அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உலகத் தமிழ் மாநாடு

(03.01.1968 அன்று காலை சென்னையில் நடைபெற்ற சிறப்பு மிக்க உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரை ஆற்றுகிறார்கள்)

அன்புள்ள தலைவர் அவர்களே, கலையுலகத்து நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே

உலகத் தமிழர் மாநாடு மிகச் சிறப்பான முறையில் நம்முடைய தற்கால வரலாற்றிலே இடம்பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது அதையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலமாகும் இதை கண்டுகளித்த லட்சக்கணக்கான மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலேயிருந்து வந்திருந்து ஒவ்வொரு வித்தகரும் இதனை மிக அருமையானதென்று பாராட்டினார்கள்.

இந்த ஊர்வலத்தைக் காணவேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் அவர்களை நான் நேரிலே சென்று அழைத்தபொழுது அவர்கள் முதலில் ஊர்வலத்தைப் பற்றிக்கூட அதிகமான அளவுக்கு அவர்கள் அக்கறை செலுத்தக்கூடிய நிலையிலே இல்லாமல் இருந்தார்கள். ஊர்வலம் என்றால் மக்கள் திரண்டு வருவார்கள்; அல்லது வேறு ஏதாகிலும் வாத்திய வகைகளெல்லாம் கொண்டுவரப்படும்; வேடிக்கைக் காட்சிகளெல்லாம் இருக்கும். இதை நான் உட்கார்ந்து வெகுநேரம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது நான் அவர்களிடத்திலே குறிப்பிட்டுச் சொன்னேன் நீங்கள் அந்த ஊர்வலத்தைக் காணுவதன் மூலம் பழந்தமிழகத்தைக் காணப்போகிறீர்கள்; தமிழர்களுடைய பண்பாட்டைப் பார்க்கப்போகிறீர்கள்; தமிழர்களுடைய வரலாற்றுத் துண்டுகளைப் பார்க்கப்போகின்றீர்கள். ஆகையினாலே இது வழக்கமாக காணுகின்ற ஊர்வலங்கள் அல்ல; இது தமிழகத்தினுடைய வரலாற்றை உருவகப்படுத்துகின்ற ஒரு நினைவை உங்களுக்குக் கொடுக்கும் ஆகையினாலே இததை நீங்கள் கட்டாயம் காணவரவேண்டும் என்று நான் அழைத்தேன். அவர்களும் அதை மனமுவந்து ஒப்புக்கொண்டு அந்த ஊர்வலத்தை இறுதி வரையிலே கண்டுகளித்தது மட்டுமல்லாமல் பலமுறை தம்முடைய பாராட்டுதலை தெரிவித்தார்கள். ஒவ்வொரு காட்சி வருகின்றபொழுதும் அவருக்கு அதை விளக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நான் எடுத்துச்சொல்ல ஆரம்பித்தேன். உடனே அவர்கள் அந்த உருவத்தைப் பார்த்தவுடன் ஏற்கனவே அவர்களுக்குத் தமிழகத்து வரலாற்றைப் பெருமளவுக்கு தெரிந்துவைத்திருப்பதாலே இது எனக்குத் தெரியும் இந்தக் கதையல்லவா, இந்தக் காட்சியல்லவா என்று வியந்து பாராட்டி அவர்கள் தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். இப்படி இந்தியக் குடியரசுத் தலைவரிலேயிருந்து வெளிநாடுகளிலேயிருந்து வந்த வித்தகர்கள் வரையில் இதைக் கண்டுகளித்த லட்சக்கணக்கான மக்கள் ஈராக இதனை மிக அருமையானது என்று பாராட்டத்தக்க முறையில் இந்த ஊர்வலம் அமைந்திருந்ததென்றால் இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு நல்லமுறையிலே நிறைவேற்றிக்கொடுத்த நம்முடைய பெருமதிப்புக்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்களும் அவருடைய குழுவினரும் என்றென்னும் நம்முடைய பாராட்டுதலைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்தத் தகுதி தங்களுக்கு மிக அதிகம் உண்டு என்பதை எங்களுக்கு ஏன் பாராட்டுதல் என்று சொல்வதன் மூலமாகவே மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்றார்கள். அவர்கள் சொன்ன எஸ்.எஸ்.வாசன் அவர்கள் சொன்ன ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழகத்தினுடைய இலக்கியமும் வரலாறும் இவ்வளவு அழகானதாக இருந்திராமல் போயிருக்குமானால் நாங்கள் இப்படிப்பட்டக் காட்சிகள் அமைத்திருக்க முடியும் என்று அவர்கள் சொன்னது வெறும் சுவைபடப் பேசுகின்ற வார்த்தை மட்டுமல்ல நம்முடைய வரலாற்றைப் பற்றி நாம் எண்ணி எண்ணிப் பெருமைப்படத்தக்க நமக்கு நினைவினைக் கொண்டுவந்து சேர்க்கத்தக்க ஒரு அறிவுரையாகும்.

அவ்வளவு தூரம் நம்முடைய வரலாறு எல்லோருடைய மனதையும் ஈர்க்கத்தக்க வகையிலேயும் உலகத்து மக்களாலே பாராட்டத்தக்க முறையிலேயும் அமைந்திருப்பது உள்ளபடி வேறுபல செல்வங்களை நாம் அதிக அளவுக்குப் பெறாமல் போய்விட்டாலும் இந்தச் செல்வத்தைப் பெற்றிருக்கறோம் என்பதில் நாம் மிகுந்தப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இதை பேணி நல்லமுறையில் வளமாக வைத்திருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய திறமையை நேரத்தைப் பயன்படுத்தவேண்டும். கலைத்துறையிலே உள்ள நம்முடைய நண்பர்கள் பலர் அதை ஒரு தொழிலாகக் கருதிக்கொண்டு அந்தத் துறையிலே ஈடுபட்டிருக்கின்றவர்கள் அல்ல. அவர்கள் அந்தக் கலைத்துறையிலே போடுகின்ற முதலை வேறு துறையில் போட்டிருப்பார்களேயானால் இதைவிட அதிகமான அளவுக்கு வருவாயை இதிலே இருக்கின்ற ஆபத்துக்கள் இல்லாமல்கூட பெறுவதற்கு வழிவகை கிடைத்திருக்க முடியும். ஆனால் அவர்களுக்கு கற்பனைத் திறத்திலே உள்ள நம்பிக்கை கலைத்திறத்திலே உள்ள ஆர்வம் தமிழ் இலக்கியத்திலே உள்ள பற்றுதல் நம்முடைய நாட்டை உலகத்திற்கு காட்டவேண்டும் என்ற நாட்டுப்பற்று உணர்ச்சி இவைகளெல்லாம் அவர்களை கலைத்துறையிலே இந்த அளவுக்கு ஈடுபடவைத்திருக்கின்றது. அவர்கள் அதிலே காட்டியிருக்கின்ற ஆர்வத்தினுடைய உச்சக்கட்டத்தைப்போல் இந்த ஊர்வலத்தை நல்ல முறையிலே அமைப்பதற்காக இரவு பகலென்று பாராமல் ஒரு மாதம் இரண்டு மாதம் வரையில் அவர்கள் தங்களுடைய முழு திறமையை இதற்கு அளித்திருக்கின்றார்கள். இப்பொழுதுகூட அவர்ளைப் பாராட்டிக்கொண்டிருக்கின்ற நேரத்தில்கூட அந்த ஊர்வலத்திலே கொண்டுவரப்பட்ட காட்சிகளை நம்மாலே மனக்கண் முன்னாலே கொண்டுவந்து நிறுத்திப்பார்க்க முடிகின்றது. ஒவ்வொன்றும் உயிர்ப்புச் சக்தியோடு ஒவ்வொன்றும் உள்ளத்தைத் தொடக்கூடிய தன்மையில் ஒவ்வொன்றும் நமக்கு நாமே மகிழ்ச்சியைத் தருவித்துக்கொள்கின்ற முறையில் மிக அருமையாக அமைந்திருந்தது. அதிலே எதை மறப்பது எதை விடுவது என்றுத் தெரியாமல் மக்கள் இவ்வளவுதானே கண்டோம் இன்னும் சற்றுநேரம் காணமுடியவில்லையே என்று கவலைப்படத்தக்க விதத்தில் அது அமைந்திருந்தது.

