தியாகங்களுக்குப் பின்னரே
விடுதலை!
கடந்த 23.4.60 அன்று காஞ்சி
பஞ்சுப்பேட்டையில் நடைபெற்ற சி.வி.எம். அண்ணாமலை மன்ற முதலாண்டு
விழாவில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்குத்
தரப்படுகிறது.
இந்தப் பகுதியில் நண்பர் அண்ணாமலை
அவர்கள் பெயராலே அமைந்து இருக்கின்ற இந்த அமைப்பு எடுத்துக்
கொண்டிருக்கிற சீரிய முயற்சிக்கு நான் என்னுடைய பாராட்டுதலையும்,
வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன். அந்த முயற்சிக்குப்
பேராதரவும், ஒத்துழைப்பும், தருகின்ற பெரியோர்களுக்கெல்லாம்
நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம் தோழி சற்குணம்
பேசியதை நான் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட பேச்சாளர்கள்
நம்முடைய இயக்கத்துக்கு இன்னும் நிறையவேண்டும். அவர்கள்
பேசும்போது தோழர் அழகேசன் அவர்களைப் பற்றியும் நிறையப் பேசினார்கள்.
அதை மட்டும் அவர்கள் கொஞ்சம்
குறைத்துக் கொள்ளவேண்டும். அழகேசனைப் பற்றி நாம் அதிகமாகப்
பேசவேண்டியதில்லை. அவருடைய உற்ற நண்பர்கள் என்னிடத்திலே
பேசும் போது என்ன பேசுகிறார்கள் தெரியுமா? அவர்கள் என்னிடத்திலே
பல தடவை “அழகேசனை நீங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கவேண்டும்“
என்று தான் கேட்டுக் கொண்டார்கள்.
அப்போதெல்லாம் நான் அவர்களிடத்தில்
இது நீங்களாகக் கேட்கிறீர்களா? அல்லது அழகேசன் கேட்டுக்
கொண்டாரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவர் கேட்டுக்
கொண்டார்“ என்று நாங்கள் எப்படி உங்களிடத்திலே சொல்லுவது
என்றார்கள்.
எனவே இதிலுள்ள உண்மையை நம்முடைய
நண்பர்கள் புரிந்து கொண்டால் நாம் அழகேசனைப் பற்றி அதிகமாகப்
பேச வேண்டியதில்லை.
பல ஊர்களுக்கும் செல்ல வேண்டும்
நாம் திராவிட நாடு கேட்கிறோம்.
அதைத்தான் நம்முடைய தோழர்கள் விளக்க வேண்டும். இதைப்பற்றிப்
பொது மக்களிடத்தில் விளக்கிச் சொல்லுவதற்கே நமக்கு நேரமில்லை.
மேலும் நம்முடைய கழகக் கொள்கைகள் பரவாத பல ஊர்களுக்கும்
நாம் செல்ல வேண்டியிருக்கிறது.
நேற்று முன்தினம் வ.ஆ. மாவட்டத்தில்
இரண்டு மூன்று கூட்டங்கள் பேசி முடிக்கிறபோது மணி இரவு 12
ஆகிவிட்டது. அந்தக் கூட்டங்கள் முடித்துக் கொண்டு, அடுத்துத்
தவணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து
கொண்டு பேச வேண்டியிருந்து. மழை வேறு பெய்ய ஆரம்பித்துவிட்டது.
மேலும் 10 கல் தொலைவு செல்ல வேண்டியிருந்தது. எங்களை அழைத்துப்
போக வந்திருந்த மோட்டார் ஓட்டிதான் அந்தக் கூட்டத்திற்கு
ஒலிபெருக்கியும் அமைத்திருந்தான். அது சரிவர வேலை செய்யாத
காரணத்தினால் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்த நண்பர்கள்
அவரைத் திட்டிவிட்டார்கள். அதை அவர் எங்களிடத்திலே சொல்லாமலேயே
அவர் எங்களை வந்தவாசிக்கு அழைத்து வந்துவிட்டார். பின்னர்
நாங்கள் வீடு வந்து சேர்ந்துவிட்டோம். அடுத்த நாள் காலையில்
தவணியைச் சேர்ந்த தோழர்கள் என்னைச் சந்தித்து அடுத்து ஒரு
கூட்டத்திற்குத் தவணிக்குக் கட்டாயம் வரவேண்டும் என்று வற்புறுத்திக்
கேட்டுக் கொண்டார்கள். இப்படிப்பட்ட சக்தியைத்தான் காங்கிரசக்
காரர்களாலே புரிந்துகொள்ள முடியவில்லை.
