அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தலைப்பு இல்லா நாடாகத் தமிழ்நாடு திகழ்வதா?

தாம்பரம் கிருத்துவக்கல்லூரியில் தமிழ்ப்பேரவை சார்பில் 21.10.61 அன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு அரியதோர் உரை நிகழ்த்தினார்கள்.

கூட்டத்திற்கு திரு.கேதாரநாதன் தலைமை வகித்தார். தமிழ்ப் பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார். அண்ணா அவர்களையும் மற்றவர் களையும் வரவேற்றுப் பேசுகையில் தமிழ் இலக்கியத் துறைகளில் அண்ணா அவர்கள் செய்த புரட்சியையும், மறுமலர்ச்சியையும் விளக்கிப் பாராட்டினார். மன்றச் செயலாளர் மணி நன்றி கூறினார்.

அண்ணா அவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு-

“அவைத் தலைவர் அவர்களே, ஆசிரிய நண்பர்களே, மாணவத் தோழர்களே( இந்தக் கல்லூரித் தமிழ்ப் பேரவையில் நானும் பேசும் வாய்ப்புப் பெற்று உங்களைக் கண்டு அளவளாவுவதிலே மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

தமிழ்ப்பணி கண்டு பூரிக்கிறேன்

எனது நண்பரான உங்கள் பேராசிரியர் ஆலாலசுந்தரனார் அவர்கள் எனது வலப்புறத்திலே அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். எனது இடப்புறக் கருத்துக்கள் அவருக்குப் பிடிக்கும் என்பதைப்போல் எனக்கு வலப்புறத்திலே அவர் அமர்ந்திருக்கிறார். எங்கள் நட்பு சுமார் 30 ஆண்டுக்காலமாக இருந்து வருகிறது என்பதை வெளிப்படையாக இம்மா மன்றத்தி்லே எடுத்துச் சொன்ன நேரத்தில், நான் அகமகிழந்து போனேன்( ஆனால் அம்மகிழ்ச்சி பறந்தோடிவிட்டது. காரணம், என்னுடைய நட்புக்குப் பலர் பாத்திரமாகி வெளிப்படையாகச் சிலர் எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில் அவர்களுக்குக் கஷ்டங்களும் நஷ்டங்களும் வருவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியெல்லாம், சிறந்த தமிழ்க் கல்வியை, தமிழ்ப் பற்றோடு – தமிழ்ப் பண்போடு பெற்று, தாம் கற்ற கல்வியை, மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கின்ற பெரும் பணியில் அவர் ஈடுபட்டிருப்பதை கண்டு பூரிப்படைகிறேன்.

மாணவர் தலைவர் அவர்களை, ‘என்ன தலைப்பில் நான் பேச வேண்டும்‘ என்று கேட்டேன். ‘தலைப்பு இல்லை‘ என்றார். எனவே, ‘தலைப்பு இல்லை‘ என்பதையே தலைப்பாகக் கொண்டு உங்களோடு உரையாட விழைகின்றேன்.

தலைப்பு இல்லாத தலைப்பு

உலக அரங்கில் தலைப்பு இல்லாத நாடு – உலகினர் உச்சி மேல் வைத்து மெச்சிவந்த நமது தாயகம்தான் – தமிழ்நாடுதான்( ‘தமிழ்நாடு‘ என்ற தலைப்பைப் பெற எத்தனைக் கிளர்ச்சிகள்? சட்டசபையில் எத்தனைத் தீர்மானங்கள்.

ஏகாம்பரம் என்பவனைப் பலமுறை ஏகாம்பரம் என்று அழைத்துவிட்டுப் பிறகு ஒருநாள் அவனுக்கு ஏகாம்பரம் என்று பெயரிடுவதுபோல், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘தமிழ் கூறும் நல்லுலகம்‘ என்று எழுதி வைத்துவிட்ட பிறகு ‘தமிழ்நாடு‘ என்ற தலைப்புப் பெற எத்தனை பாடுபட வேண்டியதாயிற்று.