போரடிக்கிறோம் என்ற பெருமையோடிருந்த யானையை மறந்துவிடுவதா? கன்றை இழந்துவிட்டதாலே கண்களெல்லாம் நீர் நிறம்ப நின்ற பசுவை மறப்பதா? அல்லது மாமல்லபுரத்துச் சிற்பத்தைப் மறப்பதா? அல்லது துயிலுகின்ற நேரத்தில் கனாக்கண்டதை எண்ணி எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்த ஆண்டாளை மறப்பதா? எதை மறப்பது என்று தெரியாமல் எல்லோருமே திகைத்து நின்றார்கள். அந்த அளவுக்கு அந்தக் காட்சிகள் நம்முடைய உள்ளத்தைத் தொடுவனவாக அமைந்திருந்தன. இன்னமும் தமிழிலக்கியத்திலே உள்ள மற்றப் பல காட்சிகளையெல்லாம்கூட கொண்டுவந்துக் காட்டலாம் என்று நமக்கு விருப்பம் இருந்தபோதிலும் நேரம் அதற்கு அதிகமாகக் கிடைக்கவில்லை என்பதாலே இந்த அளவுக்கு அது நிறுத்தப்பட்டதே தவிர நம்முடைய கலையுலயத்து நண்பர்கள் இன்னும் அதிக அளவுக்குக்கூட அதை செய்வதிலே ஈடுபாடு காட்டினார்கள். ஆனால் செய்த அளவிலேகூட எந்த அளவுக்கு அதற்கு செலவாகியிருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொண்டால் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியினுடைய அளவு நமக்கு நன்றாகத் தெரியும். கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் இந்த ஊர்வலக் காட்சிகளுக்காக மட்டும் அவர்கள் செலவழித்திருக்கின்றார்கள். பலருக்கு ஒரு நிகழ்ச்சியினுடைய வருவாய்தான் அதிகமாக நெஞ்சிலே உறுத்திக்கொண்டிருக்கும்; அதனுடைய செலவினம் மறந்துபோய்விடும். இது செலவினம் மட்டும் வருவாயே இல்லாத செலவினம் ஆறு லட்சம் ரூபாய்கள். இந்த ஆறு லட்சம் ரூபாய்களில் அவர்கள் தமிழகத்தினுடைய பண்டை பெருமையை நாம் பெருமளவுக்கு உணர்ந்துகொள்ளத்தக்க நிலையிலே செய்திருக்கின்ற காரணத்தினாலே இதிலே வெண்பொற்காசுகள்தான் ஆறு லட்சமே தவிர அவர்களுடைய நெஞ்சத்தின் எண்ணங்கள் அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய திறமை கோடி கோடி பெறும் என்று சொல்லத்தக்க விதத்தில் அது அமைந்திருக்கின்றது.

