அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தம்பியைப் பறிகொடுத்து கலங்குகிறேன்

அறிஞர் அண்ணா அவர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்ய காஞ்சிபுரம் வந்த சைக்கிள் அணியிலிருந்த தோழர் அரிகிருஷ்ணன் என்பவர் மீது காங்கிரசு வேட்பாளர் நடேச (முதலியா)ரின் பஸ் ஏறியதால் அந்தத் தோழர் மாண்டார்.

வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள வாலாசாபேட்டை வட்டம், மேல் விசாரத்திற்கருகிலுள்ள மாங்குப்பம் கிராமத்தைச் சேர்த் தோழர் அரிகிருஷ்ணன். அந்தப் பகுதியிலிருந்து புறப்பட்டுள்ள சைக்கிள் அணியில் கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவுக்குப் பிரச்சாரம் செய்யக் காஞ்சி வந்தார்.

துடிதுடிப்பாகப் பிரச்சாரம் செய்து வந்த அவர், பாதையின் ஓரத்தில் ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும்போது காஞ்சிபுரம் காங்கிரசு வேட்பாளர் நடேச (முதலியா)ரின் பஸ் ஒன்று (ஸ்ரீ லட்சுமி நரசிம்மசாமி சர்வீஸ்) அந்தத் தோழரின் மீது ஏற்றப்பட்டது.

எம்.டி.எஸ்.2545 எண்ணுள்ள அந்த பஸ், மகாபலிபுரம் செல்லும் பஸ் என்று பக்கத்திலிருந்த மக்கள் கூறினார்கள்.

மாலை 3 மணிக்கு அடிபட்டு வீழ்ந்த தோழர் அரிகிருஷ்ணன் உடலிலிருந்து இரத்தப்பெருககு அளவுக்கு அதிகமாக வெளியாயிற்று உடனே அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் மாலை 5 மணிக்கு அவர் மரணமடைந்தார்.

மேலும் ஒரு சதி

விவரம் அறிந்த கழகத் தோழர் தி.சு.கிள்ளிவளவனும் பிறரும் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று பார்த்தனர்.

மோதிய சைக்கிளும் பஸ்சும் இடம் மாற்றி வைக்கப்பட்டாகக் கூறப்படுகிறது. அதம் மூலம், சைக்கிள்காரரோ தவறான வழியில் வந்தார் என்றும், எந்த உள்நோக்கமும் இல்லாமல் இந்த விபத்து நடைபெற்றது என்றும் உலகிற்கு காட்டிட இந்தச் சதிச் செயல் புரியப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்தச் செய்தி கேட்டுத் தோழர்கள் கொதிப்படைந்தார்கள். பொதுமக்கள் பரபரப்படைந்துள்ளார்கள்! அமைதிப்படுத்தி, தக்க நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளனர்.

காங்கிரசுக்காரரின் பஸ் ஏறி மாண்ட கழகத் தோழர் அரிகிருஷ்ணன் 22 வயதுகூட நிரம்பாத இளைஞர் – கழகக் கொள்கையில் அசையாத பற்றுக் கொண்ட தோழர் மாங்குப்பம் அருணகிரி (கவுண்டர்) அவர்களின் செல்வன்.

ஒலிமுகமது பேட்டையில் நடைபெற்ற இச்சம்பத்தைக் கேள்விப்பட்ட அண்ணா அவர்கள், கிராமங்களில் தாம் செய்து கொண்டிருந்து தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

மரணப்படுக்கையில் இருந்த தன் உடன்பிறவாத தம்பி்யைக் கண்ணீர் மல்க கண்டு துடித்தார்.

பிறகு உயர்தர போலீசு அதிகாரியிடம் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இச்செய்தியறிந்த கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டுவிட்டனர்.

அண்ணா இரங்கலுரை

அவர்களிடையே கண்ணில் நீர்ததும்ப அண்ணா அவர்கள் பேசியதாவது

“ஏற்பட்டுவிட்ட இந்த எதிர்பாராத சம்பவம் குறித்து மெத்த வருத்தப்படுகிறேன்.“

“எந்த ஆர்வத்தால் எனது உடன்பிறவாத தம்பி கழகப் பிரச்சாரத்திற்குக் காஞ்சிபுரம் வந்தானோ, அந்த ஆர்வமே இப்போது சோகச் சம்பவமாக உருவெடுத்து நிற்கிறது!

இதுபோன்ற நெருக்கடியான சம்பவங்களின்போது யார் மீதும் கோபம் காட்டாது, அமைதி காப்பதுதான் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் நாம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும்!

“மறைந்த மாவீரனுக்கு இறுதி வணக்கம் செய்யும் வகையில் இன்று முழுவதும் மௌன விரதம் கடைப்பிடிப்போம். ஆங்காங்குள்ள தோழர்கள், அரைக் கம்பத்தில் கொடியினைப் பறக்கவிட்டுத்தம் வீர வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்வார்களாக.“

கூட்டங்கள் ஒத்திவைப்பு

அண்ணா அவர்களின் கட்டளைப்படி சின்ன காஞ்சிபுரம், தொடூர் ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும், ஊழியர் கூட்டமும் மறைந்த மாவீரனுக்கு இறுதி மரியாதை தெரிவிக்கும் வகையில் ஒத்தி வைக்கப்பட்டன.