‘தமிழ்நாடு‘ என்ற தலைப்பு சென்னை அரசில் கிடைத்ததே தவிர, அரசியல் சட்டத்தில் ‘தமிழ்நாடு‘ என்ற தலைப்பு தரப்படவில்லை. ‘சென்னை ராஜ்யம்‘ என்ற தலைப்பு இல்லாத் தலைப்பு தரப்பட்டிருக்கிறது.

ஒரு நாடு தலைப்பைப் பெற வேண்டும் என்றால் அது சிற்றுரிமை பெற்றால் மட்டும் போதாது – முற்றுரிமை பெற்றாக வேண்டும். நாடு என்ற தலைப்புக்கே – முழு அதிகாரம் அந்த நாட்டு மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் இலக்கணம். தமிழ்நாடு முழு அதிகாரம் பெறவில்லை. எனவே தமிழ்நாட்டிற்குத் தலைப்பு இல்லை.

இன்றுவரை இந்த நிலைமை
நாட்டைப்பற்றி ஆராய்ந்தோம். இனி மொழியை எடுத்துக் கொள்வோம். தமிழ்மொழி, நம் தாய்மொழி – நம் வீட்டு மொழி – நம் நாட்டு மொழி. ஏன்? நம் பாட்டுமொழியும் கூட( ஆனால் இன்று தலைப்பு மொழியாகஇல்லாமல், ஆட்சிமொழியாக ஆக்கிவிட்டோம் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால், சட்டமன்றத்தில் கேட்கப்படும் முதல் கேள்வி ஆங்கிலத்திலும், அதற்கான பதில் ஆங்கிலத்திலும் தான் இன்றுவரை தரப்படுகிறது. சட்டமன்றத்திற்கு அரசினரால் கொண்டுவரப்படும் தீர்மானங்களும் ஆங்கிலத்திலேயே அச்சிட்டுத் தரப்படுகின்றன( இதனால் ஆட்சியாளர்களுக்குச் சங்கடம் ஏற்படுகின்றது. ஆங்கிலத்தில் எழுதுவதைப் பார்த்தாலே சங்கடப்படக் கூடிய அமைச்சர்களும் இருக்கின்றார்கள்.

தீர்மானங்கள் ஓட்டுக்கு விடப்படுகின்ற நேரத்திலும் ‘நோ‘ ‘யெஸ்‘ என்ற ஆங்கில ஒலிதான் கேட்குமே தவிர, ‘ஆம்‘, ‘இல்லை‘ என்ற ஓசைகளோ, ‘ஒப்புகிறோம்‘. ‘ஒப்பவில்லை‘ என்ற ஒலிகளோ எழுவதில்லை. இது எதைக்காட்டுகிறது? தமிழ்மொழிக்குத் தலைப்பு இல்லை என்பதையன்றோ?

இது வெட்ட வெளிச்சம்

இந்தி மொழி, தலைப்பு மொழியாக இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து செல்லுகின்ற தமிழர்கள், இந்தி மொழி பயின்று அவர்களிடம் நான்கு வார்த்தை பேசி, தங்களுக்கும் இந்தி தெரியும் என்று காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படித் தமிழ்நாட்டு நிலைமையில் – இந்தி( இதைக் காணும்போது மொழிக்குத் தலைப்பு இல்லை என்பத வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நா்டுச் சூழ்நிலையில் வளர்ந்து, தமிழ்மொழியைக் கற்று, அம்மொழியைத் தமிழ் மாணவர்களுக்குக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களாக வரவேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை. இதை வெளிப்படையாகச் சில கல்லூரிகளில் கூறி, அந்தக் கல்லூரியிலுள்ள ஆங்கில ஆசிரியர்களின் அருவருப்பைப் கூடப் பெற்றவன் நான்( ஒரு நாட்டு மொழிக்கு தலைப்பு இ்ருப்பதன் அடையாளம் அம்மொழி வல்லுநர்கள் கல்லூரி முதல்வர்கள் ஆவதே.

