கடந்த 5.2.59 அன்று மாலை, சென்னை
அண்ணாமலை மன்றத்தில், தென்னிந்தியச் சுருக்கெழுத்தாளர் சங்கச்
சார்பில் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில்
நடைபெற்ற தமிழ்ச் சுருக்கெழுத்து தமிழ் டைப்ரைட்டிங் நூல்
வெளியீட்டு விழாவில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
“தமிழ் மொழிக்கு நல்லதோர் எதிர்காலம் ஏற்படவிருக்கிறது
என்பதையறிந்து அதற்கு உறுதுணையாக இந்த விழா மிகச்சிறப்பான
முறையிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டுவிட்டது
என்னும்போது, ஐயப்பாடு கொண்டவர்களும், அச்சப்பட்டவர்களும்கூட
இருப்பதால், தமிழ்மொழி ஆட்சிமொழியாவதற்குத் துணைதேடும்
பெரும் பொறுப்பினைத் தங்கள் கடமையைகக் கொண்டு நூல் எழுதி
வெளியிடும் இந்த விழாக் குழுவினர் பாராட்டுக்குரியவரா வார்கள்.
மற்ற வியாபாரத்தைப் போல இதுவும் ஒரு வியாபாரமோ என்று கருதவேண்டாம்.
வெற்றி பெற வேண்டும்
“தமிழ் மொழி ஆட்சி மொழியாவதற்கு இடையூறாக இருந்து வந்த
இரண்டு துறைகளில் நல்ல நூற்களை வெளியிட்டு, அந்த இடையூறுகளைப்
போக்குவதற்கு இந்த வெளியீட்டு விழா நல்லதொரு வாய்ப்பாக
அமைந்திருக்கிறது.
“தமிழை ஆட்சி மொழியாக்கிவிட்டதாக மாநில அரசினர் முடிவு
செய்துவிட்டதாலேயே அது வெற்றி பெற்றுவிடும் என்று சொல்ல
முடியாது. ஆங்கிலம் இருந்த இடத்திலே தமிழ் இருப்பதற்கான
வகையிலே தமிழ்மொழி வெற்றி பெறவேண்டும்.
“ஆனால், தமிழ் ஆட்சி மொழியாகிவிட்டதாக அறிவித்தால் தான்,
தமிழ்மொழி வளர்ச்சியிலே அவரவர்க்கும் ஊக்கம் பிறக்கும்.
அதனாலே ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். தமிழில் என்னென்ன ஏடுகளை
வெளியிடலாம் என்ற எண்ணம் ஏற்படும். முன்பே தமிழிலே என்னென்ன
நூல்கள் தேவை எனத் தேடிப் பிடித்த பின்னர், திடீரென்று ஒருநாள்,
‘தமிழ் ஆட்சிமொழி ஆகிவிட்டது’ என்று அறிவிப்பது என்பது
இயலாத காரியமாகும். தத்தித்த்தி நடக்கும் தன் குழந்தையைக்
கண்டு தாய் மகிழ்வது போல், தமிழ் மீது நாம் பற்றுக்கொண்டால்
தான் ஆட்சிமொழியாக்க ஊக்கமளிக்க முடியும்.
வழக்கு மன்றத்தில் வாதாட...
“வழக்கு மன்றத்திலேயெல்லாம் தமிழிலே வாதாடக் கூடிய அளவுக்குத்
தமிழ் நல்ல வளர்ச்சியடைய வேண்டுமென்று கூறப்பட்டது. ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் அவைக்களத்தில் ஒரு மங்கை,
தன் மணாளன் கள்வனல்லன் என்பதை உறுதிப்படுத்த எவ்வாறு வழக்காடினாள்
என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இளங்கோவடிகள், ‘சிலப்பதிகாரம்’
எனும் தமிழ்க் காவியத்திலே மிக அழகாக எழுதியிருக்கிறார்.
அத்தகைய அரிய வாதத்திறமையையும், அறிவுச் செறிவையும் பற்றித்
தெரிந்தவர்கள், இன்று வழக்குமன்றத்தில் தமிழில் வாதாட முடியுமா
என்பது பற்றி ஐயப்படத் தேவையில்லை.
“இந்த நாட்டிலே ஆங்கிலேயரும், பிறமொழியாளரும் புகாத காலத்திலேயே
தமிழ்மொழி எல்லா வகையிலும் வாணிகத் துறையானாலும் வழக்குமன்றமானாலும்,
வேறு எந்தத் துறையானாலும், அவற்றிலெல்லாம் சிறந்து விளங்கியிருக்கிறது.
நம் புலவர் பெருமக்கள் பிற நாட்டுத்தொடர்பு இல்லாத காலத்திலேயே
பிற நாட்டுக்காரர்கள் நம்மைப் பார்த்துப் பாராட்டக்கூடிய
அளவுக்குத் தமிழை வளர்த்து வந்திருக்கிறார்கள். அப்பொழுது
பயன்பட்ட தமிழ் இன்று ஏன் பயன்படாது? பயன்படும். தமிழ் மொழியிலே
ஒன்றும் குறையில்லை.
