அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உயிரைத் தருவோம் – திராவிடம் பெறுவோம்

என்னுடைய பேச்சுக்குத் தலைமையமைச்சர், நேரு மிகச் சுருக்கமாகவே பதில் சொல்லியிருக்கிறார். நான் கூட நினைத்தேன் – சென்னைக்கு நான் வந்த பிறகு, ‘கழகத்துக்குத் தடை போடப்பட வேண்டும், பிரிவினை பேசுவது சட்ட விரோதம், இராசத் துரோகக் குற்றம்‘ என்றெல்லாம் – அங்கே பேசப்பட்டதை நேரு ஏற்றுக் கொண்டு, ‘பிரிவினை முயற்சியை தடுத்துவிட்டேன்‘ என்று கூறி நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று. ஆனால் அவரோ, அவர்கள் கூறியதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், ‘திராவிட நாடு கோரிக்கை அர்த்தமற்றது, ஆதாரமற்றது‘ என்று தான் சொல்லியிருக்கிறார். “இதற்கு என்ன ஆதாரமற்றது‘ என்று தான் சொல்லிவிட்டால், அவர் பிரிவினைக்கு ஒத்துக் கொள்ளக்கூடும்“ என்றுநினைக்கிறேன். அவர் மிக உயரத்தில் இருப்பவர் – அவர் இப்படித்தான் பேசுவார்.

அரசியலில் சொல்லித் தெரிந்துக் கொள்வது ஒன்றுமில்லை, எண்ணித்தான் தெரிந்து கொள்ளவேண்டும். ‘எண்ணி‘ என்றால் சிந்தித்து அல்ல – ஒன்று, இரண்டு, மூன்று – என்று ஆளை எண்ணித்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

முழுவலிவை நீங்களும் திரட்டுங்கள்!

“முழுவலியோடு பிரிவினை எதிர்க்கப்படும் – என்று கூறியிருக்கிறார் நேரு. எதை எதிர்க்க வேண்டும் என்றாலும் முழுவலியோடு தான் எதிர்க்க வேண்டும். தவிர, அரை வலிவு – முக்கால் வலிவு என்று கூறி எதிர்ப்பதில்லை. அவர்கள் முழு வலிமையோடு எதிர்க்கப் போவதாகக் கூறும்போது, அவர்கள் திரட்டும் முழுவலிமையும் நீங்கள் திரட்டித்தரும் வலிவையும் பார்க்க வேண்டும், அந்த வகையிலே நீங்களெல்லாம் பணியாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்“ என்று அண்ணா அவர்கள், சென்னை மாநகராட்சித் தேர்தல் நிதிக்காகச் சென்னை தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சுட்டிக்காட்டி வேண்டுகோள் விடுத்தார்.

அவர் ஆற்றிய உரையில் மேலும் குறிப்பிட்டதாவது –

“முதலில் பிரிவினை பேசுவது – பிறகு பேரம் பேசுவது – பின்னர்க் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு ஓடுவது என்பது அரசியல் நாணயமல்ல. அப்படிப்பட்ட யாராவது – இலாபத்தைத் தேடுபவர்கள் – பெற்றுக் கொள்ளட்டும். நம் வாழ் நாள் முழுவதும் இக்கொள்கையை அரசினர் ஏற்றுக் கொள்கிறவரை – அல்லது அதை ஏற்றுக் கொண்டிருப்பதால் நாம் அழிக்கப்படுகிறவரை நாம் அதையே தான் பேசிக் கொண்டிருப்போம்.

அரசியலில் நயவஞ்சகம் ஒரு துளியும் தலைகாட்டக் கூடாது உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பவர்தான் நல்லவர்.

அவர்களுக்கு நன்றி!

“நாம் மூட்டிவிட்ட தேசியத் தீ உயிர்ப் பிரச்சினையாகி விட்டது! நம்முடைய பிரச்சினை, இங்கு !தமிழ் நாட்டில்) உள்ள அமைச்சர்களைவிட்டு டெல்லிக்குப் போய்விட்டது. இந்த இலாகா இப்போது இவர்கள் கையில்இல்லை. “மாநகராட்சி தேர்தலுக்காகச் சேரிக்குள் புகுந்து, ஓட்டுச் சேகரிப்பது பணக்காரர்களைத் தேடிப்பிடித்துப் போட்டியிடச் செய்வது ஆகிய பணிகள்தான் இப்போது இந்த அமைச்சர்களிடம் உள்ளன“. இராஜ்யசபையில், ‘எங்கள் இன்னுயிரைக் கொடுத்தேனும் பிரிவினையைத் தடுப்போம்‘ என்று பலர் பேசினார்கள், அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆம் நண்பர்களே, ஆம்! உயிர் கொடுக்கும் பிரச்சினைதான், நாட்டைப் பிரிக்க வேண்டுமானாலும், உயிர் கொடுக்கவேண்டும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானாலும் உயிரைக் கொடுத்தால் தான் முடியும் – என்ற நிலை பிறந்துள்ளது.

