அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தமிழ்நாடு என்ற பெயர் பெற்றதற்கான விழாவில் அண்ணா

(01.12.1968 அன்று சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை)

                அருமைத் தோழர்களே நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் கலந்துகொள்கின்ற இந்த நிகழ்ச்சி தமிழகத்திலே வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருப்பதில் உங்களைப்போலவே நான் பெருமிதமடைகின்றேன். சில திங்களாக உங்களிடத்திலே பேசுவதற்கான வாய்ப்பற்றிருந்த நான் இன்றையதினம் எதைப் பேசவேண்டுமோ அதைப் பேசுவதற்கான வாய்ப்பைப் பெற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த மகிழ்ச்சி விழாவில் நான் கலந்துகொள்வதற்காக முடிவெடுத்த நேரத்தில் மருத்துவர்களும் என்னுடைய உற்ற நண்பர்களும் இந்தக் கூட்டத்திலே நான் நீண்ட நேரம் பேசுவதன் மூலம் உடலுக்கு ஏதாகிலும் ஊறு நேரிடுமோ என்று ஐயம் கொண்டார்கள். இதற்கே உடல் ஊறு நேரிடுமானால் பிறகு உடலிருந்து பயனில்லை என்று சொல்லி நான் இந்த விழாவிலே கலந்துகொள்ளவேண்டும் என்ற என்னுடைய முடிவினை ஏற்றுக்கொள்ளும்படி மருத்துவர்களையும் நண்பர்களையும் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொண்டேன். ஏனென்றால் ஒருவனுடைய வாழ்நாளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒருமுறைதான் வருமே தவிர பலமுறை வருவதற்கில்லை. ஆகையினால் தமிழ்நாட்டு மக்கள் தமிழினத்து மக்கள் தங்களுடைய நாட்டுக்குரிய பெயரை பெறுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி தக்க முறையிலே வெற்றிபெற்று அதற்கு முன்னணியிலே இருந்தவர்களெல்லாம் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடுகின்ற உள்ளத்தைப் பெற்றிருக்கின்ற நன்னாளாக இன்னாள் விளங்குகின்றது.

இவ்வளவு நல்ல நாளில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைப் பற்றி எண்ணிப்பார்ப்பதென்பதுகூட அவ்வளவு சரியானதல்ல. தனக்குரிய மங்கை கிடைத்து மண அறையிலே மணாளன் உட்காருகிறபொழுது முன்னாலே பார்த்த அழகற்ற மங்கையரைப் பற்றி எண்ணிப்பார்ப்பது வீண்வேலை என்பதை....(கைத்தட்டல்). ஆகையினாலே நாம் பெறவேண்டும் என்று நினைத்ததைப் பெற்றிருக்கிறோம். அடையவேண்டும் என்று எண்ணிக்கெண்டிருந்ததை அடைந்திருக்கிறோம். அதை நாம் பெறுவதற்கு டெல்லிப் பேரரசு உறுதுணையாக இருந்ததற்காக அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் இதைக் காங்கிரஸ் அரசு நடைபெற்று இதே தீர்மானம் டெல்லி அரசினாலே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமானால் அதற்கு அவ்வளவு மதிப்பு இருந்திருக்க முடியாது. ஆனால் நடைபெற்றுக்கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதாலே இந்தத் தீர்மானத்தை டெல்லிப் பேரரசு புறக்கணித்துவிடும் என்று அரசியலில் விபரம் தெரியாதவர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்; விபரம் தெரிந்தவர்கள் அந்த இடத்திலேகூட இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று எடுத்துச் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன்.

