அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தி.மு.கழகம் நமது குலக்கொடி

அண்ணாவின் அன்பழைப்பு – அரும் விளக்கம்

சென்னை, ஏப்ரல் 10, அவரைக்காய் பறிப்பவர்கள் காயைத்தான் பறிப்பார்களே தவிர கொடியை அறுக்க மாட்டார்கள். கொடி அறுபடாமலிந்தால் பின்னர் கொத்துக் கொத்தாய்க் காய் காய்க்கும். காங்கிரசு அத்திக்காய் போன்றது. அத்திக்காய் பறிக்க மரத்தில் ஏறவேண்டும். அதைப் பறித்துத் தின்றால் சில காய் துவர்க்கும். சில கசக்கும், அந்தப் பழத்தைப் புட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தையாக இருக்கும்.

தி.மு.கழகம் பூசணிக் கொடி போன்றது. பூசணிக்கொடி சிறியது – காய் பெரியது. அத்திக்காய் சிறியது – மரம் பெரியது. சிறிய பூசணிக் கொடியில் பெரிய காய் இருப்பது தான் ஆச்சரியம். காயைக் கொடி தாங்காது என்பதால் தான் அது தரையில் படர்கிறது. எனவே நம் தோட்டத்துப் பூசணி்க் கொடியை அறுக்காதீர்கள். அது நம் குலுக்கொடி. அது நமது குலக்கொடி என்பது தெரிந்தும் அதை அறுத்தால் பிறகு இந்தத் தலைமுறைக்கு விடுதலை இல்லை.

நேரத்தை நழுவ விடாதீர்கள்

பண்டித நேரு ‘வகுப்புவாதக் கட்சிகை ஒடுக்க வேண்டும்‘ இந்தியர் என்ற உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்‘ என்று பேசியிருக்கிறார். நம்மிடையே தோழமை உணர்வு குறைந்து இந்தியர் என்ற உணர்வு புகுந்தால் நாம் எப்படி விடுபட முடியும்? எனவே இந்தநேரத்தில் வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள். தண்டபாணி தேசிகர் பாடியதைப் போல ‘நல்ல சமயம் இதை நழுவ விடாதீர்கள்‘ என்று கேட்டுக் கொள்கிறேன்.

தாய்மார்கள் அடுக்களையில் பால் காய்ச்சும்போது முகத்தில் பூச்சிவந்து விழுந்தாலும் அதைக் கவனிக்காமல் பாலின் மீது வனத்தை வைத்திருப்பார்கள். பூச்சியைக் கவனித்தால் பால் பொங்கி வழிந்துவிடும். பாலை அடுப்பிலிருந்து இறக்கும் வரை வேறு எதிலும் கவனம் செல்லாது தாய்மார்களுக்கு! அதைப்போல நாம் நமது லட்சியம் நிறைவேறும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அண்ணா அவர்கள், நேற்று மாலை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்கள்.

நிக்கப்பட முடியாத வடு

அணண்ா அவர்கள் பேசியதாவது – “எனக்கு முன்பாக பேசிய மதியழகன் அவர்கள், நாம் அடைந்த வெற்றியையும் அடைய விருக்கின்ற வெற்றியையும் எடுத்துரைத்தார். நான் அடைந்துள்ள தோல்வி பற்றி, ஒளிவுமறைவு இன்றி ஒப்புக் கொள்கிறேன். நேற்று வரை கழகத்தில் எந்தக் ‘கலாம்‘ ஏற்பட்டாலும் அதை நீக்கிவிட முடியும் என்று என் நெஞ்சத்தில் நிரம்பியிருந்த நம்பிக்கை, இன்று என் உள்ளத்தில் நீக்கப்பட முடியாத ஓர் வடுவை ஏற்படுத்தியிருக்கிறது. என் பொது வாழ்வில் மிகப்பெரும் தோல்வியை இன்று பெற்றிருக்கிறேன்.

நிர்வாகத்திலே சில பல குறைபாடுகள் இருக்கலாம். யார் நடத்திச் சென்றாலும் அந்தக் குறைபாடுகளை உரிய காலத்தில்தான் நீக்க வேண்டும். அவற்றை நீக்கத்தக்க ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அவற்றை நீக்ககுவதற்குக் கால அளவு இருக்கவேண்டும். இந்த மூன்றும் இல்லையேல் நண்பர் மதியழகன் குறிப்பிட்டது போல் – மிகப் பாடுபட்டு வளர்த்த இந்தப் பாசறை மாற்றார் பேச்சுக்கு ஆளாகும்.

