அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வடவர் கண்டு வியந்த ஊர்வலமும் பொதுக்கூட்டமும்

சென்னையிலிருந்து கார்மூலம் வந்த அண்ணா அவர்களை வரவேற்க 8.12.61 இரவு முதலே பம்பாயில் பல பகுதிகளிலிருந்தும் கழக உறுப்பினர்களும், பொதுமக்களும் திரள் திரளாக சயான் இரயில் நிலையம் அருகில் வந்து கூடிக் காத்திருந்தனர். இரவு 1 மணி வரை அவர்கள் வராததால் கலைந்து சென்ற மக்கள் திரும்பவும் மறுநாள் காலையிலேயே வந்த கூடிவிட்டனர். பகல் 1.30 மணியளவில் அண்ணா அவர்கள் தம் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வந்து சேர்ந்தார். அவர்களைக் கண்டதும், அண்ணா வாழ்க, திராவிட நாடு திராவிடருக்கே எனும் முழக்கங்கள் விண்ணை முட்டின.

வரவேற்புக்குப்பின் அவர்கள் சயான் இந்திரபுரி கட்டிடத்தின் 13ஆம் எண் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

செய்தியாளர் மாநாடு

சிறிது நேர ஓய்விற்குப் பின்னர், அண்ணா அவர்களின் பம்பாய் நிகழ்ச்சிகளில் முதன்மையும் முக்கியமானதுமான செய்தியாளர்கள் மாநாடு, பத்திரிகை நிருபர்கள் சங்க அறையில் 3 மணியளவில் துவங்கியது.

நமது கழக அடிப்படைக் கொள்கைகளை விளக்க அண்ணா அவர்கள் நிருபர்களுக்கு ஆங்கிலத்தில் சிறு உரை ஒன்று நிகழ்த்தியதும், நிருபர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் திட்டவட்டமாக ஆணித்தரமான பதில்களை அளித்த அண்ணா அவர்கள். தி.மு.கழகம் சோஷலிசக் கொள்கையுடையதென்றும் பலாத்காரத்தில் நம்பிக்கையின்றி அமைதியான முறையிலேயே திராவிட நாட்டைப் பெறப் பாடுபடும் என்றும் வருகிற பொதுத்தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டு சேராவிட்டால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 120 தொகுதிகளிலும், பாராளுமன்றத்திற்கு 10 தொகுதிகளிலும் கூட்டுச் சேர்ந்தால் முறையே அதனை 80, 6 எனக் குறைத்துக்கொண்டு தி.மு.கழகம் போட்டியிடும் என்றும், வட பம்பாய் பாராளுமன்றத் தொகுதி பற்றி முடிவுகூற பம்பாய் தி.மு.க.வினருடன் கலந்து கொள்ள வேண்டியுள்ளதென்றும் கூறி, இன்னும் பல கேள்விகளுக்கு உறுதியான பதில்களை அளித்தார்கள். செய்தியாளர்கள் மாநாடு சுமார் 1.15 மணி நேரம் நடைபெற்ற முடிவுற்றது.

பாந்திராவில் வரவேற்பு

அடுத்து பாந்திரா பகுதியில், கழகத் தோழர்கள் அளித்த வரவேற்பில் கலந்து கொண்? அவர்கள் துவங்கியுள்ள தி.மு.க.வின் புதுக் கிளையினைத் துவக்கி வைத்து அண்ணா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்திற்கு அவைத் தலைவர் தம்பித்துரை தலைமை வகித்தார். செயலாளர் டி.வி.துரை அனைவரையும் வரவேற்றார். அவர்கள் அளித்த தேர்தல் நிதியினைப் பெற்றுக் கொண்டு, ப.தி.மு.க. செயலாளர் புத்தரசு சொற்பொழிவாற்றினார்.

இறுதியில் தோழர் இரா. வளர்மதி அவர்களின் பெண் மகவிற்கு அண்ணா அவர்கள், அஞ்சுகம் என்று பெயரிட்டார். தோழர் அறவாழி நன்றி கூறியபின், மறுநிகழ்ச்சியான ஊர்வலத்திற்கு அனைவரும் புறப்பட்டனர்.

