அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தெளிவில்லாத அரசியல் பணி நாட்டுக்கு நாசம் விளைவிக்கும்!

‘திராவிடநாடு‘ 10.12.61 இதழில் அறிஞர் அண்ணா அவர்கள்
தம்பிக்கு எழுதியுள்ள மடலின் ஒரு பகுதி வருமாறு:

தேங்காயின் மேல் உள்ள மட்டை, ஓடு இவைகளை நீக்கிவிட்டு, உள்ளே உள்ளதை மட்டும்தான் எடுத்துக் கொடுக்கிறார்கள் பயன் அறிந்து.

மாங்காய்க்கோ, முறை வேறு – மேலே உள்ள தோலையும் எடுத்துவிடுகிறார்கள். உள்ளே காணப்படும் விரைகளையும் நீக்கிவிடுகிறார்கள்.

மோர் கடைகிறார்கள்! வெண்ணெய் காய்ச்சுகிறார்கள்!

வாழை இலையில் சோறு வைத்துச் சாப்பிடுகிறார்கள்! பனை ஓலையில் விசிறி தயாரிக்கிறார்கள்.

வேப்பம்பூ எடுத்து ‘ரசம்‘ வைக்கிறார்கள். பூசணிப் பூவை அல்ல – இதுவும் பூ அதுவும் பூ!

வாழைக்காயை வேக வைக்கிறார்கள். பழத்தைப் பழமாகவே சாப்பிடுகிறார்கள்.

பால் காய்ச்சும்போது நெருப்பை அடக்கிவைக்கிறார்கள் பருப்பு வேகும்போது விறகை எறத் தள்ளுகிறார்கள்.

கோழியைக் கூடைபோட்டு மூடி வைக்கிறார்கள் கன்றினைக் கயிறுகொண்டு கட்டி வைக்கிறார்கள்!

இவைகள் எல்லாம் ‘மிகச் சாமானியமான‘ காரியம். ஆனால் இவைகளிலே ஒரு ஒழுங்குமுறை இருக்கிறதே!

பால் பானையை உறியில் வைக்கிறார்கள் – ஊறுகாய்ப் பானையை அவ்விதம் அல்லவே!

எது எது எங்கெங்கு இருக்க வேண்டும் என்பதற்கான முறை கெட விடமாட்டார்கள்.

உரலில் போட்டுக் குத்தவேண்டியது இது, அம்மியில் வைத்து அரைக்க வேண்டியது இது. இயந்திரத்தில் போட்ட அரைக்க வேண்டியது இது – என்று ‘பாகுபாடு‘ இருக்கிறதே. அது கெடாதபடி அல்லவா நடந்து கொள்கிறார்கள்!

அடுக்களையில் உள்ள தாய்மார் எதை எங்கு வைக்க வேண்டும் – எதை எப்படிச் செய்யவேண்டும் – எதை எப்போது செய்ய வேண்டும் என்று தெரிந்து செயல் படுகிறார்கள். தம்பி! அரசியல் கட்சிகள் இந்த அளவுக்குத் தெளிவுடன் காரியமாற்றக் கூடாதா? இல்லையே! வருகிற தொல்லையில் பாதி அளவுக்குமேல் இதனால் வருவது தானே!

தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டியது – பாலில் கலந்து சாப்பிட வேண்டியது வாயில் போட்டுத் தண்ணீருடன் விழுங்கிடவேண்டியது என்று ஒவ்வொரு முறை இருக்கிறதே தம்பி!

அதுபோல, எதை எதை எந்தெந்த முறையில் பயன்படுத்துவது என்று அரசியல் கட்சிகள் தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டாமா? நடந்துகொள்ளக் காணோமே!

சந்தைக் கடையில் இருக்க வேண்டியவர்களைச் சட்டசபைக்கு அனுப்புவது கட்சியின் நன்மைக்காக என்று கருதுவது – தாய்மார்களுக்குத் தெரிந்த அளவு தெளிவும் அரசியல் கட்சிப் பணியாளர்களுக்குக் கட்சிப் பற்றுக் காரணமாகத் தெரியாமல் போய்விடுவதால்தான்!

