அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தேர்தலோடு முடிந்துவிடுவதல்ல நமது பணி

சென்னை, ஜன.20, நேற்று மாலை சென்னை 70ஆவது வட்டத் தி.மு.க. சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற பொங்கல் விழா – மேயல் துணை மேயர் பாராட்டுக் கூட்டத்தல் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு –

“இத்தனை நாளும் மேயரைப் பாராட்டுவதற்காக நடைபெற்ற விழாவைவிட இன்றைக்கு இங்கே நடைபெறும் விழாவில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் இத்தனை நாளும் மேயரை மற்றவர்கள் பாராட்டினார்கள். இன்று இந்நாள் மேயரை, முன்னாள் மேயர் !அ.பொ.அரசு) வரவேற்றுப் பாராட்டுகிறார். ‘இனி எந்நாளும் நாம் தான் மேயர்‘ என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது இந்த விழா என்று எல்லோரும் பெருமை அடையலாம்.

“இப்படியெல்லாம் ஒரு விழா நடக்கம் என்ற வெட்ட வெளியில் கொட்டும் மழையில் இராயபுரத்தில் நமது இயக்கம் துவக்கிய நேரத்தில் மற்றவர்கள் எண்ணியிருக்கக் கூடும். நான் எண்ணியதில்லை. “நாட்டில் நம்மை நடமாடவிடமாட்டார்கள். நாம் தப்பிப் பிழைக்க முடியாது. பத்திரிகைகளின் இருட்டடிப்பையும் பண நெருக்கடியையும் சமாளிக்க முடியாது எனப் பயந்தன். ஆனால் இன்று பொதுமக்கள் எத்துணைச் சிறப்பான ஆதரவைத் தந்து நம் கழகத்தை வளர்த்திருக்கிறார்கள் என்ற பெருமையுணர்ச்சி ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.

அரசியல் கட்சிக்குப் பல கட்டங்கள்

“பல காலமாக ஒரு வளர்ந்த கட்சியில் இருந்தவர்கள் புதிதாகக் கட்சி துவக்கியவரைப் பார்த்து, ‘உனக்கு ஒரு கட்சியா?‘ என்று கேட்பார்கள். அதன் பிறகும் அந்தக் கட்சி வளர்ந்தால் ‘இன்னும் எத்தனை நாளைக்கு வளரப்போகிறாய்?‘ என்பார்கள். அதன் பிறகும் வளர்ந்தால், ‘இன்னுமா அந்தக் கட்சி‘ என்பார்கள். மேலும் வளர்ந்தால் ‘அந்தக் கட்சி என்ன ஆகப்போகிறது பாருங்கள்‘ என்று ஆரூடம் கூறுவார்கள். அதையும் தாண்டி வளர்ந்தால் அந்தக் கட்சியும் இருந்து விட்டுப் போகட்டும்‘ என்பார்கள். இப்படி அரசியல் கட்சிகளுக்குப் பல கட்டங்கள் உண்டு. அவற்றில் நாம் இப்பொழுது ‘சாபம்‘ பெறும் கட்டத்தில் இருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டு மேயர் தேர்தலின் போதும், ‘என்ன ஆகப்போகிறார்கள் பாருங்கள்‘ என்று சாபம் விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். “நண்பர் முனுசாமி மேயராக வரவேண்டும் என்று நான் விரும்பியதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் நமது முனுசாமி அவர்கள், மாநகராட்சியி லேயுள்ள ‘நெளிவு சுளிவு‘ பற்றியும் அங்கே என்னென்ன திட்டங்களை எப்படியெப்படி நிறைவேற்றலாம் என்பதையும் உருவாக்கிக் கொண்டிருப்பவர். அவர் மேயரானால் எண்ணங்களை நடைமுறைக்குக் கொண்டு வர வாய்ப்பிருக்கும். அதனால் கழகத்திற்கும் பெருமை கிடைக்கும் என்று எண்ணினேன். எனவே அவர்மேயராக வந்ததில் நான் மகிழச்சியடைகிறேன்.

