முறுக்கோடும் மிடுக்கோடும் ஆற்றுவார் என்று நம்புகிறேன்.

உங்களுடைய ஒளிவிடுகின்ற கண்களையும், நல்ல நெஞ்சங்களையும் பார்த்து அவர் புத்துணர்வும், வலிவும் பெற்றுத் திருப்பித் தரப்படுவார் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருடைய அன்பும், பாராட்டும் அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற நலிவை நீக்கத்தக்க மாமருந்தாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

இந்த விழா, ஓய்வெடுத்துக் கொள்கின்ற விழா அல்ல. பிரிவு உபசாரம் நடத்துகின்ற விழா அல்ல. அவரது பணிகளைப் பாராட்டுகின்ற விழா, மகிழ்ச்சி தெரிவிக்கின்ற விழா என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் கூரிய வாளினை அவருக்குப் பரிசாக அளித்து மாற்றாரை வீழ்த்தச் சொல்லவில்லை. கேடயத்தை அளித்துள்ளோம். தி.மு.கழகம் வாளெடுத்துக் கொண்டு மற்றவர்களை வாட்டுவது அல்ல. வாளாலே மற்றவர்களை வீழ்த்துவது அல்ல. அதே நேரத்தில், மற்றவர்கள் வாளெடுத்து நம்மீது வீசுகின்ற நேரத்தில், அதனைத் தடுத்து நிறுத்தத்தான் கேடயம். மாற்றார்கள் வீசுகின்ற ஏசல்கள் தூற்றல்களை உதறித் தள்ளுவதற்குத்தான் கேடயம்.

எஃகு உள்ளம் அவருக்கு!
இந்தக் கேடயம் வெள்ளியினால் ஆக்கப்பட்டது. ஆனால், அவருக்கு முன்னாலே எஃகினால் செய்த கேடயம் உண்டு. இங்கே பேசிய குடவாசல் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பெரியாரே வந்திருந்து கடந்த தேர்தலில் கே.கே.என். அவர்களை எதிர்த்தவர் என்பதைக் குறிப்பிட்டார். ஆனால் உள்ளம் என்கிற கேடயம் எஃகினால் ஆன கேடயம் அவருக்கு. இன்றைய தினம் கேடயம் அளிக்கப்படுகிறது என்றால் தாங்கும் சக்தியைப் பெறவேண்டும். தாக்கும் சக்தியை அல்ல என்பதற்காக அளிக்கப்படுகிறது.

இந்தக் கேடயம் அவரிடத்தில் பேசும். அவரும் அத்துடன் பேசுவார். அது நீலமேகம் அவர்களே! உங்களைப் போன்றவர் களால்தான் இந்தக் கழகம் வளர்கிறது வாழ்கிறது என்று சொல்லாமல் சொல்லும்.

அவரது இல்லத்தில் இந்தக் கேடயம் அழகொளி வீச இருக்கிறது. இதனைப் பார்த்துப் பார்த்துப் பூரிக்கமட்டுமல்ல நல்ல உறுதியோடு மீண்டும் பணியாற்ற இது உதவும்.

நீண்ட பல நாட்களுக்கு முன்பிருந்தே சுயமரியாதை இயக்கத்திற்குப் பணியாற்றி, இந்த நாட்டுத் தலைவர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க தொண்டுள்ளம் படைத்தவர் ஆவார் திரு.நீலமேகம்.

எண்ணியது ஒன்று; கண்டது வேறு
குடந்தைக்கு ஓர் ஆண்டுக்கு முன்னால் நான் தன்னந்தனியனாக வந்திருக்கிறேன். அப்போது அங்கே எனக்குத் தெரிந்தவர்களான நீலமேகம், வி.சின்னத்தம்பி, நம்மைவிட்டுப் பிரிந்திருந்த பொன்னுசாமி ஆகிய மூவரும் இரயிலடியில் வந்து என்னை வரவேற்றார்கள். அப்போது என்னுடைய உள்ளத்தில் நான் எண்ணிக்கொண்டேன் சுயமரியாதை இயக்கத்தில் நல்ல துடிப்புள்ள இளைஞர்கள் இருப்பார்கள் என்று எண்ணினோம். 40,50 வயதுடைய இவர்கள் என்ன செய்வார்கள் என்று ஆனால் அன்று நடந்த கூட்டத்தில் நான்தான் 50 வயதுடையவனாக இருந்தேன். அவர்கள் 20 வயதுடையவர்களைப்போல் பேசினார்கள்.