ஆனால் இதைப்பற்றி நான் டெல்லிப் பேரரசிலே உள்ள அமைச்சர்களிடத்தில் நம்முடைய பிரதம மந்திரி அவர்களிடத்திலே பேசுகின்ற நேரத்தில் எடுத்த எடுப்பிலேயே அவர்கள் அதற்குத் தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தார்கள். நண்பர் ம.பொ.சி. அவர்கள் எடுத்துச் சொன்னபடி தமிழ்நாடு தமிழகம் என்பதில் ழகரத்தை எடுத்துச்சொல்வதற்குத்தான் அவர்களிலே பலராலே முடியவில்லை. ஒருவர் இருவருக்கு நான் அவர்கள் உடனிருந்து ‘ழ’ என்பதை எப்படி உச்சரிப்பு வரும் என்பதை நாக்கைத் தூக்கி மேலே முட்டியும் முட்டாதும்போல செய்து விடவேண்டும் என்றெல்லாம்கூட பயிற்சி கொடுத்துப் பார்த்தேன். எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் அவர்களாலே அதை உச்சரிக்க முடியவில்லை. அந்த இயலாமையை மனதிலே எண்ணிக்கொண்டுதான் அவர்கள் தமிழகம் தமிழ்நாடு என்ற பெயரிருப்பதை எளிதான முறையில் தங்களுக்கு உச்சரிக்கக்கூடிய வகையில் அதை மாற்றியமைத்துத் தரவேண்டும் என்று என்னிடத்திலே எடுத்துச் சொன்னார்கள். அந்த மாற்றத்தைத் தவிர அவர்களுடைய இயலாமையினாலே ஏற்பட்ட மாற்றத்தைத் தவிர நம்முடைய கோரிக்கையின் அடிப்படையை நான் சொன்னவுடனே அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அப்பொழுதுதான் என்னுடைய எண்ணத்திலே ஒரு ஐயப்பாடு தோன்றிற்று. எதிர்க்கட்சி வரிசையிலே உள்ள ஒரு அரசு எடுத்துச்சொல்கிற நேரத்திலேயே அதை இந்த அளவுக்கு ஒப்புக்கொள்கிற இந்திய அரசிடம் அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசு நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் எடுத்துச் சொல்லியிருந்திருப்பார்களானால் மறுப்பு பிறந்திருக்க நியாயமில்லையே, ஏன் சொல்லவில்லை என்று எண்ணினேன்.          என்னுடைய உள்ளத்திற்கு தோன்றியதெல்லாம் அவர்கள் அதனை எனக்கென்று விட்டுவைத்தார்கள் என்பதை....(கைத்தட்டல்). என்னாலே பிலாய் போல பெரிய தொழிற்சாலையை அமைக்க இயலாது. துர்க்காபூரைப்போல பெரிய தொழிற்சாலையை அமைக்க இயலாது. இதையாவது அவன் வந்து செய்யட்டும் என்று விட்டுவைத்தார்கள் என்று நான் எண்ணுகின்றேன்.

சாதாரணமாகவே வரலாற்றில் சில காரியங்கள் சில சூழ்நிலைக்குப் பிறகுதான் நடைபெறுவதைப் பார்க்கிறோம். மாமல்லனுக்குப் பிறகுதான் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் தோன்றின. அதற்கு முன்னாலே சிற்பிகள் இல்லை என்று பொருளல்ல. சிற்பக்கலையிலே நாட்டமுள்ள மன்னர்கள் இல்லை என்று பொருளல்ல. அதற்குத் தேவையான பொருள் இல்லை என்பதுகூட பொருளல்ல. ஆனால் மாமல்லன் காலத்தில் மாமல்லபுரம் தோன்றி அவனுடைய பெயரோடு அது இணைக்கப்படவேண்டும் என்று ஒரு வரலாற்று நீதி தமிழகத்திலே இருந்திருக்கிறது. அதைப்போல தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம்; பெயர் மாற்றம் என்பதுகூட பொருத்தமற்றது; பெயர் பெற்றிருப்பது. மாற்றப்பட்டப் பெயரை நாம் திரும்பப் பெற்றிருக்கின்றோம். அதைப் பெறுவதில் நாமும் ம.பொ.சி. அவர்களும் ஆதித்தனார் அவர்களும் ஒருசேர இருந்து நடத்துகின்ற இந்த அரசு வந்த பிறகுதான் அது நடைபெறவேண்டும் என்று வரலாற்று நியதி இருக்கிறது என்று நான் கருதுகின்றேன்.

அவர்கள் குறிப்பிட்டபடி நமக்குப் பின்னாலே வரக்கூடிய மக்கள், வழி வழி வரக்கூடிய மக்கள் இது மிகப்பெரிய பிரச்சினை என்று கருதுவார்களா? மிகச்சிறிய பிரச்சினை என்று கருதுவார்களா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டு காங்கிரஸ் நண்பர்கள் அடைத்திருக்கின்ற குழப்பத்தையே நானும் அடைய விரும்பவில்லை. எந்தக் காரியம் தேவையோ அது செய்யப்படவேண்டும். அது சிறிய அளவினதா, பெரிய அளவினதா. அது சோற்றுக்கு வழிகாட்டுமா? காட்டுமா காட்டாதா? அது அல்ல பிரச்சினை. தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதன் மூலம் சோறு கிடைக்குமா? என்று கேட்கின்ற நண்பர்கள், சோறுக்கு சோறு என்று ஏன் பெயர் வைக்கிறார்கள்? அவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். தமிழ்ப் பெயர் ஒவ்வொன்றும் காரணத்தோடு அமைந்திருப்பது. அவித்து எடுப்பதை அவியல் என்கிறார்கள். துவைத்து எடுப்பதை துவையல் என்கிறார்கள். வறுத்து எடுப்பதை வறுவல் என்கிறார்கள். பொறித்துத் தரப்படுவதைப் பொறியல் என்கிறார்கள். இதையெல்லாம் சொல்வதாலே இதையெல்லாம் அண்ணன் சாப்பிடுகிறான் என்று கருதாதீர்கள்; இவைகளையெல்லாம் சாப்பிடுவதற்கு முயற்சியெடுத்துக்கொண்டு வருகிறேன். இன்னும் முற்றுப்பெறாத நிலையிலே இருக்கிறேன்.