நாம் சொல்லுவது பேசுவது எல்லாம்
புதிய துணியில் ஏற்றிய சாயம் போல் அப்படியே உறுதியாக ஒட்டிக்
கொள்கிறது. அந்த அளவிற்கு நம்முடைய கொள்கை மிகவும் வேக வேகமாகப்
பரவி வருகிறது.
இது அல்லவா கொள்கை – இது அல்லவா
கழகம்?
நம்முடைய கழகக் கொள்கைகளைக்
கேட்கிற பொதுமக்கள் “இது அல்லவா கொள்கை, கழகம் என்றால் இது
அல்லவா கழகம்“ என்று அவர்கள் சொல்லுவது கண்டும், பேசுவது
கண்டும் நானே பூரித்துப் போகிறேன்.
நம்மிடத்திலே எல்லாம் இருக்கிறதே,
ஆனால் எது நம்மிடத்திலே குறைவு என்றால் நண்பர் கே.ஆர்.இராமசாமி
சொன்னதுபோல் பணமில்லை. ஆனாலும், நான் பணமில்லையே என்று கவலைப்பட
வில்லை. விளம்பரத்தாள் ஒட்டவும் இப்படிப்பட்ட கூட்டங்களைப்
போட்டுக் கொள்கை விளக்கம் தரவும், செலவு செய்யப் பணம் இல்லையே
என்றுதான் நான் கவலைப்படுகிறேன். அந்த ஒரு மார்க்கத்தை மட்டும்
நாம் கண்டுபிடித்துவிட்டால் பிறகு அழகேசன் அலறல், காமராசர்
வீரம், வெங்கட்ராமன் பதட்டம் ஆகிய இவைகள் இருக்காது. அந்த
மார்க்கத்தைத்தான் நண்பர் இராமசாமி இப்போது உங்களிடத்திலே
சொன்னார். நாம் அதிலேதான் மிகவும் பஞ்சை! அந்த ஒன்று மட்டும்
நம்மைவிட்டு நீங்கிவிட்டால் பிறகு அவர்கள் ஓய்ந்துவிடுவார்கள்.
காங்கிரசுக்காரர்கள் இங்குள்ள
காமராசர் முதற்கொண்டு நேருவரையில் உள்ளவர்கள் நம்மைப்பற்றி
அந்நிய நாட்டுத் தலைவர்கள் கேட்கும்போது, இந்தத் தேர்தலில்
அவர்களுக்கு மக்கள் ஓட்டளித்தார்கள் – வந்து விட்டார்கள்.
அடுத்த தேர்தலில் பாருங்கள் இவர்கள் பதினைந்து பேர்கூட வரமாட்டார்கள்
என்று சொல்லி வருகிறார்கள். எனவே அடுத்த தேர்தலில் இந்த
எண்ணிக்கை பெருகினால்தான் அவர்கள் இப்படி யாரிடத்திலும்
சொல்லமாட்டார்கள்.
தேர்தல் – திராவிட நாட்டுப்
படிக்கட்டு!
சட்டமன்ற நுழைவு ஒன்றின் மூலமாக
மட்டும் திராவிட நாடு கிடைத்துவிடும் என்று நான் கருதவில்லை.
பல பேருடைய கை, கால்கள் முறிய
வேண்டும். பல்லாயிரக் கணக்கானவர்கள் சிறை செல்லவேண்டும்.
