அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வைரமா? வண்ணத்துப் பூச்சியா?

சென்னை 59-வது வட்டம் திருவள்ளுவர் மன்றத்தின் 10 ஆம் ஆண்டுவிழா 15.4.60 இல் தோழர் முல்லைசத்தி அவர்கள் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தலைவர் உரைக்குப்பின் தோழர்கள் மு.கருணாநிதி எம்.எல்.ஏ., ஏ.வி.பி. ஆசைத்தம்பி, எம்.எல்.ஏ. டி.என்.கிருட்டிணன் எம்.சி. ஆகியோர் வள்ளுவர் வகுத்த நெறி குறித்தும், கழகக் கொள்கைகளை விளக்கியும் பேசினர்.

tஇறுதியாக அண்ணா அவர்கள் பேசியதாவது:
நம்முடைய நண்பர்கள் நடத்திக் கொண்டு வருகிற அமைப்பினுடைய 10 ஆம் ஆண்டுவிழா இன்று காலை முதல் பல்வேறு வகையான சிறப்பான நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றிருக்கிறது. இறுதியில் நானும் மற்றும் பல நண்பர்களும் உங்களையெல்லாம் காண்பதற்காகவும், கருத்துரைகள் சொல்வதற்காகவும், இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வட்டத்தில் பத்து ஆண்டுகளாக இத்தகைய ஒரு நல்ல அமைப்பை நடத்தத்தக்க தோழர்கள் கிடைத்திருப்பது, அதிகப்படியாகப் பெருமை தருவதாகும்.

பொதுக்கூட்டங்களை அமைதியாக நடத்துங்கள்
இன்னும் இந்த வட்டத்தில் இரண்டு பெருமைகள் சேர்ந்திருக்கின்றன. நான் வரும்பொழுது தோழர் ஆசைத்தம்பி அவர்கள் உங்களிடத்தில் என்னுடைய தொகுதி மக்களே அமைதியாக இருங்கள் என்றார். அது ஒரு பெருமை. அடுத்து நாடகத்தில் எனக்குத் தோழனாக நடித்த நண்பர் கிருட்டினனை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து அனுப்பிய பெருமை இந்த வட்டாரத்திற்கு உண்டு. இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இந்த வட்டாரத்தில் நடக்கின்ற கூட்டம் மிக நெருக்கடியான இடத்தில், ஆனால், இது தவிர வேறு விரிவான பரந்த திடல் இந்த வட்டத்தில் இல்லாத காரணத்தால் இப்படிப்பட்ட நெருக்கடியான தெருக்களில் நம்முடைய கூட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டங்களை நடத்தும் தோழர்கள் மிக்க அமைதியான முறையில் நடத்தினால்தான் மேற்கொண்டு அடுத்தடுத்து இப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்துவதற்கு உற்சாகம் இருக்கும். போலீஸ்காரர்களும் இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவார்கள்.

உயர்தரப் போலீஸ் அதிகாரிகள் இது போன்ற நெருக்கடியான இடங்களில் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாதென எண்ணிக் கொண்டிருப்பதாகவும், அதற்கான உத்தரவை அவர்கள் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

சீமான்கள் நடத்தும் கூட்டம் அல்ல!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு உயர்தர போலீஸ் அதிகாரியை நான் எங்களுடைய நண்பர் என்ற முறையில் சந்தித்த பொழுது எங்களுடைய கூட்டங்களுக்கு அனுமதி தராமல் காங்கிரசு கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி தருகிறீர்களே ஏன்? என்று கேட்டேன். அவர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் இருக்கும் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன சிரிக்கிறீர்கள்? என்றேன். இது தெரியவில்லையா? என்றார். ஆமாம் என்றேன். அது மந்திரிகள் வருகிற கூட்டம் என்றார். அப்படியானால் அமைச்சர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என்று கேட்டேன். அவர் சொன்னார், மந்திரிகள் கூட்டம் என்றால் ஒரு பத்து, பதினைந்து சீமான்கள்தான் வருகிறார்கள். பொது மக்கள் அங்கே வரமாட்டார்கள். உங்கள் கூட்டம் அப்படியில்லையே? மரம் இருந்தால் மரத்தின் மேலும், மாடியிருந்தால் மாடி மேலும் தெரு முழுமையிலும் நிற்கிறார்கள். அதனால் பெருத்த தொல்லையாக இருக்கிறது. ஆகையினால்தான் அனுமதி தரமுடியவில்லை. காங்கிரசுக் கூட்டத்தைப் போல கச்சிதமாக நடந்தால் நாங்களும் அனுமதி கொடுக்கிறோம் என்றார்.

