அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உலகம் நம்மை உற்றுக் கவனித்து வருகிறது

அரியலூரில் 19.10.60 மாலை ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டார்கள்.

அண்ணா அவர்கள் பேச எழுந்தவுடன் அதிர்வேட்டுகள் முழங்கின. வண்ண வாண வேட்டுகள் ‘பூ‘ மாரி பொழிந்தன மேடையின் எதிரே அண்ணாவின் உருவமும் ‘அறிஞரே வருக‘ என்ற மத்தாப்பு ஒளியும் கண்ணைக் கவர்ந்தன.

நூற்றுக்கு மேற்பட்ட கிளைக் கழகங்கள், மன்றங்கள் சார்பு மன்றங்கள் சார்பிலும், தனிப்பட்டவர்கள் சார்பிலும் மலர் மாலைகளும் கைத்தறி ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. சிறு தொகைகளும் அளிக்கப்பட்டன.

அண்ணா அவர்கள் ஆற்றிய உரையாவது – “பெரியதொரு சிறப்புக் கூட்டத்தை இங்குக் கூட்டிச் சிறந்த முறையில் வரவேற்பு நல்கியதைக் கண்டு பூரிக்கிறேன். இப்பகுதியிலே கழக வளர்ச்சி கண்டு மகிழ்கிறேன். அன்பு கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடையார்பாளையம் வட்டத்திலே ஆர்வமுள்ள தோழர்களும், துடிப்புள்ள இளைஞர்களும், நல்ல மனம் படைத்த பெரியோர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும் கழக வளர்ச்சிக்குப் பணியாற்றுவதைக் கண்டு வாழ்த்துகிறேன்.

“நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு அரியலூர் வந்தாலும் இன்று வளர்ந்துள்ள எழுச்சி கண்டு பெருமிதம் அடைகிறேன்., பூரிப்படைகிறேன். நம்மிடையே மிட்டா மிராசுகள் இல்லை. நடுத்தவரவர்க்கத்தாரும், உழைப்பாளத் தோழர்களும், மாணவச் செம்மல்களும், நல்ல மனம் படைத்த பெரியோர்களும், அலுவலங்களிலே பணியாற்றும் சிலருமே உள்ளனர். ஆனால் ஆர்வமுடன் பணியாற்றும் ஆற்றல் வீரர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

நாட்டின் விடுதலைக்கத் தயாராகுக

“இன்றல்ல நேற்றல்ல பண்டைக் காலத்திலிருந்தே முடியுடை மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலிருந்தே இப்பகுதி வீரர் கோட்டமாகத் திகழ்ந்து வருகிறது. சிறுசிறு கோட்டைகள் கட்டி குறுநில மன்னர்கள் வாழ்ந்தார்கள். இன்று நடைபெறப் போகும் விடுதலைப் போராட்டத்திற்குத் தியாகம் செய்ய – தாயகத்தின் நலம் நாடி உழைக்க வீரர்கள் இப்பகுதியில் இருப்பது பாராட்டத்தக்கது.

“இன்று அரசியல் அறிவை உணர்வதும் தெளிவதும் மிகமிகத் தேவை. பத்து ஏடுகளை படித்துப் பல கூட்டங்களைக் கேட்டால் அரசியல் அறிவுத் துணை பெறலாம். சிந்தித்து வாழ்ந்த நாட்டின் நிலை கண்டு வீழ்ந்துபட்ட சமுதாயத்திற்கான எழுச்சி தேவை என்பதை அறிவதே தெளிவாகும்.

நெஞ்சம் நிமிர்ந்து நிற்பீர்

வாழ்ந்த இனம் தலை நிமிர இந்த நகரிலே திரண்டு அணி அணியாக வந்து மாலைகள் போட்டும் வரவேற்பு அளித்தும் மகிழ்கிறார்கள்.

“இங்குக் கழகப் பாசறையை நல்ல முறையில் அமைத்து, பாங்கான முறையில் வளர்ந்து நெஞ்சம் நிமிர்ந்து நிற்கிறீர்கள். மற்றக் கட்சிகளைப்போல நிலமா? சலுகையா? உதவியா? என்று கேட்டுத் தந்த நாம் வளரவில்லை. மாறாக, தொல்லைகள் பலவும் பெற்று இன்னல்களுக்கிடையே கழகம் வளர்கிறது. நம்மை அழிக்கச் சிலர் கனவு காண்கிறார்கள். அது நடவாத ஒன்று“.

