அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உழைப்பு வீண்போகவில்லை

“நம் கூட்டங்களுக்குச் சிறுகடை வைத்திருப்பவர்கள் வருகிறார்கள் – ஏன் வருகிறார்கள்? ‘நம்முடைய சீரழிவைப் போக்க இந்தக் கட்சியால்தான் முடியும்‘ என்று எண்ணுவதாலேயே வருகிறார்கள்“.

“நம் கூட்டங்களுக்குக் கல் உடைப்பவர் முதல் கட்டை உடைப்பவர் ஈறாக அனைவரும் வருகிறார்கள். ஏன் வருகிறார்கள்? அவர்களுடைய கஷ்ட நஷ்டத்தைப் போக்க இந்தக் கட்சியால்தான் முடியும் என்பதுதான் காரணம்“.

“நம்முடைய கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான தாய்மார்கள், சிற்றூர் ஆனாலும் கூடுகிறார்கள். அதனால் நான் , என் பேச்ச நடையை எளிமையாக்கி, அவர்களுக்கு எந்த முறையில் சொன்னால் புரியும் என்று தெரிந்து அந்த முறையில் பிரச்சினைகளை விளக்கிப் பேசுகிறேன். அவர்கள் ‘ஆமாம்‘ என்று தலையாட்டும்வரை நான் விடுவதில்லை. இத்தகைய உழைப்பு வீண்போகுமென்றா கருதுகிறீர்கள்? ஒருக்காலும் வீண் போகாது“.

பெருவாரியான வெற்றி

“எனவேதான் நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் – பல இடங்களில் போய்ப் பார்த்து உணர்ந்துவிட்டுச் சொல்கிறேன்-தேர்தலில் பல இடங்களில் எதிர்பாராமல் ஏமாற்றமடைய இருக்கிறார்கள், காங்கிரசுக்காரர்கள். இன்றைய நிலை, நமக்கு நல்ல சூழலைத் தேடித் தந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையை நாம் பயன்படுத்திக் கொண்டால் பெருவாரியான வெற்றிகனை நாம் அடையலாம் என்று அண்ணா அவர்கள் 29.10.61 இல் திருவொற்றியூரில் நடைபெற்ற தேர்தல் நிதிச் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெள்ளத் தெளிவாக விளக்கினார்.

பணத்திற்குள்ள மதிப்பு தேய்ந்து பண்புக்கு மதிப்பு வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். தேர்தலின்போது, காங்கிரசார் கையாளுவதிலுள்ள சூட்சமத்தை உணர்ந்து, வெற்றிக்கு வழிகோலுமாறு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

“திருவொற்றியூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, ஒரு பெருந்தொகையைத் தேர்தல் நிதியாக அளித்து, செங்கற்பட்டு மாவட்டப் பங்கின் குறைவினை நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ள இந்தச் சிறப்புக் கூட்டத்தில் என்னையும் பேச அழைத்தமைக்குத் தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் என்ற முறையில் நன்றி கூறிக் கொள்கிறேன்.“.