தூய உள்ளத்துடன் நம்புகிறேன்

சம்பத்தும் மற்றவர்களும் வெளியேறிய செய்தியை நிர்வாகத் திறமை மேலும் அதிகமாக நமக்கு ஏற்பட வேண்டும் என்ற பாடமாக நான் ஏற்றுக் கொள்கிறேன். விலகிச் சென்ற தோழர்கள் மீண்டும் வந்து சேருவார்கள் எனத் துணிவாக – தூய உள்ளத்தோடு நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இந்த இயக்கத்தைச் சிதறடிக்க யாரோ சில பத்திரிகை நிருபர்கள் முயலுகிறார்கள் என்று கருணாநிதி அவர்கள் சொன்னார். அந்த நிருபர்களைச் சொல்லிப் பயனில்லை. அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டிருப்பவர்களுக்குப் பரபரப்பான செய்திகளைப் போட்டால் பலன் கிடைக்கக்கூடும். நன்றாக எழுதப் கூடிய ஓவியன் ஒருவன் தனது தாயின் உருவத்தையும் தங்கையின் உருவத்தையும் நிர்வாணமாக எழுதிக் காட்டினான் என்றால் அவனை ஓர் நல்ல ஓவியன் என்று எவரும் கருதமாட்டார்கள். கருணாநிதியாவது தமது வீட்டுத் தாழ்வாரம் வரை நிருபர்களை அனுமதித்தாகச் சொன்னார். நான் பக்கத்தில் கூட அவர்களை அனுமதிப்பதில்லை.

இதுவா பத்திரிகை தர்மம்?

கூட்டம் நடந்தால் பத்திரிகைகளில் செய்தி வராது. இங்கு நீங்கள் பல்லாயிரக் கணக்கில் கூடியிருக்கிறீர்கள். கழகத்தைப் பற்றி வரலாற்று ஆதாரத்தோடு மதியழகன் பேசினார். உள்ளக் கிளர்ச்சியோடு கருணாநிதி பேசினார். இவர்களுடைய பேச்சுக்களெல்லாம் நாளை பத்திரிகைகளிலே வராது. ஆற்றல் படைத்தவர்கள்-ஆர்வமிக்கவர்கள் இங்கே லட்சக்கணக்கிலே கூடியிருக்கின்றீர்கள். உங்கள் யாரையும் பற்றிப் பத்திரிகையிலே போட மாட்டார்கள். இங்கே ஒரு பன்றி வந்ததென்றால் அதைப் பற்றி எட்டுப் பத்தித் தலைப்பில் கொட்டை எழுத்தில் போடுவார்கள். ‘அண்ணாதுரை கூட்டத்தில் பன்றி, கூட்டத்தில் பரபரப்பு‘ என்று தலைப்பு கொடுத்துச் செய்தி போட்டுத் தர்மத்தை நிலை நாட்டுவார்கள். மனிதனுக்கும் பன்றிக்கும் அதிக வித்தியாசம் தெரியாதவர்கள் என்ன எழுதினாலும் நான் கவலைப்படுவதில்லை.

பயன்படுத்திக் கொண்டனர்

அண்மையில் நான் நாகர்கோயில் சென்றிருந்தபோது ஒரு நிருபர் என்னிடம் வந்து ‘என்ன செய்தி தருகிறீர்கள்?‘ என்று கேட்டார். ஒரு நல்ல தொழிலாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். எனவே பத்திரிகை நிருபர்களை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை பத்திரிகையால் அல்ல கலாம் ஏற்பட்டது. ஏற்பட்ட நிகழ்ச்சியை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இன்னும் சற்றுத் தூய்மை வேண்டும் – திறமை வேண்டும் என்ற எண்ணத்தில் விலகிச் சென்றிருப்பார்களானால் அதனால் ஏற்படும் வேதனையை நான் தாங்கிக் கொள்கிறேன். குறைபாடுகளை நீக்க முயற்சி செய்கிறேன். ஒரு குழப்ப உணர்ச்சியை ஏற்படுத்தவே விலகிச் சென்றிருக்கிறார்கள்‘ என்று நான் இன்னமும் நினைக்கவில்லை.