“ஆண்ட அரசர்களெல்லாம் உலக வரலாற்றிலே இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர். பணக்கோட்டைகள் எல்லாம் கவிழ்வதை – வீழ்த்தப்படுவதைப் பார்க்கிறோம். வீரம் வெற்றிபெற வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம்.‘

“நம்முடைய வாழ்நாளில் இப்பொழுதே திராவிடத்தைப் பெற்றால்தான் நாம் தலைநிமிர்ந்து வாழலாம். விடுதலை ஆர்வம் கொழுந்து விட்டு வளரும் இக்காலத்தில் நமது பணிமிகமிகத் தேவை. அமைச்சர் பதவி வேண்டியோ ஓட்டு வேட்டை கருதியோ நாம் பணிபுரியவில்லை. நாம் தாயகத்தை மீட்க – தனியாட்சி காணப்படுகிறோம். ஆகையால் அமைச்சர்களும், அசியல் தகுதி இழந்தவர்களும் நம்மைத் தூற்றுவதைக் கண்டு கவலைப்படத் தேவையில்லை. நாம் அவர்களை மறப்போம் மன்னிப்போம்.

அச்சத்தால் மருளுகின்றனர்

“நாம் வளர்வதால் – அரசுக்கு ஆட்டம் கொடுக்கிறது என்பதால் அதிர்ச்சியடைந்து மருட்சி கொண்டு தூற்றுகின்றார்கள். சட்டமன்றத்திலே 15 பேரும் டில்லி பாராளுமன்றத்திலே இருவரும், பல ஊராட்சி மன்றங்களிலும், நகராண்மைக் கழகங்களிலும் நாம் புகுந்து ஆட்சியிலிருப்போரைத் தட்டிக்கேட்பதால் வாதாடுவதால் “மீண்டும் இவர்கள் வந்து விடுவார்களோ“ என்ற கிலியால் நடுக்கத்தால் அவர்கள் அவ்வாறெல்லாம் பேசுகிறார்கள். அமைச்சர்களும் ஊர் ஊராகச் சுற்றுகிறார்கள். நாட்டில் பவனி வந்து நம்முடைய கோட்டையைத் தகப்பறைதப் பார்க்கும் பொ்ழுது நம்முடைய வளர்ச்சிக் கணக்கு புரிகிறது.

“நம்மைச் சூழ்ந்துள்ளவர்களெல்லாம் ‘உழைத்தால் தான் பிழைக்க முடியும்‘ என்ற நிலையில் உள்ளவர்கள். ஊரை அடித்து உலையில் போடுபவர்கள் நம்மிடம் இல்லை. ஏர்பிடித்து ஓட்டுபவர்க்ளும், கோடரி தூக்கி விறகு பிளப்பவர்களும், கூலிக்கு வேலை செய்பவர்களும், பாட்டாளிகளுமே நம்மிடமிருக்கின்றனர். இந்த நிலையில் தி.மு.கழகத்தை நாக்கிலே நரம்பின்றித் தூற்றுகிறார்கள். இப்படியே தொடர்ந்து திட்டும் படியாக அவர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அமைச்சர்களே! தமிழ் மக்கள் கோபம் அடையும் வரை – தன்மானம் அவர்களுக்குக் கொழுந்துவிட்டு எரியத் துவங்கும் வரை பேசுங்கள். அப்பொழுதுதான் தமிழினத்தின் இழிவு நீக்க ஆர்வத்துடன் கிளர்ந்தெழுவார்கள்.

