நேற்று மாலை சென்னை இராயப்பேட்டையில்,
முத்தமிழ் முன்னேற்ற மன்றச் சார்பில் நடைபெற்ற மாபெரும்
இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் கலந்துகொண்டு
சொற்பொழிவாற்று கையில், சட்டசபையில் மந்திரி சபை மீது நம்பிக்கையில்லாத
தீர்மானம்வந்தபோது தி.மு.கழகத்தினர் நடந்துகொண்ட விதம் குறித்துத்
தவறான பிரச்சாரம் செய்து வரும் கம்யூனிஸ்டுகளுக்குத் தக்க
பதில் தந்து நிலைமையை விளக்கினார்.
அதன் விவரம் இங்குத் தரப்படுகிறது
–
எனக்கு இரண்டு மணி நேரமாகக் கடுமையான தலைவலி, அரசியல் தலைவலியல்ல
– உடல் நிலை காரணமான தலைவலிதான், ஓரளவு அரசியல் காரணமும்
இருக்கலாம். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கனம்
அமைச்சர்கள் எதிர்க் கட்சித் தலைவர்களுடன் அமர்ந்து, தென்னகத்தை
மிரட்டும் இந்தி பற்றி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டதன்
காரணமாகவும் ஓரளவு தலைவலி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ஆலோசனைக்
கூட்டத்தின் முடிவு தலைவலியைத் தந்துவிட்டதாகத் தவறாகக்
கருதிவிடாதீர்கள். அந்த முடிவு பற்றி நான் இப்போது எதுவும்
கூறப்போவதாகவும் எதிர்பார்க்காதீர்கள்.
எடுக்கப்பட்ட முடிவு, மத்திய
சர்க்காருக்கும், பாராளுமன்றக் கமி்ட்டிக்கும் சென்னை சர்க்கார்
தெரிவித்தான பிறகு ஏற்படுகிற முடிவைப் பொறுத்துத்தான் தமிழ்நாட்டு
அரசியலின் முடிவு அமைய இருக்கிறது. சென்னை சர்க்கார், ஓரளவு
எல்லாக் கட்சிகளின் கருத்துக்களையும் அறிந்துகொள்ள பெரு
முயற்சி எடுத்துக்கொண்டது பாராட்டத்தக்கது ஆகும். அவ்வளவுதான்
இதுபற்றி நான் இப்பொழுது சொல்ல முடியும்.
ஒரு நிலையில் நிற்க முடியாதவர்!
தலைவலி அதனால் நீண்ட நேரம்
பேச முடியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். நான் பேச
வேண்டியவைகளின் குறிப்பையும் எனக்கு முன் பேசியவர்கள் உங்களுக்குக்
கொடுத்திருக்கிறார்கள்.
முதுகுளத்தூர் சம்பவம் பற்றிச்
சட்ட சபையில் நாம் கடைப்பிடித்த கொள்கைகளையும், அதுபற்றிக்
கம்யூனிஸ்டுக்காரர்கள் பேசி வருவதையும் குறிப்பிட்டு, நண்பர்
ஆசைத்தம்பி உங்களுக்குச் சொன்னார். தோழர் இராமமூர்த்தி ஒரு
நிலையில் நிற்கக் கூடியவரல்ல, அதனால் அவருடைய கருத்தும்
நிலைத்தாக இருக்காது குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
சட்டசபை நடவடிக்கை நடபப்து
எப்படி?
