அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வலிமை மிக்க எதிரியை முறியடிக்க வேண்டும்

காங்கிரசுக் கட்சி ஒரு மலைப்பாம்பு. அது எது கிடைத்தாலும் விழுங்கி வருகிறது. மாணிக்க வேலரை அது விழுங்கிவிட்டது. இராமசாமி !படையாட்சி)யையும் அது விழுங்கியது. என்ன காரணத்தினாலே அவரை மட்டும் ஜீரணிக்க முடியாமல் வெளியே விட்டுவிட்டது.

“இந்த நேரத்தில் சீனத்துச் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. ஒரு மலைப்பாம்பு ஒரு பெரிய மரத்தைச் சுற்றிக் கொண்டதாம். நான் ஆட்டைச் சுற்றி எலும்பை முறித்தேன். மாட்டைச் சுற்றிக் கொன்றேன். இந்த மரம் எம்மாத்திரம்? என்று அது கருதியதாம். ஆடு மலைப்பாம்பிடமிருந்து தப்ப முழுப் பலத்துடன் திமிரியது. பாம்பும் முழுப் பலத்துடன் சுற்றி அழுத்த இரு பலமும் சேர்ந்ததால் ஆடு இறக்க நேரிட்டது. மாடும் அப்படித்தான். ஆனால் மரம் அப்படியல்ல, எத்தனையோ பாம்புகள் ஏறி இறங்கியிருக்கின்றன அந்த இரத்தில். அதனால் மரத்துக்கு ஒன்றும் ஆபத்தில்லை, பாம்பிடம் இருந்து தப்பிக்க மரம் முயலுவதில்லை, பாம்புதான் தன் முழுப் பலத்தையும் பயன்படுத்த வேண்டும். அதனால் பாம்பு நன்றாகச் சுற்றிக் கொண்டு மரத்தை அழுத்த அழுத்த, மரத்துக்கு ஒன்றும் சேதம் ஏற்படவில்லை பாம்புதான் சுக்கு நூறாக வெடித்துச் செத்தது. மரத்தின் பட்டைக்குக் கூடச் சிறு சேதமும் ஏற்படவில்லை.

பணியாற்றச் சூளுரைப்போம்

“அதைப்போல காங்கிரசுக் கட்சி. நாம் மாணிக்க வேலரை விழுங்கினோம். இராமசாமி !படையாட்சி)யையும் விழுங்கி விட்டோம். இந்தக் கழகம் எம்மாத்திரம்? என்று கருதி நம்மை அலட்சியமாக நினைத்துக்கொண்டிருக்கிறது. அந்த காங்கிரசு மலைப் பாம்பு நம்மைச் சுற்ற வரும்போது அது தானாக வெடித்துச் சாகுமாறு செய்ய நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதை நாம் காட்ட வேண்டும். அதற்குத் தக்க வகையில் பணியாற்ற இந்த விழா நாளில் ஒவ்வொருவரும் சூளுரைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டும்“ என்று அண்ணா அவர்கள் நேற்று முத்தமிழ்க் கலைவிழாவில் பேசுகையில் குறிப்பிட்டார்கள்.

அண்ணா அவர்கள் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது –

“மந்திரிப் பதவிக்கு ஆசைப்பட்டு நான் இயக்கம் நடத்துவதாக அமைச்சர் கக்கன் பேசியிருக்கிறார். திருவிளையாடல் புராணத்தில் 322 பன்றிகள் மந்திரிகளாக்கப்பட்டதாக ஒரு கதையுண்டு. பன்றிகளே மந்திரிகளானதாக ‘பக்திக்கதை‘ கூறுகிறது. இப்படிப்பட்ட கதையையும் இன்றைய மந்திரிகள் நிலையையும் பார்க்கும்போது மந்திரிப் பதவிமீது அருவறுப்பு வருமா? ஆசை வருமா?

அரசியல் புரியாதவர்கள்?

“நாம் இன்று மானத்தை மீட்கும் மகத்தானேதார் இயக்கம் நடத்துகிறோம். இதில் மக்கள் தரும் மதிப்பை விட மந்திரிப் பதவியால் புதியதோர் மதிப்பு கிடைத்துவிடாது. இன்று மக்கள் மனத்தில் எனக்குக் கிடைத்துள்ள இடத்தைவிட மந்திரியான பிறகு எனக்குப் புதிதாக ஓர் இடத்தை மக்கள் நெஞ்சத்தில் நான் பெற்றுவிட முடியும் என்று எண்ணவில்லை. எனவே, அண்ணாதுரை மந்திரிப் பதவிக்காகக் கட்சி நடத்துகிறான் என்று சொல்லுபவர்கள், ஒன்று – அரசியல் புரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது அண்ணாதுரையைப் புரிந்து கொள்ளாதவர்க்ளாக இருக்க வேண்டும்.

