அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வடவரிடமிருந்து பிரிவோம்!

நான் யாரிடத்திலும் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட மாட்டேன். அவரவர்க்கெனத் தனித்தனிக் கொள்கைகள் உண்டு. இங்குப் பல்வேறுபட்ட கருத்துடையவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் கருத்தை ஒருவர் புரிந்து கொண்டால் மனக் கசப்பு ஓரளவு நீங்கும் என்பதால்தான், என் கருத்தை – வெளிப்படையாகக் கூறினேனே தவிர, நான் யாரிடத்திலும் மனதைப் பறிகொடுத்துவிட மாட்டேன்.

நான் கண்ட தலைவர் பெரியார்தான்!

நான் கண்ட ஒரே தலைவர் பெரியார் இராமசாமி அவர்களே. ஒரு சிறிய தவறு செய்த நேரத்தில் அவரிடம் உள்ளத்தைப் பறிகொடுத்து விடாமல் பிரிந்து வந்த நாங்கள் வேறு எவரிடத்திலும், எதையும் விட்டுக் கொடுத்துவிட மாட்டோம் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

‘அவசரப்படாதே அண்ணாதுரை! கொஞ்சம் பொறு‘ என்று ஆச்சாரியார் அவர்கள் கூறுவார்கள் என்பது என்குத் தெரியும். இருந்தாலும், அவர்களால் இந்தக் காரியத்தை நடத்த முடியும் என்று நான் நம்புகிறேன். அப்படி முடியாது என்று கூறி, இதை நீயே பார்த்துக்கொள் – என்று கூறிவிடுவார்களானால் பிறகு நடப்பது நடக்கட்டும் என்று அண்ணா அவர்கள், நேற்று மாலை இலட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் பேசுகையில் குறிப்பிட்டு, நாட்டுப் பிரிவினைக்கு வழி வகுக்குமாறு திரு.ஆச்சாரியார் அவர்களுக்கு அன்பழைப்பு விடுத்து உருக்கமாகப் பேசினார்கள்.

ஆட்சி மொழியாக இந்தி இருக்கத் தேவையில்லை என்பதற்கான காரணங்களை – ஆதாரங்களை – புள்ளி விவரங்களையெல்லாம் நாம் எடுத்துக்காட்டியாகிவிட்டது. இந்தியை எதிர்த்துப் பேச வேண்டிய தலைவர்களெல்லாம் பேசிவிட்டார்கள். இனி காட்ட வேண்டிய காரணங்களோ, பேச வேண்டிய தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை.

இந்திப் பிரச்சினையில் மூன்று சாரார் உண்டு!

பல்வேறு கோணங்களிலிருந்து பணியாற்றிவரும் தலைவர்களெல்லாம், இந்த இந்திப் பிரச்சினையில் ஒருமுகப்பட்டுத் தங்கள் கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். என்றாலும், வடக்கிலுள்ளவர்கள் நம்முடைய குரலை மதிப்பதாகத் தெரியவில்லை.

இந்த இந்திப் பிரச்சனையில் மூன்று சாரார் இருக்கின்றனர். ஒரு சாரார், ‘இந்தியா ஒரே நாடு, இந்திய ஒற்றுமை கலையாமலிருப்பதற்காகத்தான் இந்தி புகுத்தப்படுகிறது என்கிறார்கள். இந்திய ஒற்றுமையில் நம்பிக்கை வைத்துக் கூறுகிறார்கள். ‘இந்தியைப் புகுத்துவதனாலேயே இந்திய ஒற்றுமை குலையும்‘ என்று.

மூன்றாவது பிரிவில் உள்ள நாங்கள் – இந்தியா ஒரே நாடு என்பதே தவறு! இது பல நாடுகளைக் கொண்ட துணைக்கண்டம்! இல்லாத ஒன்றுக்காக, ஒன்றுபடவே முடியாத ஒரு காரியத்தில் இவர்கள் இரு சாராரும் பாடுபடுகிறார்கள் என்றதான் எண்ணுகிறோம்.

மூன்று காரணங்கள் என்னென்ன?

இந்தியை அவர்கள் திணிப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு! ‘இந்தியை ஆட்சி மொழியாக்விட்டால் எப்படியும் இந்தியை அனைவரும் கற்றுத்தான் தீருவார்கள்‘, என்று கருதுவது ஒரு காரணம்.

‘தங்கள் கட்டளைக்கு மற்றவர்கள் அடங்கித்தான் நடக்க வேண்டும் – எல்லோரும் தங்கள் முடிவை, பயந்து ஏற்றுக்கொண்டுதான் தீருவர்‘ என்ற துணிச்சல் ஒரு காரணம்!

மூன்றாவது காரணம் – ‘தமிழ்நாட்டிலுள்ளவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்ப்பது ஏது? அப்படியே எதிர்த்தாலும் கொஞ்சம் காலத்துக்குத்தான் எதிர்ப்பார்கள். பிறகு எதிர்ப்பெல்லாம் மறைந்துவிடும்‘ என்று கருதுவதாகும்.

ஒன்றுபட்டுப் போராடுவோம்.

எனவே நாம், தமிழ்நாட்டிலுள்ள வகுப்புக் கிலேசங்களை ஒரு நொடியில் போக்கிவிடலாம் – அது முடியாத ஒன்று அல்ல! முதலில் நாம் வட நாட்டிலிருந்து பிரிந்து விட வேண்டும்! அதற்கு இங்குள்ள அத்தனைபேரும் ஒன்று பட்டுப் போராட வேண்டும்.