அவர்களுக்குத் தனிக்கொடி – தனி நாடு

அடிமைகளாக விற்கப்பட்டோர் உரிமை பெற்று வாழ்கிறார்கள்.
“பத்திரிகைகளிலே நாம் படிக்கிறோம் – காட்டு மிராண்டியாக வாழ்ந்தவர்களெல்லாம், அடிமைகளாக உலவியவர்களெல்லாம் தங்களுக்கெனத் தனி நாடு பெற்றுச் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்ற செய்தியை மிருகங்களை வேட்டையாடுவது போல் வேட்டையாடப்பட்டுச் சந்தையிலே மாட்டை விற்பது போல் விற்கப் பட்டார்கள் தென்னாப்பிரிக்கர்கள். “முதுகைத் தட்டிப்பார் – வாலை உருவிப்பார் – கழுத்தை தடவிப்பார் என்று மாட்டை விற்பதுபோல அங்கு அவர்கள் விற்கமாட்டார்கள். பெண்களின் கொல்லை இதழைப் பார், கட்டுடலைப்பார் என்று ஆப்பிரிக்க நாட்டு நீக்ரோ பெண்மணிகளை அமெரிக்க நாட்டுச் சந்தையிலே விற்றார்கள். அவர்கள் கூடக் கிளர்ச்சி செய்து தனி நாடு பெற்று வாழ்கிறார்கள். காங்கோ, டுனீஷியா என்று புதுப்புது நாடுகளின் பெயரிலே ஆட்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஐக்கிய நாட்டு அவையிலே இடம், அவர்களுக்குத் தனிக்கொடி, தனி இடம், தனி நாடு.
தன்மானத்துடன் வாழ்ந்த இனம் தலைநிமிர வேண்டாமா?

“நாம் உலகம் போற்றும் வரலாற்றுப் புகழ்பெற்ற மானத்துடன் வாழ்ந்த இனம். நம்மிடம் திருக்குறள், அகநானூறு, புறநானூறு உண்டு, தொல்காப்பியம் உண்டு, எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும், சீவக சிந்தாமணியும், சிலப்பதிகாரமும் உண்டு. இப்படிப்பட்டவர்களாகிய நாம் தாசர்களாக – தலையாட்டிப் பொம்மைகளாக இழிநிலையில் இருக்கத்தான் வேண்டுமா? ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் தி.மு.கழகத்தின் பணி மகத்தானது என்பது எல்லோருக்கும் தெரியும். விடுதலைப் போராட்டத்தின் அவசியம் தெரியும்.

நமது பணியின் நோக்கம்

“இன்று நமது பணி வளர்கிறது, நமது பரணி கேட்காத நாளில்லை, கொடி பறக்காத ஊரில்லை. என்றாலும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 50 இடமோ 100 இடமோ பெற்று உயரலாம் என்று கருதி நாம் பணியாற்றவில்லை. தாயக விடுதலை முழக்கத்தை வலுப்படுத்தவே பாடுபடுகிறோம். சட்டமன்றத்திலே தாய்த்திரு நாட்டை மீட்கப் போரிடலாம். நமது விடுதலைக் கோரிக்கையை வெளியிலே பேசும் அதே நேரத்தில் சட்ட மன்றத்திலும் பேசினால் வழி ஏற்படும் என்ற அளவில் நாம் பணியாற்றுகிறோம்.

“காமராசர் உள்ள இடத்தில் நமது அன்பில் தர்மலிங்கத்தையும் கக்கன் இடத்தில் காமாட்சியையும் லூர்து அம்மாள் இடத்தில் சத்தியவாணி முத்துவையும் அமர்த்த அல்ல நாம் பாடுபடுவது, கழகத்தின் மரபு கெடாமல் பாடுபட பாதுகாக்க நமது இலட்சிய ஒலி பரவ வேண்டும் என்பதற்காகவே.

