அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வாளாவிருந்துவிட்டால் நாடு பிழைக்காது

“நாட்டு விடுதலை, நமது வாழ்வைவிடப் பெரியது. நம்மில் சிலபேர் இந்நாட்டுக்காகப் போராடிச் செத்தால் இந்நாடு சாகாது. ஆனால் வாழ்வுதான் பெரிதென வாளாவிருந்தால் இந்நாடு பிழைக்காது“ என்று அண்ணா அவர்கள் கடந்த 25.10.61 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்கள்.

“எனக்கு முன் பேசிய நண்பர் சிட்டிபாபு அவர்கள், சென்னை மாநகராட்சியின் மாட்சியைக் குறித்தும், நம் கழகத் தோழரக்ள் ஆற்றும் பணியினைக் குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொன்னபோது நான் மெத்தவும் மகிழ்ச்சியடைந்தேன். நம் கழகத் தோழர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தத் துறையில் நன்றாக உழைத்து மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறார்கள் என்பதை உணரும்போது நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.

சிபாரிசும் முடிவும்

நண்பர்கள் சிவசங்கரன் அவர்கள், ‘அண்ணாதான் என்னைத் துணை மேயர் ஆக்கினார்‘ என்று குறிப்பிட்டார். அண்ணாத்துரை என்ன – அறுபது இலட்சங்களை வாரியிறைத்துவிட்டா அரசியலை நடத்துகிறான்? துணை மேயராக அவர் ஆக்கப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமே அவரைத் துணைமேயராக்கி மகிழ்ந்தது. தி.மு.க. பொறுப்பாளன் என்ற முறையில் அவருடைய பெயரை நான் சிபாரிசு செய்தேன். என் சொல்லைத் தி.மு.கழகம் ஏற்றுக் கொண்டு, அவரைத் துணை மேயராக்கிற்று. அவர் அப்படிச் சொன்ன போது நான் என்ன நினைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அதை நான், சொல்லத் தேவையில்லை.

ஆனால் நன்றியுணர்ச்சியுள்ளவர்களும், இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை எண்ணும்போது நான் ஒருகணம் மெய்மறந்து போனேன். தோழர் சிவசங்கரன் அவர்கள் வரவிருக்கும் மேயர் தேர்தல் குறித்து, ‘நாங்கள் இருக்கிறோம், கவலை வேண்டாம்‘ என எனக்கு நம்பிக்கை யூட்டும் முறையிலே பேசினார். அவர் பேசும்போது, ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த வட்டம் காங்கிரசுக் கோட்டையாக இருந்தது. இப்போது கழகக் கோட்டையாக மாறிவிட்டது‘ என்று குறிப்பிட்டார்.

தவறான எண்ணந்தான் காரணம்

நான் சொல்வதனால் நண்பர் சிவசங்கரன் வருத்தப்படக்கூடாது. கோட்டை என்பது அவ்வளவு எளிதில் மாறக் கூடியதல்ல. அவ்வளவு எளிதில் மாறக்கூடியது கோட்டையும் ஆகாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை நாம் காங்கிரசுக் கோட்டை என்று தவறாக எண்ணிக் கொண்டோமே தவிர, இது காங்கிரசுக் கோட்டையல்ல, நாம் மனத்திலே கட்டுகின்ற மனக்கோட்டை சிலவேளை இடிந்து விழக்கூடுமே தவிர, அவ்வளவு சுலபத்தில் மாறிவிடாது. நம்முடைய அயராத உழைப்பால் இந்த இடத்தை நம்முடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

‘அப்படியென்றால், தேர்தலில் உங்களுக்கு நாட்டமில்லையா?‘ என்று நீங்கள் கேட்கலாம். என்னைப் பொறுத்தவரையில் தேர்தலுக்கு இரண்டாவது இடந்தான். முதல் இடம் நாட்டு விடுதலைக்குத்தான் தி.மு.கழகம் வெறும் அரசியல் கட்சியாக மட்டும் இருந்தால் தேர்தல் போன்றவற்றைத் தலையாய கடமையாகக் கொண்டு பணிபுரியும். ஆனால், இது ஒரு விடுதலை இயக்கமாக இருக்கின்ற காரணத்தால் அதைவிட முக்கியமான கடமைகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

பின்வாங்க இயலுமா?

