காங்கிரஸ் தியாகிகள் விடுதலைக்காகப்
போராடிய வீரர்களென்ற காரணத்தால்தான், புலி வேட்டையாடி புலியைக்
கொன்றவர்களாக அவர்கள் இருப்பதினால்தான், இப்போது வேங்கையை
விரட்டிட அவர்களை அழைக்கிறேன்! தி.மு.கழகம், ஒரு விடுதலைப்
பாசறையாக விளங்குவதினால்தான், வெள்ளையனை வெளியேற்ற விடுதலைக்
கிளர்ச்சி நடத்திய பாசறையில் வீரர்களாக இருந்த காங்கிரஸ்
தியாகிகளை அழைக்கிறேன்!
தி.மு.கழகம் சமூக, பொருளாதார,
அரசியல் ஆகிய துறைகளில் மாபெரும் விடுதலை காண விழைகிறது!
அரசியல் துறையில் ஏகாதிபத்தியமாய் மாறி இருக்கிற வடநாட்டின்
பிடியிலிருந்து விடுதலை பெறப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது!
இந்திய அரசியல் சட்டம் வரும்வரை
வெள்ளைக்காரன் இந்த நாட்டை வேட்டைக் காடாக வைத்திருந்தான்,
அவனது ஆதிக்கம் அழிந்தான் பிறகு, இந்திய அரசியல் சட்டம்
உருவான நேரத்தில், அதை உருவாக்கிய வடநாட்டு முதலாளிகளெல்லாம்
சேர்ந்தது தென்னாட்டை திராவிடத்தை, வடநாட்டிற்கு அடிமையாக்கிவிட்டனர்,
திராவிடத்தின் சர்க்கார்கள், கமிஷன் ஏஜெண்ட் சர்க்காராக,
பில் கலெக்டர்களாக, தலையாட்டி சர்க்கார்களாக ஆக்கப்பட்டுவிட்டன,
தென்ாடு கருப்பர் பூமியாகவும், வடநாடு வெள்ளையர் நாடாகவும்,
தென்னாடு தேயவும், வடநாடு வளரவும் வழிவகுத்தது இந்திய அரசியல்
சட்டம்!
அதிகாரம் நம் கையில் இல்லை!
தென்னாட்டிலுள்ள திராவிட அரசுகளெல்லாம்
திராவிடரை இந்த நிலையில் வாழவைக்க முடிந்ததற்குக் காரணம்,
திறமையின்மையோ, அக்கரையின்மையே அல்ல திறமையும், அக்கரையும்
உடையவர்களாக இருந்தாலும் அதிகாரம் இவர்களிடம் இல்லை!
எவ்வளவு பெரிய யானையானாலும்
சேற்றில் அமிழ்ந்து படுகுழியில் வீழ்ந்துவிட்டால், எழுந்து
நடப்பது சிரம சாத்தியமானததைப் போலத்தான், வடநாட்டு ஆதிபத்தியம்
எனும் படுகுழி இருக்கிறவரையில் தென்னாடு ஈடேற முடியாது!
கடந்த ஏழு ஆண்டுகளாக என்ன
கண்டோம்? எதை இவர்களால் சாதிக்க முடிந்தது? இன்று நாட்டில்
நிலவும் கோரக்காட்சிகள்தானா காங்கிரஸ் தியாகிகள் காண விரும்பிய
சுயராஜ்யக் காட்சி!
டெல்லி 10 கோடி கடன் தரலாமா?
காங்கிரஸ் முதலாளிகளின் முகாமாய்,
பணக்காரர்களின் பாசறையாக மாறிவிட்டது. தனிப்பட்ட ஒரு முதலாளிக்குச்
சொந்தமான டாட்டா இரும்புத் தொழிற்சாலைக்கு 10 கோடி ரூபாயை
டில்லி அரசாங்கம் வட்டியில்லாக் கடனாகத் தந்திருக்கிறது,
மூன்று நாளைக்கு முன்னால்! நியாயமா இது? இந்தச் செய்கையை,
‘காங்கிரஸ் முதலாளிகளை ஆதரிக்கிறது, ஏழைகளைக் கண்ணெடுத்தும்
பார்க்க மறுக்கிறது‘, என்று சொல்லாது வேறு எப்படிச் சொல்ல
முடியும்? எனவேதான், நாங்கள் சொல்கிறோம் – இன்றுள்ள காங்கிரஸ்
ஆட்சியாளரால், ஏழைகளை வாழ்விக்க முடியாது – என்று!