முயன்றால் முடியாததல்ல

தொழிலாளர் பெரும் அளவில் நிறைந்திருக்கின்ற இந்தப் பகுதியில் ஜனவரித் திங்களில், தொழிலாளர் அணி வகுப்பு ஒன்றினை நடத்தி அதுபோது என்னிடம் ரூ.5000 தேர்தல் நிதி அளிக்கப்போவதாக இவ்வட்டச் செயலாளர் குறிப்பிட்டார். “இதுமட்டுமல்ல் அண்ணா இன்னும் நிறையப் பின்னால் தருகிறோம்“ என்று ஆசை காட்டினால் நான் நன்றாக அதிகமாகப் பேசுவேன் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக்கூடும் என்றாலும், அந்த ஏற்பாடு முயன்றால் முடியாததல்ல. தொடர்ந்து முயன்று மாவட்டப் பங்கினை விரைவில் முடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே சிறப்புக் கூட்டம் மூலமாகவும், உண்டியல் மூலமாகவும், தனிப்பட்டவர்கள் தரப்பட்ட சிறுசிறு பணமுடிப்புக்கள் மூலமாகவும் தேர்தல் நிதி தரப்பட்டமைக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு நம்மிடையே தொண்டாற்றி வரும் தோழர் டி.சண்முகம் அவர்கள், ரூ.2000 தேர்தல் நிதி தந்து நல்லதோர் முயற்சியில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி தேர்தலைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளைச் சொன்னார். நான் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிகமாகச் செல்லவில்லை என்றாலும், மற்ற மற்ற மாவட்டங்களை நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் – மற்றக் கட்சிகளைவிட நமக்குத் தேர்தல் நிலைமைகள் மிகப் பளபளப்பாக இருக்கின்றன. நான் சொன்னதில் உள்ள வாசகத்தைப் கூர்ந்து கவனித்தால்தான் நன்றாகப் பொருள் விளங்கும்.

கார்மேகம் போல் காங்கிரசு

வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மிகப் பளபளப்பாக இருக்கின்றன. ஆனால், கருமேகங்கள் அந்தப் பளபளப்பை மறைத்து விடுகின்றன. ஆனால் நட்சத்திரங்கள் அழிவதில்லை.

அதைப்போல, காங்கிரசு கயமைத்தனம் என்னும் கருமேகம், நம்முடைய தேர்தல், நிலைமையை மறைத்திருக்கிறது. எப்படிக் கருமேகம் நட்சத்திரத்தைத் அழிக்க முடியாமல், முதலில் அதை மறைத்துப்பின்னால் தானே அழிவதுபோல் காங்கிரசு தானே அழிந்துவிடும்.

மறந்துவிட்டனரே!

சென்ற தேர்தல் – அதாவது, 1957இல் நடைபெற்றதேர்தலில் நாட்டு மக்களின் மனநிலையை அறிந்தவர்கள் இப்படி ஆட்டம் போடமாட்டார்கள்! ஆனால் இந்தக் காங்கிரசார் மக்கள் கற்பித்த பாடத்தை மறந்து வீண் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். சென்ற தேர்தலில் காங்கிரசுக் கட்சிக்குக் கிடைத்த ஓட்டுக்களையும், அதை எதிர்த்து நின்ற மற்றக் கட்சிகளுக்குக் கிடைத்த ஓட்டுக்களையும் பார்க்கின்றவர்கள் கருத்துக் குருடர்களாக இல்லாமல் இருந்தால், காங்கிரசு நாட்டு மக்களிடையே எப்படி செல்வாக்கை இழந்து வருகிறது என்பதை நன்றாக உணருவார்கள்.

நமக்கு ஒட்டர் யார் – மற்றவர் யார் – என்று வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் ஒரு காங்கிரசுக்காரரைத் திருவொற்றியூர் மேலண்டைமாடவீதியில் எத்தனை ஓட்டுக்கள்? என்று கேட்டால் மொத்தம் நூறு ஓட்டுக்கள்! அதில் சூளையிலே பத்து ஓட்டு இருக்கிறது. 5 ஓட்டு எண்ணூரில் இருக்கிறது! செத்துப் போன ஓட்டு பத்து. அதற்கு வெளியூரில் இருந்து ஆட்களைக் கொண்டுவர வேண்டும்! இதில் பத்து ஓட்டு நோட்டக்கு வரும், பத்து ஓட்டு காங்கிரசுக்கு வரும். பதினைந்து ஓட்டு தி.மு.க.விற்குப் போகும். ஐந்து ஓட்டு கம்யூனிஸ்டுக்குப் போகும்‘ என்று இப்படி ‘ஜனநாயத்தில் தேர்தல் முறைக்கு வேண்டிய அத்தனையும்‘ தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நாமோ ஒரு வீட்டில் குடியிருந்தால் முன்கட்டில் இருப்பவரைப் பின்கட்டுக்காரர் அறியார்! பின்கட்டில் இருப்பவரை முன் கட்டுக்காரர் ்அறியார். இந்தச் சூசகத்தை உணர்ந்து கொண்டால் நிச்சயமாக வெற்றி நம்மை நாடிவரும்! தேடி வரும்!