இவ்வளவு அருமையான முறையிலே ஊர்வலக்காட்சி அமைத்துக்கொடுத்த நம்முடைய நண்பர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் அவருக்குத் துணையாக இருந்த நம்முடைய நண்பர்கள் நாகி ரெட்டியார் அவர்கள், ஏவிஎம் அவர்கள், ஏ.எல்.எஸ். அவர்கள் மற்றும் நம்முடைய நண்பர்கள் பீம் சிங் அவர்கள் மற்றும் உள்ள நண்பர்கள் அத்தனை பேரும் இதிலே காட்டிய அக்கறையை நான் பலக் கட்டங்களில் கண்டு கண்டு பெருமைப்பட்டேன். எந்த நேரத்தில் அந்த ஊர்வலம் எந்த இடத்திற்கு வரும் என்று முன்னதாக நம்முடைய நண்பர் வாசன் அவர்கள் குறிப்பிட்டு வைத்திருந்தார்கள்.அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்டக் காட்சி வந்து நின்றது. குறிப்பிட்ட நேரத்திற்கு முதல் முதல் ரயிலைக் கொண்டுவந்ததற்காக முசோலினிக்கு இத்தாலி நாட்டிலே பாராட்டுத் தெரிவித்தார்கள். நாம் இன்னும்கூட அந்தப் பாராட்டினைத் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் நம்முடைய நண்பர் வாசன் அவர்கள் அதற்கு திட்டமிட்டு அவர்களே அதற்கான இடைவெளிகளெல்லாம் கண்டறிந்து நேரத்தைக் கணக்கெடுத்து மிக அருமையான முறையில் அதை அமைத்துக்கொடுத்தார்கள். அப்போது நான் எண்ணிக்கொண்டேன். இந்த ஊர்வலத்தில் அவர்கள் எந்த இடத்தில் எந்த நேரத்தில் இந்தக் காட்சி வந்து நிற்கவேண்டும் என்று திட்டமிட்டார்களோ அதே அளவிலே கொண்டுவந்திருக்கிறார்களே இவர்களுடைய செயல்திறமை பாராட்டுக்குரியது என்று நான் எண்ணி மகிழ்ந்த நேரத்தில் தம்பி கருணாநிதியைக் கேட்டேன், எப்படி இது அவர்களாலே முடிந்தது என்று. அப்பொழுதுதான் ஒவ்வொரு ஸ்டுடியோவிலும் நாள் கணக்காக இதற்கான ஒத்திகைகளெல்லாம் நடந்ததாகவும் நண்பர் வாசன் அவர்களே ஒவ்வொரு அலங்கார வண்டிக்கும் இன்னொரு அலங்கார வண்டிக்கும் இடையில் உள்ள இடைவெளியை கணக்கெடுத்து அவரேகூட நடந்து பார்த்ததாகவும் இவைகளையெல்லாம் சொன்னார்கள்.நான் மிக்கப் பெருமைப்பட்டேன். அவர்கள் நாங்கள் அவர்களை அழைத்து இந்தக் காரியத்தை நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்ட நேரத்தில் நன்றாகத்தான் செய்வார்கள் என்பதிலே எங்களுக்கு ஐயப்பாடு இல்லை. ஆனால் நன்றாகச் செய்தார்கள் என்று நாங்கள் எண்ணிய எண்ணம் எப்படி செய்தார்கள் இப்படி இருக்கிறதே என்று காலமெல்லாம் எண்ணி மகிழத்தக்க அளவுக்கு அது இருந்திருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஏதோ ஒரு சர்க்கார் கூப்பிட்டு சொல்கிறார்கள் என்பதாலே தொழிலதிபர்களிலே பலர் பல காரியத்தைச் செய்கிறார்கள். அது செய்கிறபொழுதே ஏன் செய்கிறோம் என்ற எண்ணம் கொண்டுள்ள தொழிலதிபர்கள் சிலர் உண்டு. இதை எப்படியாகிலும் காண்பதற்கு நன்றாக இருக்கவேண்டும் ஆனால் உள்ள செலவு அதிகமாகாதளவுக்கு இருக்கவேண்டும் எனறு கணக்கெடுக்கக்கூடிய தொழிலதிபர்கள் உண்டு. அந்த முறையிலே இல்லாமல் நாங்கள் அவரை அழைத்து சொன்ன நேரத்தில் அவர்கள் அதிலே காட்டிய ஆர்வத்தை நான் அன்றையதினமே உணரமுடிந்தது. நான் அன்றையதினம் உணரமுடிந்த அந்த ஆர்வத்தை அவர்கள் பெருமளவுக்கு நாமெல்லாம் பெறத்தக்க விதத்தில் இந்த ஊர்வலக் காட்சியை வெகுசிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு நாம் பெரிதும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கலையுலகத்தோடு எனக்கும் தம்பி கருணாநிதிக்கும் நாங்கள் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு பன்னெடுங்ககாலத்திற்கு முன்னாலேயிருந்து நெருங்கியத் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பு நாங்கள் அரசுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாலே இப்போது ஓரளவுக்கு அந்தத் தொடர்பு குறைந்திருக்கிறதென்றாலும் கலையுலகத் தொடர்பிலேயிருந்து நாங்கள் எங்களுடைய நெஞ்சத்தை என்றையதினமும் வெளியே எடுத்துச் செல்வதாக திட்டமும் இல்லை எண்ணமும் இல்லை. ஏனென்றால் எழுத்தறிவு அதிகம் இல்லாத இந்த நாட்டில் எடுத்துச்சொல்லப்படவேண்டிய நற்கருத்துக்களையெல்லாம் கலைத்துறையின் மூலம் பயனுள்ள முறையில் சுவையுள்ள முறையில் எடுத்துச்சொல்ல முடியும் என்ற அடிப்படைக் கருத்தில் நான் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருக்கின்றேன். நான் கொண்டிருப்பதிலேகூட வியப்பில்லை. முற்போக்கடைந்த ஒவ்வொரு நாடும் அந்தக் கலைத்துறை விஷயத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அது பல்லாயிரக் கணக்கானவர்களுக்குத் தொழில் தருகின்ற ஒரு தொழில் என்ற முறையிலே மட்டுமல்லாமல் மக்களுக்குப் பொழுதுபோக்குச் சாதனம் என்ற முறையிலே மட்டுமல்லாமல் நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையில் நற்கருத்துக்களைத் தருவதற்கான சிறந்த சாதனம் என்று முற்போக்கு நாடுகளெல்லாம் இன்றையதினம் ஒப்புக்கொண்டிருக்கின்றன; வரவேற்றுப் பாராட்டிப் பேசியிருக்கின்றன.

நம்முடைய நாட்டிலும் கலைத்துறையின் மூலம் நாம் பெறக்கூடியப் பலன் மிகுதியாக இருக்கிறது என்பதில் எங்களுக்கு தளராத நம்பிக்கை இருக்கின்றது. ஆகையினால் கலைத்துறையினர் மேற்கொண்டிருக்கின்ற அந்த நற்பணிக்காக நான் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தையும் அரசினுடைய பாராட்டுதலையும் நான் தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இதை அவர்கள் வெறும் கடமையுணர்ச்சியோடு நாங்கள் செய்யவில்லை. களிப்பான நிகழ்ச்சியாக நாங்கள் செய்கின்றோம். அந்தக் களிப்பான நிகழ்ச்சியிலே இருக்கிறபோதுகூட நான் சற்றுக் கவலையோடு இருப்பதனை நம்முடைய நண்பர் வாசன் அவர்கள் கண்டறிந்தார்கள். அது கலையுலகத்திலே உள்ளவர்களுக்குத்தான் நெஞ்சத்தை அவ்வளவு எளிதாக கண்டறிய முடியும். அது உள்ளபடி நான் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதற்கு உள்ள ஒரு காரணத்தை அவர்கள் சொன்னார்கள். ஆனால் அது முழுக் காரணம் அல்ல. ஒரு ஐந்தாறு நாட்களாக எனக்கு கடுமையான வயிற்றுவலியினாலே தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அது மருத்துவமனைக்குச் சென்றுகூட பார்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இப்பொழுது பட்ஜட் கூட்டத் தொடர்வரிசை இருப்பதாலே நான் செல்வதற்கு இயலாத நிலையில் மருத்துவர்களிடத்திலே மருந்து பெற்று அதைப் பருகிக்கொண்டு நோயைக் குறைத்துக்கொள்கின்ற முறையில் இருக்கின்றேன். ஆகையினால் நான் நான் மிகுந்த கவலையாக இருப்பதற்கு அடிப்படையான காரணம் நம்முடைய நண்பர் வாசன் அவர்கள் சொன்னபடி நம்முடைய நாடடினுடைய நடவடிக்கைகளில் எனக்கு ஏற்பட்டிருக்கின்ற கவலை மிகமுக்கியமான காரணம் என்றாலும் அதை நீக்கிக்கொள்ளத்தக்க அளவுக்கு உடல்நிலையிலேயும் ஓரளவுக்குக் கொஞ்ச்ம் கடுமையான நோய் இருப்பதாலே கவலை இருக்கின்றது என்பதனை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். உள்ளபடி அந்த வயிற்றுவலி மட்டும் இப்போது அதிகமான அளவுக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் நான் ஒரு திருநாள் போல் கொண்டாடியிருக்கவேண்டிய மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி இது. ஆனாலும் இந்த நிகழ்ச்சி உங்களுடைய பெருமகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வதிலேயும் உங்களுக்கெல்லாம் பாராட்டுத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததிலேயும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நண்பர் வாசன் அவர்கள் சொன்னபடி ஜனநாயகத்திற்கு ஊறு நேரிடுமோ என்ற கவலை எனக்கேற்பட்டாலும் நம்முடைய நண்பர்களுடைய உற்சாகமான ஊக்கமான உறுதியான துணையோடு அதைக் காப்பாற்றுகின்ற கடமையிலேயிருந்து நான் விலகிச்செல்வேன் என்று அவர்கள் எண்ணிக்கொள்ளத் தேவையில்லை என்பதனையும் நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொண்டு இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிக்கு அவர்கள் இன்றையதினம் நடுநாயகமாக இருந்ததற்கு அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழகத்து மக்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழக அரசினுடைய பாராட்டுதலைத் தெரிவித்துக்கொண்டு இந்த விழாவிலே நான் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததில் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். வணக்கம்.