ஒலிபெருக்கி இல்லாமலும் குத்த வருகிறவர்கள் யாரோ வெட்ட வருகிறவர்கள் யாரோ எந்தப் பக்கத்திலிருந்து கல்வருமோ என்றெல்லாம் எண்ணி, அதையெல்லாம் தடுத்துக் கொள்ள கைகளை ஆட்டிக்கொண்டே பேசிப் பழக்கப்பட்ட நாம், இன்றும் அந்தப் பழக்கம் மாறாமல் இருக்கிறோம். அப்படிப்பட்ட அந்தக் காலத்தில், வைதீகம் நிரம்பியிருந்த இந்த தஞ்சைத் தரணியில் சுயமரியாதை இயக்கத்தினை வளர்க்கின்ற வீரராய், தளபதியாய் நீலமேகம் அவர்கள் தனிக்கொடி பறக்கவிட்டார்கள்.

ஆர்வம் படைத்தவர்கள்!
நான் இன்று வருகின்ற வழியில் விருத்தாசலத்திற்குப் பக்கத்தில், ஒரு மரத்தின் உச்சியில் நமது கொடிபறக்கவிடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். கொடிக்கம்பைக் கூடத் தாங்கமுடியாத அளவுக்கு மெல்லியதாக இருந்த அந்த உச்சிக் கிளையில், எப்படித்தான் ஏறி அதனைக் கட்டினார்களோ? அந்த அளவிற்கு ஆர்வம் படைத்தவர்கள் எங்குப் பார்த்தாலும் இன்று இருக்கிறார்கள். எப்போது நம் கொடி கோட்டையில் பறக்கும்? என்பதுதான் கேள்வியே தவிர, நமது கொடி பறக்காத இடமே இல்லை.
அந்தக் காலத்தில், எந்த வீட்டிலாவது கொடி பறந்தால் அந்த வீட்டை நோக்கிக் கற்கள் பறக்கும். கடையில் கொடி பறந்தால் அந்தக் கடையில் சாமான் வாங்காமல் கட்டுப்பாடு செய்வார்கள். வண்டியில் பறந்தால் வண்டியை வழியில் நிறுத்தி, மாட்டை அவிழ்த்து விரட்டிவிடுவார்கள். இன்று போல் அல்ல அன்று. குடியரசுப் பத்திரிகையை மறைத்து வைத்துக்கொண்டுதான் படிக்கவேண்டும். இத்தகைய நிலையில் கழகத்தை வளர்ந்தவர் நீலமேகம் போன்றவர்கள்.

வியர்வையும் இரத்தமும் சிந்திய வீரர்கள்!

கட்டப்பட்ட கோபுரத்திற்கு எப்படிக் கலசம் அமைப்பது என்றுதான் இப்போதைய நிலைமை. எப்படி அமைப்பது என்பதிலே மாற்றுக் கருத்தினைச் சொல்லிவிட்டுப் போனவர்களும் உண்டு.

கோபுரம் கட்ட கல்வைத்த நேரத்தில் மண்ணைப் பிசைந்த நேரத்தில், இவர்களெல்லாம் பாடுபட்டவர்கள். வியர்வை சிந்தியவர்கள். தங்கள் மீது வீசப்பட்ட கல்லால் காயம்பட்டவர்கள் அதிலிருந்து கொட்டிய இரத்தத்தைச் சேற்றிலே பிசைந்து கோபுரத்தை அமைத்தவர்கள்.

நீலமேகம் அவர்கள், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, தி.மு.கவில் சேர்ந்தது பற்றி நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு முன்னால் நடந்ததை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அப்போது நான் திராவிடர் கழகத்திலிருந்து சற்று விலகியிருந்த நேரமுண்டு. ஒதுங்கியிருந்த நேரமே தவிர, ஒழிக்க முனைந்த நேரமல்ல, வேலை செய்யாத நேரமே தவிர எதிர்த்து வேலை செய்து வீழ்த்த முனைந்த நேரமல்ல.

