அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வேட்டுமுறை இன்றியே விடுதலை பெறுவோம்

“பண்டித நேரு கூறுவதுபோல் உள்நாட்டுப் போர் ஏற்படாது. அப்படிச் செய்யாமலேயே எங்களால் நாட்டு விடுதலை பெறமுடியும். ஏனெனில் எங்கள் கழகம் வேட்டு முறையில் நம்பிக்கை வைக்காமல் காந்தியாரின் அறவழியில் நம்பிக்கை வைத்திருக்கிறது. காந்தியார் கையாண்ட ஆயுதம் சாமானியமானதல்ல. அது சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யவாதிகளை விரட்டிய வலுவான ஆயுதம். அதைப் பயன்படுத்தி வருகிறோம். அந்த அறப்போர் ஆயுதத்தை எங்களிடமிருந்து எந்தச் சந்தர்ப்பமும் பிரிக்க முடியாது“.

தி.மு.கழகம் கட்டளையிட்டால் ஓர் இரயில் கூட ஓட முடியாது. ஒரு தபால் நிலையம் கூட ஒழுங்காக இராது, தந்தி மரத்தில் கூட கம்பி இராது. ஆனால் கழகத்திற்கு என்றுமே பலாத்காரத்தில் நம்பிக்கை கிடையாது. ஆகவேதான், இவ்வளவு பெரிய சக்தியை – ஆற்றல் பெரும்படையைத் தேக்கி வைத்திருக்கிறேன்.

நான் பொறுப்பில் இருப்பவன் மட்டுமல்ல – பொறுமைசாலியும் கூட எனவேதான் தேக்கி வைத்திருக்கிறேன்.

மங்காத புகழ் மறையாத புகழ்

“திராவிடம் விடுதலைபெற நம்மிலே பலர் இரத்தம் சிந்தவேண்டும். தாயக விடுதலைக்காக அடக்குமுறைக்கு ஆளாகி இரத்தம் சிந்தப் பெற்றவர்கள் புகழ் மங்காத புகழாகும் – மறையாத புகழாகும்“ என்று சிதம்பரத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டார்கள். சிதம்பரம் நகரத் தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பொதுக்கூட்டம் டவுண் ஆல் திடலில் வழக்கறிஞர் வி.வி. சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதுவரை சிதம்பரம் வரலாறே கண்டிராத அளவுக்குத் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து ஆர்வம் பொங்க, அண்ணா அவர்களின் உரையைக் கேட்டனர்.

அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது –

தற்பொழுது, ஆளுங்கட்சி நாட்டிலுள்ள மற்ற எதிர்க்கட்சிகளை வாழவிடாமல் வளரவிடாமல் அடக்கி, ஒடுக்கச் சட்டம் இயற்றியுள்ளது. எந்தச் சட்டங்கள் வந்தாலும் திராவிட நாடு பெறுவது என்ற கொள்கையிலிருந்த தி.மு.கழகம் நழுவாது. சிலர் இதைப் ‘பகற்கனவு‘ என்னலாம். இது, நானும் பல இலட்சக்கணக்கான மக்களும் 12 ஆண்டுக்காலமாகக் காணும் கனவு. ஆந்திரம், கன்னடம், கேரள மாநிலங்களிலும் கழகத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.

வளர்ந்து வரும் சக்தி

“மதுரையில் கூடிய அனைத்திந்திய காங்கிரசுக் குழுக் கூட்டத்தில் உலக அரசியல் பிரச்சனைகளைப் பற்றியும் அணு ஆயுதப் போர் மூளாதிருக்க வேண்டிய அவசியம் பற்றியும் பேச வேண்டும். பண்டித நேரு அதைவிட்டு, ‘உள்நாட்டுப் போரே மூண்டாலும் நாட்டுப் பிரிவினைக்குச் சம்மதிக்க மாட்டேன்‘ என்று சர்வாதிகாரக் குரலில் பேசியிருக்கிறாரே இது எதைக் காட்டுகிறது? திராவிட நாடு இலட்சியத்திற்கு ஆதரவு குறைந்துவிட்டதையா? – அல்ல, அல்ல! நாளெல்லாம் பொழுதெல்லாம் வளர்ந்துவரும் இந்த மகத்தான சக்தியை அடக்குமுறைச் சட்டத்தால், பி.153 பிரிவின்கீழ் அடக்கி ஒடுக்கிவிடலாம் எனச் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆளுங்கட்சியர் நினைத்தால் அவர்கள் நிச்சயம் ஏமாந்தே போவார்கள்.