“நான் இந்த நேரத்தில் அமைச்சர்க்ளுக்குச் சொல்லிக் கொள்கிறேன் – அடுத்தவரும் தேர்தலில் தி.மு.கழகம் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆளும் பொறுப்பை ஏற்கும் நிலை வந்து அமைச்சராகும்படி என்னை அழைத்தாலும் நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். திராவிட நாடு விடுதலை பெறும்பரை நான் அமைச்சர் பதவி ஏற்கமாட்டேன்.

காங்கிரசை முறியடிக்கத் தயாராவோம்

தமிழ்நட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக் கட்சி மற்ற மாநிலங்களைப்போல் பிளவுபட்டில்லாமல் மிக வலிமையுடன் இருந்து வருகிறது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. எஃகுக் கோட்டைபோல் இருந்துவரும் தமிழ் நாட்டுக் காங்கிரசை முறியடிக்க நாம் தயாராக வேண்டும். காங்கிரசை எதிர்க்க, காங்கிரசு எதிர்ப்புச் சக்திகள் சிதறி விடாதபடி என்ன முறையைக் கையாளலாம் என்பதைப் பொதுக்குழு முடிவெடுக்க இருக்கிறது.

“நம் கழகம், வெறும் மேனா மினுக்கிகளால் நடத்தப்படுவதல்ல, தியாகத் தழும்புகளை ஏற்கத் தயாராயிருக்கும் வீரர்களால் நடத்தப்படுவதாகும்.

இங்கே எனக்கு முன் பேசிய எனது நண்பர்கள், என் மேலுள்ள அன்பின் காரணமாக என்னைப் பற்றி மிகப் புகழ்ந்து பேசினார்கள். சிறந்த தலைவர் நான்தான் என்பதாகப் பேசினார்கள். அப்படிப்பட்டவனல்ல நான். என்னைவிடச் சிறந்த தலைவரை – மேலான தலைவரைத் தேடி வருகிறேன். அவர் கிடைத்தவுடன் உங்களுக்கு நிச்சயம் அறிவிப்பேன். ஒரு தலைவரைத் தேடி தருவதுதான் பெரிய தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்பாகும்.

“இங்குப் பேசியவர்களெல்லாம் ‘அண்ணா சொன்னார் அண்ணா சொன்னார்‘ என்று அடிக்கடி எடுத்துச் சொன்னார்கள். இது எப்படிப்பட்டதென்றால் – “கிராம போன் பாடுகிறது கிராமபோன் பாடுகிறது“ என்பது போலாகும். உண்மையில் பாடுவது கிராமபோன் அல்ல, யாரோ ஒருவர் பாடிய பாடலை அந்தப் பிளேட்டு பாடுகிறது. பாடகனின் பாடலைக் கிராமபோன் மூலம் கேட்பதைப் போல – திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தை என மூலம் கேட்கிறீர்கள்.

தப்பான கருத்து வேண்டாம்

நான் பேசுகிறேன் எற்றால் தி.மு.க. பொதுக்குழுவும், செயற்குழுவும் என்மூலம் பேசுகின்றன என்று பொருள். பேசுவோரில் நல்லவரும் இருக்கிறார்கள். பொல்லாதவர்களும் இருக்கிறார்கள். பேச்சோடு பேச்சாகக் குத்துபவர்களம் இருக்கிறார்கள். இதயத்தைத் திறந்து பேசுபவர்களும் இருக்கிறார்கள். நமது பொதுக்குழு கூடி முடிவெடுத்ததைத் தான் நான் சொல்கிறேன். “காப்பி குடித்தேன் என்றால் என்ன பொருள்? அடுப்பு மூட்டி தண்ணீரைக் கொதிக்க வைத்து, காப்பித்தூளைப் போட்டு, பாலையும் சர்க்கரையையும் பக்குவமாக கலந்து ஆற்றிக் குடித்தேன் என்று பொருள், இதைத்தான் சுருக்கமாக காப்பி குடித்தேன்‘ என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் காப்பியில் இருக்கும் சர்க்கரை திடீரென்று உயிர்பெற்று எழுந்து ‘ஏன் என்னைப்பற்றிச் சொல்லவில்லை?‘ என்று கேட்டால் என்ன பொருள்? நான் இந்த ஜனநாயக அரிச்சுவடியைச் சொல்வது தப்பான கருத்தைக் கொள்ளவேண்டாம் என்பதற்காகத்தான்.

