அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தமிழ்த் தலைவர்கள் காட்டுமிராண்டிகளா?

சென்னை – இராயப்பேட்டையில் 10-12-1957இல் நடந்த பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்கள், தமிழர்களை மட்டரகமாக நேரு திட்டியது குறித்துக் கண்டித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது –

காட்டுமிராண்டி என்று நம்மைப்பார்த்து வசைமாரி பொழிவதால் நாம் காட்டுமிராண்டியாகிவிட மாட்டோம். ‘காட்டுமிராண்டி‘ என்னும் வெறும் ஒலியைத்தான் நாம் கேட்கிறோம், ஆனால், உண்மையிலேயே காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகிற – காட்டுமிராண்டிகளாகக் கருதப்படுகின்ற, நாகர்களிடத்தில் நேரு பண்டிதர் தன் ஆணவத்தைக் காட்டவில்லை, புதிய அரசியல் திட்டத்தைப் பரிசாக அளித்திருக்கிறார்.

நேரு பண்டிதர் தமிழ்நாட்டுக்கு வந்ததும், நம்மை இப்படிக் காரசாரமாகத் திட்டினாரே என்பதற்காகச் சிலர் ஆச்சரியப்படலாம், உண்மையிலேயே நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் அப்படி ஆணவத்தோடு பேசுவதற்கான சூழ்நிலை, அவர் இங்கு வந்து இறங்கிய உடனேயே ஏற்பட்டிருக்கிறது. தூய வெள்ளை உடையுடுத்தி 500 குமரிகள் கும்மாளத்துடன் அவரை வரவேற்றிருக்கின்றனர். ஒரு பக்கம் புதிய பெண் மேயர் தாரா செரியனும், இன்னொரு பக்கம் திருமதி கிளப்வாலா ஜாதவ் அம்மையாரும் மற்றும் அமைச்சர் லூர்து அம்மையாரும் இருந்து அவரை வரவேற்றிருக்கிறார்கள். இநத் மூன்று அம்மையார்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் ஸ்தானபிராப்தி கூட இருந்தது கிடையாது! ஏதோ, இவர்களைக் கண்டதும் நேருவுக்கு ஒருவிதத் திருப்தி. அந்தத் திருப்தியின் விளைவாகத்தான் – இங்கு காங்கிரசுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக மனதிலே எண்ணிக் கொண்டுதான் – இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்!

மந்திரி கக்கன் போதுமே

இதைப் பேச நம் மந்திரி கக்கன் போதுமே! இதற்கு நேருவா வரவேண்டும்? கக்கன் இப்பொழுது இதைத்தானே போகுமிடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்? நேரு பேசிய எந்த வாக்கியத்தைக் கக்கன் பேசாமல் விட்டார்?

யாரும் திட்டாததை நேரு திட்டிவிடவில்லை. பக்தவச்சலம் பெரியாரை ‘பைத்தியம்‘ என்றார், கக்கனும் அதைத்தானே பேசி இருக்கிறார்! ‘கக்கன்‘ பேசுகிற பேச்சைப் பேசுவதற்காக உலகம் போற்றம் நேரு பண்டிதரா வரவேண்டும்‘ என்று முதலில் நான் கூட நினைத்தேன்.

அவருடைய பேச்சுக்களையெல்லாம் பத்திரிக்கையிலே படித்தபிறகு, ‘நாம்தான் இந்த நேருவை ஒரு பெரிய மனிதராக நினைக்கிறோம்‘, உள்ளபடியே அவர் இந்த நாட்டுக் கக்கன் போலும் என்று உணர்ந்தேன்!

‘பைத்தியக்காரன்‘ என்று சொல்லுவது மிகச் சாதாரண வார்த்தைதான். அதற்காக நாம் வருந்தத் தேவையில்லை.

இப்பொழுது இங்கு நீங்கள் இவ்வளவுபேர் கூடியிருக்கிறிர்கள், நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த ஒலிபெருக்கி மூலம் 4வது தெருவில் உள்ளவர்களுக்கு இங்கு பேசும் சப்தம் கேட்கிறது. அங்குள்ள ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, ‘என்ன அங்கு ஒரே இரைச்சல்?‘ என்று கேட்கிறார் என்ற வைத்துக் கொள்வோம், அதற்கு அவர் என்ன பதில் சொல்லுவார்? ஏதோ பைத்தியக்காரப் பயல்கள், கூட்டம் போட்டுப் பேசுகின்றார்களாம்‘ என்பார். நாம் அவர்களைப் பற்றி இங்கே என்ன பேசிக் கொள்வோம், ‘அந்த ஆசாமிகள் சுத்த பைத்தியம், ஆகையால்தான் கூட்டத்துக்கு வரவில்லை‘ என்போம்.

மக்களில் பைத்தியம் பலவகை!

கட்டிய மனைவியே புருஷனை, ‘பைத்தியம்‘ என்கிறாள், கணவன் மார்க்கெட்டுக்குப் போய் கத்தரிக்காய் வாங்கிவந்து மனைவியிடம் கொடுக்கிறான், கத்தரிக்காயில் புழு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதைப் பார்த்ததும் மனைவி, என்னங்க, போயும் போயும், இந்தப் புழுத்த கத்தரிக்காயை வாங்கி வந்திருக்கிறீர்கள்?‘ என்று கேட்பாள், உடனே கணவன், ‘நீ கத்தரிக்காய் தானே கேட்டாய், அதைத்தான் வாங்கி வந்தேன்‘ என்பான். உடனே மனைவி என்ன சொல்வாள்? ‘நீங்க ஒரு பைத்தியம், உங்களைப் போய் வாங்கி வரச் சொன்னேனே, நானும்!‘ என்று கூறுவாள்.

