அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தேள்போல் கொட்டி மக்களை வாட்டி வதைத்தனர்

“காங்கிரசார் தேளாகக் கொட்டியிருக்கின்றனர்! நாட்டு மக்களை வாட்டியிருக்கின்றனர்! பொதுவாகத் தேள்கள் பேசுவது இல்லை. கொட்டிய தேள் பேசுமானால், ‘எப்படி என் சாமர்த்தியம்? நான் உன் காலின் கட்டை விரலில்தானே கொட்டினேன்? என் திறமை எப்படி என்று தெரிந்து கொண்டாயா? என்று தேள் கேட்குமானால், அது எவ்வளவு விசித்திரமாக இருக்குமோ, அவ்வளவு விசித்திரமாகத்தான் ‘மறுபடியும் ஐந்தாண்டிற்கு எங்களை ஆளவிடுங்கள்‘ என்று காங்கிரசார் கேட்பதும் இருக்கிறது!“

சென்னைக் கூட்டத்தில் அண்ணா வேண்டுகோள்!

“வரி அதிகம் போட்டோம்! விலைவாசியை உயர்த்தினோம் மக்களே! உங்கள் நிம்மதியை கலைத்தோம்! எவ்வளவு வாட்ட முடியுமோ, அவ்வளவு வாட்டினோம்! என்றாலும்எங்களுக்கே மறுபடியும் வாக்கு அளியுங்கள்‘ என்று கேட்கிறார்கள் காங்கிரசுக் கட்சியினர்.

“தேள்கடி திரும்பவும் வேண்டுமென்றால்,காங்கிரசுக்கு வாக்களியுங்கள், வரிச்சுமை உயரவேண்டுமானால், விலைவாசி மேலும் பெருகவேண்டுமானால், காங்கிரசுக்கே வாக்களியுங்கள். ‘இன்னும் ஏழு கோடிக்கு வரி போடப்போகிறோம்‘ என்று சொல்லிவிட்டுக் காங்கிரசார் வருகின்றனர்.“

“கொட்டப்போகிறேன்“ என்று சொல்லிவிட்டுத் தேள் வருகிறது. தேள்கடி தேன்துளி என்றுபட்டால், தேளை எடுத்துமேலேவிட்டுக் கொள்ளுங்கள்.

தேள் கடி வேண்டுமா? – வாக்களியுங்கள்!

“கடிப்பொறுக்க முடியாமல் நீங்கள் துன்பப்படும்போது மருந்துபோட நான்தான் வருவேன்“ என்று சென்னை தனியார்துறை பஸ் தொழிலாளர்கள் 4.2.62 இரவு தண்டையார்பேட்டையில் நடத்திய நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள்.

சென்னை – பெரம்பூர் இரயில்வே தொழிலாளர்கள் சார்பாக தேர்தல் நிதி ரூ.1,870 அளிக்கப்பட்டது.

(நம்நாடு - 5-2-62)