“நாம் இன்று பெற்றுள்ள வலிமையைவிட, மாற்றார் பெற்றிருக்கின்ற வலிமையை அதிகமாகக் கணக்குப் போட வேண்டும்.

சொன்னதைச் செய்யாத அரசு

“காங்கிரசுக் கட்சி, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித்தரத் தவறிவிட்டது என்பதைப் பாதையோரத்தில் செல்லும் பாமர மக்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காங்கிரசு சர்க்காரர் வரி மேல் வரி போட்டு நாட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்பதை இப்பொழுது பலரும் சொல்லி வருகிறார்கள். மக்களின் முக்கிய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருக்க இடம் ஆகிய மூன்றைக்கூட நிறைவேற்றித் தரத் தவறிவிட்டது என்பதைத் பாட்டாளி மக்களையும், பட்டினி கிடக்கம் பஞ்சைகளையும், பாதையோரத்தில் வசிக்கும் ஏழை மக்களையும் பார்த்தாலே தெரியும்.

“விலைவாசி உயர்ந்துவிட்டது என்று தி.மு.க. மட்டுமல்ல, கம்யூனிஸ்டு கட்சியும் பி.சோ.கட்சியும் மற்றும் பல கட்சிகளும் பல ஆண்டுகளாகவே சொல்லி வருகின்றன. 10, 12 ஆண்டுகளாகவே தி.மு.க. இதைச் சொல்லி வருகிறது. கம்யூனிஸ்டுக் கட்சி இதற்கென்று ஒரு ‘வாரமே‘ கொண்டாடியது. சுதந்திரக் கட்சி ‘விலைவாசி உயர்வுக்குப் பணவீக்கம்தான் காரணம்‘ என்று சொல்லிப் பணவீக்க எதிர்ப்பு நாள் கொண்டாடியது.

விலைவாசி புரிந்தால் அரசியல் புரியும்

“விலைவாசி உயர்வை நாங்கள் சட்டமன்றத்தில் கண்டித்துப் பேசியிருக்கிறோம். விலைவாசி உயர்ந்திருப்பது இந்தப் பொங்கலுக்காகப் பண்டங்கள் வாங்கப் போன தாய்மார்களுக்கும், ஆடவர்களுக்கும் நன்றாகப் புரிந்திருக்கும்.

“இந்த வாரத்தில் அதைப் புரிந்து கொள்ளவில்லையானால், அரசியல் புரியாதவர்க்ளாகத்தான் ்இருக்க வேண்டும். இன்னும் பத்தாண்டு போனாலும் அவர்களுக்குப் புரியாது. இதை மட்டும் மனத்தில் வைத்திருந்தால் 1962இல் மக்கள் காங்கிரசைத் தோற்கடித்து விட்டார்கள் என்று அர்த்தம்.

“சட்டமன்றத்தில் நாங்கள் இதை எடுத்துச் சொன்ன நேரத்தில் நிதி அமைச்சர் சுப்பிரமணியம், ‘விலைவாசி ஏதோ ஏறியிருக்கலாம். அதிகம் ஏறவில்லை‘ என்றார். ஆனால் அவரே ஒரு மாதத்திற்கு முன்பு பத்திரிகை நிருபர்களை அழைத்து விலைவாசி ஏறிவிட்டது என்று சொல்லி முடித்திருக்கிறார். அவர் முன்னால் டில்லி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரையும் அழைத்துக் கொண்டு கடைக்குப் போய், விலைவாசிகளை விசாரித்து அறிந்து கொண்டதாக வந்த செய்தி ஏதோ கதையில் வரும் நிகழ்ச்சியைப்போல் இருந்தது. ‘விலை ஏறிவிட்டது‘ என்று நாங்கள் சொன்னபோது கடைக்குப் போய் விசாரிக்கத் தோன்றாமல் இப்பொழுது அந்த எண்ணம் அவருக்குத் தோன்றியதேன்?

ஏறிய விலையை இறக்குபவர் யார்?