‘பைத்தியம்‘ என்ற சொல் சாதாரணமாகத் தமிழில் அசை‘ என்பார்களே அதைப்போல – ஒரு பொருளற்ற வார்த்தையாகவே போய்விட்டது!

நான் பொதுவாழ்வில் ஈடுபட்டு 10 ஆண்டுக்காலம்வரை, நான் பொதுத்தொண்டு செய்வதாகவே எங்கள் வீட்டார் கருதவில்லை, ‘என்னமோ, பைத்தியம்! இந்த ஈரோட்டு நாயக்கர் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஊரைச் சுற்றுகிறாள்‘ என்றுதான் என் பாட்டியார் சொல்லிக் கொண்டிருந்தார்.

எனவே, ‘பைத்தியம்‘ என்று நேரு திட்டியதில் ஒன்றும் பொருளை இல்லை, அதற்கு எந்தவித முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை, திட்டுவது என்பது நேருவுக்கும் சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது.

சில பேருக்கு இதுதான் ஆசை!

நேரு பேசிய பேச்சைப் பத்திரிக்கை நிருபர்கள் வேறு விதமாகவும் போட்டிருக்கலாம். ‘ஜனநாயக நாட்டில் சாதி தேவையில்லை‘ இப்படியும்தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கலாம். நேரு இதையும் தானே பேசினார்? ஏன் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ‘பெரியாரை நேரு பைத்தியம் என்றார், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு ஓடு என்றார் – என்று இப்படியெல்லாம் வேண்டுமென்று ஆசை! யாராவது இப்படிச் சொல்லும்போது, அதை எடுத்து இப்படித் தலைப்பு போட்டுச் செய்தி வெளியிட்டு விடுகிறார்கள். நேரு பேசிய தத்துவங்களை விட்டுவிட்டு, வசைமொழிகளை மட்டும் தலைப்பு போடுவானேன்?

இப்பொழுது இங்கு நடக்கும் இந்தக் கூட்டத்தைப் பற்றி நாளைக்குப் பத்திரிக்கையிலே செய்தி போட வேண்டுமென்றால் அதற்குத் தலைப்பு என்ன போட வேண்டும்? இங்கு நான் பேசிக் கொண்டிருக்கிறேன், இதோ இந்த மேசை மீது இரண்டு சோடா புட்டிகள் இருக்கின்றன. ‘நேற்று இராயப்பேட்டையில் கூட்டத்தில் மேசைமீது இரண்டு சோடா புட்டிகள் இருந்தன‘ என்று செய்திக்குத் தலைப்பு போட்டால் என்ன அர்த்தம்? நான் பேசியது முக்கியமல்ல, மேசை மீது சோடா புட்டிகள் இருந்ததுதான் முக்கியம் என்றாகிவிடுகிறது. மேசை மீது சோடா புட்டி இருந்ததும் உண்மைதான், நான் பேசியதும் உண்மைதான். ஆனால், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

அதைப்போலத்தான், பண்டிதர், சாதியை ஒழிக்க என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். பெரியாரைப் பற்றி என்ன சொன்னார் என்பதை மட்டும் எடுத்துக்காட்டுபவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோர்ட்டை அவமதித்து, இவர் எப்படி பேசலாம்?

நேரு பண்டிதர் சென்னையிலும், திண்டுக்கல்லிலும், திருச்சியிலும் பேசிய பேச்சுக்கள் கோர்ட்டை அவமதிக்கும் வகையிலே அமைந்திருக்கின்றன. பெரியார் மீது கோர்ட்டிலே வழக்கு இருந்து வருகிறது. 12ஆம் தேதி இந்த வழக்கு பற்றித் தீர்மானிக்கப்படவிருக்கிறது. முக்கியத் தலைவர் – நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கிறார். வழக்கு மன்றத்திலிருக்கிற பிரச்சனையைப் பற்றி இவர் எப்படிப் பேசலாம்? எதற்கு வழக்கு – விவகாரம் என்றெல்லாம் வைப்பது?

‘கிழவரை நீண்ட காலத்துக்குச் சிறையில் வையுங்கள், அல்லது பைத்தியக்கார விடுதியில் தள்ளுங்கள், வெளியே விடாதீர்கள்‘ என்று சொன்னால், வழக்கை விசாரிக்கின்றவர்கள் மனதில் என்ன படும்? வழக்கு விசாரணையிலிருக்கும் போது அது பற்றிப் பேசுவது சட்டத்துக்கு ஒழுங்கல்ல!

நேரு பண்டிதர் மீது சட்ட விரோதக் குற்றங்சாட்ட விரும்புகிறேன். நான் சொன்னால் அதை அவர் பொருட்படுத்தமாட்டார் என்பதையும் நான் அறிவேன். ஒரு பெரிய தலைவர் இப்படி மட்டரகமான செயலில் இறங்கி விட்டார் என்பதை எடுத்துக் காட்டத்தான் இதை நான் கூறுகிறேன்.

மரத்துக்கு மரம் குரங்கு தாவும்!

மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு நாட்டைவிட்டப் போகச் சொன்னாரே, பண்டிதர், எங்கே போவது? எங்கு இடம் வைத்திருக்கிறீர்கள்? உலகத்தில் வேறு எந்த நாட்டில் இடம் கொடுப்பார்கள்? ஜப்பானுக்கு போக முடியுமா? அல்லது அதற்கு அப்பாலுள்ள தீவுகளுக்குப் போக முடியுமா? போனால் ‘நீ யார் அய்யா‘ என்று கேட்பானே! அல்லது, இலங்கையில்தான் இடம் கிடைக்குமா?