 

03.01.1968 அன்று மாலை சென்னையில் நடைபெற்ற சிறப்பு மிக்க உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார்கள்.

மதிப்பு மிக்க இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே தமிழகத்தினுடைய ஆளுநர் அவர்களே அமைச்சர் பெருமக்களே, முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலனார் அவர்களே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே
இந்த மாநாட்டினுடைய தலைமையுரை என்ற முறையில் வழக்கமான மாநாடுகளிலே பேசப்படுவதைப்போல் நீண்டதொரு தலைமையுரை இருக்கும் என்று நீங்கள் யாரும் விபரம் அறிந்தவர்கள் கருதமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் இந்த மாநாடே நாளையதினம் முதற்கொண்டுதான் இங்கே நடத்தப்பட இருக்கின்றது.

உலகத்திலே பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி ஆராய்ச்சியிலே வல்லவர்களும் தமிழ் வரலாற்று நுணுக்கங்களை அறிந்திருக்கின்றவர்களுமான பெருமக்கள், பல்கலைக்கழகங்களிலே பணியாற்றுகின்ற பேராசிரியர்கள், நாளையதினம் முதற்கொண்டு இங்கே அவர்கள் கருத்தரங்கத்தை நடத்தி அந்தக் கருத்தரங்கத்தின் வாயிலாக நம்முடைய தமிழ்மொழியினுடைய நுணுக்கங்களையும் அருமை பெருமைகளையும் தமிழ் மொழிக்கும் உலகத்திலே உள்ள மற்ற மொழிகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றியும் பிறமொழிகளுக்கெல்லாம் தமிழ்மொழி தன்னுடைய துணையை தந்திருப்பதற்கான ஆதாரங்களைப் பற்றியும் கருத்தரங்கத்திலே விவாதிக்க இருக்கின்றார்கள். அவர்கள் எடுத்துச் சொல்லவிருக்கின்ற நற்கருத்துக்கள் நமக்கு பல காலமும் பயனளிக்கத்தக்கதாகவும் அந்த தமிழ் மொழியினுடைய ஏற்றத்திற்கும், வாழ்விற்கும் வளத்திற்கும் வழிகோலுவதாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. அவர்கள் சென்னை பெருநகரத்திலே கூடி அந்தக் கருத்தரங்கத்தை நடத்துவதற்கு நம்முடைய குடியரசுத் தலைவர் அவர்கள் துவக்கவிழாவினை நடத்திக் கொடுத்ததற்கு நாம் அனைவரும் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு பெரிதும் கடமைப் பட்டிருக்கின்றோம். இந்தியாவின் மிகுந்த பண்பாளர் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுபவரும் எல்லோருடைய மனப்பான்மையையும் நல்ல முறையிலே நுணுகி ஆராய்ந்து பிறகு சமநிலையான மனப்பான்;மை நாட்டிலே வளரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவரும், கற்றறிவாளரும். வித்தகரும் கலைத்துறையிலே வல்லவரும் தேசிய விடுதலை போராட்டத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவரும், பல்கலைக்கழகத்திலே துணைவேந்தராக இருந்தவரும், கல்வித்துறையிலே புதுமையைப் புகுத்தியவரும் இன்றைய குடியரசுத் தலைவராக இருக்கின்ற நம்முடைய பெருமதிப்புக்குரிய ஜாகீர் உசேன் அவர்கள் இந்த மாநாட்டினைத் துவக்கிக்கொடுத்தது உள்ளபடி நமக்கெல்லாம் பெருமிதத்தைத் தருகின்ற செயலாகும்.