இங்குள்ள தலைவர்கள் நவக்கிரகங்கள் போலப் பல்வேறு கோணங்களில் கருத்தைச் செலுத்துபவர்களானாலும் ஆலயங்கள் நவக்கிரகங்களைச் சுற்றி வருபவர்கள் ஒரு முகாமாகத்தான் சுற்றுவார்கள் என்று ஆலயம் சென்று வருபவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் – அதைப் போலத் தலைவர்களைப் பின்பற்றும் மக்கள் ஒருமுகமாகத்தான் இன்று இருக்கிறார்கள்.

சுதந்திரம் ஒரு பலாச்சுளை!

வாழைப்பழத்தை உரித்துத் தின்பது எளிது, ஆனால் பலாப்பழத்தை உரித்துச் சுளையை எடுத்துத் தின்பது அவ்வளவு எளிதல்ல. பலாப் பழத்தை உரிக்கும்போதே, கையில் ‘பிசின்‘ ஒட்டிக்கொள்ளும்,பலாச் சுளை இனிக்கும். அதைப்போலத்தான் சுயராஜ்யமும்!

நான் இதைக் கூறும்போது அன்பர் ஆச்சாரியார் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்! பலாச் சுளையை உரித்துச் சுளையைப் பக்கத்திலிருப்பவரிடம் கொடுத் விட்டதைப் போல, சுயராஜ்யம் வேறொருவருக்குக் கிடைத்துவிட்டது. பலாச் சுளையைப் பறிகொடுத்ததுமல்லாமல் கையில் பிசினும் ஒட்டிக் கொண்டதுபோல, நாம் இன்று வடநாட்டுப் பிடியிலிருந்த அவதிப்படுகிறோம். நம்மை அவர்கள் ஆட்டிப் படைக்கிறார்கள். அதிகாரத்துடன், இந்தியை நுழைக்கிறார்கள்.

கௌஹத்தி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் பற்றி ஆந்திர முதலமைச்சர் சஞ்சீவரெட்டியை நிருபர்கள் கேட்டபோது, ‘இந்தத் தலைமுறை காப்பாற்றப்பட்டுவிட்டது‘ என்று கூறியிருக்கிறார். இதேபோல் அமைச்சர் சுப்பிரமணியமும் முன்பு ஒருமுறை கூறினார் ‘இந்திப் பிரச்சனைக்கு அடுத்த தலைமுறையில்தான் தீர்வு காண முடியும்‘ என்று! இதற்கெல்லாம் என்ன பொருள், இந்தத் தலைமுறையில் நாங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டோம். எங்கள் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது என்பதுதான் பொருள்.

இவர்கள் இப்படிப் பேசுவதற்கு என்ன காரணம் என்று யோசித்தேன், பிறகு, பதவியிலிருப்பவர்களே இப்படித்தான் பேசுவார்கள் – இப்படித்தான் பேச வேண்டும் போலும் என்று நானே எண்ணிக் கொண்டேன்.

இந்தத் தலைமுறை காப்பாற்றப்பட்டது என்று கூறுபவர்கள் மனிதக் குலத்திலேயே மகா மட்டமான இடத்திலிருப்பவர்கள் என்பது என் கருத்து.

மனிதன், எப்பொழுதம் தன் வாழ்நாளுக்கான காரியங்களை மட்டும் செய்வது கிடையாது, பின் சந்திக்கும் சேர்த்துத்தான் எதையும் செய்வான். நான் பிழைத்தால் போதும் என் பிள்ளை என்பேரன், அவனுக்குப் பிறகு அவன் சந்ததியெல்லாம் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று எவரும் கருதுவது கிடையாது.

கார் உள்ளளவும் கடல்நீர் உள்ளளவும்...!

இந்திய அரசியல் சட்டத்தை அன்பர் ஆச்சாரியார் போன்றவர்கள் உருவாக்கியபோது, ‘இந்தத் தலைமுறைக்கு மட்டும்தான் என்று உருவாக்கவில்லை, கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், மேகம் உள்ளளவும், மேதினி உள்ளளவும் இந்தச் சட்டம்தான் இந்தியாவுக்கு‘ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி இந்தத் தலைமுறைக்குத் தான் இந்தச் சட்டம் செல்லும் என்றால், மந்திரிகள் – கூற்றையும் ஒத்துக் கொள்ளலாம்.

நமது ஆச்சாரியார் அவர்கள் இந்தியை எதிர்ப்பதற்கு டாக்டர் லோகியா அவர்கள் ஒரு விசித்திரமான காரணத்தைக் காட்டுகிறார். நான் அண்மையிலே ஒரு ஏட்டிலேபடித்தேன் ‘எல்லோருக்கும் தலையில்தான் மூளை, டாக்டர் லோகியாவுக்கு உடம்பெல்லாம் மூளை‘ என்று காந்தியார் கூறினாரா! இல்லையா! என்பதை ஆச்சாரியாரவர்கள் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அப்படிப்பட்ட லோகியா ‘தமிழ்நாட்டின் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதவர் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் ஆச்சாரியார் இந்தியை எதிர்க்கிறார், என்று ஒரு உள்நோக்கம் கற்பித்துக் கூறுகிறார்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை!

