விழுப்புரம்,
ஜன.19
“பொங்கல் திருநாள் போன்ற விழாக்கள் நாட்டில் தொடர்ந்து
நடைபெற வேண்டுமானால் தொழில்கள் பெருக வேண்டும். நம் நாட்டில்
உள்ள இரண்டு பெருந்தொழில்கள் உழவும் நெசவுமாகும். இந்த
இரண்டு மட்டும் போதுமா என்றால், வறுமையைப் போக்க அவை போதா.
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’
என்ற வள்ளுவரின் வாக்கு, ‘உழுபவன் வாழ்வான்’ என்றாகிறது.
ஆனால் உழுபவர்க ளெல்லாரும் இன்று வாழ்கிறார்களா என்பதையும்
நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டில் அந்த இரண்டு
தொழில்கள் உழவும், நெசவும் மட்டுமிருந்தால் போதாது, இத்தொழில்களில்
ஈடுபடாத ஏராளமான நடுத்தர மக்கள் வாழ பற்பல புதிய தொழில்கள்
வளர வேண்டும்.
பகிர்ந்தளிக்கும் அமைப்பு வேண்டும்
“இவ்வாண்டு நெல் அறுவடை கடந்த ஆண்டைவிட அதிகம் என்று சர்க்கார்
தரும் புள்ளி விவரம் பேசுகிறது. ஆனாலும், அரிசி விலை ஏறிக்கொண்டேதான்
இருக்கிறது. இதைப்போல் பற்பல பொருள்கள் கடந்த ஆண்டைவிட
அதிகம் உற்பத்தியாகியும் அவைகளின் விலைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனவே
தவிர, குறைந்தபாடில்லை. இன்றைய அரசியலில் இது ஒரு நூதனப்
பொருளாதாரமாக இருக்கிறது. இதிலிருந்து நாம் உணர்வது, உற்பத்தி
பெருகினால் மட்டும் போதாது. அவைகளை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கத்தக்க
ஓர் அரசியல் அமைப்பு வேண்டும். இப்படிப் பட்ட கருத்துகளை
இத்தமிழர் திருநாளில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டுமென்று
கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு 13.1.59 இல் விழுப்புரம் ‘தென் பகுதி ரயில்வே இன்ஸ்டிட்யூட்
சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாக்கூட்டத்தில் கருத்துமிக்கதோர்
உரையாற்றுகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அண்ணா அவர்கள் பேசியதின் சுருக்கமாவது:-
ரயில்வே தொழிலாளர்கள் நடத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள மிக்க மகிழ்ச்சிடைகிறேன். “பத்து அல்லது பதினைந்து
ஆண்டுகளுக்கு முன், இத்திருநாள், “சங்கராந்தி” என்ற அளவில்
குடும்பத்தோடு இருந்தது. பிறகுதான் ‘தமிழர் திருநாளாக’
நாட்டின் விழாவாக மாறிய பிறகுதான் தமிழர் சமுதாயத்திற்கு
ஒரு புதிய எழுச்சியைத் தரும் திருநாளாகியுள்ளது.”
துரைத்தனம் நமக்கு வேண்டும்
நாம் பெறும் இன்பம் அனைவரும் பெறவேண்டும் என்று இந்நன்னாளில்
அனைவரும் விரும்ப வேண்டும். “நம் மக்களுக்கு நுண்ணறிவு வளரவேண்டும்;
நுண்ணறிவு வளரவேண்டுமானால் கல்வி வேண்டும்; கல்வி வேண்டுமானால்
மனநிம்மதி வேண்டும்; மனநிம்மதிக்கு வருவாய் வேண்டும்; வருவாய்
பெறத்தொழில் வேண்டும்; தொழில் பெற அதைத் தரும் துரைத்தனம்
வேண்டும்; அப்படித் தொழில் தரும் துரைத்தனம் வேண்டும் என்று
குறிப்பிடும் போது தற்போதுள்ள துரைத்தனத்தை நீக்க வேண்டிய
ஆற்றல் நமக்கு வேண்டும்.
“நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் அவைகளை ஆதரிப்பது தமிழ்ப்
பண்பாகும்; அந்தப் பண்பை நாம் பெற வேண்டும். “உழவருக்கேற்ற
உரிமைகளைப் பெறவேண்டிய நல்ல எண்ணங்களை இத்திருநாளில் தமிழர்களின்
உள்ளங்களில் எழவேண்டும்.
“நாட்டு மக்கள் ஒரு பொது உணர்ச்சியைப் பெற வேண்டும் என்று
பெரிதும் விழைகின்றேன். அதைத்தான் நம் பெரியவர்கள், “யாதும்
உரை, யாவரும் கேளிர்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். ‘பழையன
கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினானே’ என்ற கருத்தையும்
இவ்விழாவில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிலை மாறி வழிகாண வேண்டும்
தமிழறிஞர்களை, இந்நன்னாளில் ஒன்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழர்களுக்கு இன்று எது தேவை என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க
வேண்டும். எல்லோரும் சாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக
வேண்டும் என்று கருதுகிறோம். இந்தத் தருணத்தில் அதற்கான
ஆதராங்களையெல்லாம் தமிழ் இலக்கியத்திலிருந்து சேகரித்துத்
தமிழ் மக்களுக்கு அளிக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
“இங்குப் பல குழந்தைகள் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகள்
பரிசுகள் பெற்றன, அக்குழந்தைகளையெல்லாம் உற்று நோக்கினேன்.அந்தக்குழந்தைகளில்
எத்தனை தங்கநகைகள் அணிந்திருந்தன. எத்தனை நல்ல உடல்வளம்
பெற்றிருந்தன என்பதை எண்ணும்போது, நிலைமை மன மகிழ்வு தரவில்லை.
இந்த நிலையெல்லாம் மாற நாம் வழிவகை காண வேண்டும்.
“பொங்கல் திருநாளின் சிறப்புக்குரியவர்களான உழவர்களின்
தொழிலைப் பற்றி மற்றவர்கள் அறியாமலும், மற்றவர்கள் அறிந்ததை
அவர்கள் அறியாமலும் உள்ள இரண்டுவித உலகைத்தான் இன்று நாம்
காண்கின்றோம். இந்த நிலை மாறி ஒவ்வொருவரும் மற்றவரைப்
பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
நிகழ்ச்சிகள்
விழுப்புரம் ரயில்வே காலனியின் திறந்த வெளியில் பொங்கல்
விழா சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது. அழகான அலங்கரிக்கப்பட்டிருந்த
மேடை, இவ்விழாவிற்கு ஒரு தனி எழிலைத் தந்தது.
விழுப்புரம் ரயில் நிலைய அதிகாரி நரசிம்மன், ரயில்வே சாணிட்டரி
இன்ஸ்பெக்டர் கே. கன்னியப்பன் ஆகியோர் விழாவிற்கு வந்திருந்த
அனைவரையும் வர வேற்றனர்.
துணை எஞ்சினீயர் சமியுல்லா விழாவைத் துவக்கி வைத்தார். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் லெ.ப.கரு இராமநாதன் (செட்டியார்)
தலைமை வகித்து, ‘பொங்கல் நன்னாள்தான் எல்லோருக்கும் மகிழ்வளிக்கும்
திருநாள்’ என்று பல மேற்கோள்களுடன் விளக்கிப் பேசினார்.
பின் தோழியர்கள் விமலா, கமலா, பிரபல்லா, விஜயா, காந்தா
ஆகியோர் இன்னிசை வழங்கினர்.
அன்று காலையில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர் குழந்தைகளின்
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு
டாக்டர் சோக்ராபி அம்மையார் பரிசளித்தார்.
இறுதியில், அண்ணா அவர்கள் மக்களின் ஆரவாரப் பேரொலிக்கிடையே
பேச எழுந்தார். அவருக்கு ரயில்வே தொழிலாளர் தலைவர் இராகவானந்தம்
கைத்தறித் துண்டு ஒந்றை அணிவித்தார்.
அண்ணா அவர்கள் தமிழர் திருநாள் குறித்துச் சீரிய கருத்துகள்
கொண்ட சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.
விழாக்குழு உறுப்பினர் நன்றி நவின்றார்.
(நம்நாடு - 19.1.59)
|