நம்முடைய கூட்டங்களில் ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். எனவே, இதுபோன்ற கூட்டங்களை மிக்க அமைதியான முறையில் நடத்தினால்தான் இப்படிப்பட்ட இடங்களில் மேலும் கூட்டங்கள் நடத்த நமக்கு வாய்ப்பும் வசதியும் கிடைக்கும்.

கூட்டம் நடத்தும் முறை தெரிய வேண்டும்
நம்முடைய நண்பர்களும், கூட்டங்களில் கலந்து கொள்ளுகிறவர்களும், கூட்டங்களை நடத்துபவர்களும், கூட்டங்களை ஏராளமாக நடத்தியிருக்கிறார்கள் என்றாலும் கூட்டங்களை நடத்துவதற்குக் கையாளவேண்டிய முறைகளை இன்னும் அவர்கள் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை.

மேல் நாடுகளிலெல்லாம் கடைசிவரை கூட்டத்தில் பேசுவதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்தான் முன்னாலே வந்து உட்காருவார்கள். இடையிலே போக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பக்கத்திலே சற்றுத் தூரமாகவே நின்றிருந்து விட்டுப் போய்விடுவார்கள். ஆனால், நம்முடைய கூட்டங்களுக்கு வருகிறவர்களோ முன்னாலே வந்து உட்கார்ந்து ஒரு ஐந்து நிமிடம் ஆசை தீரப்பார்த்துவிட்டு நல்ல செய்தியைப் பற்றிப் பேசத் துவங்குகிற நேரத்தில் எழுந்து நிற்பார்கள். பின்னாலே இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? உட்கார் என்று சொல்வார்கள். உடனே அவர் வேறு பக்கமாகக் போக ஆரம்பிப்பார். அந்தப் பக்கத்திலிருப்பவர்கள் இங்கே வழியில்லை அந்தப்பக்கம் போங்கள் என்பார். அந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் வேறு பக்கம் செல்லுங்கள் என்பார்கள். இப்படி இரண்டு பக்கமும் போக முடியாமல் அவர் நிற்பார். இப்படித்தான் நம்முடைய கூட்டங்களில் அமைதிக் குறைவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும்.

இது என் சுபாவம்
இந்தக் கூட்டத்திலே இப்போது இருப்பதைப் போல் ஒரு பக்கத்தில் ஆடவர்கள் இருந்தால் இன்னொரு பக்கத்தில் தாய்மார்கள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் சொல்ல வேண்டிய விஷயங்களை நல்லபடி சொல்லமுடியும். ஏனென்றால் நாம் சொல்ல வேண்டிய விஷயங்களோ ஏராளமாக இருக்கின்றன. பேசுகிற தோழர்கள் எந்தக் கூட்டத்தில் என்ன சொல்லவேண்டுமென்று கூட்டத்தைப் பார்த்து முடிவு செய்வார்கள். நான் கூட்டத்தில் இருக்கும் அமைதிக்குத் தக்கபடி எதைப் பேசுவது என்று தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம். கூட்டத்தில் அமைதி இல்லாவிட்டால் ஆகையினால் திராவிட நாட்டை பெறுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவேன். இது என் சுபாவம்.

இன்றைய தினம் நான் வருகிறபோது நம்முடைய ஆசைத்தம்பியின் குரல் வெண்கலம் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. அவர் திருக்குறளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்பதை அவர் விளக்கிக் கொண்டிருந்தார்.

இதனை நம்முடைய கழகத்திற்கென்று ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்று இலக்கணம். “எப்பொருளும் மெய்ப்பொருளாகச் சொல்வது” என்பதாகும்.