“நிதியமமைச்சர், அண்மையில் இங்கிலாந்து, பிரான்சு முதலிய மேல் நாடுகளுக்குச் சென்று வந்தாரல்லவா? அதைப் பற்றி தம் துணைவியிடம் பேசிக்கொண்டிருப்பார். அங்கு, தாம் கண்ட மாட மாளிகைகளையும் அங்கு மக்கள் எல்லோரும் பளபளப்பாக எடுப்பாக உடையுடுத்தி கேளிக்கைகளில் ஈடுபடுவதையும், இன்னும் சில சிறப்புகளையும் மனைவியிடம் எடுத்துச் சொல்லியிருப்பார். அம்மையாருக்குத் தம் கணவர் மீது இரண்டு வகை வருத்தம் இருக்கும். ஒன்று – தன்னை விட்டுவிட்டு அவர் மட்டும் போய்ப் பார்த்திருக்கிறாரே என்கிற இயற்கையான கோபம். மற்றொன்று – தனக்குப் பிடித்தமானதை வாங்கி வரவில்லையே என்பதாக இருக்கலாம். அவர் தன் கணவரைப் பார்த்து – ‘துணி விலை எப்படி இருக்கிறது? நகை விலை என்ன?‘ என்றெல்லாம் கேட்டிருப்பார். அங்கு நம் நாட்டைவிட மிக மலிவாகவும் எளிதாகவும் எல்லோருககம் கிடைக்கிறது‘ என்று அமைச்சர் பதில் அளித்திருப்பார். உடனே அம்மையார் ‘அங்கேயும் அமைச்சர்கள் தானே ஆளுகிறார்கள்?‘ என்று கேட்டிருப்பார். ஆம் என் என்றிருப்பார் அமைச்சர். அப்படியானால் இங்கே மட்டும் ஏன் இப்படி விலைவாசி ஏறியிருக்கிறது? என்று கேட்டிருப்பார். அதைக் கேட்டதும்தான் அமைச்சர் ‘அப்படியா‘ இதோ பார்த்துவிட்டு வருகிறேன்‘ என்று புறப்பட்டிருப்பார். இப்படியும் நடந்திருக்கக் கூடும் என்று கற்பனையாகச் சொல்கிறேன் – இந்தக் காரணத்தினாலோ வேறு எந்தக் காரணத்திலோ அவர் கடைக்குப் போயிருந்தாலும் சரி, விலை உயர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்துவிட்டார். உணர்ந்துவிட்ட பிறகு, இனி எப்படி அதைக் குறைப்பது என்று கண்டுபிடித்துச் சொல்லவேண்டும். அவரும் ‘விலை உயர்ந்துவிட்டது‘ என்று நம்முடன் சேர்ந்து சொல்கிறார். நாமும் சொல்கிறோம். கடைக்காரர்களும் சொல்கிறார்கள். ஏறிய விலையை இறக்குபவர் யார்?

விடிவுகாலம் எப்போது?

“வைத்தியரிடம் போய், ‘எனக்கு உடம்பு சரியில்லை, கை கால்கள் எல்லாம் வலிக்கின்றன, நடக்க முடியவில்லை, என்று சொன்னால் – உடனே அந்த வைத்தியரும் – நான் மட்டும் என்ன நன்றாகவா இருக்கிறேன்?‘ எனக்கும் தூக்கமே வருவதில்லை. உடம்பெல்லாம் வலி என்றால் என்ன பொருளோ அதே பொருள்தான் அமைச்சர் கூற்றுக்கும்.

“அமைச்சரே இப்படி ‘விலைவாசி ஏறிவிட்டது‘ என்று சொல்லிக் கொண்டிருந்தால் இதற்கு விடிவுகாலம் – பரிகாரம் எப்போது?

அடுத்த ஆண்டிலாவது – உணவு, உடை, வீடு ஆகியவற்றில் தட்டுப்பாடு – முட்டுப்பாடு ஏற்படாமல் ஏழை எளிய மக்கள் தொ்ல்லையின்றி வாழ வழிகாண வேண்டும் என்று நாம் அனைவரும் சூளுரைத்துக் கொள்ளவேண்டும்.

“1962இல் காங்கிரசுக் கட்சி வீழ்ச்சியடைந்தால்தான் நாம் நினைப்பது கைகூடும். இந்தியத் துணைக் கட்த்திலேயே, மற்ற மாநிலங்களிலுள்ள காங்கிரசுக் கட்சிக்கும் நம் மாநிலத்தில் உள்ள காங்கிரசுக் கட்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

பலம் பொருந்திய எதிரி

“மற்ற மாநிலங்களிலெல்லாம் காங்கிரசுக் கட்சிக்குள்ளேயே பிளவு இருக்கிறது. இங்கே அந்தப் பிளவு இல்லை. இதை மறந்தால் நமது அரசியல் முறிந்துவிடும்.