இந்த அவலநிலை நமக்கு

மொழியை விட்டுவிட்டுத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டில் தலைநிமிரத்தக்க தலையாய தொழில் இல்லை( இந்தத் தொழிலில் நாம் சறிந்தவர்கள். அந்தத் தொழிலைக் கற்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டும். அந்தத் தொழிலுக்கு வேண்டிய பொருள்கள் தமிழ்நாட்டில்தான் கிடைக்கும். அந்தத் தொழிலில் தமிழ்நாடுதான் இந்தத் தரணியிலேயே சிறந்திருக்கிறது என்று உலகத்தால் எண்ணத்தக்க வகையில் நமக்குத் தொழிலிலே தலைப்பு இல்லை. ஒன்றே ஒன்றில் மட்டும் நாம் தலைப்புடன் இருக்கிறோம்( அதுதான் வெளிநாடுகளில் கூலி வேலை செய்வதற்கு ஆட்களை அனுப்புவது.

தலை நிமிர்ந்து நிற்க இயலுமா?

பிறந்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போய்விட்டால் தலைப்பு இல்லாமல் போய்விடும். உடன் பிறந்தவர்கள் யாரோ என்று சொல்லிவிட்டாலும், தலைப்பு இல்லாமல் போய்விடும். மக்க்ளுடைய நிலை மாறினாலும் தலைப்பு இல்லாமல் போய்விடும். அதனால்தான். ஒருசிலர் உறுதிபடைத்தவர் கடல்நடுவே இருக்கும் சின்னஞ்சிறிய தீவானாலும் – ஒரு தன்னந்தனி நாடு என்று ‘சைப்ரஸ்‘ செப்புகிறது( ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் தலைப்போடு வீற்றிருக்கின்றன( அடிமைப்பட்டிருந்து ‘கோல்டு கோஸ்ட்‘ என்ற நாடு உரிமை பெற்றவுடன் ‘கணா‘ என்ற பெயருடன் வீற்றிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து ஐ.நா. அவைக்குச் செல்பவர்கள் சர்.சி.பி.இராமசாமி (ஐயர்) என்று கற்பனைக்காக வைத்துக் கொள்ளுங்கள்( சர்.ஏ.இராமசாமி (முதலியார்) என்று உதாரணத்துக்காக வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டுக்குத் தலைப்பே இல்லாத காரணத்தால், தமிழ்நாட்டில் இருந்து சென்றாலும் அவர்கள், ‘இந்தியப் பிரஜை‘ என்றுதான் கூறிக் கொள்ள முடியுமே தவிர, உலக அரங்கில் ‘தமிழ்நாடு‘ என்ற பெயர் நிலவுவதற்கு ஏதும் செய்ய இயலாது.

இலாபம் என்ன காண்பீர்

என்னிடம் ஒருவர் வந்து, ‘நான் கிருத்துவக் கல்லூரி மாணவன்‘ என்று கூறினால் அக்கல்லலூரியின் கல்விளைக் குறித்தும், ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறை குறித்தும் விளக்கம் கேட்பேன். ‘நான் தாம்பரத்தில் வாழ்பவன்‘ என்று சொன்னால், தாம்பரத்தைப் பற்றி சில விஷயங்களை விசாரிப்பேன். எனது நண்பர் ஆலாலசுந்தரம் அவருக்கு வேண்டியவன் என்று ஒருவர் சொன்னால் ‘அவர் எப்படி இருக்கிறார்?‘ என்று கேட்பேன். ஆனால் அவர் ‘நான் ஆலாலசுந்தரனாரின் மகன்‘ என்று சொன்னால், கட்டித் தழுவி முத்தமிட்டு, உச்சி மோந்து ‘அப்பா சௌக்கியமா கண்ணா‘ என்றுதான் கேட்பேன். இது ‘தலைப்பு‘ தரும் இலாபம்.