பீதிகொள்ளத் தேவையில்லை!

‘காங்கிரசுக்கு ஏராளமான பணம் இருக்கிறது! எனவே, வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும்‘ என்று பயம் ஊட்டும் வகையில் பேசுகிறீர்கள்! ஆனால் பணத்தைக் கொண்டு மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது.

வீட்டில், அழகு குறைந்த பெண்ணாக இருந்தால் சீர்வரிசை அதிகமாகத் தரவேண்டியிருக்கும். காங்கிரசு என்ற அவலட்சணமான பெண்ணுக்கு மூக்கும் முழியும்போய் நோக்கும் போக்கும் குலைந்திருப்பதால், தேர்தலுக்கு அதிகப் பணம் செலவிட வேண்டியிருக்கிது. மூக்கும் முழியும் அழகுடைய பெண்ணுக்கு ஆபரணங்கள். ஆடைகள் கூட அதிகம் தேவையில்லை. சீர்வரிசை நிறைச் செய்ய வேண்டுவதில்லை! ‘இந்தப் பெண் கிடைக்காதா?‘ என்று ஆயிரம் மாப்பிள்ளைகள் ‘கியூ‘ வரிசையில் காத்துக்கிடப்பார்கள். அதைப்போல் தி.மு.க என்ற பருவமங்கை மூக்கும் முழியுமாக நல்ல பண்போடும், அடக்க உணர்ச்சியோடும் அரசியல் இலக்கணத்தோடும் இருப்பதால், இவர்களை எப்படியும் சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் பெருவாரியாக அனுப்பவேண்டும்‘ என்று காலம் நோக்கி மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

எனவே, “பணம் காங்கிரசிடம் இருக்கிறது“ என்று மக்கள் மத்தியில் கூறி வீண் பீதியைக் கிளப்பாதீர்கள். பணம் நமக்கு எதற்குத் தேவை? சிறுசிறு துண்டு அறிக்கைகள் வெளியிடுவதற்குத்தான். அதற்குப் பளபளப்பான காகிதத்தில் தான் அச்சிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணக் காகிதத்தில் அச்சிடாலம். போஸ்டர்கள் அச்சிடவேண்டும் என்ற அவசியமுமில்லை. இங்குக் குழுமியுள்ள நீங்கள் அனைவரும் ஆளுக்கு நூறு ‘போஸ்டர்‘ எழுத முடியாதா? அச்சடிக்கத்தான் வேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது? உங்கள் சுவரிலேயே நீங்கள் எழுதக் கூடாதா?

சொல்லியா தெரியவேண்டும்?

பணக்கார வீட்டுப்பெண் தானே எல்லாப் பொருள்களையும் சேர்த்துக் குழம்பு வைத்துக் தாளித்தாலும். வாசனை இருப்பதில்லை. ஆனால் பக்கத்து வீட்டு ஏழைப் பெண்ணிடம் குழம்புக்கு வேண்டிய ஓரிரண்டு பொருள்கள் குறைந்தாலும் அவள் தாளிக்கும் தாளிப்பு, பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண்ணையும் அந்தக் குழம்பிலே கொஞ்சம் பங்கு கேட்கச் சொல்லுகிறது. பணக்காரப் பெண் ஏழைப் பெண்ணைப் பார்த்து ‘நான் உயர்ந்த ரகப் பெருங்காயம் கூடப் போட்டேன்‘ அப்பொழுதும் வாசனையில்லை. ஆனால் நீ பெருங்காயமே போடவில்லையே, தாளிப்பு மூன்றாம் வீட்டுக்காரரின் மூக்கையும் துளைக்கிறதே எப்படி?“ என்று கேட்பாள்.