ஆனால், சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது நீங்கள் செய்தது போல ஆட்சியை ஒப்படைத்தால் வேண்டாம் என்றும் போய்விட மாட்டோம். நமக்குச் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் அதிக இடங்கள் கிடைப்பதன் மூலம் நம்முடைய பிரிவினைக் கோரிக்கைக்கு இருக்கின்ற வலுவினை உலகிற்கு எடுத்துக்காட்ட இயலும்.

எனக்குத் தேர்தலைவிட, ‘எப்பொழுது அடக்குமுறை என்ற வெறிநாய் நம்மீது ஏவிவிடப்பட்டு நம் இன்னுயிர் உடலிலிருந்து பிரிக்கப்பட்டு, நம் குருதியைக் குடிக்கும் – நம் சதைகளைப் பிய்த்துத்தின்னும்‘ என்பதிலேயே கருத்து அதிகமாக இருந்துகொண்டு வருகிறது.

என்னுடைய சுபாவம் – தூங்கினால் எழமாட்டேன். இது என்னுடன் பழகும் நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது எல்லாம் காஞ்சிபுரத்திற்கு விடியற்காலை 5.30 மணிக்குச் சென்னையிலிருந்து இரயில் போய்விடும் என்பதால், நான் அதுவரை தூங்கமால்கூட விழித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

அடக்குமுறையை எதிர்பார்க்கிறேன்

காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு இரயில் என்றால், இரயிலுக்குச் செல்பவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். காலை 4 மணி முதல் 5 மணிக்குள் இரயில் என்றால், அன்றிரவு நிம்மதியாகத் தூங்க முடியாது 4.30 மணிக்கென்றால் ஒரு மணிக்கே விழித்துக் கொள்வார்கள். ‘மீண்டும் தூங்கினால் எங்கே மெய்மறந்து தூங்கிவிட்டு இரயிலை விட்டுவிடுவோமோ‘ என்று எண்ணி, நிம்மதியின்றிச் சரியாகத் தூங்காமல் படுக்கையில் புரண்டு கொண்டே இரவைக் கழிப்பார்கள்.

அந்த நிலையில் எந்த நேரத்தில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப் படுமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனவேதான் இந்த நிலையில் தேர்தல்கூட எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை. எங்கே இதில் தீவிரமாக ஈடுபட்டால் நமது கவனம் வேறு பக்கம் திரும்பிவிடுமோ என அஞ்சுகிறேன்.

பொருள் என்ன அதற்கு?

இங்கே இப்போது பேசிய கேரளத் தோழர், அண்மையிலே மதுரையிலேகூடிய அ.இ.கா.க. மாநாட்டில் சஞ்சீவியார் அவர்கள், ‘தி.மு.கழகதத்றி்கு ஆந்திராவிலே ஆதரவு உண்டா? கேரளத்தில் கேட்பார் உண்டா? கன்னடத்தில் கடைப்பிடிப்போர் உண்டா?‘ என்று பேசியதாகக் கூறினார். அந்தக் கூற்றை நன்றாகக் கவனித்தால், இரண்டு உண்மைகள் வெளிப்படும். ஒன்ற தமிழகத்திலே தி.மு.கழகத்திற்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதைச் சஞ்சிவியார் ஒப்புக்கொள்வார். ‘ஒருவன் சிவப்பாய் இருக்கிறான். ஆனால், அவனுக்கு ஓரக்கன்‘ என்று ஒருவர் என்றுதானே பொருள்? அதைப்போல், மற்ற மாநிலங்களில் தி.மு.கழகதத்ிற்குச் செல்வாக்கு இல்லை‘ என்று சொல்வதன் மூலம் தமிழகத்தில் செல்வாக்கு இருக்கிறது என்பதைச் சஞ்சீவியார் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதுதான் பொருள்.

சஞ்சீவியார் கூற்றின் மர்மம்?

‘காமராசர் படிக்காதவர் என்றாலும், நேருவிடம் அவருக்கு அதிகச் செல்வாக்கு இருக்கிறது. நமக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லையே‘ என்ற பொறாமை காரணமாகத் ‘தனியாக நேருவிடம் சஞ்சீவியார் கூறாமல், நேரு முன்னிலையிலேயே காமராசரையும் வைத்துக் கொண்டு மற்ற அமைச்சர்களையும் வைத்துக் கொண்டு, தி.மு.க.வை ஆந்திரத்தில் அடியெடுத்து வைக்க விட்டேனா, ஆனால் இந்தக் காமராசர் எந்தெந்த முறையில் எவ்வளவு பெரிய இயக்கமாக இந்தத் தி.மு.கவை வளர்த்து வைத்திருக்கிறார்? என்று காமராசரின் கையாலாகாத் தன்மையை விளக்கிக் கூறுவதுபோல அவர் கூறியிருக்கிறார்.