எங்கே போவது, எங்கேயாவது போகிறோம் என்ற வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு போய்விட்டால் பிறகு இங்கு வேறு என்ன இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

அகநானூறும் – புறநானூறும், திருக்குறளும், சீவகசிந்தாமணியும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எங்களோடு வந்துவிட்டால், மிச்சம் இங்கு என்ன இருக்கும்? தமிழ் மொழிக்கு இவை அத்தனையும் சேர்ந்தால்தானே சிறப்பு இருக்கும்? இவையெல்லாம் எங்கள் கூடவே வந்துவிடுமே!

எங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டால் பிறகு இங்குள்ள நிலை ன்ன? மரத்துக்கு மரம் குரங்கு தாவும்!

நமது வலிமையைச் சிதர விட்டு விட்டோம்!

நம்முடைய வலிமையைச் சிதைய விட்டுவிட்டோம் – சேமித்து வைக்கத் தவறிவிட்டோம் என்பதைத்தான் இநத் நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாடு விடுதலை பெறுவதற்கான இன எழுச்சி ஏற்பட வேண்டுமென்றால், நேருவின் ஆணவத்தைப் பணிய வைக்க வேண்டுமென்றால், அதற்கு இரண்டு முறைகள்தான் உண்டு, ஒன்று – ஓட்டு முறை, மற்றொன்று – வேட்டுமுறை!

இந்த இரண்டில் ‘வேட்டு‘ முறை அநாகரிகமானது, தி.மு.கழகத்திற்கு உடன்பாடல்லாதது, தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்றதல்ல, எனவே, மிச்சமிருக்கம் கருவி எது என்றால், ‘ஓட்டு‘ முறைதான். அந்த முறையைத்தான் தி.மு.கழகம் பின்பற்றி வருகிறது. இதற்காகத்தான் பெரியார், நம்மை என்ன பாடுபடுத்தினார்? யார் யாரோடெல்லாம் சேர்ந்துகொண்டு என்னென்ன பாடு படு்த்தியிருப்பார்! நான் இதைச் சொல்லுகிறபோது திராவிடர் கழக நண்பர்கள் வருந்தக்கூடாது.

காமராசர் கரத்தை வலுப்படுத்தாதீர், வலுப்படுத்தினால், பிறகு அந்தக் கரமே உங்கள் தலையில் கைவைக்கும் – என்று நான் அப்பொழுது சொன்னேன்.

பத்மாசூரன் புராணக் கதை கேளிர்!

புராணத்திலே ஒரு கதை உண்டு, பத்மாசுரன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான், சிவபெருமான் அவன் எதிரில் தோன்றி – அவன் தவத்துக்க மெச்சி, என்ன வரம் வேண்டும் என்று கேட்க, ‘நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிடும்படியான வரம் வேண்டும்‘ என்று கேட்க , சரி கொடுத்தேன் போ‘ என்று சிவபெருமான் சொல்ல, உடனே, ‘உங்கள் தலையிலே முதலில் கையை வைத்து, கொண்டே சிவனை நெருங்க, அதைக்கண்டு சிவன் பயந்து ஓட ஆரம்பித்தாராம், தந்திரப்புத்தி படைத்த ‘மகா விஷ்ணு‘ அதையறிந்து, சிவனைக் காப்பாற்ற ‘மோகினி‘ அவதாரமெடுத்து ஓடோடி வந்தாராம், மோகினியைக் கண்ட பத்மாசுரன் அவள் மீது மோகம் கொண்டு, அவளை நெருங்கி, நாட்டியமாடு என்று பத்மாசுரன் கையைப் பிடித்து அவன் தலையிலேயே வைத்தாள், அவன் எரிந்து சாம்பலானான் – என்று அந்தப் புராணக்கதை கூறுகிறது.

அவர் கரத்தை வலுப்படுத்தாதீர்கள்!

காமராசர் உங்கள் தலையிலே கைவைக்கக் கருதிய அந்த நேரத்தில், நான்தானே மோகினி அவதாரம் எடுத்து நாட்டியமாட வேண்டி வந்தது? சட்டசபையில் திறம்பட ஆடினேனே! இதை முன்கூட்டியே யூகித்துதான் காமராசரை நன்றாகப் புரிந்துதான் நான் சொன்னேன், ‘அவர் கரத்தை வலுப்படுத்தாதீர்கள்‘ என்று! அவருக்குத் தன் கட்சிதான் பெரிதே தவிர வேறொன்றுமில்லை, தன் கட்சியை விட்டுவிட்டு யாரிடத்திலும் அவர் – நேசத்தைக் கேட்க மாட்டார். அவரைப் போல வேறு யாரும், கிடைக்கும் துணைகளையெல்லாம் தேடுவாருமில்லை, அந்தத் துணையைக் கட்சிக்கே பயன்படுத்துவாருமில்லை, இந்த வகையிலே அவரைப் பாராட்டமலிருக்க முடியாது.

தயவு செய்து அந்தக் கரத்தைப் பலப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பலப்படுத்தினால் அதன் தாக்குதலால் தி.மு.க. – வாழ முடியாமல் போய்விடும் என்பதற்கல்ல நான் இதைச் சொல்வது!

அவரது கரத்தை வலுப்படுத்தியவர்கள் எல்லோரும் இன்று உள்ளே இருக்கிறார்கள், அதே நேரத்தில் காங்கிரஸ்காரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் கொள்கையைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல், சட்டசபையிலே அமர்ந்து தங்கள் காரியத்தைச் சாதி்து வருகிறார்கள்.

அரசியல் ரங்கராட்டினம்!

காங்கிரஸ்காரர்களும் திராவிடர் கழகத்தவரும் ‘ரங்க ராட்டினம்‘ போலச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், அரசியல் துறையும் ஒரு ரங்கராட்டினம் போன்றதுதான்!