சுருக்கெழுத்து-கிறுக்கெழுத்து
நமக்குத் தெரிந்திருக்கும் தமிழ் குறைவாக இருக்கலாம். “இன்று
இந்த விழாவிலே தமிழுக்கு இரண்டு நூல்கள் தரப்பட்டிருக் கின்றன.
நாங்களெல்லாம் இதை வரவேற்கிறோம். ஒரு மாலை வேளை தவறாமல்
தினம் தினம் நாங்கள் அரசாங்கச் சுருக்கெழுத்தாளரைச் சந்திக்கிறோம்.
அவர் சரிவர எழுதாமல் தாறுமாறாக எழுதிவிட்டால் அது சுருக்கெழுத்தாகாது;
கிறுக்கெழுத்தாகும்.
மக்களாட்சி வெற்றிபெற வேண்டுமானால், மனத்தில் தோன்றியதை
ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆட்சிப் பொறுப்பிலிருப்பவர்கள்
மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஆகையினாலே சுருக்கெழுத்து
நல்ல முறையிலே எழுதப்பட வேண்டும்.
ஒருவருக்கு இன்னின்ன குணங்கள் இருக்க வேண்டும் என்பது போல
தமிழ் மொழியிலே நாட்டமும் இருக்க வேண்டும். அப்படி எல்லாருக்கும்
தமிழ்ப்பற்று ஏற்படுமானால், பிறமொழிச் சொற்கள் சொல்லாமல்
கொள்ளாமல் போய்விடும். தமிழிலே பிறமொழிச் சொற்களைச்
சேர்க்க வேண்டுமென்று வாதாடுபவர்கள் தங்களுடைய இயலாமையினாலேயே
அப்படிச் சொல்கிறார்களே தவிர, அவர்கள் கூறுவது சரியல்ல.
நாளாக நாளாகத் தமிழ் மொழிக்கு நல்ல ஏற்றம் கிடைக்கும்;
ஏராளமான தமிழ்ச்சொற்கள் கிடைக்கும்.
வெற்றி உறுதி
“மதிப்பிற்குரிய நிதியமைச்சரும், எனது நண்பருமாகிய திரு.சுப்பிரமணியம்
அவர்கள் கடந்த இரண்டாண்டுகளாக, அரசின் வரவு செலவுத் திட்டத்தை
மிக நல்ல தமிழிலே தந்து அழகாக எடுத்துப் பேசுகிறார். இவருக்குக்கூடத்
தாய்மொழி தமிழ்; இன்னும் கன்னட மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டிருக்கும் சட்டமன்றத் தலைவர் டாக்டர் யூ.கிருஷ்ணா
ராவ் அவர்கள், சட்டமன்றத்திலே தமிழை எந்த அளவு சேர்க்க எவ்வளவு
ஆவல் காட்டுகிறார் என்பதைக் காணும் வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம்;
நீங்களும் சட்டமன்றத்துக்கு வந்தால் காணலாம். ஆனால் ஒன்று,
நீங்கள் இப்பொழுது அதிக அளவிலே வந்தீர்களேயானால் சட்ட சபையிலே
இடம் காணாது; முறை போட்டுக்கொண்டு வந்தால் பார்க்கலாம்.
“தமிழ்மொழி வெற்றி பெறப்போவது உறுதி. இதில் ஐயமில்லை.
தமிழர்கள் எல்லா வகையிலும் வளமான மனம் படைத்திருக் கிறார்கள்.
அன்றாடம் நடைபெறும் கூட்டங்களைப் போலல்லாமல் கட்சி வேறுபாடின்றி
இங்கே விழா நடத்துவதால் எதிர் காலத்திலே நல்ல இன்பம்-மகிழ்ச்சி
கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்.
யார் சார்பிலோ பேசும் பேச்சு
“நிதி அமைச்சரும் நானும் பல்வேறு துறைகளிலே கருத்து வேறுபாடு
கொண்டவர்கள். ஆனால், தமிழ்மொழி ஏற்றம் பெறுவதில் எனக்கும்
அவருக்கும் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை. தமிழ்மொழி மீது
அவர் கொண்டுள்ள நீங்காப் பற்றை நான் என்றும் மறக்கமாட்டேன்.
“தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டிருப்பதால் பிற மொழி மீது
துவேஷம் கூடாது என்று தமிழ்ப் பற்றுக்கொண்டவரிடத்திலே சிலர்
பேசுவதானது, அவர்கள் வேறு யார் யார் சார்பிலோ பேசும் பேச்சு
என்றே கருதவேண்டியிருக்கிறது.
“தமிழும் வளரத்தான் வேண்டும்; பிறமொழி மீதும் துவேஷம் கூடாது
என்று, இரண்டையும் இணைத்துப் பேசுவது பொருளற்ற வாதமாகும்.