ஊர்வலச் சிறப்பு

9.12.61 மாலை 3 மணியிலிருந்தே ஊர்வலத்திற்காகப் பொதுமக்க்ளும் கழகத் தோழர்களும், மாகிம்இரயிலடியில் வெள்ளம்போல் திரண்டிருந்தனர். தோழர்கள் மா. மணிமொழியார், பி.எஸ். செல்லையா, எம்.ஜி.முத்தையா ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த லாரி ஒன்றில் உயரமான இருக்கையில் அண்ணா அவர்கள் அமர்ந்திருக்க, தோழர் சேரை, நாத்திகன் அவர்கள் ஏற்பாட்டில் அமைந்த 53 வெடிகள் வெடித்ததும் தொண்டர்படைத் தலைவர், துணைத் தலைவர்களான தோழர்கள் கே.இராமசாமி, ப.இ.இளங்கோ ஆகியோர் தலைமையில் சுமார் 6 மணியளவில் ஊர்வலம் துவங்கியது. அறிஞர் அண்ணா வாழ்க, திராவிட நாடு திராவிடருக்கே எனும் முழக்கம் வானைப் பிளந்தது. ஊர்வலத்தில அமைதியினையும் கட்டுப்பாட்டையும், தோழர்கள் நெல்லைச் செழியன், பி.எஸ்.செல்லையா பாண்டியன், ஏ.எல்.பெருமாள், தோ.ஈ. செல்லையா மேலும் 180 தொண்டர்கள் நல்ல முறையில் நிலைநாட்டித் தொண்டர்படைத் தலைவர்களுக்கு உதவினர்.

சாலையில் அலங்கார வளைவுகள், தாராவிக் கிளைக் கழகச் சார்பிலும், தோழர் ஊ.அ.செல்லையா குழுவின் சார்பிலும், தாராவி எம்.ஜி.ஆர். கலை மன்றம், சௌந்திரபாண்டியனார் பகுத்தறிவு மன்றம், மாதுங்கா கிளைக்கழகம் ஆகியவை சார்பிலும் சிறப்புற அமைத்திருக்கிறார்கள்.

வழிநெடுகிலும் கழகக் கொள்கையிலான தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஏறத்தாழ ஆறாயிரத்துக்கும் அதிகமான மககள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சுமார் 500க்கு அதிகமான சைக்கிள்களும் சேர்ந்து வந்த ஊர்வலம் இரண்டு முதல் இரண்டரை மைல் நீளமாகவிருந்ததாகவும், இதுவரை பம்பாம் மாநகரில் இத்தனை பெரிதும் சிறப்பானதுமான ஊர்வலம் ஒன்று நடந்ததில்லையெனவும் பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.

மாகியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் தாராவி காலக்கில்லா, சயான், கிங் சர்க்கிள், எல்.என்.ரோடு பண்டார்க்கர் ரோடு, நம்புஹால் ரோடு, ஆகியவை வழியா சுமார் 7 மைல் தொலைவு கடந்து இரவு 8 மணியளவில் மாதுங்கா நம்புப் பூங்காவை அடைந்தது.

பொதுக்கூட்டம்

பம்பாய் தி.மு.கழகப் பொதுக்கூட்டம் ஆரம்பமாகியது. மாதுங்கா தி.மு.கழகச் செயலாளர் பொ.அப்பாத்துரை அனைவரையும் வரவேற்றுப் பம்பாய் தி.மு.கழகச் செயலாளர் புத்தரசு அவர்களைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டார்.

தோழர் புத்தரசு அவர்களின் தலைமை உரைக்குப் பின்னர் ப.தி.மு.க. அவைத் தலைவர் மதுரை ஏ.எஸ்.வேலன், காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினர் சி.வி.இராசகோபால், நயினா முகமது, அலமேலு அப்பாத்துரை அம்மையார் ஆகியோர் கழகக் கொள்கைகளை விளக்கிச் சொற்பொழிவாற்றினார்.

பின்னர், அறிஞர் அண்ணா அவர்களுக்கு எண்பதிற்கு மேற்பட்ட நிறுவனங்களும், தனிப்பட்டவர்களும் மலர் மாலைகளும், கைத்தறியாடைகளும் அணிவித்தனர்.

ப.தி.மு.க.விலுள்ள எல்லாக் கிளைகளின் சார்பிலும் குறிப்பாகக் கோலபா, கல்பலா, குன்று, கொபீதலா இளைஞர் சார்பிலும் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. தனிப்பட்ட பலர் அறிஞர் அண்ணா அவர்களிடம் தேர்தல் நிதியளித்தனர்.

ப.தி.மு.க பொருளாளர் சு.வள்ளிநாயகம் அவர்கள், பம்பாய் தி.மு.கழகத்தவர் தங்கள் இதயத்தையே அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பரிசாக அளிப்பதாகக் கூறி, வெள்ளியால் செய்யப்பட்ட இருதயம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.

கழகத் தோழர் மா.மணிமொழியார் அந்த வெள்ளி இருதயத்தை மிகவும் சிறப்பாகத் தனது முழுத் திறமையுடன் செய்திருந்தார்.