ரங்கராட்டினத்திலே அமர்ந்து சுற்றுபவர்கள் ஒருவரையொருவர் தொட முடியாது, ராட்டினம் சுற்றம் வேகத்தில், தொடுவது போல, கண்ணுக்குத் தெரியுமே தவிர, தொட முடியாது. அரசியலில் சம்பந்தப்பட்டவர்களும் ரங்கராட்டினத்தில் அமர்ந்து சுற்றுவது போலத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் – ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் நீங்கள், அதற்கான வழியைக் காட்டுங்கள், நான் வழிகாட்டுபவனல்ல, ஆனால், காட்டுகின்ற வழியிலே சிந்தித்துப் பார்த்துப் பின்பற்றுபவன்.

எதையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று சிலர் சொல்லுவார்கள். கண்ணை மூடிப் பின்பற்றுபவர்களுமிருக்கிறார்கள். நான் அப்படியல்ல, கண்ணை மூடிக்கொண்டு சென்றால், போக வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியாது, ‘கண்ணை மூடிக் கொண்டு தான் பின் செல்ல வேண்டும்‘ என்று கூறி, ‘வா, என் பின்னால்‘ என்றழைத்தால் எப்படிப்போக முடியும்?

அண்ணாதுரை கட்டளைத் தம்பிரான்!

பெரியாரிடத்திலே எனக்குப் பக்தி இல்லாததால் இதைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம்! கண்ணைத் திறந்து பார்த்தால்தான், ‘வேறு பக்கம் திரும்பி விட்டோமா, அதே கையில்தான் செல்லுகிறோமா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் கண்ணை மூடிப் பின்பற்றுபவர்களுக்குத்தான் திராவிடர் கழகத்தில் இடம் என்று சொல்லலாம், நான் திராவிடர் கழகத்திலிருந்தபோது, அந்த உரிமை எனக்கு இருந்தது. அதை விட்டுவிட்டுத்தான் வந்தேன்.

பெரியாரைத் ‘தந்தை‘ என்று மரியாதையுடன் அழைத்தார்கள், நான், ‘அண்ணன்‘ என்றுதான் அன்போடு அழைக்கப்பட்டேன் பெரியாரைத் ‘தலைவர்‘ என்றார்கள், என்னை ‘தளபதி‘ என்று அழைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ்காரர்களும் மற்றவர்களம், பெரியாரை மடாதிபதி போன்றவர் என்றால், அண்ணாதுரை கட்டளைத் தம்பிரான் போன்றவன் என்றுதான் சொன்னார்கள்.

அப்படியெல்லாமிருந்த நல்ல நிலைமையை விட்டு விட்டுத்தான் வந்தேன்.

கால அட்டவணை வேண்டும்!

திராவிடர் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன், நமக்கிருக்கிற நோக்கம் திட்டவட்டமாகத் தெளிவு படுத்தப்பட வேண்டும், உதாரணத்துக்கச் சொல்லுகிறேன் – பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகள், இன்னின்ன வேளையில் இன்னின்ன பாடம் படிக்க வேண்டும். சரித்திரம் இன்ன நேரத்தில் – கணிதம் இன்ன நேரத்தில் என்று, இப்படியாக எது எது, எந்த நேரத்தில் படிப்பது என்பதை வகுத்து வரையறை செய்யப்பட்டிருக்கம் பள்ளிகளிலே, ‘டைம் டேபிள்‘ என்று சொல்லப்படும் கால அட்டவணை தயார் செய்த வைத்திருப்பார்கள். அதுபோல, ஒரு இயக்கத்தின் வேலை முறைகளுக்கும் கால அட்டவணை இருக்க வேண்டும்.

பள்ளியில் ஆசிரியர் திடீரென, ‘இப்பொழுது பூகோளப் பாடம் நடக்கப் போகிறது‘ என்று சொன்னால், மாணவர்கள் என்ன செய்வார்கள்? முன்கூட்டியே மாணவர்கள் கையிலே கொடுக்கப்பட்டிருக்கிற கால அட்டவணையில், பூகோளம் குறிப்பிடப்பட்டிருந்தால்தான் அவர்கள், அந்தப் புத்தகத்தை அன்றைய தினம் எடுத்துக்கொண்டு பூகோளம் படிக்கத் தயாராக வந்திருப்பார்கள், ‘அவ்வப்போது பார்த்துக் கொள்ளலாம்‘ என்றால், பாடம் ஒழுங்காக நடக்க முடியாது, அதைப்போல, முன்கூட்டி, திட்டம்போட நேரமில்லையென்றால் நம் இயக்கம் வளராது.

காந்தியடிகள், திட்டங்கள்!

காந்தியார் எப்படி தன் இயக்கத்தை நடத்திச் சென்றார் என்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். அவர் ஒரு நல்ல வேதாந்தி, சிறந்த தத்துவ ஞானி, மதத்தின் பேரால் செல்வாக்குப் பெற்றவர். இதையெல்லாம்விட, அவர் உள்ளத்திலே – புதைத்திருந்தது இராஜதந்திரம். அவர், ஒரு சமயம், ‘அன்னியர் துணிகளையெல்லாம் கொளுத்துங்கள் என்று சொல்லுவார், அடுத்து ஆண்டும் அதை செய்து கொண்டிருக்கச் சொல்ல மாட்டார். அதை விட்டுவிட்டு, ‘சுதேசித் துணியை எல்லோரும் நெய்யுங்கள்‘ என்பார், அதன் பிறகு அதை விட்டு விடுவார், ‘எல்லோரும் உப்புக் காய்ச்சுங்கள்‘ என்பார், பிறகு உப்பு காய்ச்சு என்பார். அடுத்தபடியாக, ‘கள்ளுக்கடை மறியல்‘ செய்யச் சொல்லுவார், அடுத்த ஆண்டில், ‘எல்லோரும் கடவுள் பக்தி கொள்ளுங்கள்‘ என்று பிரச்சாரம் செய்வார், அவர் திட்டவட்டமாக, இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கட்டளையிடவில்லை. அடிக்கடி திட்டத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். இதற்கென முன்கூட்டியே திட்டங்கள் வகத்துக் கொண்டிருந்தார். இதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் பரந்த நாட்டிற்கு சுயராஜ்யம் கிடைத்தது.