இவ்வாறு பொதுச் செயலாளர் அண்ணாதுரை
அவர்கள் கொரடாச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் குறிப்பிட்டுவிட்டு
தென்னாட்டு அரசாங்கத்திடம் வாழ்வளிக்கும் அதிகாரம் இல்லை
என்பதையும், அந்த அதிகாரங்களைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கிற
டில்லி அரசாங்கம் தென்னாட்டின் மீது அக்கரை கொண்டதல்ல என்பதையும்
புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.
வடவரால் புறக்கணிக்கப்படுகிறோம்.
மேலும், பொருளாதாரத் துறையில்
எப்படி வெள்ளையன் இந்த நாட்டுத் தொழில் எல்லாம் தலை தூக்கிவிடாது
நசுக்கச் செய்து கொண்டிருந்தாலோ, அப்படியே வடநாட்டவரும்,
வெள்ளையன் காலி் செய்த எல்லாத் தொழில்களிலும் ஈடுபட்டு,
தென்னாட்டை மார்க்கெட்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும்
குறிப்பிட்ட, தென்னாடு வடவர் பிடியிலிருந்து விடுபட்டால்
அன்றி, ஏழை திராவிடர் சமுதாயம் மானத்தோடு கூடிய நல்லதோர்
வாழ்வைப் பெறுவதென்பது இயலாதென்பதை நிலை நிறுத்தினார்.
வடநாட்டிலிருந்து வந்த அகதிகளுக்கு
இங்கு வாழ்வு தந்த டில்லி அரசு, இலங்கையிலிருந்து விரட்டப்படும்
தமிழர்களுக்கு ஆதரவு தர வடநாட்டவரால் புறக்கணிக்கப்படுகிறோம்
என்று உண்மைய அறிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
அன்புடன் அழைக்கிறேன்!
எனவே, இந்த நாட்டு மக்களெல்லாம்
ஒருமித்து, ஒரு குரலாய் திராவிட நாடு திராவிடருக்கு ஆகத்தான்
வேண்டும் என்று கூறினால், நிச்சயமாக நாம் விடுதலை அடைந்தே
தீருவோம் என வெள்ளையனிடமிருந்து விடுதலை பெறப் போரிட்டு,
தியாகத் தழும்பேற்றுள்ள காங்கிரஸ்காரர்கள், வாழ்விழந்து
தவிக்கும் தென்னாடு வடவர் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும்
என்ற லட்சியத்தை எண்ணிப் பார்த்து, அந்த விடுதலைப் போரில்
பங்குபெற முன்னோடிகளாய் வரவேண்டுமென அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
பொதுச் செயலாளர் அண்ணாதுரை
அவர்கள் முதலில் குறிப்பிட்டதாவது.
இந்த ஊரிலே காங்கிரஸ் நடத்திய
விடுதலைப் போரில் பங்குபெற்றுக் தியாகத் தழும்பேற்றவர்கள்
பலரிருப்பதாகக் கூறினார்கள். அந்தக் காங்கிரஸ் நண்பர்கள்
தி.மு.கழகத்தின் லட்சிய விளக்கத்தைப் பெற வேண்டுமெனப் பெரிதும்
விரும்புகிறேன்.
காங்கிரஸ் நண்பர்கள் எத்தகைய
சுயராஜ்யம் காண விரும்பினார்களோ, அந்த சுயராஜ்யம் இன்று
நடைமுறையில் உள்ளதா?
எத்தகைய நல்வாழ்வை எதிர்பார்த்துக்
காங்கிரஸ் நண்பர்கள் கஷ்ட நஷ்டங்கள் ஏற்றுக் கொண்டார்களோ,
அத்தகைய நல்வாழ்வு நாட்டு மக்களுக்கு இன்று கிடைத்திருக்கிறதா?
சொன்னார்களே – நடைறெற்றா?
அடக்குமுறை ஒழியும், மக்களின்
ஓட்டப்படும் பசியும், பஞ்சமும் துரத்தப்படும் – என்று நாட்டரவருக்குச்
னொன்னார்களே, அது நடைபெற்றதா?
அவர்கள் பார்க்க விரும்பிய
நாட்டையா, இன்று பார்க்கிறாக்ள்.
இவைகெயெல்லாம் காங்கிரஸ் தியாகிகள்
தீர யோசித்துப் பார்க்க வேண்டுனெக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.கழகத்தில் இன்று பணியாற்றுபவர்களெல்லாம்
மிக மிகச் சாதாரணமானவர்கள்.
