அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தமிழ் இனம் வாழ்ந்தால்தான் தமிழ் மொழி வளரும்

அண்ணா அவர்கள் கடந்த 6,7,8-11-60 ஆம் நாள்களில் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். பொதுச்செயலாளர் தேர்வுக்குப்பின் முதல் முறையாக மதுரை வரும் அண்ணா அவர்களை வரவேற்கத் தென்பாண்டி மண்டலம் முழுவதும் மதுரையில் திரண்டிருக்கிறது.

முதல் நிகழ்ச்சியாக 6.11.60 காலையில் மதுரை மாவட்டத் தி.மு.கழகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் கூட்டம் அமைந்தது. தமுக்கம் கலையரங்கில் நிகழ்ந்த இச்சிறப்புக் கூட்டத்தில் தேர்தல் நிதிக்கு மதுரை மாவட்டம் தனது முதல் காணிக்கையாக ரூ.5000 தருவதற்கெனக் கூட்டப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளினின்றும் வந்திருந்த தோழர்கள் லாரியிலும் சேற்றிலும் நின்று கேட்டனர். எனினும் அமைதியாக உட்கார இடமில்லை என்பதை மறந்து ஒரே நிலையாக நின்று கேட்ட காட்சி அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தது.

கூட்டத்திற்கு மதுரை டாக்டர் அருணாசலம் அவர்கள் தலைமை வகித்தார்கள். மாவட்டச் செயலாளர் முத்து அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

இயக்க முன்னோடிகளான தோழர் ஈ.வெ.கி.சம்பத், இரா.நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, சி.பி.சிற்றரசு, என்.வி.நடராசன், க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் முதலியோர் உரையாற்றினர். பற்பல தலைப்புகளில். பின்னர் பெருத்த வரவேற்புக்கிடையே அண்ணா அவர்கள் தோழர்களின் உற்சாகத்தைப் பாராட்டியும் வாழ்த்தியும் வருங்காலத்திற்குக் கழகம் தயாராக வேண்டிய வழிவகைகள் பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.

உண்டியல் வசூல்
கழகத் தோழர்கள் பலரும் மேடை வந்து இயன்ற அளவு தேர்தல் நிதி தந்தனர். அண்மையில் கம்பம் நகராட்சித் தேர்தலில் வென்ற கழகத்தலைவர்கள் ஐவருக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பாக அண்ணா முன்னிலையில் கைத்தறி ஆடைகள் அணிவிக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டனர். அண்ணா அவர்கள் தோழர் பெரியாண்டியின் குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள்.

இக்கூட்டத்திற்கு அன்பில் தருமலிங்கம், உடுமலை நாராயணன், சி.வி.எம்.அண்ணாமலை, எம்.பி.சுப்பிரமணியம், தில்லைவில்லாளந் முதலியோர் வருகை தந்திருந்து மதுரையின் எழுச்சி கண்டு வாழ்த்தினர்.

அண்மையில் மதுரை மாடக்குளம் கண்மாய் உடைப்பாலும் பெருமழையாலும் பலத்த சேதத்திற்கு இலக்கான திடீர் நகர்க் குடிசைவாழ் மக்களுக்கு உதவி தர இச்சிறப்புக் கூட்டத்தில் கழகத் தோழர்கள் உண்டியல் வசூல் செய்து ரூ.210 சேர்த்து அம்மக்களுக்கு அளித்தார்கள்.

தலைமைச் செயற்குழு
பிற்பகல் 3 மணியளவில் டாக்டர் அருணாசலம் அவர்கள் இல்லத்தில் தலைமைச் செயற்குழு கூடி சீரிய முடிவுகள் பல எடுத்தது.

மாலை ஏழு மணியளவில் நகரத் தி.மு.க.செயலாளர் வே.சௌந்தரராசன் அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் ஏ.கோவிந்தசாமி, எம்.எஸ்.சிவசாமி, என்.வி.நடராசன், கே.ஏ.மதியழகன், இரா.நெடுஞ்செழியன், ஈ.வி.கெ.சம்பத், மதுரை முத்து ஆகியோருடன் அண்ணா அவர்களும் பேசினார்கள். கழகத் தோழர்களை வரும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டதோடு அதற்கான வழிவகைகளையும் கூறினார்கள்.
தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் போது ரூ.5,000 நிதி தந் மதுரை மாவட்டக் கழகத்தின் சிறப்பான பணியையும் பாராட்டினார்கள்.

மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில்
8.11.60 காலை 11 மணியளவில் மதுரை தியாகராசர் (கலைக்) கல்லூரி இளங்கோ மன்றத்தின் சார்பில் நடை பெற்ற கூட்டத்தில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டார்கள்.

கல்லூரி முதல்வர் வரதாச்சாரியார் அவர்கள் அண்ணா அவர்களை எதிர் கொண்டழைத்துச் சென்று மேடையில் அமர்த்தி வரவேற்புரையாற்றினார். தியாகராசர் கல்லூரி உங்கள் சொந்த வீடுபோல. மதுரை வந்து போகும் போதெல்லாம் வந்து செல்க. ‘அண்ணா அவர்களே வருக வருக’ என்று வரவேற்றார்கள். மன்ற மாணவர் தலைவர் சுப்பிரமணியம் அவர்கள் அண்ணாவுக்கும் மாணவர்களுக்கும் உள்ள தொடர்புகளை விளக்கி வரவேற்று அண்ணா அவர்களைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

அண்ணா அவர்கள் தமிழ்ப்பற்று பற்றிப் பேசியதாவது:
மதுரை தியாகராசர் கல்லூரிக்கும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்ற நேசத் தொடர்பு இந்த ஆண்டும் வருவதன் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படுவது கண்டு உள்ளபடியே மெத்த மகிழ்ச்சியடைகிறேன். நானும் என்னைச் சார்ந்தவர்களும் கல்லூரி மன்றங்களுக்கு வந்துதான் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அடைந்து திரும்புகிறோம்.

