இந்த நாட்டு மக்களுக்கு நல்லதோர்
வாழ்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகத்தான் தி.மு.கழகம் பணியாற்றி
வருகிறது, எல்லாப் பிற்பட்ட வகுப்பு மக்களின் பிரதிநிதியாகவும்
விளங்குகிறது!
இந்த நாட்டு மக்களின் வாழ்வு
எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை எண்ணிப் பார்த்துத்
திராவிட நாடு திராவிடர்க்கானாலன்றி வாழ்வு கிடைக்காது என்ற
உண்மையை மக்களுக்கு விளக்கி வருகிறது,
பந்தல் அமைக்க தென்னை ஓலை
வேண்டும், இது கீற்றாக முடையப்பட வேண்டும், மூங்கில் வேண்டும்,
கட்டுவதற்கு நார் வேண்டும், உயர ஏற ஏணி வேண்டும், பந்தலை
அமைக்கும் திறம் வேண்டும் இத்தனைக்கும் மேலாகப் பந்தல் போட
– சொந்த இடமும் வேண்டும்,
திராவிட நாடு காண்பது என்பதும்,
அத்தகையது போன்றதே! சமுதாயம் அறிவுத் தெளிவு பெற வேண்டும்,
அறிவு பெற்ற சமுதாயம் நல்ல பொருளாதாரத் திட்டத்தைப் பெற்றிருக்க
வேண்டும், அந்தத் திட்டங்களை நிறைவேற்றி மக்கள் வாழ்வு பெற
அரசியல் அதிகாரம் வேண்டும். இதுதான் திராவிட நாடு திராவிடருக்காக
வேண்டும் எனும் தி.மு.கழக லட்சிய விளக்கம்!
வாழ முடியவில்லையே
உலகத்தில் உள்ள வேறெல்லா மக்களையும்
விட தென்னாட்டவராகிய நாம்தான் – அதிகமாக உழைக்கிறோம், என்றாலும்
நமக்கு மூன்று வேளை உண்ணப் போதுமான உணவு கிடைப்பதில்லை,
உடுத்துவதற்குத் தேவையான உடை கிடைக்கவில்லை, ஒதுங்குவதற்குக்
குடிசை இல்லை, ஏன் இந்த நிலைமை?
இந்தக் கேள்வியைத்தான் தி.முகழகம்
நாட்டு மக்களைப் பார்த்துக் கேட்கிறது! திருநீறு பூசியவர்களையும்,
திருநாமம் இடுபவர்களையும் கேட்கிறது! கதர்ச் சட்டைக்காரர்களையும்,
கம்யூனிஸ்டு நண்பர்களையும் கேட்கிறது! உழைப்பாளர் கட்சியையும்
ஊராளும் ஆட்சியாளர்களையும் கேட்கறிது!
இந்த நாட்டு மக்கள் உடல் தேய
உழைக்கிறார்கள், என்றாலும் வாழ முடிவதில்லை, ஏன்?
எல்லா வசதிகள் இருந்தும்...
அவன் ஏன் பட்டினி? – என்றால்,
அவன் உழைக்காத சோம்பேறி, அதனால்தான் பட்டினி – என்றால்,
அதில் அர்த்தமுண்டு! நிலம் ஏன் விளையவில்லை? – என்றால்,
அது ஒரே களர் நிலம், அதனால்தான் – என்றால், அதில் பொருள்
உண்டு! ஆனால், உழைத்து உடல் கருத்துப்போன மக்களால் வாழ முடியவில்லை
என்றால் – ஏன்?
அதோ தெரியும் கோவில்களும்,
கோபுரங்களும், திருக்குளங்களும் உழைத்ததின் – பலன்! செங்கோட்டை
இந்த நாட்டு மக்கள் உழைத்து அமைந்தது!
இப்படி எப்பொழுதும் உழைத்துக்கொண்டே
இருப்பவர்கள் வாழ முடியவில்லை என்றால், அதற்குக் காரணம்
என்ன?
சாப்பாடு முன்னே இருக்கிறது?
சாப்பிட முடியவில்லை யென்றால், என்ன பொருள்? அவனைச் சாப்பிடவிடாது
அவன் கண், கருப்புத் துணியால் கட்டப்பட்டு, கைகளும் கயிற்றால்
பின்பக்கம் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்! அந்த உணவை உண்ண
விடாது வெறிநாய் உறுமிக் கொண்டிருக்க வேண்டும் – இல்லையா?
வெறி நாய்கள் திருடுகின்றன!
அதைப்போலவே உழைக்கிறோம், ஆனால்,
உழைப்பின் பலனை அனுபவிக்க முடியாதவர்களாயிருக்கிறோம்! எமது
உழைப்பை அனுபவிக்க விடாமல் யாரோ சில வெறிநாய்கள் உன் உழைப்பைத்
திருடிக் கொண்டிருக்கின்றன என்பதுதானே பொருள்?
அப்படி இந்த நாட்டு மக்களின்
உழைப்பை மதத் துறையில் உள்ள வெறிநாய்களும், பொருளாதாரத்
துறையில் டாட்டா, டால்மியாக்களும் திருடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான், தி.மு.கழகம் இந்த
நாட்டு மக்களின் உழைப்பைத் திருடும் வெறி நாய்களை அடித்துத்
துரத்த வேண்டும் என்கிறது. அந்த வெறி நாய்கள் எந்த உருவில்
வந்தாலும் – டாட்டா டால்மியா உருவில் வந்தாலும் அழகப்ப செட்டியார்
– அன்னபூர்ண முதலியார் உருவில் வந்தாலும் – ஒழிக்கப்பட்டாக
வேண்டும் எனக் கூறுகிறது!
இவ்வாறு திருவெண்ணெய்நல்லூர்
தி.மு.கழக முதலாண்டு விழாவில் சொற்பொழிவாற்றுகையில் தி.மு.கழகப்
பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள், நம் உழைப்பு யார் யாரால்
எந்தெந்த வகையில் சுரண்டப்படுகின்றது என்பதையும், இந்த நாட்டு
வளங்கள் எத்தனை என்பதையும் கூறி, அத்தனை வளங்களிருந்தும்
நாம் வாழ முடியாதவர்களாயிருப்பதின் காரணங்களையும் பற்றி
விவரங்களுடன் விளக்கிப் பேசினார்கள்.
விடுதலைப் போரில் பங்கு பெறுக
திராவிட நாடு திராவிடருக்காக
வேண்டுமென்னும் உயரிய லட்சியம் இந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்கான
ஒரே திட்டமாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுவிட்டு,
அந்த லட்சியம் ஈடேற வலி மிகுந்த போராட்டங்களில் கலந்து கொள்ள
உயிரையும் கிரணமாக மதி்துள்ள இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள்
என்பதை எடுத்துக்காட்டி, அந்த விடுதலைப் போரில் பங்குபெற
பலரும் வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
(நம்நாடு - 30-8-1954)