“பலம் பொருந்திய எதிரியை நாம் சந்திக்க இருக்கிறோம். உத்திரப் பிரதேசத்தில் சி.பி.குப்தாவுக்கு வேண்டிய ஆள் தேர்தலில் நின்றால் சம்பூர்ணானந்தாவின் ஆளே அவரைத் தோற்கடித்து விடுவார். இங்கே அப்படியில்லை. இங்குள்ள காங்கிரசுக் கட்சி பலம் பொருந்தியதாக – பிளவு இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் காமராசரும் என்ன இருந்தாலும ஜெயிப்பேன் என்கிறார்.

காங்கிரசுக் கட்சி சேர்க்க வேண்டிய நிதி முழுவதையும் சேர்த்தாகிவிட்டது. எந்தத் தொகுதியில் யாரை நிறுத்தலாம் – யாரை விட்டு யாரைக் கலைக்கலாம் என்றெல்லாம் எண்ணிப் பார்த்தாகிவிட்டது.

“மாற்றாரின் வலிமையைப் பார்த்து நாம் தேர்தலில் ஈடுப்பட்டாக வேண்டும். அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக வரும் தேர்தலில் ஈடுபட வேண்டும்.

‘செல்லுலாயிடு‘ பொம்மையாகிவிடக்கூடாது

“கழகம் வளர வளர எனக்குக் களிப்பில்லை – கவலைதான் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே நமது கழகம் வளர்ந்ததுபோல் வேகமாக வளர்ந்த கட்சி எதுவும் இல்லை. இதே திடலில் நாம் நமது மாநில மாநாட்டை நடத்தினோம். இன்று ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு இவ்வளவு பெரிய திடல் தேவைப்படுகிறது. நமது மாநில நடத்துவது என்றால் ஊருக்குள்ளேயே இடம் இல்லாததால் ஊருக்கு வெளியே இடம் தேட வேண்டியிருக்கிறது. நமது இரண்டாவது மாநில மாநாட்டைத் திருச்சி நகரின் எல்லையிலேயுள்ள வெட்ட வெளியிலே நடத்தினோம். இப்பொழுது அதை விடப் பெரியதாகவும், எழிலாகவும் மாநாடு நடைபெறவிருக்கிறது.

“நம்முடைய எழுத்தும், பேச்சும், நடிப்பும் உலகம் ஒப்புக் கொண்ட பெருமையாகும். ஆனால், இது நிச்சயமாகப் போதாது.

‘குழந்தையின் கையும் காலும் தங்கத்தால் வார்த்தது போல் இருக்கின்றன. முகம் இப்படி இருக்கிறது விழி அப்படி இருக்கிறது என்றெல்லாம் வர்ணிப்பது குழந்தையின் அழகைக் காட்டவே தவிர உண்மையல்ல. வர்ணிக்கப்பட்ட அந்தக் கண்கள் பார்வை பெற்றிருக்க வேண்டும். கைகள் எடுக்க – குலுக்கப் பயன்படவேண்டும். கால்கள் தத்தித் தத்தி நடக்க வேண்டும். அதற்கு உயிரோட்டமிருந்தால்தான் முடியும். உயிரூட்டமும் செயல் திறனும் இல்லாமல் வெறும் அழகை மட்டும் பார்க்க அல்ல குழந்தை! நாடகத்திலே வரும் கதாநாயகி ‘செல்லுலாயிடு‘ பொம்மையை வைத்துக் கொண்டு கொஞ்சுவதைப்போல் தான் அது முடியும்.

நாட்டு விடுதலையே நமது குறிக்கோள்

நாட்டு விடுதலையை நமது குறிக்கோள், அதன் வெற்றிக்குப் பல தியாகங்கள் புரிந்ததாக வேண்டும். இரத்தத்தைச் சந்தனமாகப் பூசி்க் கொள்ளும் வீரம் பிறக்க வேண்டும்.

நம்முடைய திறமை உயிரூட்டத்துடனிருப்பதால்தான் வெற்றி தந்திருக்கிறது. காங்கிரசுக் கட்சி ‘செல்லுலாயிடு‘ பொம்மை போன்றது. அதற்கு உயிரூட்டமில்லை.

“தி.மு.கழகத்தினர் பேசிவிட்டால் போதுமா? எங்களுக்குப் பேசத் தெரியாதா? என்பார்கள். அவர்களும் பேசுகின்றனர். ஆனால் அதில் ஜீவன் இல்லை. எழுதுகின்றனர். அதில் இலட்சியம் மிளிரவில்லை. அவர்கள் செயலிலே நாட்டுக்குத் தேவையானது இல்லை.

