அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வேலை நிறுத்தம் என்பது விளையாட்டல்ல!

சென்னைக் சட்டமன்றத்தில் அண்ணா முழக்கம்

சென்னை ஏப்ரல் 8 – இன்று சட்டமன்றத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் அண்ணா அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய பேருரையின் சுருக்கம் இங்குத் தரப்படுகிறது.

தொழில் துறைக்காக இரண்டு கோடி ரூபாய் மானியம் வேண்டும் என்பதற்குப் பதிலாக 10 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இந்த மானியக் கோரிக்கையின் மீது நாங்கள் வெட்டுப் பிரேரணை கொண்டு வந்து இப்படிப் பேசுகிறோம்.

தொழில் துறைக்காக 5-6 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டுத் தொழிலைப் பெருக்க வேண்டிய நமது தொழிலமைச்சர் அடிக்கடி அமெரிக்கா போய்வந்தும், இரண்டு கோடிதான் கேட்கிறார் என்றால் அது அந்த நாட்டுக்கு !அமெரிக்காவுக்கு) சாத்தியம். இந்த நாட்டுக்கு சாத்தியம் இல்லை என்று சொல்லக்கூடும்.

அதில் அரசியல் கலந்திருக்கிறது.

அமைச்சர் அவர்கள் தமது துவக்க உரையில் சில அரசியல் கருத்துக்களைப் பேசினார். எங்களுக்கு மக்கள் ஓட்டளித்துத் தான் நாங்கள் பதவிக்கு வந்திருக்கிறோம்.. தனியார் துறை பொதுத்துறை, மாநிலச் சர்க்கார் – மத்தியச் சர்க்கார் என்ற வித்தியாசம் எங்களுக்கில்லை, என்று பேசத்தான் எங்களுக்கு ஓட்டளித்தார்கள் – என்ற கருத்திலே அமைச்சர் பேசினார். அந்தக் கருத்து அவர் பேச்சிலே தொக்கியிருக்கிறது. அதிலே அரசியல் கலந்திருக்கிறது என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.

அவர் பேசுகையில் சிறுசிறு தொழில்களை ஆரம்பித்தால் தான் எல்லோருக்கும் வேலை கிடைக்குமென்கிறார். இதோ இங்கே இந்த மன்றத்தில் ஏராளமான மின்சார விசிறிகள் சுற்றுகின்றன. இவற்றிற்குப் பதிலாகப் பனை ஓலை விசிறிகளைக் கொடுத்து விசிறிச் சொன்னால் ஒரு ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். நூல் ஆலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு அம்பர் சர்க்காவையும், தக்காளியையும் கொடுத்து நூற்கச் சொன்னால் எத்தனையோ இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். சர்க்கரை ஆலைக்குப் பதில் வேறு வழிகளில் கரும்பை ஆட்டினால் எத்தனையோ இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கம். அந்தப் பாதைக்கு அழைத்துச் செல்ல அமைச்சர் விரும்புகிறாரா என்று கேட்க விரும்புகிறேன்.

எதைப் பார்த்துப் பாராட்டினார்கள்?

பெரிய தொழில்கள் சிறிய தொழில்களுக்கு அடிப்படையாகும். பெரிய தொழில்களிலிருந்து கிடைக்கும் மூலப் பொருள்களை வைத்துக் கொண்டுதான் சிறுதொழில்களை நடத்த வேண்டும்.

தொழில்களில் பேசி இண்டஸ்ட்ரீஸ் !அடிப்படைத் தொழில்கள்) என்றும் ஹெவி இன்டஸ்ட்ரீஸ் !கனரகத் தொழில்கள்) என்றும் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.

நம் நாட்டில் கற்றாழைத் தொழிலில் பலர் ஈடுபட்டிருப்பதாகவும் அதை மேல் நாட்டார் பார்த்துப் பாராட்டிச் சொல்கிறார்கள் என்றும் அமைச்சர் சொன்னார்.

எதைப் பார்த்துப் பாராட்டினார்கள்? அதன் வழவழப்பைப் பார்த்தா? அல்லது அதன் நாற்றத்தைப் பார்த்தா?

நம்முடைய அமைச்சர் அவர்கள் கொண்டுள்ள அடிப்படைக் கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் தொழில்கள் வளர என்ன தேவை என்பதை ஆராயவேண்டும். முதலில் என்ன விளைபொருள்கள் பெருக வேண்டும் எவ்வளவு கனிப்பொருள்கள் எவ்வளவு மூலப்பொருள்கள் வேண்டும். தாங்கள் செய்கின்ற காரியம் சரிதானா – தேவைதானா – நடைமுறைக்கு ஏற்றதுதானா – மேல்நாட்டு நிபுணர்கள் கருத்துக்கு உகந்ததுதானா என்பதையெல்லாம் பார்க்கவேண்டும்.