மிட்டா, மிராசுகளோ – பெரும்
பணக்காரர்களோ இங்கில்லை, அவர்களெல்லாம் இல்லை என்ற வருத்தத்தினாலல்ல,
நான் இதைச் சொல்வது! அப்படிப்பட்ட பெரும் பணக்காரர்கள் நடத்த
வந்த ஜஸ்டிஸ் கட்சியிலே நானுமிருந்திருக்கிறேன். அவர்கள்
நீங்கிய ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றியவனும்
நான்தான், எனவே, அத்தகைய பணக்காரர்களின் வட்டுறவின்றித்
தி.மு.கழகம் இயங்கி வருகிறது.
பத்திரிகை பலமும் இல்லாத கட்சி
பண பலம்தான் இல்லையென்றால், பத்திரிக்கை பலமும் இல்லாத ஒரு
கட்சி, தி.மு.கழகம்.
‘இந்து‘வின் இதமும், ‘தினமணி‘யின்
ஆதரவும், ஆனநத்விகடனின் ஆசியும், ‘கல்கி‘யின் கனிவுரையும்,
கடுகளவும், கிடைக்காதது கண்டு, கவலையுறாது, வளர்ந்து வரும்
கட்சி தி.மு.கழகம்.
இந்த நாட்டில், உழைப்பவர்கள்,
பாட்டாளிகள், விவசாயிகள் எல்லோரும் உலகத்திலே உள்ள வேறெந்த
நாட்டவரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கிறார்கள்! உழைத்து
உழைத்து மேனி கருத்திருப்பவர்களும் இந்த நாட்டவர்தான்! என்றாலும்,
இந்த நாட்டவரால் வாழ முடியவில்லை, வறுமை அவர்களைக் கொட்டுகிறது!
பஞ்சம் அவர்களைப் பட்டினியால் வாடச் செய்கிறது! ஏன் இந்த
நிலை? என்ற கேள்வியை, மதவாதிகளிடம் கேட்டோம்.
அவர்கள், ‘இந்த உலகத்தில்
நீ கஷ்டங்கள் பட்டாலும், மேல் உலகத்தில் இன்பம் பெற, இறைவனை
வணங்கு, இந்த உலக இன்பங்களெல்லாம் அநித்யமானவை. இவையெல்லாம்
ஆண்டவன் செயல், அந்த உலகத்தை அடைய புண்ணியம் செய் என்று
உபதேசிப்பர்.
அந்த உபதேசப்படி, நாம் கட்டாத
கோவில்கள் இல்லை, வெட்டாத திருக்குளமில்லை! வணங்காத தெய்வமில்லை,
இந்தத் தெய்வங்களுக்கு வைரத்தாலே முடி, தங்கத்தாலே ஓடு,
வெள்ளியாலே வாகனம் – அத்தனையும் தந்தோம்! என்றாலும் இந்த
நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி இருப்பானேன்? இந்தக் காலத்தில்தான்
நாத்திகர்களாகிய நாங்கள் இருக்கிறோம், அந்தக் காலத்தில்
தாது வருடப் பஞ்சம் வரவில்லையா? எனவே, பசிக்கும் – பட்டினிக்கும்
காரணம் நாம் பகவானை மறந்ததால் அல்ல என்பது தெரியவில்லையா?
சிதம்பரனார் செக்கிழுத்தார்!
பின்னர், தேசியவாதியைக் கேட்டோம்
– ‘பஞ்சம் ஏன், பட்டினி ஏன்,‘ என்று! அவர்கள் சொன்னார்கள்
– ‘இந்த நாட்டுச் செல்வத்தை 6000 மைல்களுக்கு அப்பாலிருந்து
வந்த ஆங்கிலேயன் சுரண்டிச் செல்கிறான், அவன் ஒழிந்தால்தான்,
இந்த நாட்டவரை வாட்டும் பஞ்சம் ஒழியும், பசி நீங்கும்‘,
என்றார்கள்! அவர்கள் விருப்பப்படியே வெள்ளையனை விரட்ட, இந்தியத்
துணைக்கண்டம் முழுவதிலுமிருந்து 60,000 பேர் சிறை சென்றனர்,
தன்னாட்டிலே, சிதம்பரம் பிள்ளை செக்கிழுத்துச் செத்தார்!
குமரன் குண்டாந்தடி அடிப்பட்டுத் திருப்பூரிலே மாண்டான்!