பேராசைத் திட்டம்

“நாம் மாநராட்சி மன்றத்திலே வெற்றியடைந்ததோடு திருப்தி அடையவில்லை. சட்டமன்றத்தோடு முடிந்துவிடும் காரியமல்ல நாம் மேற்கொண்டிருக்கிற பணி. நம்முடைய இலட்சியம் பெரியது. அதைப் ‘பேராசைத் திட்டம்‘ என்று கூட உலகத்தினர் சொல்லுவார்கள்.

“நாட்டை மீட்க எண்ணியிருக்கிறோம் நாம். நாட்டை மீட்பதற்காக நடத்தப்பட்ட பல இயக்கங்கள் உலகத்தில் சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டிருக்கின்றன. தூக்கு மேடைக்குப் பலர் அனுப்பப்பட்டிருக்கின்றன. பல குடும்பங்கள் கலைக்கப்பட்டிருக்கின்றன. கொந்தளிப்புகள் நடந்திருக்கின்றன. சிலர் ‘தேசாந்திரி‘களாகத் திரிந்திருக்கின்றனர். இத்தாலி நாட்டை மீட்கப் பாடுபட்ட, கரிபால்டி போன்ற மாவீரர்கள் பல கஷ்டநஷ்டங்களை ஏற்றிருக்கின்றனர். இன்னும் சிலர் உடலுறுப்புகளையும் ஒவ்வொன்றாக இழந்திருக்கின்றனர்.

“இதையெல்லாம் எண்ணும்போது, கஷ்டநஷ்டம் இல்லாமல், பூப்பறிப்பது போன்று, மேயர் பதவியை வெகு எளிதில் பெற்றிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் பின்னாலே பெற வேண்டியவற்றிற்கு மேயர் பதவி ஓர் அச்சாரம்.

ஏகாதிபத்தியவாதிகள் உணரவேண்டும்

“பயங்கரப் போராட்டம் நடத்தியேனும் விடுதலை பெற்றே தீரவேண்டும் என்ற கட்டம் வரும். அப்போது அடிபட்டு ‘ஐயோ அப்பா‘ என அலறி துடித்துத் துடித்துச் சாகும் நிலை பிறக்கலாம். அருமைத் தம்பியைப் பார்த்து மகிழ்ந்தேன். அவன் களத்திலா மாண்டான்? என்று அழும் அண்ணனும், அண்ணனை இழந்தேனே என்று தம்பியும், தந்தையைப் பறிகொடுத்த தனையனும் தவிக்கும் நிலை ஏற்படலாம். இப்படி இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஆன பிறகுதான் நாடு கிடைக்கும்.

“அண்ணனின் நாடான !இராவணனின்) இலங்கையை பறித்துத் தம்பிக்கு !விபீடணனுக்குக்) கொடுப்பதற்கே இராமன் பெரிய பயங்கரச் சண்டை செய்த பிறுகுதான் முடிநத்து என்றால், நம் உரிமை அரசை – விபீடணனைப் போலல்ல – நமக்கே உரிமையான நாட்டை நாம் மீட்பதற்கு எப்படிப்பட்ட தியாகங்ள் புரிந்தாகவேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

“கூட்டங்களைப் பார்த்தா முடிவு செய்ய வேண்டும்?

“உலக நாட்டினர் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி ஒன்றதான். ‘திராவிடம் என்கிறீர்கள் அதற்கு வரலாற்று ஆதாரத்தைக் காட்டுகிறீர்கள், ‘வடநாட்டான் ஆளுகிறான்‘ என்கிறீர்கள். அதற்கு அரசியல் சட்டத்தை காட்டுகிறார்கள். இன்னும் ஆதாரங்கள் பலவற்றை எடுத்துக் காட்டுகிறீர்கள். உங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கும் பொதுக் கூட்டங்களை ஆதாரமாக காட்டுகிறீர்கள், அமெரிக்காவிலிருக்கும் நாங்கள் சிங்கண்ணச் செட்டித் தெருவில் நடக்கும் பொதுக்கூட்டத்தையும், சிவகங்கையில் நடக்கும் மாநாட்டையும், காட்பாடியில் நடக்கும் கூட்டத்தையும் வந்தா பார்க்க முடியும்?‘ என்று கேட்கிறார்கள்.