டெல்லி நம் சர்க்காரா?

தொழில்களை வளர்க்க முதலில் மூலதனம் கிடைக்க வேண்டும். அதற்கப் பேங்கிங் சிஸ்டம் வேண்டும். வெளிநாட்டுச் செலாவணி வசதி வேண்டும். இந்தத் துறைகளில் நம்முடைய தொழிலமைச்சருக்கு நமது மாநிலச் சர்க்காருக்கு ஒரு துளியும் உரிமையில்லை. எதற்கெடுத்தாலும் எதிர்வீட்டை எட்டிப் பார்ப்பது போல டெல்லியை எதிர்பார்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

தொழில்கள் வளர பாதை வசதி, இரயில் வசதி, நீர் வழி வாய்க்கால் வசதி ஆகியவை வேண்டும். இதற்கும் அதிகாரம் இந்தச் சர்க்காரிடத்தில் இல்லை. டெல்லி சர்க்காரும் எங்கள் சர்க்கார்தான் என்று அமைச்சர் சொல்லலாம். நான் அப்படிக் கருதவில்லை.

இங்கு நெல், சோளம், கம்பு பயிரிடுவது, பனை ஓலை முடைவது, கருங்கள் உடைப்பது, கற்றாழை நார் திரிப்பது இப்படிப்பட்ட தொழில்கள்தான் வளர்க்கப்படுகின்றன.

நாங்கள் பேசும் போதுதான் மறுக்கிறார்கள்

நம்முடைய அமைச்சர்கள் நாங்கள் சொல்வதை இங்கே மறுத்துப் பேசினாலும், இவர்கள் டெல்லிக்குப் போகும் போதெல்லாம் அவர்கள் கூடவே நானும் போகிறேன் என்பதை அரசியல் உலகம் மறுக்காது. இவர்கள் அங்கே போனால் இந்த நாட்டின் மீது பற்றும் பாசமும் ஏற்பட்டுவிடுகிறது. எங்கள் மாநிலத்திற்க அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்கள். தொழில்கள் எல்லாம் நம் மாநிலத்தில் இருக்க வேண்டும் என்கிற பாசத்திலிருந்து இவர்கள் அடியோடு விலகிவிடுவதில்லை. பாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாங்கள் பேசும்போதுதான் மறுத்துப் பேசுகிறார்கள்.

இந்த மன்றத்திலேகூடச் சில உறுப்பினர்கள் இன்று பேசுகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு – மேற்கு தஞ்சை மாவட்டத்தில் கிழக்கு – மேற்கு, சேலத்திலே கிழக்கு – மேற்கு என்று பிரித்துப் பேசித் தங்கள் தங்கள் பகுதிக்கு வசதி அதிகரிக் கவேண்டுமென்று பேசினார்கள்.

நாங்கள் வடக்கு – தெற்கு பேசுகிறோம். இங்கே நீங்கள் கிழக்கு மேற்கு பேசுகிறீர்கள்.

இங்கே தொழில்கள் வளரவேண்டும் என்று கோருவது பெருமைக்காக அல்ல, தொழில் வளர்ந்தால்தான் பொருளாதாரம் வளரும் வேலை வாய்ப்புக்கள் பெருகும் மக்களுக்கு வாழ வழி கிடைக்கும்.

இங்கே ஏற்கெனவேயுள்ள பொருளாதாரத்தை வைத்துத் தான் தொழில்களை வளர்க்க முயற்சி செய்கிறார்கள்.

சூரிய ஒளிச் சக்தி

இஸ்ரேல் நாட்டில் சூரிய வெப்பத்தின் மூலம் தொழில்கள் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டு முன்னேறியுள்ளன. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சக்தி சாதாரண மின்சக்தியைவிட 24,000 மடங்கு அதிகம் என நிபுணர்கள் கணக்கெடுத்துக் கூறியுள்ளனர். அண்மையிலே சென்னையிலே நடைபெற்ற அமெரிக்கக் கண்காட்சியில் கூட சூரிய ஒளிச் சக்தியை எடுத்துக் காட்டினார்கள். இயற்கையிலும், பூமியிலும் மறைந்த கிடக்கும் பொருளாதாரத்தை வைத்துத் தொழில் நடத்த முயற்சி செய்யவேண்டும்.

