அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


துணிவு பெற்றாலன்றி நியாயம் பெற இயலாது

மாநிலச் சர்க்கார் ஊழியர்களுக்கு அண்ணா தரும் அறிவு

“நான் உங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ஒரு யோசனை சொன்னேன். அதை யாரும் நீங்கள் செய்யவில்லை. ஆனால் இதேபோல், போபால் என்ற ஊரில் செய்தார்கள். ஊழியர்கள் பிச்சையெடுத்துக் கோரிக்கையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். நீங்கள் அதைச் செய்யாவிட்டாலும் இப்பொழுது சொல்லும் யோசனையைச் செய்யுங்கள் – இனி வாரம் ஒரு நாள் எல்லோரும் கூடி பசனை செய்யுங்கள் – சங்கரா சங்கரா சம்போ! நித்தமும் ஏனிந்த வம்போ! எங்கள் குறைகள் தீருவது எப்போ! என்று நீங்கள் பாடினால் அரசாங்கத்திற்குக் கட்டாயம் வெட்கம் வரும்“ என்று அண்ணா அவர்கள் என்.ஜி.ஓக்களின் கோரிக்கை தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு என்.ஜி.ஓ. சங்கம் சென்னைக் கிளை சார்பில் ஊழியர்களின் கோரிக்கை தினக் கூட்டம் 16.3.60 மாலை 6 மணியளவில் சென்னை மெமோரியல் மண்டபத்தில் திரு.பி. பாண்டித்துரை பி.ஏ.பி.எல்., அவர்கள் தலைமையில் நிடைபெற்றது.

நிவாரணம் நிச்சயம் கிடைக்கும்

தலைவர் முன்னுரையில் ஊழியர்கள் கோரிக்கைகளை விளக்கியும் அரசினர் காட்டும் பாரபட்சம் சரியல்ல என்பதை விளக்கியும் இதற்க உடனடியாக நிவாரணம் வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் தலைவர்களை அழைத்துக் குறைகளை அவர்கள் வழியாக அரசாங்கத்திற்குச் சொல்ல எண்ணினோம் என்றும் குறிப்பிட்டார். கே.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அவர்கள் பேசுகையில் அண்டை நாடான கேரளாவில் உங்களைப் போன்ற ஊழியர்களின் குறைகள் நிறைவு செய்யப்பட்டு இருக்கையில் இங்கு மட்டும் இக்குறை நீங்காமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது என்றும் உறுதியுடன் ஒற்றுமையுடன் இருந்து நீங்கள் கோரிக்கையை எழுப்புவீர்களானால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் என்றும் அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு தருவோம் என்றும் கூறினார்.

தோழர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. அவர்கள் பேசுகையில் என்.ஜி.ஓ.க்களின் குறை நீக்கப்படும் என்பதற்கு இவ்வாண்டு பட்ஜெட்டில் ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டுச் சர்க்காரின் போக்கை வன்மையாகக் கண்டித்துப் பேசினார்.

தோழர் ஏ. கோவிந்தசாமி எம்.எல்.ஏ. அவர்கள், மாநில அரசினரின் போக்கைக் கண்டித்தும் உடனடியாக என்.ஜி.ஓ.க்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் வற்புறுத்திப் பேசினார்.

தோழர் பி.எஸ். சின்னதுரை எம்.எல்.ஏ. அவர்கள் பேசகையில் ஊழியர்களின் குறைகள், அவர்கள் கேட்காமலேயே நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் எல்லாத் திட்டங்களுக்கும் பணம் ஒதுக்கி இருக்கிறது – ஆனால் இந்த ஊழியர்களுக்குக் கொடுப்பதற்கு மட்டும் பணம் ஒதுக்கப்படவில்லை, இது மிகவும் வருத்தப்படவேண்டிய ஒன்று என்றும் அமைச்சர்கள் எல்லோரும் எதைக் கேட்டாலும் இல்லை என்றே சொல்லுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