போர் முறை வகுக்க வேண்டும்!

நாமும் நமது போர் முறையை வகுத்துக் கொள்ள வேண்டும். எது முதலில் செய்ய வேண்டியத. எது இரண்டாவது செய்ய வேண்டியது என்பதைத் திட்டவட்டமாக முன்கூட்டி வகத்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் வாழ்வு ரங்கராட்டினம் போலச் சுழன்று கொண்டிருப்பதாக அமையக்கூடாது, ஒவ்வொரு கிளர்ச்சியும் முன்னேற்றத்திற்கு – புரட்சிக்கு ஒரு படிக்கட்டாக அமைய வேண்டும்.

ஆலயங்களில் அர்ச்சுனன், ‘ஆண்டவனுக்கு அபிஷேகம் எப்பொழுது செய்வது, ஆராதனை எப்பொழுது செய்வது, என்பதையறிந்துதான் செய்வான்.

ஆராதனையை முதலில் செய்துவிட்டு, பின்னர் அபிஷேகம் செய்யக்கூடாதா என்றால், செய்யலாம், ஆனால், செய்ய மாட்டான். அவனுக்குத் தெரியும் – அபிஷேகத்துக்கப் பிறகு ஆண்டவனுக்கு ஆடை அணிந்து அலங்காரம் செய்தபின் ஆராதனை செய்தால்தான், இலட்சணமாக இருப்பார் ஆண்டவன் – என்று!

தோல்விகளுக்குக் காரணங்கள்!

ஆலயங்களிலே அர்ச்சகன் எப்படி திட்டமிட்டுச் செய்கிறானோ அதைப்போல, அரசியல் கட்சிகளும் முறைப்படி திட்டங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டும், திட்டவட்டமான முறையில்லாததே தோல்விகளுக்குக் காரணமாகும்.

திராவிட நாடு வேண்டும் என்று கேட்கிறோம், இதில் நமக்கு பலர் பகைவன்? நம் கண்ணோட்டமெல்லாம் அவன் மீதுதான் இருக்க வேண்டும் தவிர, வேறு பக்கம் திரும்பக் கூடாது இதை நான் சொன்னால், ‘ஓகோ, அண்ணாதுரை பிராமணர்களின் நண்பன்‘ அதனால்தான் இப்படிச் சொல்லுகிறான் என்று சொல்லுவார்கள்.

பெரியாரவர்கள், எழும்பூரில் ஒரு கூட்டத்திலே பேசியபோது சொன்னாராம் – இதுவரையில் நமக்குச் சாதி ஒழிப்பு வேலைதான் முதலாவதாக இருந்தது, இனி நாடு விடுதலை பெறச் செய்வதுதான் முதல் வேலை – சாதி ஒழிப்பு வேலை இரண்டாவதுதான்‘ – என்று!

நாடு விடுதலை, பிறகு சாதி ஒழிப்பு!

இதை அவர் சொல்லும்போது, ஏன் இப்படித் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார் என்பதற்காகக் காரணத்தையும் கூறியிருக்கிறார். காலையிலே காபி சாப்பிடும்போது 2 நண்பர்கள் பெரியாரிடம் வந்தார்களாம், ‘சாதி ஒழிப்புக்காக ஏன் ஐயா இப்படிப் போராட்டம் நடத்த வேண்டும்? நம் நாடு நமக்குக் கிடைத்துவிட்டால் – ஆட்சி நம்மதாகிவிட்டால் ஒருவரியில் சட்டம் போட்டுச் சாதியை ஒழித்து விடலாமே‘ என்று, பெரியாரிடம் சொன்னார்களாம்! உடனே, ‘அவர்கள் சொல்வது சரிதான்‘ என்று பெரியார் மனதிலே பட்டதாம்‘.

ஏன் அந்த நண்பர்கள் அப்படிச் சொன்னார்கள்? அப்படிச் சொன்ன இருவரில் ஒருவர், நான் அனுப்பி வைத்தவராகக் கூட இருக்கலாம், என்னுடைய நண்பர்கள் எங்குமிருக்கக்கூடும்.

குறிபார்த்து அடிக்க வேண்டும்!

அதே முறையில் பெரியாரவர்கள், இன்றைக்குத் தேவையான போர்த் திட்டத்தை வகுக்க வேண்டும். ‘நம்முடைய எதிரி யார்?‘ என்பதைக் கவனிக்க வேண்டும். நம் பகைமை உணர்ச்சியைத் தனிப்பட்ட ஆட்களிடம் காட்டுவதா, ஒரு குறிப்பிட்ட கொள்கையிடத்திலே காட்டுவதா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன்பிறகு நம்முடைய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.

மரத்தைப் பார்த்துக் கல்லெறிந்தால், பழம் விழுந்தாலும் விழும், விழாமலும் போகும். ‘பழம் எந்தக் கிளையிலிருக்கிறது – எதில் அடித்தால் பழம் விழும்‘ என்று குறி வைத்துக் கல்லெறிந்தால்தான் பழம் விழும் குறி வைக்காமல் கல்லெறிந்து கொண்டேயிருந்தால், அதில் அர்த்தமில்லை. தப்பித்தவறி இரண்டொரு பழங்கள் விழலாமே தவிர, பொதுவாக, கல்லெறிந்ததற்கு ஏற்ற பலனைக் காண முடியாது.