பெரியார், பன்முறை சிறையில் வாடினார்! வெள்ளையனும் வெளியேறினான்!
ஆண்டுகள் ஏழு உருண்டோட விட்டன, சுயராஜ்யம் கிடைத்தது!
அந்த ஏழு ஆண்டுகளில், பாட்டாளிகளின்
கஷ்டம் நீங்கிற்றா? – உழைப்பவனுக்கு உண்ண உணவும், இருக்க
இடமும், உடுக்க உடையும் கிடைத்தனவா? – என்றால், நிச்சயமாக
இல்லை. எனவே தான், நாட்டு மக்கள் நம்மைக் கேட்டார்கள் –
எங்களுக்கு வாழ்வு இல்லையா? – என்று!
வாழ்வுக்கு மூன்று காரணங்கள்!
தி.மு.கழகம் அவர்களுக்குச்
சொல்லுகிறது – ‘நமக்கு வாழ்வு கிடைக்காததற்குக் காரணம் மூன்றுண்டு,
ஒன்று, நம் சக்தி நமக்குத் தெரியவில்லை, இரண்டு நாம், நம்
உழைப்பைத் திருடுபவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவில்லை,
மூன்று நம்மைக் கவனிக்கவும் அக்கரை கொண்ட சர்க்கார் நமக்கில்லை,
- இவை மூன்றும் நாட்டு மக்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டால்
வாழ முடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.
இவ்வாறு, தி.மு.கழகப் பொதுச்
செயலாளர் அண்ணா அவர்கள், நமது சக்தி குறித்தும், நம் உழைப்பை
யார் யார் திருடுகிறார்களென்றும், 31.8.1954இல், துறையூர்
நகரத் தி.மு.கழகச் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
விளக்கிக் கூறிவிட்டு, இப்போதிருக்கிற சர்க்கார், எப்படி
நாட்டு மக்கள் மீது அக்கரை கொண்ட சர்க்கார் அல்ல என்பதை
விளக்கினார். தமிழ் நாடெங்கும் தி.மு.கழகம் தினந்தோறும்
பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கிறது, மேலும், ஆயிரம்
கிளைகளையும், இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களையும்
கொண்ட ஒரு மகத்தான மக்கள் சக்தியாக விளங்குகிறது, அத்தனை
பேரும் ஏமாளிகளாக – ஏமாற்றப்பட்டவர்களாக, தி.மு.கழகத்தில்
பங்கு பெற்றிருக்கிறார்களென்று யாரேனும் எண்ணினால் அது தவறு,
தி.மு.கழகப் பிரச்சாரம் நாள்தோறும் நடந்தவண்ணமுள்ளது. அவர்களது
பத்திரிகைகள் பல்லாயிரம் விற்பனையாகின்றன, அவர்கள் தீட்டும்
நாடகங்கள் நாட்டவரால் போற்றப்படுகின்றன, அவர்கள் சினிமா
எழுதினால், அத்துறையிலேயே ஒரு புரட்சி ஏற்படுகிறது, இத்தனை
வளர்ச்சியையும் பெற்றிருப்பது அவர்களுக்கு எதிர்ப்பில்லாததினால்
அல்ல, தி.மு.கழகத்தின் லட்சியமும், கொள்கைகளும் இவ்வளவு
வேகமாகப் பரவி வருவதன் காரணம், அவைகளில் உள்ள உண்மையான சக்திதான்!
உயிருள்ள இலட்சியம்!
உயிரோட்டமுடைய லட்சியத்தைக்
கொண்ட தி.மு.கழகம் பெற்று வரும் முன்னேற்றத்தை, யாரும்,
எந்தச் சக்தியும் அழித்துவிட முடியாது. தி.மு.கழகத்தாரிடம்
நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்றும் பாசமும், மக்களிடம் இத்தனை
செல்வாக்கும் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம், நாங்கள் இதுவரை
எடுத்துச் சொல்லிய கருத்துக்களில் உண்மை இருப்பதாகப் பொதுமக்கள்
நம்பியிருக்கிறார்கள் என்பதைத்தான் சொல்கிறது.
இந்தச் செல்வாக்கை, இந்த மகத்தான
சக்தியை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பலர் கேட்கக்கூடும்
இந்த மகத்தான சக்தியை நாட்டு மக்களின் வாழ்வில் புதியதோர்
மாற்றம் காண உபயோகிக்க இருக்கிறோம், உபயோகித்தும் வருகிறோம்.
