அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தேர்தல் நமக்கு உழவு மற்றவர்க்கு அறுவடை!

சென்னையில் அண்ணா விளக்கம்

“தொழிலாளர்கள் வியர்வை – முதலாளிகள் பன்னீர்! நான் பன்னீரை விரும்பவில்லை, பன்னீர் சிலகாலம் இருக்கும், ஆனால் வியர்வை வழிந்து எழுந்தால் ப்னீர் மாறியே தீரும் என்பதை நான் வரலாற்றில் படித்து உணர்ந்திருக்கிறேன்.“

“இரண்டு மாதங்களுக்கு முன் நான் பம்பாய்க்குச் சென்றிருந்தேன், அங்கே எனக்கு ஓர் பரிசைக் கொடுத்தார்கள், அங்கு நடைபெற்றக் கூட்டம் ஒன்றிலே அதைத் தருவதற்காக எடுத்து வந்தனர், ஓர் அழகான பலகையில் வெள்ளியாலான உருவம் இருந்தது, அது தொலைவிலே இருந்தபடியால் என்ன பொருள் என்று துலக்கமாகத் தெரியவில்லை, அருகில் கொண்டு வந்த பின்னர்தான், அது என்ன பொருள் என்று தெரிந்தது“.

மனிதனுடைய இதயத்தை வெள்ளியால் உருவாக்கி “அண்ணா, எங்கள் இதயத்தை அளிக்கிறோம்“. எனக்கூறி, அதைஎன்னிடம் தந்தார்கள். அன்றைய தினம் நான் அடைந்த மகிழ்ச்சிக்குப் பின் இன்றுதர்ன அந்த அளவுக்கு மகிழ்ச்சியடைகிறேன்.

வெற்றி நம்மைத் தேடிவரும்!

தொழிலாளர்கள் ஆதரவளிக்கையில் வெற்றியைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை, அது நம்மைத் தேடி வருகிறது.

“காங்கிரசுக்கு முதலாளி ஓராயிரம் ரூபாய் தருகிறார் என்றால், அதற்குப் பதில் அவர், பத்தாயிரம் ரூபாய் எதிர்பார்க்கிறார் என்றுபொருள்! ஒரு இலட்சத்தைத் தருகிறார் என்றால், பத்து இலட்சத்தை எதிர்பார்க்‘கிறார் என்ற பொருள்! கெண்டையைப் போடுவது விராலை இழுப்பதற்கு ஆகும்! கருவாட்டை வைப்பது எலியைப் பிடிப்பதற்காகும்!“

“ஐநூறு ரூபாய் தந்த தொழிலாளர்கள் எதையாகிலும் எதிர்பார்க்கிறார்களா என்றால், அதுதான் இல்லை! நானும் அவர்களுக்கு எதையும் திருப்பித்தர முடியவில்லை!“

தியாக உணர்வுடன் அளிக்கப்பட்ட நிதி!

“காங்கிரசுக்காரரிடம் ஒரு ரூபாய் தந்தால் அது ஒன்பது ரூபாயாகத் திரும்பிவரும்! என்னால், நல்லெண்ணத்தைத் தவிர அன்பைத்தவிர உடன் பிறந்தான் என்ற உள்ள உணர்ச்சியைத் தவிர என்து உள்ளத்திலே உள்ள இன்பத் திருநாட்டு விடுதலைக்கான கருத்துக்களைத் தவிர, வேறு எதையும் பதிலுக்குத் தர முடியாது“ என்று தனியார் துறை பஸ் தொழிலாளர்கள் சார்பில் சென்னை- தண்டையார்பேட்டையில் 4.4.62இல் நடைபெற்ற நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்,ஆற்றிய உரையின் சுருக்கமாவது –

தொழிலாளர்கள் தி.மு.கழகத்துக்கு நிதியளிப்பது பெருமைக் குரியதாகும் மகிழ்ச்சிக்குரியதாகும் அமைந்துள்ளது. அதைஅதிகமாக்கும் வண்ணம், நான் பஸ் முதலாளியை எதிர்த்துப் போட்டியிடுகிறேன் என்பதையும், பஸ் தொழிலாளர்களுக்காக வாதாடத்தகுந்தவர்கள் தி.மு.கழகத்தினர்தான் என்பதையும் உணர்ந்துதான், எனக்கு இந்த நிதியைத் தந்திருக்கின்றனர் என எண்ணுகிறேன். அவர்கள் தியாக உணர்வோடு அளித்த இந்த நிதி பாராட்டுக்குரியது.

நாடு எந்த வழியில் திரும்புகிறது என்பதையும் நாட்டில் உள்ளோர் எவ்வழி வருகின்றனர் என்பதையும் அறிந்து மகிழ்கிறேன்.

சட்டமன்றத்தில் வாதாடுவோம்!

பஸ் தொழிலாளர்கள் நாட்டு வாழ்விலே நாட்டம் கொண்ட வர்கள், தி.மு.கழகம் அவர்களுக்காகச் சட்டமன்றத்திலே வாதாடியிருக்கிறது.