கௌஹத்தி மாநாட்டில் நிறைவேறி தீர்மானம் – தென்னாட்டவர்களுக்கு ஏதோ வெற்றியைத் தந்து விட்டதாகக் கருதி, ‘சுதேசிமித்திரன்‘ போன்ற பத்திரிகைகள் படம் போட்டிருக்கின்றன – ‘தென்னாடு வடநாட்டை வென்றுவிட்டது‘ என்று எழுதிப்படம் போட்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படியொன்றும் வடநாட்டை நாம் வீழ்த்திவிடவில்லை. நாம் வெற்றி பெற்றுவிட்டதாக அவர்கள் எழுதுவதற்குக் காரணம், நாம் வெற்றிபெற வேண்டும் என்ற மனதிலிருக்கும் ஆசையை வெளிக்காட்டிக் கொள்வதுதான். அந்தப் படத்தைப் போடுவதிலும், அந்தப் பொருளின் தத்துவம் என்ன என்பதை ஆராய்ந்தால், உண்மை புலப்படும் – தமிழ்நாட்டு விடுதலையை அனைவரும் விரும்புகிறார்கள், வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றிபெற ஆசைப்படுகிறார்கள் என்பதைத் ான் அந்தப் படம் நமக்கு கூறுகிறது.

ஆச்சாரியாருக்குத் துணை இருப்போம்!

தமிழ்நாடு தனியாகப் பிரியத்தான் போகிறது, இது உறுதி – ஆனால், பிரியும்வரை – அந்த இடைக்காலத்தில் – தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கம் ஏற்படாதிருக்க வேண்டும். தமிழர்களுக்கு ஆட்சி மொழியாகத் தமிழும், வெளியுலக – உறவு மொழியாக ஆங்கிலமும் இருக்க வேண்டும். இதற்குப் போராடும் ஆச்சாரியார் அவர்களுக்கு, எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம் என்பதை நான் சார்ந்திருக்கும் தி.மு.கழகச் சார்பில் கூறிக்கொள்கிறேன்.

இந்தியாவில் 14 மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மத்திய ஆட்சி மொழியாக இந்தியும், மாநிலத்தில் மாநில மொழி ஆட்சி மொழியாகவும் உள்ளன. ஆக, 14 தேசிய மொழிகளும், 2ஆட்சி மொழிகளும் கொண்டுள்ள இந்தியா நாடு எப்படி ஒரு நாடாக இருக்க முடியும்?

இரண்டு வித கலெக்டர்களா?

கந்தசாமியும் கலெக்டர் – கார்த்திகேயனும் கலெக்டர் என்றாலும் இருவருக்கம் வேறுபாடு உண்டு. கார்த்திகேயன் ஜில்லா கலெக்டர். கந்தசாமி பில் கலெக்டர். அதைப்போலத்தான் இந்தியின் ஆட்சி மொழி – தமிழும் ஆட்சிமொழி என்பது.

இந்தி – ஜில்லா கலெக்டர் என்றால் – தமிழ் – பில கலெக்டர்தான். தமிழ் இந்த மாநிலத்தத்தில் மட்டும்தான் சிறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும், மற்ற எல்லாக் காரியங்களுக்கும் இந்திதான் இருக்கும்.

ஆச்சாரியார் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகம் ஒன்றை நான் படித்தேன். அதில் அவர் எழுதியிருக்கிறார் – ‘தமிழை ஏன் மத்திய ஆட்சி மொழியாக ஆக்கக் கூடாது?‘ – என்று!

தமிழை மத்திய ஆட்சிமொழியாக்கு!

மிக்க அனுபவசாலியும் ஆற்றல் மிக்கவரும் உலகம் போற்று பலருமான உங்களைப் போன்றவர்களையெல்லாம் கூட அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள், நீங்கள் கூறுவதையே அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அனுபவம் குறைந்த இந்த அண்ணாதுரை எம்மாத்திரம்?

நாங்கள் வடநாட்டுத் தலைவர்களை நேரில் பார்த்ததில்லை – படத்தில்தான் பார்த்திருக்கிறோம். நீங்கள் நன்றாக அவர்களுடன் பழகியிருக்கிறீர்கள். அவர்களுடைய போக்கு நன்றாக உங்களுக்குத் தெரியும்.

உங்கள் காலத்திலேயே, தமிழ்நாட்டைப் பிரித்துத் தருவதைத் தங்கள் தாய்நாட்டுக்குச் செய்யும் சேவையாக நினைத்து, அதைச் செய்யுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையைக் கேட்டுக் காந்தியார் கலங்கிய நேரத்தில் – படேல் பயந்த நேரத்தில் – பண்டித நேரு – ‘இது நடக்குமா?‘ என்ற பேசிய நேரத்தில், தாங்கள்தான் மிகத் துணிவாகக் கூறினீர்கள் – ‘பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விடலாம்‘ என்று! காங்கிரசிலிருந்து விலகி வந்து கூறினீர்கள் – ‘அப்பொழுது உங்களை ‘துரோகி‘ என்று கூடக் காங்கிரஸ்காரர்கள் கூறினார்கள்.

தாய்நாட்டுக்குச் சேவை செய்யுஙக்ள்!

அதையெல்லாம் பொருட்படுத்தாமல், உறுதியாகப் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த தாங்கள், நீங்கள் பிறந்த தாய்நாட்டுக்கு அந்தச் சேவையைச் செய்யக் கூடாதா?

அப்பொழுது நீங்கள் கூறிய உதாரணம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒரு வேட்டி சிறிது கிழிந்தால், அதை முழுவதும் கிழித்து இது துண்டாக்கினால் இருவருக்கும் பயன்படும்‘ என்றீர்கள். இப்பொழுது நைந்துபோன வேட்டி நிலையில் தமிழர்கள் நொந்து போயிருக்கின்றனர்.