நேற்று இந்த மன்றத்தில் வேதாரண்யம் தொகுதி உறுப்பினர் !வேதரத்தினம்) அவர்கள் ஒரு கேள்வி கேட்டார். சேலத்து இரும்பை எடுத்துச் சென்று வெள்ளைக்காரர்கள் லண்டனிலே ஒரு பாலம் கட்டியிருப்பதாகப் பொறுப்புள்ள பார்லிமெண்டு உறுப்பினர் ஒருவர் சொல்லி வருகிறாரே அது உண்மையா? சேலம் இரும்பு அத்தகைய நல்ல இரும்புதானா? என்று கேட்டார். அதற்கத் தொழில் அமைச்சர் பதிலளிக்கையில் அப்படி எங்களுக்கு ஒன்றும் தகவல் இல்லாததினால் அந்தத் தகவலே இல்லை என்று சொல்லமுடியாது. தகவல் இருக்கிறது. இருக்கக்கூடும் என்பதற்கு நீங்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையிலிருந்தே எடுத்தக் காட்ட விரும்புகிறேன்.

1830-ம் ஆண்டில் சென்னையில் உத்தியோகத்திலிருந்த ஒரு ஆங்கிலேயர் உத்தியோகத்திலிருந்து விலகி ஒரு இரும்புத் தொழிற் சாலை ஆரம்பித்தார் – என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் சேலம் குள்ளம்பட்டியிலும், வடஆற்காடு மாவட்டத்திலும் தொழிற்சாலை ஏறப்டுத்தினார் என்றும் அவற்றிலே எத்தனை டன் இரும்பு உருக்கப்பட்டது என்றும், ஏன் அத்தொழில் கைவிடப்பட்டது என்றும் நீங்கள் வெளியிட்டுள்ள தொழில்களுக்கான சூழ்நிலை பற்றிய அறிக்கையில் குறிப்பு இருக்கிறது.

தொழில் வளர உதவாது

இது உண்மையாக இருக்குமானால் ஏன் அந்த இரும்பு லண்டனுக்குப் போயிருக்க முடியாது. அமெரிக்காவுக்கு அடிக்கடி போய்வந்தவரான தொழிலமைச்சர் இப்படிச் சொல்வது அமெரிக்கா போய்வருவதிலே உள்ள அக்கறையைத்தான் காட்டுமே தவிர தொழில் வளர உதவாது.

சேலம் இரும்பு பற்றி ஆராய்ச்சி உரையில் அந்த இரும்பை யார் பார்த்தாலும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சில தினங்களுக்குமுன் பேசிய அமைச்சர்கூட சேலம் இரும்பைப் பற்றி ஆராய நிபுணர்கள் உத்தேசித்திருப்பதாகத் தான் சொன்னாலே தவிர திட்டவட்டமாகத் தொழிற்சாலை ஏற்படுத்தப்படும் என்று கூறவில்லை.

காவிரிப் பகுதியில் உள்ள எண்ணெய் பற்றி, எண்ணெய் போல் வழவழா என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, இரும்பு போல் திட்டவட்டமாகச் சொல்லவில்லை.

தேனீ வளர்ப்பு, பட்டு உற்பத்திக்காக ரூ.12 இலட்சம் ஒதுக்கி இருக்கிறார்கள். அந்தத் திட்டம் மூலம் 12 பைசா கூட இந்தச் சர்க்காருக்குக் கிடைக்கவில்லை. கொள்ளேகாலம் மைசூருக்கப் போனாலும் வாதாடி அப்பணத்தைப் பெற்றிருக்கவேண்டும். ஏன் அந்தப் பணத்தை மைசூர் சர்க்காரிடம் கேட்டிருக்கக்கூடாது “தாலவாடி“ என்ற ஊர் மைசூருக்குச் சேரவேண்டுமென்று சொல்லி ஊரில் கிளர்ச்சி செய்வதாகப் பத்திரிகையிலே பார்த்தேன். நம் எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமான முதலமைச்சர் காமராசர் உருவப்படத்தைத் தீயிட்டுக் கொளுத்திக் கிளர்ச்சி செய்திருக்கிறார்கள்.