இதற்கு மேல் தொல்லை வராது

இறுதியாக அண்ணா அவர்கள் பேசியதாவது –
சர்க்கார் அலுவலகங்களில் பணியாற்றுகின்ற தோழர்கள் என்னை வந்த சென்ற கிழமை சந்தித்துக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்ட நேரத்தில், நான் அவர்களிடத்தில் சொன்னேன், நான் வந்து கலந்து கொள்ளுவதால் உங்களுக்கு மேலும் தொல்லை வரும். இது போன்ற தொல்லைகள் வராமல் இருக்குமானால் நான் வந்த கலந்து கொள்ளுகிறேன், எனவே நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவர்கள் இப்பொழுது இருக்கும் தொல்லையைவிட அதிகமான தொல்லைகள் நீங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதால் ஏற்படாது. ஆகையினால் நீங்கள் வாருங்கள் என்றார்கள். இந்த உறுதியைக் கொடுத்து பிறகு தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்.

நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் உங்களுக்கு உடனடியாக பலன் நிச்சயமாகக் கிடைக்காது. நான் உடனடியாகப் பலன் கிடைக்காது என்றுதான் சொன்னேனே தவிரப் பலன் கிடைக்காது என்று சொல்லவில்லை.

ஆனால் நீங்கள் உங்கள் சங்கத்தை நல்ல முறையிலே வளர்த்து நீங்கள் எடுத்துச் சொல்லுகின்ற கருத்துக்கள் மக்களுடைய மனதிலே ஆழமாகப் பதியுமானால் அவசரமாக அந்தப் பலன் ஒரு நாள் ஏற்பட்டே தீரும்! அந்த நாள் உங்கள் ஆற்றலைப் பொறுத்தது – அவசரத்தைப் பொறுத்தது அல்ல.

நீங்கள் நினைத்தால் சர்க்காரை மாற்றலாம்

முதலாளி மனமகிழ்ச்சியாக இருக்கிற நேரத்தில் கேட்டால் ஊதியம் உயரும் என்று எண்ணி, அவர் துக்கப்பட்டு இப்படியும் உலகம் இருக்கிறதே என்று சிரித்த நேரத்தில் அவரிடம் ஊதிய உயர்வு தொழிலாளி கேட்டதாகக் கதை இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட வகையில் தனிப்பட்ட முதலாளியிடம் நீங்கள் பணியாற்றவில்லை. நீங்கள் சமுதாயத்தினிடத்தில் பணியாற்றிகிறீர்கள். நீங்கள் சமுதாயத்தினிடத்தில் பணியாற்றுகிறீர்கள். நிங்கள் ஆற்றுகின்ற பணியைப் பார்க்கவும், உங்களக்குத் தகுந்த அளவிலே வாழ்க்கை அமைவதற்கும் ஏற்ற கணக்குப் பார்த்துக் கொடுக்கும் பொறுப்பை மக்களிலே 150 பேருக்கு அமைத்துக் கொடுத்து இருக்கிறீர்கள்.

சர்க்கார் ஊழியர்கள் என்று நீங்கள் உங்களை அழைத்துக் கொள்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் ஏற்படுத்தியிருப்பது தான் சர்க்கார், நீங்கள் விரும்பினால் சர்க்காரை மாற்றலாம் – சமுதாயத்திற்கு ஊழியம் செய்யக்கூடிய சர்க்காரைக் கொண்டு வரலாம். இந்த உறுதியான மனப்பான்மை ஏற்பட்ட பிறகுதான் தொழிலாளர்கள் – ஊழியர்கள் ஆகியவர்களின் குறைகள் கவனிக்கவும்.

அப்படி ஏற்படுமானால் ஒவ்வொரு அரசயில் கட்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு நான்தான் செய்வேன் என்று சொல்லுகின்ற அந்தப் போட்டியும் நடந்திருக்கிறது. ஆனால் உங்கள் விஷயத்தில் எந்த அரசியல் கட்சியும் போட்டி போட முடியாது.

தன்மானத்தைக் கூடக் குறைத்துக் கொண்டு...

