அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தெரிந்தது என்ன? தெரியாதது என்ன?

‘திராவிட நாடு‘ 26.11.61 இதழில் அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதியுள்ள மடலின் ஒரு பகுதி வருமாறு:

காங்கிரசுக் கட்சி தவிர, தரமான – தகுதியான கட்சியே கிடையாது. அதிலே உள்ளவர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் ஆளத் தெரிந்தவர்கள், மறற்வர்களுக்கு ஏதும் தெரியாது. தன்னல மறுப்பும் கிடையாது – என்று மேடையிலே நின்று, மார்தட்டிப் பேசுகிறார்கள் காங்கிரசார் அதிலும் எவ்வளவுக்கெவ்வளவு பேசுபவர்களுக்கும் காங்கிரசின் தியாகச் செயல் நிரம்பிய வரலாற்றுக்கும் தொடர்பே இல்லாமலிருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு உரத்த குரலில், உறுதிகாட்டி, உருட்டி மிரட்டிப்பேசுகிறார்கள்!

திடீரென்று கேட்டால், ‘தண்டி‘ என்பது – ஊரின் பெயரா, ஆளின் பெயரா – என்று கூடச் சந்தேகப்பட்டுக் குழம்பும் காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்கள்.

‘ரவுலட்‘ சட்டம் தெரியுமா? என்று கேட்டுப்பார், தம்பி – புத்தம் புதுக் கதர் ஆடையை! விவரம் தெரியாமல் விழிப்பார்கள்.

முகமதலி, சவுக்கத்தலி தெரியுமா? – தெரியாது!

பாஞ்சாலத்திலே வீரமரபு ஏற்படுத்திய லாலா லஜபதிராய் வாழ்க்கை வரலாறு தெரியுமா? – தெரியாது!

வேறு என்ன தெரியும்? – மந்திரியிடம் பேசிக் காரியத்தைச் சாதித்துக் கொடுக்கக் கூடிய தரகர் யார் அவருக்கு என்ன தரவேண்டும்?‘ என்பது தெரியும்! எந்தத் தொகுதியில் எந்த ஜாதி மக்கள் அதிகம்? – அது தெரியும்!

மயக்குவதா, மிரட்டுவதா அந்த மக்களை? – அது தெரியும்.

காங்கிரசு நடத்திய வீரப்போராட்டங்கள், விறுவிறுப்பான சம்பவங்கள் எதுவும் தெரியாது!

பணம் இருக்க வேண்டும் – நிறைய எப்படிச் சேர்த்த பணமாக இருந்தாலும் சரி – கள்ள மார்க்கெட் பணமாக இருந்தால் மிக நல்லது, ஏனெனில், கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் தேர்தலில் செலவழிக்கலாம்!

பண்பு இருக்கிறதா? பொதுத் தொண்டாற்றிப் பயிற்சி இருக்கிறதா? – சட்டமன்றத்திலே பணிபுரியும் தகுதி இருக்கிறதா? இவைகளைக் கவனிக்கவே இல்லை!

பணம் உண்டா, ஏராளமாக? – தாராளமாகச் செலவிடத் தயாரா? – அப்படிப்பட்டவர்தான் வேண்டும். எதற்குத் துறவியாக வாழ்ந்து தூய்மைக்கும் வாய்மைக்கும் மதிப்பளித்த மகாத்மா வளர்த்த கட்சியைக் காப்பாற்ற! வெட்கக்கேடு இதை விட வேறு உண்டா? – ஆனால் நாட்டிலே இன்று இதைத் தானே காண்கிறோம்?

ஆங்காங்கு, தேர்தலில் வேட்பாளர்களாகக் காங்கிரசார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பவர்களின் தகுதி, திறமை, பண்பு, பயிற்சி, முன்னாள் தொடர்பு இவைகளைச் சற்றுப் பார்க்கச் சொல்லேன், தம்பி!

பணம் படைத்தோர்களைக் காங்கிரசுக் கட்சி எதற்காகப் பிடித்திழுத்துத் தேர்தலிலே நிறுத்துகிறது என்பது, ‘பாமரர்‘ என்று ஆட்சியாளர்களால் ஏளனமாகக் கருதப்படும் மக்களுக்கும் மிக நன்றாகப் புரிந்துதான் இருக்கிறது.

எனவே, தம்பி, இனி உன் வேலை – ஏற்கனவே மக்கள் அறிந்திருப்பதை அடிக்கடி பக்குவமான முறையிலே கவனப்படுத்தியபடி இருப்பதுதான்.

(நம்நாடு - 25.12.61)