கிடைக்கும் என்றால் நடத்துங்கள்

இதையும் ஆரணியாறு போல் விட்டுவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். தேனீ வளர்த்தோம் ஆனால் தேனீ வேறு பக்கம் பறந்து விட்டது என்று பிறகு சொல்லாதீர்கள். அந்த ஊர் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்றால் திட்டத்தை நடத்துங்கள், இல்லையேல் கைவிட்டுவிடுங்கள்.

தொழில்களில் மக்களை ஈடுபடுத்துகையில், தொழில்களும் கட்டுக்கடங்கிய விலைவாசியும், நல்ல கூலியும் கிடைத்து, வாழ்க்கைத்தரம் நல்ல முறையில் இருந்தால்தான் தொழில் செய்வார்கள்.

நம்முடைய தொழிலமைச்சர் அவர்கள் தராகத் தட்டைப் போல் இருக்கிறார். அவரே தராசு பிடிப்பவராக இருந்தால் நன்மையுண்டு. ஆனால் அவர் இப்பொழுது தட்டாகத்தானிருக்கிறார். முன்னால்ல தொழிலாளர் தலைவரான அவர் இன்று தொழிலமைச்சராக மாறியிருக்கிறார்.

இன்று பேட்டைவாய்ததலை சர்க்கரைத் தொழிலாளர் போராட்டம் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் உள்துறையமைச்சர் அவர்கள் போலீசு பாஷையிலே பேசினார். அங்கே இரண்டு அரசியல் கட்சிகள் தொழிலாளர்களைத் தூண்டிவிடுகின்றன. அடக்கி விடுவோம். ஒடுக்கி விடுவோம் என்றெல்லாம் சொன்னார்.

அமைச்சர் என்ன செய்வார்?

ஆம்நாங்கள் அங்கே தொழிற்சங்கம் நடத்தகிறோம். அது குற்றமில்லை. எல்லாவகையிலும் முறையிட்டுப் பார்த்துக் கடைசி ஆயுதமான வேலை நிறுத்தத்தை அங்கே தொழிலாளர்கள் ஆரம்பித்திருக்கின்றனர். பிப்ரவரி முதல் வாரத்தில் முறையிட்டு 11.3.60இல் தான் –அதாவது ஏறக்குறைய ஒரு மாதம் கழித்துத்தான் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். தொழிலாளர் வேலைக்குத் திரும்ப வேண்டும், நான் கட்டாயம் கவனிப்பேன், என்றெல்லாம் அமைச்சர் சொல்லவில்லை. இவர்களால் என்ன முடியும்? அந்த ஆலை வேலை செய்யவில்லை என்றால் கரும்புகளை ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் செல்லுவோம் அங்கும் இல்லை என்றால் அடுத்து அண்ணாமலையாரை நாடுவோம் என்றெல்லாம் சொன்னார்.

முடிவு என்ன என்று சொல்ல போலீசு அமைச்சருக்கு மனமில்லை என்றால் தொழிலமைச்சராவது சொல்லியிருக்கலாம். குடிசையில் கண்ணீர் விடும் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்ட தொழிலாளர் தலைவரல்ல இப்பொழுது திரு.வெங்கட்ராமன் அவர்கள் அவர் இப்பொழுது அமைச்சராக இருக்கிறார். என்ன செய்வார்?

போலீசு மனப்பான்மையைக் கைவிடுக!

வேலை நிறுத்தம் என்பது விளையாட்டல்ல, நான் இருக்கும் இந்த இடத்தில் கனம் தொழிலமைச்சர் இருப்பாரேயானால் அவர் எப்படியெல்லாம் வாதாடியிருப்பார் என்று அறியலாம். துரதிருஷ்டவசமாக அவர் சரக்கு சொத்தையாக இருப்பதால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அமைச்சர் அவர்கள், அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டால் என்ன? நில முதலாளிகளையும், பஸ் முதலாளிகளையும் கூப்பிட்டுப் பேசவில்லையா? இருட்டிலும் வெளிச்சத்திலும், இலாபத்தோடும் இலாபமில்லாமலும அவர்களுடன் பேசவில்லையா?

எனவே போலீசு மனப்பான்மையை விட்டு, பொறுப்பு மனப்பான்மையோடு நடந்து கொண்டால்தான் தொழில்கள் வளரும்.

ஐந்தாண்டுத் திட்டத்தில் தனியார் துறை, பொதுத்துறை என்று பார்க்கவில்லை, என்று அமைச்சர் சொன்னார். இது பிற்காலத்தில் எங்குக் கொண்டுபோய்விடும்? அதைத்தான் இராசகோபாலாச்சாரியாரும் ஒரு தனிக்கட்சி ஏற்படுத்திக் கொண்டு சொல்லுகிறார். அதையே நீங்கள் சொல்லுகிறீர்கள்.