“உயிர் கொடுப்பது என்றால் எப்படி? எங்கள் உயிரை எப்படிப் பறிக்கப் போகிறீர்கள்? கொலை ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகிறீர்களா? அடக்குமுறை வீசி தூக்குமேடைக்கு அனுப்பப் போகிறீர்களா? உங்கள் உயிரை எப்படிக் கொடுக்கப் போகிறீர்கள்? இதையெல்லாம் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்“.

அண்ணா அவர்கள் தமது டெல்லி அனுபவம் குறித்துப் பேசுகையில் பல சுவையான செய்திகளை வெளியிட்டார்.

ஆதரிக்க ஒரு ஆள் உண்டா?

“ஒரு காலத்தில் ஒதுக்கித்தள்ளப்பட்ட – அலட்சியம் செய்யப்பட்ட திராவிட நாடு இலட்சியம் இன்று, அடக்கத்திற்குப் பேர்போன – அறிவாற்றல் மிக்க – ‘இராசதந்திரி‘கள் நிறைந்த இராஜ்ய சபையில் முழக்கப்பட்டுவிட்டது. என் வாழ்நாளில் இதைப்போல் வேறு எப்போதும் பெருமைப்பட்டதில்லை.“

நான் அந்தச் சபையில், Belong to Dravidian Stock என்று சொன்னபோது என்னையும் அறியாமல் என் உடம்பில் புல்லரித்தது. அங்கு என் கருத்தை ஏற்காதவர்கள் 260 பேர் இருந்தார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் நான் பேசிவிட்டு வெளியில் வருவதற்குள், என்னை ஒழித்திருக்க முடியும். நான் டெல்லி விமான நிலையத்திற்கு வருமுன், நமது கழகத்தைச் சட்ட விரோதமாக்கி விட்டு, என்னைப் பிடித்துச் சென்று சிறையிலடைத்திருக்கலாம். நான் பேசியதை ஆதரிக்க அங்கு ஒரு ஆள் உண்டா?

இதைக் கொண்டு, வலிமையைம் தெரிந்து கொள்ளுங்கள் பலகீனத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நான்கு பக்கமும் பீரங்கிக் கப்பல்கள்!

“கடலின் நடுத் தீவில் சிக்கித் தத்தளிப்பவர்கள், கையைக் காட்டிக் கப்பலை நிறுத்த முடியாது என்பதால், செடி கொடிகளைக் கொளுத்திப் புகையைக் கிளப்பி, அதைக் கப்பல் உள்ள பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டு கூச்சலிடுவார்கள்“ என்று படித்திருக்கிறேன்.

அதைப் போல நான், இராஜ்யசபையில் – தீவில் இருந்து கொண்டு கூச்சலிடுவதைப் போல் – பேசினேன். உதவிக்கு அழைத்தால் நான்கு பக்கமும் நான்கு கப்பல்கள் பீரங்கியுடன் வந்த நிற்பது போல் – ஒரு பக்கம் பூபேஷ்குப்தாவும், மற்ற பக்கங்களில் மற்றக் கட்சிக்காரர்களும் என் கருத்தைக் கண்டித்தும் பேசினார்கள்.

நான் என்ன அவ்வளவு பைத்தியக்காரனா? விவரம் புரியாதவனா? ஒரு அண்ணன் தம்பி பாகப் பிரிவினை என்றாலே – வழக்கு உயர் நீதி மன்றம் வரை போக வேண்டியிருக்கிறது என்றால், நான் 35 நிமிடம் இராஜ்ய சபையில் பேசினால் திராவிடநாடு வந்து விடும் என்று சொல்லிவிட முடியுமா?

கோரிக்கை நிராகரிப்பு!

“இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், நான் சென்னை வந்ததும் ஒரு பத்திரிகையில் பார்த்தேன் – ‘அண்ணாதுரை கோரிக்கை நிராகரிப்பு‘ என்று தலைப்புப் போட்டிருந்ததை! கோரிக்கை உடனே நிறைவேறிவிடும் என்று நான் எதிர்பார்த்தது போலவும்- அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டு போலவும் – அந்தத் தமிழ்ப் பத்திரிகை எழுதியிருந்தது. அந்தப் பத்திரிக்கை ஒரு வகையில் நமக்கு உதவியிருப்பதாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது கோரிக்கை இராஜ்யசபைக்குப் போய்விட்டது என்பதை இதன் மூலம் அப்பத்திரிக்கை உலகுக்குத் தெரிவித்திருக்கிறது.

