அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

உள்ளத்திலும் உருவிலும் தங்கம் போன்றவர்

சென்னை அடையாறு அவ்வை இல்லத்திற்குப் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரூ.30 ஆயிரம் நன்கொடை வழங்கியமைக்காக திரு.எம்.ஜி.ஆர். அவர்களைப் பாராட்டும் முகத்தான் நேற்று அவ்வை இல்லத்தில் ஓர் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு நிதியமைச்சர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்து எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பியல்புகளையும் கொடையுள்ளத்தையும் பாராட்டிப் பேசினார்.

சட்டமன்றத் தலைவர் டாக்டர் யு.கிருஷ்ணாராவ் அவர்களும் டாக்டர் அ.சிதம்பரநாதனார் அவர்களும் பாராட்டுரை வழங்கினர்.

இறுதியாக அண்ணா அவர்கள் பாராட்டிப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

இதுதான் முதல் தடவை
நான் எம்.ஜி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை.

அவ்வை இல்லம் ஆதரவற்ற அனாதைப் பெண்களுக்கு நல்ல பணிகளை ஆற்றி வருகிறது. இப்படி ஆற்றி வருகின்ற பணிக்குப் பொதுமக்கள் தங்களுடைய ஆதரவைத் தந்து மேலும“ சிறப்புறச் சேவை செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ் நாட்டின் சென்ற முப்பது ஆண்டு அரசியல் சமுதாய வரலாற்றை எடுத்துக்கொண்டு பார்த்தால் திருமதி முத்துலட்சுமி (ரெட்டி) அம்மையார் அவர்கள் பழமைக்கருத்துகளை ஒதுக்கித் துணிந்து ‘மாறுதல் வேண்டும்’ என்ற நோக்கத்தோடு பெண்களை ஒன்று திரட்டினார். ‘மாறுதல் வேண்டும்’ என்று அவர் துணிவோடு உரைத்தார். அம்மாறுதல் இன்றைய தினம் நடைமுறையில் நிறைவேறி வருகிறது.

எதைக் கேட்கப் போகிறாரோ?
நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. இப்படிப் பட்ட நிலையங்கள் துரைத்தனத்தார் உதவியை எதிர் பார்த்துக் கொண்டு இருப்பது எந்த நிதியமைச்சருக்கும் கவலையைத்தான் அளிக்கும். பொதுமக்கள் தாராளமாக இப்படிப்பட்ட காரியங்களுக்கு நன்கொடை அளிப்பதில் தயக்கம் காட்டமாட்டார்கள். ஆனால், தாராளமாக நன்கொடை அளிப்பதற்கு நமது நிதியமைச்சர் அவர்கள் சற்றுத் தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

வரப்போகிற பிப்ரவரி மாதம் நம்முடைய நினைவுக்கு வருகிறது. நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் அப்பொழுது நம்மிடம் எதைக் கேட்கப் போகிறாரோ தெரியவில்லை.

ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும். இந்த இல்லத்தை நடத்திச் செல்வதில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்படிப்பட்ட பெண்களை அறநெறியில் அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுடைய பணிக்கு நம்முடைய பாராட்டு உரித்தாகும்.

துரைத்தனத்தாரின் குறை
நாட்டிலே இப்படிப்பட்ட ஆதரவற்ற அனாதைகளின் தொகை குறைந்து கொண்டு வரவேண்டும். நாளுக்கு நாள் இந்தத் தொகை வளர்ந்து கொண்டு கூரக்கூடாது. இப்படி இந்தக் தொகை வளர்ந்து கொண்டு வருகிறது என்றால், எங்கோ குறை இருக்கிறது என்று பொருள். அது துரைத்தனத்தாரின் குறையேயாகும்.

வள்ளன்மையைப் போற்றிப் பாராட்டுகிற பண்பு தமிழர்களுடைய மரபாகும். உலகத்தில் உள்ள இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கொடையைப் பாராட்டி யுள்ளதைக் கூறுகின்றன.
இப்படி நடத்தப்படுகிற நிலையங்களில் இந்த ஆண்டு 60 பேர்கள்தான் இருக்கிறார்கள் என்றால் அடுத்த ஆண்டு 20 பேர்தான் இருக்கிறார்கள் என்று இருக்க வேண்டும். ‘அனாதைகள் கிடைக்கவில்லை’ என்று இருக்கவேண்டும். இப்படிப்பட்ட பணியைத் துரைத்தனத்தார் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் பெரும்பாலானவை கொடை யுள்ளம் படைத்தவர்களால் நிறுவி நடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட காரியங்களுக்கு அப்படிப்பட்டவர்களை அணுகிக் கேட்டால் கிடைக்கும். இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.