உலகம் நம்மைக் கவனிக்கிறது

“இன்று தி.மு.கழகத்தின் வளர்ச்சியை – பணியை அமெரிக்க நாடு கவனிக்கிறது. ரஷ்ய நாட்டார் கூர்ந்து கவனிக்கிறார்கள். வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவின் வடக்கே நாகர்களும் தெற்கே திராவிடர்களும் தனி நாடு வேண்டி இலட்சிய முழக்கமிடுவதை – உரிமைக்குரல் எழுப்பப்படுவதை அறிகிறார்கள். சமீபத்தில் ஜெர்மன் நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் என்னைக் காண விரும்பி வந்து ஒரு மணி நேரம் உரையாடினார். உலகம் புகழ் தாஜ்மகாலைப் பார்க்கவில்லை, பக்ரா நங்கல் அணையை, சிந்திரி இரசாயணத் தொழிற்சாலையை, காந்தி சமாதியைப் பார்க்க வேண்டியவர் என்னிடம் வந்து உரையாடினார், மிகச் சிரமப்பட்டுத் தேடி. அவர் திராவிடம் ஏன் ஏகாதிபத்தியத்திலிருந்து பல கேள்விகள் கேட்டார். பொறுமையோடும் அடக்கத்தோடும் கூறினேன். விளக்கத்தைக் குறித்துக் கொண்டார். புரிந்து கொண்டதாகக் கூறினார். நேருவிடம் இருக்கும் கோபத்தால் தனி நாடு கேட்கிறீர்களா? காங்கிரசுக் கட்சியை ஒழிக்க விரும்புகிறீர்களா? என்றெல்லாம் கேட்டார். “நாங்கள் தனி இனம், தனியாட்சி காண விரும்புகிறோம். தமிழகத்தில் சிறந்த இலக்கியங்கள் உண்டு. தென்னகத்தின் மக்கள் தனிப் பண்பாடு உடையவர்கள் என்றேன். அவரைப் பார்த்து நான் இந்தியச் சுற்றுப் பயணத்தில் என்ன கண்டீர்கள்? என்று கேட்டேன். ‘வடக்கே புகைக் கூண்டுகள் உண்டு. தெற்கே கோபுரங்கள் உண்டு‘ என்றும் சொன்னேன். இருந்தால் என்ன? என்றார். ‘வடக்கே புகைக்கூண்டுகள் அதிகமாக இருக்கின்றன என்றால், ‘தொழிற்கூடங்கள் உண்டு, இலட்சக்கணக்கான மக்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றி, உயர்ந்த வசதிகள் பெற்று வாழ்கிறார்கள். பொருளாதாரத்தில் வளர்கிறார்கள். நாங்கள் பக்தி மார்க்கத்தல் செலவழித்து வீணாகிறோம் என்பதைக் கூறத்தான் கோயில்கள் உண்டு என்று சொன்னேன் என விளக்கினேன். அவர் சிரித்தார். ஐந்தாண்டுத் திட்டத்தில் தென்னகம் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்தார். ‘என்னுடைய சந்திப்பு விவரம் ஜெர்மன் நாட்டுப் பத்திரிகையில் இடம் பெறும்‘ என்றார்.

இனி எவராலும் மறைக்க முடியாது

“அமெரிக்காவிலும் நம் குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. வடக்கு வளர்வதையும் தெற்கு புறக்கணிக்கப்படுவதையும் மற்ற நாட்டார்களே உணர்கிறார்கள். இங்கே காமராசரும் மற்றவர்க்ளும் மறைக்க முடிந்தாலும், நம் குரல் ஒலி மறையாது.

“நாம் கூறும் நாட்டு விடுதலைக் கோரிக்கையைப் பூகோளம் உணர்ந்தவர்கள் – வரலாறு தெரிந்தவர்கள் – இலக்கியங்களைப் படித்தவர்கள் சிந்தித்தால் உணர்வார்கள். காமராசர் கூறுகின்றார் – தான் படிக்காதவர் என்று, படிப்பதால் மட்டுமே உலக அறிவைப் பெற முடியும் என்று நான் கூறவில்லை. எனது அரசியல் குரு பெரியார் இராமசாமி அவர்கள் படிக்காவிட்டாலும் பெரும் அனுபவ அறிவைப் பெற்றவர் அனுபவத்தால் அறிந்ததைச் சொல்பவர். காமராசரும் ஏன் பெரியாரைப் போல அனுபவ அறிவு பெறக்கூடாது? ‘வடக்கு வடக்கே தான் இருக்கிறது, தெற்கு தெற்கேதான் இருக்கிறது‘ என்கிறார். சுத்த அப்பாவித்தனமாக எட்டு மந்திரிகளும் எதை எதையோ பேசுகின்றார்கள், கிராமங்களிலுள்ள அப்பாவிகளைப் பார்த்து ‘கிழக்கு – மேற்கு தெரியாதவர்கள்‘ என்பார்கள். நாம் இவர்களைத் ‘தெற்கு வடக்கு தெரியாதவர்கள்‘ என்போம்.