“உருப்படியாக அவர்களுக்கு நமது இலட்சியத்தை எடுத்துக் காட்ட வேண்டும். அதற்காக ஒரே அடையாளம் தான் சட்டமன்றமும், பாராளுமன்றமும்.

“காட்டுங்கள் உங்கள் ஆதாரத்தை என்று உலகம் கேட்கிறது, ஊராரும், காமராசரும், நேரும் கேட்கிறார்கள் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை, உலக நாட்டுத் தலைவர்கள் கேட்கிறார்கள்.

பொதுத் தேர்தல் – அடையாளம்

“சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் எனக்கு நண்பர்கள் ஒரு புதுமையான பேனாவை வாங்கித் தந்தார்கள். அந்தப் பேனாவைத் திறந்து எழுத ஆரம்பித்தால், அதில் ஓர் அழகிய மங்கை நடனமாடுவது போலத் தெரியும். அதை நான் ஆசையோடு வாங்கிப் பத்திரமாக வைத்துக் கொண்டேன். பின்னர் திண்டிவனம் வந்ததும் அதைத் திறந்து எழுதிப் பார்த்தபோது அந்த ்அழகிய மங்கையின் உருவம் காணவில்லை. அந்த மங்கையின் உருவம், கடையிலே பேனாவைப் பார்த்தபோது இருந்தது, அது கடையோடு நின்றுவிட்டது – கடைசிவரை வரவில்லை.

“மக்களோடு நாம் கடைசிவரை வரவில்லையானால் உபயோமற்ற பேனாவை நான் திண்டிவனத்தில் வீசி எறிந்துவிட்டு வந்ததுபோல் மக்களும் நம்மை இடையிலே கைவிட்டு விடுவார்கள். அதற்கு அடையாளமாகத்தான் பொதுத் தேர்தல் வருகிறது.

பலவீனத்தால் – பலவீனத்தைப் புரிந்து கொண்டதால்

“அன்றைக்குச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறேன். அதில் நான் இம்மியளவும் மாறமாட்டேன். நாட்டு விடுதலைக்குத் தேர்தல் ஒரு வழி. இன்னொரு வழி விடுதலை கிட்டும் வரை கொந்தளிப்புத்தான் இருக்கும். மக்கள் வரி கட்ட மாட்டார்கள். பயங்கரச் சூழ்நிலை உருவெடுக்கும். இந்த இரண்டு வழிகளில் அது வேண்டுமா இது வேண்டுமா என்றால் இரண்டாவதை நான் விரும்பாதவன். என் பலகினத்தாலோ அல்லது உங்கள் பலகினத்தைப்புரிந்து கொண்டிருப்பவன் என்பதாலோ நான் பலாத்கார வழியை விரும்பவில்லை.

“பாருக்கும் நம் செல்வாக்கைக் காட்ட சட்டமன்றமே வழியாகும். ஒரு பத்ததாண்டுக்கு முன்பெல்லாம் தூத்துக்குடியிலும், கோயில்பட்டியிலும், கள்ளக்குறிச்சியிலும் நான் பேசினால் சென்னையில் கழகம் எப்படி இருக்கிறது மாநகராட்சியி நாம் வருவோமா- என்று கேட்பார்கள். நிச்சயமாக நாம் வருவோம்‘ என்று நான் சொன்னால் அதைக் கேட்டு பெருமிதத்தோடு, ‘வாழ்க தி.மு.க. என்று முழங்கிக் கைத்தட்டுவார்கள். அவர்கள் தைத்தட்ட தட்ட என் அடிவயிறு கலங்கும். ஆனால் இப்பொழுதுதெல்லாம் நான் அங்கே போனால் அவர்கள் என்னைக் கேட்பதில்லை, நான்தான் அவர்களைப் பார்த்துப் பெருமையோடு சென்னை எப்படி, பார்த்தீர்களா? என்று கேள்வி கேட்கிறேன். சென்னையில் அசைக்க முடியாதபடி நாம் வளர்ந்திருக்கிறோம். இதை மேயர் வரவால் நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம்.