அவர்களை நான் அணுகி இந்த மாநாட்டிற்கு அவர்கள் வரவேண்டும் என்று கேட்ட நேரத்தில் நான் தமிழ்மொழியினுடைய ஆராய்ச்சியில் அதிகமான ஈடுபாடு கொண்டவன் அல்ல; அப்படி இருக்கின்ற என்னை இதற்கு அழைக்கின்றீர்களே ஏன் என்று என்னைக் கேட்டார்கள். நான் அவரை இரண்டு மூன்று ஆண்டு காலம் டெல்லியிலே இராஜ்யசபையிலே இருந்த நேரத்தில் அறிந்திருக்கின்ற காரணத்தையொட்டி அவரிடத்திலே நான் குறிப்பிட்டேன் நீங்கள் தமிழ் மொழியை அறியாமல் இருக்கலாம் ஆனால் நம்முடைய நாட்டினுடைய கலாச்சாரத்தைப் பற்றியும் மொழி நூல் வல்லமையைப் பற்றியும், வரலாற்றைப் பற்றியும் நிரம்பக் கற்றறிந்திருக்கின்ற ஒரு பெருமகனாவீர்கள். நீங்கள் இந்த மாநாட்டுக்கு வருவது எங்களுக்கெல்லாம் பெருமிதமளிக்கும் என்று நான் கேட்ட நேரத்தில் அவர்கள் அதற்கு இசைவு தந்தது மட்டுமல்லாமல் ஒரு அரைமணி நேரம் எது தமக்குத் தெரியாது என்று சொன்னாரோ அந்தத் தமிழ் வரலாற்றைப் பற்றியும், எது தமக்கு புதிதென்று சொன்னாரோ அந்தத் திராவிட நாகரிகத்தைப் பற்றியும் வெகு நுணுக்கமான முறையில் என்னிடத்திலே பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்லவேளையாக இந்தியக் குடியரசுக்கு தொடர்ந்து இரண்டு கற்றறிவாளர்கள் தலைவராக கிடைத்திருக்கின்றார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கல்வித்துறையில் வித்தகர்கள் வல்லவர்கள், கலாச்சாரத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்.அவர் குடியரசுத் தலைவராகப் பணியாற்றி விலகிய நேரத்தில் அவரைப்போலவே கல்விமானாகவும் அவரைப்போலவே கற்றறிவாளராகவும், சிறந்த பண்பாடு மிக்கவராகவும் ஜாகீர் உசேன் அவர்கள் இந்திய குடியரசுத் தலைவராக அமர்ந்திருப்பது தொடர்ந்து இந்தியக் குடியரசு கல்வித்துறையிலேயேயும் கலாச்சாரத்துறையிலேயே ஈடுபாடு கொண்டவர்களை மதிக்கின்றது போற்றுகின்றது வாழ்த்துகின்றது, வரவேற்கின்றது என்பதனை மெய்ப்பித்துக் காட்டுகின்றது.

டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள் இந்த மாநாட்டை திறப்பாளராக வந்தது மட்டுமல்ல நம்முடைய தமிழகத்து சட்டமன்றத்தில் திருவள்ளுவருடைய திருவுருவப் படத்தை அவர்கள் துணைத்தலைவராக இருந்த நாட்களில் இங்கே திறந்து வைத்து தமிழத்திற்கு பெருமை தந்திருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு பெருமகனார் துவக்கிவைக்கின்ற இந்த மாநாடு நம்முடைய தமிழ்மொழி ஆராய்ச்சித்துறையில் ஒரு நல்லக் கட்டத்தை ஒரு புதிய கட்டத்தைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. நாளைய முதற்கொண்டு இந்த ஆராய்ச்சியிலே ஈடுபட இருக்கின்ற வித்தகர்கள் நம்முடைய தமிழ்மொழி செம்மையானது வெம்மையானது வளமிக்கது வலிமை மிக்கது வாழ்வு பெற்றது மற்றவர்களை வாழச்செய்வது வேறுபல மொழிகளுக்கெல்லாம்கூட தாயகமாக விளங்கியிருப்பது என்ற பேருண்மைகளையெல்லாம் ஆதாரத்தோடு அவர்கள் எடுத்துக்காட்ட இருக்கின்றார்கள். தமிழ்மொழியினுடைய மாண்புகள் தமிழகத்தோடு மட்டுமில்லாமல் கீழத்திசை நாடுகளிலெல்லாம் பரவியிருந்ததற்கு ஆதாரமும் அதைப்போலவே உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளிலேயும் தமிழ்க் கலாச்சாரச் சின்னங்கள் இங்குமங்குமாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் இன்றையதினம் ஓரளவிற்கு அறிந்திருக்கின்றார்கள். அதை பெருமளவுக்கு அறிதல் வேண்டும். முழு அளவிற்கு அறிதல் வேண்டும். உலகம் ஒப்புக்கொள்ளத்தக்க அளவு அதனை அறிதல் வேண்டும் என்ற முறையில் நம்முடைய நண்பர்கள் நடத்திக்கொண்டு வருகின்ற பல நாடுகளைச் சார்ந்தவர்கள் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வைத்திருக்கின்ற ஒரு பெருமன்றத்தின் சார்பில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

நம்முடைய நண்பர்களெல்லாம் முன்பே குறிப்பிட்டபடி முதல் ஆராய்ச்சி மாநாடு மலேசிய நாட்டிலேயும் இரண்டாவது மாநாடு சென்னைப் பெருநகரத்திலேயும் அது நடத்திருக்கின்றது. காமராஜர் அவர்கள் சொன்னபடி முதல் மாநாட்டையேகூட நாம் நடத்தியிருக்கவேண்டும். என்ன காரணத்தினாலோ அவர்கள் விஞ்சிக்கொண்டார்கள். நாம் இரண்டாவது மாநாட்டைத்தான் நடத்துகிறோம் என்று அவர்கள் கூறிப்பிட்டார்கள். எப்பொழுதுமே நம்முடைய தமிழ்நாட்டில் அண்ணன் கொஞ்சம் அக்கறையற்றிருந்தாலும் தம்பி மிகுந்த அக்கரையாக இருப்பது நம்முடைய தமிழ்ப் பண்பாட்டினுடைய வழிவழி வந்தது. ஆகையினால் முதல் மாநாட்டையே இங்கு நடத்தியிருக்கவேண்டியவர்கள் நடத்துவதற்கு சில வேளைகளிலே குந்தகம் ஏற்பட்டுவிட்டாலும் இப்போது இங்கே இரண்டாவது மாநாடு நடக்கின்றதென்றால் அது தொடர்ச்சியே தவிர புதிது அல்ல. நம்முடைய தமிழகத்திலே இருந்து மலேசியாவிலே நடைபெற்ற மாநாட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் அவர்களும் அந்நாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் கற்றறிவாளர் பலரும் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார்கள். இருபது நாடுகளுக்கு மேலாக பிரதிநிதிகளை அங்கே அனுப்பிக்கொடுத்திருந்தார்கள். இன்று இங்கே நடக்கின்ற இந்த மாநாட்டிற்கு முப்பது நாடுகளுக்கு மேலே பக்கத்திலே உள்ள மலேசியா சிங்கப்பூர் மட்டுமல்ல அதைத் தொட்டுக்கொண்டிருக்கின்ற தாய்லாந்த் இந்தோனேசியா மட்டுமல்ல நெடுந்தொலைவிலே உள்ள ரஷ்ய நாட்டிலே இருந்து செக்கோஸ்லொவேக்கிய நாட்டிலேயிருந்து போலந்திலேயிருந்து ஆஸ்ட்ரியாவிலே யிருந்து ஹங்கேரியிலேயிருந்து இங்கிலாந்திலேயிருந்து அமெரிக்காவிலேயிருந்து தெய்வானிலேயிருந்து இன்னும் பல்வேறு நாடுகளிலேயிருந்து ஆராய்ச்சியாளர்கள் இங்கே கூடியிருக்கின்றார்கள்.