நம்நாடு நமக்குத் தெரியவும்,
அந்த நாட்டு மக்கள் மேன் மக்களாக வாழவும், அவர்களுக்கு நல்லதோர்
அரசு வேண்டும், நல்லதோர் பொருளாதாரத் திட்டம் வேண்டும்.
நல்லதோர் அரசு காண வேண்டும்!
தி.மு.கழகம் சமுதாயத்தில்
நிலவுகிற சீரழிவுகளைப் போக்கவும் பொருளாதாரத் துறையில் நிலவும்
ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும், நல்லதோர் அரசு காணவும் பாடுபட்டு
வருகிறது.
நாட்டிலே டாக்டர்கள் பலர்
இருப்பர், அவர்களிலே சிலர் கண் வைத்தியத்தைப் பிரத்தியேகமாகப்
படித்திருப்பர், அவரிடம் கண் நோய்களுக்கு மட்டும்தான் மருத்துவம்
பெற முடியும், வேறு நோய்களுக்கு அவரிடம் மருந்து கேட்டால்,
தரமாட்டார், மருந்து தரத் தெரியாததால் அல்ல, அவர், கண் நோய்களைக்
கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாகப் படித்தவர்.
அதைப்போலவே, பிரசவம் போன்றவைகட்கும்
மருத்துவம் செய்யப் பிரத்தியேகப் படிப்புப் படித்தவர்கள்
இருப்பர், எல்லா வியாதிகளுக்கும் மருந்து தரும் வைத்தியர்களும்
இருப்பர் அவர்களிடம் உடலில் வரும் எந்த வியாதிக்கும் மருந்து
பெற முடியும்.
அதேபோன்றுதான், இந்த நாட்டில்,
சில கட்சிகள் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் மக்களுக்கு
வாழ்வு தர முயற்சிக்கின்றன.
தி.மு.க. மருத்துவமனை!
உதாரணமாக, கம்யூனிஸ்ட் கட்சியை
எடுத்துக் கொண்டால் அவர்கள், இந்த நாட்டில் நிலவும் பொருளாதார
ஏற்றத் தாழ்வுகளை மட்டும் போக்க முயற்சிக்கிறார்கள் – கண்
வைத்தியர்களைப் போல்!
ஆனால், தி.மு.கழகமோ, எல்லா
வைத்தியமும் பார்க்கிற மருத்துவ மனையாக விளங்குகின்றது.
தி.மு.கழகம்தான் இந்த நாட்டில்
எல்லாத் துறைகளிலும் உள்ள சீர்கேடுகளையும் எடுத்துக் காட்டுகிறது.
அதற்குக் காரணம் நம்முடைய
நாட்டில் எல்லாத் துறைகளும் கெட்டுவிட்டிருக்கின்றன.
இங்கே உள்ள மருத்துமனையில்
மாதமொன்றுக்கு ரூ.55 பெறுமானமுள்ள மருந்துகள் தரப்படுவதாகவும்,
ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 300 நோயாளிகள் சிகிச்சைக்காக
மருத்துவமனை செல்வதாகவும் எனக்கு முன் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.
300 பேர் சிகிச்சை பெற ரூ.55
மருந்துதான் ஓர் அரசாங்கம் தருகிறதென்றால், இதை நாம் எப்படி
மக்கள் மீது அக்கரை உள்ள சர்க்கார் என்று ஏற்றுக் கொள்ள
முடியும்?
அவருக்கென்ன அக்கரை!
பண்டித நேரு உலக மேதைகளில்
ஒருவராகக் கருதப்பட்டாலும் – அவர் நமக்கு அந்நியர்தானே!
இந்த நாட்டின் மக்களுக்கு மருத்துவ வசதி இல்லையென்றால் –
ஏன் – பட்டினியால் பிணம் விழுந்தால்கூட, அவருக்கென்ன அக்கரை
இருக்க முடியும்?
எனவேதான், நாட்டு மக்களின்
நல்வாழ்வில் அக்கரை கொண்ட ஒரு நல்ல சர்க்கார் தேவை. அந்த
சர்க்கார் திராவிட சர்க்காராக, வடநாட்டுக்கு எந்த வகையிலும்
கட்டுப்படாத சர்க்காராக இருந்தால்தான் இந்த நாட்டு மக்களின்
நல்வாழ்வில் அக்கரை கொள்ள முடியும்.
(நம்நாடு - 6, 7-9-1954)