விருகம்பாக்கம் கூட்டத்தில்
அண்ணா தெளிவுரை
சென்னை – கோடம்பாக்கம் அடுத்த
விருகம்பாக்கம் தோழமைக் கழகக் கட்டிடத் திறப்பு விழா 19.2.60
மாலை 7 மணியளவில் தோழர் வி.சி.கிருட்டிணசாமி தலைமையில் நடைபெற்றது.
தலைவர் பேசியபின், தோழர்கள்
அகிலன், செகதீசன், சுந்தரம் ஆகியோர் தோழமைக் கழகத்தின் பணி
குறித்தும் கழகக் கொள்கையை விளக்கியும் பேசினர்.
விழாவுக்கு வருகை தந்திருந்த
அண்ணா அவர்க்ளுக்கும் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கும்
தோழமைக் கழகத்தின் சார்பிலும் பல கிளைக் கழகங்களின் சார்பிலும்
கோடம்பாக்கத்திலுள்ள படப்பிடிப்பு நிலையங்களில் பணியாற்றும்
தோழர்கள் சார்பிலும் ஏராளமான கைத்தறி ஆடைகளும், மலர் மாலைகளும்
அணிவிக்கப்பட்டன.
இறுதியாக மக்களின் பெரும ஆரவாரக்
கையொலிக்கிடையே அண்ணா அவர்கள் பேசியதாவது –
இந்த வட்டாரத்திலுள்ள தி.மு.கழகப்
பற்றுக்கொண்ட தோழர்கள் பல ஆண்டுகளாக நல்ல பணியாற்றிக் கொண்டு
வருகிறார்கள். அவர்கள் எடுத்து நடத்துகின்ற பல நல்ல பாரியங்களில்
ஒன்றுதான், இன்றைய தினம். தோழமைக் கழகத்திற்கென ஒரு சிறிய
கட்டிடத்தைத் திறந்து வைப்பது, பலருடைய உதவிகளைக் கொண்டு
கட்டிடத்தை நல்ல முறையிலே கட்டி, அதைத் திறந்து வைப்பதற்கு
என்னை அன்போடு அழைத்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்துக்
கொள்ளுகிறேன்.
தோழமையை எப்படிப் பெற முடியும்?
தோழமையை எப்படிப் பெற முடியும்
என்பதற்கு 4, 5 கருத்துக்களை எனக்கு முன்பு பேசியவர்கள்
எடுத்துச் சொன்னார்கள். ஏழை – பணக்காரன் என்று எண்ணும் மனதில்
தோழமையைப் பார்க்க முடியாது. சாதிபேதம் இருக்கின்ற இடத்திலே
தோழமையை நிச்சயம் பார்க்க முடியாது. விரோத உணர்ச்சி வெறுப்புணர்ச்சி
ஆகியவைகளிலிருந்து தோழமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றெல்லாம்
அவர்கள் எடுத்துரைத்தார்கள். தோழைமை இந்த நாட்டுக்கு மட்டுமல்ல,
உலகத்திலே எல்லா நாடுகளுக்கும் தேவையான கொள்கையாகும்.
யாரும், யாரைப் பார்த்தாலும்
“தோழர்களே“ என்று அழகாக அழைக்கிறார்கள். இரஷ்ய நாட்டிலிருந்து
குருஷ்சேவ் வந்தாலும் அமெரிக்க நாட்டிலிருந்து வரும் ஐசனேவரானாலும்
“தோழர்கள்“ என்றுதான் அழகாக அழைக்கிறார்கள்.
வாய் குழைய அழைக்கின்ற அளவுக்குச்
செயலில் நடக்க முடிகிறதா என்றால் நடக்க முடியவில்லை.
உதாரணத்திற்கு ஒன்று சொல்லுவேன்,
“நமது காங்கிரசுத் தலைவர்கள் இந்தோ-சீன பாய் பாய்“ என்று
பேசினார்கள். அப்படிப் பேசி வந்த காங்கிரசுத் தலைவர்கள்
இப்போது சீனர்களைப் பார்த்துத் “திருடர்கள், எல்லையைப் பறித்துக்
கொண்டார்கள் எதிரிகள்“, என்று பேசும் நிலைமையைப் பத்திரிகை
வாயிலாகப் பார்க்கிறோம். அந்த அளவுக்குத் தோழமை பாதுகாக்கப்படாமல்
இருக்கிறது.