“நமது தோழரக்ள் இன்னும் புதிது புதிதாகக் கவிதைகளையும், நாடகங்களையும் எழுதி, பொங்கல் விழாவிலே அரங்கேற்ற வேண்டும். அதைப் பார்த்து மகிழவேண்டும். நம்முடைய கலை ஆற்றல் மேலும் மேலும் வளர வேண்டும்.

“இந்தப் பொங்கல் விழாவில் இன்னொரு நிகழ்ச்சியைக் கூடச் சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதாவது ஊரில் உள்ள குழந்தைகளெல்லாம் கொண்டு வரப்பட்டு அவற்றில் எந்தக் குழந்தை அழகாக, திடமாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்து அதற்கு ‘இவ்வாண்டு இளவரசன்‘ என்ற பெயர் கொடுத்து அதைப் பெற்ற அன்னையாரையும் பாராட்ட வேண்டும்.

குடும்ப விழாவாகக் கொண்டாட...

“என்றும் பேசுகின்ற ஐந்தாண்டுத் திட்டம், சேலத்து இரும்பு ஆகியவற்றை இந்த விழாவிலும் பேச நான் விரும்பவில்லை. இதை ஒரு குடும்ப விழாவாகவே நாம் கொண்டாட வேண்டும்.

“பொங்கல் விழாக் காலத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளில் குடும்பம் குடும்பமாக வேற்றிடங்களுக்குச் சென்று அமைதியான ஓர் இடத்திலே சமையல் செய்து சாப்பிட வேண்டும். அதுவும் ஆடவர் சமைத்து பெண்டிற்குப் பரிமாற வேண்டும். அப்பொழுதுதான் பெண்களுக்கு இருக்கின்ற கஷ்டம் ஆண்களுக்கு இன்னதென்று தெரியும். அப்படிச் சோறு வடித்தால்தான் அரசியலிலும் வடிக்கலாமா கூடாதா என்ற பக்குவம் தெரியும். வீட்டிலே பெண்கள் சொல்வார்கள் – மேல் கொதி இப்பொழுதுதான் வருகிறது. அடிக்கொதி வந்தால்தான் வடிக்கலாம் என்று. அதைப்போல அரசியலிலும் பக்குவம் தெரியவேண்டும்.

“மேல் நாட்டுப் படக்காட்சியைப் பார்க்கும் நேரத்தில், அந்நாட்டு மக்கள் உல்லாசப் பூங்காவில் ஆடி மகிழ்ந்தும் பாடி பரவசப்பட்டுக் கொண்டும் விழா கொண்டாடுவதைக் கண்டு ‘நாமும் அப்படிக் கொண்டாடும் நிலை இல்லையே‘ என்று வருந்துவதுண்டு. விடுதலை பெறாத நாட்டில் விழா நாள் இல்லையென்றால், வீர உணர்ச்சியைப் பெற இத்தகைய விழா பயன்பட வேண்டும்.

சுவையை இழக்க முடியாதவர்களாக....

“ஐரோப்பா முதலிய நாடுகளுக்கும், நமது நாடுகளுக்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு. ஒரே தலைமுறையில் இரண்டு பெரும் போரைப் பார்த்தவர்கள் அந்த நாட்டு மக்கள். லண்டனிலும் பாரிசிலும் உள்ளவர்கள் 15 ஆண்டுகளுக்குள் இருமுறை மாற்றாரின் தாக்குதலால் அல்லோல கல்லோலப்பட்டிருக்கின்றனர். அங்குப் பல கொந்தளிப்புகள் ஏற்பட்டு அதன் விளைவாக அங்குள்ள மக்கள், எதற்கும் துணிந்த சுபாவத்தைப் பெற்றுவிட்டிருக்கின்றனர். ஆனால் நாமோ போர்ப்பயங்கரத்தைப் பார்த்தறியாதவர்கள், அதனால் வாழ்க்கையில் சுவையை இழக்க முடியாதவர்களாக இருக்கிறோம்.

“நம் நாட்டவர் கோயில் விழாக்களில் வெடிக்கப்படும் அதிர்வேட்டுச் சத்தத்தைத் தவிர வேறு கண்டதில்லை. பீரங்கி இப்படித்தான் வெடிக்கும் என்று அதிர்வேட்டு்ச் சத்தத்தைக் காட்டித்தான் இங்கேயுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் விளக்கும் நிலை இருக்கிறது.

தடுக்க யாரால் முடியும்?

