அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உரிமைப்போர்

1962 ம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தல் பற்றியும், தாய்த்திரு நாட்டை மீட்பதற்காக ஈடுபாடு கொண்டுள்ள நிலையினையும் கழகத் தோழர்கள் பொதுமக்களிடையே கூறிவருகிறார்கள். கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் நான் சொல்லும் பேருண்மை ஒன்றிருக்கிறது. தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்குள் ஏற்படுகின்ற போட்டி அல்ல! அதனுடைய வெற்றி தோல்வி என்னும் ஜாதகம், எந்தக் கட்சியோடும் பொருத்தப்பட்டில்லை. தேர்தல் என்பது ஒரு அரசியல் கட்சியின் இலட்சியப் பயணத்தில் ஏற்படுகின்ற சம்பவங்களிலே அதுவும் ஒரு சம்பவம் என்றுதான் நாம் கூறுகிறோம்.

தேர்தல் குறுக்கீடு, குறிக்கோள் அல்ல!
பல்வேறு சம்பவங்கள் ஏற்படுவதைப் போலவே, இந்தத் தேர்தல்-இடையிலே ஏற்பட்டுள்ள குறுக்கீடு, சம்பவம்தான் என்பதை மாற்றார் அறிந்திட வேண்டும். உற்றாருக்கும் இது தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்துள்ள வளர்ச்சியும், பெற்றிருக்கிற திறமையையும் விட, பொதுமக்களோடு கொண்டுள்ள தொடர்பு, ‘அளவில்’ மிகப் பெரிது என்றுதான் கூறவேண்டும். நாம் எடுத்துக்கொண்டிருக்கும் இலட்சியம் 1962ம் ஆண்டு பொதுத்தேர்தலோடு முடிவடைந்துவிடப் போவதில்லை. நமக்கு தேர்தலே இலட்சியமுமல்ல! ஆகவே நான் முன்பு சொன்னதையே மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ‘தேர்தல் என்பது இடையிலே ஏற்படுகின்ற குறுக்கீடு-சம்பவமே தவிர; அதுவே நமது குறிக்கோள் அல்ல’ என்று. ஆகவே இப்போதுள்ள ஆர்வத்தைவிட, உணர்ச்சியைவிட அதிக அளவு இலட்சியத்திலே நாட்டம் கொள்ளவும், வலிவு பெற்றிடவும் அதை வளர்த்துக் கொள்வதிலேயும் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

கூட்டு சக்தியே கொள்கையின் வெற்றி!
ஏனெனில், நாம் எடுத்துக்கொண்ட காரியம் மிக மிகப்பெரியது; நாமோ மிக மிகச் சாமான்யர்கள். மிகப் பெரிய காரியத்தை, மிகமிகச் சாமான்யர்களால் எப்படி நடத்திச் செல்ல முடியும்? அதில் எப்படி வெற்றி காணமுடியும்? கூட்டுச் சக்தியின் மூலமாகத்தான் அந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும். அப்போது தான் நாம், எப்படி வெற்றி பெற்றோம் என்பது பற்றி அறிவீர்கள். நம்முடைய கருத்தை, பொதுமக்களிடம் எடுத்துச்சொல்லி, அவர்களையெல்லாம் ஒருமுகப்படுத்தி, அதன்மூலம் கிடைக்கவிருக்கின்ற கூட்டுச் சக்தியின் மூலமாகத்தான் நாம் எடுத்துக்கொண்டுள்ள மிகப்பெரிய காரியத்தில் ஈடுபட இருக்கிறோம்.

இரும்புச் சுரங்கத்தில், இரும்பு ‘பாளம் பாள’மாகக் கிடைப்பதில்லை. இரும்புச் சுரங்கத்தில், கடப்பாரையைப் போல், மண்வெட்டியைப்போல் முழுஉருவில் எதுவும் கிடைப்பதில்லை; மண்ணோடு மண்ணாக கலந்துதான் இருக்கிறது. மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கும் சிறு சிறு இரும்பு தாதுப் பொருளை ஒன்று திரட்டி, விஞ்ஞானத்தின் உதவியால் இரும்பாக்கப்படுகிறது! உலைக்களத்தில் இரும்புக்கு வலிவேற்றிய பிறகுதான், இரும்பு எஃகாகிறது. அதற்குப் பிறகுதான் பெரிய பெரிய பாலங்களுக்காக வும் வீடுகள் கட்டுகிறபோது ‘கர்டர்’களாகவும் இரும்பைப் பயன்படுத்துகிறோம். மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கும் சிறு சிறு தாதுப் பொருட்களை ஒன்று திரட்டி விஞ்ஞானத்தின் மூலம் பதப்படுத்தி இரும்பாக்குகிறோமே அதைப்போல், மக்களிடையே சிதறி இருக்கும் அறிவாற்றலையும், திறமையையும் ஒன்று திரட்டி அந்தக் கூட்டுச் சக்தியின் மூலம் திராவிட நாட்டை பெற்றுத் தீரும் பணியிலே நாம், ஈடுபட்டிருக்கிறோம்.

