அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தேரோட்டத்திற்கு முட்டுக் கட்டையும் தேவைதான்

திருவள்ளுவர் நகரில் இதுவரை அழகிரி படிப்பகம் என்ற பெயரில் இயங்கி வந்த அமைப்பு, 20.6.61 அன்று 10வது வட்ட உட்கிளையாக அண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது தேர்தல் நிதியாக ரூ.370 அளிக்கப்பட்டது. திருவள்ளுவர் வள்ளுவர்புரம். அன்று வண்ணக்கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது.

மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் தோழர் பி.நெடுஞ்சேரன் தலைமையில் துவங்கிற்று. நகரத் துணைச் செயலாளர் கிருஷ்ணன், எம்.எஸ்., கே.ஆர்.சொக்கலிங்கம், நகர மன்ற உறுப்பினர் நா. வணங்காமுடி, நகரச் செயலாளர் ஏ.கோவிந்தசாமி, இரா.வாசன், செய்யூர் சுந்தரம் ஆகியோர் கழகக் கொள்கைகளை விளக்கிப் பேசினர்.

பின் தோழர் எஸ்.அப்பர் சுந்தரம் எம்.ஏ.பிடி. அவர்கள் தி.மு.கழகம் ஆற்றிய தொண்டுகளை விளக்கினர். சட்டச் செயலாளர் து. எத்திராசன் திராவிடம் பிரிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தேவந்த வாக்கம் தோழர் கசேந்திரன் இயக்கப்பாடல்கள் இசைத்தார்.

மாவட்டச் செயலாளர் சி.வி.எம்.அண்ணாமலை எம்.சி., தேர்தல் நிதி குவிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இறுதியில் அண்ணா அவர்கள், பேச எழுந்ததும், பல்வேறு கிளைக் கழகங்களின் சார்பிலும், சிற்றூர்க் கிளைகள், தொழிலாளர் சங்கச் சார்பிலும் கைத்தறி ஆடைகள், மலர் மாலைகள், தேர்தல் நிதி அன்பளிப்புகள் அளிக்கப்பட்டன. திருவள்ளுவர் 10ஆவது வட்ட அழகிரி படிப்பகத்தின் சார்பில் ரூ.370 தேர்தல் நிதியை அண்ணா அவர்களிடம் திரு.எஸ்.அப்பர் சுந்தரம் அளித்தார். வட்டச் சார்பில் அளித்தத் தொகையாவும் சேர்ந்து அத்தொகை ரூ.457.98 ஆக உயர்ந்தது.

பாதியிலே விட்டுவிட்டார்கள்

அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது –
“சீமந்தம் முடிந்தவுடன் காரியம் முற்றுப் பெற்றதாக யாரும் சொல்லிவிட முடியாது, அடுத்து, குழந்தை பிறக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் காரியம் முடிந்துவிட்டது என்றும் சொல்லிவிட முடியாது. அதற்கப் பிறகே வாழ்வு தொடங்குகிறது. அதைப்போல், சீமந்தமாகிய தேர்தல் நிதி அளிப்பை நடத்தி விட்டீர்கள், அடுத்துத் தேர்தல் என்ற குழந்தை பிறக்க வேண்டும். பிறந்த பின்பும் நல்ல வகையில் வாழ வேண்டும்.

“கழகமாகிய தேரை இழுக்க வந்தவர்கள் பாதியிலே விட்டுவிட்டுக் காரிலே சென்று விட்டார்கள். எனவே, தேசை அதன் நிலையிலே நிறத்த வேண்டிய பொறுப்பு நம்மைச் சேர்கிறது. தேரை நிறுத்தக் காங்கிரசுக்காரர்கள் முட்டுக்கட்டையைத் தருகின்றார்கள். நான் அவர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், ‘முட்டுக்கட்டை இல்லாவிட்டால் தேர் மிக வேகமாக ஓடும், வேகமாக ஓடினால் ஊருக்கே ஆபத்து, ஆக கழகமாகிய தேர் நின்று நிலைத்து நிதானமாக – அமைதியாகச் செல்ல உங்கள் முட்டுக் கட்டையைத் தாருங்கள்‘ என்பதுதான்“.

(நம்நாடு - 12.7.61)