ஏழைப்பெண் தாளிப்பு வாசனை தருவதன் காரணம் நல்ல கைப்பாகம்தான். அதைப்போல், உங்களுக்குத் தேர்தல் கைப்பாகம் தெரிந்துவிட்டால், காங்கிரசு மண்டியிட்டுவிடும் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

காங்கிரசுக்காரர்கட்குப் பணம் சேருகிறது – அதை மறுப்பாரில்லை. ஆனால், ‘சேரட்டும்‘ அவர்கள் நம்மிடம் வரட்டும், வரட்டும் என்று எண்ணிப் பல்லிளித்துப் பலன் பெறுபவர்கள் இந்நாட்டில் ஏராளமாகக் காத்துக்கிடக்கிறார்கள். எனவே, அவர்கள் சேர்க்கும் பணம் அத்தனையும் ஓட்டர்களுக்க நேரடியாகச் செல்லும் என்று சொல்லிவிட முடியாது இடையிலே எத்தனையோ தரகர்கள்! ஏஜெண்டுகள்.

வேறுபாடு தெரியும்

தை மாதம் பொங்கல் வரும் அதற்கு முன் மாதமாகிய மார்கழியில் மெழுகிக் கோலமிட்டுத் தோட்டத்தில் உள்ள சாணத்தை உருண்டையாக்கி, அந்த உருண்டையை வீட்டின் முன் வைத்து, தோட்டத்தில் இருக்கும் கை அகலமான பூசணிப் பூவைச் சாண உருண்டையிலே செருகி வைப்பார்கள். ஆனால் திருவொற்றியூரில் கோயிலிலுள்ள மகிழம் மரத்திலிருந்து பூக்கல் உதிரும்! அவைகள் பூசணிப் பூவைப் போல் பெரியதாக இராமல் இரு விரல்களுக்கிடையில் மட்டும் பிடிப்பதற்குரிய அளவில் சிறியதாக இருக்கும்! நல்ல வாசனையும் தரும். அதை மாலை கட்டிக் கொண்டையிலே வைக்கிறோம்! பூசணிப் பூவை சாண உருண்டையிலே வைக்கியோம்.

பெரிய கட்சியான காங்கிரசைப் பூசணி பூவிற்கும் சிறிய கட்சினாய தி.மு.க.வை மகிழம் பூவிற்கும் ஒப்பிட்டால் வேறுபாடு தெரியும்.

கழகத் தோழர்களின் கடமை!

நான் 100 சுவரொட்டிகளைத் தயாரித்துத் திருவொற்றியூர் வட்டச் செயலாளருக்கு அனுப்பினால் சினிமா சுவரொட்டிக்கு நடுவில் ஒதை ஓட்டாமல் எந்த இடத்தில் ஒட்டினால் மக்கள் கண்களுக்கு எளிதில் படும் என்பதையும் உணர்ந்து, இரண்டனா, கொடுத்து மாவு வாங்கிப் பசை காய்ச்சி எடுத்துக் கொண்டு, பக்கத்து வீட்டில் ஏணியை இரவல் வாங்கிக் கொண்டு, நான்கு கழகத் தோழர்களை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் ஒட்டுவார். பொழுது விடிந்து மக்கள் பார்த்து அதிசயப்படுவார்கள்.