இதே சஞ்சீவியார்தான், இதே சிட்டிபாபுவை வைத்துக் கொண்டு மாநகராட்சி அழைத்து நடத்திய விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு அவர்கள் அளித்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டு, ‘நான் ஆந்திரன் என்றாலும் சென்னையிலே படித்தவன். நான் பழகியதே தமிழர்களிடந்தான். எனக்குத் தமிழர்களிடத்தில் நட்புண்டு – பற்றுண்டு – பாசமுண்டு, எனவே, தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடியர்கள்-தமிழர்கள் ஆகிய நால்வரும் ஒன்றாக இணைந்து மத்தியச் சர்க்காரிடம் போராட வேண்டும்‘ என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறிய சஞ்சீவியார், ‘திராவிட நாடு வேண்டாம்‘ என்றாக் கூறியிருப்பார்? அவர் நன்றியுணர்ச்சி மிக்கவர் சொன்ன சொல்லை மாற்றாதவர். எனே, அன்று மாநகராட்சியில் அளித்த உபசாரத்திற்குக் கைம்மாறு செய்யும் வகையில் அண்ணாதுரை அலைந்து திரிவதைக் காணச் சகிக்காமல் கட்டணம் பெறாத விளம்பரம் அதிகாரியைப்போல அ.இ.கா.க. மாநாட்டில் நமக்கு விளம்பரம் தேடித் தந்திருக்கிறார். அவருடைய நன்றிணர்ச்சியைப் பாராட்டுகிறேன்.

மாற்றம் பெறுகின்றனர்

அந்த மாநாட்டில் வடநாட்டிலிருந்து வந்த ஒருவர், ரொம்ப ரொம்ப வணக்கம்‘ என்று கூறினாராம். நம்முடையதமிழ், வடநாட்டார் நாவிலேயும் ஒலிக்கக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரித்தார்களாம். நேரு பண்டிதரின் மகள் திருமதி இந்திரா நேருகூட, ‘நான் தமிழில் மரம், மிருகம் என்பது வரை படித்திருக்கிறேன்.‘ அடுத்த முறை வரும்போது தமிழிலேயே பேசுவேன்‘ என்று கூறினாராம். முன்பெல்லாம் நேரு, ‘தமிழன். தெலுங்கன், மலையாளி, பன்னடியன், வங்காளி, மராட்டி, குஜராத்தி என்றெல்லாம் சொல்வது சி, சீ! என்ன பிச்சைப் புத்தி, எல்லோரும் இந்தியர்கள் அல்லவா?‘ என்று கூறுவார். முன்பெல்லாம் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழர்களை எப்படி எப்படியெல்லாம் திட்டுவார்? அவற்றிற்கு என்னென்ன பலன் கிடைத்தன என்பதை யெல்லாம் மனதில் எண்ணிய உடனே ஞானோதயம் ஏற்பட்டவராய், அங்குக் கூடியிருந்த மக்களிடம் ‘நானும் தமிழன்தான் யார் இல்லையென்று மறுப்பது?‘ என்று கூறியிருக்கிறார். பத்தாண்டுகள் நாம் உழைத்த உழைப்பு இந்த மண்ணுக்கே மகிமை தேடித் தந்திருக்கிறது.

வேறு இனத்திலிருந்து இரவலுக்கு வருபவர்களைப் பார்த்து நாம் அனுதாப்படுவோம். ஏன், சில நேரங்களில் பரிதாபம் கூடப்படுவோம். அ.இ.கா.க. மாநாட்டிலே பேசிய நேரு, இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் புறத்திலே சீனாக்காரன் பிடித்துக் கொண்டிருக்கின்ற நிலப்பரப்பைப் பற்றிப் பேசாமல், பாதி காஷ்மீரத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானைப் பற்றிப் பேசாமல், கோவாவைக் கொடேன்‘ என்கிற போர்ச்சுக்கலைப் பற்றிப் பேசாமல் அந்தப் பெரிய மனிதர், சாமானியர்களாகிய நம்மைக் குறித்து நம்மை முக்கியப் பிரச்சினையாக்கிய பேசியிருக்கிறார். ‘உள்நாட்டுப் போர் வரும்‘ என்ற அளவுக்குப் பேசினார். வந்தால் என்ன செய்வார்கள்? என்பதைக் குறிப்பிடவில்லை. அருகே அமர்ந்திருந்தி நிதியமைச்சர் சுப்பிரமணியம். ‘நேருவே இதைக் குறித்துப் பேசி அண்ணாத்துரைக்குச் செல்வாக்குத் தேடுகிறாரே‘ என்று எண்ணியவராய், நேருவின் முகத்தைப் பார்த்து, ‘அது கூடிய விரைவில் அழிந்துவிடும், அஞ்சற்க‘ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலைமைக்குக் காரணம்?