சட்டசபையில் நடைபெறும் எந்த
நடவடிக்கையும் சட்டசபை அலுவல் கமிட்டி முன்னால் வைக்கப்பட்டு,
எந்தெந்தப் பிரச்சனையை எந்தெந்த அளவு பேசலாம் – யார் யார்,
எதை எதை எத்தனை நாளைக்கு விவாதிக்கலாம் என்பதைப் பற்றி கமிட்டியிலுள்ள
எல்லோரும் கலந்தாலோசித்து ஒருமித்த கமிட்டியில், சர்க்கார்
கட்சித் தலைவரான கனம் சுப்பிரமணியமும், எதிர்க்கட்சித் தலைவரான
திரு.வி.கே.இராமசாமி முதலியாரும், தி.மு.கழகச் சார்பில்
நானும், கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரான திரு.கல்யாணசுந்தரமும்,
பி.சோ. கட்சித் தலைவரான திரு. சின்னதுரையும், சோஷலிஸ்டுக்
கட்சித் தலைவரான திரு. பக்கிரிசாமி பிள்ளையும், மற்றும்
சுசேச்சையாளரான டாக்டர் மதுரமும், ஆதித்தன் முதலியோரும்
இருக்கிறார்கள். இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால், சட்டசபையில்
எந்தப் பிரச்சனையும் திடீரென்று பேசப்படுகிறது என்று நீங்கள்
நினைக்கக் கூடாது என்பதற்குத் தான், எதுவும், முன்கூட்டியே
முறை வகுக்கப்பட்டுத்தான் சபைக்குக் கொண்டு வரப்படுகிறது
என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொறுப்பை அலட்சியப்படுத்தலாமா?
முதுகுளத்தூர் பிரச்சனை பற்றி
அந்தக் கமிட்டியி்ல் பேச ஆரம்பித்த நேரத்தில், திரு.கல்யாணசுந்தரம்,
தனது நம்பிக்கையில்லாத தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை. இதை
இங்கு கம்யூனிஸ்டு நண்பர்கள் கம்யூனிஸ்டுகள் பேசுவதைக் கேட்பவர்கள்
யாரேனும் வந்திருந்தால் அவர்கள் –தங்கள் மனதில் பதிவு செய்து
கொள்ள வேண்டும். இதுகூட ஆச்சரியமில்லை, இன்னும் சொல்லப்போனால்,
தோழர் கல்யாணசுந்தரம் அன்றைய கமிட்டிக் கூட்டத்துக்கு வரவே
இல்லை. தனக்கிருக்கும் பொறுப்பைக்கூட அவர் உணராமல், அவர்
அன்றைய தினம் வரவில்லை. வராததுமட்டுமல்ல கமிட்டியிலிருந்து
நான் இராஜினமா செய்வதாகவும் சொல்லிவிட்டார். சட்டசபைத் தலைவர்
கொஞ்சம் அவரே முடிவு செய்யக்கூடியவராக இருந்தால் இராஜினாமாவை
ஏற்றுக் கொண்டிருப்பார். அவரை இதுதான் சமயம் என்று விரட்டக்கூடிய
அந்த அற்பபப் புத்தியும் எங்களுக்கு இல்லை.
கல்யாணசுந்தரம் சட்டசபை பணி!
நான்தான் தோழர் கல்யாணசுந்தரம்
அவர்களிடம் சென்று, இராஜினாமாவை வாபஸ் வாங்கிக்கொள்ளும்படி
கேட்டுக் கொண்டேன். நீங்கள் சொல்லிப் பயனில்லை, தலைவர் சொல்ல
வேண்டும், அவர் கொஞ்சம் ஜாடையாகச் சொன்னாலும் நான் வாபஸ்
வாங்கிக் கொள்ளலாம்‘ என்றார். அதன்பிறகு நான், தலைவருக்கு
ஜாடையாகக் கூறி, அதன் பிறகு அவர் வாபஸ் வாங்கிக் கொண்டார்.
பதவிக்கு வந்த ஆபத்து எப்படிக் காப்பாற்றப்பட்டது என்பதைச்
சுட்டிக்காட்ட அல்ல, நான் இதை இங்குக் குறிப்பிட வந்தது,
பிரச்சனைகள் வரும்போது பொறுப்புணர்ச்சியை அலட்சியப்படுத்திவிட்டுப்
போய்விடப் பார்த்தார் என்பதை எடுத்துக்காட்டத்தான் இதை நான்
இங்குக் குறிப்பிட்டேன்.