இன்று சட்டசபையில் நான் பேசுகிறபொழுது, அமைச்சரிடத்தில் விளக்கம் சொல்லிவிட்டுத்தான் பேசினேன். ஏனென்றால் உங்கள் பிரச்சினையை நாங்கள் பேசினால் எங்கள் பேரில் குற்றம் சாட்டுவார்கள். எனவே அவர்கள் எங்களை அழைத்துத் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லியதைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் நான் பேசினேன்.

தொழிலாளர் பிரச்சினை என்றால் இப்படி வரம்புக்கட்டி வேலி கட்டி பேசவேண்டியதில்லை. ஆனால் உங்களுக்காக எங்களுடைய அரசியல் தன்மானத்தைக் கூட நாங்கள் குறைத்துக் கொள்ள விரும்புகிறோம்.

நான் பிரச்சினையை நீண்ட காலத் திட்டமாகக் குறிப்பிட்டேன். இந்தக் குறைபாடுகளை நீக்கத்தக்க துரைத்தனத்தை மக்கள் ஆட்சியில் நீங்கள் தீர்மானிக்காவிட்டால் வேறு யார் தீர்மானிப்பார்கள்? இது இப்படியே தான் இருக்கும் 4 பெரிய தனக்காரர்கள் பார்த்து ஒரு துரைத்தனத்தை அமைப்பார்கள். ஆகையினால் நான் வரம்பு மீறிப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். ஆட்சியாளர்களுக்கு அச்சமூட்ட இவ்வாறு பேசுகிறேன் என்று அவர்களும் எண்ண வேண்டியதில்லை.

சமநிலை காட்டுங்கள் – என்கின்ற போக்கில் கண்ணைத் துடைக்க மட்டுந்தான் நாங்கள் வருகிறோம். நாம் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ளவேண்டாம்.

நியாயம் நிலைக்குமா?

இப்பொழுது நீங்கள் என்ன செய்யவேண்டும்? நல்ல கட்டுப்பாட்டுணர்ச்சியுடன் நீங்கள் வரை வேண்டும். அப்படி வளர்ந்தால் உங்கள் வேண்டுகோள் புறக்கணிக்கப்படுகிற நேரத்தில் நாங்கள் நாட்டு மக்களிடத்தில் அதனைச் சொல்ல அவர்களும் உங்களை ஆதரிக்க முன்னுக்கு வருவார்கள் – வருகிறார்கள். ஆகையினால் உங்களுடைய நீண்டகாலத் திட்டம் நிறைவேற்றக்கூடிய துரைத்தனம் அமைக்கப்படவி்ல்லை.

நான் உங்களை எந்த அரசியல் கட்சிக்கும் போகும்படித் தூண்டவில்லை. அழைக்குமாறு கூறவில்லை. இந்தப்பிரச்சனைகளை நீக்க வேண்டுமானால் நிலைமை என்ன என்பதை அறிந்து நீங்கள் நடக்க வேண்டும்.

சட்டசபையில் உங்கள் பிரச்சினை பற்றிப் பேசுவதற்க ஒரு அரைமணி நேரம் கேட்டுப்பெற அருகதையற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம். காரணம் எனக்குப் பக்கத்தில் ஒரு 15 பேர் – நண்பர் கல்யாணசுந்தரத்திற்குப் பக்கத்தில் ஒரு 6 பேர். நண்பர் சின்னதுரைக்குப் பக்கத்தில் ஒரு 4 பேர் எல்லோரும் சேர்ந்தாலும் நாங்கள் 50 பேர்தான் இருக்கிறோம். அவர்கள் பக்கத்திலே 150 பேர் இருந்தால் நியாயம் நிலைக்குமென்று கருதுகிறீர்களா? உலகத்தில் எந்த இடத்திலாவது இத்துறையில் நியாயம் வெற்றி பெற்றிருக்கிறதென்று எந்தக் கதையிலாவது படித்திருக்கிறீர்களா? எனவே எங்களுக்கு இருக்கும் வலிவற்ற தன்மையைப் பாருங்கள்! கழிவிரக்கம் கொள்ளுங்கள்! வலிவற்ற எங்களை வலிவுள்ளவர்களாக ஆக்குங்கள்.