பல நூறு பேர் உயிர் இழக்கவேண்டும்? “அண்ணா எங்கே? அலிபுரம்
சிறையிலா பெல்லாரி சிறையிலா?“ என்று கேட்கக்கூடிய நிலைமை
வந்து அண்ணாவை ஆறு ஆண்டு தண்டித்தார்கள். இப்போது ஒரு ஆண்டு
ஆயிற்று. இன்னும் ஐந்தாண்டு இருக்கிறது என்று நம்முடைய தோழர்
கணக்கெடுக்க வேண்டும் என்பதை நான் அறிந்தவன்தான்“, என்றாலும்
ஓட்டு விஷயத்தில் நாம் அக்கறை காட்டுவது அவசியமாகும். சட்டசபையில்
நமது எண்ணிக்கை பெருகினால்தான் நம்மீது ஆட்சியாளர்கள் ஆத்திரம்
கொண்டு அடக்குமுறைகளை வீசவும், மேலும் கடுமையான நடவடிக்கைகளை
எடுக்கவுமான கட்டத்துக்கு நாம் போக முடியும். மாடிக்கப்
போக வேண்டுமென்று விரும்பினால் ஏணி வேண்டும். அதைப்போல்
தேர்தல் என்பது திராவிடநாடு அடைவதின் படிக்கட்டு போன்றதாகும்.
அந்தப் படிக்கட்டும் வழுக்காமல் இருக்கவேண்டு்ம்.
அதற்குப் பணமல்ல முக்கியம்,
இரத்தம் சிந்துவதற்குத் தாய்மார்களும், உயிர் இழப்பதற்குப்
பெரியோர்களும், கை கால்கள் ஒடிவதற்குச் சில இளைஞர்களும்
இருப்பதுதான் முக்கியம்.
உயிர்போனால்தான் திராவிடநாடு
கிடைக்கும் என்ற வீர வரலாறு தெரியாதவர்கள் அல்ல நாம்.
சபலத்திற்கு ஆளாக மாட்டோம்!
சட்ட மன்றத்தில் நாம் நூறு
பேர் – அவர்கள் ஐம்பது பேர் என்றால் வெளிநாட்டுக்காரர்கள்,
இவர்களைப் பார்த்து அதற்கான காரணங்களைக் கேட்கவேண்டும்.
சட்டமன்றத்திற்குப் போனாலும்
சபலத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற ஐயப்பாடு நமக்குக் கிடையாது.
இன்றைக்குச் சட்டமன்றத்தில்
எதிர்க்கட்சித் தலைவராக 22 உறுப்பினர்கள் வைத்துக்கொண்டு
திரு.வி.கே.இராமசாமி !முதலியார்) எதிர்க்கட்சித் தலைவராக
அங்கே வீற்றிருக்கிறார். என்னை அழைத்துக் காங்கிரசுக் கட்சியைச்
சேர்ந்த ஒரு பெரியவர், இந்த வி.கே.இராமசாமி !முதலியார்)
எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டால் என்றால், எதற்காக
இவர் நமக்கு வலைபோடுகிறார் என்று நான் எண்ணினேன். நான் சொன்னேன்,
அவர் உங்கள் கட்சியில் இருந்தவர். உங்களைப் பற்றி அவருக்குத்தான்
என்னைவிட நன்றாகத் தெரியும் என்றேன். அதற்கு அந்தப் பெரியவர்,
அதற்குச் சொல்லவில்லை, அடுத்த தடவை தேர்தல் முடிந்தபிறகு
எதிர்க்கட்சித் தலைவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம்‘
என்றார். அதற்கு நான் அதுதானே இந்த ஆயிரம் ரூபாயை நான் இரண்டு
நாடகம் நடித்தால் சம்பாதிக்க முடியும் என்று சொன்னேன்.
‘சில்லறை‘களுக்குப் புரியாது!
இப்படி அவர்கள் என்னிடத்தல்
காட்டவேண்டிய ஆசைகளையெல்லாம் காட்டினார்கள். இது நம்மை பற்றி
தாறுமாறாகப் பேசுகிற “சில்லறை“களுக்குப் புரியது.
காங்கிரசுக்காரர்கள் முன்னேற்றக்
கழகத் தலைவர்களை அழைத்துச் சபலம் காட்டினார்கள். அதுவும்
முடியாது என்று தெரிந்துவிட்டதால் அடுத்த தடடிவ வருகிறேன்
பார் என்று சொல்லி வருகிறார்கள்.