சவுந்திரபாண்டியன் ஆகிறாய்!
அப்போது கே.கே.நீலமேகம், வி.சின்னதம்பி, கோவிந்த சாமி ஆகிய மூவரும் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள். நான் எதிர்ப்புறத்தில் உட்கார்ந்தேன். நீலமேகம் அவர்கள், என்ன இப்படி விலகியிருக்கிறீர்கள்? என்ன காரணம் என்றார்கள். ஆமாம் ஏன் இப்படி? என்றார் வி.சின்னதம்பி. பக்கத்தில் இருந்த கோவிந்தசாமி, அதற்குத்தானே வந்திருக்கிறோம். சொல்லத்தானே போகிறார் என்றார், நான் சில நடைமுறைகளைச் சொன்னேன். அது நடைபெற்றதா இல்லையா என்பது வேறு. இப்படியெல்லாம் அவர்கள் கழகத்திற்குப் பணியாற்றியவர்கள், கழகத்தை உடைப்பதற்கு கழகத்தை ஒழிப்பதற்கு அவர்கள் ஒரு துளியும் எண்ணாதவர்கள்.

நீலமேகம் அவர்களுக்குச் சென்னையிலிருந்து நான் தொலைபேசி மூலம் பெரியார் அவர்கள் மணி அம்மையைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் என்று நிறுத்தி நிறுத்திச் சொன்னேன். அப்படியா? என்று மெதுவாகக் கேட்டார். வேண்டாம் என்று பதறவில்லை. கூடாது என்று அமைதியாக இருந்தவர் நீலமேகம். அதற்குப்பிறகு பெரியாரை நேரில் சந்தித்து அன்பு காரணமாக, உரிமை காரணமாக மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் பெரியார் அவர்கள், நீ கவுந்தரபாண்டியன் ஆகியிருக்கிறாய் என்றார். அதற்கு 6 மாதத்திற்கு முன்னர்தான் தோழர் வி.சின்னதம்பியை அப்படிக் குறிப்பிட்டார். அதாவது, சவுந்திரபாண்டியன் போல் வெளியேற வேண்டியவர் என்பதை அப்படிக் குறிப்பிட்டார். அதன்பிறகுதான் இவர்கள் வெளியேறினார்கள்.

ஆரம்பிக்கிறாயா? ஆரம்பிக்கட்டுமா?
தனிக்கட்சி வேண்டாம். கழகம் சிதறுபட வேண்டாம் என்றேன். யாரும் கேட்கவில்லை. அப்போது சில நண்பர்கள், நீ ஆரம்பிக்கிறாயா? நான் ஆரம்பிக்கட்டுமா? என்று கேட்டார்கள். யார் அந்த நண்பர்கள் என்றால் அவர்கள்தான் இன்று எப்படியோ மாறியவர்கள். கவிஞர் பாரதிதாசன், பெரியாரைக் கண்டித்துக் கவிதை போதித்தவர்தான். இவர்கள் அத்தனை பேரும் ஏற்பாடு செய்த பிறகுதான் முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டது. நண்பர்கள் நீலமேகம் போல, சின்னதம்பி போல, நானும், பிளிவுபடுவதை விரும்பவில்லை.

நாங்கள், நண்பர்களே என்றோம், வெறுத்து ஒதுக்கினார்கள். நேசக்கரம் நீட்டினோம். நீசத்தனம் என்றார்கள். அன்பு பாராட்டினோம். அலட்சியப்படுத்தினார்கள். அதன் பிறகுதான் கழகம் தோன்றியது. இது வளருவதற்கு அரும்பாடுபட்டுப் பணியாற்றுபவர் நீலமேகம் அவர்களாவார்.

தமிழ்நாட்டிலேயே எந்த மாவட்டத்திலேயும் இல்லாத அளவிற்கு உறுப்பினர்கள், இல்லாத அளவிற்கு கிளைகள், இந்தத் தஞ்சை மாவட்டத்திலே இருப்பதைக் காண்கிறோம். மற்ற மாவட்டங்களில் 6 ஆம் தேதி அழைத்தால், 16 ஆம் தேதி வருகிறோம் என்போம். ஆனால் தஞ்சை மாவட்டம் 6ஆம் தேதி அழைத்தால் 4 ஆம் தேதியே வருகிறோம்.