கட்டணமுள்ள சிறப்புக் கூட்டமாக இல்லாமல், நன்கொடை மட்டுமே திரட்டிப் பொதுக்கூட்டம் நடத்த வண்டிய நிலை ஏற்பட்டாலும், வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களாலுமே வாக்களித்த தொகையில் குறைவு ஏற்பட்டதென்பதை எடுததுக்கூறி, பொருளாளர் வள்ளிநாயகம் அவர்கள் ஆறாயிரத்து நூறு (6100) ரூபாய்களைத் தேர்தல் நிதியாக அண்ணா அவர்களிடம் அளித்தார். குறைக்கப்பட்ட தொகையினையும் விரைவில் கொடுத்துவிட முயல்வதாகவும் வாக்களித்தார்.

நிதியினைப் பெற்றுக்கொண்ட அண்ணா அவர்கள், ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் அரியதோர் கருத்து விருந்தளித்தார்கள். தனிப்பட்ட பார்ப்பனர்களைத் தி.மு.க. என்றைக்கும் வெறுப்பதில்லை. மாறாக, நண்பர்களாக கொண்டுள்ளதென்றும் அவர்களின் கலாச்சாரம், பார்ப்பனர்கல்லாதவர்களிடையேயும் வெகுவாகப் பரவிவிட்ட நிலையில் பார்ப்பனீயத்தைத் தி.மு.க. கண்டிக்கிறதென்றும், திராவிடம் தனி நாடாகப் பிரிவதற்கான சூழ்நிலைகள் தென்னகத்தில் வளர்ந்து வருவதாகவும், வருகிற பொதுத்தேர்தல் அதற்கான அறிகுறிகளை வெளிப்படையாகக் காட்டிவிடும் என்றும். மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.

அடுத்து ப.தி.மு.க. துணைச் செயலாளர் வி.தேவதாசன் அவர்கள் நன்றி கூறக் கூட்டம் இரவு 11 மணி அளவில் இனிது முடிவுற்றது.

கூட்டத்திற்கான மேடை, மின்விளக்குப் போன்ற பிற எல்லா ஏற்பாடுகளையும் தோழர் அன்புச் செழியன், மாதுங்கா தோழர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செய்திருந்தார்.

ஆமதாபாத் பயணம்

மறுநாள் 10.12.61 காலை 6.30 மணியளவில் அண்ணா அவர்களும் சி.வி.இராசகோபால் அவர்களும் வானூர்தி மூலம் ஆமதாபாத்திற்குப் பயணமானார்கள். ஆமதாபாத் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அடுத்த நாள் (11.12.61) காலை 10.30 மணியளவில் வானூர்தி மூலம் அண்ணா அவர்கள் திரும்பி வந்தபோது பம்பாயில் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான தோழர்கள் அவர்களை வரவேற்க சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு வந்திருந்து, மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ந்தனர்.

அடுத்து கோரேகான் பகுதியில் கோரேகான் தி.மு.க. மலாடு தி.மு.க. காந்தில்லி பொய்சேரியிலுள்ள அண்ணா மன்றம் எம்.ஜி.ஆர். மன்றம் ஆகியவை சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கூட்டத்திற்குப் பம்பாய் தி.மு.கழகச் செயலாளர் புத்தரசு தலைமை வகித்தார். தோழர் பி.கே.சேரன் அனைவரையும் வரவேற்றார்.
அந்தேரித் தமிழ்ச் சங்க வரவேற்பு

வழியில் அந்தேரித் தமிழ்ச்சங்கம் அளித்த வரவேற்பில் கலந்துகொண்டு, அண்ணா அவர்கள் பகல் 12.30 மணியளவில் செரிமேரி வந்தடைந்தார். அங்கு அந்தேரித் தி.மு.கழகமும் அண்ணா படிப்பகமும் இணைந்து அண்ணா அவர்களுக்கு சிறப்பானதோர் வரவேற்பளித்தன. தோழர் மரியண்ணா அனைவரையும் வரவேற்க, தோழர் சி.செல்வராசு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து அண்ணா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

தோழர் இலங்கை சண்முகம் அவர்கள், தோம்பி விலியில் தனது இல்லத்தில் அண்ணா அவர்களுக்கு சுவைமிக்கதோர் பகலுணவு அளித்தார்கள்.