காட்ட வேண்டியவர்களையெல்லாம்
காட்டி, ஊட்ட வேண்டியவைகளை எல்லாம் ஊட்டி, இப்பொழுது என்மீது
சீறிப்பாய்ந்து அடுத்த தடவை இவனை உள்ளே விடுகிறேனா பார்
என்று சொல்லுகிறார்கள்.
நான் சட்டமன்றத்தில் நுழையும்போது
எம்.எல்.சி.யாக நமது கழகத்தின் சார்பில் யாரும் இல்லை –
இப்போது மேல்சபையில் கழகத்தின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள்
இருக்கிறார்கள்.
அந்த வித்தையும் தெரிந்துவிட்டது!
நாம் சட்டமன்றத்தில் நுழையும்போது
நகராண்மைக் கழகத்திலே நம்மவர்கள் அதிகம் இல்லை. ஆனால், இன்றைய
தினம் சென்னை நகராண்மைக் கழகத்தில் நாற்பத்தைந்து உறுப்பினர்கள்
இருக்கிறார்கள். நம்முடைய கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள்
அங்கே மேயராகவும், துணை மேயராகவும் வீற்றிருக்கிறார்கள்.
பல நகராட்சி மன்றங்களிலே நம்முடைய நண்பர்கள் பலர் இடம் பெற்றிருக்கின்றனர்.
பல ஊராட்சி மன்றங்களிலே கழக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,
ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கிறார்கள்.
காங்கிரசுக்காரர்கள், அந்த
வித்தைகள் எல்லாம் தங்களுக்குத் தான் தெரியும் என்று நினைத்துக்
கொண்டிருந்தார்கள். இப்போது அந்த வித்தையும் நமக்குத் தெரிந்துவிட்டது.
நண்பர் கே.ஆர். இராமசாமி மேல்சபைத்
தேர்தலுக்குப் போட்டியிட்டுப் பெற்ற வாக்குகள் முப்பது,
நாம் பதினைந்து பேர்கள். கம்யூனிஸ்டுக் கட்சியைச் சார்ந்தவர்கள்
ஐந்து உறுப்பினர்கள். ஆக மொத்தம் இருபது வாக்குகள்தான்.
ஆனால் பெற்ற வாக்குகள் முப்பது. அந்தப் பத்து பேர்கள் யார்
என்ற நான் காங்கிரசுக்காரர்களைக் கேட்கிறேன்.
“பெட்டியிலே மட்டும் பணம்
இருந்தால் எல்லா வித்தையும் தன்னாலே வந்துவிடும். எனவே நான்
நம்முடைய தோழர்கள் அடுத்த தேர்தலுக்கான செலவுகளுக்காக நிதி
சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
சிறுசேமிப்பில் கெட்டிக்காரர்கள்!
மகளிர் மன்றத்தார் வீட்டுக்கு
வீடு சென்று, இவர்களே வீட்டிலுள்ள தாய்மார்களுக்கு உண்டியல்களைக்
கொடுத்து, மாதத்திற்கு ஒருமுறை சென்று அதனைக் ‘குலுக்கிப்
பார்த்து வர வேண்டும்.‘ அத்தகைய காரியத்தில் மகளிர் மன்றத்தைச்
சார்ந்தவர்கள் ஈடுபட வேண்டும். மகளிர் சிறு சேமிப்பில் மிகவும்
கெட்டிக்காரர்கள்.
காங்கிரசுக்காரர்கள் 10 ஆயிரம்
ரூபாய் திரட்டினால், என்னிடத்தில் நீங்கள் ஆயிரம் ரூபாய்
கொடுத்தால் போதும். அவர்கள் பத்து இலட்சம் திரட்டினால் என்னிடத்தில்
நீங்கள் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தால் போதும். பத்துக்கு
ஒன்று என்று கொடுத்தால் போதும், அவர்கள் வித்தை எப்படிப்பட்டது
என்று நான் பார்த்துவிடுகிறேன்.