காங்கிரசா வெற்றி பெறுகிறது?
நான் தேர்தல் வெற்றியை மிகப்பெரிதாக எண்ணுவதாக நினைக்காதீர்கள். பெரிய குடும்பங்கள் தஞ்சைத் தரணியில் இருப்பதால்தான் இங்கு காங்கிரசு வெற்றி பெறுகிறதே தவிர, உண்மையில் காங்கிரசா வெற்றி பெறுகிறது? இந்த ஊரிலே இருக்கிற ஆரோக்கியசாமிக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்? இராமசாமியைப் பற்றி நமக்குத் தெரியாதா? காந்தியார் கொள்கைப்படி யார் நடத்துகிறார்கள்? மருந்துக்குக் காட்டுங்கள்-விருந்துக்குக் காட்டுங்கள்.
அதிலும் பாதிப்பேர் கம்யூனிஸ்டுக்குப் போய் விட்டார்கள். கால்வாசிப்பேர் சுதந்தராக் கட்சிக்குப் போய்விட்டார்கள். மீதிப்பேர் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால், இன்று காங்கிரசில் அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி தலைவர் சஞ்சீவியார் குறிப்பிட்டதைப்போல் கண்டவர்களெல்லாம் அதிலே இருக்கிறார்கள்.

கண்டவர்கள் எல்லாம் காங்கிரசில் இருக்கிறார்கள் என்று சஞ்சீவியார் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் வேறு என்ன அது பற்றிச் சொல்ல வேண்டும்?

பெரும் பணக்காரர்கள் நிலபுலத்துக்குச் சொந்தக்காரர்கள் இவர்களை இழுத்துப்பிடிப்பதிலே காங்கிரசு வெற்றி பெறுகிறதே தவிர, காங்கிரசின் வெற்றி அல்ல அது.

நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்!

எனவே, நம்முடைய கழகம் அதிகம் வெற்றி பெறாததால் நான் வருத்தப்படவில்லை. ஆனால், வர இருக்கிற தேர்தலில் அதிகம் வெற்றி பெற வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

எந்தப் பெரியாரை நாத்திகர் என்று தூற்றினார்களோ எந்தப் பெரியாரை நடமாட விடமாட்டோம் என்றார்களோ அப்படிப்பட்ட பெரியாரைத்தான் எங்கள் ஒப்பற்ற தலைவரைத்தான், காங்கிரசுக்காரர்களே பணம் போட்டு காங்கிரசுக்காரர்களே போஸ்டர் ஒட்டி காங்கிரசுக்காரர்களே மேடை அமைத்துப் பேச்ச சொல்கிறார்கள். அப்படிச் செய்வதாலே காங்கிரசை அவர் பாராட்டியே பேசுவார் அவர் என்ன அங்கே பேசுகிறார்? காந்தி என்பவர் ஒரு பைத்தியக்காரர். எனக்குக் காங்கிரசே பிடிக்காது, காங்கிரசில் இருப்பவனெல்லாம் அயோக்கியன். ஆனால் காமராசர் பச்சைத்தமிழர். அவர் அதிகம் படிப்புச் சொல்லித் தருகிறார். ஆகையால் காங்கிரசக்கு ஓட்டு போடுங்கள் என்கிறார். இவ்வளவும் சொன்னாலும் அவர்கள், பொறுத்துக் கொண்டிருந்து, ஒட்டுப் போடுங்கள் என்று சொல்லும்போது அதிலே மகிழ்ச்சியடைகிறார்கள்.

யாரோ ஒரு நண்பர் தேசியம் என்றால் என்ன என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்குப் பெரியார் அவர்கள், தேசியம் என்றால் பித்தலாட்டம் என்றார்.

அவரே உருவாக்கியதை அழிக்கவா முடியும்?