பார்த்தாலே புரிந்து கொள்வார்கள்

“ஆனால் நாடு முழுவதிலும் நடக்கம் தேர்தலில் நமக்கு வெற்றி கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால் மற்றவர்கள் நம்மைப் பார்த்து, ‘உங்களுக்கு என்ன ஆதரவு இருக்கிறது?‘ என்று கேட்கத் தேவை இராது, பார்த்தாலே புரிந்து கொள்வார்கள்.

“கச்சேரி, நல்ல கச்சேரியா என்று தெரிந்து கொள்ள பாட்டை ரசிப்பவர்களின் தலை ஆடினாலே போதும். தலை ஆடவேண்டிய நேரத்தில் ஆடினால் கச்சேரியின் சிறப்பு தானாகத் தெரியும். ஏதோ நானும் ரசிக்கிறேன் என்று காட்டிக் கொள்ளத் தேவையில்லாதபோதெல்லாம் தலையாட்டுபவர்களை நான் சொல்லவில்லை. உண்மையான ரசிகத்தன்மையோடு ரசிப்பவர்களின் தலை பாட்டின் தரத்துக்குத்தக்கபடி தானே ஆடும். அதைப்போல, அரசியல் நடத்துகிற நாம் நாட்டு மக்கள் நம் கருத்தை ஏற்றுக் கொண்டார்களா எனக்காட்ட கூட்டம் மட்டும் போதாது. போன தடவை தேர்தலில் 17 இலட்சம் வாக்குகள் பெற்றோம். வருகிற 1962 தேர்தலில் 70 இலட்சம் வாக்குகள் பெற்றோம் என்பதைக் காட்டினால் நேரு இப்படியா பேசுவார்? கக்கனும் மற்றவர்க்ளும் இப்படியா உபதேசம் புரிவார்கள்?

செய்ய வேண்டியதைச் செய்தால்...

நாம் செய்ய வேண்டியதைச் செய்தால் நடக்க வேண்டியது தானே நடக்கும்.

“வீட்டிலே தாய்மாார்கள் பால் கொதிக்க வேண்டுமானால் அடுப்பிலே விறகை உள்ளே தள்ளுவார்கள். கொதி அடங்க வேண்டுமானால் வெளியே இழுப்பார்கள். பால் கொதிப்பதும் அடங்குவதும் தாய்மார்களின் கையில்தான் இருக்கிறது.

“அதைப்போல அரசியலில் அடுப்பில் பாலை ஏற்றி வைப்பது எங்கள் வேலை. அது பொங்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது. வெளியே விறகை இழுப்பதும், உள்ளே தள்ளுவதும் உங்கள் கையில் இருக்கிறது. பொங்க வைக்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“உலகம் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறது. உலகப் பேரவையான ஐ.நா.சகையில், என்றைக்காவது ஒருநாள் யாராவது ஒருவர் திடீரென்று நமது திராவிடத்தைப் பற்றி்க் கேட்பார். எதிர்பாராத இடத்திலிருந்து நமக்கு ஆதரவு கிடைக்கலாம். ஏதாவது ஒரு பிரச்சனையில் இந்திய நாட்டுப் பிரதிநிதியைப் பார்த்து வேறொரு நாட்டுப் பிரதிநிதி நீங்கள் மட்டும் என்ன யோக்கியர்கள்? திராவிடத்தை நீங்கள் அடக்கி வைத்திருக்க வில்லையா? என்று கேட்கக்கூடும்.

உங்கள் நாட்டில் ஜாதிபேதம்

“இப்படிக் கேட்கக்கூடும் என்பதற்கு ஓர் உதாரணம் கூறுகிறேன். ஒரு சமயம் ஐ.நா. பேரவையில் தென்னாப்பிரிக்க நிறவெறி குறித்து இந்தியப் பிரதிநிதி பேசியதைத் தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி எதிர்த்துப் பேசுகையில் ‘நிறபேதம் எங்கள் நாட்டில் மட்டும்தானா இருக்கிறது, உங்கள் நாட்டில் ஜாதிபேதம் இல்லையா?“ என்று கேட்டார்.