இதற்கு முன்பெல்லாம் அ.இ.கா.க. மாநாடு வடநாட்டில் நடக்கும். அங்குச் செல்கின்ற தென்னாட்டார், வடநாட்டாரின் அன்பைப் பெற நேரு அணிவதைப் போன்ற சூட் போட்டுக் கொள்வார்கள். கதர்க்குல்லாய் மாட்டிக் கொள்வார்கள். அவர்கள் உண்ணும் சப்பாத்தியை இவர்களும் உண்பார்கள். இந்தி தெரியாவிட்டாலும், ‘பகுத் அச்சா‘, ‘சோட்டே சோட்டே‘ என்று நான்கு வார்த்தைகள் இந்தியில் பேசி அவர்களை மகிழ்விப்பார்கள். இவைகளைக் கண்ட வடவர்கள். ‘அஞ்சற்க, ஆயிரம் வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்‘ என்று இப்படி அங்குச் சென்ற தென்னாட்டவர்களுக்கு யோசனை சொல்வதுபோல், ‘அஞ்சற்க, நாங்கள் இருக்கிறோம்‘ என்று தென்னாட்டவர்கள் வடநாட்டவருக்குத் தைரியம் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. சுப்பிரமணியத்திற்கு நேரு ஆறுதல் சொல்வது போய், நேருவிற்கு சுப்பிரமணியம் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. நேரு அந்த அளவுக்குத் தாழ்ந்துவிட்டார். சுப்பிரமணியம் அந்த அளவுக்கு உயர்ந்துவிட்டார். சுப்பிரமணியம் எனது நண்பர் என்ற முறையிலும் – அவர் தமிழர் என்ற முறையிலும் – அவர் திராவிடர் என்ற முறையிலும் – அவர் தென்னாட்டவர் என்ற முறையிலும் – அவர் நம் அமைச்சர் என்ற முறையிலும் நான் மகிழ்ச்சியடைகினேற், பெருமைப்படுகிறேன்.

உரிமை கொண்டாட காரணமென்ன?

இங்கே அமர்ந்திருக்கும் நமது டி.கே. சீனிவாசன் அவர்களுக்கு ஒரு தாய்மாமன் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இருக்கிறார் என்று அவரும் சொல்கிறார் – இப்போது அவருக்கு வருமானமும் இல்லை ஓர் ஆபத்தான கட்சியில் ஓர் ஆபத்தான கட்டத்தில் அவர் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அவருடைய தாய்மாமனைப் பார்த்து, உமக்கு டி.கே.சீனிவாசன் உறவாமே?‘ என்று யாராவது கேட்டால், ‘எல்லோரும்தன் உறவு போங்களையா‘ என்பார். ஆனால், இன்னும் ஒருமாதக் காலத்தில் சீனிவாசனுக்கு ரூ.10 இலட்சம் கிடைத்து மைலாப்பூரிலே நான்கு அடுக்கு மாடி வீடு வாங்கி, பிளைமவுத் காரிலே அவர் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர் தாய்மாமன் என்ன சொல்வார் தெரியுமா? ‘என்னை யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சென்னை மயிலாப்பூரில் மாடி வீட்டிலே வாழ்கிறாரே – பிளைமவுத் காரிலே போகிறாரே – டி.கே.சி. அவருடைய சொந்தத் தாய்மாமன் நான்தான்‘ என்பார். அதைப்போல நேரு பண்டிதர் ‘தமிழன் என்று சொல்வது குறுகிய மனப்பான்மை, பஞ்சைப்புத்தி‘ என்று கூறி வந்தவர். இன்று ‘நான்‘ தமிழன்‘ என்று உரிமை கொண்டாடுகிறார். ‘நான் தமிழன்‘ என்று எந்தத் தமிழனும் சொல்வதில்லை என்பதை அறிந்த வருத்தப்பட்டுத்தான் நாம் தமிழர்‘ என்ற கட்சியை நண்பர் ஆதித்தனார் துவக்கியிருக்கிறார்.