அதைப்போல போர் முறை வகுக்க வேண்டும். தனிப்பட்ட ஆளிடம் பகைமை உணர்ச்சி காட்டக்கூடாது.

தூசு – மாசுகள் துடைக்கப்பட வேண்டும்!

காலத்துக்கும் கருத்துக்கும் ஏற்ற வகையில், நம் கருத்துக்களை ஆதரிக்கும் தனிப்பட்டவர்களையும் அணைத்துக் கொள்ளும் வகையிலே – அப்படிப்பட்டவர்களும் கலந்து கொள்ளும்படியான அழகான போர் முறையை வகுக்க வேண்டும்.

பெரியாரவர்கள் போர் முறைகளை வகுத்தாரென்றால், அவருடைய ஆற்றலுக்கும், அறிவுக்கும், திறமைக்கும் நல்ல பலன் கிடைக்கும், அந்தப் போராட்டத்துக்கு நல்ல ஆயுதங்களாக நாங்கள் பயன்படு்வோம்.

நம் தலைவர் பெற வேண்டிய பலனை – வெற்றியைப் பெற வில்லையே என்ற கழிவிரக்கத்துடன் பேசுகிறேன். சுற்றியிருந்து துதிபாடுபவர்களைப்போல் நான் இதைச் சொல்லவில்லை. இயக்கத்திலே வெற்றிக்குத் தடையாக இருக்கின்ற இன்னல்கள், இடுக்கண்கள், தூசு – மாசுகள் துடைக்கப்பட வேண்டும், அதுவே தலைவருக்கு நாம் செய்கிற கடமை – பெருமை தரவல்லது என்று நான் கருதுகிறேன்.

புகழ் பாடியவன்தான் நான்

புகழ் பாடுவதைக் கசப்பாக கருதியல்ல, நான் இதைச் சொல்வது, புகழ்பாடியவன்தான் நான், இன்றைக்குப் பெரியாரிடத்திலேயுள்ளவர்கள் சொல்லும் புகழ் வார்த்தைகளில் பெரும்பாலானவை என்னால் சொல்லப்பட்டவைதான், நான் புதிது புதிதாகச் சொல்லிவந்த வார்த்தைகளைத்தான் இன்று அவர்களும் சொல்லி வருகிறார்கள். அவர்கள் ஒன்றும் புதிதாகச் சொல்லி விடவில்லை.

பெரியாரவர்களுடைய அறிவாற்றல் நாட்டுக்குப் பயன்படத் தக்க வகையிலே போர்முறை தீட்டப்பட வேண்டும், தனி நபர்களிடத்திலே பகை காட்டும் வகையிலே போராட்டம் அமைவதாக இருக்கக் கூடாது.

நாம் அங்கு !தி.க.வில்) இருந்தபோது அங்கே பார்ப்பனர்களுக்கு இடம் உண்டு, பரவஸ்து இராச கோபாலாச்சாரியார் என்னும் பார்ப்பனர் நம்மோடு இருந்து, இந்தியை எதிர்த்தபோது, திராவிட நாட்டில் வாழும் பார்ப்பனர்களெல்லாம் திராவிடர்கள்தான் என்ற முறையிலே பேசி வந்தோமே நினைவிருக்கிறதா – என்று திராவிடர் கழக நண்பர்களைக் கேட்கிறேன்.

பார்ப்பனீயம் எது?

நாம் திராவிடர் கழகத்தைவிட்டு வெளியேறிய பிறகுதான், தனிப்பட்ட ஆட்கள்மீது துவேஷம் காட்டும் கொள்கை திராவிடர் கழகத்திலே திணிக்கப்பட்டது.

நாம் திராவிடர் கழகத்தில் இருந்த காலத்திலேயேதான் ‘பார்ப்பனியம் என்ற சொல்லும் பிறந்து இன்று நம்மைப் பார்த்து ‘ஈயம் பித்தளை’ என்று கேலி – கிண்டல் செய்கிறார்கள் தி.க. தோழர்கள்! இந்த ஈயம், நம்மால் உற்பத்தி செய்யப்பட்டதல்ல, ஈரோட்டு ஈயம்தான்! பார்ப்பனக் கொள்கைகளை யார் யார் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களிமெல்லாம், பார்ப்பனீயம் இருக்கிறது என்றுதான் பொருள்.

பார்ப்பனரிடம் மட்டுமா பார்ப்பனீயம்?
‘பிரிட்டன் கொள்கைகள் எப்படி ‘பிரிட்டானியம்‘ என்று சொல்லப்படுகிறதோ, அதைப்போல, ‘பார்ப்பனீயம்‘ என்று பார்ப்பனர் கொள்கைகளைச் சொல்லலாம் – என்று, பெரியார் தான் முன்பு சொன்னார்! ‘தனிப்பட்ட பார்ப்பனர்களிடத்திலே நாம் பகை கொள்ளக் கூடாது, பார்ப்பனீயம்தான் நமக்குப் பகை‘ என்று பெரியார் சொன்ன அந்தத் தூய நிலை வளர்ந்தால், காட்டு மிராண்டி என்றோ, கலகம் விளைவிப்பவர்கள் என்றோ கலபத்தில் எவரும் நம்மைப் பார்த்துச் சொல்லிவிட முடியாது.

