ஆரணி (வ.ஆ) நகரச் சபையினர் தி.மு.கழகப்
பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்களுக்கு ஒரு வரவேற்பு அளித்தனர்.
நகரசபைக் கட்டிடத்தில், மறைந்த தமிழ்த் தென்றல் திரு.வி.க.
அவர்கள் உருவப் படத்தைத் திறந்து வைக்க திரு.அண்ணாதுரை அவர்களை
அழைப்பதென நகரசபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
அதன்படி ஆரணிக் கோட்டை மைதானத்தில் திரு.வி.க. அவர்கள்
உருவப் படத்தைத் தி.மு.கழகப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை
அவர்கள் திறந்து வைத்தார்.
அது போழ்து, ஆரணி நகரசபையார், ஏற்கனவே முடிவு செய்தபடி,
பொதுச்செயலாளர் அண்ணாதுரைக்கு வரவேற்பு இதழ் படித்தளித்து,
மகத்தானதோர் வரவேற்பளித்தனர்.
நகரசபைத் தலைவர் சீனிவாசன் அவரை வரவேற்றார்.
மாற்றுக் கட்சியினரான காங்கிரஸ் உறுப்பினர் துரைசாமி அவர்கள்,
பொதுச்செயலாளருக்கு மலர் மாலை அணிவிப்பதில் பெருமைப்பட்டுக்
கொண்டார்.
திரு.வி.க.செய்த மகத்தான பணி
திரு.வி.க அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்துப் பொதுச்செயலாளர்
அண்ணாதுரை அவர்கள், திரு.வி.க.வின் சேவைகளை குறித்தும் அவர்
நாட்டு மக்களால் போற்றப்படுவதற் கான காரணங்களை விளக்கியும்-அரியதோர்
உரை நிகழ்த்தினார். குறிப்பாக, இந்த நாட்டுத் தொழிலாளர்
நலனுக்காகத் திரு.வி.க. செய்த மகத்தான பணியை வெகுவாக மக்கள்
பாராட்டக் கடமைப்பட்டிருப்பதாகப் பொதுச்செயலாளர் கருத்தறிவித்தார்.
தனக்குத் தரப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கையில், பொதுச்செயலாளர்
அண்ணாதுரை அவர்கள் குறிப்பிட்ட தாவது:-
என்னைப் போன்ற ஒருவனுக்கு ஏதாவது வரவேற்புகள் தருவதானால்
நகரசபையில் எதிர்ப்புகள் பல எழும்பும்; ஆனால் அப்படி இல்லாமல்,
நீங்கள் எனக்கு ஒருமித்த மனத்துடன் வரவேற்பளித்துக் கவுரவப்படுத்தியிருக்கிறீர்கள்.
அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிரிகளையும் மதிக்க வேண்டும்!
எனக்கு, எதிர்ப்புகள் மிக மிகப் பழக்கமானவை; எதிர்ப்புகள்
பலவற்றைச் சந்தித்துப் பழக்கப்பட்டவன் நான்.
ஆனால், அரசியல் கருத்த வேறுபாடுகள் இருப்பினும் மனிதர்கள்
மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும் எனும் கருத்துடையவன் நான்.
எதிரிகளையும் மதிக்கும் மனம் எல்லோருக்கும் வேண்டும்.
நீங்கள் அந்த முறையில் எனக்கு வாசித்தளித்த வரவேற்பு மேலும்
மக்களுக்குத் தொடர்ந்து தொண்டு செய்கிற ஊக்கத்தை எனக்கு
வெகுவாக அளிக்கிறது.
எனக்கு வரவேற்புத் தந்திருக்கிறீர்கள். உங்கள் நகரசபைக்கு
நான் எதுவும“ செய்ய இயலாதவனாயிருக்கிறேன்.
ஏனெனில், நான் ஒரு மந்திரியாக இல்லையென்பது நீங்கள் அறிந்ததே!
என் நன்றியை மீண்டும் உங்கட்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(நம்மாடு
- 19.8.1954)
|