நான் இங்கே வருவதற்கு முன்னால்,
மின்சார ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது குறைகளைப்
பற்றிப் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். இவர்களது ஆட்சியில்
மின்சார ஊழியர்கள் இவர்களை வாழ்த்துகிறார்களா? ஆரம்ப ஆசிரியர்கள்
இவர்களை வாழ்த்துகிறார்களா? நெசவாளர்கள் இவர்களை வாழ்த்துகிறார்களா?
யார் வாழ்த்துகிறார்கள் இவர்களது ஆட்சியை? அவர்களெல்லாம்
தக்கதோர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த தேர்தலில் நாம் செய்ய
வேண்டியதெல்லாம் அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வருவதற்கு
நமக்கு வசதிகள் வேண்டும். இது கிடைத்தால் நமக்குப் போதும்.
சுதந்தராக் கட்சியால் எங்களுக்கா
பாதிப்பு?
சுதந்தராக் கட்சி இருப்பதால்
அண்ணாதுரைக்குத்தான் ஆபத்து என்று காமராசர் சொல்லுகிறார்.
சுதந்தரா கட்சியினுடைய வளர்ச்சி காங்கிரசுக்காரர்களின் ஓட்டுக்களைத்தான்
பிரிக்கும் எங்களை ஒன்றும் அது பாதிக்காது.
காங்கிரசுக் கட்சியிலேயிருந்து,
காங்கிரசுக் கட்சியிலே வளர்ந்து இன்றைய தினம் அவர்கள் பிரிந்து
வெளியே வந்திருக்கிறார்கள். காங்கிரசுக்காரர்கள் 60 ஓட்டுக்கள்
பெற்றால் அவர்கள் 50 ஓட்டுக்கள் பெறுவார்கள். காங்கிரசுக்காரர்கள்
80 ஓட்டுக்கள் என்றால் அவர்கள் 70 ஓட்டுக்கள் பெறுவார்கள்.
இப்படித்தான் அவர்களுடைய ஓட்டுக்களைப் பிரித்துக் கொள்ளுவார்கள்.
அதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். காமராசர் இதனை உணரவில்லை.
அதைப் போலவே திராவிடர் கழகம்
வளர்ந்தால் தி.மு.கழகம் ஒழிந்து விடும் என்று அவர்கள் எண்ணினார்கள்.
தேர்தல் நேரத்தில் பெரியார் அவர்களை அழைத்துக் கூட நம்மைத்
திட்டச் செய்தார்கள். கூட்டம் போட்டுக் கண்டித்தார்கள்.
பெரியார் திட்டினாலும், கண்டித்தாலும் பொதுமக்கள் அவர் சொல்லுகிற
எல்லாவற்றையும் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் காங்கிரசுக்காரர்களுக்கு
ஓட்டு போடுங்கள் என்றால் அதை எப்படிக் கேட்டுக்கொள்ளமுடியும்.
இது ஒன்றை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார்கள்.
அதன் விளைவுதான் பெரியாரின் கடும் எதிர்ப்புக்கிடையேயும்
நான் காஞ்சிபுரம் தொகுதியிலே வெற்றிப் பெற்றதாகும்.
‘சிறு துளி பெரு வெள்ளம்‘!
எனவே அடுத்த தேர்தலுக்குச்
சில்லறைச் செலவுகளை ஈடுகட்டுவதற்கு நமக்குப் பணம் வேண்டும்.
நம்முடைய தோழர்கள் 10 டீ குடித்தால் அதைக் கொஞ்சம் குறைத்துக்
கொண்டு தேர்தல் நிதிக்குப் பணம் சேர்க்க வேண்டும். புகை
பிடிப்பவர்களாக இருந்தால் அதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு
தேர்தலுக்கு மிச்சம் பிடிக்க வேண்டும். சிறு காடைக்காரர்கள்
அன்றாடம் கொஞ்சம் தேர்தல் நிதிக்கென மிச்சம் பிடிக்க வேண்டும்.
“சிறுதுளி பெருவெள்ளம்“ என்ற
இலட்சியத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது,
ஆனால் ஆச்சாரியார் “பெருவெள்ளம்“ வேண்டும் என்கிறார்.
