அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தி.க. – தி.மு.க. இணைப்பு நிறைவேறுமா?

சென்னை – இராயப்பேட்டையில் 10.12.1957 மாலை முத்தமி்ழ் முன்னேற்ற மன்றச் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், அண்ணா அவர்கள் சொற்பொழிவாற்றுகையில், திராவிடர் கழகமும் – திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றாக இணைவது பற்றி வெளியான செய்தி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் முறையில் தி.மு.கழகத்தின் நிலையை விளக்கினார், அதன் விவரம் கீழே தரப்பட்டது.-

திராவிடர் கழகமும் – திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றாக இணைவது விரைவில் சாத்தியமே என்ற பெரியாரவர்கள் தஞ்சையில் கூறியதாகச் சில பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பது குறித்து என் கருத்தைத் தெரிவிக்கும்படி என்னிடம் ஒரு தோழர் எழுதிக் கேட்டிருக்கிறார்..

பெரியார் அப்படிப் பேசியிருப்பாரா?

அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், பெரியார் விருப்பம் அதுவாக இருக்குமானால் நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், பெரியார் அப்படிச் சொல்லியிருப்பாரா என்பது உண்மையில், சந்தேகத்துக்குரிய விஷயம்தான். உண்மையில் பெரியார் கருத்து அதுவானால் ‘விடுதலை‘ பத்திரிகையிலே செய்தியாகவோ, தலையங்கமாகவோ பெரியார் கையெழுத்திட்டு வந்திருக்கும். எனவே பெரியார் கூறியது உண்மையானாலும் சரி உண்மையில்லாவிட்டாலும் சரி எனது கருத்தை நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அப்படி, பெரியார் அவர்கள் என்னைப் பார்த்து அண்ணாதுரை, வாடா‘ என்று அழைப்பாரேயானால், நான் என்ன செய்வேன் என்று நீங்கள் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பதையும் நான் அறிவேன்.

அன்றைய பெரியாரும் இன்றைய பெரியாரும்!

நானும் மற்ற தோழர்களும் ஏழெட்டு ஆண்டுகளாக ஆரம்பித்து நடத்திவரும் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் அழைத்ததும் அப்படியே போய்விடுவேன் என்று நீங்கள் கருதிவிட வேண்டாம்.

நாம் திராவிடர் கழகத்திலிருந்த வெளியேறியபோது என்னென்ன திட்டங்கள் அங்கு இருந்தவோ, அவைகளுக்குத்தான் நாங்கள் உடன்பட முடியுமே தவிர, நாங்கள் வெளியேறிய பிறகு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட திட்டங்களுக்கு நாங்கள் உடன்படமாட்டோம்.

எங்கள் உடன்பாடே இல்லாமல் எங்களைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர்கள் இன்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் மலம் அள்ள வேண்டாம்

நாங்கள் அன்று கண்ட பெரியாருக்கும் இன்றைய பெரியாருக்கும் பெருத்த வித்தியாசமிருக்கிறது, அவது ஆற்றலில் அறிவில் உழைப்பில் குறைந்திருப்பதாகச் சொல்லவில்லை. அவரது சுற்றுச்சார்பில் இன்றைய தினம் பெரிய வித்தியாசமிருக்கிறது. நாங்கள் அன்று கண்ட பெரியார், அவசரப்பட்டு எந்த நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டார். தனி நபர்களிடத்தில் பகைமையுணர்ச்சி காட்டமாட்டார்.

தொண்டை மண்டலம் பள்ளியில் இந்தியில் எதிர்ப்பு நடந்தது கொண்டிருந்த நேரத்தில். பிராமண சமுதாயத்துக்கு ஒரு வேண்டுகோள் கொடுத்தார் – பெரியார்! மீண்டும் ‘அந்த நாளும் வந்திடாதோ‘ என்று பாடத் தெரிந்தவர்கள் பாடுங்கள்.

திராவிட நாடு கிடைத்தால் தங்கள் கதி என்ன ஆகுமோ என்று பார்ப்பனத் தோழர்கள் பயப்பட வேண்டாம், திராவிட நாட்டில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்ற பாகுபாடு இருக்காது. கட்டை வண்டி இழுக்கவும், குப்பை கூட்டவும், மலர் எடுக்கவும் பார்ப்பனர்களைப் பயன்படுத்துவோம் என்ற பயம் வேண்டாம், நாகரீகம் வளர வளர அந்த வேலைகளையெல்லாம் இயந்திரமே செய்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்‘ என்று அந்த வேண்டுகோளில் பெரியார் குறிப்பிட்டிருந்தார்.