அந்தத் தெளிவு இல்லாமல், கட்சிக்காகக் கண்டவர்களுக்குக் கொடிபிடித்துக் கோலோச்சும் இடத்திலே கொண்டுபோய் அவர்களை உட்கார வைத்துவி்ட்டு, அவர்களால், கட்சிக்கும் கேடு ஏற்பட்டு, நாட்டுக்கும், நாச்சம் ஏற்படக்கண்டு, பிறகு கண்களைக் கசக்கிக் கொள்வதும், கை பிசைந்து கொள்வதும், காங்கிரசுத் தொண்டர்களின் கதியாவிட்டது.

நம்நாடு
(16.12.61)

‘எதைவும் சாதிக்க இயலும்‘

“திறமையும் அறிவும் மிகுந்தவன் என்று என்னை நீங்கள் கூறுவதை ஒப்புக் கொள்வதைவிட நான் ஒரு பாங்கி என்பதை மட்டும் ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் திரட்டிக் கொடுக்கும் வலிவையும், ஆர்வத்தையும் ஆற்றலையும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன். நிங்கள் கேட்கும் போது எப்பொழுதும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதிகமாக இந்த பாங்கியில் கடன் வாங்க முற்பட்டால் பாங்கியே அழிந்துவிடும்“ என்று அண்ணா அவர்கள் கோவை சிறப்பு மாநாட்டில் 16.12.61 ஆம் நாளன்று தலைமை தாங்கி முன்னுரையாகப் பேசுகையில் சுட்டிக் காட்டினார்கள்.

அவர் ஆற்றிய உரையாவது “இங்கே நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டிற்கு என்னைத் தலைமை தாங்கி நடத்தித் தருமாறு இந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவரும் கோவை மாவட்ட் செயலாளருமான நண்பர் ந. நாராயணன் அன்போடும் பாசத்தோடும் கேட்டு என்னைப் பாராட்டியும் புகழ்ந்தும் பேசி இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குமாறு பணித்திருக்கிறார்கள்.

என்னைப்பற்றி அவர்கள் இவ்வளவு மதிப்பும் அன்பும் பாசமும் கொண்டு பேசி இருப்பதற்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இலட்சியத்திற்குத் திறவுகோல்

உங்களுடைய அன்பும்மற்றும் பாசமும், ஒத்துழைப்பும் இருப்பதால் இந்த மாநாடும் நமது இலட்சியமும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு ஒரு சிறிதும் ஐயமில்லை.

இன்று காலையிலிருந்து நீங்கள் காட்டிவரும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் காணும்போது எனக்கு மிக மகிழ்ச்சியும், துணிவும் ஏற்படுகிறது.

இன்று காலை நடைபெற்ற ஊர்வலம் இந்த மாநாட்டிற்கப் பெரும் சிறப்பைக் கொடுத்திருக்கிறது. ஏறக்குறைய 10 கல்தொலைவு ஊர்வலம் வந்திருக்கிறது. அதில வாலிபர்களும், தாய்மார்களும் கடல்போல் திரண்டு காட்டிய ஆர்வத்தையும் ஒலித்த ஒலிகளையும் பார்த்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நீங்கள் இப்படி ஊர்வலம் நடத்துவதால் நமது பலம் பெருகி நமது இலட்சியம் வெற்றியடைய உதவுகிறது. ஆனால் அதைவிட எனது உடல்நலம் பாதித்து வருகிறது.

இன்று நடைபெற்ற இந்த ஊர்வலத்தைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டுதுடன், அவர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள்.