அன்றைய கமிட்டியில் சோஷலிஸ்டுக்
கட்சியைச் சார்ந்த தோழர் நல்லசிவம் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத
தீர்மானம் குறித்துதான் பேசப்பட்டது. ‘அந்தத் தீர்மானத்தை
விவாதித்தால் போதும், ஓட்டெடுக்கத் தேவையில்லை‘ என்று முடிவு
செய்யப்பட்டு ‘முதுகுளத்தூர் பற்றி விவாதித்துவிட்டால் போதுமானது’
என்ற அந்த முடிவை, சோஷலிஸ்டுத் தலைவர் பக்கிரிசாமிப் பிள்ளையும்
ஒப்புக் கொண்டார், எனவே, அந்தத் தீர்மானம் வாபஸ் வாங்கப்பட்டது.
கம்யூனிஸ்டுகள் மன்னிக்க வேண்டும்!
ஒரு சினிமாக் கொட்டகையில்
‘புதுமைப்பித்தர்‘ நடப்பதாக வெளியே விளம்பரப்படுத்தப்பட்டு
‘மர்மவீரன்‘ படம் காட்டப்பட்டால் என்ன அர்த்தம்? பணம் கொடுத்து
டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தவன் என்ன செய்வான்? ‘புதுமைப்பித்தன்‘
பார்க்கலாம் என்று வந்தால் மர்மவீரன் காட்டுகிறார்களே –
என்று ஆத்திரப்படுவான், ‘பணத்தை வாபஸ் செய்‘ என்று கேட்பான்,
ஏதோ வந்துவிட்டோம், ஏதாவது ஒரு சனியனைப் பார்த்துவிட்டுத்தான்
போவோமே‘ என்று எண்ணுபவன் காட்டுகிற படம் எதுவானாலும் பார்த்துவிட்டுச்
செல்வான்.
அதே முறையில்தான் ‘வலியுறுத்தப்படக்கூடாது‘
என்று நாங்கள் வரையறுத்துக் கொண்டிருந்த முடிவுக்கு மாறாக
மறுநாள் சட்டசபையில் நடந்திருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் நாகரீகமா இது?
முதல் நாள் செய்த முடிவுப்படி
நம்பிக்கையில்லாத தீர்மானம் வராது என்ற நம்பிக்கையில் மறுநாள்
சட்டசபைக் கூட்டத்துக்கு நான் 10.00 மணிக்குப் போகாமல் கொஞ்சம்
தாமதமாக 11.00 மணிக்குப் போனேன். தோழர் கல்யாண சுந்தரத்துக்கு
அரசியல் நாகரிகம் புரிந்துதிருக்குமானால், ஒரு கட்சியின்
தலைவர் இல்லாத நேரத்தில் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து
வலியுறுத்தியிருக்க மாட்டார். அவசர அவசரமாக, சமயமறிந்து
நம் தி.மு.க உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்
என்பதைப் பரீட்சிக்கலாம் – என்ற எண்ணத்துடன், அந்த நம்பிக்கையில்லாத
தீர்மானத்தைக் திடீரெனக் கொண்டு வந்திருக்கிறார். அந்த நேரத்தில்,
தி.மு.க. தலைவனான நான் இல்லையே என்ற நம் உறுப்பினர்கள் யோசித்தார்கள்.
நம் கழகத் தோழர்களுக்கு இருக்கும் இயற்கையான அறிவுக் கூர்மையும்,
கடமையுணர்ச்சியும் அந்தத் தீர்மானத்துக்கு – ஆதரவாக அவர்களை
எழுந்து நிற்கச் செய்தன, உடனே சபை, அந்தத் தீர்மானத்தை ஏற்றது.
இதையெல்லாம் நான் மனந்திறந்து
பேச நேர்ந்தமைக்காக, கம்யூனிஸ்டுத் தோழர்கள் மன்னிக்க வேண்டும்.
கம்யுனிஸ்டுக்காரர்கள் பற்றிப்
பொதுவாக உலக – முழுவதிலுமே ஒரு கெட்ட பெயர் இருந்து வருகிறது,
‘யார் அவர்களை நம்பினாலும், பாதி வழியில் அவர்கள் விட்டுவிடுவார்கள்‘
என்பதுதான் அந்தப் பெயர், நான் தீர்மானித்திருப்பது என்ன
என்பதை நீங்கள் யூகிக்கக்கூட முடியாது.