எம்பொருளையும் மெய்ப்பொருளாகச் சொல்க!
அறிவு உள்ளவன் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமே, ஆனால், நமது தோழர்களுக்கு ஓய்வும், சிந்திக்க வாய்ப்பும் இல்லாமல் அல்லற்படுகிற காரணத்தினாலேயே எப்பொருளையும் மெய்ப்பொருளாகச் சொல்லவேண்டும் என்றேன்.

இப்படிப்பட்ட ஒரு மெய்ப்பொருள் நமக்குப் பத்து, பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே கிடைத்தது. உண்மையான அந்த இலட்சியத்தை நாட்டிலே மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் இது மிக விலையுயர்ந்த இலட்சியமாக இருக்கிறது. இவனிடத்திலா இப்படிப்பட்ட அருமையான இலட்சியம் இருக்கும்? இப்படிப்பட்ட சாதாரண ஆளிடத்தில் இவ்வளவு விலையுயர்ந்த இலட்சியம் இருக்குமா என்று எண்ணுகிறார்கள்.

பட்டை தீட்டாத வைரம்!
இதைப் போலத்தான் ஆப்பிரிக்கா நாட்டில் வெள்ளைக்காரன் உள்ளே புகுவதற்கு முன்னே, அங்கே வெளிப்பட்டுக் கிடப்பது வைரம் என்று தெரியாமல் நீக்ரோக்கள், காலாலே அதை கூழாங்கற்களைத் தட்டுவது போல் தட்டிக் கொண்டிருந்தார்கள். வைரத்தை விட்டுவிட்டு வண்ணாத்திப் பூச்சிகளைப் பிடிப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். வண்ணாத்திப் பூச்சியைப் பிடிப்பதற்கு ஓடுபவர்கள் தங்கள் காலிலே தட்டுப்பட்ட வைரத்தை உதைத்துத் தள்ளிவிட்டார்கள். இதைப் பார்த்த வெள்ளையர்கள் இந்த இடம் தான் நமக்கு ஏற்ற இடம் என்று கருதி அங்கு முகாமிட்டு வைரக்கற்களையெல்லாம் பொறுக்கி அதைத் தங்களுடைய நாட்டுக்குக் கொண்டு சென்று நன்றாகப் பட்டை தீட்டி உலக்திற்கெல்லாம் விற்றுத் தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.

இப்பொழுது நம்மிடத்தில் கிடைத்திருக்கிற திராவிடநாட்டு இலட்சியம், ஆப்பிரிக்காக்காரர்களின் காலில்பட்ட வைரத்திற்குச் சமானமாக இருக்கிறது. அவர்கள் செய்ததைப் போல் பூச்சி பிடிப்பதில் கவனம் செலுத்துகிறார்களே தவிர, காலில் இடறுவதைத் தடவிப் பார்த்து இது வைரம் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு சிலருக்கு இது வைரம் என்று தெரிகிறது, ஐயா, இது வைரம், பட்டை தீட்டப்படாமல் இருக்கிறது. பட்டை தீட்டப்பயன்படுத்தினால் இதற்கு அதிக விலையுண்டு என்று நாம் சொல்லுகிறோம். ஆனால், கையில் வைரத்தை வைத்துக் கொண்டிருக்கும் நம்மைப் பார்த்தால் மிகச் சாதாரணமானவர் களாக இருக்கிறோம். எனவே, இது எப்படி வைரமாக இருக்கும் என்று சந்தேகப்படுகிறார்கள். அந்தச் சந்தேகத்தைப் போக்கத்தான் இப்படி மூலை முடுக்குகளிளெல்லாம் கூட்டங்களைப் போடுகிறோம்.

நாங்கள் முதன்முதல் சட்டசபைக்குள்ளே போன போது எந்த அமைச்சரும் எங்களை மதிக்கவில்லை. இப்பொழுது தொழில் அமைச்சர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் சட்டசபையில் பேசுகிற போது அண்ணாதுரை கட்சியார் தமிழ்நாடு தனியாக ஆகவேண்டும் என்கிறார்கள். அதைப்பற்றி நாம் விவாதிக்கப் போவதில்லை. தனி நாடானால் நன்மையும் உண்டு-தீமையும் உண்டு என்று குறிப்பிடுகிறார்.