விலகிக் செல்வோர் கடமை

ஐம்பதாயிரம் பெறுமானமுள்ள வைரத்தோடு போட்டிருப்பவர்கள் தங்கள் காதில் புண் ஏற்பட்டதென்றால் அதைக் கழற்றி வைத்திருந்து விட்டுப் புண் ஆறிய பிறு அணிந்து கொள்வார்கள். அதைப் போலத்தான் தம்பி சம்பத், எந்தப் புண் இருந்தாலும் அறிவித்தால் ஆற்ற முயலுகிறேன். அது ஆறும்வரை காத்திருக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். நான் இதைத் தம்பி சம்பத்துக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் புண் ஆற்றப்படும் வரை கழகத்தைக் காப்பாற்றுவது விலகிச் சென்றவர்களுடைய கடமையாகும்.

இன்னும் ஒரு மாதக் காலத்திற்குக் காங்கிரசார் புகுந்து திருவிளையாட்ல்களை நடத்துவார்கள். பத்து பேர் கழகத்திலிருந்து விலகிவிட்டார்கள். இன்னும் பத்து பேர் நாளை விலகலாம் என்று செய்தி போடுவார்கள். மறுநாள் அந்தப் பத்து பேரும் விலகி விட்டனர்‘ என்று செய்தி வெளியிடுவார்கள். இப்படி, இன்னும் ஒரு திங்களுக்குப் பத்திரிகைகளுக்கு எல்லாம் நல்ல வேட்டையாக இருக்கலாம். அவர்கள் தீபாவளி கொண்டாடலாம். நாம் அழுது கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தக் கண்ணீர் அவர்களைச் சும்மா விடாது.

‘ஓய்வு‘ தருகிறீர்களா?

தி.மு.கழகத்தில் சில பல குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை நீக்கும் அளவுக்கு எனக்கு எங்கே ஓய்வு தருகிறீர்கள்? இந்தத் திங்கள் முதல் நாளிலிருந்து 5ஆம் நாள் வரை தஞ்சை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 4 கூட்டம் 5 கூட்டம் என்ற முறையில் கலந்து கொண்டுவிட்டு 6ஆம் நாள் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தேன். 7ஆம் நாள் காலையில் காஞ்சியில் ஒரு திருமணம். அன்று மாலை தென்னேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுச் சென்னை வந்துகொண்டிருந்தேன். வருகிற வழியில் எனது மோட்டார் வண்டி பழுதடைந்துவிட்டது. வேறு ஒரு மோட்டார் கிடைத்திருந்தால் நான் நண்பர் பார்த்தசாரதி நடத்திய ‘தி.மு.க. வரலாற்று வெளியீட்டு விழா‘விற்கு வந்திருப்பேன்.

ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. இன்னொரு குழந்தை ஏனையில் காலை நீட்டிக் கொண்டிருக்கிறது. மற்றொரு குழந்தை வயிற்றில் ஆறு மாதம். இந்த நிலையில் வேகாத சோற்றைப் பரிமாறினால் மனைவியைக் கோபித்துப் பயன் என்ன? விவரமறிந்த கணவனாக இருந்தால் உணர்வான் – ‘மனைவியைச் சற்ற அதிகமாக வேலை வாங்கிவிட்டோம்‘ என்று! அதைப்போல கடந்த 25 ஆண்டுகளாக என்னை மிகக் கடுமையாக வேலை வாங்கிவிட்டீர்கள்.

சலிப்பை எவ்வாறு காட்டிக்கொள்ள இயலும்?

எனக்குச் சலிப்புணர்ச்சி வரும் போதெல்லாம், உங்களைத் தான் நினைத்துக் கொள்கிறேன். ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்று கலங்குகிறீர்கள். திராவிடத்தை அடைய எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறீர்கள். உங்களிடம் எப்படி என்னுடைய சலிப்பைப் பாட்டிக் கொள்ள முடியும்? எனக்குப் போதுமான அவகாசம் இருந்தால் குறைபாடுகளை நீக்குவது ஒன்றும் முடியாத காரியமில்லை.

தலைவாரிப் பூச்சூடி கணவனுடன் கடைத் தெருவிற்குப் புறப்படும் மனைவி – சீப்பை எடுத்தால் அதில் 4 – 5 பற்கள் இல்லை, கண்ணாடியில் ரசம் போயிருந்தது, பார்த்தால் முகம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? வாயிற்படியில் புறப்பட்டு நிற்கும் கணவனுக்குக் கோபம் வரத்தான் செய்யும். தலை சீவ முடியாமல் அலங்கோலமாகப் புறப்பட்டால் கணவனுக்குப் பிடிக்குமா? அதைப்போல நிர்வாகத்தில சில பல காரியங்கள் பிடிக்கவில்லை என்றால் அதைத் திருத்த காலம் வேண்டும்.