இந்த நேரத்தில்தான் சிலர், ‘இத்தனை நாட்கள் கிடைக்காத திராவிட நாடு, இனிமேல் எப்படி கிடைத்துவிடும்’ என்று கூறி வழிதவறிப் போய்விட்டார்கள். அதற்குக் காரணம் என்ன? அடிப்படை உண்மையை மறந்துவிட்டார்கள்; முன்பு சொன்னதுபோல்-கூட்டுச் சக்தியின் மூலம்தான் நாம் எடுத்துள்ள மிகப்பெரிய காரியத்தை நிறைவேற்ற முடியும் என்னும் இலட்சியத்தில் நம்பிக்கை வைக்காமல், உண்மையை மறந்துவிட்டு வழி தவறிப் போனார்கள்.

நாட்டை மீட்பது சாதாரண காரியமா?
கெனியா நாட்டு விடுதலைக்கு பெரும் தொண்டாற்றிய பெரியார் ஜோலோ கெனியாட்டா என்பவர்; எழுபது வயது நிறைந்த மூதறிஞர். நைரோபியா நகரில், ராணுவ பாதுகாப்பில் இப்போது இருந்து வருகிறார். அவருடைய பெரு முயற்சியால் கெனியா நாடு விடுதலை பெற்றது என்றாலும், அவருடைய கட்சி ஆளுங்கட்சியாக மாறிய பிறகும் ஏன் தாயகத்துக்கு திரும்பிச் செல்லாமல் நூறு மைல் தொலைவில் ராணுவ பாதுகாப்பில் இருக்க வேண்டும்? கெனியா நாடு விடுதலையானாலும், அங்கு இன்னமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அதிகாரம் ஆட்சிபுரிகிறது. ஆகவேதான் ‘தாய்த்திருநாடு முழு விடுதலை அடையும்வரை திரும்பமாட்டேன்’ என்று கெனியாட்டா கூறிக் கொண்டிருக்கிறார்.

கெனியா நாட்டு விடுதலைக்காக அவர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்? நாட்டை மீட்பது என்பது சாதாரண காரியமல்ல; எத்தகைய பயங்கரம் என்பதையும், அதற்காக எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை ஏற்க வேண்டும் என்பதை விளக்கவே இதனைச் சொல்லுகிறேன்.

கெனியா நாட்டில் இன்னும் ஆங்கில ஏகாதிபத்தியம் இருக்கிறது. அந்த கொடுமை நீங்கி, கெனியா முழு சுதந்திர நாடாகும் வரை கெனியா திரும்பமாட்டேன் என்று கெனியாட்டா கூறிக் கொண்டிருக்கிறார். ஏன்? கெனியாட்டா அவர்கள் செய்த தியாகம் கொஞ்சமல்ல; பட்ட கஷ்ட நஷ்டங்கள் ஏராளம்! அதேபோல் நாம், திராவிட நாடு மீட்சிக்காக தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக-போதுமான அளவு தியாகங்களை-அதற்கான விலையை நாம் இன்னமும் தரவில்லை. பச்சை ரத்தத்தை சிந்தவில்லை-உயிர்த் தியாகங்கள் செய்யவில்லை, தூக்குமேடை ஏறியோரின் தொகையும், கடுஞ்சிறையில் வேதனைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. இந்த நிலைமை எப்போது உண்டாகும்? ஏன் இதுவரை உண்டாகவில்லை, என்பதை எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.