என்னைத் திட்டவேண்டும் என்பதற்காகக் காங்கிரசுக்காரர்கள் பெரியாரை அழைத்துக் கூட்டம் போடுகிறார்கள். என்னைத் திட்டவேண்டுமானால் என்னுடைய தலைவரை விட்டுத் திட்டலாமே தவிர, நீங்கள் திட்டித் தப்பவா முடியும்? ஆனால், நான் அவர் என்ன திட்டினாலும் பதில் சொல்வதில்லை என்றிருக்கிறேன். ஆகையினால்தான் காங்கிரசுக்காரர்கள், சுப்பிரமணியம் பேசினால் அண்ணாதுரை 9 தடவை பதில் சொல்கிறான். எனவே, கூப்பிடு பெரியாரை என்று கூப்பிட்டுப் பேசச் சொல்கிறார்கள்.

வாழை மட்டை அடிவாங்கிய பிறகு விருந்துக்குப் போகும். அதுபோல பெரியார், என்ன உன் கதர்? என்ன உன் கைராட்டை? என்ன உன் காந்தி? என்றெல்லாம் சொன்னாலும், காங்கிரசுக்கு ஓட்டுப்போடுங்கள் என்பதைத் தான் பிடித்துக் கொள்வார்கள்.

இது என்ன நீதியோ?

கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் தகராறுக்குப் பக்கத்து வீட்டுக்காரனா மத்தியஸ்தம் பேசுவது?

அதுபோல ஓட்டருக்கும் ஓட்டு கேட்கிற கட்சிக்குமிடையே தேர்தலில் கலந்துகொள்ளாத கட்சியா மத்தியஸ்தம் பேசுவது?

பிள்ளைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுக்க மிட்டாய் காட்டுவார்கள். அதுபோல நம்மைத் தட்டிட, அவரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கண் போனவனை கை போனவனைக் காட்டிக் காசு கேட்பதுபோல, காமராசரைப் பெரியார் பிடித்துக்கொண்டு இவர் நல்லவர், ஓட்டுப்போடுங்கள் என்கிறார். என்னைப் பிடித்துக் கொண்டு பெரியார் ஓட்டுக்கேட்டால் அர்த்த முண்டு. நான் அவர் வளர்த்த பிள்ளை. அவர் வளர்த்துவிட்ட அரசியல்வாதி. ஆகவே, என்னைப் பிடித்துக்கொண்டு ஓட்டுக்கேட்கலாம். ஆனால் நான் தத்தித் தடுமாறி நானே ஓட்டுக்கேட்கிறேன்.

காரணம் உணருவீர்
நமது கழகத்தைப் பற்றி இன்றைய தினம் நேருவினால் பேசப்படுகிறது. ஏன்? எங்களில் 15 பேர்களைச் சட்டமன்றத்திற்கு நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். 2 பேர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பினீர்கள். எனவேதான் இன்று நம்மைப் பற்றி அவர்கள் அதிகம் பேசுகிறார்கள்.

மதுரையில் கூடிய அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டிக் கூட்டத்தில் நேரு அவர்கள், உள்நாட்டு யுத்தமே வந்தாலும் சரி,ந நான் இதனை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றார்.

நண்பர் சின்னதம்பி குறிப்பிட்டார். எல்லைப்புறத்தில் சீனாக்காரனிடத்தில் வீராவேசம் காட்ட முடியவில்லை. நம்மிடம் வீராப்புப் பேசுகிறார் என்று.

தெருக்கோடியில் வரும்போது ஒரு வெறிநாய் குரைத்தால் பயப்படுவார்கள். போலீஸ்காரரைப் பார்த்துவிட்டுக் கால் நடுங்குவார்கள். வீட்டிற்கு வந்ததும் கேட்டுக் கொள்ள மனைவி இருக்கிறாள் என்று கருதி என் கழுதை, என்ன நினைச்சுட்டிருக்கே? என்பார்கள். அதுபோல, சீனாக்காரனிடம் பயப்படுவார்கள். கேட்டுக் கொள்வதற்கு நாம் இருக்கிறோம் என்றெண்ணி நம்மிடம் வீராப்புப் பேசுவார்கள்.

நம்மிடம் துப்பாக்கியைக் காட்டுகிறார்கள். ஆனால் சீனாக்காரனிடம் நீட்டினால் அவனுக்குத்தெரியும். இதில் எந்தத் துப்பாக்கி வெடிக்கும்? அது எப்போது வாங்கியது என்பது.
நாம் அஞ்சவோமா?