வாலிபர்கள் முகங்களில் காணப்பட்ட எழுச்சியையும், அவர்கள் கண்களில் வீசிய ஒளியையும் பார்த்தபோது நாம் நிச்சயம் வெற்றியடைவோம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இந்த உர்வலத்தைப் பார்த்தவர்கள் சிலர், ‘இது தேர்தல் வெற்றி ஊர்வத்திற்கு ஒரு அறிகுறி‘ என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் நினைக்கக்கூடும் – ‘தேர்தல் வெற்றிக்குப் பின் நடத்த வேண்டிய இந்த ஊர்வலத்தை இப்பொழுதே நடத்துகிறார்களே‘ என்று!

வலிவும் வளர்ச்சியும்

என்னைப் பொறுத்தவரை இந்த ஊர்வலங்கள் நமக்கு மேலும் மேலும் வலிவையும், வளர்ச்சியைம் கொடுக்கிற தென்றே நினைக்கிறேன். இன்று தெருக்களில் மக்கள் சாரைசாரையாக வந்த காட்சியைப் பார்த்தேன். வாலிபர்கள் உற்சாகத்தோடு எழுப்பிய ஒலிகளையும் கண்டேன் – கேட்டேன் தாய்மார்கள், தாங்கள் பெற்றெடுத்தச் செல்வங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்துவந்த காட்சியையும் பார்த்தேன். அவர்களிடம் ஒரு குடும்பப் பாசமும், பற்றும், நம்பிக்கையும் திகழ்வதைக் கண்டேன்.

இங்கு என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார்கள். ஒரு குடும்பத்தில் எத்தனைக் குழந்தைகள் இருந்தாலும் கன்னம் பெருத்து, துடிதுடிப்புடனும் மிக உற்சாகமுடனும் விளையாடும் குழந்தையைக் காணும் தாய்க்கு எவ்விதம் பாசமும், பற்றும் ஏற்படுமோ அதைப்போல, உங்களில் ஒருவனாகிய என்னைப் புகழ்ந்திருக்கிறீர்கள்.

தான் பெற்றெடுத்த செல்வம் அழகாக இருந்தாலும் அவலட்சணமாக இருந்தாலும் அக்குழந்தைமீது அந்தத் தாய்க்கு ஆசை பிறக்கும். அந்தக் குழந்தையை வாரி எடுத்துக் கன்னத்தில் முத்தமிட்டு, ‘இதோ என் ராஜா. இதுவே என் ரோஜா‘ என்று மகிழ்வதைப்போல் இங்கு என்னைப் பாராட்டி இருக்கிறீர்கள்.

என்னைப்பற்றிப் பேசியவர்கள் எனது திறமையைப் பற்றிப் பேசினார்கள். அவர்களுக்கு என்மீது இருக்கும் பாசத்தால் –பற்றால்- அன்பால் அப்படிப் பேசினார்கள்.

ஒத்துழைப்பும் ஆற்றலும்

நீங்கள் எனக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பால் – நீங்கள் காட்டும் ஆதரவால் உற்சாகத்தால் நான் காரியமாற்றி வருகிறேன்.

நீங்கள் கூறுவதைப்போல் எனக்கு மற்ற வகைகளில் திறமை இருக்கிறதோ இல்லையோ – ஒன்றில் மட்டும் எனக்கு ஆற்றல் இருக்கிறது. அதாவது எதிலும் உடனுக்குடன் கோபப்பட மாட்டேன். ஆத்திரப்படமாட்டேன். அவசரம் காட்டமாட்டேன் மிதமிஞ்சிய நம்பிக்கை கொள்ளமாட்டேன்.

நான் வாலிப வயதைத் தாண்டி, வயோதிக வயதை அடைந்துவருகிறேன். எனக்கு இப்போது வயது 53 ஆகிறது. உங்களக்கிருக்கும் இளமைத்துடிப்பும், ஆவேசமும் காட்டும் வயதைத் தாண்டிவிட்டேன். நிதானமாகவும், பொறுமையுடனும் செய்யவும் திறமை பெற்றிருக்கிறேன்.