அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தமிழ் விழா!

“தமிழ் ஆட்சிமொழி ஆக்கப்பட்டாலும், தமிழன் ஆட்சி தமிழனிடத்தில் இல்லை. ஆட்சி என்னும் நவரத்தினக் கல்பதித்த குழல், ‘நிஜ கிருஷ்ண’ னிடத்தில் இல்லை. அன்னையின் அரியாசனம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

“மாடி வீடு இடிந்து மண்மேடாகிவிட்ட பிறகு ஓடிந்த நாற்காலியில் தூசுகளைத் தட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகனைப் பார்க்கத் தாய் வந்தால், மகன் தாயைப் பார்த்து, ‘அன்னையே, நீங்கள் எனக்குத் தந்த மாடி வீட்டை என்னால் காப்பாற்ற முடியவில்லை எனக்குத் தாங்கள் அளித்த எல்லாவற்றையும் இழந்து விட்டேன்’ என்று கூறினால் தாய் ஆத்திரப்படமாட்டாள், பரிதாபத்துடன் மகனைப் பார்ப்பாள்.

வேதனையுடன் அவன், ‘இதோ, இந்த வேப்ப மரத்தடியில் உள்ள பலகையில் அமருங்கள் அன்னையே’ என்று கூறி, அன்னையை அமர வைப்பது போலத்தான் தமிழ் அன்னைக்கு இப்பொழுது அரியாசனம் அளிக்க ஆட்சியாளர் முன் வந்திருப்பதாகக் கூறுவது இருக்கிறது.

தமிழன் ஆட்சி தழைக்க...
“தமிழ் உள்ளபடியே ஏறவேண்டிய இடத்தில் ஏற வில்லை. தமிழன் ஆட்சி தமிழ் நாட்டில் ஏற்பட்டாக வேண்டும்; தமிழன் ஆட்சி தழைக்கும் நேரத்தில்தான் தமிழ் ஆட்சிமொழியாக ஆக்கப்படவேண்டும்.

இவ்வாறு 18.1.58 மாலை சென்னைக் கோகலே மண்டபத்திர மணவழகர் மன்றச் சார்பில் நடந்த தமிழ் விழா நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கி அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டார்.

விழாவில், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, தோழர்கள் கண்ணதாசன், அன்பு கணபதி, பகீரதன், அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர்.

விழா துவக்கத்தில் தோழர் க.அன்பழகன் அவர்களின் செல்விகளான அ.மணமல்லி, அ.செந்தாமரை மற்றும் ஹேமாவதி ஆகியோர் நடனமாடி கூடியிருந்தோரை மகிழ்வித்தனர்.

தோழியர் வெற்றிச்செல்வி அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினர்.

தருமாம்பாள் பள்ளி
நிறுவப்படவிருக்கும் டாக்டர் தருமாம்பாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் நிதிக்காக ரூ.101, தோழியர் அலமேலு அப்பாத்துரை அவர்களிடமும், டாக்டர் நடேசன் இரவுப் பள்ளிக் கட்டிட நிதிக்காக ரூ.101 பள்ளியின் அமைச்சரிடமும் அண்ணா அவர்களால், விழாக்குழு சார்பில் அளிக்கப்பட்டது.

மலேயாவிலிருந்து வந்திருந்த ‘மலாயா அன்பன்’ பத்திரிகையின் உரிமையாளரும், பிரபல வணிகருமான திரு.கே.ஐ.மொய்தீன் பார் அட் லா அவர்கள், அண்ணா அவர்களைப் பாராட்டி, ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் கூறி மாலையணிவித்தார்.

அண்ணா அவர்கள் வர சிறிது தாமதமானதால், திரு.அப்துல் சமது அவர்கள் தலைமையில் விழா மாலை 6 மணிக்குத் துவங்கியது.

வள்ளுவர் யார்?
பிறகு 6.30 மணிக்கு அண்ணா அவர்கள் தலைமையேற்றார். தோழர்கள் கா.அப்பாத்துரை அவர்கள் வள்ளுவர் யார்? என்ற தலைப்பிலும், கண்ணதாசன் அவர்கள், ‘வள்ளுவர் கண்ட வீடு’ என்பது பற்றியும், அன்பு கணபதி அவர்கள் ‘தமிழும் இசையும்’ என்பது பற்றியும், பகீரதன் (கல்கி) அவர்கள் ‘தமிழ் இதழ்கள் வளர்கின்றன’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள்.
நடனமாடிய சிறுமி ஹேமாவதி, தனது பெயரை ‘பொற்செல்வி’ என்று அண்ணா அவர்கள் முன்னிலையில் மாற்றிக் கொண்டாள்.