காரியத்தில் தோழமை பாதுகாக்கப்பட
வேண்டுமானால் மனிதனுக்கு மனிதன் வெறுப்பு, பொறாமை இருக்கக்கூடாது.
இங்கே நம்முடைய தோழர்கள் சிலருக்குப் பலபேர் தொல்லை கொடுப்பதாகச்
சொன்னார்கள். நான் அவர்களுக்குச் சொல்லுவேன் – நமது நண்பர்
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் புகழின் உச்சியில் இருந்தும்,
உல்லாசமாக வாழுவதற்கு வசதியிருந்தும் அவர் ஏன் நம்மோடு சேர்ந்து
இவ்வளவு பேர்களின் வெறுப்புக்கு ஆளாயிருக்கிறார் என்பதைப்
பார்க்க வேண்டும். கலையுலகத்தில் அவரைச் சூழ இருக்கின்றவர்களில்
பலர், வெறுப்புக் கண்ணோடு அவரைப் பார்க்கிறார்கள் என்பது
எனக்குத் தெரியும்.
என்.எஸ்.கே.வுக்குப் பிறகு
எம்.ஜி.ஆர்.
நமது வளர்ச்சியை யாரும் இன்றைய
தினம் தடுக்க முடியவில்லை. கலையுலகில் பொருளும், புகழும்
அடையாலம் ஆனால் மக்களுடைய அன்பு அனைவருக்கும் கிடைப்பதல்ல.
எனக்கு 51 வயது ஆகிறது. எனக்குத் தெரிந்த வரையில் திரு.என்.எஸ்.கிருஷ்ணன்
அவர்கள் மக்களுடைய உள்ளத்தி்லே அன்பாகக் பாராட்டப்பட்டுப்
பெரும் புகழ் அடைந்தார். அதற்குப்பின் நமது தோழர் எம்.ஜி.இராமச்சந்திரன்தான்
மக்கள் மனதில் நிறைய அன்பினைப் பெற்றிருக்கிறார்.
இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன்
என்றால், இங்குள்ள தோழர்கள் சிலருக்கு எதிர்ப்பு அதிகம்
இருக்கிறது என்று சொல்லும் நண்பர்கள் நமது எம்.ஜி.இராமச்சந்திரன்
அவர்களை நினைத்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்புக்களை நாம்
சமாளித்தாக வேண்டும்.
எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள்
நாம் யாரும் அழைத்து நமது கழகத்தில் வந்து சேர்ந்தவர் அல்ல.
அவர் மக்களின் அன்பைப் பெறுவதற்கு என்ன வழி என்று பலநாள்
சிந்தித்து, மக்களுக்காகப் பாடுபடும் கட்சி எது என்று ஆராய்ந்து
கடைசியில் நமது கழகத்தில் வந்து சேர்ந்தார். நமது கழகத்தில்
இருக்கின்ற தோழமையும் கொள்கையிலுள்ள அழுத்தமும் அவரை இங்கே
அழைத்துக் கொண்டு வந்தது.
முதலில் மனிதன் – பிறகுதான்
கலைஞன்!
கலைஞர்களுக்கு அரசியல் முக்கியமா
என்று சில கலைஞர்கள் பொதுவாகப் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
கலைஞன் முதலிலே மனிதன் அதற்கப் பிறகுதான் கலைஞன்.
மனிதன் முதலில் நல்லவனாக இருக்க
வேண்டும். ஆகையினால் நல்ல கழகங்கள் தேவை. நல்லது செய்ய வேண்டுமானால்,
மற்றவர்க்ளுக்கு இருக்கின்ற கேடுகளைஅறிய வேண்டும்.
அதற்கு இடம் தருகிற கழகம்
எது என்று நமது எம்.ஜி.இராமச்சந்திரன் ஆராய்ந்தபின் அவர்கண்ட
முடிவு, அவரை முன்னேற்றத்திற்கு கழகத்திற்குக் கொண்டுவந்தது.
பல கலைஞர்களை நான் சந்தித்துப்
பேசினால் அவர்களை நம்முடைய மேடைக்கு அழைத்துக் கொண்டு வரமுடியும்.