“இதுவரை ஆத்தூரிலும், ஆலங்காயத்திலும் காட்பாடியிலும் காஞ்சிபுரத்திலும், சட்டமன்றத்திலும் பேசப்பட்ட பரிச்சினை இப்போது இராஜ்யசபையில் பேசப்படுகிறது.“

ஒன்றுக்கு மூன்றுமுறை வட்டமேசை மாநாடு கூடிப் பேசியும் சுயராஜ்யக் கோரிக்கையை நிராகரித்தனர், அதைப்போல்தான் நமது கோரிக்கையும் இப்போது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

பிரியவிட மாட்டோம்!

அந்தப் பத்திரிகை, ‘திராவிடநாடு கோரிக்கை‘ என்று கூடப் போடாமல் ‘அண்ணாதுரை கோரிக்கை‘ என்று போட்டு, எனக்கும் – திராவிடநாடு இலட்சியத்திற்கும் அவ்வளவு நெரக்கமான தொடர்பு இருப்பதைக் காட்டியிருக்கிறது, அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நம் கோரிக்கை உடனடியாக நிறைவேறிவிடும் என்ற நோக்கத்தில் நாம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நமது இலட்சியத்தை அங்கு எதிர்த்துப் போசியவர்களெல்லாம், ‘பிரிந்தால் இன்ன ஆபத்து ஏற்படும்‘ என்று விளக்கவில்லை. ‘எங்களிடம் அதிகாரம் இருக்கிறது, பிரியவிட மாட்டோம்‘ என்ற தோரணையில் தான் பேசியிருக்கிறார்கள்.

“எந்த விடுதலை இயக்கமும் முதலில் அலட்சியப்படுத்தப்படும், பிறகு அதிகாரத்துடன் பேசப்படும், அடுத்து அடக்குமுறை வீசப்படும், கடைசியாகத்தான் சமரசப் பேச்சுக்கு அழைக்கப்படும். அந்தக் கட்டங்களை ஒன்றொன்றாக நாம், கடந்து வருகிறோம்.“

மறுத்துரைக்கத் திறனுண்டா?

மாநிலங்கள் அவைக்குத் தலைமை வகித்த டாக்டர் இராதாகிருஷ்ணனை நோக்கி நான் கூறினேன். ‘தலைவர் அவர்களே, தாங்களே, இந்தியா ஒரு நாடு என்பதற்கு ஒர காரணம் காட்டியிருக்கிறீர்கள் – ‘கன்னியாகுமரியிலிருந்து இமாலயம் வரையிலும் இராமனையும், கிருஷ்ணனையும் தொழுகிறார்கள் என்று கூறினீர்கள். ஆனால், ஏசுநாதரை ஐரோப்பா முழுவதும் தொழுகிறார்கள். என்றாலும, அங்கே பல தேசிய நாடுகள் இருக்கின்றனவே?‘ என்று எனக்குப் பதிலளித்து அங்குப் பேசிய தோழர்கள் யாரும் அதைப்பற்றி மறுத்துரைக்கவோ, பதிலளிக்கவோ முன்வரவில்லை.

“வழிப்பறிக் கொள்ளைக்காரன் வேறு நியாயம் எதுவும் போசாமல் வலிவைக் காட்டுவது போலவே இவர்களும் வலிமையைக் காட்டியே பேசியிருக்கிறார்கள்.“

“அடியோடு என்னையும் என் கழகத்தையும் அழித்தொழித்து விட்டாலும், நான் பேசிய கருத்துக்களை – இட்ட கையெழுத்தை அழித்திட இனி இவர்களாலே முடியுமா?“

ஆளை அகற்றலாம், எண்ணம் அகலாது!

அண்ணாதுரை என்றொருவர் மாநிலங்கள் அவைக்கு வந்தார், பிரிவினைக் கருததுக்களைப் பேசினார் என்ற வரலாற்று ஆதாரத்தை இவர்களாலே அழிக்க முடியுமா?

‘ஆளை அகற்றுவதைப் போல் எண்ணத்தை அகற்றுவது என்பது இயலாத காரியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள்.“

“பிரபலமான காங்கிரசுத் தலைவர் ஒருவர் என் காதருகில் வந்து சொன்னார். ‘விட்டு விடாதீர்கள் இந்தப் பிரச்சினையை, கடைசியில் பார்த்துக் கொள்வோம் திராவிட நாட்டை’ என்றார். நம்ப வைத்து ஏமாறுக்கும் பழக்கம் நமக்கில்லை.“

“பிரிவினைஎன்றால் பிரிவினைதான்! பிரிவினை போல் பேசுவது – பேரம் பேசி கிடைத்ததை வாங்கிக் கொண்டு ஓடுவது வஞ்சகமில்லை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பழக்கமுமில்லை!“

(நம்நாடு - 4-5-1962)