பார்பபனீயம் என்பது பார்ப்பனர்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்ற சொல்ல முடியாது, பாண்டுரங்கம் செட்டியாரிடமும் இருக்கிறது, பஞ்சாபிகேச சாஸ்திரியிடமும் இருக்கிறது. பஞ்சாபேகேச சாஸ்திரியாவது கொஞ்சம் பயந்து பேசுவார். பாண்டுரங்கம் செட்டியாரோ, நிமிர்ந்தபடி பேசுவார் சாதி ஒழியக்கூடாது என்று!

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம்!

ஆகவோதான், தனிப்பட்ட ஆட்களிடம் வெறுப்புக் காட்ட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன், என்னைக் கூட்டிப் பேச வேண்டுமென்று பெரியாரவர்கள் உள்ள படியே நினைத்தால், அதைவிட நல்ல காலம் தமிழ்நாட்டுக்கு வேறு ஒன்று இல்லை என்றுதான் சொல்லுவேன். அப்படிப் பேசும் போது இந்த, எனது கருத்தைத்தான் வலியுறத்திச் சொல்லுவேன்.

நேரு பண்டிதல், நான் முதலில் சொன்ன அந்த இரண்டு பாஷைக்குத்தான் பயப்படுவார். நாட்டு மக்களின் ஓட்டு நமக்கிருக்கிறது. இதைத் தவிர வேறு என்ன செய்தாலும் நேரு பயப்பட மாட்டார்.

மூன்றாவது மாடியில் இருப்பவர் மீது கல்லெறிய வேண்டுமென்றால், நாம் எங்கிருந்து கொண்டு கல்லை வீசினால் பட வேண்டியவர் மீது படும் என்பதை முதலில் பார்க்கவேண்டும். நாமும் இந்த உயரத்துக்கு – பக்கத்து மாடிமீது ஏறி நின்று கல்வீசினால்தான் முடியும் அதைப்போல, நேருவை எதிர்க்க வேண்டுமென்றால், நாம் அவரைச் சந்திக்குமிடம் சட்டசபைதான். ‘நாமும் ஓரளவு மாடிப்படி ஏற வேண்டும் – ஜனநாயகப் பயணத்தில் ஈடுபட வேண்டுமென்று பெரியார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கருப்புச் சட்டை போட்டால்தானா?

நான் திராவிடர் கழகத்திலிருந்தபோது, கருப்புச் சட்டை போட்டுத்தானாக வேண்டுமென்று பிடிவாதம் செய்தார்கள், திருச்சியில் நடந்த கமிட்டிக் கூட்டத்திலே – கருப்புச் சட்டை போட்டுக் கொண்டால் தான் பேசலாம் என்றார்கள், நானும் சரி என்றேன் – பேச வேண்டுமென்று எனக்கு ஆசையிருக்குமானால், கருப்புச்சட்டை போடும்படி நீங்கள் என்னை வலியுறுத்த முடியாது – என்று சொன்னேன். பிறகு நான் எந்த நாளும் கருப்புச் சட்டை – போடவேயில்லை. பின்னர் ஒரு சமயம் டாக்டர் சுப்பராயன் மந்திரியாக இருந்த காலத்தில், கருப்புச் சட்டை படைக்குத்தடை விதித்தபோது, நானே கருப்புச் சட்டைப் போட்டுக்கொண்டு பேசப் போனேன். அந்தச் சட்டைகூட நம் நெடுஞ்செழியனிடம் இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டதாகும்.

அடுத்த நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தின்போது, வெற்ற உடம்போடு நான் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, நீடாமங்கலம் தோழர் ஆறுமுகம், பெரியாரவர்களிடம், ‘பார்த்தீர்களா ஐயா, அண்ணாதுரை கருப்புச் சட்டை போட்டுக் கொள்ளாமலிப்பதை‘ என்றார், அதற்குப் பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? உடம்பேதான் கருப்பாயிருக்கிறதே‘, இன்னும் கருப்புச் சட்டை எதற்குப் போடவேண்டும்? – என்று கேட்டார் இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால், பெரியார், தனக்குத் தேவை என்று கருதிய போதெல்லாம், அவர் செய்கிற வாதத்தைப் போல் எந்த வக்கீலும் செய்யமுடியாது, அந்த அளவுக்குத் திறமையுடன் தனது வாதத்தை நிலை நிறுத்துவார், ஜனநாயகப் பாஷை அவருக்குத் தெரியாததல்ல – நன்றாகத் தெரியும்!

பூனைக்குப் பால் வைத்தது போல்!

ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்ட பிறகு, அந்தத் தோல்வியிலே அடைந்த பீதிதான் பெரியாரவர்களுக்கு இன்னமும் தேர்தல் என்றால் பிடிக்கவில்லை. பெரியாரைப்போல், காலஞ்சென்ற சௌந்திரபாண்டியன் அவர்களம் தேர்தலைப் பற்றிப் பீதி கொண்டிருந்தார்கள். ‘தெனாலிராமன் பூனைக்குப் பால் வைத்தது போல்‘ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். தெனாலிராமன் கொதிக்கப் கொதிக்கப் பாலைக் கொண்டுவந்து பூனைக்கு வைத்தானாம். பாலைக் குடிக்க வந்த பூனைக்கு வாய் சுட்டு விட்டதால் அன்று முதல் அது பால் குடிக்கவே பயப்படுமாம். அதேபோல், தேர்தலிலே ஜஸ்டிஸ் கட்சி பட்ட அல்லல், இந்த இருவரையும் தேர்தல் என்றால் அஞ்சும்படிச் செய்துவிட்டது. நானும் தேர்தல் என்றால் பயந்து ஓடியவன்தான்.

