அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தி.மு.க. பற்றி குசராத்தி ஏடு தந்த செய்தி

ஆமதாபாத் செய்தியாளர் மாநாட்டில் அண்ணா கூறிய விவரம்:

ஆமதாபத்திலிருந்து குசராத்தி மொழியில் வெளியாகும் ‘சந்தேஷ்‘ என்னும் நாளிதழில் 11.12.61 அன்று வெளியான செய்தியின் மொழிபெயர்ப்பு வருமாறு –

தலைப்பு

கம்யூனிஸ்டு சுதந்திரா கட்சிகளுடன் தேர்தலுக்குக் கூட்டு முயற்சி செய்து கொண்டிருக்கும், டி.எம்.கே. கட்சி – கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை தந்த விளக்கம்
(காரியாலய நிருபர்)
ஆமதாபாத் (ஞாயிறு)
பாரதத்திலிருந்து எல்லா வகையிலும் தனித்துத் திராவிடஸ்தான் கேட்கும் டி.எம்.கே. (திராவிட முன்னேற்றக் கழகம்) கட்சியின் முக்கயிச் செயலாளர் திரு.சி.என். அண்ணாதுரை இன்று காலை பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில் கூறியதாவது.

“மதராஸ் இராஜ்யத்தில் காங்கிரசை எதிர்ப்பதற்கு மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தைகள் நடந்த வகையில் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் எங்களது பாதிப் பேச்சு வார்த்தைகள் சந்தோஷமாகவே முடிந்துள்ளன. மேலும் சுதந்தராக் கட்சியுடன் நடந்த பேச்சுக்களின் பலனும் சந்தோஷமாகவே இருக்கும் என நம்புகிறேன்“.

திரு. அண்ணாதுரை கூறியதாவது

“கம்யூனிஸ்டுக் கட்சி எங்களுடன் கூட்டு முன்னணி அமைக்கக் கேட்டு இருந்தது. ஆனால், எங்கள் கட்சி அதை மறுத்துவிட்டது. காரணம், எங்கள் நோக்கம் தேர்தல் உடனப்டிக்கையுடன் பரஸ்பரமாகப் போட்டியிடுவதே நலம் பயக்கும் என்றதாகும்.

திரு. யாக்னின் அவர்களுக்கு ஆதரவு தருவோம்

அவர் மேலும் கூறுகையில், ‘ஆமதாபாத்தில் தி.மு.கழகக் கிளையின் நிலை, தேர்தலில் இந்துலால் யாக்னின் (ஜனதா சமிதி) மேலும், கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவு தருவதாக இருக்கும் என்றார்.

அவர் மேலும், ‘ஆமதாபாத்தில் சுமார் பத்தாயிரம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அதில் 1500 பேர் தி.மு.க. உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள்‘ என்று கூறினார்.

ரூ.5000 பணமுடிப்பு

ஆமதாபாத் தமிழர்கள் சார்பில் என்னிடம் தேர்தலி நிதி அளிக்க இருக்கிறார்கள். ரூ.5000 பணமுடைப்பைப் பெறவே நான் இப்பொழுது வந்திருக்கிறேன்.

மேலும் கூறுகையில், ‘கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் தனித் திராவிடஸ்தான் கேட்போம்‘ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘சமுதாய பொருளாதாரத் துறைகளில் எங்கள் கட்சி கம்யூனிஸ்டுக் கட்சியிடன் மிக நெருங்கி இருக்கும். ஆனால், நாங்கள் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கையுடையவர்கள்“ என்றார்.

குறிப்பி அறிஞர் அண்ண அவர்கள் 10.12.61இல் ஆமதாபாத் வந்தபோது, ஆமதாபாத் தி.மு.கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். ஆமதாபாத்திலுள்ள எல்லா இதழ்களின் நிருபர்களும் கலந்து கொண்டுனர். நீண்ட நேரம் பேட்டி நடந்தது.

‘சந்தேஷ்‘ எனும் நாளிதழ், ஆமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய குஜராத்தி மொழி இதழாகும்.

(நம்நாடு - 26.12.61)