வந்திருப்பது லாலி பாட அல்ல
முதலில் நாங்கள் திராவிட நாட்டுப் பிரச்சினையைச் சட்டசபையில் பேசியபோது நிதியமைச்சர் அவர்கள் வெகு காரசாரமாக உங்களுக்கு இது தவிர வேறு பேச்சே கிடையாதா என்றார். நான் அப்பொழுது சொன்னேன், நாங்கள் இங்கே வந்து இருப்பது உங்களுக்கு லாலி பாட அல்ல என்று.
இப்பொழுது கூட சேலத்து இரும்பைப் பற்றிக் கேட்ட பொழுது சேலமா, இரும்பா,இங்கிலாந்திற்குப் போயிற்றா? என்று தொழில் அமைச்சர் பேசுகிறார்.

இவர்களெல்லாம் நம்மைப் படித்துவிட்டு வந்து பேசுங்கள் என்பார்கள். இவர்களே வெளியிட்ட ஒரு புத்தகத்தில்தான் சேலத்து இரும்பு பற்றிய விவரம் இருக்கிறது. இப்பொழுதுகூட அந்தப் புத்தகம் என் மேசைமேல் இருக்கிறது. அதை வெகு முக்கியமாகக் கருதிக் காப்பாற்றுகிறேன். காரணம் என்னிடமிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் காணாமற் போய்விட்டன.

அவர்கள் புத்தகத்தைக் காட்டுங்கள் என்றால் காட்டலாம். இதற்கல்ல நாம் போய் இருப்பது. அங்கே நாம் சென்றிருப்பது வைரம்தான் என்பதை அவர்களுக்குக் காட்ட, நெஞ்சில் இருப்பது நல்ல திட்டம் என்பதைக் காட்ட அதை நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மிகத் திறம்படச் செய்கிறார்கள்.

மேதாவி என்ற பெயர் எடுப்பது எளிது
நீங்கள் சட்டமன்றத்திற்கு வந்தால் தெரியும். ஒவ்வொரு தோழரும் பேசுகிறபோது இதை நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சொல்லுகிறேன் என்பது சாதாரண சின்ன விஷயமாக இருந்தாலும் எனக்குக் கூடச்சில வேலைகளில் கோபமாக இருக்கும். 6+4=10 என்று சொல்லுவதாக இருந்தாலும் இதை நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்று பேசுகிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன? வந்திருப்பது திராவிட நாட்டைப் பற்றிச் சொல்ல, உட்கார்ந்திருப்பது திராவிட நாட்டுப் பிரச்சினையை வற்புறுத்த.

எங்களில் சிலர் “மேதாவி” என்ற பெயர் எடுக்க வேண்டுமானால் ஒரு மாதம் ஒழுங்காகப் படித்தால் போதும். அரசியலுக்கு வராமலேயே இராமசாமி முதலியார், இலட்சுமண சாமி முதலியார் போன்றவர்கள் கட்சியைவிட கொள்கைதான் பெரிது என்ற வகையில் மேதாவிகள் ஆக வில்லையா? டாக்டர். இராதாகிருட்டிணன் இதையெல்லாவற்றையும் விட வேதாந்தம்தான் பெரிது என்று கருதி அதில் மேதாவி ஆகவில்லையா? இப்படி மேதாவி ஆவது ஒன்றும் கடினமில்லை.

இது தெரிந்தும் நாங்கள் ஏன் ஒரு கட்சியைக் கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் எங்களுக்கு மக்கள் வாழ்வுதான் முக்கியம். ஆகையால்தான் எங்கள் இலட்சியத்தைப் பற்றி நாங்கள் சட்டசபையிலும் பேசுகிறோம், வெளியிலும் பேசுகிறோம்.