வீண் மிரட்டல்

‘உள்நாட்டு யுத்தம் வந்தாலும் சரி‘ என்று நேரு கூறுவதிலிருந்து அவர் உள்நாட்டு யுத்தத்தை எதிர்பார்க்கிறார் என்று தெரிகிறது, உள்நாட்டு யுத்தம் என்பது பண்டிதரின் வீண் மிரட்டல்.

அறியாப் பருவத்தில் உள்ள பிள்ளையைப் பார்த்து, ‘பூச்சாண்டி வருவான்‘, ‘ஐந்து கண்ணன் வருவான்‘ என்று மிரட்டுவார்கள். அந்தப் பையன் உண்மையைத் தெரிந்து கொள்ளும் பருவத்தை அடையும்போது, ‘இருந்தால் இரண்டு கண்கள் இருக்கும் – இல்லையென்றால் இரண்டு கண்களும் இருக்காது. அல்லது ஒரு கண் இருக்கும். ஆனால் 5 கண் மட்டும் இருக்காது‘ என்று தெரிகிறது. அதனால் அந்தப் பருவத்தில் மிரட்டல் மாறுகிறது. அப்போது ‘இனி வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன் என்பார் தந்தை. அதைக்கேட்டு எந்த மகனும் இதுவரை வாசற்படிக்குள் கால் வைக்காமலும் இருந்ததில்லை. இதுவரை எந்தத் தந்தையும் எந்த மகனின் முதுகுத் தோலையும் உரித்ததும் கிடையாது.

பொருள் என்ன இதற்கு?

இந்த நிலையில் பண்டிதர் மிரட்டுகிறாரே தவிர, விடுதலை இயக்கம் தனது இலட்சியத்தை அடைய வேண்டிய வழியில் அடைந்தே தீருமென்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார் என்பதுதான் இதற்குப் பொருள்.

தேர்தலில் ஈடுபட்டிருக்கின்ற காமராசர், ‘இவர்கள்தான் திராவிட நாடு கேட்கிறார்கள், அப்படியென்றால் டெல்லி சட்டசபைக்குத்தானே போட்டியிட வேண்டும்?‘ என்று பேசியதாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டிருந்ததைப் படித்தேன். இதிலிருந்து காமராசர் நாம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருவதை விரும்பவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

இப்படித்தான் நேரு, ‘உள்நாட்டு யுத்தம் வந்தாலும் சரி, நாட்டுப் பிரிவினைக்குச் சம்மதிக்க மாட்டேன்‘ என்று கூறியவுடன் சில காங்கிரசு ஏடுகள், ‘இனி தி.மு.க. இருக்காது, அண்ணாத்துரை அடங்கிவிடுவான்‘ என்று ஆரூடம் கணித்தன.

கோழைகளல்ல நாம்

அடக்குமுறை என்றவுடன் ஓடி ஒளியும் கோழையல்ல நான் என்பதை நேரு அப்படிப் பேசிய பிறகும் நான் ஓயாமல் ஒழியாமல், முன்னிலும் அதிகமாகப் பிரிவினைக் கோரிக்கையை விளக்கிப் பேசுவதிலிருந்தே அறிந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