எங்களுக்கு இருக்கும் வலிவுற்ற தன்மைதான் நிதியமைச்சர் சுப்பிரமணியத்திற்கு இருக்கின்ற மன திடம். நாங்கள் என்ன பேசினாலும் அவர் எங்களைப் பார்த்து வலிவற்று இருக்கிறார்கள் என்கிறார்!

இந்தப் பிழைப்பும் ஒரு பிழைப்பா?

நம்மிடத்திலும் ஒரு 100 பேர் எல்லாத் தியாகத்திற்கும் தயாராக இருந்தால் ஒரு கை பார்க்கலாம். இதை முதலில் நீங்கள் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு அரசியல் கட்சி தேவை இல்லை.

நீங்கள் காலையில் எழுந்ததும் உங்கள் மனைவி மக்களையும் நீங்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் கிழிந்த சட்டையையும் பார்க்கிற நேரத்தில் இந்தப் பிழைப்பும் ஒரு பிழைப்பா? இந்தப் பிழைப்பு போனால்தான் என்ன? என்கிற துணிவு பெறுங்கள்.

நாங்கள் அரசாங்கத்திடம் உங்கள் குறைகளைச் சொன்னால் இவர்கள் மட்டும்தான் தொல்லைப்படுகிறார்களா? தபால் – தந்தி தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும், இன்ன பிற தொழிலாளர்களுந்தான் தொல்லைப்படுகிறார்கள் என்று சொல்லுகிற ஆட்சி இருக்கிறது என்றால் என்ன பலன் கிடைக்கும்? யாருக்கு என்ன பலன் கிடைக்கும்? ஆகையால் நீங்கள் சங்கத்தை வலுவாக்க வேண்டும்.

நாங்கள் ஏன் இதைத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறேன் என்றால் இதற்குள்ளே இருக்கிற வலிவற்ற தன்மை நிச்சயம் எனக்குத் தெரியும் அதைப்போல் சர்க்கார் தரப்பிலே உளள்வர்களுக்கும் தெரியும்.

அவதிப்படுகிற ஒரு வர்க்கம்

பெரும்பாலான சர்க்கார் அதிகாரிகள் பக்கத்திலே இருக்கிற அறைக்கு எப்பொழுது செல்வது என்கிற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். இந்தச் சங்கத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமையில்லை. ஒரு சிலரிடம் அதிகமான உறுதி இருக்கிறது. அதனால் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு தொழிற் சங்கத்திற்கு இருக்கிற வலிவு இதில் இல்லை. காரணம், நீங்கள் நடுத்தர வர்க்கத்தில் அச்சத்திற்கும், ஆசைக்கும் உட்பட்டு அவதிப்படுகிற ஒரு வர்க்கம் உங்களுடைய வர்க்கத்தில் கிளர்ச்சிகளை நடத்துவது என்றால் கொஞ்சம் கடினம். அதனால்தான் நமது தோழர்கள் எல்லாம் அடக்கமாகப் பேசினார்கள். ஏறக்குறைய அமைச்சர்கள் பேசுவதைப் போல் பேசினார்கள்.

அமைச்சர்கள் எல்லாவற்றிற்கும் திட்டமிட்டுப் பணம் ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சமுதாயத்திற்குத் தீங்கிழைத்திருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு வீடுகட்ட வேண்டும் என்றால் அவர்கள் திட்டம் நிறைவேறட்டும் என்கிறார்கள்.

திட்டம் நிறைவேற வேண்டுமானால் இவர்கள் வாழ்க்கை தட்டுப்பாடு இல்லாமல் – முட்டுப்பாடு இல்லாமல் நடைபெறுமாறு செய்யத் துரைத்தனத்தார் வழிகோல வேண்டும்.

இவர்களுக்கு எவ்வளவு இவ்வாண்டு ஒதுக்கவேண்டும் என்ற கணக்கை ஆட்சியினர் பார்க்கவில்லை. ஆனால் சட்டசபை உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்துவது பற்றி யோசித்தார்கள்.

இப்பொழுது முடிகிற காரியமா?