“இந்தியத் துணைக் கண்டம் பதின்மன்றாண்டுக் கால ‘சுயராஜ்ய‘ காலத்தில் வடக்கை எதிர் பார்த்துத்தான் எதையும் செய்ய வேண்டியுள்ளது. வாழ வழி வகுக்கக்கூட மாநில ஆட்சிக்கு உரிமையில்லை. இன்றுகூட காமராசர் டில்லி சென்று வந்ததாகச் செய்தி பார்த்தேன். பாலம் கட்ட வேண்டுமா? தொழிற்சாலை அமைக்க வேண்டுமா? கல்லூரி அமைக்க வேண்டுமா? அபிவிருத்தித் திட்டங்கள் போட வேண்டுமா? எதற்கும் எந்தக் காரியத்திற்கும் வடக்கின் உதவியையே எதிர்பார்க்கிறார்கள். சொந்த விருப்பப்படி எதையும் இவர்கள் சாதிக்க முடியாது.

அன்று சொன்னவர் இன்று?

“கொடுக்கூர் தி.மு.க. செயலாளருக்கு காங்கிரசு எம்.எல்.ஏ. தொல்லை கொடுப்பதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அநத் எம்.எல்.ஏ. நல்லவர்தான். அவர் காங்கிரசுக்காரர் இல்லை. காங்கிரசில் சேர்ந்தவர். அவரைப் போன்றவர்கள் போதாத காலத்தால்தான் காங்கிரசில் சேர்ந்தார்கள். காங்கிரசுக்கும் போதாத காலமாதலால் அவர்களைச் சேர்த்துக் கொண்டது. நான் ஒரு சமயம் கொடுக்கூர் சென்றேன். அப்போது அவர் !கே.ஆர்.விஸ்வநாதம்) அண்ணா ‘திராவிட நாடு முதல் இதழில் கொடுக்கூர் ஆறுமுகத்தாண்டி‘ என்று எழுதினீர்களே! அந்தக் கொடுக்கூர்தான் இது. இந்தப் பொல்லாத காங்கிரசை ஒழிக்க 10. 15 கொடுக்கூர் ஆறுமுகங்கள் இருந்தால் போதும் என்று கூறியவர்தான்.

“வடக்கு வாழ்ந்தால் என்ன தெற்கு தாழ்ந்தால் என்ன?“ என்று பாரதப் பண்பாட்டோடு கேட்கிறவர்களுக்கு நான் கூறுகிறேன். “ஒரு நிசியில் வீட்டிலே நகை திருடிய திருடன் அகப்பட்டுக் கொண்டான் என்று வைத்துக் கொள்வோம்.“ நகை உன்னிடம் இருந்தால் என்ன என்னிடம் இருந்தால் என்ன? என்று திருடன் கேட்டால் வி்ட்டுவிடுவோமா? நம்மிடம் இருந்தால் பெட்டியில்தானே இருக்கும்? திருடனிடம் சென்றால் 10 இடத்தில் பகிர்ந்து செலவாகும்! என்ற விட்டுவிடுவோமா?

மக்கள் கடலில் மிதக்க வேண்டிய நிலை ஏன்?