தி.மு.க.வுக்குத் தடை?
இந்திய சர்க்கார் தன்னுடைய அடக்குமுறையை, கொடுமை யைக் கட்டவிழ்த்து விடவேண்டும்! அவர்களுடையத் துப்பாக்கி நம்மீது பாயவேண்டும்! ‘திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டுப் பிரிவினையில் நாட்டம் கொண்டது நாட்டைத் துண்டாட நினைத்து இந்திய ஒற்றுமைக்கு உலை வைக்கிறது’ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை தடைசெய்ய வேண்டும். இந்தியப் பேரரசு அதை ஏன் இன்னமும் செய்யாமலிருக்கிறது? இந்தியப் பேரரசினர், இதை இன்றில்லாவிட்டால் நாளை; நாளை இல்லாவிட்டால் அதற்கு மறுநாள், இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட விரோதமான கட்சி என்று தடை செய்யப்படக் கூடும்! நாட்டைத் துண்டாடுகிற கட்சி என்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தடை செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது கழகத் தோழர்களைக் கைது செய்வார்கள்; நமது இரு வண்ணக் கொடியை இறக்கி விடுவார்கள்-நமது கொடியேற்றியவர்களைத் தண்டிப்பார்கள். சிறையிலே அடைப்பார்கள். இத்தகைய பயங்கர அடக்குமுறைகள் இன்னமும் நம்மைத் தாக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இத்தகைய அடக்குமுறையை ஒரு தடவைக்கு நான்கு தடவை சந்தித்துவிட்டது, கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தடவைக்கு மூன்று தடவை சந்தித்திருக்கிறது.

இலட்சியப் போருக்கு தயாராவீர்!
நாம் இன்னும் அத்தகைய அடக்குமுறைக்கு ஆளாகவில்லை, அத்தகைய அடக்குமுறை இன்னும் சிறிது காலத்திற்குள்ளாகவே ஏற்பட்டுவிடும் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் சிலர் பிரிந்தார்களோ என்னவோ?

பிரிந்து சென்றவர்கள் அடக்குமுறை இன்னும் சிறிது காலத்திற்குள் ஏற்பட்டுவிடும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஓடிப்போனார்கள் என்பது பொருளே தவிர, அடிப்படைக் கொள்கையில் வேறுபாடு கொண்டு இல்லை என்றும் கருதவேண்டியிருக்கிறது.

இந்தியப் பேரரசு அடக்குமுறையை ஏவி விடவும், பலர் உயிரிழக்கவுமான காலம் விரைவில் வரத்தான் போகிறது. வீதியிலே போகிற ஒருவனை போலீஸ்காரர் கைதட்டி கூப்பிட்டு ‘நீ திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரனா, நட போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்று அழைத்துச் செல்லும் காலம், அருகே தான் இருக்கிறது.

தென் ஆப்ரிக்காவில் வீதியில் நடக்க வேண்டுமானாலும்கூட சீட்டுத் தேவைப்படுகிறது. தென் ஆப்ரிக்காவில் கறுப்பர்கள் வீதியிலே நடமாட வேண்டுமானால் அதற்கான அனுமதிச் சீட்டைக் காட்டவேண்டும். போலீஸ்காரர், கறுப்பான தடுத்து நிறுத்தி ‘எங்கே அனுமதிச் சீட்டு’ என்று கேட்டால் தட்டாமல், காட்ட வேண்டும். மோட்டார் ஓட்ட வேண்டுமென்றால் சீட்டுத் தேவைப்படுவதுபோல், நாய்க்கு சீட்டு வாங்குவதைப் போல் தென் ஆப்ரிக்காவில், கறுப்பர்கள் வீதியிலே நடமாட சீட்டு வாங்க வேண்டும். வெள்ளை நிறம் படைத்தவர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக, அங்கே வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் வெறித்தனமாக நடந்து கொள்கிறது. அப்படிப்பட்டக் கொடுமை, தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது.

துப்பாக்கியைக் காட்டினால் துவளாதீர்!
டெல்லி பாராளுமன்றத்திலே இரண்டு பேர் இருந்தார்கள்; இப்போது நண்பர் தர்மலிங்கம் ஒருவர் மட்டும்தான் இருக்கிறார். இன்னும் கழகத்தைச் சட்ட விரோதமானதாக்கவில்லை, ஏன்? பேசுகின்றவர்கள் இரண்டு பேர், அதைக் கேட்கின்றவர்களின் தொகை 498 பேர். சட்டமன்றத்திலேயும், பாராளுமன்றத்திலேயும் நம்மவரின் தொகை அதிகமாக வேண்டும். எத்தனை பேரை இத்தடவை சட்ட மன்றத்திற்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்ந்தெடுத்து அனுப்பப் போகிறீர்கள்? அந்தப் பொறுப்பு உங்களிடத்திலே இருக்கிறது! அதிகமான இடங்களை நாம் பெற்றோமானால் டில்லி அரசினரின் கவனம் நம் பக்கம் திரும்பும். ‘இவ்வளவு பேசுகிறார்களே-எவ்வளவு தியாகம் செய்யப் போகிறார்கள்’ என்று கருதி அடக்குமுறையை ஏவினால்-துப்பாக்கியைக் காட்டினால் நாம் தாங்கிக் கொள்ளவேண்டும். நாம் சந்திக்க வேண்டியதை இன்னமும் சந்திக்கவில்லை.