நேரடி அரசியல் வேண்டாம்
மாணவர்களின் அரசியல் தொடர்பு பற்றிக் குறிப்பிடுகையில், என்னைப் பொறுத்தவரையிலும் நான் சார்ந்திருக்கின்ற கட்சியைப் பொறுத்த வரையிலும் மாணவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடக் கூடாது என்று இன்னமும் வலியுறுத்தி வருகிறோம் என்றார்கள். மேலும் அவர் பேசியதாவது:-
“என்னுடைய கட்சி தமிழர்களின் கட்சி. தமிழ்நாடு தழைத்தோங்க வேண்டும். தன்னிகரில்லாது செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் கட்சி.

“நான் வருகையில் நெடுஞ்சாலைப் பராமரிப்புத் துறையினர் எழுதியிருந்த வாசகம் ஒன்றினைப் பார்த்தேன். ஒரு பலகையில் ‘பாதையின் ஓரமாகச் சீரோடு செல்க’ என்று இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இதை ஆசிரியர்கள் எழுதிக் காட்டினாலும் போதாது குட்டியும் காட்டி ஆக வேண்டியிருந்தது. ஆனால் இன்று நல்ல தமிழ் எழுதுவதும் புரிவதும் இயல்பாகிவிட்டது.

நாங்கள்தான் தமிழை வளர்த்தோம்
“இன்று சட்டமன்றத்திலும் தமிழ் பேசப்படுகிறது. சட்டமன்றத் தலைவர் கன்னடியர் என்றாலும் மழலை கொஞ்சும் அழகிய தமிழிலே பேசுகிறார். மந்திரி என்றால் யாரையோ கேலி செய்வதாக எண்ணுகின்றனர். அமைச்சர் என்று தனித்தமிழ் சொல்தான் வழங்கப்படுகிறது.

“பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் யார் யார் தமிழ்ப்பற்றுக் கொண்டிருந்தார்களோ அவர்களெல்லாம் அச்சத்தோடும் அருவறுப்போடும் நோக்கப்பட்டார்கள். அந்த நிலை மாறி, இன்று எல்லாக் கட்சிகளும் “நாங்கள்தான் தமிழை வளர்த்தோம்” என்கின்றன. இந்த நிலை இப்படி இருந்தாலும் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் போட்டி போட்டுக் கொண்டு உழைத்தோமானால் தமிழ் நன்கு வளரும். ஆகையினால் இந்த நாளில் தமிழ் யாரால் வளர்க்கப்படுகிறது என்ற கவலையில்லாமல் தமிழனை எப்படி எப்படி வளர்ப்பது என்று கவலைப்படுவோம். தமிழ் மொழியில் பேசுவதென்பதிலே எழுதுவது என்பதிலே சட்டமன்றத்திலே போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு கட்சிக்காரர்களும் ஈடுபடுகிறார்கள் என்பதைச் சட்டமன்றத்திலே நீங்கள் வந்தால் கேட்கலாம், காணலாம்.

“சட்டமன்றத் தலைவர் கன்னடியர். அவர் தமிழிலே பேசுகிறார்.”

நல்ல தமிழுக்கு அடையாளம்
தொடர்ந்து பேசுகையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், “நெடுஞ்சாலையில் பெருஞ்சேதம் ஏற்பட்டதா?” என்று கேட்டதையும் பக்தவத்சலனார் பதிலளித்தையும் விளக்கி விட்டு, “அடுக்குமொழி என்பது நல்ல தமிழுக்கு அடையாளம் என்றெண்ணினேன் அப்போது” என்றார்கள்.
மேலும் பேசுகையில் “மொழி வளர்ந்தால், வளருகின்ற அத்தன்மை மேலும் வளர வேண்டுமானால், இனம் வளர வேண்டும். தமிழ் வளர தமிழினம் வளர வேண்டும். தமிழினம் வளரவேண்டுமானால் அதற்கு இடையூறு செய்யாத ஆட்சி வேண்டும்.

நம்மிடத்தில் இருக்கிற நம்பிக்கை
“தமிழிலே புதிய சொற்களில்லை என்று ஏமாற வேண்டாம். தமிழ்மொழியிலே இருக்கின்ற வளங்களைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தாலே போதும் இது. இப்படிச் சொல்வது பிற மொழியிடத்திலே இருக்கிற வெறுப்பல்ல; நம்மிடத்திலேயிருக்கிற நம்பிக்கை.

“வெறி பற்று என்று கூறித்தமிழ் மக்களிடம் இன்றைய தினம் ஏற்பட்டிருக்கின்ற உணர்ச்சியைக் குறைப்பதும் குலைப்பதும் தவறாகும்.

“தமிழ் வாழத் தமிழரசு வேண்டும். அத்தமிழரசு அமைக்கப்பட்டுத் தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப்பட்டுத் தமிழர் வளர்ந்தால் தமிழ் தானே வளரும்” என்றார்.

மாணவர் மாசிலாமணி நன்றி கூறிய இக்கூட்டம் காலை வேளையில் நடந்த போதிலும் வெளிக்கல்லூரி மாணவர்களும் திரளான பொதுமக்களும் வந்து கலந்து கொண்டதும் மண்டபம் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கன.

(நம்நாடு - 14.11.60)