“நம் தாயகத்தில் பிழைக்க முடியாமல் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று அவதிப்படுகிறார்கள். ஒரு கவளச் சோற்றுக்கு வழியில்லை. வாழ வழியின்றி மனம் கலங்கி இலங்கை போன்ற நாடுகளுக்குக் கள்ளத்தோணி ஏறி போகிறார்கள். சமீபத்தில் கள்ளத் தோணி விடுபவர்கள் இலங்கை – சிங்களக் கடலோரத்தில் ஒரு முழம் தண்ணீர் தான் இருக்கும் என்று 30 தமிழர்களை இறக்கிவிட, அவர்கள் தண்ணீரில் இறங்கினர். தண்ணீர் கழுத்துக்கு மேல் இருந்ததால் மீண்டும் தோணியில் ஏற முயன்றார்கள். தோணியில் இருந்தவர்கள் அவர்களைத் துடுப்பால் அடித்துத் தள்ளி விட்டார்கள். சிறகொடித்த பறவைபோல் தத்தளித்த, அவர்கள் கடலில் பிணமாகி மிதந்தார்கள், சிங்களக் கடற்கரையோரம்! இது ஏன்? தமிழகத்து மக்கள் மிதக்க வேண்டிய ஈன நிலை ஏன்? தமிழகம் தனித்து இருந்தால் தமிழர் பிணம் மிதக்குமா? கேட்க நாதிகூட இந்நாட்டில் இல்லை. இதுபோல் மார்வாடியின் பிணம் ஒதுங்கியிருந்தால் ‘சிங்களக் கடற்கரையோரம் ஒரு மார்வாடியின் பிணம் எப்படி மிதந்தது? என்று காங்கிரசுக்காரர்களும், கம்யூனிஸ்டுகளும், பிரஜா சோஷலிஸ்டுகளும் சுதந்திரக் கட்சியினரும் பதறிக் கேட்டிருப்பார்கள். பல தமிழ் மக்கள் – மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள். கணவனை விட்டுப்பிரிந்த காரிகைகள், சகோதரனை விட்டுப் பிரிந்த அண்ணன்மார்கள், வாழ்ந்த தமிழரின் சங்கதியினர் பிணமானார்கள்.

டில்லிக்கு ஏது கவலை?

“அதே சிங்களத்தின் மீதுதான் தமிழன் ஒரு காலத்தில் படையெடுத்துச் சென்று போராடி வெற்றி பெற்றான். சிங்களக் கைதிகள் 4,000 பேரைக் கொண்டு வந்தான். காவிரியில் கல்லணை கட்டினான். தோற்ற சிங்களக் கைதிகளைக் கொண்டு கட்டிய அணை தமிழகத்தில் !லால்குடி அருகில்) உண்டு. அண்மையில் சிங்களத் தீவிலே தமிழர்களைப் பார்த்து, “உன் நாட்டுக்கு ஓடு என்றனர். உரிமை தர மறுத்தனர். பெண்களை மானபங்கப்படுத்தினர். தமிழர்களின் கடைகளைச் சூறையாடினர். வெறிகொண்டு தமிழர்களைக் கொன்றார்கள் 150 பேர் வரை கொல்லப்பட்டனர். ஏன் இந்த அநீதி! என்று கேட்கச் சென்னை மாநிலச் சர்க்காருக்கு அதிகாரம் இல்லை, டில்லிக்கோ இதைக் குறித்துக் கவலையில்லை.

“பாரதக் கதையில் திரௌபதியின் சேலையைத் துகிலுரித்தபோது தர்மனும் மற்றவர்களும் வாய்மூடிக் கிடந்தது போல் – தமிழர்கள் அவமானப்படுத்தப்படும் பொழுது ஏன் என்று இலங்கையைப் பார்த்துக் கேட்பதற்கு அதிகாரமில்லை. தமிழர்கள் பழிவாங்கப்படும்போது மாதர்கள் கற்பழிக்கப்படும்பொழுது இந்த மாநிலத்தை நடத்திச் செல்ல அமைந்ததுள்ள சட்டமன்றத்திற்கு – சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் என்று கேட்க வக்கு வழியில்லை – பாரதத்தில்.

எட்டு மந்திரிகள் நிலை?

“மாரியம்மன் திருவிழா நடந்தால் குடைராட்டினம் சுற்றுவார்கள். இரண்டனா கட்டணம் கொடுத்து ஒருவன் குதிரை மேல் ஏறுவான், ஒருவன் புலியின் மேலும், பிரிதொருவன் சிங்கத்தின் மேலும் ஏறுவான். இராட்டினக் காரன் விசில் ஊதியதும் இராட்டினம் சுழலும். சுற்றிச் சுற்றி வரும். அப்பொழுது ஆட்ட வேகத்தின் காரணமாகப் புலியை குதிரை துரத்துவது போலவும், புலி சிங்கத்தை நெருங்குவதைப் போலவும் மயில் குதிரையை நெருங்கிச் செல்வதைப் போலவும் இருக்கும் அவர்கள் இறங்கினால் புலியின் மேல் சிங்கத்தின் மேல் குதிரையின் மேல் ஏறி இறங்கியதாக நினைப்பார்கள். நமது எட்டு மந்திரிகளின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது.