ஆனால் எவ்வளவு வேகமாக வருகிறார்களோ, அவ்வளவு வேகமாகப் போய்விடு
போய்விடுவார்கள். வெறுப்புணர்ச்சி, விரோதக் கொள்கை, ஏழைப்
பணக்காரன் என்ற பேதம், சாதி மத வேறுவாடு ஆகியவை இல்லாத இடத்தில்தான்
தோழமை வளரும்.
ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு
முன்னால் சென்னை வானொலியில் நான் “தோழமை“ என்பதைப் பற்றி
பேசினேன்.
ஒரேயொரு செல்வம் தோழமைகட்சிதான்!
இன்று உண்மையில் தி.மு.கழகத்திற்கு
இருக்கின்ற ஒரே ஒரு செல்வம் தோழமைதான்.
இங்கே பேசிய நம்முடைய நண்பர்
ஒருவர் நம்மிடத்தில் டாட்டா. பிர்லா, மிட்டா மிராசு இல்லை
என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.
டாட்டா போன்றவர்கள் நமது கழகத்தில்
இருந்தால் தோழமை வளராது.
உதாரணத்துக்க் ஒன்று சொல்லுவேன்.
இரண்டு பெரிய பணக்காரர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துச் சிரிப்பதைப்
பலவேர் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சிரிக்கையில் பல் மட்டும்
தெரியுமே தவிர முகம் மலராது. பல்லை மட்டும் ஏன் காட்டுகிறார்கள்
என்றால் அவரிடத்தில் இவர் எதிர்பார்க்கும் நன்மையை உத்தேசித்துச்
செய்யப்படும் பாவனை அது. ஆகையினால்தான் சொல்லுகிறேன். அது
போன்றவர்கள் இல்லாததால்தான் இந்தக் கழகம் இவ்வளவு அதிகம்
வளர்ந்திருக்கிறது.
நல்லது என்றால் சேருவோம்!
நமது கழகம் பெரியதொரு தோழமைக்
கழகம் ஆகையினால் தான் இப்பொழுது நமது அமைச்சர்கள், அண்ணாதுரையாரும்
– இராசகோபாலாச்சாரியாரும் . இவர்கள் சேர்ந்துவிட்டால் நமது
நிலை என்ன ஆகுமோ? என்று பயப்படுகிறார்கள்.
நீங்கள் ஒன்று சேருவதிலே என்ன
இலாபம்? என்று காமராசர் என்னைக் கேட்டால் நான் பதில் சொல்லத்
தயாராக இருக்கிறேன். சேருவதால் எங்கள் இலட்சியம் வெற்றி
பெறும் என்றால் சேருவேன். அது உங்களைப் பொறுப்பிலிருந்து
இறக்கப் பயன்படும் என்றால் சேருவேன். சேர்ந்தால் உங்களுக்கு
நல்லது என்றால் சேரமாட்டேன்.
நாங்கள் சேருவது தவறு என்றால்,
நீங்கள் கேரளத்தில் ஏன் வகுப்புவாதக் கட்சி என்ற உங்களால்
சொல்லப்படும் கட்சியுடன் சேர்ந்தீர்கள். இன்றையதினம் வெட்கம்
கெட்டமுறையில் சண்டைப் போட்டுக் கொண்டு வேறு இருக்கிறீர்கள்!
இவண் அவனோடு அவன் இவனோடு சேர்ந்துவிடுவானோ என்று அச்சப்படுகிறீர்கள்.
இராசதந்திரத்தை நம்பி இல்லை!
உண்மையில் தி.மு.கழகம் யாரோடும்
கூட்டுச் சேராது. எந்தக் கட்சியையும் எந்தத் தனிப்பட்ட தலைவர்களையும்
நம்பி இன்றைய தினம் தி.மு.கழகம் இல்லை. இராசதந்திரத்தை நம்பி
தி.மு.க இல்லை. மக்கள் உள்ளத்தை எப்படிப் பெறுவது என்பது
உங்களுக்குத் தெரியுமா என்று எங்களைச் சிலர் கேட்கிறார்கள்.
இந்தப் பத்தாண்டுக் காலத்தில் மக்கள் உள்ளத்திலே வேறு கட்சிகள்
இந்த அளவுக்கு இடம் பெற முடிந்ததில்லை.
ஆகையினால்தான் சொல்லுகிறேன்
காமராசர் ஒரு நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால் அவரோடு சேருகிறேன்.