திருப்பதிக்கு போவோரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏழுமலையான் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், ஏழு மலைகளுக்கு அப்பால் இருக்கிறான் என்று சாதாரணமாகக் கூறிவிடுவார்கள். முதல் மலையை கடக்கும்போது, குழந்தையை தாய் இடுப்பிலே வைத்துக் கொள்வாள். பெரிய பையனை தகப்பன் தோளிலே ஏற்றிக்கொண்டு படிகளை வேகவேகமாக கடப்பார்கள், இரண்டாவது மலை ஏறும் போது கால் வலி ஏற்பட்டாலும் யாருக்கும் தெரியாமல் அழுத்திப் பிடித்துக் கொள்வார்கள். பெருமூச்சு வாங்க வாங்க மூன்றாவது மலைக்கு வந்து உட்கார்“ந்து விடுவார்கள். ‘என்னய்யா இதற்குள் பெருமூச்சு’ என்று கேட்டால், ‘அதெல்லாம் ஒன்றுமில்லை காற்று பலமாக அடிக்கிறது அவ்வளவுதான்’ என்பார். மூன்றாவது மலையை கடக்கும்போதும் படிக்கட்டுக்களைப் பிடித்துக்கொண்டு செல்வார்கள். பெண்களை ஆண்கள் பிடித்துக் கொண்டு செல்வார்கள். மன்னிக்கவும் இந்தக் காலத்தில் ஆண்கள்தான் பெண்களை பற்றிக்கொண்டு போகிறார்கள். இத்தனை சிரமப்பட்டுத்தான் ஏழு-மலைகளையும் கடக்கிறார்கள். எப்போதும் இருக்கிற ஏழு மலையான் கற்சிலையைக் காண்பதற்கே இத்தனைக் கஷ்டப்பட வேண்டி யிருக்கிறதென்றால், செல்வம் கொழித்திடும் திருநாட்டை மீட்பது என்பது சாதாரணமான காரியமா? கேட்டதும் கிடைத்துவிடக் கூடியதா நாட்டை மீட்கும் வேலை? முதல் மலையைக் கடந“ததும் சிலர், கால் வலித்து சோர்ந்து விடுவதுபோல, சிலர் பிரிந்து போய் விட்டார்கள். இரண்டாவது மலையை கடப்பற்குள் யார் யாரை இழக்கவேண்டி வந்திடுமோ, யார் கடைசி வரை நின்றிடுவார்களோ! நம்முடைய இலட்சியம் நிறைவேறுகின்றவரை, உணர்ச்சி பெறத்தக்க அளவில் போராடி-அடக்கு முறையையும் கொடுமையையும் தாங்கிக்கொண்டு நாடு மீட்கும் பணியில் வெற்றி காணும் வரையில் யார் இருப்பார்கள் என்பது தெரியாது.

சுறுசுறுப்பு வேண்டும்!
அண்ணன் தம்பி பிரிவினை ஏற்பட்டு விட்டால், இருந்ததைவிட தம்பி சுறுசுறுப்பாக செயலாற்றுவான். தம்பி நம்மைக் கேவலமாகக் கருதி விடக்கூடாது என்பதற்காக, அண்ணன் சுறுசுறுப்பாக காரியமாற்றுவான். இந்த அளவு புத்திசாலித்தனம் நம்மை விட்டுப்போனவர்களுக்கும், இங்கே இருக்கின்றவர்களுக்கும் இருந்தால் நல்லது.

அதைவிட்டு, இரவு நேரத்தில் அண்ணன், வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி அண்ணனைக் கொலை செய்ய தம்பி முயற்சித்தான் என்றால் என்ன அர்த்தம்? அதைப்போல், நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் திராவிட நாடு கொள்கையைக் கொன்று விட்டார்கள், திராவிட நாடு கிடைக்காது என்று கூறுகின்றார்களென்றால் என்ன பொருள்? நாட்டு விடுதலைக்காக இன்னமும் படவேண்டிய கஷ்ட நஷ்டங்களை தெரிந“து கொள்ளாததுதான்!