ஏமாற்ற விரும்பவில்லை

நம்மிடையே ஏற்பட்டுள்ள கசப்பு உணர்ச்சியை எளிதில் மறைத்து விடலாம் என்று சொல்லி உங்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை. சாதாரணமாக வயிற்றுவலி என்றால் சோடா குடித்தால் அது தீரலாம். அதிலும் தீரவில்லை என்றால் ‘ஜிஞ்சர்பீர்‘ குடித்தால் தீரக்கூடும். அதிலும் தீரவில்லை என்றால் வயிற்றுக் கோளாறு இருக்கிறது என்று பொருள். அது தீரக் கொஞ்சம் மருந்த சாப்பிட வேண்டும். எனவே இந்தக் குறைபாடுகளை நீக்க நானும், நண்பர்களும் முயலுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்குள் சம்பத் காங்கிரசுக்குப் போய்விடுவார் என்று சிலர் சொல்லக்கூடும். இங்குள்ள சில குறைபாடுகளைக் கண்டே பொறுக்க முடியவில்லை என்றால், சொந்த வீட்டில் உள்ள சாதாரணத் துர்வாடையே சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், காங்கிரசிலுள்ள சாக்கடையை எப்படி சம்பத்தினாலே ஏற்றுக்கொள்ள முடியும் – பொறுத்துக் கொள்ள முடியும்? காங்கிரசுக்கு எப்படி அவர் கைலாகு கொடுப்பார்? அவர் விலகியது முதலாளித்துவத்துக்கு முட்டுக் கொடுக்கவா? அல்லது அவர்களை மீண்டும் ஆட்சி பொறுப்பில் அமர்த்தவா?

ஊராருக்குத் தெரியாதா?

எனக்கு விறுவிறுப்பு கொடுக்கத்தான் அவர் வெளியேறினார் என்று இந்த வினாடி வரை எண்ணிக் கொண்டிருக்கிறேன். வாத்துக்காக உண்மையல்ல – ஆமாம் ‘பிளவுதான்‘ என்று ஒப்புக்கொள்கிறோம். நீங்கள் !காங்கிரஸ்) என்ன வாழ்கிறீர்கள்? ஒரிசாவிலே உங்கள் நிலைமை என்ன? பீகாரிலே பிளவு இல்லையா? வங்கத்திலே என்ன சங்கதி? பாஞ்சாலத்திலே படுகளப்படவில்லையா? இவையெல்லாம் ஊராருக்குத் தெரியாதா? நீங்கள் இதை இழுத்தால் நாங்கள் அதையெல்லாம் அம்பலத்துக்குக் கொண்டுவருவோம்.

நான் இப்படிச் சொல்வதால் பிளவு இருப்பது நல்லது என்று ஏற்றுக் கொண்டதாகக் கருதவேண்டாம். காங்கிரசிலும் இந்த நிலைமை இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டத்தான் சொன்னேன். எனவே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல, இதைப் பயன்படுத்தித் தேர்தலில் ஓட்டுப்பிடிக்க நினைத்தால் ஏமாறுவீர்கள். உங்கள் பூசலைப் போன்றதல்ல இது!

எந்த அரசியல் கட்சிக்கு அந்த வலிவு இருக்கிறது

‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்ற லட்சியத்தை எங்களில் யாரும் எதிர்க்கவில்லை. ‘கடைசி மூச்சு உள்ள வரை இந்தியை எதிர்ப்போம் என்று பாராளுமன்றத்தில் சென்ற வாரம் முழங்கிய சம்பத்தையா இந்திப் பள்ளிக் கூடத்திற்கு இழுத்துச் சென்றுவிட முடியும்? என்னாலேயே இழுத்து வைக்க முடியவில்லை என்றால் வேறு யாரால் இழுக்க முடியும்? என் கரத்துக்கு இல்லாத வலிவு – என் கருத்துக்கு இல்லாத வலிவு – என் பாசத்திற்கு இல்லாத வலிவு சம்பத்தைப் பிணைக்க எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை.