நாம் வடநாட்டைவிட்டுப் பிரிவோம், விரோதத்துடனல்ல – நட்பு முறையிலேயே பிரிவோம், பிரிந்த பின்னும் உறவு கெடாமல் நட்புடன் வாழ்வோம். நேருவுடன் கறுப்புக் கொடி இல்லாமலேயே சந்தித்துப் பேசலாம்.

தமிழ்நாடு சிறிய நாடு என்பதால், தனித்து வாழ முடியாமல் போய்விடாது. அண்மையில் பர்மா அமைச்சர் கூறினார் – ‘உலகில் சிறிய நாடு – பெரிய நாடு என்ற வேற்றுமை பாராட்டக் கூடாது! எல்லாம் சமம்‘ என்று!

ஏன் தனித்து வாழ முடியாத?

நாம் சிறிய நாடுடையவரானாலும், நம்மிடம் பெரும் அறிவாளிகள் – சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். பெரியார் இராமசாமி இருக்கிறார். ஆச்சாரியார் இருக்கிறார், டாக்டர் ஏ.இராமசாமி, இலட்சுமணசாமி, சி.பி.இராமசாமி போன்றவர்களெல்லாம் இருக்கிறார்கள். இத்தனைச் செல்வமும் இருக்கும் தமிழ்நாடு ஏன் தனித்து வாழ முடியாது?

இந்தியா ஒன்று என்ற கருத்தை நீங்கள்தான் !ஆச்சாரியார்தான்) பரப்பினீர்கள், இப்பொழுது – கக்கிய நஞ்சை பாம்பு உறிஞ்சிக் கொள்வது போல நீங்களே அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டு, தமிழ்நாடு பிரிவினைக்குப் பாடுபட வேண்டு்மெனக் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டு மக்களின் உள்ளத்தை இன்றைய தினம் வாட்டிக் கொண்டிருக்கிற மொழிப் பிரச்சனை பற்றி, பொது வாழ்க்கைத் துறையிலே பல்வேறு கோணங்களிலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறவர்கள் ஒரே மேடையில் கூடி, தத்தமது கருத்தினை வெளியிடுகின்ற வாய்ப்பை இந்த மன்றத்தார் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு முதலில் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பல்வேறு கோணங்களிலிருந்து பொது வாழ்க்கைத் துறையில் பணியாற்றுகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் ஒன்றுபடுவதென்பது, திருமணக் காலங்களிலும், யாராவது மறைகின்ற நேரங்களிலும் மட்டும்தான் என்பது உண்மையிலே நாட்டிலே நாம் பார்த்துவந்த நிகழ்ச்சிகளாகும்.

அதிசயமான கூட்டம்!

இன்றைய தினம் அப்படிப்பட்ட நிகழ்ச்சியாக இல்லாமல், நாட்டு மக்களுடைய எதிர்காலத்தை வெகுவாக நிர்ணயிக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சனையான மொழிப் பிரச்சனையில் இங்கே பலதரப்பட்ட தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். ஒன்றுபட்டு இருக்கிறார்கள் – ஒரு சேர உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதே, இந்த நாட்டிலே அதிசயமான கூட்டமென்று பத்திரிகைகளிலே எழுதப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், நம்முடைய மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவரும், இந்தியத் துணைக்கண்டடத்தின் விடுதலைக்கு மிக மிகக் காரணகர்த்தவராக இருந்தவரும், ஒரு காலத்திலே என்னைக் கைதியாக்கியவரும், நம்முடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரியவருமானவர் இருக்கின்றார்.

மறுக்க முடியா ஆதாரங்கள்!

மொழிப் பிரச்சனையில் அவர் காட்டுகின்ற ஆர்வம் – ஆதாரம் – புள்ளி விவரங்கள் எந்தத் தலைவர்களாலும் மறுக்கப்படவில்லை. அவர் காட்டிய காரணங்கள், எத்தனையும் மறுக்காமல், ‘அவர் கொடுத்திருக்கின்ற புள்ளி விவரங்கள் தவறானது‘ என்று எடுத்துக்காட்டாமல், அந்த வாதத்திலிருந்து வருகிற முடிவுகளை மட்டும் பல தலைவர்கள் பெற மறுக்கின்றார்கள்.

இன்றைய கூட்டத்தில் பல்வேறு கோணங்களிலிருந்து பணியாற்றுகின்றவர்கள் என்ற முறையில் மட்டுமல்ல – பல்வேறு பிரச்சனைகளில் மாறுபட்ட கருத்தைக் கொண்ட நாம் இங்கே கூடியிருப்பது, இந்திப் பிரச்சனையிலே அன்பர் ஆச்சாரியார் அவர்கள் எடுத்துச் சொல்லுகின்ற காரணங்களை மறுத்துச் சொல்ல எந்தத் தலைவர்களம் முன் வராததிலிருந்து அவர்கள் ஆற்றலற்றவர்கள் என்ற முடிவுக்கு நான் வரவில்லை, அவர்களிடத்தில் அதற்கான சரக்கு இல்லை என்ற முடிவுக்கு நாம் வருகிறோம் – நாடும் வருகிறது என்றுதான் பொருள்.

நாமெல்லாம் ஒன்றல்லவா?