உங்கள் அவர்களை கவனிக்கவில்லை என்றாலும் இன்னமும் நீங்கள் “அவர்கள் கவனிப்பார்கள்“ என்று இருக்கிறீர்கள். சம்பளக் குழுவின் சிபாரிசு மூலம் உங்களுக்கு ஒரு 10 ரூபாய் கிடைக்கலாம் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள்.

நாங்கள் உங்கள் குறைகளை மக்களிடத்தில் சொல்லி மக்களை 100க்கு 60 சதவிகிதம் உங்கள்பால் அன்புள்ளவர்களாக ஆக்கியுள்ளோம் என்பதனை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.

நண்பர் ஒரு தாசில்தாரைப் பற்றிச் சொன்னார், எனக்கு ஒரு தாசில்தாரைத் தெரியும். அவர் கீழே இருக்கின்றன அத்தனை ஊழியர்களுக்கும் துளியும் மரியாதை தருவதில்லை. இருவரும் சமமாக உட்காருவதா? என்று எண்ணுகிறவர். ஆனால் இப்பொழுது உங்களைப் போன்ற இளைஞர்கள் அலுவலகத்திற்கு வந்ததும் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு பெருமளவு மாறிவருகிறது..

நாங்கள் துரைத்தனத்தாரிடம் உங்களுக்கு ஊதியம் உயர்த்தித் தரவேண்டும் என்று கூறினால் “எங்கிருந்து தருவது“ என்று கேட்கிறார்கள். நான் எனக்குத் தெரிந்த சில இடங்களைக் காட்டினேன். பஸ்களை எல்லாம் ஏன் தேசீயமயமாக்கக்கூடாது? என்று கேட்டேன். “அது இப்பொழுது முடிகிற காரியமா?“ என்கிறார்கள்.

அரசியல் தெரிந்தால் போதும்!

ஆகவே நீங்கள் உங்கள் கோரிக்கையைச் சொல்லும்பொழுது உங்களின் பொருளாதாரம் தெரிந்தவர்களைக் கொண்டு துரைத்தனத்திற்கு எந்தெந்த வகையில் வருவாய் வரும் என்பதனை முன் கூட்டியே தயாரித்து வைத்திருந்து அமைச்சர்களுக்குக் காட்ட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சரிடத்திலே என்.ஜி.ஓக்களின் ஊதியம் உயருமா? என்று நான் கேட்டதற்கு அமைச்சர் எனக்குச் சோசியம் தெரியாது என்று கூறினார். இதற்குச் சோசியம் தெரிய வேண்டியதில்லை. அரசியல் தெரிந்தால் போதும்! அறம் தெரிய வேண்டும்! அத்துடன் அவர் யார் என்பதையும், நீங்கள் யார் என்பதையும் அவர் தெரிந்ததிருந்தால் போதும்.

வருகின்ற வருவாய் நேரிடையாகத் துரைத்தனத்திற்குப் போகாமல் வேறு எங்கேயோ போகிறது. அதை இந்தத் துரைத்தனம் அறியவில்லை.

ஆகவே தோழர்கள், நீங்களும் வலிவற்றவர்கள் – நாங்களும் வலிவற்றவர்கள்! இரண்டு பேரும் இப்பொழுது வருந்துவதைத் தவிர வேறு எதை இந்நிலையில் செய்ய முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

துரைத்தனத்தை மாற்றுங்கள்!

எனவே உங்கள் குறைகளைத் தீர்க்கத்தக்க வகையில் 1962இல் இந்தத் துரைத்தனத்தை மாற்றுவதற்கு வழிசெய்தால்தான் இவைகளுக்குப் பரிகாரம் கிடைக்கும்!

நான் என்ன சொன்னாலும் நிதியமைச்சர் தனக்கு இருக்கும் வாதத் திறமையாலும, பலத்தினாலும், எதையும் செய்ய மறுக்கிறார் என்பதை எண்ணி நீங்கள் எல்லாம் உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திட்டமாக வைத்து, 1962இல் இதற்கெல்லாம் கட்டாயம் ஒரு வழி காணவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 21.3.1960)