நண்பர் மதியழகன் சொல்லியபடி, சில பல குறைபாடுகள் கழகத்தில் இருக்கலாம். அந்தக் குறைபாடு, முனுசாமியை மேயராக்குவதற்குத் தடையாக நின்றதா? அ.பொ. அரசுவை அந்த அரசுக் கட்டிலில் அமர்த்த குறுக்கே நின்றதா? அலுமேலு அப்பாதுரை அவர்களை மாநகராட்சிக்கு அனுப்ப முடியாமற் செய்ததா? கருணாநிதியைச் சட்ட மன்றத்திற்கு அனுப்பியதில் சோடை போகச் செய்ததா? எதிலே தடையாக நின்றது.

ஓட்டைச் சட்டியில் வெந்ததைப் பாரீர்!

நம்மிடம் இருப்பது ஓட்டைச்சட்டிதான். ஆனால் அதில் வெந்த கொக்கட்டையைக் கணக்கு பாருங்கள். என்னால் இவ்வளவுதான் முடியும் எனக்கு நிர்வாகத்திறமை இல்லை என்றால் அதற்கான ஆற்றலைக் கொடுப்பது உங்கள் கடமை. ‘ஓட்டைச் சட்டிதான் இருக்கவேண்டும்‘ என்று நான் வாதாடவில்லை.

கழகத்தை விட்டு விலகிச் செல்லக்கூடாது என்று கூறும் இந்த நேரத்தில் குழப்பம் வளர்ந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்க வந்த தபால்களில் ஒன்று டென்மார்கிலிருந்து வந்திருந்தது. டென்மார்க்கிலுள்ள பொருளாதார அரசியல் பேராசிரியர் ஒருவர், தி.மு.கழகத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்டு எனக்கு எழுதியிருந்தார். ஒரு பத்து நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர், பட்டுக் கோட்டையிலுள்ள நமது நெடுஞ்செழியனி் அண்ணனான தோழர் சௌரிராசன் அவர்கள் மூலம் எனக்க் கடிதம் எழுதியிருந்தார். அவரும் நமது கழகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவல் கொண்டிருக்கிறார்.

இப்படி கடல் கடந்த நாடுகளில் உள்ளவர்களெல்லாம் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமும், அக்கறை காட்டும் எண்ணம் எப்பொழுது ஏற்பட்டது?

விரைவில் திரும்புவர்!

எனக்குத் திறமை குறைவு இருக்கலாம். ஆயிரத்தெட்டு அல்லல்களுக்கிடையே 12 ஆண்டுக் காலத்தில் இந்த அளவு பாரெல்லாம் புகழுகின்ற நல்ல நிலைமையை அடைந்திருக்கிறோம். இதையெல்லாம் எண்ணி விலகிச் சென்றவர்கள் விரைவில் திரும்பி வருவார்கள் என நம்புகிறேன். இல்லையேன் என் வாழ்நாள் முழுவதும் மறைக்க முடியாத வடுவை உள்ளத்தில் தாங்கிக் கொண்டு தானிருப்பேன்.

இந்த நேரத்தில் நீங்களெல்லாம் மிக அமைதியோடும் அடக்க உணர்ச்சியோடும் நடக்க வேண்டும். அகலக்க கால்வைக்கக்கூடாது. இந்த நிலைமைக்காக நீங்கள் வெட்கப்படத்தான், வேதனைப்படத்தான் வேண்டும். வீண் வதந்திகளை நம்பாமல் வரலாற்றை மனத்தில் வைத்து நடக்க வேண்டும்.