கம்யூனிஸ்டுகள் எல்லா கார்டையும் திறந்து காட்டுவதில்லை,
ஒரு கார்டைத் திறந்தும் இன்னொரு கார்டை மூடி மறைத்தும் காட்டினால்,
நான் ஒரு கார்டைக்கூட அவர்களுக்குக் காட்டமாட்டேன். அது
மட்டுமல்ல, என்னிடம் எத்தனைக் கார்டுகள் இருக்கின்றன என்பதைக்
கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
காமராஜர் என்ற அடைமொழி ஏன்?
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலுள்ள
வாசகங்களை மாற்றியமைக்க வேண்டுமென்று ஓட்டெடுக்கும் முன்புகூடக்
கேட்டேன். தோழர் கல்யாணசுந்தரம் மாற்றிக் கொள்ளவில்லை. எல்லோரும்
நான் சொல்லும் இந்த வாசகங்களை நன்றாகக் கவனிக்க வேண்டும்
– ‘காமராஜ நாடார் தலைமையில் இயங்கும் இந்த மந்திரிசபை மீது
நம்பிக்கையில்லை‘ என்ற வாசகத்தை அந்த நம்பிக்கையில்லாத்
தீர்மானத்தில் சேர்ந்திருந்தார் தோழர் கல்யாணசுந்தரம், நான்
– இந்த மந்திரிசபை மீது நம்பிக்கையில்லை‘ என்று பொதுவாக
இருந்தால் போதும், காமராஜ் நாடார் தலைமையில் இயங்கும்‘ என்ற
அடைமொழி வேண்டாம் என்று சொன்னேன். ஏனென்றால், காமராசர் தலைமையில்
இல்லாமல் வெங்கட்ராமன் தலைமையிலோ, பக்தவச்சலம் தலைமையிலோ,
சி.சுப்பிரமணியம் தலைமையிலோ இந்த மந்திரிசபை இயங்கினால்,
நம்பிக்கை உண்டு என்பது போன்ற பல்வேறு மாதிரியாக அர்த்தம்
கொடுக்கும் என்று சொன்னேன். ஆனாலும், அவர் என் பேச்சைக்
கேட்கவில்லை. ‘இல்லை, இல்லை, காமராஜ் நாடார் தலைமையில் இயங்கும்
மந்திரிசபை என்று இருப்பது தான் சரி‘ என்று அவர் கூறிவிட்டார்.
அப்படியானால் சரி, உங்களுக்குக் காமராசர் மீது மட்டும் கோபமிருக்கலாம்,
எனக்குக் கோபம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம். இரவில் கோபம்
எனக்கு வேண்டாம்‘ என்று கூறிவிட்டேன். கடைசி வினாடிவரை வாதாடினேன்.
முதுகுளத்தூர் சம்பவங்களுக்குக் காரணம் காமராஜ நாடாரும்,
பக்தவச்சலமும்தான் என்று அவர்கள் பண்ணிப்பண்ணி சொன்னார்கள்.
கக்கனை நீக்கிவிட்டுத்தான் சொன்னார்கள். ஒருவேளை ஆதித்திராவிட
மக்களின் மனம் புண்பட்டுவிடுமோ அவர்கள் ஆதரவை எங்கே இழந்து
விடுவோமோ என்ற அச்சத்தால் கக்கன் பெயரை விட்டுவிட்டார்களோ
என்னவோ எனக்குத் தெரியாது!
இதில் என்ன தவறு?
ஆங்கிலத்தில் இப்பொழுதுள்ள
இந்த ஆட்சி முறைக்கு காபினெட் முறை‘ என்று பெயர். மந்திரிசபை
கூட்டுப் பொறுப்பில் இயங்குவது. ஒரு மந்திரி நல்லது செய்தால்
அது மற்ற எல்லா மந்திரிகளையும் சாரும். அதே போல, ஒரு மந்திரி
எடுக்கும் முடிவு மந்திரிசபையே எடுத்த முடிவுபோலத்தான் கருதப்படும்.
எனவே, இரண்டு மந்திரிகளை மட்டும் குறிப்பிடுவது அரசியல்
நாகரிகத்துக்கு அழகல்ல, எனவே நாங்கள் உங்களோடு வரவில்லை.