சிறுவை நச்சினார்கினியன் அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.

அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
“தாய் மொழியைப் போற்றவேண்டுமென்றால் பிற மொழியை ஒப்புவமை காட்டி விளக்கத்தான் வேண்டும். அப்படி நாம் ஒப்புமை காட்டிப் பேசுவது, பிறமொழியை வெறுப்பதாகாது.

பொறுத்தமற்ற வாதம்
“தாய் மொழியின் வளத்தையும், அதன் சிறப்பினையும் அறியாத மக்களுக்கு எடுத்துரைத்து விளக்க வேண்டுமானால் நம் தாய்மொழி இன்னின்ன வகையில் பிறமொழிகளை விடச் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டித்தான் ஆகவேண்டும். வேறு போட்டி மனப்பான்மையிலோ, கெட்ட எண்ணத்துடனோ புகுத்தப்படும் செயல்ல. ஒப்புவமை காட்டினால் தான் தமிழனுக்குத் தன் தாய்மொழியின் உயர்வு தெரியும்.

“தாய்மொழியின் மீது பற்றுக் கொண்டிருப்பதினாலேயே பிறமொழி மீது நாம“ ‘துவேஷம்’ காட்டுகிறோம் என்று கூறுவது அரசியல் அரிச்சுவடியே அறியாதவர்களின் பொருத்தமற்ற வாதம் என்றுதான் கொள்ள வேண்டும்.

“இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

ஆசை உண்டு வெறி இல்லை
“சுப்பையா பிள்ளை என்னும் ஓர் தமிழ் அன்பர் வீட்டில் இந்தி எதிர்ப்புப் பற்றிக் கலந்து பேச, பலதுறைப் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். பெரியார் அவர்களும் ‘ஆச்சாரியாரும், மற்றக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு நானும், நாவலர்.நெடுஞ்செழியன் அவர்களும் சென்றிருந்தோம். அப்பொழுது பெரியாரவர்கள் பேசும்போது, ‘எனக்குத் தமிழ்மொழி மீது வெறி கிடையாது’ என்ற கருத்துப்பட பேசினார். உடனே ஆச்சாரியார் அவர்கள் குறிக்கிட்டு, “தமிழ் வெறி கிடையாது. ஆனால், ஆசை உண்டல்லவா” என்று கேட்டார். ‘ஆசை உண்டு வெறியில்லை’ என்றார் பெரியார்.

‘ஆசைக்கும் வெறிக்கும் பொருள் ஒன்றுதான்’ என்று கூறி ஆச்சாரியார் ஒரு விளக்கம் தந்தார். ‘ஒரு பெண்ணைக் காதலிக்கும் இளைஞனைக் கேட்டால், அவன் தனக்கு அந்தப் பெண்மீது ஆசை இருப்பதாகத்தான் கூறுவான். அதே நேரத்தில் அவனுடைய தகப்பனாரைக் கேட்டால், என் பிள்ளை காதல் வெறி கொண்டு அலைகிறான்’ என்றுதான் வெறுப்புடன் கூறுவார். அதேபோலத்தான் நாம் தமிழ்மீது ஆசைப்படுவது, பிறருக்கு வெறியாகத் தோன்றுகிறது’ என்றார் ஆச்சாரியாரவர்கள்.

விடுதலை உணர்ச்சி
“எனவே, பிறமொழியாளர்கள், தங்கள் மொழியைத் தமிழர்களிடையே திணிக்க முயலுபவர்கள் நம்மைப் பார்த்து, ‘மொழி வெறியர்கள்’ என்று கூறுவதனால், நாம் நம் தாய் மொழியினிடத்தில் கொண்டுள்ள பற்றினை விட்டுவிட முடியாது.

“நம்முடைய ஏற்றமும் பெருமையும் நம்மவர்க்குத் தெரிய பிறமொழி மீது அர்த்தமற்ற மோகமோ, பற்றோ, பாசமோ கொண்டு தமிழ்ப் பண்பை இழந்து விடாதிருக்க, விடுதலை உணர்ச்சி பெற, இத்தகைய ஒப்புவமை விளக்கம் தந்தாக வேண்டும்.