உள்ளத்தில் என்றும் அந்த எண்ணம் ஏற்படாது

நண்பர் பார்த்தசாரதி நடத்திய !வரலாற்று வெளியீட்டு விழா) நிகழ்ச்சிக்கு ஆளாகிவிட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தி.மு.கழகம் துவங்கிய நேரத்தில் ‘மாலை மணி‘ பத்திரிகையைக் கையில் காசில்லாத நிலையில் துவக்கியவர் நண்பர் பார்த்தசாரதி அவர், தமது புத்தகத்துக்கு மதிப்புரை கேட்பதற்காகச் சில தினங்களுக்கு முன்பு என்னிடம் வந்த நேரத்தில் கூடச் சொன்னேன் – எனக்குப் பிடிக்காத கருத்தை நீங்கள் கொண்டிருந்தாலும் நீங்கள் பட்ட கஷ்டத்தை நான் மறந்துவிடுபவனல்ல என்று. மேலும் எனக்கு அவகாசம் இல்லாததால் தான் மதிப்புரை எழுதித் தராது இருந்துவிட்டேன். நீங்களே ஒரு மதிப்புரை எழுதி அதில் என் பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூடச் சொன்னேன். அந்த அளவுக்கு நண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நானே எனக்குப் பட்டதை எழுதிக் கொடுத்தேன். நான் விழாவிற்கு வராமல் போனது குறித்து வருந்தத் தேவையில்லை. திட்டமிட்டோ, குறைபடுத்த வேண்டும் என்ற நினைத்தோ நான் வராமல் இருந்து விடவில்லை. உங்களைக் குறைவுபடுத்தி இழிவுபடுத்திப் பெறப் போகிற சுகம் – பலன் என்ன? என் கையையும் காலையும் குறைப்படுத்திக் கொள்ளவா நான் விரும்புவேன்? என் கை கால்களைப் போன்ற உங்களை – என் கண்ணையும் – காதையும் போன்ற உங்களை என் நெஞ்சத்தையும் உயிர்த் துடிப்பையும் போன்ற உங்களைத் தாழ்வுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் என்றும் ஏற்பட்டதில்லை என்றும் ஏற்படாது.

பெரியாரே ஒப்புக் கொண்ட உண்மையல்லவா?

சில நேரத்தில் உங்களில் சில பேரை நான் கோபித்துக் கொண்டிருக்கக் கூடும். அதுகூட உங்களுக்கும் எனக்கும் இருக்கிற சொந்தக் காரணமாக இருக்கலாம். ஆணையிடுதல், கட்டளை பிறப்பித்தல் போன்ற காரிகங்கள் எனக்கப் பிடிக்காது என்பதைப் பெரியாரே ஒப்புக்கொள்வார். எனவே, என்தைத் தகுந்த இடத்தில் வைத்தால்தான் நீங்கள் நினைப்பதை என்னால் செய்ய முடியும். ஆஸ்டின் காரில் அறுபது மைல் வேகத்தில் செல்ல வேண்டுமானால் எப்படி முடியும்.

ஆகவே, விலகிச் சென்றவர்கள், புனராலோசனை செய்து திரும்பிவர வேண்டும். அவர்கள் அரசியலில் என்னை விட்டுப் போய்விடலாம். நெஞ்சத்தைவிட விசாலமான இதயம் உலகத்தில் எங்கும் கிடையாது.

அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன் – இதே நேரத்தில் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வேன் – எப்படிப்பட்ட விபத்தானாலும் உள்ளத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெருமைக்குரிய வார்த்தை இல்லை

கழகத்தில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. நண்பர் சம்பத் கழகத்தைவிட்டுப் போவார் என்று எண்ணவில்லை. அவர் மிக முக்கிய உறுப்பினர். சம்பத்தை இன்றுதான் நான் ‘அவர்‘ என்று அழைக்கிறேன். இருபதாண்டுக் காலமாக ‘அவன்‘ என்றுதான் அழைத்து வந்தேன். அவர் ஏதாவது சொல்லிவிடுவார் என்பதற்காக இப்படி நான் அழைக்கவில்லை, அந்த வார்த்தையை நான் பெருமைக்குரிய வார்த்தையாக என்னைப் பொறுத்தவரை எண்ண வில்லை. திண்ணைப் பள்ளியில் நான் அன்று பார்த்த சம்பத் பாராளு மன்றத்தில் பண்டித கோவிந்த வல்லபபந்த் முன்னிலையில் அமர்ந்திருந்ததைக் கண்டு என் வீட்டில் பிறந்த ஓர் பிள்ளையை இத்தகைய நிலையில் பார்ப்பது போல் பார்த்தேன்.

நான் மொத்த ‘துரதிருஷ்ட‘சாலி. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்ததும் தந்தையை இழந்தேன். என் தம்பியும் இன்று என்னை விட்டுப் பிரிந்து செல்வதாகச் சொல்லிவிட்டார். இதை அவர் நெஞ்சார சொல்லி இருக்க முடியாது ‘திருத்தம் தேவை‘ என்று நினைத்துச் சொல்லியிருந்தால் அவர் திரும்பி வருமாறு நாம் செய்ய வேண்டும்.

மாண்பு வெளிப்படுகிறது எனவே அழிந்துவிடாது

அவர் ஏன் விலகினார் என்று ஒருவரும், விலகினால் என்ன நஷ்டம் என்று மற்றொருவரும் – இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவது இனிக் கூடாது. அம்மை வடுவால் முகத்தின் அழகை மறைத்துவிட முடியும். அதனால் அந்த மங்கையின் மாண்பு கெட்டுவிடாது. அதைப்போல் கழகத்தில் விபத்து என்றால், அதன் மாண்புதான் வெளிப்படுகிறதேயொழிய அது அழிந்துவிடாது.