“அமைச்சர்களாக ஆக நாங்கள் ஆசைப்படுவதாக யாரும் நினைக்கக் கூடாது. உடையார்பாளையம் தாலுக்கா மக்களுக்கு அமைச்சர்களின் நிலை நன்கு தெரியும். மந்திரி பதவி வரும் போகும், மக்கள் சக்தி எவ்வளவு வரறேப்புத் தந்தார்கள். காங்கிரசு எம்.எல்.ஏக்கல் எப்படி வரவேற்புத் தந்தனர் அவருக்கு? இப்போதோ வலது கரம் போலிருந்த விஸ்வநாதம்கூட அவரைக் கண்டு பேச அஞ்சுகிறார். இன்று தவறாக நினைப்பார்கள் என்று தெரு பக்கம் அவர் வந்தால் புழக்கடைப்பக்கம் போகும் அளவுக்கு உள்ளது. அந்த மாதிரி பதவிக்கா நாங்கள் ஆசைப்படுகிறோம்?

“நான் மந்திரியாக வர விரும்பியிருந்தால் எப்பொழுதே வந்திருப்பேன். 1947இல் இந்தியா விடுதலை அடையும்போது நான் சார்ந்திருந்த திராவிடக் கழகம் ‘துக்க தினம்‘ என்ற நேரத்தி்ல் ‘சுதந்திர தினம்‘ தான் என்று என் மனதில் பட்டதைச் சொன்னேன். காங்கிரசில் சேரும்படி என்னை அழைத்தார்கள். கொள்கையை விட்டு நானும் சேர்ந்திருந்தால் ஐந்தாண்டுகளுக்கு முன்பே அமைச்சராக வந்து இங்கெல்லாம் எதையாவது திறந்து வைத்திருக்கலாம்.

கெஞ்சிக் கேட்டு வாழும் நிலை மாறவேண்டும்

“நம்முடைய அரசாங்கத்திற்குத் தேவையான அதிகாரம் இல்லை. “திராவிட நாடு திராவிடருக்கே“ என்கிறோம். இந்தப் பதினோரு ஆண்டுக் காலமாக இதனைப் பன்னிப் பன்னியே பேசுகிறோம். என் தம்பிமார்களும் அணி அணியாகப் பேசுகிறார்கள். ஆனால் காங்கிரசார் கவனிப்பதில்லை. சேர்ந்து வாழ்ந்தால் என்ன இலாபம் என்ன நட்டம் என்று யோசிப்பதி்ல்லை. அவர்கள், “அண்ணாதுரை குட்டை, நெடுஞ்செழியன் நெட்டை, சம்பத் கட்டை, மதியழகன் குள்ளம் என்று ஆளைப் பார்க்கிறார்களே தவிர, தரத்தை ஆராய்ச்சி செய்வதில்லை. நாடு பிரிவதால் தீங்கு என்று விளக்கம் கொடுக்க அவர்களால் முடியவில்லை.

“அரசியலிலே ஆண்மையுடன் உலவிய இனம் அடிமைப்பட்ட நிலையில் அவல நிலையில் வாழ்கிறது. முடியுடை மூவேந்தர்கள் காலத்திலும் சரி, பாளையக்காரர்கள் காலத்திலும் சரி – வடக்குக்குத் தெற்கு தோற்றதில்லை. கப்பம் கட்டி வாழ்ந்ததில்லை, இடையிலே வந்த வஞ்சகர்கள் பேச்கைக் கேட்டு வழி நடந்து ஏமாற்றப்பட்டோம், ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டவர்களால் வீழ்ந்தோம்.

“நம்நாட்டில் உண்ண வசதியில்லை. வாழ வழியில்லை. வெளிநாட்டில் சென்று பிழைக்கக் கள்ளத் தோணி ஏறிச் சாவை ஏன் தாய்மார்கள் முத்தமிட வேண்டும்?“

தனி நாடு கண்டால்தான் நாட்டின் வாட்டம் நீங்கும்

“விளை நிலைத்தில் ஏதும் இல்லை என்று ஒதுங்கி இருப்பவரைக் கண்டால் நிலமகள் சிரிப்பாள் என்று திருக்குறள் கூறுகிறது. உலக நாடுகளில் எங்கும் இல்லாத அளவுக்கு இயற்கைச் செல்வங்கள் நம் பூமியில் உண்டு. தங்கம் உண்டு, நலிக்கரி உண்டு, இரும்பு உண்டு, ஜிப்சம் உண்டு. இப்பகுதியிலேகூட கல்லக்குடி என்ற உரிமைப்பெயரை மாய்த்து ‘டால்மியாபுரம்‘ என்று மகுடம் சூட்டி, ‘டால்மியா சிமெண்ட்‘ தயாரிக்கப்படுகிறது.