இத்தனை நாடுகளுக்கு அறிமுகமாகியிருக்கின்ற நம்முடைய தமிழ்மொழி இந்தியாவுக்குள்ளேயே இன்னும் பல பகுதிகளில் அது இடம்பெறமுடியாமல் இருப்பது எண்ணி எண்ணி வருந்தத்தக்கதாகும். தமிழ்மொழியினுடைய நுண்ணறிவினை ரஷ்யாவில் உள்ளப் பேரறிவாளர்கள் பாராட்டுகின்றார்கள். தமிழ்மொழியினுடைய அருமை பெருமையினை செக்கோஸ்லொவிய நாட்டு மக்கள் உணர்ந்துவருகிறார்கள். இங்கிலாந்து நாட்டு பல்கலைக் கழகங்கள் அமெரிக்க நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இங்கெல்லாம் தமிழ்மொழி ஆராயப்பட்டு வருகின்றது. அப்படிப்பட்டத் தமிழ்மொழிக்கு நாம் சொந்தக்காரர்கள் என்பதை எண்ணுகின்ற நேரத்தில் நாம் எங்கோ அழைத்துச் செல்லப்படுகிறோம். ஆனால் இன்றுள்ள நிலைமையை நாம் எண்ணிப் பார்க்கிறபொழுதுதான் இருக்கிற இடத்திற்கு வந்து சேர்கிறோம். இருக்கிற இடத்திலேயிருந்து எங்கோ மனக்கண்ணாலே பார்க்கிறோமே அப்படிப்பட்ட ஒரு திரு இடத்திற்கு நாம் செல்லவேண்டும். அப்படி செல்கின்ற காலமும் அப்படிச் செல்கின்ற கட்டமும் எப்பொழுது தோன்னும் என்றால் தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டை உணர்ந்து, தமிழர்கள் தமிழ் வரலாற்றை அறிந்து தமிழர்கள் தமிழ் ஆற்றலை உணர்ந்து ஒன்றுபட்டுப் பணியாற்றுகின்ற காலத்தில் அப்படிப்பட்டக் கட்டத்திற்கு நாம் நிச்சயம் சென்றுசேர்வோம் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை.
ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உலகத்திலே பல நாடுகளில் மொழி ஆற்றலும் மொழி அறிவும் மொழி இலக்கணமும் வகுக்கப்படாத காலத்தில் நம்முடைய தமிழகத்தில்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

நற்றினை, நல்லக் குறுந்தொகை,ஒத்தப் பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், ஐங்குறுநூறு, கற்றறிந்தோர் ஏத்தும் கலி, அகம், புறம் என இத்திறத்த எட்டுத்தொகை என்று எட்டுத்தொகையைப் பெற்றிருந்தோம்.

பாட்டு மொழி நம்முடைய மொழி என்பதனை மெய்ப்பிக்கின்ற வகையில் பத்துப்பாட்டைப் பெற்றிருந்தோம். உலகத்துப் பெருமக்கள் எல்லாம் போற்றி வரவேற்கின்ற திருக்குறளுக்கு சொந்தக்காரர் என்று மார்தட்டிக் கொள்கின்றோம். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றத் தத்துவத்தை உலகினுக்குத் தரத்தக்க அளவுக்கு மாண்பு படைத்த திருக்குறளுக்கு நாம் சொந்தக்காரர்கள். அப்படிப்பட்ட நல்ல நிலைமையிலே உள்ள தமிழ் உலகத்துப் பெருமக்களாலே ஆராயப்பட்டு இன்னும் புதிய பொலிவையும் புதிய வலிவையும் அது பெறுவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. அதிலும் ஒரு நல்லவர் பண்பாடு மிக்கவர் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள் இதனைத் துவக்கி வைத்திருப்பதிலேயிருந்து இந்த மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற்று தமிழர்களுக்கு மொழித்துறையிலே நல்லக் கருவூலம் கிடைக்கபெறும் என்ற நல்ல நம்பிக்கையோடு லட்சக்கணக்கான மக்கள் வந்திருக்கிற மக்கள் மட்டுமல்லாமல் வர இயலாமல் இருக்கின்ற மக்களும் இந்த மாநாட்டினுடைய ஆய்வுரைகளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மாநாடு ஆய்வாளர்கள் கருத்தரங்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்ற நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பக்கங்களிலே இருந்து இங்கே குழுமியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கென்று தீவுத்திடலிலே இதைப்போன்ற ஒரு மாநாட்டைக் கூட்டித் தமிழ் பேரறிஞர்கள் விரிவுரைகளைத் தரவும், தமிழ்க் கவிஞர்கள் கவியரங்கத்தை நடத்தவும், தமிழ்க் கலைஞர்கள் நாடக அரங்கத்தை நடத்தவும், தமிழ் இசைவாணர்கள் இசை விருந்து அளிக்கவும் ஆகிய ஏற்பாடுகள் எல்லாம் செம்மையான முறையில் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ந்து பத்து நாட்களுக்கும் இப்படிப்பட்ட தமிழ் விருந்து தமிழகத்திற்குக் கிடைக்கின்றது. கிடைப்பதன் மூலமாக புதிய உற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் புதிய உறுதியையும் தமிழின மக்கள் பெறுவார்கள் என்பதிலே ஐயப்பாடு இல்லை.

இந்த மாநாடு சிறப்புற அமைவதற்கும் அதிலும் குறிப்பாக இன்று காலையிலே நடைபெற்ற பவனி நல்ல முறையிலே அமைந்திருப்பதற்கும் நல்லமுறையிலே ஏற்பாடு செய்த கலைத் துறையினருக்கு தம்பி கருணாநிதி வணக்கம் செலுத்தி நன்றி கூறினார் என்றாலும் நானும் அந்தக் கடப்பாடு உடையவன் என்ற முறையில் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும் நன்றியறிதலையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ளத் தோழர்கள் தமிழ்ப் பற்றுக்கொண்ட பெரியோர்கள் இந்த மாநாட்டுக் காரியங்களில் மிக மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்தத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்து செயலாளர்களாக இருந்து பணியாற்றிக்கொண்டு வருகின்ற நம்முடைய உழவ நண்பர் சுப்பையா அவர்களும் நம்முடைய மற்றொரு நண்பர் தியாகராசனார் அவர்களும் மற்றும் நம்முடைய ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர்களாக அமைந்திருக்கின்றவர்களும் நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களும் மற்ற எல்லா அமைச்சர்களும் இதிலே ஈடுபாடு கொண்டிருக்கின்றார்கள். என் ஒருவனுக்குத்தான் இந்த மாநாட்டிலே மிகமிக குறைவான வேலை. எப்பொழுதுமே தலைவராக இருந்தால் அப்படித்தான் என்பதை சுட்டிக்காட்டுகின்ற முறையிலேதான் இந்த மாநாட்டிற்கு நான் தலைமை வகிக்கவேண்டும் என்று அழைத்தார்கள் என்று கருதுகின்றேன்.