ஆனால் தமிழ்நாட்டுப் பெயர்கள் காரணத்தோடு அமைந்தவை. தமிழ்நாடு என்ற பெயரும் காரணத்தோடு அமைந்திருக்கின்ற அந்த பொருத்தத்தை எண்ணிப் பார்த்தாகிலும் அவர்கள் இது சோறு போடுமா என்று அவர்கள் கேட்பதை பொருத்தமற்றது என்பதை உணர்ந்து பார்ப்பார்கள் என்று கருதுகிறேன்.

ஒருமுறை கோவையில் பகுத்தறிவு கட்டுரைகளை எழுதிக்கொண்டுவந்த சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த கைவல்யன் அவர்கள் அப்போது என்னோடு இருந்த சம்பத்திடத்தில் ஒரு கேள்வி கேட்டார். ஜிலேபி ஜாங்கிரி என்றெல்லாம் பெயர் வைக்கிறார்களே, இன்னென்ன வடிவத்திலே செய்யவேண்டும் என்றெல்லாம் செய்கிறார்களே பலகாரம் அப்படி வட்ட வடிவமாக இல்லாவிட்டால் அது இனிக்காதா? என்று கேட்டார். அதற்கு அப்போது சம்பத் சொன்ன பதில் வட்ட வடிவமாக இருப்பதற்குப் பதிலாக கடலை மாவும் சர்க்கரையும் கொஞ்சம் நெய்யும் சேர்ந்ததுதான் ஜிலேபி என்பதாலே கொஞ்சம் கடலைமாவை வாயிலே போட்டுக்கொண்டு கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டுக்கொண்டு கொஞ்சம் நெய்யை ஊற்றிக்கொண்டால் அது ஜிலேபியாகிவிடுமா? என்று சம்பத் கேட்டது நினைவுக்கு வருகிறது. அப்போது அப்படியெல்லாம் மிகுந்த சாமர்த்தியமாகப் பேசிப் பழக்கப்பட்டவர். போய்ச் சேர்ந்த இடம் அதற்குத் தகுந்த இடம் கொடுக்கவில்லையே என்று எனக்கு ஒவ்வொரு நாளும் வருத்தம் அளிக்கிறது.

அதைப்போல நம்முடைய பண்டங்கள் பலகாரங்கள் ஊர்கள் குடியிருக்கும் இடங்கள் நாம் செய்யும் தொழில்கள் நாம் படிக்கும் நூற்கள் ஆகிய அவ்வளவுக்கும் காரணத்தோடு பெயர்வைத்துப் பழக்கப்பட்டத் தமிழினம் நாட்டுக்கு மட்டும் மெட்ராஸ் ஸ்டேட் சென்னை இராஜ்யம் என்று வைத்திருப்பது பொருத்தமற்றது என்பதாலே அதை நீக்கி பொருத்தமுள்ள தமிழ்நாடு என்ற பெயரினை நாம் பெற்றிருக்கின்றோம். அதற்காக அரும்பாடுபட்டவர்களுக்கெல்லாம் இன்றையதினம் நாம் நன்றி கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். அதே மூச்சாக இருந்து தம்முடைய மூச்சினைப் பிரிந்த சங்கரலிங்கனாருக்கு நம்முடைய அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதற்குப் பலதடவை எதிர்ப்புக் காட்டியபோதிலும் இனி எதிர்த்துப் பயனில்லை என்ற கட்டம் வந்த பிறகாகிலும் யூகத்தோடு நடந்துகொண்ட காங்கிரஸ் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மத்திய அமைச்சரவைக்கு நாம் நன்றி கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வளவு பேருடைய மகிழ்ச்சியும் இந்த ஒரு காரியத்தாலே கிடைக்கும் என்பதாலே தமிழ்நாடு என்ன பலன் தரும் என்று கேள்வி கேட்டிருந்தவர்கள் அது எங்கும் காணாத ஒரு இன்பத்தை எங்கெங்கோ தேடி அலைந்துகொண்டிருந்த ஒரு இன்பத்தை தமிழினத்து மக்கள் இன்றையதினம் பெற்றிருக்கிறார்கள் என்பதனை நாம் உணர்வதைப் போலவே அனைவரும் உணர்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள் என்று நான் கருதுகிறேன்.