தோம்பிவிலித் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் சார்பில் அளிக்கப்ட்ட வரவேற்பில் கலந்துகொண்ட அண்ணா அவர்கள். புதிதாகத் தொடங்கப்பட்ட தோம்பிவிலித் தி.மு.கழகத்தைத் துவக்கி வைத்ததுடன், கழகத்திற்கென அவர்கள் வாங்கியுள்ள கழக அறைகளையும் திறந்து வைத்தார்கள்.

தானா வரவேற்பு

மாலை 6 மணியளவில், தானா தி.மு.கழகம் அண்ணா அவர்களுக்கு வரவேற்பளித்தது. செயலாளர் தே.சா.நாதன் தலைமை வகித்தார். ப.தி.மு.க. செயலாளர் புத்தரசு, தோழர் நம்பிநாராயணன் ஆகியோர் பேசியபின் அண்ணா அவர்கள் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்கள்.

மாலை 7 மணியளவில் பாண்டூப் தி.மு.கழகம் அண்ணா அவர்களுக்கு அளித்த வரவேற்புக் கூட்டத்திற்குச் செயலாளர் மா. ஈசாக்கு தலைமை தாங்கினார். தோழர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார். அண்ணா அவர்கள் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துப் பேசினார்கள்.

இரவு 8.15 மணியளவில் மான்கூர்டு பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டார்கள். டிராம்பே சாலையிலிருந்து முனிசிபல் திடலுக்கு மாபெரும் ஊர்வலம் சென்றது. மான்கூர்டு தி.மு.க. செயலாளர் வீ.பழனி அனைவரையும் வரவேற்க அவைத் தலைவர் துரை தலைமை வகித்தார். பல அமைப்புகளின் சார்பிலும் தனிப்பட்டவர்களாலும், செம்பூர் தி.மு.கழகத்தாலும் அண்ணா அவர்களுக்கு மாலைகளும், கைத்தறி ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. தோழர் நயினாமுகமது, புத்தரசு ஆகியோர் பேசிய பின்னர் அண்ணா அவர்கள் ஒரு மணி நேரம் நமது கழகக் கொள்கைகளையும் வருகிற பொதுத் தேர்தலில் கழகம் மேற் கொள்ளவிருக்கும் வழிகள் பற்றியும் விரிவுரையாற்றினார்கள்.

இரவு 9.30 மணிக்குத் தாராவி நகர் மன்றத் திடலில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு, அண்ணா அவர்கள் உரையாற்றினார்கள். தாராவித் தி.மு.க. அவைத் தலைவர் பி.எஸ். செல்லையா அனைவரையும் வரவேற்க, துணைச் செயலாளர் கு.சோமசுந்தரம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அண்ணா அவர்களின் துணைவியார் இராணி அம்மையார் அவர்கள் கூட்டத்தில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. ப.தி.மு.க. செயலாளர் புத்தரசு, தோழர் சி.வி.இராசகோபால் ஆகியோர் பேசியபின் பல நிறுவனங்கள் சார்ந்தவர்களும், தனிப்பட்டவர்களும், மலர் மாலைகளும், கைத்தறி ஆடைகளும் அணிவித்தார்கள்.

இறுதியில் அண்ணா அவர்கள் பலத்த கைத்தட்டல்களிடையே பேச எழுந்து சுமார் ஒரு மணிநேரம் அரிய உரை நிகழ்த்தினார்கள். தோழர் உ.வே.முடியப்பன் நன்றி கூறக் கூட்டம் இனிது முடிந்தது.

பம்பாய் நிகழ்ச்சிகளை மிகவும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, அண்ணா அவர்கள் 12.12.61 காலை 8.30 மணியளவில் சி.வி.இராசகோபாலன் அவர்களுடன் வானூர்தி மூலம் சென்னைக்குப் பயணமானார். சாந்தகுரூசில் விமான நிலையத்திற்கு ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து அண்ணா அவர்களைச் சென்னைக்கு வழியனுப்பினர்.

பம்பாய்க்கு அண்ணா அவர்களுடன் சேர்ந்து வந்திருந்த அவர்தம் துணைவியார் ராணி அம்மையார், அலமேலு அப்பாத்துரை அம்மையார், திரு.பாபு அவர்தம் துணைவியார், திரு.புட்டசாமி, அவர்தம் துணைவியார் ஆகியோர் அன்று பகல் 2 மணிக்கு கார் மூலமாக சென்னைக்குப் பயணமானார்கள்.

அண்ணா அவர்களின் பம்பாய் நிகழ்ச்சிகளைச் சீரும் சிறப்புமாய், வெற்றிகரமாகப் பம்பாய் தி.மு.கழகம் நடத்தியதாகப் பம்பாய் வாழ் திராவிடப் பெருங்குடி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

(நம்நாடு - 19.12.61)