அதனைத்தான் அண்மையில் நடைபெற்ற கௌஹாத்தி காங்கிரசில் மொழிப் பிரச்சனையைப் பற்றி அலசி ஆராய்ந்து, தவறான பாதைகளில் செல்பவர்களைத் திருத்துவதற்காகவும், திருத்தவே முடியாதவர்களைக் கூடச் சிறிது சாந்தப்படுத்துவதற்காகவும் பெரும் பெரும் தலைவர்கள் நல்ல நல்ல ஆதாரங்களைத் தருவார்கள் என்று நாட்டு மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், முடிவிலே கிடைத்தது ஒரு தீர்மானம், ‘நாம் எல்லாம் ஒன்றல்லவா?‘ என்ற வாதத்தைத்தான் நாம் அதிலே காண்கிறோம் ‘நாமெல்லாம் ஒன்றல்லவா, ஆகையினால் ஏன் பயம் – ஏன் சந்தேகம்?‘ என்ற வாதத்தை என்னிடம் சொல்லலாம், ஏனென்றால், வடநாட்டில் உள்ளவர்களும் தென்னாட்டில் உள்ளவர்களும் வேறுவேறு என்ற அழுத்தந்திருத்தமான கருத்தைக் கொண்டவன் நான்.

நாமெல்லாம் ஒன்றல்லா, நமக்குள் ஏன் தகராறு? என்று அன்பர் ஆச்சாரியார் அவர்களிடத்தில் சொல்கிறார்கள். மூத்த குழந்தைகளைப் பெற்றெடுத்தவளுக்கு கலியாணமாகி மூன்று மாதமானவள் பிள்ளை பெறுகின்ற வித்தை எப்படி என்று, தனி அறையில் கற்றுக் கொடுப்பது போலாகும் – ‘நாமெல்லாம் ஒன்றுதான்‘, நமக்கு இந்தி மொழியே அதிகார மொழியாக இருக்கட்டும் என்று ஆச்சாரியாரிடத்திலே வாதாடுவது.

இன்றைய பிரச்சனை, இந்தியச் சர்க்காருக்கும் இந்தியச் சர்க்காரை நடத்திச் செல்லுகின்ற காங்கிரசுக் கட்சிக்கும் – அந்தக் காங்கிரசுக் கட்சி உருவாவதற்கும் இந்தியச் சர்க்கார் அமைக்கப்படுவதற்கும் முதல் காரணகர்த்தாவாக இருந்த அன்பர் ஆச்சாரியாருக்கும் இடையில் இருக்கின்ற பிரச்சனை மட்டுமல்ல!

ஒன்றுபடவே முடியாத காரியம்!

சாதாரணமாக, வழக்குகளில் வாதி – பரிதிவாதி என்று இரண்டு கட்சிகள் இருப்பார்கள். இந்தப் பிரச்சனையிலே நல்ல வேளையாகவோ கெட்ட வேளையாகவோ மூன்று கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். ஒன்று – இந்தியச் சர்க்கார், மற்றொன்று இந்தியச் சர்க்காரை நிறுவியவரும், இந்தியச் சர்க்கார் நல்வழியிலே நடந்து சென்றால்தான் இந்த நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்குமென்று இன்னமும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பவரும், இந்தியா சிதறுண்டு போகக் கூடாதென்று கருதி, தன்னால் முடியுமானால் இந்தியா சிதறுண்டு போகாமல் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் வைத்துக் கொண்டிருப்பவருமான அன்பர் ஆச்சாரியார் அவர்களும் அவரைப் போன்றவர்களும் இரண்டாவது கட்சியாக இருக்கிறார்கள். மூன்றாவது கட்சிக்காரர்களாக நாங்கள் இருக்கிறோம். மிக இயலாத காரியத்தை மேற்சொன்ன இரண்டு பேருமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால், இது ஆற்றலைப் பொறுத்த விஷயமல்ல, இருக்க முடியாத ஒன்றிற்காக – ஒன்றுபடவே முடியாத ஒரு காரியத்தில் இவர்கள் இருசாராரும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது எங்கள் எண்ணம்.

புரிந்து கொள்ளுவதே பிரச்சனை!

இதிலே யாருடையது சரி, யாருடையது தவறு என்பதல்ல பிரச்சனை, ஒருவரை மற்றவர் புரிந்துகொள்கிறார்களா என்பதுதான் முதல் பிரச்சனையாகும். ஆச்சாரியார், மற்றும் ‘இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது‘ என்ற எடுத்துச் சொல்கின்ற அன்பர்கின் வாதங்களையும் காரணங்களையும், இந்தியச் சர்க்காரை நடத்துகின்ற பெருந்தலைவர்களும், அந்தச் சர்க்காரை நடத்துகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிற காங்கிரசுக் கட்சித் தலைவர்களும் சரியாகப் புரிந்துகொண்டார்களா என்பதை அவர்கள் பேசும் பேச்சுக்களை ஆராய்ந்து பார்த்தால் புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல புரிந்து கொள்ள மறுக்கிறவர்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது.

இந்திய ஆட்சிமொழி ஆக்காதீர்கள்!

ஆச்சாரியார் சொல்லுகிறார் – இந்த நாட்டிலே, இந்தியைப் பேசுகின்ற மக்கள் இந்தியத் துணைக் கண்ட முழுவதிலும் பரவலாக இல்லை – என்று! இந்த வாதத்தை யாரும் மறுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியிலேதான் இந்தி பேசும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்‘ என்கிறாா. அதனையும் ‘இல்லை‘ என்று யாரும் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பெரும்பான்மை மக்கள் இந்தியைப் பேசுகின்றார்கள் என்ற வாதம் சரியல்ல என்பதையும் யாரும் மறுக்கவில்லை. ஆகையினாலே, இந்தியை ஆட்சி மொழியாக்காதீர்கள் என்ற அறிவுரையை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள்.