19-வது நூற்றாண்டுக்குப் பிறகு, எந்த நாடும் தொழிலைத் தனியார் துறையில் விடுவது கேடுபயக்கும் என்றுதான் பொதுத்துறைக்கு திருப்பினார்கள்.

ஐந்துகோடி ரூபாய் முதல்போட இங்குச் சேஷசாயி தவிர வேறு ஒருவரும் முன்வரவில்லை என்றார் அமைச்சர். ஏன் முன்வரவில்லை? அதற்குத் தைரியம் வராததற்குக் காரணம் என்ன? போட்ட பணம் திரும்ப வருமா என்ற பயம். அப்படிப் போட்டாலும் வெளிநாட்டுச் சலுகையைப் பெறமுடியுமா என்ற சந்தேகம். இதற்கு டெல்லியில் போய்ப் பார்த்துப் பாங்கிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெறவேண்டும்.

சேசாயியிடம் மட்டும் பணம் எப்படி வந்தது?

சேஷசாயியிடம் மட்டும் கை நீட்டியபோது பணம் எப்படி கிடைத்தது என்றால் சர்க்கார் அவர்கள் பக்கம் இருக்கிறது. பாங்கிகள் அவர் பக்கம் இருக்கின்றன. பாங்கிகளும் டெல்லிநிதி அமைச்சரிடம்தான் இருக்கின்றன. எனவே இந்தச் சர்க்கார் அவற்றில் தலையிட முடியாது.

இந்த மாநில நிதியமைச்சர் பணம் மிச்சப்பட்டால் பாங்கியில் போடலாம். தேவைப்பட்டால் வாங்கலாம். அவ்வளவுதான் இவருக்கு அதிகாரம்.

பாங்குகளைக் கட்டுப்படுத்தியிருந்தால் பொருளாதாரம் வளர முடியாது. பொருளாதாரத்தின் அரிச்சுவடி இது.

அமைச்சர் அவர்கள் பொருளாதாரத்தின் அரிச்சுவடியைப் படிக்காததால் நான் இதைச் சொல்வதாகக் கருதவேண்டாம். அவர் படித்திருக்கிறார். ஆனால் சொல்ல மறுக்கிறார்.

சூதாட்டக்காரனல்ல நான்

நான் இதையெல்லாம் எடுத்துச் சொல்லாமலிருந்துவிட்டால் அமைச்சரை நான் தாழ்வாரத்தில் சந்திக்க நேரிட்டால் புன்னகையுடன் வரவேற்பார். ஆனால் புன்னகையை இலாபப் பொருளாக மாற்றும் சூதாட்டக்காரனல்ல நான். அவருடைய திறமைக்கு, இது குறைவு என்றுதான் சொல்லவிரும்புகிறேன். அவர் மீது விரோதத்தால் அல்ல நான் இப்படிச் சொல்வது. வெறும் கற்றாழை நாரில்தான் நாம் காலத்தைக் கடத்தப் போகிறோம்.

ஒவ்வொரு ஆண்டிலும் வேலை வாய்ப்பு தேடுவோர் தொகை ஏறிக் கொண்டே போகிறது. இதை வேலை தேடித்தரும் நிறுவனத்தின் மூலம் கணக்கெடுத்து, இந்த நிலையைப் போக்க எவ்வளவு முதலீடு செய்து தொழில் வளர்க்கவேண்டும் என்று பார்க்க வேண்டும்.

எந்த மாநிலத்தையும்விட இந்த மாநிலத்தில்தான் குடிசைத் தொழில் அதிகம் என்று சொன்னார்கள். குடிசைத் தொழில் என்பதற்கு இலக்கணம், தொழில் குடிசையிலே இருக்கவேண்டும் என்பதில்லை. அந்தக் கருத்திலேதான் இன்று அதைத் திறம்பட நடத்துகிறார்கள். குடிசைத் தொழிலைக் கொஞ்சம் சூரிய வெளிச்சத்துக்கு – மாடி வீட்டுக்கு – வரச் சொல்கிறேன் நான். அந்தக் காலத்தில் சிறிய தொழில்களைக் குடிசைத் தொழில் என்று வெள்ளைக்காரர்கள் பெயர் வைத்தார்கள். அதனாலேயே எந்தக் காலத்திலும் குடிசை இருக்க வேண்டும் என்ற மனப்போக்கு மாறி மின்சார சக்தியை அமெரிக்காவில் சிறு தொழில்களுக்கு எந்த அளவு பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

அணு உலை ஏற்படுத்த வேண்டும்

குந்தா திட்டம் முடிந்தபிறகு, வேறு வழியில் டில்லி சர்க்காரிடம் வாதாடியோ, போராடியோ, இராஜினாமா செய்வோம் என்று ஒப்புக்காகச் சொல்லி மிரட்டியாவது இங்கே ஒரு அணு உலை ஏற்படுத்த வேண்டும்.