நாங்கள் சட்டமனற்த்திற்குச் சென்றவுடன் காங்கிரசார், இவர்கள் வெட்டவெளியில் மக்கள் கைதட்டதட்ட மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்தவர்கள். எனவே, சட்டமன்றத்தில் பேச நேரமில்லாமல் – கைதட்ட ஆளில்லாமல் இவர்கள் கொட்டம் அடங்கிவிடும்‘ என்று எண்ணினார்கள். ‘வெட்ட வெளியில் பேசிய இவர்களுக்குச் சட்டமன்றத்தில் மேலே மின்விசிறி, உட்கார வெல்வெட் மெத்தை, எதிரே கடற்காற்று, முன்னால் எட்டு அமைச்சர்கள் – அவர்களுக்குப் பல இலாக்கக்கள். ஒவ்வோர் இலாகாவிற்கும் பல ஆயிரம் ரூபாய்கள் இதையெல்லாம் பயல்கள் பார்த்தால், புன்னைக் பல்லிளிப்பாக மாறி, சபலம் தட்டி, ‘நமக்கு ஏன் இவர்கள் பொல்லாப்பு‘ என எண்ணி வழிக்கு வருவார்கள். தங்களுக்கு வேண்டியதைக் ட்டுப் பெற்று அடங்கிவிடுவார்கள்‘ என எதிர்பார்த்தனர். நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ‘எனக்குப் பர்மிட் கொடுங்கள், லைசென்ஸ் கொடுங்கள்‘ என்று கேட்பார்கள். இப்படித்தானே பலர் வெளியில் பேசியவர்கள் தங்களுக்கு வேண்டியதைப் பெற்று அடங்கினார்கள். இவர்களும் மனிதர்கள்தானே? இவர்கள் மாத்திரம் எம்மாத்திரம்? என மனப்பால் குடித்தார்கள். காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ. அவர்கள் என்னையும், அன்பழகனையும் மற்ற நம் கழக உறுப்பினர்களையும் காணும் போதெல்லாம், ‘கதர் போட்டுக் கொள்ளுங்களேன். நான் வாங்கித் தருகிறேன். போட்டுக் கொள்ளுங்கள். எப்போது கதத்க்கடைக்கு வருகிறீர்கள். கதர் என்றால் மோட்டா துணி எனக் கருதாதீர்கள், எவ்வளவு மெல்லிய கதர் வேண்டுமென்றாலும் இருக்கிறது‘ என்று அடிக்கடி கேட்பார்கள். பெண் எம்.எல்.ஏ. என்றவுடன் யாரையோ மனதில் வைத்துக் ்கொண்டு தப்பாக எண்ணாதீர்கள். அந்த அம்மையார் வயதானவர்கள், சீமான் வீட்டுத் திருக்குமாரி. இவ்வளவுக்கும் நாங்கள் அசைந்துகொடுக்கவில்லை.

வென்றேனா தோற்றேனா?

நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், கவர்னர் வீட்டுத் தோட்டக் கச்சேரிக்கு என்னைக் சுமார் மூன்று மாதக் காலத்திற்கு முன்பிருந்தே அழைத்தார். ‘நான் வர இயலாது‘ என்று பல முறை கூறியும் என்னை விடவில்லை. ‘அய்யா, நீங்கள் கவர்னர் பதவியைத்தான் வேண்டாம் என்கிறீர்கள்? தனிப்பட்ட கவர்னர் மீது வெறுப்பு இல்லை என்கிறீர்கள். அப்படியென்றால் தனிப்பட்ட மனிதல் நடத்தும் அந்த விருந்துக்கு ஏன் வரக்கூடாது? என்று வக்கீல் என்ற முறையில் வாதிட்டார். இப்படி மூன்று திங்கள் முயன்றும் முடியாமல் போகவே, ஒருநாள் சட்ட மன்றத்தில் எ்ழுந்து, ‘நானும், வேண்டுமென்றே இந்த அண்ணாத்துரையை மூன்று மாதக்காலமாகக் கவர்னர் விருந்திற்கு அழைத்தேன். அரசியல் என்றால் இப்படி ஒதுங்கியிருக்கக் கூடாது. பத்து பேர்களிடம் பழகி, நான்கு பேரைத் தெரிந்து வைத்தக் கொள்ள வேண்டும் என்று கூடச் சொன்னேன்‘ என்று அவரது அரசியலைச் சொல்லி, ‘நான் அவரைப் பரீட்சிப்பதற்காக அழைத்தேனே ஒழிய, உண்மையாக அல்ல‘ என்றும் குறிப்பிட்டார். நானும் உங்கள் பரீட்சையில் நான் வென்றேனா, தோற்றேனா என்பதையும் சொல்லிவிடுங்கள்‘ என்றேன்.

அணுவைப் பிளக்க முடியும் என்று கூறிய ஐஸ்டீன் விஞ்ஞானி சொன்னதாக ஒரு வாசகம்உண்டு.

நான் வெற்றிபெற்றால், ‘நான் ஜெர்மனியிலிருந்து வந்தவன்‘ என்று உரிமை கொண்டாடுவார்கள். நான்தோல்வியுற்றால், ‘நான் ஒரு யூதன்‘ என்பார்கள் என்பது தான் அது. ‘நானும் தமிழன்‘ என்று நேரு சொன்னதைப் படித்தபோது எனக்கு இந்த வாசகம் நினைவிற்கு வந்தது.