வாதத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள் – அந்த வாதத்திலிருந்து வருகின்ற முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள் என்றால் மூன்று காரணங்களைத்தான் சொல்ல முடியும். ஒன்று. எந்த முடிவுகளைச் செய்தாலும் அதைச் சுமந்து தீர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம் என்ற துணிவு அவர்களுக்கு இருக்க வேண்டும், மற்றொன்று – இவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள், நம் தீர்ப்பைச் சொல்லிவிட்டால் இவர்கள் சும்மாயிருந்து விடுவார்கள் என்ற எண்ணம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம், மூன்றாவது – தமிழ்நாட்டில் இப்போது இருக்கின்ற நிலைமையில் இவர்கள் ஒன்றுபடுவதென்பது ஏது, இவர்கள் ஒன்றுபடாத நிலையிலே ஒருவர் மற்றவருக்குள் பேதத்தை – இவர் அவர் மேலுள்ள சந்தேகத்தை – இந்த வகுப்பு அந்த வகுப்பு மேல் கொண்டுள்ள கிலேசத்தை – இதையெல்லாம் வைத்துக் கொண்டு நீண்ட நாளைக்குத் தள்ளிப் போட்டுவிடலாம் என்று நினைக்கலாம்.

லோகியாவுக்கு உடலெல்லாம் மூளை!

அப்படிக்கூட கருதுவார்களா? என்று என்னைக் கேட்பீர்கள். லோகியாவை, அறிவாளி என்று நாடு சொல்லுகிறது. ஏதோ ஒரு ஏட்டிலே படித்தேன் – மற்றவர்களுக்கெல்லாம் தலையில் மூளையிருக்கிறது, லோகியாவிற்கு உடல் முழுவதும் மூளையிருக்கிறது என்று மகாத்மா காந்தி சொன்னதாக அந்த வட்டாரத்திலே சொல்லுகிறார்கள் – என்று, அந்த ஏட்டிலே எழுதப்பட்டிருந்தது.

மகாத்மா என்னென்ன சொன்னார் என்பதை அறிந்திருப்பவரும், என்னென்ன சொல்ல வேண்டுமென்று இருந்தார் என்பதைத் தெரிந்திருப்பவருமான ஆச்சாரியார் அவர்கள், அவருடைய பேச்சிலே, ‘மகாத்மா அப்படி சொன்னாரா இல்லையா?‘ என்பதனை விளக்கிச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். டாக்டர் லோகியா அவர்கள், ஆச்சாரியார் அவர்கள் இந்திப் பிரச்சனையை எடுத்துக் கொண்டதற்கு ஒரு காரணமிருக்கிறது, அது எனக்கு விளங்கிவிட்டது என்று சொல்லியிருக்கிறார், அது என்ன காரணம் என்று யாரும் அவரைக் கேட்கவில்லை, யாரோ கேட்டதாக மனதில் வைத்துக்கொண்டு அவர் சொல்லுகின்றார் – ‘தென்னாட்டிலே பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்ற பகுப்பாரிடையே வளர்ந்து வரும் கிலேசமிருக்கிறது, இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஆச்சாரியார், இந்திப் பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறார்‘ என்று டாக்டர் லோகியா சொல்லியிருக்கிறார்.

இப்படி ஆச்சாரியார் அவர்களுடைய நோக்கத்திற்கு மாசு கற்பிப்பவர்களும், அவர் எந்தக் காரணத்திற்கு இதை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கண்டு பிடித்துவிட்டால், அதன்பிறகு உண்மையைக் காணுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடுமே என்று பயப்பட்டுக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள், இந்த நாட்டில்!

பலாப்பழ்தை உரித்து உண்பது சுலபமல்ல!

வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடுவது மிகவும் எளிதான காரியம், பலாப்பழ்தை உரித்துச் சாப்பிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

பலாப்பழத்தை உரித்துச் சாப்பிடுகின்ற நேரத்தில், பழத்தைச் சாப்பிடலாமா என்ற ஆசை ஒருபுறமிருக்கும், அதன் உள்ளேயிருந்து சுளை எடுக்கின்ற நேரத்தில் கையில் ஒட்டிக்கொள்கிற பிசின் ஒரு புறமிருக்கும், இதை நீக்குவது எப்படி என்று திண்டாடுவதை நாம் பார்க்கலாம் விஷயம் தெரிந்தவர்கள், ஒரு கையில் நெய்யை வைத்தக்கொண்டு அதனை விரலில், தொட்டுவிட்டு, பிறகு பிலாச்சுளையை எடுப்பார்கள்.

தென்னாட்டில் நிலைமை எப்படியாகிவிட்டது என்றால் என்னுடைய கருத்தை நான் இங்கே சொல்லுகிறேன். அது அனுபவக்குறைவான கருத்தாக இருக்கலாம் – என்றுடைய கருத்தும் நாட்டின் கருத்துக்களிலே ஒன்று என்ற முறையில் சொல்லப் பிரியப்படுகிறேன் – என்னைப் பொறுத்தவரையில், பெரும் தலைவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்கு விடுதலையை வாங்கிப் பலாப்பழத்தை உரித்துக் சுளையை எடுத்து வேறொருவரிடத்திலே கொடுத்துவிட்டதைப் போலக் கொடுத்துவிட்டக் கடைசிவரை சுளையைக் கொடுக்கிற வேலையிலே இருந்ததாலே, கையிலே உள்ள பிசினும் போகாமலிருப்பதைத்தான் நாம் இன்றைய தினம் பார்க்கிறோம்.

பிசின் நிலைமை தொடர்கிறது!