நாமெல்லாம் வீட்டைவிட்டுப் புறப்படும்போதே வாய்க்கரிசி போட்டுக்கொண்டு போகிறோம். என்போமே தவிர, வருகிறோம் என்று சொல்லமாட்டோம். துப்பாக்கிக்கு அஞ்சுகின்றவர்கள், தி.மு.கழகத்தில் யாருமில்லை. தமிழ்நாட்டில் யாருமில்லை. நேரு பண்டிதர் உரத்த குரலில் பேசுவாரே தவிர, பின்னால் ஓசைப்படாமல் அடங்கிவிடுவார்.

இந்த அணு உலகத்தில், பாகிஸ்தான் பிரிவினையை ஒத்துக்கொள்ள முடியாது என்று சொன்னவர்தான் நேரு. பிறகு பஞ்சாபை இரண்டாகப் போட்டு, வங்காளத்தைப் பிரித்துத் தந்தார்களே தவிர, உள்நாட்டு யுத்தமே வந்தாலும் தரமாட்டேன் என்று சொல்லவில்லையே.

தி.மு.கழகப் பிரச்னை சாதாரணப் பிரச்சினை அல்ல. தஞ்சைத்திலகர் கட்டத்தோடு இருக்கிற பிரச்சினை அல்ல, சென்னைச் சட்டமன்றத்தோடு நின்றுவிடக்கூடிய பிரச்னை அல்ல பாராளுமன்றத்தோடு மட்டும் பேசப்படுகின்ற பிரச்சினை அல்ல. ஐ.நா.சபையில் பேசப்படுகின்ற உலகப்பிரச்சினையாக உருவெடுக்கும்.

உத்தரவாதம் அளிக்க என்னால் இயலுமா?
என்னைப்பார்த்து, யாராவது உள்நாட்டு யுத்தம் வருமா? என்று கேட்டால், உள்நாட்டு யுத்தம் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால், உள்நாட்டு யுத்தமே என்றால் வராது என்பேன். உள்நாட்டு யுத்தம் முன்னேற்றக் கழகத்தால் வராது.

எனக்கோ வயதாகிறது. உங்களுக்கோ வாலிப முறுக்கு ஏறுகிறது. எனக்கு வலிவு குறைந்துவிட்டால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யார் கண்டது? ஆகையினால்தான் உள்நாட்டு யுத்தமே வராது என்று நான் உத்தரவாதம் சொல்ல முடியாது. ஆனால், முன்னேற்றக் கழகத்தால் வராது. நடைபெறாதா? என்றால், நடைபெறக்கூடும். எதிர்காலத்தில் வரலாம். யார் எதனைச் சொல்ல முடியும்.

யாராவது எதிர்பார்த்தார்களா முன்னேற்றக் கழகத்திற்கு 17 லட்சம் பேர் ஓட்டுப்போடுவார்கள் என்று? யார் எதிர்பார்த்தார்கள் 2 பேர் பாராளுமன்றம் செல்வார்கள் என்று? அப்போது நமக்கு வளர்ச்சியில்லை. இப்போது தடுக்கி விழுந்த இடமெல்லாம் முன்னேற்றக் கழகம்தான்.
பெருமையினைப் பெற்றீர்!

நீலமேகம் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வேன் கல்லடிக்கும் சொல்லடிக்கும் அஞ்சாமல் பணியாற்றினீர்கள். இன்று இத்தகைய வளர்ச்சியினைப் பெற்றிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால், பெரியார்கூடப் பெறமுடியாததைப் பெற்றிருக்கிறீர்கள். சட்டமன்றத்திற்கு ஒரு 10 பேரை அனுப்பி அவர் பெருமை பெறவில்லை. ஆனால், இன்று நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

இந்தக் கழகத்திற்கு எண்ணற்ற காரியங்கள் ஏராளமாக இருக்கின்றன. தாய்த்திருநாடு மீட்கப்படுவதற்கு நாம் ஆற்றவேண்டிய பணி அதிகம் இருக்கிறது. தாய்த்திருநாடு விடுதலை பெற்றுவிட்டது என்ற கேடயத்தைத் தருவதற்கு அனைவரும் அயராது பாடுபடுங்கள். சென்று வாருங்கள் வென்று வாருங்கள்.

(நம்நாடு - 24.11.61)