இன்று திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட எந்த விடுதலை இயக்கத்தோடும் ஓப்பாகக் கூடிய நிலையில் இருக்கிறது. கொண்ட கொள்கையில் மாறாத உறுதியும், நம்பிக்கையும் நாட்டு விடுதலைக்காகத் தங்களுடைய உயிரை அர்ப்பணம் செய்யவும் துணிந்த பத்தாயிரம் பேர் என் பக்கத்திலே இருந்தாலே போதும் எவ்வளவு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும் அவற்றை அடக்கிவிடலாம். விடுதலையை அடைய அந்தச் சக்தியே போதுமானது.

அந்தக் காலம் வரும்

நாங்கள் அனைவரும் ஆளும் கட்சியின் அடக்குமுறையால் அழிந்து விட்டால் உலகம் சும்மாயிராது. இன்று திரு.கிருஷ்ணமேனன், அல்ஜீரியா பற்றிப் பரிந்து பேசுவது போல், திராவிட நாடு பிரச்சினை பற்றியும் ஐ.நா. சபையில் பேசப்படும் காலம் வரத்தான் போகிறது.

‘பாகிஸ்தான் கேட்ட ஜின்னாவா திராவிடஸ்தான் கேட்கும். இந்த அண்ணா?‘ என்று காங்கிரசுக்காரர்கள் கேட்கிறார்கள். ஜின்னாவின் அறிவாற்றல் எனக்கில்லை என்றாலும், அவரிடம் இருந்த நெஞ்சுறுதி எனக்குண்டு. அதிலே மட்டும் ஒர சிறிதும் குறைவுபடவில்லை.

கோழைகளல்லர் அவர்கள்

என் தம்பிமார்கள் ஒன்றும் கோழைகள் அல்லர், பெரியாரிடமிருந்து பழகியவர்கள். எனவே என் தம்பிமார்களுக்கு நிமிர்ந்து பேசத் தெரியுமே தவிர, குனிந்து நின்று பேசத் தெரியாது.

இப்போதே காங்கிரசுக்காரர்கள் காரணமின்றி உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். ‘சௌக்கியமா?‘ என்று குசலம் விசாரிப்பார்கள். இதெல்லாம் அவர்களின் தேர்தல் தந்திரம்.

ஜனநாயத்தில் இறங்கிவிட்ட பின்னர். நாமும் தந்திரங்களைக் கையாளத்தான் வேண்டும். நிமிர்ந்து பேசுவதை விட்டுக் கொஞ்சம் குனிந்து பேசுவதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம்மிடம் மக்கள் பலம்

காங்கிரசுக் கட்சியிடம் பணம் இருக்கிறது. தி.மு.கழகத்திடம் மக்கள் பலம் இருக்கிறது. வரும் பொதுத் தேர்தலில் சர்வாதிகார ஆட்சி புரியும் காங்கிரசுக் கட்சியை நாம் தோற்கடித்தாக வேண்டும். ஆகவே, பொதுத் தேர்தலில் தி.மு.கழகத்தை மக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக்காகப் பணம் கொடுப்பார்கள். அதைப் பெற்றுக்கொண்டு கழகத்திற்கே ஓட்டுப் போடுங்கள்.

அண்ணா அவர்கள் பேசுவதற்கு முன்பு வழக்கறிஞர் தில்லை வில்லாளன், ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.

(நம்நாடு - 21.10.61)