இதில் என்ன தவறு?
அடுத்தபடியாக பெரியாரை அடக்க
வேண்டுமென்று பெரு முயற்சி செய்த ஒரு மசோதாவை சர்க்கார்
கொண்டு வந்தார்கள். உண்மையிலேயே நாங்கள் காமராசர் கையாளாக
இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும், அதை ஆதரித்திருக்க
வேண்டும், அல்லது, வோட்டெடுப்பின்போது வெளிநடப்புச் செய்திருக்க
வேண்டும்.
இதற்கு ஏன் இவ்வளவு நேரம்?
150 காங்கிரஸ்காரர்கள், 4
கம்யூனிஸ்டுகக்காரர்கள், 20 ஜனநாயகக் காங்கிரஸ்காரர்கள்
மற்றும், சோஷலிஸ்டுகள், பிரஜாசோஷலிஸ்டுகள், சுயேச்சைகள்
அத்தனை பேரும் சேர்ந்து வலியுறுத்தினார்கள் அந்த மசோதாவை!
ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு அந்த மசோதாவை ஆதரித்துப்
பேசினார்கள்! பக்தவச்சலம், சட்டப் புத்தகத்தை – எரிப்பவர்களுக்கு
3 ஆண்டு தண்டனை கொடுக்க வேண்டும்‘ – என்றார், கம்யூனிஸ்டுக்
கட்சியைச் சேர்ந்த பழனிச்சாமி, மூன்றாண்டு தானே? அது போதாது‘
என்றார் பக்தவச்சலம், பெரியாரை பைத்தியம்‘ என்றார், பழனிச்சாமி,
அதற்கு ஒப்புதலளித்துப் பேசினார். தி.மு.கழகம் ஒன்றதான்
துணிந்து அந்தமசோதாவை எதிர்த்தது – ஆதரிக்கவில்லை, எதிர்ப்பதனால்,
பெரியாரின் பேராதரவைப் பெற்றுவிட முடியாது என்பதைத் தெரிந்தும்
துணிந்தே அதை எதிர்த்தது. நாங்கள் காமராசர் கையாட்களா என்ற
கேட்கிறேன்.
இந்த மசோதாவைச் சபைக்கு வருமுன்,
அலுவர் கமிட்டியிலே ‘இந்த மசோதாவை விவாதிப்பதற்காக எத்தனை
மணி நேரம் – ஒதுக்குவது‘ என்று யோசித்தபோது நான், ‘ஒருநாள்
வேண்டும்‘ என்றேன், அப்பொழுது தோழர் கல்யாணசுந்தரம் ‘இதற்க
ஏன் இவ்வளவு நேரம்? 10 நிமிடம் போதும் – 15 நிமிடம் போதும்‘
என்றெல்லாம் வாதாடினார், அதை நாம், சரி சரி என்று ஒத்துக்
கொள்ளப்போகிறோம், இவ்வளவு தானே? என்ற சொன்னார்.
காமராசர் கையாள் கல்யாணசுந்தரமா?
நானா?
நேற்றுவரை, குற்றம் என்று
கருதப்படாத சில காரியங்களை இன்று குற்றம் என்று சொல்லக்கூடிய
மசோதாவாக இது இருக்கிறது. இதற்க 10 நிமிடமெல்லாம் போதாது,
என்று நான் சொன்ன நேரத்தில், தோழர் கல்யாணசுந்தரம், 10 நிமிடம்
போதும் என்றால், அவர்தான் காமராசருக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.
அவர் காமராசரின் கையாளா, நாங்கள்
– கையாட்களா என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
திராவிட முன்னேற்றக் கழகம்
யாருக்கம், எப்பொழுதும் கையாளாகாது. அதனிடத்திலே சில திட்டவட்டமான
கொள்கைகள் இருக்கின்றன. யார் அதை மிரட்டினாலும் மிரட்டும்போது
அது மிரள்வதில்லை, ஆசை காட்டும்போது அதிலே அது மயங்கி விடுவதுமில்லை
என்பதை இந்த நேரத்தி்லே தெரிவித்தக் கொள்கிறேன்.
(நம்நாடு - 11-12-1954)