அப்படி நாம் நிதி திரட்ட வேண்டமென்றால்
தேர்தல் நிதிக்குப் பணம் சேர்க்கவேண்டுமென்றால் அந்தப் பணம்
உங்களைப் போன்ற உழைப்பாளிகள் உழைப்பிலே சேர்க்கப்படும் பணமாக
அது இருக்கவேண்டும். கள்ள மார்க்கெட்டுக்காரர்களுடைய பணம்,
கொள்ளை இலாபக்காரர்களுடைய பணம், பெரியவர்கள் சேர்த்து வைத்துப்
போன பணம் நமக்க வேண்டாம். அப்படிப்பட்டவர்களுடைய பணம் எப்படிப்
போயிற்று என்பதை நான் அறிவேன்.
பித்தாபுரம் மகாராசா என்று
ஒருவர் இருந்தால். நீதிக்கட்சியிலே இருந்த பொப்புலி அரசரைப்
போன்ற பெரும் பணக்காரர். அவர் ஒரு புதுக்கட்சியை “பீப்பிள்ஸ்
பார்ட்டியை“ ஆரம்பித்தார். பத்து, பன்னிரெண்டு இலட்ச ரூபாய்
செலவழித்துக் கட்சி வளரவில்லை என்று தெரிந்ததும் அவர் வீட்டுக்குப்
போய்விட்டார்.
ஒட்டு முன்னேற்றக் கழகத்துக்குத்
தான்!
ஆனால், நம்முடைய கழகம் ஏழை
மக்கள், உழைப்பாளிகள் ஆகியோரைக் கொண்டது. பெரிய மனது படைத்தவர்கள்
பணம் கொடுப்பதைத்தான் முன்னேற்றக்கழகம் விருமபுகிறது.
அப்படி நாம் சிறு தொகைகளைத்
தேர்தல் நிதிக்கென ஒதுக்கினால் நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில்
நாம் வெற்றி பெறலாம். வெற்றிப் பெற வேண்டும் என்பதுதான்
என்னுடைய பேரவா.
போன வாரம் நான் ஊத்துக்காடு
என்ற கிராமத்திற்குப் போயிருந்தேன். மூடத்தனமாக கொள்கைகள்
வேரூன்றி இருந்த அந்த இடம் இன்றைக்கு எவ்வளவோ மாறியிருக்கிறது.
இங்கே நீங்கள் காட்டுகிற உற்சாகத்தை நான் அங்கே கண்டேன்.
பெண் கொடுக்க மாட்டோம். சோறுபோட
மாட்டோம்., சொத்து இல்லையென்று கூறிவிட்டாலும் கூட, கவலைப்படாமல்
“ஓட்டு முன்னேற்றக் கழகத்துக்குத்தான்‘ என்று சொல்லுகிற
இளைஞர்கள் கிராமங்களில் ஏராளமாக இருக்கிறார்கள்.
ஆட்டம் தானாகக் குறைந்துவிடும்!
காங்கிரசுக்காரர்களுக்கு இதெல்லாம்
எங்கே தெரிகிறது. அவர்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று
நினைக்கிறார்கள். அதற்காகத்தான் நான் ஒவ்வொரு வட்டத்திலும்
நான் பேசுவதற்கு முன்னாலே ஐந்தாறு நண்பர்களைப் பேசவைக்கிறேன்.
அவர்கள் பேசும்போது நான் அவர்களையும் பார்க்கிறேன் – உங்களையும்
பார்க்கிறேன், எங்கெங்கே நீங்கள் ரசிக்கிறீர்கள் என்று நான்
தெரிந்து கொள்கிறேன்.
அதைப்போலவே நாம் இன்றைய தினம்
பணபலத்தையும் தேடிப் பிடிக்க வேண்டும். அதைத் தேடிப் பி்டித்துவிட்டால்
அதற்குப் பிறகு இவர்களது ஆட்டம் தானாகவே குறைந்துவிடும்.
எனவே கழகத்தோழர்கள் இன்றைய
தினத்திலிருந்து மிகத் தீவிரமாக இதற்காகப் பணியாற்ற வேண்டுமெனக்
கேட்டுக் கொள்கிறேன்.
(நம்நாடு - 28-4-60)