அவலக்குரல் எழுப்கிறிரர்கள்

நாங்கள் சட்டமன்றம் சென்ற முதலாண்டில், என்னைப் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடுவார் காமராசர். பக்தவச்சலம் தலையசைப்பார். சுப்பிரமணியம் புன்னகை செய்வார். பிறகு அது பல்லிளிப்பாகக்கூட மாறியது. இப்படி ஓராண்டுக் காலம் கழிந்தது என்றாலும் அவர்கள் வலையில் நாங்கள் விழவில்லை என்பதைத் தெரிந்து கொண்டவுடன், இரண்டாம் ஆண்டில், இந்தத் தி.மு.கழகத்தினர்கள் யார்தெரியுமா? வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்கள், கால் பிடித்தவர்கள். இவர்கள் பூர்வோத்திரம் தெரியாதா? என்று கேலியும் கிண்டலும் செய்து பார்த்தார்கள். இப்படி இரண்டாம் ஆண்டும் கழிந்தது. மூன்றாம் ஆண்டில், எப்பொழுது பார்த்தாலும், ‘திராவிட நாடு என்ற பேச்சுதானா? வேறு பேச்சு இல்லையா?‘ என்றார்கள்.

ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குச் சாலை போட வேண்டுமென ஓர் அங்கத்தினர் பேசுவார். ‘அந்தச் சாலை 26 அடி அகலம் வேண்டும்‘ என அதற்குரிய காரணங்களை விளக்கி மற்றொருவர் பேசுவார். இதைப்போன்ற பேச்சுக்களில்தான் ஈடுபட வேண்டுமெனக் கூறி எங்களைத் திசை திருப்ப முயன்றார் நிதியமைச்சர். ஆனால், ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்பது தான் எங்கள் திட்டம். அதைப் பேசத்தான் நாங்கள் சட்டமன்றம் வந்தோமே தவிர உங்களுக்கு லாலி பாட அல்ல என நான் முன்பே சொல்லியிருக்கிறேன். இப்படி மூன்றாவது ஆண்டு கழிந்தது.

நான்காவது ஆண்டில், “நாங்கள் யார் தெரியுமா? உங்கள் அழித்துவிடுவோம், ஒழித்துவிடுவோம்“ என மிரட்டினார்கள். ஐந்தாவது ஆண்டில், “அய்யோ அவர்களைச் சட்டமன்றத்திற்கு வரவிடாதீர்கள்“ என அவலக்குரல் எழுப்புகிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன?

இவைதான் சட்டசபையின் அத்தியாயங்கள் காஞ்சிபுரத்தில் பேசிய நிதியமைச்சர் சுப்பிரமணியம், தி.மு.கழகத் தலைவர்களைச் சட்டசபைக்கு அனுப்பாதீர்கள். அப்படி எவரை அனுப்பினாலும், இந்த அண்ணாத்துரையை மட்டும் நிச்சயம் அனுப்பாதீர்கள்‘ என்று குறிப்பி்ட்டாராம். இதற்குக் காரணம் என்ன?

சுறுசுறுப்பான சப்-இன்ஸ்பெக்டர் வந்த காரணத்தால், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கும் கூட்டத்தார் தங்கள் தொழில் பாதிக்கப்படுமே என்பதை அறிந்து, என்ன பாடுபட்டாவது யார் காலைப் பிடித்தாவது அந்த சப்-இன்ஸ்பெக்டரை மாற்றிவிட வேண்டுமென்று துடியாகத் துடிப்பார்கள். நான் சட்டசபையில் சுறுசுறுப்பான சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதால் தமைச்சர், என்னைச் சட்டசபைக்கு அனுப்ப வேண்டாம் என்று என் தொகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் தொலைந்தால் ‘கலக்கல் வியாபாரம் உண்டு. காதிலே கடுக்கண் உண்டு, கார் உண்டு, பங்களா உண்டு“ என்கிற விதத்திலே அந்தக் கூட்டத்தார் காலம் கழிப்பார்கள்.

அதுபோலத்தான் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் இவர்கள் ஏதோ கள்ளத்தனம் செய்ய விரும்புகிறார்கள் போலும். நான் இருந்தால் அவர்களுக்குச் சங்கடம் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அமைச்சர் நான் சட்டசபைக்கு வராமல் இருப்பதன் மூலம் அவர் தான்தோன்றி தர்பார் நடத்த விரும்புகிறார் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் – நான் சட்டசபைக்கு வெளியே இருந்தால் உள்ளே இருப்பதைவிட ஆயிரம் மடங்கு ஆபத்துமிக்கவனாக இருப்பேன்.

கள்வனும் குழந்தையும்!