“குழலின் நாதத்தைக் கேட்டுச் சுவைக்கின்றோம். அந்தக் குழலினை, இன்ன துளையை மூடி, இன்ன துளையைத் திறந்தால் இன்ன ஒலி எழும் என்று தெரிந்த ஒருவர் வாசிப்பதால்தான் நாம் இனிமையான கீதத்தைக்கேட்டு மகிழ முடிகிறது.

“காட்டிலேயுள்ள மூங்கில் மரத்தில் வண்டுகள் துளை செய்து, அந்தத் துளை மூலம் காற்று உள்ளே நுழைந்து வெளியே வரும்போது இசையெழுவதைக் கண்ணுற்ற தமிழன், பின்பு துளை இசைக்குழலைக் கண்டுபிடித்தான்.

தமிழர்கள் கண்ட மொழி
“அப்படிப்பட்ட துளைக்குழல் இல்லாமல் சாதாரண கைத்தடியை ஒருவன் வைத்துக்கொண்டு, துளைக்குழலில் ஊதுவது போலவே வாயால் ஒலியெழுப்பியும் வாசிக்க முடியும். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு உண்மையில் துளைக்கருவியால் வாசிப்பது போலவே இருக்கும். இருப்பினும், கைக்கோலால் வாசிக்கும் இசைக்கும், குழலுக்கும் வேறுபாடு உண்டு. தமிழர்கள் கண்ட மொழி அப்படிப்பட்டது.

“தமிழன் ஆட்சி ஏற்படாமலே, தமிழை ஆட்சிமொழியாக்கி விட்டதாகக் கூறுவது குருடன் தன் கைக்கோலால் குழல் வாசிக்கும் தன்மையை ஒத்ததாகும்.

“தமிழ் மொழியின் வளம் யௌவனத்திலும், சாவகத்திலும் கொழித்தது. சீனத்திலிருந்து வந்த யுவான் சுவாங் என்னும் யாத்ரீகர் தமிழ்நாட்டின் வளங்களைப் பாராட்டியிருக்கிறார். தமிழர் வரலாறு எப்படிப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

திருக்குறள் தந்த மொழி
“தமிழன், அகமும் புறமும், அறநெறியும், அரசியல் திட்டமும் அறிந்திருந்தான். அவனிடத்திலே வீரமுண்டு, வல்லமையுண்டு, புலமையுண்டு, புத்திக்கூர்மையுண்டு, சுருக்கமாகச்சொல்ல வேண்டுமானால், தமிழ்மொழிதான் ‘திருக்குறள்’ தந்தது.
“அப்படிப்பட்ட தமிழ் அன்னையின் முடியைப் பாரதத்தாயிடம் தந்துவிட்டு, முழுக்குப் போட்டுவிட்டு, தமிழ் வளமானது, வன்மையானது, தொன்மைமிக்கது, தன்மை மிக்கது” என்று பேசிப் பயன் என்ன?

“சர்க்கார் செய்யும் பல காரியங்களில் தமிழை ஆட்சி மொழியாக்கியது போன்ற சில நல்ல காரியங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்று நண்பர் பகீரதன் கூறினார்.

பட்டை தீட்டாத வைரம்
“தமிழ் ஆட்சி மொழியானது என்பது ஓரளவு உண்மை என்றாலும்கூட, பட்டை தீட்டப்படாத வைரத்தை, பாமர மக்களிடம் கொண்டு போய்க் காட்டி, இது வைரம் என்றால் அவர்கள், ‘இதைவிடப்பெரிய கண்ணாடி பட்டணத்திலே விற்கிறதே’ என்றுதான் கூறுவார்களே தவிர, அதை வைரம் என்று அவர்களால் அறிந்து கொள்ள முடியாது.

“பட்டை தீட்டிய இரங்கோன் கமலத்தையும் பட்டை தீட்டப்படாத அசல் வைரத்தையும் வைத்தால், இரங்கோன் வைரத்தைத்தான் பாமரமக்கள் தேர்ந்தெடுப்பர். அசல் வைரத்தை அவர்கள் கண்டுகொள்ள முடியாது.

“அதைப் போலத்தான் இன்றைக்குத் தமிழ் ஆட்சி மொழியாகிவிட்டது என்று கூறுவது பட்டை தீட்டப்படாத வைரத்தைக் காட்டுவதாகும்.”

(நம்மாடு - 20.1.58)