இதிலிருந்து, பலாச்சுளை சுவையாக இருக்குமா, இருக்காதா என்பதிலே எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை – சுயராஜ்யம் நல்லதா, இல்லையா என்பதிலே எனக்குச் சந்தேகமில்லை. கிடைத்த அந்தச் சுயராஜ்யம் – பலாச்சுளையை எடுத்துப் பக்கத்திலிருப்போர் கையி்லே கொடுத்துவிட்டு, கையிலே உள்ள பசையைப் போக்கிக்கொள்ள திண்டாடுவதைப்போல், விடுதலையை வாங்கிக் கொடுத்துவிட்டு, இன்றைய தினம், நம்முடைய மொழி எதுவாக இருக்க வேண்டும் – நம்முடைய வாழ்க்கை நிலை எவ்வாறு அமைய வேண்டும் – சட்ட திட்டங்கள் யாராலே எப்படி எப்படி எந்த இடத்திலே உண்டாக்கப்பட வேண்டும் – மக்களிடம் வசூலிக்கும் வரிப்பணம் எப்படி எப்படி பங்கிட்டுக் கொடுக்கப்பட வேண்டும் – தொழில் முறையெல்லாம் எப்படி அமைக்கப்பட வேண்டு்ம் என்று, இத்தனை விதத்திலும் நாம் ஒரு நல்ல முடிவுக்கு வர முடியாமலும் – நாமே ஒரு நல்ல முடிவுக்கு வர முடியாத நிலையிலும் இருக்கின்ற ஒரு ‘பிசின்‘ நிலைமை நாட்டிலே இருப்பதைப் பார்க்கிறோம்.

ஆகையினாலேதான் நான், ‘மூன்றாவது கட்சி‘ என்று சொன்னேன். அதை நான் வெளிப்படையாகச் சொல்வதிலே அன்பர் ஆச்சாரியார் அவர்கள் வருத்தப்பட்டுக்கொள்ள மாட்டார் என்று கருதுகிறேன். ஒருவருக்கொருவர் வெளிப்படையான விஷயங்களை எடுத்துச் சொல்வதுதான் அவர்களுக்குக் காட்டக்கூடிய மரியாதை என்ற முறையிலே நான் வெளிப்படையாகச் சொல்லுகிறேன்.

விபரீதம் உண்டாக்கும்!

ஆச்சாரியார் அவர்கள், ‘இந்தி தென்னாட்டிலே ஆட்சி மொழியாகப் புகுத்தப்பட்டால், அது, வேறு பல விபரீதமான விளைவுகளுக்கு இடமுண்டாக்கும்‘ என்று விளக்குகிறார்கள், இந்தியை ஆட்சி மொழியாகப் புகுத்துவதிலிருந்து விபரீதம் தொடர்ந்து வரும் என்பதை அவர்களாக எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.

என்னுடைய கருத்து – இந்தி புகுத்தப்பட்டால் – அதிலிருந்து விபரீத விளைவுகள் வருகிறதா இல்லையா என்பதிலே மாறுபாடான கருத்தில்லை, ஐயப்பாடில்லை. இந்தி புகுத்தப்பட்டிருப்பதுகூட, விபரீதக் காரியங்களின் விளைவாகத்தானி்ருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

இந்தியத் துணைக் கண்டத்திற்கு 14 தேசிய மொழிகள் – இருப்பதாக அரசியல் சட்டம் கூடச் சொல்லுகிறது. 14 தேசிய மொழிகள் நமக்கு இருக்கும்போது, ஒன்று 14 தேசிய மொழிகளும் அதிகார மொழிகளாகட்டும் என்று எடுத்துச் சொல்வது எளிது. சுலபத்தில் புரிந்து கொள்ளக்கூடியது. நடைமுறைக்கு வேண்டுமானால் சில சிக்கல்கள் இருக்குமே தவிர, அப்படிச் சொல்வதிலே அனைவருக்கும் திருப்தியிருக்கும்.

இந்திதான் தேசிய மொழியா?

14 தேசிய மொழிகளைக் கொண்ட பரந்த உபகண்டத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியை எடுத்து மற்ற 13 மொழிகளுக்கம் தொடர்பு ஏற்படுத்துவதற்க இந்த ஒரு மொழிதான் இலாயக்கு என்று வாதாடுகிறார்கள் என்றால், அந்த மொழி பேசகின்றவர்கள் வாதாடுமிடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது தவிர, வேறு என்ன பொருளிருக்கிறது என்று என்னையும் கேட்டுக் கொள்கிறேன் – உங்களையும் கேட்டுக் கொள்கிறேன் – உங்களையும் எண்ணிப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தமிழை ஆட்சி மொழி ஆக்குவார்களா?

சில காலத்துக்கு முன்பு ஆச்சாரியார் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்தேன். இந்தியத் துணைக் கண்டத்தின் ஒற்றுமையிலே வடக்கே உள்ளவர்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்குமானால் வடக்கே உள்ளவர்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்குமானால், பெரும்பாலோர் பேசுகின்ற இந்தி மொழிக்குப் பதிலாக மிகச் சிறுபாலோர் என்று கருதப்படுகிற தமிழ் மொழியை எடுத்து இந்திய ஆட்சி மொழியாக்குவார்களா என்று அவர் அதிலே கேட்டிருக்கிறார்.

தமிழை ஆட்சிமொழியாக்கி விட வேண்டும் என்ற ஆச்சாரியார் அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டால், ஒருவேளை, எங்களுடைய பிரச்சாரம் பலகீனப்பட்டாலும்படும், நல்ல வேளையாக, இந்தப் புத்திசாலித்தனம் டெல்லிக்கு இன்னும் ஏற்படவில்லை.