15 பேர் இருப்பது ஒரு செல்வாக்கா?
இன்றைய தினம் இதற்கு ஒரு நல்ல செல்வாக்கு வளர்ந்து வருகிறது. இது ஒரு செல்வாக்கா? என்று கூறிவிடலாம் காமராசர். சட்டசபையில் 15 பேர் இருப்பது ஒரு செல்வாக்கா? என்று கேட்கலாம். ஆனால் நமக்குச் செல்வாக்கு வளருகிறது என்பதற்கு அறிகுறி நாம் துவக்கக்காலத்தில் திராவிட நாட்டுப் பிரச்சனையைப் பற்றிச் சொன்ன நேரத்தில் திராவிடமா, அது என்ன? அது யார் கற்றுக்கொடுத்தது? அப்படியொரு நாடா? என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது திராவிட நாட்டுப் பிரச்சினையை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்லுவதுதான்! ஏன் அப்படிச் சொல்லுகிறார்கள் என்றால் இப்போது அவர்களுக்கிருக்கும் இந்த எண்ணிக்கை தான் அவர்களை அப்படிப் பேச வைக்கிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. இருந்தும் இந்த 14 பேரிடம் அவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைப் பார்த்தால்தான் தெரியும்.
இந்த வாரத்தில் நான் ஒருநாள் சட்டசபைக்குப் போகவில்லை. அன்று சர்தார் வேதரத்தினம் அவர்கள் ஏதோ தவறாகப் பேசிவிட்டு நமது தோழர்களிடம் அவர் பட்டபாடு சொல்லித் தெரிவதல்ல. மறுநாள் நான் சட்டசபைக்குப் போனதும் நீங்கள் இப்படிச் சட்டசபைக்கு வராமல் இருக்கக்கூடாது, என்று என்னிடம் காங்கிரசு நண்பர்கள் சொன்னார்கள். நீங்கள் வராவிட்டால் இந்தப் பதினாலும் படுத்துகிற பாடு அடேயப்பா...!

திட்டம் தவறானதில்லை
நமக்கு இந்த அளவுக்கு எண்ணிக்கை பலம் குறைந்து இருப்பதால்தான் அமைச்சர்கள் அப்படியெல்லாம், பேசுகிறார்களே தவிர, நிச்சயமாக நம்முடைய திட்டம் தவறானது என்றோ தீதானது என்றோ இது வரையில் எந்த அமைச்சரும் அல்லது எந்தக் காங்கிரசு தலைவர்களும் பேசியதில்லை!

ஒருபெரிய காங்கிரசுத் தலைவர் என்னை வந்து சந்தித்தார். ஒரு வருடம் இருக்குமென்று நான் கருதுகிறேன். நான் இதைச் சொல்வது அரசியல் இலாபத்திற்காக அல்ல. சும்மா சொல்லுகிறேன். பொய் சொல்லுகிறேன் என்று நினைப்பீர்களேயானால் என் கூட வாருங்கள். நான் அவருடைய பெயரைச் சொல்லுகிறேன். இப்பொழுது மேடையில் அவர் பெயரைச் சொல்லக்கூடாது. அந்தப் பெரிய தலைவர் நாட்டைப் பிரிக்கப்போவது அண்ணாதுரை அல்ல, நீங்கள் செய்கிற அக்கிரமத்தினால் தான் நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் என்று டெல்லியிடம் சொல்லியிருப்பதாகக் கூறினார். மிக உயர்ந்த நிலையில் இருக்கிறவர்கள் அவர்கள் பேசுவது மெய்ப்பொருளாக இருக்குமானால் ஏன் இப்படி நேரில் பேசும்போது ஒன்றும், மேடையில் பேசும்போது ஒன்றும் பேசவேண்டும்.

இன்னொரு பெரிய காங்கிரசுத் தலைவர் என்னிடம் சொன்னார். நீங்கள் சட்டசபையில் வடக்கு தெற்குப் பிரச்சினையை அடித்துப் பேசுங்கள் என்று, அப்பொழுதான் நாங்கள் மத்தியச் சார்க்காரிடம் கேட்பதற்குக் கொஞ்சம் தைரியம் வரும் என்றார்.