“யாரும் எதிர்பாராத வகையில் அவர் இதைக் கேட்டதும், இந்தியப் பிரதிநிதி அதை மறுக்க முடியவில்லை. ‘எங்கள் நாட்டிலும் சாதிபேதம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதைச் சட்ட்த்தின் மூலம் போக்கி வருகிறோம் என்றுதான் அவரால் பதிலளிக்க முடிந்தது.

“இதேபோல, அல்ஜீரியாவைப் பற்றி இந்தியப் பிரதிநிதி ஒரு 4 தடவைப் பேசினால் பிரான்சு நாட்டுப் பிரதிநிதி சும்மாயிருப்பார். ஐந்தாவது தடவைப் பேசினால் அதன் பிறகு அவர் கேட்பார் – நீங்கள் திராவிட நாட்டை அடக்கி வைத்திருக்கும்போது நாங்கள் அல்ஜீரியாவை அடக்க வைத்திருப்பதில் என்ன தவறு? என்று. என்றைக்காவது ஒருநாள் பட்டென்று ஒருவர் எழுந்து இப்படிக் கேட்டு விடுவார். இது ஒன்றும் நடவாத காரியமல்ல? இதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும்.

உழைத்தால் வெற்றி கிடைக்கும்

“இந்தியாவில் உள்ள சாதிக்கொடுமை பற்றிய சுவரொட்டியை நாம் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பவில்லை, சாதியைப் பற்றி புத்தகங்களை அனுப்பவில்லை. அவர்க்ளுக்கு இங்குள்ள சாதிப் பிரச்சனை தெரியவே தெரியாது. ஏதோ காற்றுவாக்கில் கேள்விப் பட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

“அதைப்போல, நம் திராவிட நாட்டுப் பிரச்சனையையும் வெளி நாட்டினர் காற்றுவாக்கில் கேள்விப்பட்டால் போதும்.

“எனவே அரசியலில் உரிய காலம் வரும் வரை நமது இலட்சியத்தை அடைய ஒரு வழியாகக் கருதிச் சட்டசபையை நிரப்புங்கள். சட்டசபையில் இருக்க நமக்கு அதிகத் திறமை இல்லை என்று கருதினால், அதில் நம்பிக்கை இல்லை என்றால் அத்தனைப் பேரும் சிறைச் சாலைகளை நிரப்புங்கள். உழைத்தால் வெற்றி கிடைக்கும்.. அதற்கு உன்னதமான சான்று நமது மேயரும் துணை மேயரும்தான்.

நல்ல சமயமடா – நழுவவிடலாமோ?

“முன்பு, செம்புதாஸ் தெருவிலுள்ள ஒரு பெரிய கட்டிடத்தின் 4வது மாடியில் நானும், மதியழகனும் செழியனும் தங்கியிருந்த அறைக்கு ஒரு நாள் நமது முனுசாமி அவர்கள் வந்து, ‘நான் மாநகராட்சித் தேர்தலில் தோற்றுவிட்டேன் அண்ணா‘ என்றார். அதைக் கேட்டு நான், ‘பரவாயில்லை. நானும்தான் முன்பு இதே தேர்தலில் தோற்றிருக்கிறேன். அதனால் என்ன? என்று கூறினேன். அப்பொழுது தோற்றவருக்குத் தோற்றவர் ஆறுதல் கூறும் நிலை இருந்தது. இன்று மேயராக வெற்றிபெற்ற முன்னாள் மேயர் அரசு அவர்களே, வெற்றிபெற்ற இந்நாள் மேயர் முனுசாமியை ஆரத்தழுவி வரவேற்பதைக் காண்கின்றோம்.

“எனவே, ‘நல்ல சமயமடா, இதை நழுவ விடலாமோ‘ என்ற தண்டபாணி தேசிகர் பாட்டை நினைவுபடுத்தி ‘இந்த நல்ல சமயத்தை நழுவ விடாதீர்கள். வருகிற பொதுத் தேர்தலில் உங்கள் பேராதரவைத் தரவேண்டும்‘ என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘மேயர் முனுசாமி அவர்களையும் அவருக்குத் துணையாக இருக்கும் துணை மேயர் செல்வராசன் அவர்களையும் பாராட்டுகிறேன்.

(நம்நாடு - 20, 21.1.61)