பொதுவாக நாட்டு மக்களின் எதிர்காலத்துக்கான நல்ல திட்டங்களையும், குறிப்பாகத் தொழிலாளர் நல்வாழ்வுக்கான திட்டங்களையும் தி.மு.கழகம், சட்டமன்றக் கூட்டத்தில் எடுத்துப் பேசியிருக்கிறது. அங்கு மட்டுமல்ல – வெட்டவெளிக் கூட்டங்களிலும் விளக்கிக் காட்டியிருக்கிறது.

தொடர்ந்து தி.மு.கழகம் தொழிலாளர்களுக்காகப் பேசியிருக்கிறது. ஆகையால், அவர்கள் கழகத்திற்குக் கொடுக்கின்ற பணம் 23 ஆம் தேதி இரவு வீட்டுக் கதவைத் தட்ட வாக்காளர் கையில் தருவதற்குப் பயன்படாது.

திருத்தொண்டின் அங்கம் – தேர்தல்!

படாதபாடடெல்லாம்பட்டு, வடக்கை எதிர்க்க வேண்டிய நிலையில், தாய்த்திருநாட்டை மீட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அந்தத் திருத்தொண்டில் ஓர் அங்கம்தான் இத்தேர்தல்!

தேர்தல் மற்றக் கட்சிக்காரர்களைப் பொறுத்தவரை அறுவடையாகும்! தி.மு.கழகத்துக்கோ, அது ஓர் உழவுதான்! காடு கரம்புகளைத் திருத்துகின்ற உழவு என்ற முறையில்தான் நாம் தேர்தலில் ஈடுபட்டிருக்கிறோம். இதில் உடனடியாகப் பலன் கிடைக்கும் என்றெண்ணவில்லை!

நல்லவர்கள் ஆட்சி வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் நல்லாட்சி வேண்டுமென்றால், பீதியில்லாத ஆட்சி – அச்சத்தை மூட்டாத ஆட்சி – அலுப்பைத் தராத ஆட்சி – நிம்மதியான வாழ்க்கை அளிக்கும் ஆட்சி வேண்டுமென்று பொருள்.

இன்று-இவற்றைத் தராத காங்கிரசு ஆட்சியை ஐந்தாண்டாகிலும் ஒதுக்கி வைக்காவிட்டால், ‘இந்த மக்களுக்கு, எங்களைத் தவிர வேறு வழியில்லை என்றுதானே காங்கிரசார் சொல்வார்கள்!

சனநாயகக் காலத்தில் இருக்கலாமா?

இப்படி ஓர் ஆட்சி மாற்றப்படாது இருக்கலாமா? இந்த நிலை, ‘பாதுஷாக்கள் காலத்தி்லே இருக்கலாம், பட்டத்து அரசர் கள் காலத்திலே இருக்கலாம், சர்வாதிகாரிகள் காலத்திலே இருந்து தான் தீரும், ஆனால், சனநாயகக் காலத்திலே இருக்கலாமா?

நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களும், பொதுத் தொண்டிலே பயிற்சி பெற்றோரும்தான் எங்கள் சார்பிலும், நிற்கிறார்கள்!

தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள்ளவேண்டும்! நூலைப் பார்த்துச் சேலை வாங்கவேண்டும்! எங்கள் கொள்கையைப் பார்த்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள்.

அப்படிப்பட்ட கொள்கையின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன் – தி.மு.கழகம் அதிக இடங்கள் பெற்றுச் சட்டமன்றத்திற்குச் செல்லுமானால் தொழிலாளர் நல்வாழ்வுக்கான திட்டங்களைத் தீட்டும்.

மூன்றாவது திட்டத்தில் 12 கோடி போதுமா?

மூன்றாவது திட்டத்தில் தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுளள் தொகை ரூ.5,750 கோடி அதில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளது பன்னிரண்டே கோடி! ரூ.5 கோடி கிண்டியிலே அறுவை மருத்துவக் கருவிகள் தொழிற்சாலைக்கும், ரூ.6 கோடி பிலிம் சுருள் தொழிற்சாலைக்குமாகத்தான் – இப்பன்னிரண்டு கோடி ரூபாய் – இது போதுமா?

காங்கிரசுக்கு டாட்டா கம்பெனியார் ரூ.20 இலட்சம் தேர்தல் நிதியாகத் தந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன காங்கிரசு இலட்சியத்திலே நம்பிக்கை வைத்தா அத்தொகையைத் தந்திருக்கிறார்கள்?

இன்று எனக்கு 500 ரூபாய் கொடுத்த இத்தோழர்களே, நாளையதினம், ‘மோட்டாரை விட்டுக் களத்தில் இறங்குங்கள்‘ என்றால், அதற்கும் தயாராய் உள்ளவர்கள்!

(நம்நாடு - 7-6-62)