தமிழை ஆட்சி மொழியாக்கி – ‘தமிழையே நாங்கள் ஆட்சி மொழியாக்கி இருக்கிறோம், இப்பொழுது இந்தியாவுடன் ஒன்றுபட என்ன சொல்லுகிறீர்கள்?‘ என்று சொன்னால் தமிழனுக்கு இருக்கிற பெருமித உணர்ச்சியினால், ‘ஆம்‘ நம்மடைய மொழிதான் டெல்லி அரியாசனத்திலிருக்கிறது! ஆகவே, இந்தியைத் துணைக்கண்டம் நம்முடைய நாடுதான், அந்நியரிடம் அதிகாரிமிருந்தாலும், அது தமிழிலேதான் நடத்தப்படுகிறது, அதனால், தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல பேர் எண்ணியிருக்கக் கூடும்.

காலத்தின் கணிப்பு

நான் ஒரு சமயம் – தமிழ்நாடு தனியாகத்தான் பிரிய வேண்டுமென்று காலத்தினுடைய கணிப்பு இருக்கிறது என்று கருதுகிறேன், ஆகையினால்தான், ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற ஆச்சாரியாரைக் கூட – வாயளவில் சொல்லவில்லை, செயலளவில் – பிரிந்து போய்விடுங்கள், பிரிந்து போய்விடுங்கள் என்று சொல்லுகிறார்கள், வடக்கிலுள்ளவர்கள்!

இந்தியத் துணைக்கண்டம் ஒன்றாக இருப்பதற்கு வழி இது என்று ஆச்சாரியார் சொல்லுகின்ற நேரத்தில், இந்தியத் துணைக்கண்டம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று கருதுகின்ற இந்திய சர்க்கார் – உண்மையிலேயே ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்பதிலே அக்கறை இருக்குமேயானால், ஆச்சாரியாரை அழைத்துக் கேட்டிருக்கலாம். அவரை அழைத்து கேட்பதற்கு அவர்களுக்கு இன்றைய தினம் அவர் தேவையில்லை என்று கருதியிருந்தாலும், அந்த விஷயத்தில் அவர் சொல்லுகின்ற காரணங்களை அலசிக்காட்டி, இன்னின்ன காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கன – இன்னின்ன காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கன அல்ல என்ற எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? ‘இந்தியைப் புகுத்துவது மூலமாகத்தான் இந்திய யூனியன் – இந்திய அரசினுடைய ஒற்றுமையைக் காப்பாற்ற முடியும்‘ என்கிறார்கள்! நான் உங்களிடத்தில் சொன்ன இந்த மூன்று கட்சிகளில், ஒரு கட்சியாக இருக்கிற இந்தியச் சர்க்கார், “இந்தியைப் புகுத்துவது மூலமாகத்தான் இந்தியா ஒன்றுபடும் என்ற வாதாடுகிறது. மற்றொரு கட்சியாக இருக்கிற அன்பர் ஆச்சாரியார் அவர்கள், ‘நீங்கள் இப்படி இந்தியைத் திணித்தால், இந்தியா ஒன்றுபடாது, சிதறுண்டுதான் போகும்‘ என்று சொல்லுகிறார்கள்.

ஒன்றல்லாத ஒன்று – இந்தியா!

இந்தியா ஒன்றல்ல, ஒன்று அல்லாத ஒன்றை வைத்துக்கொண்டு, ஒன்றுபடுவதற்கு ஒரு மார்க்கமும், சிதறுண்டு போவதற்கு இது ஒரு வழி என்றும் இரண்டும் பேரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன்.

ஒரு நாடு சிறியதா பெரியதா என்ற பிரச்சனையை வைத்து, இந்தியாவை ஒன்றுபடுத்தவில்லை, இந்தியா ஒன்று என்ற எண்ணம், இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தவுடன் அவர்கள் தீட்டிய ஒரு அரசியல் திட்டத்தில் ஏற்படச் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஒரே நாடாகத் திகழ வேண்டுமென்பதற்கு, ஆச்சாரியார் அவர்கள் மனதிலே பல எண்ணங்கள் தோன்றியிருக்கலாம்.

‘பல்வேறு ராஜ்யங்களாகப் பிரிந்திருந்த காரணத்தால்தான், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பல்வேறு ராஜ்யங்களும் அந்நியனுக்கு அடிமைப்பட்டுப் போய்விட்டன, இந்தியா பரந்து விரிந்திருந்தால் – குமரி முதல் இமயம் வரை ஒரே நாடாகப் பரிணமித்திருந்தால் – புதுவலிவு கிடைக்கும், இந்த வலிவு கண்டு அந்நியன் அச்சப்பட்டு, இமயமலைச் சாரலிலும் காலை வைக்க அஞ்சுவான் என்பதற்காக இந்தியா ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று எண்ணியிருக்கக்கூடும்.

கள்வனும் புகுவானே தோட்டத்தில்!

தோட்டத்துக்கு கதவைத் திறந்து வைக்கிற்ன நேரத்தில், தோட்டத்திலிருக்கிற மல்லிகை மணம்தான் உள்ளே வர வேண்டுமென்று தோட்டக்காரன் கதவைத் திறந்து வைக்கிறான், ஆனால், தோட்டத்துக்கதவு திறந்திருந்தால், மல்லிகை மணம் வருவதற்குப் பதில் வழியிலே போகும் கள்வனே கூட உள்ளே புகுந்து விடுகிறான்.

(நம்நாடு - 27-1-1958)