“காங்கோ, டோகோ நாடுகளில் நடப்பது போன்ற போராட்டங்களை நடத்த இந்த நாட்டு மக்கள் தயாராயில்லை. அதற்கு நமது பண்பும் இடம் தராது. நம் இயக்கத்துக்கும் அது உகந்ததல்ல. ஒரு பத்து பாட்டு, ஆறு நாடகம் எழுதினால் திராவிட நாடு கிடைத்து விடுமா என்றால் அதுமட்டும் போதாது. பெரியதொரு கிளர்ச்சி நடந்தாக வேண்டும். அதற்கு உயிரைத் திரணமாக மதித்து ‘இந்த ஊரிலே நூறு பேர் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறார்கள். வீரம் கொப்பளிக்கிறது‘ என்ற நிலை ஏற்படுமானால் பிறகு அதைத் தடுக்க யாராலும் முடியாது.

“நான் ஏதோ நமது தோழர்களை அடக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். நான் யூகம் தெரிந்தவனாகையால் அந்த நேரத்தில் நானும் அடக்கமாட்டேன். நான் அடக்கினாலும் அடங்காது.

“நாம் வெறும் மேனாமினுக்கிளாக இயக்கம் நடத்த வேண்டாம். தியாகத் தழும்புகளை ஏற்று நடத்த வேண்டும்.

இரத்தம் மார்புச் சந்தனமாக வேண்டும்

“குடியரசுத் தலைவருக்குக் கறுப்புக்கொடி காட்ட நாம் முடிவு செய்தோம். அதன்படி காட்டியிருந்தால் பலர் தியாகத் தழும்புகளை ஏற்றிருப்பார்கள் சிலர் பிணமாகியிருப்பார்கள். உங்களிலே சிலர் உயிரிழந்து உறுப்பிழந்து இருக்கக்கூடும். ஆனால் அது நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் அது அடியோடு நிறுத்தப்பட்டு விடவில்லை. என்றைக்கும் தியாகம் புரியத் தயாராயிருக்கிறோம். இந்த ஆற்றலைத் தக்க நேரத்தில் பயன்படுத்த வேண்டும். உழவர்களின் முழங்கால் வரை சேறு படிந்திருப்பது போல் விடுதலை வீரர்களின் கழுத்து வரை இரத்தம் படிந்திருக்கவேண்டும். உடலிலிருந்து பீறிட்டு வரும் இரத்தம் மார்புச் சந்தமனாக வேண்டும். இன்றைக்கு நீங்கள் பூசியிருக்கும் சந்தனம் அந்தச் சந்தனத்தை நினைவுபடுத்த வேண்டும்.

“முன்பெல்லாம் நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் 20 வயதக்குட்பட்டவர்கள்தான் எங்களை வரவேற்க வருவார்கள். இன்று ஊர்க்கோடியில் வெற்றிலைத் தாம்பூலத்துடன் நின்று மேள தாளத்துடன் வரவேற்க 60-70 வயதினர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளாகத் தான் பெரியவர்கள் காதில் நமது பேச்சு விழ ஆரம்பித்திருக்கிறது. பக்கத்திலே வரவும் தொடங்கி இருக்கிறார்கள். யாராக இருந்தாலும், நம் இயக்கம் நிடித்து நடக்க வேண்டும். நம் குறிக்கோள் நாட்டு விடுதலைதான் என்பதை உணர வேண்டும்.

மனையா? மனையாட்டியா?

“மணப்பெண் கழுத்திலே கட்டப்படுவது தாலிதான் என்றால் மனை எதுவானாலும் பரவாயில்லை. ‘இயக்கத்தில் இன்னார் இருந்தால்தான் இருப்பேன்‘ என்று சொல்வது மனையைப் பார்த்து மனையாட்டியைப் பார்ப்பது போன்றதாகும்.

“நமது பேச்சிலே தனியொரு கலையாற்றல் இருக்கிறது என்று இங்குப் பேசிய நண்பர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் ஏன் நம்மைக் காங்கிரசுக்காரர்கள் அலட்சியமாகப் பேசுகிறார்கள் என்றால் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி எஃகுக் கோட்டைப்போல் இருந்து வருகிறது. அதற்குள் யார் யார் வருவார்கள் யார் வாரை இழுக்கலாம் என்று கயிறு திரித்து வருகிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.

“அண்ணாதுரையும் – ஆச்சாரியாரும் கூட்டுச் சேரப் போகிறார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது தி.மு.கழகமும் – சுதந்திரக் கட்சியும் கூட்டுச் சேரப் போகிறது என்பதற்குப் பதிலாகத்தான் கிராம போன் போல, ‘அண்ணாதுரை ஆச்சாரியார் கூட்டு‘ என்று சொல்கிறார்கள். இதுவரை, அவர்களுக்கும் நமக்கும் பேச்சு வார்த்தை எதுவும் நடக்க வில்லை, அவர்களும் நம்மிடம் வரவில்லை, நம் கழகமும் அதுபற்றி ஆலோசிக்கவில்லை.