பெரியாரோடு வேறுபாடு என்ன?

அந்தப் பெரியாரை நான் இன்னமும் வழிபட்டுக் கொண்டுதானிருக்கிறேன், அவர் வழிதான் நடந்து கொண்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல, அந்த நாளைய குருசாமியையும் தோழமைகொள்ள விரும்புகிறேன். அப்பொழுதெல்லாம் தோழர் குருசாமி ‘விடுதலை‘ பத்திரிகையில், பூணூலை வைத்துவிட்டுக் கழகத்தில் சேர்ந்த பார்ப்பனத் தோழர்களைப் பாராட்டி எழுவார், அறுக்கப்பட்ட பூணூல் 6, 7 என்று நம்பர் கொடுத்து எழுதுவார்.

நாம் திராவிடர் கழகத்தைவிட்டு வெளியே வந்த பிறகு, அவர்கள் எடுத்த முடிவுகளுக்கெல்லாம், நாமும் உடன்பாடு கொண்டவர்களத்ான் என்று கருதுவது தவறு.

நான் ஒன்ற சொல்லிக் கொள்வேன், இந்த விஷயத்தில் பெரியாருக்கு ஆழ்ந்த பற்று உண்டு. இந்தியத் துணைக் கண்டத்திலேயே பெரியாருக்க நிகராக உழைக்கக்கூடிய ஒரு பெருந்தலைவர் வேறு எவருமே இல்லை. மற்றபடி எதிலே எனக்கும் அவருக்கும் மாறுபாடு என்றால், பெரியாரவர்கள், என்னால் மட்டுமே இந்தக் காரியத்தைச் சாதித்து முடிக்க முடியும் தன் காலத்திலேயே இது செய்து முடிக்கப்பட வேண்டும். எனக்குப் பிறகு எல்லாம் நாசமாகிவிடும்“ என்பதை உளமார நம்பிக் கொண்டிருப்பவர்.

முதல் புரட்சிக்குத்தான் கொஞ்சம் நாளாகும்!

முதல் தோசை சுடுவதற்கத்தான் 5 நிமிடம் பிடிக்கும், முதல் தோசையைச் சுட்டுவிட்டால், பிறகு இரண்டாவது தோசை சுட 3 நிமிடம்போதும், அதன்பிறகு ஒவ்வொரு தோசைக்கும் இரண்டொரு நிமிடங்கள் போதும் வீட்டிலுள்ள தாய்மார்களுக்கு இந்தச் சூட்சமம் புரியும்.

அதேபோலத்தான், நாட்டில் புரட்சி ஏற்படுவதற்கும் முதல் கூட்டம் கொஞ்சம் நாளாகும், அதன்பிறகு எல்லாம், குறைந்த காலத்திலேயே அடுத்தடுத்து, மிகச் சுலபமாக நடைபெற்றுவிடும்.

லெனின் உண்டாக்கிய புரட்சிக்குப் பிறகு, ஸ்டாலின் மிகக் குறைந்த காலத்திலேயே புரட்சிகளை நடத்திக் காட்டினார். லெனினையும், ஸ்டாலினையும் விட ஆற்றலும் திறமையும் குறைந்தவரானாலும் குருஷேவால், ஸ்டாலினுக்குப் பிறகும் நாட்டை நடத்திச் செல்ல முடிகிறது.

இயந்திரம் அமைக்கப்பட்டுவிட்டால், அதன்பிறகு அதை இயக்க, நொண்டியாக இருந்தாலும், அவனால் முடியும். இயந்திரத்தை அமைக்க வேண்டிய பொறுப்பு பெரியாருடையது. இயந்திர – அமைப்புக்கான திறமையை வேறு காரியங்களில் காட்டுகிறார் பெரியார்.