நாட்டு விடுதலை நாடகமல்ல!
நாட்டு விடுதலை என்பது சுலபமானதல்ல; அட்டவணை போன்றதுமல்ல! பெங்களூர் ரயில் 10.45 மணிக்கு புறப்பட்டு , இத்தனை மணிக்கு போய் சேருமென்பதுபோல், நாட்டு விடுதலை என்பது இத்தனையாவது ஆண்டில் துவங்கி, இத்தனையாவது ஆண்டில், இன்ன மாதத்தில் விடுதலை அடையும் என்று சொல்வதைப் போன்றதல்ல; வேண்டுமானால் நாடகத்தில் பார்க்கலாம்! பத்து மணிக்கு ‘பாரதம்’ தொடங்கி, துரியோதனன் கொல்லப்பட்டு-துரோபதை கூந்தல் முடித்து-விடியற்காலையில் மீண்டும் தருமராசருக்கே முடிசூட்டலாம், ஆனால் நடைமுறைக்கு ஏற்றதல்ல!

நாட்டை மீட்பதற்கு ஒரு திட்டம் இருக்கிறது. திட்டம் என்றதும் யாரும் பயப்படவேண்டாம். ‘அண்ணாத்துரை ஏதோ திட்டம் வைத்திருக்கிறானாமே என்ன அவ்வளவு பெரிய திட்டம்’ என்று பத்திரிகைக்காரர் அஞ்சிட வேண்டாம்! இதை உதாரணமாகவே கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியப் பேரரசுக்கு பல நாடுகள் கடன் கொடுக்கின்றன. கடன் கொடுக்கும் நாடுகளில் முதன்மையான இடம் பெற்றிருப்பது அமெரிக்காதான். திராவிடத்தை, தென்னகத்தை சாந்தப்படுத்தினால் தான் கடன் கொடுப்பேன் என்று கென்னடி சொன்னால், பண்டித நேரு என்ன செய்வார்? கென்னடி சொல்வாரா என்று கேட்காதீர்கள் கென்னடி கேட்பதாகவே வைத்துக் கொள்வோம். கென்னடி கேட்க வேண்டிய அளவுக்கு நம் நிலை உயரவேண்டுமானால், அது உங்களுடைய பொறுப்பு!

ஒருவன், வீட்டின் மீது கடன் கொடுக்கிறான் என்றால், அந்த வீட்டில் உள்ள அண்ணன் தம்பிகள் மீது ஏற்பட்ட பாசத்தினால் அல்ல! அண்ணனுக்கும் தம்பிக்கும் பகை ஏற்பட்டு விடுகிறது. பணத்தை எப்படி வசூல் செய்வது என்பது கடன்கொடுப்பவனின் கவலை! கடன் கொடுத்தவன் என்ன செய்வான்? அண்ணனையும் தம்பியையும் தெருத் திண்ணையில் உட்கார வைத்துக் கொண்டு, இவருடைய மனமும் புண்பாடத வகையில் ‘இராமர் இலட்சமணர் போல இருந்தீர்களே, உங்களுக்குள் விரோதம் வரலாமா’ என்று கேட்டு, கடைசியில் என் கடனுக்கு வழி என்ன? என்று கேட்பான். அதுபோல் இந்தியத் துணைக் கண்டத்துக்குப் பல நாடுகள் கடன் கொடுத்திருக்கின்றன. இந்தியாவுக்கு மிகத் தாராளமாகவும், அதிகமாகவும் கடன் கொடுத்திருப்பது அமெரிக்காதான். ஆகவேதான் கென்னடி கேட்பார் என்று முதலில் குறிப்பிட்டேன்.

கென்னடி கேட்டால்?
நாம், நல்ல வளர்ச்சியினைப் பாராளுமன்றத்திலேயும் சட்டசபையிலும் பெற்று அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஏற்றம் பெற்றோமானால் ‘பண்டித நேருவின் செல்வாக்கு விந்தியத்துக்கு தெற்கே சரிகிறது என்றும், தென்னகத்தை நேரு சாந்தப்படுத்துவாரானால் இந்தியத் துணைக் கண்டத்துக்கு கடன் கொடுக்கலாம் என்றும் இங்கே இருக்கும் அமெரிக்கத் தூதுவர், கென்னடிக்குக் குறிப்பெழுதுவார்.