இறுதி வணக்கம்

பின்னர்ச் சம்பவம் குறித்துப் போலீசார் செய்யவிருக்கும் விசாரணையை உடனிருந்து கவனிக்கும் பொறுப்பை ஏ.கே.தங்கவேலர் எம்.எல்.சி. வாலாஜா வட்டச் செயலாளர் தம்பி தாசன், கண்ணன் எம்.சி. ஆகியோரிடம் ஒப்புவித்து விட்டு வீடு திரும்பினார் அண்ணா.

காங்கிரசாரின் இரத்தவெறி

இச்செயல் அறிந்த நகர மக்கள் பரபரப்படைந்து மருத்துவமனை நோக்கி வந்தனர். அதில் நான்கு கழகத் தோழர்களைக் காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த ஒருவர் தடுத்து நிறுத்தி, வம்புக்கு இழுத்து மற்றவர்கள் துணையுடன் காயப்படுத்தி விட்டு ஓடிவிட்டார்.

செய்தியறிந்த தோழர்கள் அங்கு வந்து, அந்தத் தோழர்களை எடுத்துக் கொண்டு மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை செய்யவேண்டிய அளவிற்கு அந்தக் காயம் இருந்த காரணத்தால் அவர்கள் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்கள். காங்கிரசாரின் இரத்தவெறி கண்டு காஞ்சித் தொகுதியே கொதித்துப் போய் இருக்கிறது. கழகத் தோழர்கள் அமைதி காத்து வருகின்றனர்.

“என் எதிரிகளுக்குக்கூடச் சோகச் சம்பவங்கள் நிகழக்கூடாது என்று நினைப்பவன் நான். ஆனால், இன்றைக்கு என் இதயத்தைத் தாக்கும் சோகச் சம்பத்திற்கு ஆளாகி நிற்கிறேன். எதையும் தாங்குங்ம இதயத்தோடு, தம்பி எந்த ஆசையில் என் தொகுதிக்கு வந்தானோ – அந்த ஆசையை நிறைவேற்றி வைப்பேன்“ என்று அண்ணா அவர்கள், மறைந்த கழகத் தொண்டர் அரிகிருஷ்ணன் சவ அடக்கத்தின்போது உருக்கமுடன் கூறினார்.

திரு.அ.க. தங்கவேலர் எம்.எல்.சி., தலைமையில் நடைபெற்ற இரங்கற்கூட்டத்தில் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமி எம்.எல்.சி. அவர்களும் பேசினார்.

மேலும் அண்ணா அவர்கள் பேசுகையில் கூறியதாவது “இவ்வளவு சிறுவயதில் இவ்வளவு பெரும் ஆர்வம் கழகத்தின் பேரில் கொண்ட இளைஞனின் சாவு, என் இதயத்தைக் குலுக்கிவிட்டது! பொது வாழ்வுத் துறையில் இத்தகைய இன்னல்கள் அடுக்கடுக்காக வரும் என அறிந்திருந்தும் இரண்டு நாட்களாக என்னையும் அறியாமல் கண்களில் நீர் தேங்கியிருக்கிறது!

ஆசையை நிறைவேற்றுவேன்

“எனது இளந்தோழன், 20 மைலுக்கு அப்பாலிருந்து எந்த ஆசையின் காரணமாக வந்தானோ, அந்த ஆசையைக் கண்டிப்பாய் நிறைவேற்றி வைப்பேன்.“

“என் எதிரிகளுக்குக்கூட இத்தகைய சோகச் சம்பவம் ஏற்படக்கூடாது“ என நினைப்பவ் நான். ஆனால், என் தம்பியே இப்படி ஒரு சோகப் பரிசைத் தருவான் என எதிர்பார்க்கவில்லை. “யார் மீதும் ஆத்திரங்கொள்ளாது எதையும் தாங்கும் இதயத்தோடு அரிகிருஷ்ணன் விட்ட பணியைத் தொடருவோம்.“

மாங்குப்பம் கிராமத்தில் நடந்த இந்தச் சவ அடக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் சி.வி.எம்.அண்ணாமலை குன்றத்தூர் தின சம்பந்தம், கன்னிராசு ஆகியோர் கலந்து கொண்டு தம் ஆழ்ந்த அனுதாபத்தை அரிகிருஷ்ணன் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொண்டனர்.

குடும்ப நிதி

குடும்பத்தின் ஊன்றுகோலாயிருந்த அந்த இளைஞனின் மறைவால் இன்னலுறும் குடும்பத்திற்கு, தேர்தலுக்குப்பின் ஏதாவது உதவியைச் செய்ய மாவட்டச் செயலாளர் முன் முடிவு எடுத்து வருகிறார்.

காஞ்சிபுரத்திலிருந்து ஏறத்தாழ 1,500 பேர் மாங்குப்பம் கிராமத்திற்குச் சென்று சவ அடக்கத்தில் கலந்து கொண்டனர்.

(நம்நாடு - 27, 31.1.62)