தேர்தலைக் கண்டு அஞ்சிக்கொண்டே இருந்தால் என்ன ஆவது என்ற எண்ணத்தில்தான் பிறகு, ‘தேர்தலில் நின்றுதான் பார்ப்போம் என்று கருதி தேர்தலில் நாம் நின்றோம்‘ டி.டி.கே. யைச் சாமானியர்களாகிய நாம் எதிர்க்க முடியுமா?‘ என்று தூரத்தில் ஓடிவிட்டால் என்ன ஆகும்? நாம் துணிந்து நின்றோம் டி.டி.கே.பயப்படக்கூடிய அளவுக்கு நம் சக்தி பயன்பட்டது. நம் ஆசைத்தம்பி வெற்றி பெற்றாரே, எப்படிப்பட்டவரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்? வெங்கடசாமி நாயுடுவை நாம் எதிர்க்க முடியுமா? என்று பயந்திருந்தால், ஆசைத்தம்பி சட்டசபைக்கு வந்திருக்க முடியுமா?

சிறுமையும் – பெருமையும் பெரியாரைச் சேரும்!

பல எதிர்ப்புகளிடையே பெரியாரின் எதிர்ப்பையும் கூடப் பெற்ற – நாம், 15 பேர் சட்டசபைக்குப் போக முடிந்தது, 15 பேர் வெற்றி பெற்றது அற்ப வெற்றிதான் என்றாலும் 17 இலட்சம் வாக்குகளை நாம் பெற்றிருக்கிறோம். பெரியார் மட்டும் கொஞ்சம் ஆதரவைக் காட்டியிருந்தால் – நாம் 50 பேர் சட்டசபைக்கு வந்திருந்தால் காங்கிரஸ்காரர்கள் இந்த அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க முடியாது. ‘மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுத்தால் போதும்‘ என்று கருதும் கொடுமைக்கார மாமியாரைப் போல், அண்ணாதுரை மூக்கறுக்கப்பட வேண்டுமென்று பெரியார் கருதினார், ஆனாலும், நான் மூக்கறுபடவில்லை. நான் பெறுகின்ற பெருமையும், சிறுமையும் பெரியாரைத்தான் சேருமே தவிர, என்னைச் சார்ந்ததல்ல.

என் கொள்கை பிடிக்கவில்லை – என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள் மக்கள் என்றால், அது என் தப்பல்ல, என் பள்ளிக் கூடத்தின் தப்பு எனச் சொல்லுவேன். நான் பயின்ற பெரியார் பள்ளிக்கூடம் எனக்குச் சொல்லித் தந்த பாடத்தின்படிதான் நான் நடப்பேன்.

தி.க. தேர்தலுக்கு வரவேண்டும்!

இனி நாம், ஜனநாயகப் பயனை அடையும்படியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனிப்பட்டவர்களிடம் காட்டுகின்ற பகையை விட்டொழித்து, உருப்படியாக முறையாகக் காரியங்களைச் செய்ய வேண்டும். காங்கிரசார் ஆணவத்துடன் பேசுவதை அடக்க வேண்டுமென்றால் ஜனநாயகப் பாஷையில்தான் நாம் பேச வேண்டும். இதற்குச் சட்டசபை செல்லும் திட்டத்தைப் பெரியார் அவர்கள் ஒத்துக் கொண்டு அடுத்த தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி திராவிடர் கழகம் தேர்தலில் ஈடுபடுமானால் தி.மு.கழகம் எந்தெந்த வகையிலே உதவ முடியுமோ, அந்த உதவிகளையெல்லாம் தாராளமாகத் தரும் என்பதை உள்ளத் தூய்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந் நிலைமை ஏற்பட்டு, சட்டசபையிலே 15 பேராக இருக்கும் நம்மவர்கள், 100 பேராக அடுத்த தேர்தலிலே வந்தால் நேரு இப்படியெல்லாம் பேச மாட்டார். நாமே நேருவை வரவழைத்துப் பேசச் சொன்னாலும் அவருக்குப் பேச நாக்கு எழாது. ‘காட்டுமிராண்டிகள்‘ என்று சொன்ன நேருவுக்கு ‘காட்டுமிராண்டி‘களான நாங்கள் கோட்டையிலே உட்கார்ந்து விட்டோம் என்பதைக் காட்ட வேண்டும். அந்தப் பாதைதான் சரி என்று திராவிடர் கழகம் ஒப்புக் கொண்டு ஈடுபட வேண்டும். அதற்கான யோசனைகளைச் சொன்னால் நான் கேட்கத் தயாராகயிருக்கிறேன்.

நிந்தனைக்கிடையே வளர்ந்தவன்

சட்டசபை சென்று நான் பேசிய பிறகுதான் ‘பெரியாரை நீங்கள் போய்ப் பார்த்துச் சமரசம் செய்யுங்கள்‘ என்று அமைச்சர் என்னைக் கேட்டார். ‘நான் பெரியாரைச் சந்திக்கவும் தயார், அதுவரை சட்டத்தை நிறுத்தி வையுங்கள்‘ என்றேன், ஆனால் அதை நிறுத்தி வைக்க அவர்களுக்கு வக்குவழியில்லை. ‘நான் பெரியாரைச் சந்திக்கிறேன்‘ என்று சொல்லியபோது பெரியார் நம்மை எவ்வளவுதான் இழித்துரைத்திருந்த போதிலும், அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால், சின்ன வயதிலிருந்தே நிந்தனைகளுக்கிடையே நான் வளர்ந்தவன், பெரியாரே எனக்குச் சொல்லி கொடுத்திருக்கிறார். பெரியார் என்னைத் திட்டினாலும அதற்க அர்த்தமில்லை. பதிலுக்குப் புகழ் மாலையைத்தான் பெரியாருக்குச் சூட்டுவேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு ஜனநாயகப் பாதைக்கு வருமாறு பெரியார் அவர்களை அழைக்கிறேன்.

(நம் நாடு - 13, 16-12-1957)