மொழிப்பற்று தவறானாதா?
“தமிழ் மீது பற்றுக்கொண்டிருப்பது, பிறமொழி மீது துவேஷம்
காட்டுவதாகாது. தன் குழந்தையை எடுத்து ஒரு தகப்பன் முத்தம்
கொடுத்தால் அதனாலே பிற குழந்தை மீது துவேஷம் காட்டுவதாகக்
கருதமுடியாது. பிறர் வீட்டுக்குழந்தைக்கு முத்தம் கொடுத்தால்
அதைக் காணும் மனைவி, ‘ஏன் அக்குழந்தைக்கு முத்தம் தருகிறீர்கள்?
நான் குழந்தை பெற்றுத் தரமாட்டேனா? என்று கணவனைப் பார்த்துக்
கோபிக்கலாம் அல்லது நம் வீட்டுக் குழந்தையை முத்தமிடுவதைப்
பார்த்து, பிள்ளையில்லாத எதிர்வீட்டுக்காரர் நம் மீது பொறாமைப்படலாம்.
நம் குழந்தைக்கு நாம் முத்தம் கொடுப்பதாலே வேறு எவரையும்
துவேஷிப்பதாகாது. அதைப்போல, நம் வீட்டிலே தவழ்ந்து, மழலை
மொழி பேசும் அழகு மொழிமீது நாம் பற்றுக்காட்டுவதிலே தவறில்லை;
அந்த மொழியிலே இல்லாததே இல்லை என எல்லாம் தெரிந்தவர்கள்
சொல்கிறார்கள்.
“எனவே, பிறமொழி மீது துவேஷம் கூடாது என்று பேசுவது, தமிழுக்கு
எதிர்ப்புத் தேடுவதாகும். பிறமொழியாளர் தமிழர் மீது வெறுப்புக்
கொள்ளவே வாய்ப்பாகும். தமிழர்களின் தமிழ்ப்பற்றைக் கொஞ்சம்
தடுத்து நிறுத்துவதாகும். சந்தேகப்படுவார்களோ என்பதற்காகவே
சிலர் நல்ல தமிழில் பேசத் தெரிந்தவர்களும் வேண்டுமென்றே
சில பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுகின்றனர்.
தமிழ்நாட்டுக் குணமில்லை
“நம் குழந்தை நம் வீடு தேடி வரும்போது எதிர்வீட்டுக் குழந்தை
மீது நமக்கு வெறுப்பில்லை. எதிர்வீட்டுக் குழந்தை தாயிழந்த
அநாதைக் குழந்தையாக இருக்குமானால் அதற்காக வேண்டுமானால்
நாம் கொஞ்சம் வருத்தப்படலாம். அநாதைப் பிள்ளையை அநாதை விடுதியில்
சேர்ப்பது போலத்தாயிழந்து தவிக்கும் ஒரு மொழி இருக்குமானால்
அதைச் சர்க்கார் ஆராய்ச்சித் துறைக்குப் பயன் படுத்திக்கொள்ளட்டும்.
ஆனால் சொந்தக் குழந்தையை விட்டுவிட்டு இரவல் குழந்தையைக்
கொஞ்சுவது தமிழ்நாட்டுக் குணமுமில்லை; மனிதக் குணமுமில்லை.
“தமிழ் எல்லாவற்றிற்கும் பயன்படும். பிறமொழிச் சொற்கள்
தேவையில்லை. தேவையில்லை என்பதால் பிறமொழிக்குக் கேடு செய்வதாகச்
சொல்வது நல்லதல்ல; அப்படிச் சொல்பவர்கள் நம்மைப் பிறருக்குக்
காட்டிக் கொடுப்பவர்கள் ஆவார்கள்.
தமிழ் பெருமை பெறும்
“அயர்லாந்து நாட்டிலே, ‘அய்ரிஷ்’ மொழிதான் வேண்டுமென்று
சொன்ன டிவேலராவுக்கு ஆங்கிலத்தின் அருமை பெருமை தெரிõயததால்
அல்ல; ஆங்கிலத்தின் வளம் புரியாத தால் அல்ல; அல்லது தனக்க
ஆங்கிலம் பேசத் தெரியாததால் சொன்னதாகப் பொருளல்ல; அவர்
ஆங்கிலம் படித்ததால் பல நன்மைகள் கிடைத்ததாக அவரே எழுதியிருக்கிறார்.
ஆனாலும் அயர்லாந்தில், ‘அயர் மொழிதான் வேண்டும்’ என்றார்.
“ஒரு நாட்டுப் பண்பு, வளம், வளர்ச்சி, தன்மானம் எல்லாம்
அந்நாட்டின் மொழியைப் பயன்படுத்துவதைப் பொறுத்துத்தான்
உள்ளன. “தமிழ், தரணியில் பழைய பெருமையைப் பெற்றுத் திகழும்
என நாம் நம்புகிறோம், அந்த நிலை விரைவில் வருமாக!”
(நம்நாடு - 11.2.59)
|