என்ன கேட்பார்கள் அங்கே

உலக அரங்கில் ‘நான் இந்தியாவிலிருந்து வந்தவன் என்றால் சிலப்பதிகாரத்தைப்பற்றியும், சிந்தாமணியைப் பற்றியும், அகநானூற்றைப் பற்றியும், புறநானூற்றைப் பற்றியும் எட்டுத் தொகையைப் பற்றியும், பத்துப்பாட்டைப் பற்றியும் கேட்கமாட்டார்கள். சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றியும் மாமல்லபுரத்துக் கடற்கரையைப் பற்றியும் கேட்க மாட்டார்கள்( ஆனால், இந்தியாவிலிருந்து வருகிறீர்களே அங்கு இந்து – முஸ்லீம் கலவரமாமே( அலிகாரில் சுட்டுக் கொன்றார்களாமே. மகாராஜாக்கள் அரசை இழந்து விட்டார்களாமே( அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று இப்படித்தான் கேட்பார்கள்.

கிருஷ்ணன் என்ற மாணவர், கிறித்துவக் கல்லூரி மாணவர் என்ற முறையில் இப்போது அமெரிக்காவுக்கு போயிருக்கிறார்( அவரைக் காணும் அமெரிக்கர்கள் கிறித்துவக் கல்லூரியின் கல்வி நிலையைக் குறித்தும், பேராசிரியர்களைக் குறித்தும் அவர்கள் ஆற்றுகின்ற அரும்பெரும் கல்விப் பணிகளைக் குறித்தும்தான் கேட்பார்களே தவிர, மற்றவைகளைப் பற்றிக் கேட்கமாட்டார்கள்( எனவே தலைப்பு தேவை.

தமிழரின் பண்பாடா இது

ஆங்கில நாட்டில் பெண்களின் வயதையும், ஆண்களின் சம்பளத்தையும் கேட்பது பண்பாட்டுக் குறைவு என்று கருதுகிறாக்ாள். ஆனால் சம்பளத்திலிருந்து ஆரம்பித்து எத்தனை குழந்தைகள் என்பது வரை கேட்டு. அவன் ‘3‘ என்று சொல்ல ‘பரவாயில்லை, உனக்காவது 3, எனக்கு 7 ஆயிற்றே‘ என்று சொல்ல, ‘இப்போது ஏதாவது உண்டா?‘ என்று கேட் அவன், ‘ஆறு மாதம்’ என்று சொல்ல, ‘ஏதோ இருக்கட்டும் ஆண்டவன் கிருபை‘ என்று கூறி, எல்லாவற்றையும் விசாரித்துவிட்டதாக மகிழ்ச்சி செய்வது தமிழரின் பண்பாடு ஆகிவிட்டது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பர் கே.எம்.பாலசுப்பிரமணியத்துடன் பம்பாய்க்குச் சென்றேன். அவர் இப்பொழுது எங்கள் கழகத்தில் இல்லை. சைவப்பிரச்சாரத்தில் ஈடபட்டிருக்கிறார். நானும் அவரும் அம்பேத்காரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் நண்பர் பாலசுப்பிரமணியம், அம்பேத்காரைப் பார்த்து, ‘உங்களுக்குக் கோர்ட்டிலே எவ்வளவு வருமானம்?‘ என்று கேட்டுவிட்டார். நன்றாகப் பேசிகொண்டிருந்த அம்பேத்காரின் கண்கள் சிவந்துவிட்டன. கோபம் பொங்கி வழிய, ‘என் வருமானத்தைப் பற்றி எனக்கும் வருமான வரி அதிகாரிக்கும் தானே கவலை? உங்களுக்கு ஏன் அதைப் பற்றிக் கவலை?‘ என்றார்.