தமிழ்நாடு என்ற பெயரை பெற்றுவிட்டதால் மட்டும் நம்முடைய பணி முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. ஒருவிதத்திலே நான் பெருமிதமடைகின்றேன். இந்த ஈராண்டு காலத்திற்குள் தமிழக அரசை நடத்திக்கொண்டு வருகின்ற நான் நம்முடைய தோழமை கட்சிகளின் துணையோடு சாதித்திருக்கின்ற இரண்டு மூன்று காரியங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கக் காரியங்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்கக் காரியங்கள் மட்டும் அல்ல. எங்களைக்கூட காங்கிரஸ் நண்பர்கள் பதவியிலேயிருந்து அகற்றலாம் இம்முறையோ மறுமுறையோ எப்பொழுது வலிவு வருகின்றதோ அப்பொழுது. ஆனால் நாங்கள் செய்திவிட்டுப்போன காரியங்களில் கை வைக்கின்ற துணிவு மட்டும்.....(கைத்தட்டல்) வரலாற்று நிகழ்ச்சி என்று இவைகளைத்தான் அழைக்கிறோம். சில சட்டங்கள் ஐந்தாண்டுகளுக்குத்தான் செல்லும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மாற்றப்படக்கூடும். சில சட்டங்கள் பத்தாண்டுகள் வரையில் நிலைக்கும் அதற்குப் பிறகு மாற்றப்படக்கூடும். ஆனால் இனி தமிழகத்தை ஆளுவதற்கு எந்தக் கட்சி வருவதானாலும் என்னுடைய காங்கிரஸ் நண்பர்கள் மிகுந்த அவசரப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவர்களே வருவதாகயிருந்தாலும் சரி, இனி இது சென்னை இராஜ்யம்தான் தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுகிறோம் என்று தீர்மானம் போடுவார்களா என்றால் ஒருக்காலும்.....(கைத்தட்டல்). அப்படி நாம் செய்து வைத்திருக்கின்ற காரியம் அது என்ன அவ்வளவு பெரிய காரியமா என்கிறார்களே. பெரிய காரியம் அல்லவா? இனி யாராலும் மாற்றப்பட முடியாத ஒரு காரியம் பெரிய காரியமே தவிர சிறிய காரியமல்ல. மனதிலே எழுதிய எழுத்தல்ல இது.கல்லிலே வடித்தது. கல்லிலே மட்டுமல்ல, தமிழ் மக்களின் இதயத்திலே பொறிக்கப்பட்டிருப்பது. யார் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வந்தாலும் இதை மாற்றமுடியாது என்பது மட்டுமல்ல அவர்கள் அமைச்சரவையிலே உட்காருகின்ற நேரத்தில் ஒரு கணம் இல்லாவிட்டால் ஒரு கணம் தலை கவிழ்ந்து கொஞ்சம் யோசித்து இந்தக் காரியத்தை அவர் செய்துவிடுவதற்குப் பதிலாக நாமே செய்திருந்திருக்கலாமே என்று எண்ணுவார்களல்லவா அந்த எண்ணம் எழுகின்றபொழுதெல்லாம் தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம்தான் அரசாளுகின்றது என்று. அரசாளுவது என்பது மக்களை ஆளுவது மட்டுமல்ல. அரசாளுகின்றவர்கள் மனத்தையே ஆளக்கூடிய ஒரு நிகழ்ச்சி இன்றைய நிகழ்ச்சியாகும்.

அதைப்போலவே பன்னெடுங்காலமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைத்துவிட்ட மணமுறை என்று வைக்கப்பட்டிருந்த வைதீக முறையை மாற்றி சுயமரியாதைத் திருமணங்கள் நாம் செய்துகொண்டிருந்த நேரத்தில் அதை சட்டப்படி செல்லக்கூடியதல்ல என்ற நிலை இருந்தபொழுது அதை மாற்றி அதை சட்டப்படி செல்லக்கூடியதுதான் என்று செய்திருக்கின்ற நிகழ்ச்சியும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும்.