அண்ணாதுரையும் ஆச்சாரியாரும்

“கட்சிகளுக்குள் கூட்டு என்றால் என்ன? தோழமை என்றால் என்ன? நட்பு என்றால் என்ன? பகை என்றால் என்ன? என்பதைப் பற்றி நெல்லையிலே நான் பேசியபோது தெளிவாக விளக்கினேன். ஆச்சாரியாரும் அதே நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். நான் நாங்குநேரியில் பேசினால் ஆச்சாரியார் அம்பாசமுத்திரத்தி்லும், நான் கல்லிக்குறிச்சியில் பேசினால் அவர் பாளையங்கோட்டையிலுமாக மாறி மாறிப் பேசினோம்.

“இயற்கையாக ஏற்பட்டுவிட்ட இந்தச் சுற்றுப் பயணத்தை, ஏதோ நானும் ஆச்சாரியாரும் பேசி ஏற்பாடு செய்து கொண்டு நடத்தியதாகப் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு காங்கிரசுத் தலைவர் அழகேசன் பாளையங்கோட்டையில் பேசுகையில் ‘அண்ணாதுரையும் ஆச்சாரியாரும் கூட்டுச் சேரப் போகிறார்கள்‘ இது உறுதி. நான் சொல்வதை நம்புங்கள். அண்ணாதுரை இதை மறுப்பார். ஆச்சாரியார் இதை மழுப்புவார் என்று ஆரூடம் கூறியிருக்கிறார்.

“தெருவிலே போவோரைப் பார்த்து ‘ஏ! திருடா, ஏ! திருடா“ என்றால், திருடாதவர்களாயிருந்தாலும் ‘என்ன யாரைக் கூப்பிடுகிறார்கள்?‘ என்று திரும்பிப் பார்த்தால் அப்படிப் பார்த்தவரைப் பிடித்து ‘இவன்தான் திருடன்‘ என்பதுபோல அழகேசன் நாம் ஏதாவது பதில் சொல்வோம் என்ற எதிர்பார்த்து இப்படிப் பேசுகிறார்.

காங்கிரசு எதிர்ப்பு ஓட்டு

“அழகேசன் இப்படிப் பேசி எண்ணிப் பத்து நாள் ஆவதற்குள் வேலூரில் வேறு விதமாகப் பேச ஆரம்பித்து விட்டார். தி.மு.கழகத்தினரும் சுதந்திராக் கட்சியினரும் ஒன்ற சேரவே முடியாது, அவர்கள் சேரப்போவதில்லை‘ என்று அவர் கூறியிருக்கிறார்.

“பத்து நாட்களுக்குள் இநத் அரசியல் பிரச்சனையில் தடுமாறக் கூடிய ஒரு தலைவரைத் தமிழ்நாடு காங்கிரசு கட்சி பெற்றிருக்கிறதே என்று கழிவிரக்கம் கொள்கிறேன்.

“தேர்தலில் காங்கிரசுக் கட்சியை வீழ்த்த ஏதேனும் ஓர் ஏற்பாடு செய்தாக வேண்டும். அந்த ஏற்பாட்டுக்கு வருமாறு நாமாகப் பிறரைக் கேட்டாலும், பிறர் நம்மைக் கேட்டாலும், காங்கிரசு எதிர்ப்பு ஓட்டுக்ள பிளவுபடாத வகையில் அந்த ஏற்பாடு அமைய வேண்டும். சுந்திராக் கட்சியுடன் மட்டுமல்ல மற்ற எல்லாக் எதிர்கட்சிகளுடனும் அந்த ஏற்பாட்டைச் செய்து கொள்ளவேண்டும். குறிப்பாகவும் சிறப்பாகவும் நமது தோழமைக் கட்சியான கம்யூனிஸ்டுக் கட்சியுடன் நாம் அந்த ஏற்பாட்டைச் செய்து கொள்ளும் நேரத்தில், சுதந்திராக் கட்சி அதை எதிர்க்குமானால் ‘சற்றே விலகி இரும்‘ என்று துணிந்து கூற இருக்கிறோம். அதற்காக அஞ்சவில்லை. இதுபற்றி நமது கழகம் நல்ல முடிவெடுத்து அறிவிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(நம்நாடு - 16, 17.1.61)