கதம்பப் பண்பாடாகக் காட்சியளிக்கிறதே!

திருமண வீடுகளில் முதல் மூன்று பந்திகளில் எல்லாப் பண்டங்களும் வரிசையாக விழும். கடைசிப் பந்தியில் எல்லாவற்றையும் போட்டு உருண்டையாக்கித் தருவார்கள். அந்த உருண்டையில் ஒருபக்கம் தித்திப்பும், இன்னொரு பக்கத்தில் உருளைக்கிழங்கு, மற்றொரு பக்கத்தில் மாங்காய் ஊறுகாயும் இன்னொரு பக்கத்தில் கத்தரிக்காயும் இருக்கும்.

அதைப்போல், இன்றைய தமிழ்ப்பண்பாடு கதம்பப் பண்பாடாகக் காட்சியளிக்கிறது.

ஆங்கில நாட்டுப் பண்பாடும், கீழை நாட்டுப் பண்பாடும் இணைந்தது இந்தியப் பண்பாடு என்று ஒரு மேலை நாட்டு அறிஞர் கூறினார். ஆனால் இந்திய நாட்டிலிருந்து ஆங்கில நாட்டுக்குச் சென்று வந்த ஒருவர், ‘மேல்நாட்டுத் தீயப் பண்பாடும், கீழ்நாட்டுப் தீய பண்பாடும் சேர்ந்தது இந்தியப் பண்பாடு‘ என்று திருத்தம் தந்தார்.

ஒருவர், ‘போய்விட்டு வருகிறேன்‘ என்று ஒரு முறைக்கு இருமுறை சொல்லிப் போனால், அவரை, பண்பான மனிதர் என்கிறோம் நாம்.

எளிது எது கடினம் எது?

பண்பாட்டை – நடைமுறைப் பண்பாடு என்றும், கருத்துப்பண்பாடு என்றும் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். நடைமுறைப் பண்பாடு பெறுவது எளிது. கருத்தப் பண்பாடு பெறுவது கடினம்.

பண்டைத் தமிழகத்தில் யாரும் யாரையும் தாழ்த்தியதில்லை. மன்னர்-குடிமகளைத் தாழ்த்தியதில்லை. வாணிபன் விளைவிப்பவனைத் தாழ்த்தியதில்லை. விளைவிப்பவன் தொழிலாளியைத் தாழத்தியதில்லை!

சாதிக்கு ஒரு தொழில் என்ற நிலைமை இருந்தால் உங்கள் பேராசிரியர், தாம்பரம் கடைவீதியிலே மண்டிக் கடையல்லவா நடத்த வேண்டும்? ஆனால் கிருத்துவக் கல்லூரியிலே இலக்கியச் சந்தை வைத்து மணிமேகலை வேண்டுமா? சிந்தாமணி தேவையா? சிலப்பதிகாரம் நன்றாக இருக்கும் என்றல்லவா கூறுகிறார்!

அந்தக் காலத்துத் தமிழ்ப் புலவர்கள் இந்தக் காலத் தமிழ்ப்புலவ்ர்களைப் போல் தமிழுக்குத் தொண்டு செய்து அதனால் ஊதியம் பெறாவிட்டாலும், தங்களுக்கென்று ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். கூல வாணிகன் சாத்தனார் என்றும், மருத்தவன் தாமோதரனார் என்றும் பெயர்கள் இருப்பதிலிருந்தே முன்னவர் வணிகர் என்றும் பின்னவர் மருத்தவர் என்றும் தெரிகிறது.
‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு‘ என்பது தமிழர் பண்பாடு.

பழங்காலத்தில் நெல் கொட்ட வேண்டுமானால், பழையதைக் காலி செய்து புதியதைக் கொட்ட வேண்டும். பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று – என்று கொட்டினால் பயனில்லை!.

(நம்நாடு - 27.10.61)