நல்ல முறையிலே அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த மாநாட்டையொட்டி வெகு சிறப்பான ஒரு கண்காட்சியினை நம்முடைய மதிப்புமிக்க நண்பர் சா.கனேசன் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அது நம்முடைய பல்கலைக்கழக மண்டபத்திலே நடத்தப்பட்டு வருகின்றது. அதிலே தமிழ் வரலாற்றுச் சின்னங்களையும் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களையும் அங்கே காண்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகளையெல்லாம் கண்டும் மாநாட்டிலே எடுத்துச் சொல்லப்பட இருக்கின்ற நாளையதினம் முதற்கொண்டு எடுத்துச்சொல்லப்பட இருக்கின்ற நற்கருத்துக்களைக் கேட்டும் தமிழர்கள் புதிய வலிவையும் புதிய பொலிவையும் அவர்கள் பெறுவார்கள் என்ற பெரு நம்பிக்கையோடு நீங்கள் இந்த விழாவிலே கலந்துகொள்வது நம்முடைய வாழ்வுக்கு ஒரு நல்லப் பேற்றினைப் பெற்றுத் தருவதற்கு எடுத்துக்கொள்கின்ற நல்ல முயற்சி என்ற முறையில் இந்த மாநாட்டிலே கலந்துகொள்ள வந்திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான உங்களைக் காணுகின்ற வாய்ப்பும் நீங்களெல்லாம் தமிழ் முழக்கம் செய்வதை கேட்கின்ற வாய்ப்பும் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருப்பதை காணுகின்ற வாய்ப்பும் கிடைக்கப் பெற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

என்னுடைய தலைமையுரை என்பது உங்களுக்கு வணக்கம் செலுத்துவதும் வந்திருப்போருக்கு வரவேற்பு அளிப்பதும் தமிழ்மொழியை வாழ்த்துவதும்தான் என்னுடைய தலைமையுரை என்பதனை நான் துவக்கத்திலேயே குறிப்பிட்டேன். நாம் அடைந்திருக்கின்ற இந்த அகமகிழ்ச்சி மற்றவர்கள் கருதுவதைப்போல தவறான வழியிலே பயன்படுத்தப்படாமல் தமிழ்மொழியுனுடைய வளத்திற்காகவும் வலிவுக்காகவும் தமிழருடைய நல்வாழ்வுக்காகவும் அது பயன்படுத்தப்படும் என்பதை உறுதியாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அப்படிப்பட்ட தமிழ் ஆராய்ச்சித் துறையில் நல்லவர்களும் வல்லவர்களும் கூடி நடத்துகின்ற இந்த மாநாட்டைத் திறந்துவைத்த டாக்டர் ஜாகீர் உசேன் அவர்களுக்கு மறுபடியும் நன்றிகலந்த வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கை நாட்டிலேயிருந்து வந்திருக்கும் அமைச்சர் திருச்செல்வம் அவர்களும் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வந்திருக்கின்ற டாக்டர் ஆதிசேஷய்யா அவர்களும் தங்களுடைய வாழ்த்துரையின் மூலம் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருங்கியத் தோழமையை எடுத்துக் காட்டினார்கள். இதற்கு மலர் வெளியிடுவதில் நம்முடைய உள்ளாட்சித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் மிகுந்த அக்கறையோடு இதிலே வெற்றி கண்டிருக்கின்றார்கள். அந்த மலரினை நம்முடைய கவர்னர் சர்தார் உஜ்ஜல் சிங் அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். அவர்கள் தமிழ் மொழியிலே பயிற்சி பெறுவதற்கு அவர்தான் இன்னும் முன்வரவில்லையே தவிர அவரது துணைவியார் சர்தாரினி அவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் நம்முடைய தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசுவதாக என்னிடத்திலே வாக்களித்திருக்கின்றார்கள். அவர்கள் தமிழிலேயும் பேச ஆரம்பித்தப் பிறகு சர்தாரினி தமிழிலே பேசினால் சர்தார் தமிழ் கற்றுக்கொண்டால்தான் சர்தாரினியினிடத்திலே பேசமுடியும் என்ற முறையில் அவரும் தமிழ் பயில்வார்கள் என்பதிலே நான் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவனாக இருக்கின்றேன்.