அதைப்போல், காங்கிரசு மேலிடத்திலிருந்து திருவொற்றியூர் மண்டலக் காங்கிரசுக்கு 100 சுவரொட்டிகளை அனுப்பிச் ஒட்டச் சொன்னால், உடனே அந்தச் செயலாளர், காங்கிரசு மேலிடத்திற்குக் கடிதம் எழுதுவார். ‘ஐயா நீங்கள் 100 சுவரொட்டிகள் அனுப்பியிருந்தீர்கள். இதை ஒட்டுவதற்குப் பசை வேண்டு்ம்! ஏணி வேண்டும்! இதை ஒட்ட ஆட்களாவது வேண்டும். இப்பொழுது இருக்கும் விலைவாசியில் எங்கே ஆட்கள் அகப்படுகிறார்கள்? ஆள் ஒன்றுக்குக் கூலி இரண்டு ரூபாயாவது தந்தாக வேண்டும்! எனவே சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு ரூ.50 அனுப்பினால் வேலையை ஆரம்பிக்கிறேன்‘ என்று எழுதுவார்.

கல்வி அமைச்சருக்குக் காலம் போதாதே!

153 என்ற சட்டத்தை, பாம்பு போலப் போட்ட சுவரொட்டிகள். இந்த நகரை அலங்கரித்திருக்கின்றன. இதைப் பார்த்துப் பொறாமைப்படுகின்ற எனது நிதியமைச்சர் சுப்பிரமணியம் அந்த ஒரு சுவரொட்டிக்கு மட்டும் தனது பேச்சில் 15 நிமிடம் ஒதுக்குகிறார். இந்த ஒரு சுவரொட்டிக்கே 15 நிமிடம் ஒதுக்குகிறார் என்றால், வர இருக்கின்ற தேர்தலுக்காக நாம் போடப் போகின்ற சுவரொட்டிகளைக் கணக்கெடுக்கவே கல்வியமைச்சரின் காலமெல்லாம் போதாதே!

பணத்தினாலேதான் தேர்தலில் வெற்றிபெற முடியுமென்றால், நீதிக்கட்சி தேர்தலில் தோற்றிருக்க நியாயமில்லையே! பொப்பிலியும் போடி நாயக்கனூரும் ஏன் தோற்றுவிட்டன? பணமா இல்லை அவர்களிடம்! தேர்தலில் பணத்துக்கு மதிப்பு ஒரு கட்டத்தில் குறையும், அந்தக் கட்டத்தில், பணம் தேர்தலை ஒன்றும் செய்துவிடாது. நமக்குக் தேர்தல் தோல்வி ஏற்பட்டால் அது திறமைக் குறைவே தவிர, பணக்குறைவு அல்ல!

ஒரு ஊருக்குப் போக வேண்டுமானால், அந்த ஊருக்கு வழி தெரிந்தவரை ‘அந்த ஊரை அடைய வழி என்ன?‘ என்று கேட்கிறோம். அவர் வழி கூறுகிறார் – ‘நேரே போனால் ஒரு நீராழி மண்டபம்! அடுத்தத் தாமரைத் தடாகம். சவுக்குத் தோட்டம் இருக்கும்! அதையும் கடந்து சென்றால் கமுகுத் தோட்டமிருக்கும்) அதையும் தாண்டித் சென்றால் வாழைத்தோட்டம் இருக்கும். அதைவிட்டுச் சிறிது தொலைவு சென்றால் ஒரு மணிமண்டபம் இருக்கும்! அதைத் தாண்டினால் அந்த ஊர் வரும்! என்று கூறுவதைப்போல், ஒரு கட்சி வெற்றிப் பாதையை அடைய அடையாளம், கூட்டங்களுக்கு வாலிபர்கள் மட்டுமல்லாத வயோதிகர்களும் வருவது! ஆடவர்கள் மட்டுமல்லாது பெண்களும் வருவது! பெண்கள், தாங்கள் மட்டுமல்லாமல் தங்கள் குழந்தைகளுடன் வருவது! நம் வீட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்கத் தாதிகளையா வைத்திருக்கிறோம்? பாட்டாளிகளும் தொழிலாளர்களும் கூட்டத்திற்கு வருவதும் அதற்கு அடையாளம்தான்.

(நம்நாடு - 4.11.61)