அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தாராவியில் அண்ணா...

அண்ணா வருகையை முன்னிட்டு 11.12.61 அன்று தாராவி வழிாக் கோலம் பூண்டு நின்றது. காலையிலிருந்து அண்ணாவின் கூட்டத்தை எதிர்நோக்கி மக்கள் காத்திருந்தனர். மணிக்கு இரு நிகழ்ச்சிகள் பங்கேற்கும் தலைவரின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் அறிவிப்புப் பலகையில் தெரிவிப்பு செய்யும் விளம்பரக் குழுவினரின் திறனைப் பொது மக்கள் வியந்த வண்ணம், ‘அண்ணா இப்போது எங்கே‘ என்பதை அறிந்து மகிழ்ந்தனர்.

நகர்மன்றப் பூங்கா இந்தப் பெருமையை அன்று, சம்பாதித்தது. பச்சைப்புல் படர்ந்த அதனுடைய மேனி அன்று, ‘இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மேதையைத் தாங்கப் போகிறோம்‘ என்ற பூரிப்பிலே விம்மித் தணிந்தது. வளைவும் வரவேற்புத் தோரணங்களும், வண்ணப் பூக்கோவைகளும், வண்ண ஒளி அமைப்புக்களும், மணிமொழியார் மேல் நோக்கில் அந்தப் பூங்காவின் எழிலுக்குக் கட்டியம் கூறின.

அழகான மேடை அமைப்பு-மகளிருக்கெனத் தனி இடம், செய்தி முகவர், வடவைக்குயில், ஆசியசங்கரன் ஆகியவர்கட்கு ஒரு தனி இடம் கிளைக்கழகச் சார்புமன்றச் செயலாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகள் – உறுப்பினர் பதிவு வேலையில் ஈடுபட்ட தோழர் நெல்லை சு.தங்கையாவுக்கென ஒரு பிரிவு மாலை அணிவோரைக் கவனிக்கத் தோழர் சு. தங்கவேலன் அவர்கட்கு ஒரு தனிப்பிரிவு தொண்டர்களாகத் தோழர்கள் தோ.ஈ.செல்லையா, நெல்லைச் செழியன், எம்.எம். செல்லையா ஆகியோர் ஆற்றிய சீரிய பணி அப்பப்பா எத்தனைச் சிறப்புக்கள்!

மாலை 6 மணிக்கு முன்னே கூட்டத்திடலை நோக்கி மக்கள் திரண்டனர். குழந்தைகளுடன் தாய்க்குலம் அணியெனத் திரண்டு வரவும், பணிகளையும் பறி வேலைகளையும் மறந்து மக்கள் கூடவும், காலம் இருட்டியது – பனியோ கொடுமையாகக் கொட்டியது!

பிற நிகழச்கிகளில் ஏற்பட்ட கால தாமத்தையும் சிறிதும் பொருட்படுத்தியது, பொதுமக்கள், ‘தலைவர் வருவார் – அறிவுரை தருவார்‘ என்ற துடிப்பில் காத்திருந்தனர். ஒலிபெருக்கியின் அறிவிப்புக்கள் அவ்வப்போது அண்ணா இருக்குமிடத்தை நிமிடக் கணக்கில் பரப்பிக் கொண்டிருந்தது. பார்க்கும் இடங்கள் எல்லாம் ஆர்வக்களை சொட்டும் முகங்கள்.

திடீரென ஒரு பெரும் பரபரப்பு, ‘அண்ணா வருகிறார்‘ என்றதும், ‘அண்ணா வாழ்க வாழ்க‘ என்று உரக்க மக்களின் உதடுகள் ஒலித்தன.

‘அழைக்கின்றார் அண்ணா‘ இசைத்தட்டு முழுக்கம் வானைப் பிளந்தது.

மணி ஒலி முழக்கவும், கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற மூன்று கொள்கை வரிகள் மாறனின் திறனால் ஒளிப்பிழம்பாய்த் தகதகத்தன. நான்கு கோணங்களிலிருந்தும் காமிராக்கள் ‘கிளிக், கிளிக்‘ என்று ஒலி கிளப்பின. சேலை நாத்திகனின் கைவண்ணத்தால் வண்ணப் பூக்கள், தலைவரின உடலெல்லாம் உதிர்ந்து மகிழ்ந்தன.

திராவிடப் பெருமக்களை வரவேற்று அவைத்தலைவர் பி.எஸ். செல்லையா அவர்கள் உரையாற்றினார்.

துணைச் செயலாளரர் வீரை மு.சோமசுந்தரம் தலைமை வகித்துச் சீரிய உரையாற்றினார்.

பம்பாய்த் தி.மு.கழகச் செயலாளர் புத்தரசு அவர்களும், காஞ்சி சி.வி.இராசகோபாலனும் உரையாற்றினார்கள்.

பிறகு இராணி அண்ணாதுரை சிறிது உரையாற்றினார்கள்.

இறுதியாக அறிஞர் அண்ணா அவர்கள் பேச எழுந்ததும், பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும், தனிப்பட்டவர்களின் சார்பிலும், மாலை கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டது.

அண்ணா அவர்கள் நீண்ட உரையாற்றினார்கள்.

கழகப் பொருளாளர் ஊ.வே. முடியப்பன் நன்றி உரையாற்றினார்.

பனி மிகுதியாகக் கொட்டினாலும, பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் காத்திருந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

ஆயிரத்துக்கும் அதிகமான மகளிர் கலந்துகொண்டது தனிச்சிறப்பாகும்.

(நம்நாடு - 15.12.61)