பண்டித நேரு, கென்னடியைக் கடன் கேட்கிற நேரத்தல், இதுவரை உம்முடைய சொல்லைக் கேட்டுத் தான் கடன் கொடுத்தோம். இனி நாட்டின் செல்வாக்கையும் செழிப்பையும் பார்த்துவிட்டு கடன் கொடுப்போம். விந்தியத்துக்கு தெற்கே, திராவிட நாடு என்று பெயராலம் திராவிட நாடு விடுதலை அடைய வேண்டுமென்று கூறுகிறார்களாமே. திராவிட நாடு என்று இந்தியாவில் இருக்கிறதாமே, இத்தனை நாள் என்னிடம் இதைப்பற்றி கூறவே இல்லையே என்று கேட்டு வடக்கோடு அதற்கு ஒட்டு உறவு இல்லையாம். அவர்கள் பண்பாடு வேறு, உங்கள் பண்பாடு வேறாம் அவர்கள் மொழி வேறு, உங்கள் மொழி வேறாம். அவர்கள் கலாச்சாரம் வேறு, உங்கள் கலாச்சாரம் வேறாம். பக்ராநங்கல் ஹீராகூட், போன்ற பெரிய பெரிய அணைக்கட்டுகளெல்லாம் வடக்கேதான் இருக்கிறதாம், தெற்கே பெரிய அணைக்கட்டு ஒன்றுகூட கிடையாதாம்-தெற்கே உள்ளவர்கள் அல்லல்படுகிறார்களாம், தொல்லைப் படுகிறார்களாம் பிழைப்புத் தேடி சிங்கப்பூர், சிலோன் போகிறார்களாம் ரப்பர் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் துயர்ப்படுகிறார்களாம், வெளிநாடுகளில், மலத்தை அப்புறப்படுத்தும் வேலையில்கூட இருக்கிறார்களாமே, இதையெல்லாம் ஏன் சொல்லவில்லை என்று கேட்பார்.

நடக்காததெல்லாம் நடக்கும் காலம்!
ஒரு வீட்டின் மீது பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுத்தவன், அந்த வீட்டின் கடைக்கால் சரி இல்லையென்று தெரிந்தால்-கடன் வாங்கியவனிடம் வந்து என்னையா இது வீடா? கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் பச்சை வர்ணம் தீட்டி விட்டு, புதிதாக கண்ணாடியைப் போட்டுவிட்டு, புதிய வீடு போல காட்டி பத்தாயிரம் கடன் வாங்கி விட்டாயே-இப்போதுதான் தெரிந்தது. இந்த வீட்டிற்கு கடைக்கால் சரி இல்லாதது! இதை முன்பு சொல்லவில்லையே என்று கண்டிப்பாகக் கேட்பதுபோல், கடன் கொடுக்கும் கென்னடி, பண்டித நேருவைக் கேட்கக்கூடும். இதை இப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளவேண்டும். இது நடக்குமா என்று சிலர் கேட்கக்கூடும், ஏன் நடக்காது? நடக்கக் கூடாததா, அல்லது நடக்க முடியாததா இது? நடக்காது என்று நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய காலம் இது. எது நடக்காது என்று எதிர்பார்த்தோமோ, அதெல்லாம் நடக்கிறது. சந்திர மண்டலத்துக்கு மனிதன் போவான் என்று யாராவது நினைத்தார்களா, இல்லையே!

நடக்காததெல்லாம் நடக்கக் கூடிய காலம் இது. அவ்வளவுக்குப் போவானேன்? தம்பி சம்பத் என்னை விட்டுப் பிரிவான் என்று யாருக்குத் தெரியும்? திருச்சி மாநாட்டில் பேசியபோது ‘எனக்கும் என்னுடைய அண்ணனுக்கும், பிரிவு உண்டாக்க நினைக்கிறவனே மடையனே உன்னால் முடியாது’ என்று கூறினார், எவ்வளவு அழுத்தம்? அப்படிக் கூறியவர்களே இன்று மாறி விட்டார்கள். நான் சொல்வது நிச்சயம் நடக்கலாம். நடந்தால் என்ன செய்வது? வட நாட்டு வன்கணாளர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உழைப்பில் மறுமலர்ச்சி:
முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்த தாம்பரம், எப்படி இவ்வளவு வளர்ச்சி பெற்றது? எப்படி மாறிற்று? அறிவு ஆற்றலாலும், உழைப்பினால், பலரது கூட்டுச் சக்தியினாலும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதற்கே இத்தனை ஆண்டுகாலம் என்றால், ஒரு நாட்டை மீட்பது என்பது சாதாரணமான காரியமா?

