அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திருப்பூர் கணேசன் குடும்பத்திற்கு உதவி

திருப்பூரில், திராவிட நாடு விடுதலை வார விழாவுக்கான கொடி, தோரணங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் உயரமான கம்பத்திலிருந்து கால் தவறிக் கீழே விழுந்து மாண்ட செயல்வீரர் கணேசன் குடும்பத்திற்கு ரூ.5000 விலையில் ஒரு வீடு வாங்கியளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வீடு வாங்கியதற்கான பத்திரத்தை அண்ணா அவர்கள் மறைந்த வீரர் கணேசனின் மனைவியாரிடம் அளித்தார்கள்.

இந்தப் பத்திரம் வழங்கும் விழா கடந்த 2.2.60 அன்று திருப்பூரில் நடைபெற்றது; நொய்யல் ஆற்று மணற்பரப்பில், கழகக்கொடிகளாலும் மின்னொளி விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மாலை 6 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் துவங்கின. அலைகடலென மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. ஏராளமான தாய்மார்களும் குழுமியிருந்தனர்.

விழாவுக்குக் கோவைத் தோழர் சானகிராமன் எம்.சி.தலைமை வகித்தார். திருப்பூர் நகரத் தி.மு.க செயலாளர் முத்துரத்தினம் அனைவரையும் வரவேற்று, விழாவின் நோக்கத்தை விவரித்தார்.

தலைவர் உரைக்குப் பின் அண்ணா அவர்கள், ரூ.5,000 மதிப்புள்ள வீட்டுக் கிரயப் பத்திரத்தைக் கணேசன் அவர்களின் துணைவியார் திருமதி கிருஷ்ணவேணி அம்மையாரிடம் அளித்தார். அம்மையாருடன் அவர்களது கடைசி மகன் இராஜேந்திரனும் வந்திருந்தான்.

அண்ணா அவர்கள், பத்திரத்தை வழங்கிய போது கணவனை இழந“த அந்த அம்மையாரும் தந்தையை இழந்த மகனும் கண்ணீர் மல்கப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட காட்சி அனைவர் உள்ளத்தையும் உலுக்கியது.

பிறகு அண்ணா அவர்கட்குத் திருப்பூர் நகரத் தி.மு.க மற்றும் அதன் துணை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வெளியூர் கிளைக்கழகங்கள் ஆகியவை சார்பில் 250க்கும் மேற்பட்ட கைத்தறித் துண்டுகளும், மலர் மாலைகளும் அளிக்கப்பட்டன.

அண்ணா அவர்கள் திருப்பூர் கணேசனின் தொண்டுள்ளத்தையும் தியாகத்தையும் போற்றி, அன்னாரின் குடும்பத்தார்க்கு உதவ முன்வந்த திருப்பூர் நகரத் தி.மு.கழகத்தின் கடமையுணர்ச்சியைப் பாராட்டி விட்டுத் தற்கால அரசியல் நிலை குறித்து நீண்ட உரை நிகழ்த்தினார்.

அண்ணா உரைக்குப் பின் செயலாளர் நன்றி கூற விழா இரவு 9.30 மணிக்கு முடிவுற்றது.

(நம்நாடு - 15.2.60)