இந்தி இஷ்டப் பாடமாக வேண்டுமானால் இருக்கட்டும், கட்டாயப் பாடமாக வேண்டாம் என்பதை நாம் முதன்முதல் இந்தியை எதிர்கொள்ள மேற்கொண்ட முழக்கமாகும். இல்லை இல்லை என்று அன்றையதினம் வாதாடினார்கள். நாம் இந்த அரசுப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு தமிழகத்தில் இந்திக்கு இடமில்லை என்று சட்டம் இயற்றினோம். இந்த மூன்றும் எங்களிலே தனிப்பட்ட முறையிலே ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்கின்ற நேரத்திலும் சரி எங்களுடைய கட்சிகளின் சார்பில் எண்ணிப்பார்க்கின்ற நேரத்திலும் சரி, தமிழகத்தின் வரலாற்றையொட்டி எண்ணிப்பார்க்கின்ற நேரத்திலும் உள்ளபடி பெருமிதமடைகின்ற நிகழ்ச்சிகள் பெரிய நிகழ்ச்சிகள் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் இதிலே நமக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் உரிய பெருமதிப்பும் பெருமகிழ்ச்சியும் இயற்கையாக இருக்கின்றன. ஆனால் மபொசி அவர்கள் சொன்னபடி தமிழ்நாடு என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றில் தமிழர்களாக வாழாமல் தமிழைத் தவறியவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையை மௌ;ள மௌ;ள ஆனால் உறுதியாக நாம் மாற்றியமைத்துத் தீரவேண்டும்.

நம்முடைய எதிர்கால வேலைத்திட்டம் தெளிவாக நமக்கு இருக்கின்றது. நம்முடைய எதிர்கால வேலைத் திட்டத்தில் நாம் வைத்துக்கொண்டிருக்கின்ற முன்னணித் திட்டங்கள் தமிழன் தமிழனாக வாழவேண்டும். தமிழனாக வாழ்வது மட்டுமல்ல, தமிழ்மொழியைப் போற்றவேண்டும். வெறும் மொழியைப் போற்றுவது மட்டுமல்ல அந்த மொழி காட்டுகின்ற வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். அந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வது மட்டுமல்ல இயன்றால் மற்றவர்களையும் அந்த வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லவேண்டும். இந்திய ஒருமைப்பாடு என்பது அதை நோக்கிச் செல்லவேண்டுமே தவிர மற்றவற்றை நோக்கி தமிழர்கள் செல்வது இந்திய ஒருமைப்பாடு ஆகாது.

ஆகையினால் இந்த நன்னாள் நமக்கு தமிழ்நாடு என்கிற பெயர் கிடைத்தது மட்டுமல்ல, இது மற்றப்பல சிறப்புகளுக்கு நம்மை அழைத்துச் சென்று இறுதி சிறப்பாக இந்தியக் குடியரசு எல்லைக்கு உட்பட்டு இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டுக்கு உரிய அதிகாரம் தமிழ்நாட்டுக்கு உரிய மாண்புகள் தமிழ்நாட்டுக்கு உரிய எல்லாவகையான ஏற்றங்களும் கிடைக்கும்படியான ஒரு அரசியல் மாறுதல் நமக்குக் கிடைக்கவேண்டும். அதை மற்றவற்றை எதிர்த்த காங்கிரஸ் நண்பர்கள் மிகத் தீவிரமாக எதிர்ப்பார்கள். தமிழ்நாடு என்ற பெயரை அவர்கள் எதிர்த்திருக்கத் தேவையில்லை, ஆனால் எதிர்த்தார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நல்ல அளவிலே அதிகாரங்கள் கிடைக்கவேண்டும் என்று நான் எடுத்துச்சொல்லுகின்ற நேரத்தில் மிகவும் மூர்க்கத்தனமான எதிர்ப்பு பல்வேறு முனைகளிலேயிருந்து வரும். அந்த எதிர்ப்பு வருகின்ற நேரத்திலெல்லாம் இன்றைய நாளை நாம் நினைவிலே கொள்ளவேண்டும். தமிழ்நாடு பெயர் பெறுவதற்குக்கூட எத்தனையோ எதிர்ப்பு இருந்தது. அதைப்போலத்தான் ஏற்கும் என்று எண்ணி நம்முடைய பணியினை உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் தமிழ்ப் பண்போடும் நடத்திச் சென்று தமிழர்கள் அடைய வேண்டிய பெருமையை நம்முடைய காலத்தில் பெற்றுத்தந்தோம் பிறகுதான் கண்மூடினோம் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமையை நம்மிலே ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்று இந்த நன்னாளில் தெரிவித்துக்கொண்டு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன் வணக்கம்.