தமிழகமே விழாக்கோலம் பூண்டிருக்கின்ற இந்த நல்ல நாளில் தமிழகத்தை நோக்கி தமிழ் ஆராய்ச்சியாளர்கள் உலகத்திலே எட்டுத்திக்கிலேயிருந்தும் இங்கு வந்திருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ்ப் பண்பாட்டை நான் ஓரிரு வார்த்தைகளில்; சொல்வது பொருத்தம் என்று கருதுகின்றேன். உலகத்திலே எந்தக்கோடியில் உள்ளவர்களையும் நாங்கள் தோழர்களாகக் கருதுகிறோம். உலகத்திலே எந்தப் பக்கத்திலேயிருந்து வருபவர்களையும் நாங்கள் வாழ்த்தி வரவேற்கின்றோம். உலகத்திலே எந்த மொழிகளையும் நாங்கள் மதிக்கத் தயங்குவதில்லை. உலகத்தில அறிவு எந்தக் கோடியில் இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு வருவதிலே தமிழர்கள் யாருக்கும் பின்வாங்கியவர்கள் அல்ல. ஆனால் தமிழர்கள் தனக்கென்று உள்ளதை ஒருக்காலும் இழக்க சம்மதிக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களிடத்திலே உள்ளது அருமையானது என்பதனை அவர்கள் அல்ல உலகத்தின் பல பக்கத்திலேயிருந்து வந்திருக்கின்ற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எத்தகைய அருமையான மொழி உங்கள் தமிழ்மொழி என்பதனை நார்வே நாட்டிலேயிருந்து வந்து தெரிவிக்கின்றபொழுது இங்கிலாந்து நாட்டிலேயிருந்து வந்து எடுத்துக் கூறுகின்றபொழுது அமெரிக்க நாட்டிலேயிருந்து வந்து கூறுகின்ற நேரத்தில் அந்த மொழிக்கே பிறந்தவர்களாக அந்த மொழிக்கு சொந்தக்காரர்களாக உள்ள தமிழ்ப் பெருங்குடிமக்கள் அந்த மொழியிடத்திலே பற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள் என்றோ அல்லது அந்த மொழிக்கு எந்தக் கட்டத்திலாகிலும் எந்த நோக்கத்தோடாகிலும் எப்படிப்பட்டவராலாகிலும் அதற்குத் தகுந்த இடமும் தனி மரியாதையும் உரிய உரிமையும் தரப்படாவிட்டால் தமிழகம் பொறுத்துக்கொள்ளாது என்பதையும் நாம் எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஆழ்கடல் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அதனை நல்ல நாவாயின் மூலமாக கடத்தல் முடியும். அதைப்போல் தமிழர்களை அணைத்து அழைத்துச் சென்றால் அகில உலகத்திலே உள்ளவர்களுக்கும் அவர்கள் தோழர்களாக இருப்பார்கள். அதைத்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ப் பெருமகன்தான் எடுத்துச் சொன்னான். 1967ஆவது ஆண்டிலேயும் எல்லா நாடுகளையும் ஒன்றுபட செய்வதற்காக அமெரிக்காவில் ஐக்கியநாடுகள் மன்றத்தில் பலநாட்டுக் கொடிகளை பட்டொளிவிச பறக்கவிட்டாலும் அங்கே பேசிவிட்டு வெளியே வருகின்றபொழுது எந்தநாட்டின்பேரில் எந்தநாடு எங்கு படையெடுக்கும் என்று பேச்சுப் பேசிக்கொண்டிருக்கும் இன்றைய உலகத்திற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எடுத்சுச் சொன்னத் தமிழன் எவ்வளவு பெருந்தன்மையை எவ்வளவு சிறந்த அரசியல் பண்பாட்டை பெற்றிருந்தான் என்பதனை எண்ணி நெஞ்சம் விம்முகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிக்கு அடுத்த அடி தீதும் நன்றும் பிறர்தர வாரா மற்றவராலே நமக்குத் தீங்கும் வராது மற்றவராலே நமக்கு நல்லதும் வராது. நல்லது வரவேண்டும் என்றாலும் நம்மாலேதான் வரவேண்டும். கெட்டது வரவேண்டும் என்றாலும் நம்மாலேதான் வரவேண்டும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே நமக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகையினால் தீது வருமோ என்ற ஐயப்பாடு யாருக்காகிலும் இருந்தால் தீதும் நன்றும் பிறர்தர வாரா நாமாக வரவழைத்தால் அந்தத் தீமை வருமே தவிர நாம் வேண்டாம் என்றால் தமிழனைத் தீது தீண்டாது. அதைப்போலவே நல்லதும் இன்னொருவர் கொடுத்து நமக்கு வராது நாமேதான் நல்லதைத் தேடிக்கொண்டு வரவேண்டும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழர்களுக்கு நன்னெறி அளிக்கப்பட்டிருக்கின்றது.

அப்படிப்பட்ட தமிழர்கள் தங்களுடைய மொழியைப் பற்றிய ஆராய்ச்சி கருத்தரங்கத்திலே நடத்தப்டுகிறது என்பதை அறிந்து தமிழகத்தின் மூலை முடுக்கிலே இருந்தெல்லாம் வந்திருக்கின்றார்கள். உங்களையெல்லாம் சென்னை நகரம் வாழ்த்தி வரவேற்கின்றது. கருத்தரங்கத்திலே கிடைக்க இருக்கின்ற நற்கருத்துக்கள், ஏற்கனவே நமக்கு இருக்கின்ற மொழி ஆர்வத்தை பன்மடங்கு அதிகமானதாக்கி நம்முடைய மொழியினுடைய வளத்தை மற்றவர்களும் அறிந்து இப்படிப்பட்ட வளமுள்ள இந்தத் தமிழ்மொழி அல்லவா எங்களுக்கும் மொழியாக இருக்கவேண்டும். எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் எங்களுக்கும் சேர்த்து இதல்லவா மொழியாக இருக்கவேண்டும். இதல்லவா இணைப்பு மொழி இதல்லவா பொதுமொழி இதல்லவா ஆட்சிமொழி என்று சொல்லத்தக்க ஒரு காலம் வரவேண்டும். அந்தக் காலம் வரும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருக்கின்றேன். ஆனால் அந்த நம்பிக்கை அந்தக் காலம் அவசர நடையினாலே வராது. ஆத்திர உணர்ச்சியினாலே வராது. பொறுத்திருந்து எப்படி தூண்டிலைப் போடுகின்றவன் மீன் அதைக் கொத்த வருகின்ற வரையில் பொறுமையோடு காத்திருப்பானோ அதைப்போல் நம்மை நோக்கி அந்தக் கட்டம் வருகின்றவரையில் காத்திருக்கப் பழகிக்கொள்ளவேண்டும். அதிலேயும் தமிழறிஞர்கள் தமிழ் மறையிலேயும் தமிழ் நெறியிலேயும் நன்றாகச் சொல்லியிருக்கின்றார்கள். காலமறிந்து செய்தல் வேண்டும்; இடமறிந்து செய்தல் வேண்டும்; வகையறிந்து செய்தல் வேண்டும்; பொருளறிந்து செய்தல் வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது எல்லாவற்றுக்கும் சேர்த்து. ஆகையினால் அப்படிப்பட்ட நன்னெறியைப் பெற்றிருக்கின்ற நம்முடைய மொழியான தமிழ் மொழி உரிய ஏற்றத்தைப் பெறுமென்ற சிறந்த நம்பிக்கையை நான் பெற்றிருப்பதைப்போலவே இங்கேக் குழுமியிருக்கின்ற லட்சக்கணக்கான மக்களும் பெற்று நம்முடைய மொழிக்கு நல்ல ஏற்றத்தை உண்டாக்கிக் கொடுத்து இதனை மற்றவர்களும் அணுகி வந்து அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற்று இதனை அரியாசனத்தில் அமர்த்தக்கூடிய ஒரு நன்னாளை எதிர்நோக்கி இந்த நாளில் நாம் உறுதி கொள்வோமாக. அந்த உறுதியினைப் பெற்றுத்தர வந்திருக்கின்ற கருத்தரங்கத்து வித்தகர்களுக்கு நான் வாழ்துக்கூறி வரவேற்கின்றேன். அவர்கள் எடுத்துக்கொள்கின்ற சீரிய முயற்சி தமிழகத்திற்கும் தமிழறிந்த எல்லா இடத்திற்கும் பெரிதும் பயன்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து இந்த மாநாட்டினை துவக்கிவைக்க வந்திருக்கின்ற குடியரசுத் தலைவருக்கு மறுபடியும் நன்றி கலந்த வணக்கத்தைக் கூறி, இதுதான் என்னுடைய தலைமையுரை என்பதையும் தெரிவித்து விடைபெறுகின்றேன். வணக்கம்.