போட்டி மனப்பான்மை வளரவேண்டும்
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.

இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை வழங்கி இசைப்பட வாழலாம். நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி இசைபட வாழலாம். நல்ல எண்ணங்களை வழங்கியும் இசைபட வாழலாம்.

நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

வறுமையால் உருக்கப்பட்டவர்
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் ஐந்நூறு ஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.

நடிகர்களின் வருமானம் கூட்டல் கணக்கல்ல கழித்தல் கணக்கு. இவ்வாண்டு ரூ.5 இலட்சம் என்றால் அதற்கு அடுத்த ஆண்டு இரண்டு இலட்சம் என்றுதான் அந்தக் கணக்கு காட்டும். ஆகவே கிடைக்கிற காலத்தில் அது நற்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட தாகக் கணக்கு இருந்தால்தான் அதுதான் போற்றத்தக்கது.

காத்திருக்கிறார், கொடுப்பதற்கு
ஆனால் நண்பர் இராமச்சந்திரன் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது நண்பர் இராமச்சந்திரன் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

நிதியமைச்சர் அவர்கள் ‘பெயரை’ப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவதில்லை. ஆனால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அவ்வை தமிழ் நாட்டிலே பிறந்தவர். தமிழ்ப் புலவர். தமிழின் புகழுக்குக் கலசம் சூட்டியவர். அவர் வாழ்ந்த காலத்தில் பாரி என்றொரு மன்னன் இருந்தான். கொடைவள்ளல். வந்தவருக்கும் நொந்தவருக்கும் இல்லை யென்னாது வழங்கியவர். அப்படிக் கொடுத்துக் கொடுத்து அவர் நலிவுற்ற நேரத்தில் கையில் ஏதுமற்று உழன்ற காலத்தில் அவருடைய செல்விகள் அங்கவை, சங்கவை என்பவர்கள் அவ்வையிடம் சென்றார்கள். அவ்வை ஆதரவு தந்ததாக வரலாறு உண்டு.

அங்கவை-சங்கவை-ஔவை
அதைப்போலத்தான் வாழ்விழந்த பாரி மக்களைப் போலத்தான் இந்த அவ்வை இல்லத்திற்குச் சமுதாயத்தின் ஓரத்திலே தள்ளப்பட்டவர்கள் பல அங்கவை-சங்கவைகள் வந்து சேருகிறார்கள். அவ்வைக் கிழவியைப் போலவே ஆதரவு காட்டுகிறது இந்த இல்லம்.

ஆகவே இந்த இல்லத்திற்கு ‘அவ்வை இல்லம்’ என்று பெயர் இருப்பது எவ்வளவோ பொருத்தாக இருக்கிறது. ஆனால் நிதியமைச்சர் சொல்லலாம் இதற்கு என்ன பெயர் இருந்தாலும “சிறப்பு குறைந்திருக்காது’ என்று.

மலர் இருப்பது அழகுதான். அந்த மலருடன் மணமும் சேருவது மகிழ்ச்சிக்குரியது. அப்படி மணம் இருப்பது பெருமைதான் என்றாலும் அந்த மணம் கொண்ட மலர் மங்கை ஒருத்தியின் தலையில் இடம் பெறுவது அதைவிடச் சிறப்பிற்குரியது.

அதைப்போல் இந்த இல்லத்திற்கு ‘அவ்வை இல்லம்’ என்று பெயர் அமைந்தது சிறப்புக்குரியது.
நிதியமைச்சர் அவர்கள் நாங்கள் ‘வேண“டாம்’ என்று சொல்லிய எதையும் நடத்தியதில்லை. ‘வேண்டும்’ என்று சொல்லியதையும் நடத்தியதில்லை. இதன் பின்னால் உள்ள அரசியல் ரகசியமும் உங்களுக்குப் புரியும்.

ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன்.

(நம்நாடு - 30.1.61)