இருவரும் சேர்ந்து ‘சுதந்தரா‘ கட்சியை வீழ்த்துவோம். அது
என்ன நிபந்தனை என்றால், திராவிட நாட்டுப் பிரச்சினையைக்
காமராசர் ஒத்துக் கொள்ளவேண்டும். அதை ஏற்றுக் கொள்ள மனதில்
உறுதியில்லை என்றால் மனதிலே திடம் இல்லை என்றால் நான் யாரோடு
கூட்டுச் சேர்ந்தால் உங்களுக்கு என்ன கவலை?
கள்ளனைப் பிடிப்பதற்கு யாரையும்
துணைக்கு அழைக்கத் தான் செய்வான் வீட்டுக்குடையவன்.
எங்களுக்குத்தான் இலாபம்
உங்களுடைய பணமும், ஆச்சாரியாரின்
பணமும், அடுத்த தேர்தலில் மோதும். அது எங்களுக்குத்தான்
இலாபம்.
தூத்துக்குடியில் கம்யூனிஸ்டுக்
கட்சிக்கும் நமக்கும் ஏற்பட்ட தோழமையினால் நாம் குறைந்த
வாக்கில் தோற்றோம். அந்தக் கட்சிக்கு நான் இந்த இடத்திலே
இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
காமராசர் தூத்துக்குடியில்
பேசுகையில், உங்களை அண்ணாதுரை ஏமாற்றுகிறார் என்று பிரச்சாரம்
செய்தார். ஆனால் நமது தோழர்கள் கடைசிவரை கட்டுப்பாடாக இருந்தார்கள்.
எனவேதான் நான் காங்கிரசுக்காரர்களுக்குச்
சொல்லுவேன். எங்களுக்குக் கிடைக்காமல் போன வாக்குகள் 800
தான். ஆனால் செல்லாத வாக்குகள் 1100! இந்த ஆயிரத்து நூறு
வாக்குகளில் 400 வாக்குகள் எங்களுக்குக் கிடைத்திருந்தால்
வெற்றி வேறுபக்கம் திரும்பி இருக்கும்.
எனவே நாங்கள் தோல்வி அடைந்தாலும்,
தேர்தல் வந்தால் எங்களைத் தாண்டித்தான் நீங்கள் முன்னாலே
போக வேண்டும். நீங்கள் எண்ணியபடி வரும் காலம் மாறிவிட்டது.
இனி இது திரும்புயே வராது.
விக்கிரமாதித்தன் பதுமை போல்....
விக்கிரமாதித்தன் கதையில்
வரும் சிம்மாசனத்திலுள்ள பதுமைகள் போல் நாங்கள் ஒவ்வொரு
தேர்தலிலும் உங்களைச் சந்திப்போம்.
அந்தச் சிம்மாசனம் போஜ மகாராசனுக்குக்
கிடைக்காமல் பறந்து போய்விட்டது. ஆனால் இந்தச் சிம்மாசனம்
இவர்களை விரைவில் கீழே தள்ளிவிடும் என்பதைக் காங்கிரசுக்காரர்கள்
அறியவேண்டும்.
எனவே தோழர்களே! வரும் தேர்தலில்
நீங்கள் கொஞ்சம் பொருளைச் சேகரித்தால் காங்கிரசாரை, சந்திக்க
வேண்டிய முறைப்படி நாம் சந்திக்கலாம்.
நான், வடநாட்டிற்கும், தென்னாட்டிற்கும்
உள்ள வேறுபாடுகளைப் பல உதாரணங்களைச் சொல்லி விளக்க வேண்டியதில்லை.
ஆந்திராவிலுள்ள ரெங்கா ரெட்டி சொல்லியிருப்பதைப் பார்த்தால்
தெரியும்.
கிடைத்தது போதும் என்று விடாதீர்கள்
நாம் எடுத்துச் சொல்லிக் கொண்டு
வருகின்ற கருத்துக்கள் எல்லா இடத்திலும் பரவலாகப் பரவிக்
கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியில் உள்ளவர்களும் நம்மைப்
பற்றி ஆராய்ந்து பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல சூழ்நிலையில்,
“நமக்கக் கிடைத்தது போதும்“ என்று இருந்துவிடாமல், நல்லமுறையில்
அதிகமாக உழைக்க வேண்டுமென்று உங்களை எல்லாம் நான் இந்த நேரத்தில்
கேட்டுக் கொள்ளுகிறேன்.
(நம்நாடு - 23.2.60)