நாட்டு விடுதலைக்கு நாமென்ன செய்தோம்?

1885
ம் ஆண்டிலே இருந்து பாடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு 1947ம“ ஆண்டிலேதான் சுயராஜ்யம் கிடைத்தது. இடையிலே எத்தனை ஆண்டு காலம் என்பதை, வீட்டிலே போய் நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். சுயராஜ்யம் பெறுவதற்காக எவ்வளவு தியாகங்களைச் செய்தார்கள். பகவத்சிங் தூக்குமேடை ஏறவில்லையா, சிதம்பரனார் செக்கிழுக்கவில்லையா, சிறைச்சாலை சென்றவர்களும் சித்திரவதை அடைந்தோரின் தொகையும் கொஞ்சமா? அவர்களைவிட நாமென்ன வானத்திலிருந்து கீழே தொப்பென்று குதித்து விட்டவர்களா? கோபாலகிருஷ்ண கோகலேயும், லாலா லஜபதிராயும் பாலகங்காதர திலகரும், மோதிலால் நேருவும் என்ன புத்தி இல்லாதவர்களா? தூக்கு மேடையில் தொங்கிய பகவத்சிங்கும், கொடி காத்த திருப்பூர் குமரனும் சுயராஜ்யத்தைக் கண்ணால் பார்த்தார்களா? நாட்டுக்காக உழைத்து உயிரிழந்தவர்களின் நான்காவது தலைமுறையில்தான், சுதந்திரமே கிடைத்தது. நம்முடைய வாழ்நாளிலேயே நாம் கேட்கும் திராவிட நாடு கிடைத்துவிட நம்முடைய கண்கள் என்ன, ஹைட்ரஜன் குண்டுகளா? நம்முடைய கரங்கள் என்ன, அணுகுண்டா? நாலு கூட்டத்தில் பேசி விடுவதால் திராவிட நாடு கிடைத்து விடுமா?

விலகிச் சென்றவர்களுடன், இன்னும் சிலரும் போகக்கூடும். இதற்கு அவசரத் தன்மை என்று பொருளே தவிர, அடிப்படை உண்மையை மறந்தார்கள் என்பதல்ல! அடிப்படை உண்மையை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்; விட்டுக் கொடுக்கவும் மாட்டேன். காரணம், நாம் எடுத்துக்கொண்டிருப்பது மிகப் பெரிய காரியம், நாமோ சாமான்யர்கள். இதைச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பிலே நாம் இருக்கிறோம். இதற்கு உதாரணமாக வீட்டையே எடுத்துக் கொள்ளலாம்.

சந்தர்ப்பம்!
குழந்தை, கிளுகிளுப்பையை வீட்டின் ஓட்டின் மேல் வீசியெறிந்து விட்டால் தந்தை அதை எடுக்க முயற்சித்து முடியாவிட்டால் குழந்தையின் முதுகிலே இரண்டு போட்டு குரங்கே ஏன் அங்கே போட்டாய் என்று கோபிப்பான். வீசியெறிந்த கிளுகிளுப்பையை எடுக்க முடியாதத் தன்மையின் விளைவாகத்தான் குழந்தையை ‘குரங்கே ஏன் போட்டாய்’ என்று அடிக்கிறான். குழந்தை வீறிட்டு அழுகிறது; குழந்தை அழுவதை கேட்டு தாய் வெளியே வந்து, ஒரு மூங்கில் குச்சியின் மூலம் அதை மெல்ல, எடுத்து குழந்தையிடம் தருவாள். குழந்தையிடம் கிளுகிளுப்பையைக் கொடுத்துவிட்டு, ‘அதை எடுத்துத்தர வக்கில்லை வழி இல்லை; குழந்தையை மட்டும் அடிக்கத் தெரிகிறது நீ என்ன மனுஷனா?’ என்று கணவனைக் கேட்பாள். இதை பக்கத்து வீட்டுக்காரன் பார்க்காமல் இருந்தால், அந்தக் கணவனுடைய மானம் தங்கும்!