தி.மு.கவை அமைச்சர்கள், ஆபத்துமிக்கது என வர்ணிக்கிறார்கள். நள்ளிரவில் திருடுவதற்காக வீட்டிற்குள் நுழையும் கள்வன், ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்கும் வீட்டக்காரனைப் பார்த்து என்ன சொல்வான்? இவனன்றோ உத்தமன். பத்து மணியாகியும்கூட கதவைத் தாளிடாமல் உறங்கிவிட்டானே என்று புகழ்வான். பக்கத்தில் தலைவிரி கோலத்துடன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் வீட்டுக்காரியைப் பார்த்து, பாத்தா பக்கத்திலே இருந்தும் நமக்கத் தொல்லை தராமல் தூங்குகிறாளே! இவர் அல்லவா பத்தினி தங்கம் என்று அவளையும் புகழ்வான்.

ஆனால், அடுத்துத் தொட்டிலிலே சிறுவிழியும், குழிவிழும் கன்னமும் குறுநகை காட்டும் முகுமும் கொண்ட குழவி, வாயிலே கைவிரலை வைத்துக்கொண்ட, கைகளை அசைத்தவாறு சிரித்து விழித்து விளையாடிக் கொண்டிருக்கும். அவர்களது மழலை மகனைப் பார்த்ததும், ‘இவர்களுக்குப் பிறந்த மகனா இவர்? சனியன் தூங்கவில்லையே, கோட்டான் மாதிரி விழித்துக் கொண்டிருக்கிறதே, நாம் திருடும் நேரத்தில் இந்தச் சனியன் சப்தம்போட, சப்தம் கேட்டுத் தாய் எழுந்து அவள் கணவனையும் எழுப்ிவிட்டால் காரியம் கெட்டுவிடுமே’ எனத் திருடன் அஞ்சுவான். அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு இவன் கள்வன் என்பது எப்படித் தெரியும்? அண்ணனோ, மாமனோ, சிற்றப்பனோ என நினைத்து அவனிடம் தாவத் துடீக்கும் அந்தக் குழந்தையின் கழுத்துக் குழயில் கையை வைத்து அழுத்திக் கொன்றுவிட்டுத் தனது திருட்டுத் தொழிலை மேற்கொள்வான் அந்தக் கல்நெஞ்சன்.

மக்கள் கலங்க வேண்டுமா?

அதே நிலையில் இன்றைய அரசியலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். தந்தையாக இருந்த நீதிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் தூங்கிவிட்டார்கள். மீதிமிருந்தவர்களும் சட்ட சபைக்குள்ளே சென்றதும் தூங்கிவிட்டார்கள். மற்ற மற்றக் கட்சிக்காரர்களும் உறங்கிவிட்டார்கள். இரணகள் சூரரான இராமசாமி (படையாச்சி) ஒரு சிலகாலம் பெட்டிப் பாம்பாக உறங்கிக் கிடந்தார். கொஞ்சம் பெட்டியைத் திறந்ததும் ஓடிவிட்டார். இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் தி.மு.க. என்கிற குழந்தைதான்.

அந்தக் குழந்தை கூக்குரல் எழுப்பி நாட்டவர்களுக்குத் திருடர்களைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்கிற பீதியில் நம்மை அழித்துவிட இப்பொழுது முனைந்திருக்கிறார்கள் ஆளும் கட்சியினர்.

எனவே, குழந்தையைப் பறிகொடுத்துக் காலித் தொட்டிலைக் கண்டு கதறியழும் பித்துப்பிடித்த தாயைப் போல், பின்னால் எதிர்க்கட்சி ஏதுமின்றி நீங்கள் கதறி அழவேண்டுமென்றால் காங்கிரசிற்கு வாக்கு அளியுங்கள்.

இந்தக் குழந்தை தவழ்ந்து வளர்ந்து கட்டுக்குலையாத காளைப் பருவத்தை அடைந்து மிடுக்குள்ள மத்தியப் பருவம் அடைந்து, பொறுப்புள்ள தலைவனாகி நமது நாட்டையும் ஆட்சியையும் நாமே நடத்த உதவிபுரியும் என நம்பும் தாய்மை உணர்ச்சியோடு நிங்கள் இருந்தால் அந்தக் குழந்தையைச் சாகடிக்காமல் காப்பாற்றும் முயற்சிக்கு அறிகுறியாகத் தி.மு.கழகத்திற்கே ஓட்டளியுங்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.

(நம்நாடு - 3.11.61)