ஏன் இந்தக் கட்சியைப் பற்றிமட்டும் எல்லோரும் அதிகமாகப் பேசுகிறார்கள்? காங்கிரசுக் கட்சியில் நாற்றமெடுக்கும் அளவுக்கு பிளவு பூசல்கள் இல்லையா என்றால், காங்கிரசுக் கட்சியின் விஷயம் தீர்ந்துபோன விஷயம் என்று கருதி அதைவிட்டு விட்டார்கள். குஷ்டம் பிடித்தவருக்குக் காலிலே வெள்ளை ஏற்பட்டால்தான் என்ன? முகத்தில் ஏற்பட்டால்தான் என்ன? எங்கு ஏற்பட்டால்தான் என்ன கவலை?

பளிச்செனத் தெரிவதேன்?

வேறு ஒரு கட்சி வராததால் இன்னும் உயிர் வைத்துக் கொண்டிருக்கும் நடைபிணமாக இருந்து வருகிறது காங்கிரசு. நம்மிடம் ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் நாட்டு மக்களக்கு அது பெரிதாகத் தெரிகிறது. இங்கே வீற்றிருக்கும் அலமேலு அம்மையார் கரு்ப்புப் புடைவை கட்டியிருக்கிறார். அதில் மையைத் தெளித்தால் அது அவ்வளவாகத் தெரியாது. ஆனால் வெள்ளை உடை உடுத்தியிருப்பவர்கள்மீது மையைத் தெளித்தால் – அல்லது தம் புருவத்திற்கு இட்டுள்ள மை சேலையில் சிறிது பட்டால், பளிச்சென்று தெரியும்.

அதுபோல நாம் – வெண்ணிற ஆடையாக இருக்கிறோம் – காங்கிரஸ் குடுகிடுப்பைக்காரன் சட்டை போல் இருக்கிறது. நாம் நெஞ்சை இழையாகக் கொண்டு நெய்யப்பட்ட ஆடை! அதனால்தான் நம்மிடம் ஏற்படும் சிறு குறையும் பளிச்சென்று தெரிகிறது. காங்கிரசுக் கட்சியில் குறை ஏற்பட்டாலும் வெளிக்குத் தெரிவதில்லை. எனவே நம் கழகத்தில் ஒரு குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விரட்டினால் இயலுமா?

நான் முன்பே ஒரு கூட்டத்தில் சொன்னதுபோல் நான் பொதுவாகச் செயலாளரே தவிர செயலாளனல்ல. நானே எல்லாவற்றையும் செய்து முடித்திடுவேன் என்று பாரம் முழுவதையும் என்மேல் சுமத்திவிடாதீர்கள். பாரத்தைச் சுமத்தினால் மெதுவாக நடத்தலாம். ஆனால் பாரத்தையும் சுமத்தி பின்னாலே, பட்டாசும் கொளுத்தி போட்டு, ‘வேகமாக நட‘ என்று விரட்டினால் எப்படி நடக்க முடியும்?

எனவே இங்குள்ள எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். அவ்வளவு உரிமையும் கடமையும் எல்லோருக்கும் இருக்கிறது. இன்று ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி தகுந்த பாடமாக அமைய வேண்டும்.

இந்த வித்தை எனக்குத் தெரியாததல்ல!

பத்திரிகைகள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். திடீரென்று ஒருநாள் ‘அண்ணாதுரை செத்துவிட்டான்‘ என்று பத்திரிகையிலே செய்தி போட்டு விடலாம். பிறகு நான் ஒவ்வோர் ஊராகச் சென்ற ‘நான் சாகவில்லை இதோ இருக்கிறேன் பாருஙகள்‘ என்று காட்ட வேண்டும். அப்படி காட்டிய பிறகும், பத்திரிகைகள் எழுதும் அண்ணாதுரை செத்துவிட்டது உண்மைதான். செத்தபிறகு பிசாசாக மாறி வந்திருக்கிறான் எனப் பேசப்படுகிறது என்பதாக! இந்த வித்தை எனக்குத் தெரியாததல்ல. நானும் அந்த !பத்திரிகைகாரர்கள்) இனத்தில் வந்தவன்தான். இந்த முறை பழைய முறையாகும். நான் இப்பொழுதுகூட, வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் உங்கள் தொழில் என்ன? என்று கேட்டால், ‘பத்திரிகைத் தொழில்‘ என்றதான் சொல்கிறேன். எனவே இந்த வித்தை செய்வது சுலபம், வேறு வேலை எனக்கு இருப்பதால் இன்ற சிலர் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். அவர்கள் வாழட்டும்.

கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஒருவருக்கொருவர் விவாதிக்கும் தன்மை வளரக்கூடாது. கடையிலே சோடா குடிக்கும் போது ஒருவர் ‘சம்பத் விலகிவிட்டாராமே என்று கேட்டால் சோடா குடித்த காரத்தில் ‘ஆமாம், போனால் போகட்டும்‘ என்று பதிலளிப்பது கூடாது. தயவு செய்து இப்படிப்பட்ட விவாதங்களைக் கிளப்பாதீர்கள்.

இந்தத் தலைமுறையின் விடுதலை இயக்கம் இது

இந்த இயக்கம் ஒருமுறை உடைந்தால் பிறகு இந்தத் தலைமுறையில் விடுதலை இயக்கம் இல்லை. அவசரபப்பட்டுக் கீழே போட்டு உடைக்கிற அளவுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

திராவிடக் கழகத்தில் இருந்து பிரிகிற நேரத்தில்கூட இதைத்தான் எண்ணித் தயங்கினேற். யாராவது ஏதாவது கேட்டால் ‘கழகத்தில் ஏதோ குறைபாடு இருப்பதாகச் சொல்லி சம்பத் விலகியிருக்கிறார். மீண்டும் வருவார்‘ என்று மட்டும் சொல்லுங்கள். வேறுவிதமாகப் பேசுவது பொழுது போக்கிற்கு உதவுமே தவிர காரியம் நடைபெறப் பயன்படாது. அதனால் பாடுபட்டு வளர்த்த கட்சி பாழடைந்துவிடும்.

இது தேர்தலைப் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. நம்மிடம் உள்ள பணப் பஞ்சத்தால் வேண்டுமானால் பாதிக்கலாம். அல்லது சுதந்திரக் கட்சிக்கும் நமக்கும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் நமக்கும் பகை மூட்டிவிட்டால் பாதிக்கும் வேறு எந்த விதத்திலும் பாதிக்காது.

பொறுமை வேண்டும்

பூமியை வெட்டுகிறோம். குத்துகிறோம் – தோண்டுகிறோம் – நிலத்தின்மீது நின்று கொண்டே அதைப் புண்படுத்துகின்றோம். ஆனால் பூமிக்குக் கோபம் வருவதில்லை. பூமியை வெட்டிய எவரும் இதுவரை !புராணக் காலத்தை தவிர) பூமி பிளந்து உள்ளே அழுந்தியவர்கள் கிடையாது. பூமிக்குள்ள அந்தப் பொறுமை அரசியலில் ஏற்படவேண்டும்.

நானும் ஒரு காலத்தில் உணர்ச்சிகளுக்கு உட்டபட்டவனாகத்தான் இருந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நான் இப்படிச் சட்டை போட்டிருக்க மாட்டேன். தோள்பட்டையிலே பட்டி வைத்து, அதிலே மன்று பொத்தான்ள் போட்டு ‘ஜிப்பா‘ அணிந்திருப்பேன். துண்டை விலாபுறத்திலே வைத்திருந்தேன். இப்படியெல்லாம் செய்தால் நம்மைக் கண்டு மற்றவர்கள் பயப்படுவார்கள் என்று எண்ணியதுண்டு. நானும் ரோஷ உணர்ச்சி உள்ளவன்தான்.

மண்ணுக்குக் கீழேதான் தங்கம் இருக்கிறது

என்னைத் தலைவனாக்கித் தத்தளிக்க வி்டிருக்கிறீர்கள். மண்ணைப் பற்றி நான் கூறுவதால் ‘சுத்த மணண்ாங்கட்டி‘ என்று என்னைச் சொல்வார்களானால் – கிணற்றுக்கு மேலே மண்தான் இருக்கிறது. மண்ணுக்கு கீழேதான் தங்கம் இருக்கிறது என்று நான் கூறுவேன்.

எனவே தயவு செய்து அந்தத் தங்கத்தைத் தோண்டி எடுக்க விடுங்கள். என்னுடன் ஒததுழையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 10.4.61)