பிரிவினையைத் தள்ளிப்போடுங்கள் என்றால்...!
ஆகவே, ஒவ்வொரு காங்கிரசுத் தலைவரும் இந்தப் பிரிவினை வேண்டுமென்றுதான் கருதுகிறார்கள்? ஆனால், இப்பொழுது இந்தியாவோடு இருப்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் இலாபம் இருக்கிறது! மறுபடியும் நாங்கள் யாராவது வராமல் போய்விட்டால் அப்பொழுது நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு தானோ என்னவோ நீங்கள் நாட்டுப் பிரிவினையை ஒரு பத்து ஆண்டுக் காலத்திற்குத் தள்ளி வையுங்கள் என்றார்கள் போலும்! நான் இங்கு ஒரு ஐந்து வருடம் மத்தியச் சர்காரில் ஒரு ஐந்து வருடம் மந்திரியாக இருந்து விடுகிறேன். அப்புறம் நீங்கள் நாட்டைப் பிரித்துக் கொள்ளுங்கள் என்பதுதானே இதற்குப் பொருள்?
இப்பொழுது காங்கிரசுக்காரர்கள் எதிர்த்துப் பேசுகிறார்களே என்று நீங்கள் கருதலாம். அதுகூட ஒரு தந்திரம்தான். மரத்தின் இரண்டாவது கிளையில் ஒருவன் பழம் பறிக்கிறான் என்றால் கீழே நின்று கொண்டிருக்கும் அந்தப் பெரியவர் பையனைப் பார்த்து அந்த மூன்றாவது கிளையில் இருக்கும் பழத்தைப் பறிப்பாயா? அதில் உன்னால் ஏறமுடியுமா? என்பார் ஓ, முடியுமே! என்பான் மரத்தின் மேலிருப்பவன், அப்படியானால் அதைப் பறித்துப்போடு பார்க்கலாம் என்பார். அவனும் ஏறி பறித்துப் போட்டவுடன் பலே, பலே கெட்டிக்காரன்தான் என்று முதுகிலே, தட்டிக் கொடுப்பார்!

முதல் மந்திரி வேலையா? ஆகட்டும் பார்க்கலாம்...
அதைப் போலத்தான் காமராசர் கீழே இருந்து கொண்டு திராவிடநாடா? கிடைக்குமா? முடியுமா? என்கிறார். மந்திரி வேலைக்குக் கூட இவர் இப்படித்தான் சொன்னார். எனக்கு எதற்கு மந்திரி வேலை? தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்து பொதுமக்களுக்குத் தொண்டாற்றுவதே என் வேலை. கட்டுவதற்கு 4 முழவேட்டி, மேலே ஒரு சட்டை போதும் என்றார். பிறகு மந்திரிச் சபையில் குழப்பம் ஏற்பட்டு இராஜ கோபாலாச்சாரியார் வெளியேறும் நிலைமை வந்ததும் இவரைக் கூப்பிட்டு மந்திரியாக இருக்கச் சொன்னார்கள். அப்பொழுது எனக்கு ஏன் மந்திரிப் பதவி? இராஜகோபாலாச்சாரியாரே இருக்கட்டும் இல்லையேல் வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொன்னாரா என்றால், இல்லை! ஒவ்வொரு நாளும் பத்திரிகையில் இராஜகோபாலாச்சாரியின் படம் வருவதைப் பார்த்தார். நாமும் மந்திரியானால் நமக்கும் இப்படிப் படம் போடுவார்கள், என்ற எண்ணம் வந்தது. மனித உள்ளந்தானே-சபலம் இருக்கத்தான் செய்யும்? அதனால்தான் முதல் மந்திரி வேலையா? சரி, ஆகட்டும் பார்க்கலாம் என்றார்!

எனவே, நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டியதெல்லாம், நமக்கு இந்தத் திட்டத்தில் நம்பிக்கையிருக்கிறதா, குறைகிறதா என்று நம்மை நாமே சோதித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்! என்னைப் பொறுத்தவரையில் சொல்லுவேன் நாளுக்கு நாள் நாட்டுப் பிரிவினையில் எனக்கு இருக்கிற நம்பிக்கை வளர்ந்து கொண்டேதான் இருக்கிறதே தவிர இந்த நம்பிக்கை குறைவதற்கான சூழ்நிலை உலகத்தில் எந்தப் பக்கத்திலும் இல்லை!