தாய்த் திருநாட்டை மீட்பதற்காக நாம் அறிவாற்றலையும், திறமையையம் பயன்படுத்துகிற போது-கிளுகிளுப்பை எடுக்க உதவிய மூங்கில் குச்சி போன்று நமக்கும் தேவைப்படும். அந்தக் குச்சி கிடைக்க வேண்டுமா? அது எது என்று கேட்கக் கூடும்; அதை நாம் சந்தர்ப்பம் என்று சொல்லுவோம். அந்தச் சந்தர்ப்பம் அந்நிய நாட்டு உதவியாக இருக்கலாம் கிளர்ச்சியாக இருக்கலாம். சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலேயும் எண்ணிக்கை அதிகமாகவதாக இருக்கலாம் பச்சை ரத்தம் சிந்துகின்ற போராட்க்களமாக இருக்கலாம்-சிறைச்சாலையாக இருக்கலாம்! எதுவாக இருந்தாலும் சரி, பொதுவாக சந்தர்ப்பம் என்றே கூறுவோம்.

நாடும் வீடும்!
பல வீடுகள் அடங்கி இருப்பதுதான் நாடு, இன்று வீட்டுக்குள்ள நியாயம்தான் நாட்டுக்கும். ஆகவே வீட்டு உதாரணம் ஒன்றையே மீண்டும் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். வீட்டிலே இருக்கிறபோது தாய்மார்களைக் கேளுங்கள் ‘சமையல் ஆச்சா என்று எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள். அடுக்களையில் இருக்கும்போது அடுப்பைப் பார்த்தால் தெரியும். நாலு விறகை அடுப்பில் வைத்துப் பற்ற வைப்பார்கள். நெருப்புப் பிடித்து ‘தழ தழ’ என்று எரிகிறது. நான்கில் மூன்று விறகுகள் மட்டும் எரிகிறது. ஒரு விறகு மட்டும் எரியவில்லை கருகிக் கொண்டே போகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு விறகு மட்டும் எரியவில்லையே என்பதற்காக கருதிய விறகைக் கையிலே எடுத்து வைத்துக்கொண்டு ‘விறகே! விறகே ஏன் கருகிப்போனாய்’ என்று கூறியா கவலைப்படுவார்கள்? எது நல்ல விறகோ அதை மட்டும் எரிக்க பயன்படுத்திக் கொண்டு கருதிய விறகை அடுப்பிலிருந்து எடுத்து விடுவார்கள்! கருகிய விறகிலிருந்து புகை வருமானால் தண்ணீர் ஊற்றி அணைத்து விடுவார்கள். பின்பு, பார்த்து வாங்கி வரக்கூடாதா என்று கணவனைக் கோபிப்பார்கள். அதைப்போல் இப்போது நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் அன்று காய்ந்த விறகுபோல் தெரிந்தார்கள்; ஆனால் இப்போதுதான் தெரிகிறது. அவர்கள் இத்தனை காலமாக ஈரவிறகாக இருந்தார்கள் என்று. இதை பிரிந்து சென்ற தோழர் சம்பத்துக்காக சொல்லவில்லை. எதிர்காலத்தில் யாருக்கு நடந்தாலும் எந்தக் கட்சியில் நடைபெற்றாலும் கவலை கொள்ளாமல் காரியமாற்ற வேண்டுமென்பதற்காகவே இதனைச் சொல்கிறேன்.

எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்கான பல பாடங்களை முறைகளை நாம் பார்த்து வருகிறோம். ஆகவே நாடு மீட்கும் பணியிலே இருக்கின்ற நமக்கு தளராத நம்பிக்கை இருக்க வேண்டும்.

உரிமைப் போராட்டத்தில் உயிர் கொடுக்கத் தயார்:
இந்தத் தலைமுறையில் எங்கள் வாழ்நாள் இருக்கும் வரை திராவிட நாடு இலட்சியத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் இலட்சியத்திற்காக போராடுகிற போது எங்களை அடித்து நொறுக்கி கீழே சாய்த்து விட்டபிறகு எங்கள் உயிர் பிரிந்த பிறகு வேண்டுமானால், வடநாட்டு ஏகாதிபத்தியவாதிகளிடம் பேரம்பேசிக் கொள்ளட்டும். நாம் இருக்கும்வரை தாய்த் திருநாட்டை மீட்கும் பணி ஓயாது ஒழியாது.

-முதற்பதிப்பு: 1961, வெளியீடு; அண்ணா பதிப்பகம், சென்னை-1