“நாம் தனி நாடு கண்டால்தான் நாட்டின் துயர் நீங்கும், வேதனைக் கண்ணீர் நம்மை விட்டு அகலும். சக்திக் கேற்ற உழைப்பும் தேவைக்கேற்ற கூலியும் மக்களுக்குக் கிடைக்கும்.“

“காமராசர் கேட்கிறார் – ‘நாடு பிரிந்தால் சோறு கிடைக்குமா?‘ என்று. நான் கூறுகிறேன் – அவருக்குச் சோறு மட்டும் அல்ல, உடன் ஊற்றிச் சாப்பிட சாறும் !குழம்பு) மோரும் கிடைக்கும் என்று. நாடு பிரிந்தால் நாம் பலம் பெற்று, சோற்றுடன் சாறும் ஊற்றிச் சாப்பிடலாம்.

“தமிழர்கள் 3 கோடி பேரும், திராவிடர்கள் 9 கோடி பேரும் பிரிந்து வாழ்ந்தால் நல்வாழ்வு அடையலாம். முப்பக்கம் கடலுண்டு நம்மிடம். தூர்ந்த துறைமுகங்களை ஆழப்படுத்திச் செப்பனிட்டால் உலகக் கப்பல்கள் எல்லாம் நம் நாடு வந்து போகும். வருமானம் அதிகமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோம் நாட்டு மகளிர் நம் நாட்டுச் சந்தனக் கட்டையைக் கொண்டு புகைபிடித்தார் களாம். மயில் இறகால் விசிறியும் முத்தும் கண்டு மகிழ்ந்தார்களாம். நம் நாட்டு ஆடையை உடுத்தி அகமகிழ்ந்து, நம் நாட்டுத் திறமை கண்டு இயற்கைச் செல்வம் கண்டு மகிழ்ந்தார்களாம்.

வெறுப்பால் அல்ல – விருப்பத்தால்

“நமது மந்திரிகள் நம்மைத் திட்டிப் பேசினாலும் அவர்கள் நிலை கண்டு நான் பரிதாபப்படுகிறேன். தெரிந்த நண்பரொருவரை விருந்துக்கு அழைத்துச் சென்று அறுசுவை விருந்து அளிக்க நினைத்தாலும் மனைவியின் அனுமதியின்றி அழைக்க அஞ்சம் கணவன் நிலையில் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதற்காகப் பாவம் – அவர்களைக் கண்டு பரிதாபப்படுகிறேன்.

“உச்சவரம்புச் சட்டம் எப்பொழுது வரும் என்று நாங்களல்ல காங்கிரசு எம்.எல்.ஏ. விசுவநாதமே கேட்டாலும், இரண்டு ஆண்டுகள் கழித்து வரும்‘ என்று அமைச்சர் மாணிக்க வேலர் பேசலாம்- தனி நாட்டு அமைச்சராக இருந்தால். ஆனால் இப்பொழுது பேச மாட்டார். டில்லியில் இது குறித்துப் பேசுகிறோம். விரைவில் வரலாம் என்றுதான் அமைச்சரால் பேசமுடிகிறது.

“வடநாட்டார் மீது கொண்டுள்ள வெறுப்பால் அல்ல, நாம் திராவிட நாடு கேட்பது! தமிழ் மக்கள் மீதுள்ள பாசத்தால் ‘திராவிடம் பிரிய வேண்டும்‘ என்கிறோம். ஆகவே, பொதுமக்கள் அனைவரும் நாங்கள் அதற்கு ஊக்கத்துடன் உழைக்க பேராதரவு தரவேண்டுகிறேன்.

(நம்நாடு - 5.11.60)