எதைக்கொண்டு சொல்கிறார்கள்?
எகிப்து நாட்டுத் தலைவர் நாசர் இந்நாட்டுக்கு வந்து போனார். அவருக்குச் சிறப்பான வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டன. இவ்வளவு சிறப்புக்கும் அந்த நாட்டில் என்ன இருக்கிறது என்று கருதுகிறார்கள். நான் அவரைக் கேலி செய்வதாக யாரும் கருதவேண்டாம். அந்த நாட்டுக்கு இருக்கும் வருமானம்-டோல்கேட் வருமானம்-அதாவது சூயஸ்கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களிடம் வாங்கும் வருமானம்! இன்னொரு பெரிய வருமானம் அந“த நாட்டில் விளையும் பருத்தியின் மூலம் கிடைப்பது. இந்த வருமானத்தை வைத்தே அந்த நாடு வாழுகிறது.

ஆனால், நாம் கேட்கும் திராவிட நாட்டில் எல்லாப் பொருள்களையும் இயற்கை அன்னை தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு எப்பொழுது கேட்பார்கள், என்றெண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறாள். இப்படியிருந்தும் திராவிடம் பிரிந்தால் வாழமுடியாது என்று எதைக் கொண்டு சொல்லுகிறார்கள்? என்ன ஆதாரம் காட்டுகிறார்கள்.

இப்பொழுது இங்கே இந்தப் பந்தலைப் போட்டிருக்கிறார்கள். இதைப் போடுவதற்கு முன்னால் எவ்வளவு அகலம் எவ்வளவு நீளம், எவ்வளவு உயரத்தில் போட வேண்டும் என்பதை எல்லாம் பந்தல் போடுபவர் கேட்டிருப்பார். அதைப் போல திராவிடநாடு பிரிந்தால் என்னென்ன தேவை என்பதைக் காங்கிரசுக்காரர்கள் சொல்ல வேண்டுமென்று நான் கேட்கிறேன். அப்படிச் சொன்னால் இதைப்பற்றி ஆராயலாம்.

ஆண்டவன் கூடப் பொன்னார்மேனியனே!
திராவிடத்தில் எல்லாச் செல்வங்களும் உண்டு. இங்குத் தங்கம் உண்டு. அதற்கு நிறைய ஆதாரம் உண்டு. வெளிநாட்டில் எவருக்கும் தங்கம் என்றோ பொன்னுசாமி என்றோ பெயர்கள் இல்லை. ஆனால், தமிழகத்தில் இந்தக் கூட்டத்தில் எத்தனையோ பேருக்குத் தங்கப்பன் என்றும், பொன்னுத்தாய் என்றும் பெயர் இருக்கும். ஏன் நமது நாட்டில் ஆண்டவனைக் கூட பொன்னார் மேனியனே என்றுதான் பாடினார்கள்!

இத்துடன் இரும்பும் இருக்கின்றது. இன்னும் மனிதனுக்கு மிக முக்கியமான உணவு வகைகள் எல்லாம் இங்கே உண்டு. இங்கே தான் உணவுக்கு அறுசுவை என்று சொல்லுவார்கள். இத்தனையும் இருந்தால் போதுமா? மக்கள் இருக்கவேண்டாமா? அவர்கள் வீரர்களாக இருக்கவேண்டாமா? என்றால் நமது தாயகத்தின் வரலாற்றுச் சான்றுகள் நாம் வீரர்கள் என்பதைத் தான் காட்டுகின்றன.

பசியாலே நாம் ஏன் வாட வேண்டும்?
வடக்கே இருந்தவர்கள் எதிரியை வீழ்த்த யாகம் செய்தவர்கள் நாம் வேலும், வாளும் ஏந்தியவர்கள், இத்தனையும் இருக்க நம் நாட்டு மக்கள் ஏன் பசியாலும், பட்டினியாலும் வாடவேண்டும்?

திராவிடம் பிரிந்தால் இந்தப் பாவி அண்ணாதுரை அல்லவா முதல் மந்திரியாகி விடுவான் என்று கருதுவார் களானால் நான் அறுதியிட்டுச் சொல்லுகிறேன். எங்களுக்கு 20 தலைமுறைக்கு மந்திரிப் பதவி வேண்டாம். இதை இப்பொழுதே எழுதிக் கொடுத்து விடுகிறோம்.

ஆகவே, நான“ சொன்னவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி உங்கள் உள்ளத்தில் அன்புணர்ச்சியை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டுமெனக்கேட்டுக் கொள்ளுகிறேன்.

(நம்நாடு - 22,23.4.60)