நம்முடைய இயக்கம் – திராவிடர் கழகத்தையும் சேர்த்துத்தான் நம்முடைய இயக்கம் என்று சொல்லுகிறேன், காரியங்களை ஒத்திப்போட்டுக்கொண்டே செல்லக் காரணம் என்ன? நமது இலட்சியம் நிறைவேற இவ்வளவு காலத் தாமதம் ஆவதற்குக் காரணமென்ன?

30 ஆண்டு பெரியார் உழைப்பில் 3000 பேரா?

உண்மையில் பெரியாரவர்களைப் போல் வேறு யாரும் பொது மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள் – நித்தம் நித்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கிறவர்கள் கிடையாது. பெரியாரைப் போல் வேறு எந்தத் தலைவரும் தன் ஆற்றலைக் காட்டவில்லை. அப்படியிருந்தும் பலன்? 3000 பேர் சிறை சென்றார்கள்? 30 ஆண்டு உழைப்பின் பலன் இதுவாகத்தான இருக்க வேண்டும்?

கோழி வளர்ப்பவனுக்குக் கோழி முட்டையிட்டால்தானே பலன் உண்டு என்று பொருள்? கோழி முட்டையிடாவிட்டால் கோழியை வளர்த்து அவனுக்குப் பயன் என்ன? கோழியைப் போல, இயக்கத்தை வளர்த்து என்ன பலன்?

மூவாயிரம் பேர் சிறை சென்றிருக்கிறார்கள் என்று பெரியார் சொன்னால், நாங்கள் ஐயாயிரம் பேர் சென்றிருக்கிறோம் என்று சொல்கிறார் நம் ஆசைத்தம்பி, காங்கிரஸ்காரர்களைக் கேட்டால், நாங்கள் 60 ஆயிரம் பேர் சிறை சென்றிருக்கிறோம் என்பார்கள், கம்யூனிஸ்டுகளைக் கேட்டால், எங்களில் எத்தனைபேர் போனார்கள் என்று நம்பரே தெரியாது என்பார்கள்.

பெரியாரவர்கள் யாரையும் விட இந்த விஷயத்தில் ஒரு துளியும் குறைந்தவரல்ல, ஆனால், பெரியாரவர்களின் ஆற்றலுக்கேற்ற முழுப் பலன் கிடைக்கவில்லை. கிடைக்காமல் போவதற்குக் காரணம் என்ன?

சீடர்கள் யார் – யார்?

ஏசுநாதருக்கு – அவருக்குப் பின்னால் அவரது கொள்கைகளைப் பரப்ப 10-12 சீடர்கள் இருந்தார்கள், முக்கமது நபிக்கு 2-3 சீடர்கள் இருந்தார்கள், லெனினுக்கு ஸ்டாலின் இருந்தார், சன்யாட்சனுக்குப் பிறகு சியாங்கே – ஷேக் இருந்தார். மாசே – துங்கும் அவரால் காப்பற்றப்பட்டதாகச் சரித்திரம் சொல்லுகிறது.

பெரியாருக்கு சீடர்? யாராவது இருந்தால், இருக்கின்ற சீடரும் மாதாமாதம் மாறக் காரணம் என்ன?

அண்ணாதுரையைத் தள்ளிவிடுங்கள் – அண்ணாதுரை மட்டும்தானா சீடன்? ஜீவானந்தம் சீடனாக இருக்கவில்லையா? சௌந்தரபாண்டியனும் சீடராக இருக்கவில்லையா?

ஏன் – காமராசர் கூட, ஒரு காலத்தில் பெரியாரின் சீடராக இருந்ததாகப் பெரியாரும் – காமராசரும் சந்தித்து அவளவளாவுகிற நேரத்தில் காமராசரே சொல்லுவதாகக் கூறப்படுகிறது.

இதை, ‘செக்குரைட் லைப்‘ என்று ஆங்கிலத்தில் சொல்லவார்கள், சிதைந்து சிதைந்து வளரும் வளர்ச்சி என்ற இதற்குப் பொருள்.

திராவிட இயக்கம் மேலே முன்னேறிச் செல்லும்போது பின்னாலும் இழுக்கப்படுகிறது.

இதனால் நம் ஆற்றல் – சிதைகிறது, அதனால்தான் ஆணவக்காரர்கள் நம்மைப் பார்த்து, ‘காட்டுமிராண்டி‘ என்று கூறுகிற அளவுக்கு இடமளிக்கிறது.

(நம்நாடு - 12-12-1957)