இங்குள்ள பெரிய தொழில்கள் பற்றிய அறிக்கை, எல்லாப் பெருந்தொழில்களும் தனியாரிடத்திலும் மத்திய சர்க்காரிடத்திலும்தான் இருக்கின்றன, என்பதைக் காட்டுகிறது. இனி ஏற்படப் போகும் தொழில்களும் வெளிநாட்டு உதவியுடன் தனியாரே நடத்தப் போகின்றனர். இப்படி எல்லாவற்றையும் தள்ளிவிட்டுப் பார்த்தால் கற்றாழைத் தொழில் மட்டும்தான் நமக்குச் சொந்தம்.

தொழில் வளர்ச்சிக்காக இரண்டு கோடிக்குப் பதில் ரூபாய் 10 கோடி கேட்டிருந்தால் நான் வரவேற்றிருப்பேன்.

சேலம் இரும்பு பற்றிக் கனம் வேதாரண்யம் உறுப்பினர் கேட்டபோது அது பற்றி ஆதாரம் இல்லை என்றார் அமைச்சர். அதற்கு உங்களுடைய அறிக்கையே ஆதாரம். நாங்கள் எதைப் பேசினாலும் அந்தப் பிரச்சினைக்கு ஆதாரம் உங்கள் இலாகவிலே இருக்கிறதா என்றுதான் பார்க்கிறீர்கள். உங்கள் இலாகாவில் இருப்பதெல்லாம் தற்காலிக ஆதாரங்கள்தான்.

சந்தியா வந்தனம் செய்யவா கூடியிருக்கிறோம்?

நேற்று நமது வேதாரண்யம் உறுப்பினர் கேட்டதற்கு ஆதாரம் தரவேண்டும் என்பதற்காக நான் நம்முடைய சட்டமன்ற நூல் நிலையத்திற்குச் சென்று எம்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் இருக்கிறதா? என்று கேட்டேன். அவர் எழுதிய புத்தகத்தில் சேலம் மாவட்டக் கனிவளம் பற்றி ஒரு தனி அறிக்கையே இருக்கிறது. ஆனால் அந்தப் புத்தகமே நூல் நிலையத்தில் இல்லை என்ற சொல்லிவிட்டார்கள். இந்த இலட்சணத்தில்தான் நம் நூல் நிலையம் இருக்கிறது.

நம் மாநிலத் தொழில் வளர்ச்சியைப் பற்றி விவரங்களைத் தருகிறபோது மற்ற மாநிலங்களில் தொழில் வளர்ச்சிகள் பற்றியும் விவரம் கொடுக்கப்பட வேண்டும். அப்படிக் கொடுத்திருந்தால் உங்கள் திறமை தெரிந்திருக்கும்.

ஆலமரத்தடியில் நாம்கூடி அருகம்புல் தரையில் அமர்ந்து பனை ஓலையெடுத்து நமது நிதியமைச்சர் எபத்தாணியால் எழுதித் தொழிலமைச்சர் படிக்க, மற்றவர்கள் கேட்க, சந்தியா வந்தனம் செய்பவர்கள் செய்ய, தியானம் செய்பவர்கள் செய்ய – இப்படி இருந்துவிட்டுக் குடிசைக்குப் போகலாம் என்கிற நிலைமை நமக்கு இருக்குமேயானால் இப்பொழுதுள்ள குடிசைத் தொழில் நிலை நீடிக்கலாம். அமெரிக்காவுக்கு ஜெம் விமானத்தில் பறந்து சென்று வந்த தொழிலமைச்சர் அங்குக் கண்ட தொழில் கற்றாழைதானா என்று கேட்க விரும்புகிறேன்.

எனவே நம் நாட்டில் எல்லோருக்கும் வயிராற சோறு, வாழ்க்கை நடந்த தொழில், கல்வி ஆகியவை கிடைக்க வேண்டும். அதற்கேற்பத் திட்டங்கள் தீட்டப்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 9, 11-4-60)