அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தலைகளைத் தரவேண்டாம் உங்கள் இதயங்களைத் தாருங்கள்‘

முதுகுளத்தூர் வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணா கனிவுரை

அண்ணா அவர்களின் வருகையை முன்னிட்டு மாபெரும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் ஏற்பாடாகியிருந்தன. முதுகுளத்தூர் வட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாலை 3 மணிக்கே ஊர்வலம் ஏற்பாடாகியிருந்த இடத்திற்குக் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்தவண்ணமிருந்தனர்.

பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அண்ணா அவர்கள், திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் அன்பில் தருமலிங்கம், இராமநாதபுர மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.எஸ்.தென்னரசு மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் மாங்குடி மதியழகன் ஆகியவர்களுடன் அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு வந்து சேர்ந்தார்கள். முதுகுளளத்தூர் வரலாற கண்டிராத மாபெரும் மக்கள் கூட்டம் ‘அறிஞர் அண்ணா வாழ்க‘ ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்ற ஒலிமுழக்கத்தை எழுப்யிது.

வரவேற்பு நிகழ்ச்சி

தோழர் அன்பில் தருமலிங்கம் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

வட்டத்திலுள்ள கிளைக்கழகங்கள், சார்பு மன்றங்களின் சார்பிலும், மற்றும் தனிப்பட்டோர் சார்பிலும் ஏராளமான கைத்தறி ஆடைகள் அண்ணா அவர்களுக்கு அணிவிக்கப்பட்டன. சில கிளைகள் மாலைகளுக்குப் பதில் பணம் தந்தன. வட்டச் செயலாளர் செ. அழகர்சாமி அண்ணா அவர்களுக்கு பெரியதோர் மலர்மாலை அணிவித்து வட்டக் கழகச் சார்பில் வரவேற்பு இதழ் வாசித்தளித்தார்.

அண்ணா அவர்கள் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து சிறிது நேரம் பேசிவிட்டு நபிகள் நாயகம் விழாவில் கலந்து கொள்ளச் சென்றார்கள்.

முதுகுளத்தூர் இவ்வளவு பெரிய கூட்டத்தை இது வரை கண்டதில்லை. உணவு விடுதிகளிலோ கடைகளிலே உண்பதற்கு எந்தவிதப் பொருளும் கிடைக்கவில்லை. பொதுமக்கள் போதிய வசதி இல்லாதிருந்தும் மாலை 3 மணியிலிருந்து இரவு 12 மணிவரை பொறுமையுடனிருந்து அண்ணா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய பேச்சுகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.

முதுகுளத்தூர் முன்னேறிவிட்டதா?

அண்ணா அவர்கள் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசியதாவது-
“மிகவும் உற்சாகமான முறையில் மாலைகள் அணிவித்தும் கைத்தறியாடைகள் அணிவித்தும் என்னை வரவேற்ற உங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

வரறேப்புப் பத்திரத்தில் சில முறைகளைச் சுட்டிக்காட்டி ‘அதை நீக்குவதற்கு அரசினரிடம் வற்புறுத்த வேண்டும் என என்னைக் கேட்டுக் கொண்டீர்கள். ‘முதுகுளத்தூர் பகுதி முன்னேறிவிட்டது‘ என என்னிடம் அமைச்சர்கள் சொன்னார்கள், ஆனால் இங்கே முறைகளைக் கூறியுள்ளீர்கள். இன்னும் இல்லாமை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

முழுப் பலத்தை அளிக்கவில்லையே!

“ஆறுகள் உண்டு – அவற்றை வகையோடு சீர்செய்தால் சோறு போட வழியுண்டு“ எனக் குறிப்பிட்டு, அரசினரின் அலட்சியத்தை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். வரவேற்புப் பத்திரத்தில் கூறியுள்ள குறைகளை, கோரிக்கைகளை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சட்டமன்றத்தில் எடுத்துக் கூறுவேன்.

‘எடுத்துக் கூறுவேன், எடுத்துக் கூறுவேன்‘ என்றுதான் உங்களிடம் உறுதி கூறுவேன தவிர, ‘முடித்துத் தருவேன் என்று என்னால் உறுதிகூற இயலாது. ஏனென்றால், எடுத்துக் கூறுவதற்குத்தான் சட்டமன்றத்திற்கு எங்களை அனுப்பியிருக்கிறீர்களே தவிர, முடித்துத் தருவதற்கல்ல! எடுத்துக் கூறுவதற்குரிய எண்ணிக்கைப் பலத்தைத்தான் எங்களுக்கு அளித்திருக்கிறீர்களே தவிர முடித்துத் தருவதற்குரிய முழுப் பலத்தை எங்களுக்கு அளிக்கவில்லை.

நாங்கள் சென்ற இடங்களிளெல்லாம் அமைச்ச்ர்கள் வந்த அக்கறையுடன் கவனிப்பதாக அறிகிறேன். ஆதலால் உங்கள் குறைகளும் ஒருகால் நிறைவேறும் என நம்பலாம்.

இல்லாமை நீங்கிட – ஏற்றத்தாழ்வைப் போக்கிட இன்பம் பொங்கிட வேண்டுமென்றால், அதற்கான வழி வருகிற தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் வழங்கப் போகும் தீர்ப்பைப் பொறுத்துத்தான் உள்ளது. நமது வாழ்வுக்கும் பிற்காலச் சந்ததியினர் வாழ்வுக்கும் நிரந்தரமான பாதுகாப்பு வேண்டுமென்றால் திராவிடநாடு திராவிடருக்கே வேண்டும்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

“திராவிட விடுதலைக்காக எது கேட்டாலும் தருகிறோம், தலைகளைக் கேட்டாலும் தருகிறோம்“ என, வரவேற்பு இதழில் குறிப்பிட்டிருக்கிறீர்கள், நீங்கள் தலைகளைத் தரவேண்டாம் – உங்களின் நல்ல இதயங்களைத் தாருங்கள் எனக்கு. எதையும் தாங்கும் இதயத்தை நீங்கள் அளித்திட வேண்டுமெனக் கோருகிறேன்.

“திராவிடத்தைப் பெற்றால்தான் வளமும் நலமும் பெற்று நாம் வாழலாம். ஆதலால் அதைப் பெறுவதற்குரிய ஆற்றலை அளித்திட எனக்கு ஆதரவு தாருங்கள்.

“எனக்கு என்று சொன்னதனால் இந்தச் சாதாரண அண்ணாதுரைக்கு ஆதரவு தரவேண்டாம். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தந்ததால், திராவிட நாட்டு விடுதலைக்கு ஆதரவு தந்ததாகும். ஆதலால் நீங்களெல்லாம் ஆதரவு அளித்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

“வரவேற்பு இதழில் கூறியுள்ள குறைகளை, வாய்ப்பு நேரும் போதெல்லாம் சட்டமன்றத்தில் வலியுறுத்துவேன் என்பதைக் கூறிக் கொண்டு, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.“

(நம்நாடு - 8.9.61)